“கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுரியார்
தண்டலையைக் காணார் போலப்
பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்
கிடையாது! பொருள்நில் லாது!
மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்ந்த துண்டோ?
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
வாழ்வதில்லை! மெய்ம்மை தானே!”
இதன் பொருள் —-
சொல்லும் பனைகாட்டும் கைகளிற்று உரியார் தண்டலையைக் காணார் போல - புகழப்படும் பனையைப் போலும் துதிக்கையினை உடைய யானையின் தோலைப் போர்த்தவரான சிவபிரான் எழுந்தருளி உள்ள திருத்தண்டலையைக் கண்டு வணங்காதவர்க்கு உணவு கிடையாததைப்போல, பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது - பொய் கூறும் வாயார்க்கு உணவும் அகப்படாது, பொருள் நில்லாது - கைப்பொருளும் அழிந்துவிடும், மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர் பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ - மேகம் சூழ்ந்ததென்று சொல்லுமாறு கரிய வண்டினம் சூழும் தாழைமலர் பொய்கூறி வாழ்வு பெற்றதா? (ஆகையால்) மெய் சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வது இல்லை - உண்மை உரைத்து வாழமுடியாதவன் பொய் உரைத்தும் வாழப் போவதில்லை, மெய்ம்மைதான் - இது உண்மையே ஆகும்.
பனைமரத்தைக் கண்டாற்போலக் காணப்படும் துதிக்கை என்பதால், "பனைகாட்டும் கை" என்றார்.
ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் நெருப்புப் பிழம்பாய் காட்சி அளித்தார். ‘நானே கடவுள்’ ‘நானே கடவுள்’என்று வாதுப் போர் புரிந்த பிரமனும் திருமாலும் அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள் இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச் சோதிப்பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
"பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்
பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ" --- திருவாசகம்.
திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
பிரமனோ, கல்வியில் மிகுந்தவன் அல்லவா? அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காணமுடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இசையவில்லை. காரணம் கல்விச் செருக்கு. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் சோதிப் பிழம்பின் முடியைக் கண்டதாக பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.
"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,
முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே" --- திருமந்திரம்.
அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம், அத் தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்தார். பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், இருவரின் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார்.
மால் அயன் அடிமுடி தேடிய வரலாறு. அதன் உட்பொருள்.
(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.
(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.
(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.
(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".
(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.
(7) பிரமன் - வாக்கு. திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.
(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.
உரையாடுவதற்கும் உண்பதற்கும் உரிய வாயைக் கொண்டு, பொய்ம் மொழி உரைத்தால் உணவும் பொய்யாவது இயற்கை என்பதை அறிவுறுத்த, ‘பொய் உரைக்கும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது!' என்றார். ‘பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிட்டாது' என்பது பழமொழி.
No comments:
Post a Comment