விரிஞ்சிபுரம் - 0680. குலைய மயிர் ஓதி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குலையமயிர் ஓதி (விரிஞ்சிபுரம்)

முருகா!
விலைமாதர் மேல் வைத்த சிந்தையை மாற்றாது உழலும் பாதகனாகிய என்னையும் ஆண்டு அருள் புரிவாய்.


தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதானா


குலையமயி ரோதி குவியவிழி வீறு
     குருகினிசை பாடி ...... முகமீதே

குறுவியர்வு லாவ அமுதினினி தான
     குதலையுமொ ராறு ...... படவேதான்

பலவிதவி நோத முடனுபய பாத
     பரிபுரமு மாட ...... அணைமீதே

பரிவுதரு மாசை விடமனமொ வாத
     பதகனையு மாள ...... நினைவாயே

சிலைமலைய தான பரமர்தரு பால
     சிகிபரிய தான ...... குமரேசா

திருமதுரை மேவு மமணர்குல மான
     திருடர்கழு வேற ...... வருவோனே

கலின்வடிவ மான அகலிகைபெ ணான
     கமலபத மாயன் ...... மருகோனே

கழனிநெடு வாளை கமுகொடிய மோது
     கரபுரியில் வீறு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குலைய மயிர் ஓதி, குவிய விழி, வீறு
     குருகின் இசை பாடி, ...... முகமீதே

குறு வியர்வு உலாவ, அமுதின் இனிது ஆன
     குதலையும் ஓர் ஆறு ...... படவேதான்,

பலவித விநோதமுடன், உபய பாத
     பரிபுரமும் ஆட, ...... அணை மீதே

பரிவுதரும் ஆசை விட, மனம் ஒவாத
     பதகனையும் ஆள ...... நினைவாயே.

சிலை மலை அதான பரமர் தரு பால!
     சிகி பரி அது ஆன ...... குமரஈசா!

திருமதுரை மேவும் அமணர் குலம் ஆன
     திருடர் கழு ஏற ...... வருவோனே!

கலின் வடிவம் ஆன அகலிகை பெண் ஆன
     கமல பத மாயன் ...... மருகோனே!

கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது
     கரபுரியில் வீறு ...... பெருமாளே.


பதவுரை


      சிலை மலை அதான பரமர் தரு பால --- வில்லாக மேரு மலையைக் கொண்ட பரம்பொருளாகிய சிவபெருமான் அருளிய புதல்வரே!

     சிகி பரியதான குமர ஈசா --- மயிலை வாகனமாகக் கொண்ட குமாரக் கடவுளே!

      திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழு ஏற வருவோனே --- அழகிய மதுரையில் இருந்த சமணர் குலத்தைச் சார்ந்த திருடர்கள் கழுவில் ஏறும்படியாக வந்தவரே!

      க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான கமல பத மாயன் மருகோனே --- கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின் திருமருகரே!

      கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கரபுரியில் வீறு பெருமாளே --- வயல்களில் இருக்கும் பெரிய வாளை மீன்கள் பாக்குமரம் ஒடிந்து விழும்படியாக மோதுகின்ற கரபுரம் என்னும் விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      மயிர் ஓதி குலைய --- கூந்தலின் மயிர் குலைந்து போகவும்,

     விழி குவிய --- கண்கள் குவியவும்,

     வீறு குருகின் இசை பாடி --- பெருமை மிக்க பறவைகளின் குரல் ஒத்து விளங்க இசையோடு பாடிக் கொண்டு அணைந்து,

     முக(ம்) மீதே குறு வியர்வு உலாவ ---  முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற,

      அமுதின் இனிதான குதலையும் ஒர் ஆறு படவே தான் --- அமுதம் பொன்ற இனிமையை உடைய திருந்தாத சொற்கள் ஆற்று வெள்ளம் போல் பெருகி வர,

     பலவித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட ---  பல விதமான விளையாடல்களுடன் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் ஒலிக்க

     அணை மீதே பரிவு தரும் ஆசைவிட மனம் ஒ(வ்)வாத --- படுக்கையின் மேல் கூடுவதால் உண்டாகும் அன்பினால் மேலும் பொங்குகின்ற ஆசையை விடுவதற்கு மனம் இசையாத

     பதகனையும் ஆள நினைவாயே --- பாதகனாகிய அடியேனையும் ஆண்டு அருள் புரியத் திருவுள்ளம் கொள்வாயாக.


பொழிப்புரை


         மேரு மலையை வில்லாகக் கொண்ட பரம்பொருளாகிய சிவபெருமான் அருளிய புதல்வரே!

     மயிலை வாகனமாகக் கொண்ட குமாரக் கடவுளே!

     அழகிய மதுரையில் இருந்த சமணர் குலத்தைச் சார்ந்த திருடர்கள் கழுவில் ஏறும்படியாக வந்தவரே!

      கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின் திருமருகரே!

      வயல்களில் இருக்கும் பெரிய வாளை மீன்கள் பாக்குமரம் ஒடிந்து விழும்படியாக மோதுகின்ற கரபுரம் என்னும் விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      கூந்தலின் மயிர் குலைந்து போகவும், கண்கள் குவியவும், பெருமை மிக்க பறவைகளின் குரல் ஒத்து விளங்க இசையோடு பாடிக் கொண்டு அணைந்து,  முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற, அமுதம் பொன்ற இனிமையை உடைய திருந்தாத சொற்கள் ஆற்று வெள்ளம் போல் பெருகி வர,  பல விதமான விளையாடல்களுடன் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் ஒலிக்க, படுக்கையின் மேல் கூடுவதால் உண்டாகும் அன்பினால் மேலும் பொங்குகின்ற ஆசையை விடுவதற்கு மனம் இசையாத
பாதகனாகிய அடியேனையும் ஆண்டு அருள் புரியத் திருவுள்ளம் கொள்வாயாக.


விரிவுரை

மயிர் ஓதி குலைய ---

அழகாகச் சீவி முடித்துள்ள கருமயிர்க் கூந்தலானது கலவியின் போது அவிழ்ந்து குலைந்து போகும்,

விழி குவிய ---

கலவி இன்பத்தை அனுபவிக்கின்ற போது தன்னை மறந்த நிலையில் கண்கள் குவியும்,

வீறு குருகின் இசை பாடி ---

கலவியின் போதுமாதர் பலவிதமான பறவைகளின் குரலை ஒத்த ஒசையை இனிமையாக எழுப்புவர். அதனால் காம இன்பம் மிகும்.

அடிக் களம் தனில் மயில்குயில் புறவு என ...... மிக, வாய் விட்டு,

உருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய,
     சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
     உற, கையின் கனிநிகர் என இலகிய ...முலைமேல் வீழ்ந்து,

உருக் கலங்கி, மெய் உருகிட, அமுது உகு
     பெருத்த உந்தியின் முழுகி, மெய் உணர்வு அற,
     உழைத்திடும் கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ?
                                                                        --- அருக்குமங்கையர் (திருப்புகழ்)

எட்டுக் குரலில் ஒருகுரல் கூவும் புறாவே! என
   தேகாந்தச் சிங்கியைக் கூவாதது என்ன குலாவே!
மட்டார் குழலிதன் சாயலை காட்டு மயூரமே! அவள்
   மாமலர்த் தாள்நடை காட்டாதது என்ன விகாரமே!
தட்டுஒத்த கும்பத் தடமுலை காட்டும் சகோரமே! சற்றுத்
   தண்என்றும் வெச்சென்றுக்காட்டி விட்டால் உபகாரமே,
கட்டித் திரவியம் கண்போலும் நன்னகர்க் காவியே! கண்ணில்
   கண்டிடம் எல்லாம் அவளாகத் தோணுதே பாவியே
                                                               --- திருக் குற்றாலக் குறவஞ்சி.  

எட்டுவகைக் குரல்களில் ஒன்றான ஒரு குரலைக் கூவுகின்ற புறாவே! என்னுடைய ஒன்றுபட்ட காதல் கிழத்தியை நீ அழைத்துக் கூவாதது என்ன அன்போ? மணம் பொருந்திய கூந்தலையுடைய என் காதற் சிங்கியினது சாயலைக் காட்டுகின்ற மயிலே! அவளுடைய சிறந்த தாமரை மலர் போன்ற திருவடிகளின் நடையை நீ எனக்குக் காட்டாமல் இருப்பது என்ன வேறுபாடோ? உள்ளளிடம் எங்கும் குடத்தைப் போன்ற பெரிய கொங்கைகளின் தோற்றத்தைக் காட்டுகின்ற சக்கரவாகப் பறவைகளே! நீங்கள் அக் கொங்கைகளின் குளிர்ச்சியையும் வெப்பத்தையும் காட்டி விடுவீர்களானால் எனக்குப் பேருதவியாக இருக்குமே? என் சிறந்த பாக்கியமாகிய சிங்கியின் கண்கள் போல மலர்ந்தது நல்ல திருக்குற்றால நகரத் தடாகத்தில் மலர்ந்திருக்கும் கருங்குவளை மலர்களே! கண்ணால் உங்களைக் கண்ட இடங்கள்தோறும் அவள் உருவாகவே தேரிகின்றதே. பாவிகளே!
    
எட்டுக் குரல் என்பது, மயில், புறா, அன்னம், காடை, வண்டானம் என்னும் நாரை குயில், கோழி, வண்டு இவற்றின் ஒலிகள். மங்கையர்கட்குக் கலவிக் காலத்தில் இக் குரல்கள் இன்ப நிலையில் தம்மை மறந்து தோன்றும் என்று கூறுவர்.

முக(ம்) மீதே குறு வியர்வு உலாவ ---  

முயக்கத்தின் போது முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்றும்.

முடித்த ஆறும் என்தனக்கே தக்கதே, முன் அடியாரைப்
பிடித்தவாறும், சோராமல் சோரனேன் இங்கு ஒருத்திவாய்
துடித்தவாறும், துகில் இறையே சோர்ந்தவாறும், முகங்குறுவேர்
பொடித்தவாறும், இவை உணர்ந்து கேடு என்தனக்கே சூழ்ந்தேனே. ---  திருவாசகம்.

அமுதின் இனிதான குதலையும் ஒர் ஆறு படவே தான் ---

அமுதம் போன்ற இனிமையை உடைய திருந்தாத சொற்கள் கலவியின் போது ஆற்று வெள்ளம் போல் பெருகி வரும்.

பலவித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட ---  

இவ்வாறு பலப்பல விதமான விளையாடல்களுடன் மங்கையரின் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் ஒலிக்கும்.   

அணை மீதே பரிவு தரும் ஆசைவிட மனம் ஒ(வ்)வாத ---

படுக்கையின் மேல் கூடுவதால் உண்டாகும் அந்த இன்ப அனுபவத்தில்,  கலவியில் ஈடுபடுதற்கு மேன்மேலும் ஆசை பொங்கும். அந்த ஆசையை விடுவதற்கு, அதனையே பெரிதும் நாடி நிற்கும் காமுகர்க்கு உள்ளம் இசையாது.

பதகனையும் ஆள நினைவாயே ---

பதகன் - கொடும்பாவி, கீழ்மகன். பதகச் செயலில் ஈடுபடுபவன் பாதகன் ஆவான். மகளிர் கலவியிலையே காலத்தைப் போக்குவதானது கொடிய நரகத்தில் கொண்டு சேர்க்கும். கொடும் பாதகங்களைச் செய்பவர் ஆடையும் இந்த நிலையைக் காமுகரும் அடைவர். இத்தகைய பாதகனாகிய என்னையும் ஆண்டு அருள் புரிய வேண்டும் என்று முருகப் பெருமானிடம் முறையிடுகின்றார் அடிகளார்.

வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய் கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்எலாம் நின்று உருகப் பெருந்து ஆண்டான், இன்றுபோய்
வான்உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. ---  திருவாசகம்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்துத் தவிக்கின்ற என்னை, எந்நாள் வந்து இரட்சிப்பையே?                                                                                                                    --- கந்தலங்காரம்.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநரகம், - ஓத அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                            --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை      
 
பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!     --- பட்டினத்தார்.

பெண்அருங் கலமே, அமுதமே எனப்பெண்
      பேதையர்ப் புகழ்ந்து,அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்தஎன் கினும்,நீ
      பயன்தரல் அறிந்து,நின் புகழேன்;
கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்
      கதிர்கள் நூறுஆயிரம் கோடித்
தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண
      சைலனே கைலைநா யகனே.                   
  
உயங்குநூல் இடைப்பூங் கோதையர் அல்குல்
      ஒளிமணிப் பாம்புதீண் டுதலால்
மயங்குவேன் தனக்கு, உன் பதமருந்து உதவி
      மயக்கம்என்று ஒழித்துஅருள் புரிவாய்;
முயங்குமா புகழ்ப்பூம் புகலிஅந் தணர்க்கு
      முத்துவெண் பந்தர்ஈந்து அகல்வான்
தயங்குமீன் முத்துப் பந்தர்வாழ் சோண
      சைலனே கைலைநா யகனே.                 ---  சோணசைலமாலை.            

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார்.

ஆனால் இவை சிவனருள் இன்றி துறவறத்தில் மட்டுமே நிற்கும் முனிவருக்கு உரியவை.

காமனை எரித்த கண்ணுதல் கடவுளாகிய எம்பெருமானைக் கருத்தில் இருத்திய அருளாளரைப் பொது மகளிர் மயக்க இயலாது. திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வானமாதர்கள் வந்து அவர் முன்னே,

ஆடுவார், பாடுவார், அலர்மாரி மேல்பொழிவார்,
கூடுவார் போன்று அணைவார், குழல் அவிழ, இடைநுடங்க
ஓடுவார், மாரவேளுடன் மீள்வர், ஒளி பெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.             ---  பெரியபுராணம்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒரு சிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலை? போமின்என்று அருளிச் செய்தார்.

இத்தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல்புரிய,
அத்தனார் திருவடிக்கீழ் நினைவுஅகலா அன்பு உருகும்
மெய்த்தன்மை உணர்வு உடைய விழுத்தவத்து மேலோர்,தம்
சித்தநிலை திரியாது செய்பணியின் தலைநின்றார்.
                               
இம்மாயப் பவத்தொடக்குஆம் இருவினைகள் தமைநோக்கி,
"உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான், திருவாரூர்
அம்மானுக்கு ஆளானேன், அலையேன்மின் நீர்" என்று
"பொய்ம்மாயப் பெருங்கடலுள்" எனும் திருத்தாண்டகம் புகன்றார்.

மாதர்அவர் மருங்கு அணைய வந்து எய்தி, மதனவசக்
காதலவர் புரிந்து ஒழுகும் கைதவங்கள் செய்திடவும்,
பேதம்இலா ஓர்உணர்வில் பெரியவரைப் பெயர்விக்க
யாதும்ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர்அகன்றார்.

இந்நிலைமை உலகுஏழும் எய்த அறிந்த இயல்பு ஏத்த
மன்னிய அன்பு உறு பத்தி வடிவான வாகீசர்,
மின்நிலவும் சடையார் தம் மெய்ப்பொருள் தான் எய்த வரும்
அந்நிலைமை அணித்து ஆகச் சிலநாள்அங்கு அமர்ந்திருந்தார்.

மன்னிய அந்தக்கரணம் மருவு தலைப் பாட்டினால்
தன்னுடைய சரணான தமியேனைப் புகலூரன்
என்னை இனிச் சேவடிக் கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன்உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பலமொழிந்தார்.   ---  பெரியபுராணம்.

சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள். மாதர் மயலால் மயங்கும் நிலை நீங், நமது சுவாமிகள் முருகப் பெருமான் தனக்கு அருள் புரியத் திருவுள்ளம் பற்றுமாறு வேண்டுகின்றார்.
  
சிலை மலை அதான பரமர் தரு பால ---

திரிபுர தகன காலத்தில் சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டார்.

தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வாள் வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருந்தனர். அவர்கள் பிரமதேவனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில், கலைமகள் நாயகன் அவர்கட்கு முன்தோன்றி யாது வரம் வேண்டுமென்ன, மூவரும் பத்மயோநியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலம் கழிந்தால் நானும் இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக்கரையிலுள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய நெஞ்சடைக் கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்” என, தானவர் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற்கு ஒரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப் புரம் மூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தால் அன்றி வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரமீந்து தனது இருக்கை சேர்ந்தனன்.

தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூசையினை காலந்தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப் படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பல விளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதியென்று உன்னி தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலந்தவம் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து, திரிபுரத்தவர் புரியவுந் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் செருத்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.

திருமால், "தேவர்களே அஞ்சாதீர்கள்" என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம் அடைந்து பிடகாகமம், பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரேயாதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராதொழிமின்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலை அடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அது அறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய யுத்தக் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தியண்ணல் மேருவரை சேர்ந்து சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.

மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும், அட்டப் பருவதங்கள் தூண்களாகவும், எட்டுத் திக்கு யானைகள் இடையில் தாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டும் கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமும் சாமரை இரட்டவும், தும்புரு நாரதர் இசை பாடவும், அரம்பை முதலிய அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும், சரஸ்வதி வில்லில் கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும், வாயுதேவன் அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக் கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.

வண்டிஇரு சுடராக, வையகம் தேராக, மாவாத நாலுமறையும்
வானவர்கள் அனைவரும் பரிவாரமாக,மலர் வாழ்பவன் பாகனாக,
கொண்டு,மலை சிலையாக, அரவு நாணாக, மால் கோலாக, அழலாகவாய்
கோல்இறகு காலாக வெந்து முப்புரம் எரி கொளுந்த எய்தவர் குமரனே.
                                                              --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தருங்கருங் குயிலுடன் இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.

தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற                  --- திருவாசகம்.

உடனே நாராயணர் இடபமாக, அவ்விடபமேல் எம்பெருமான் ஏறுதலும், திருமால் தாங்கும் சக்தியற்றுத் தரைமேல் விழ, சிவபெருமான் திருவருள் கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலும் காண்க.

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பு ஏடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

விரிஞ்சன் விநாயக பூசனை புரிய அவரருளால் இரதம் முன்போலாக சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்தி தேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்றண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.

அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்து ஏந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின் அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கோர் ஆயுதமேனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராய் இருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் யாதொரு தீமையும் இன்றிப் பெருமான் பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.

"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.       ---  திருஞானசம்பந்தர்.

வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.        ---  திருஞானசம்பந்தர்.

குன்ற வார்சிலை நாண் அராஅரி
         வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே? விடைஏறும் வேதியனே!
தென்ற லார்மணி மாட மாளிகை
         சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.     ---  திருஞானசம்பந்தர்.

கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
         கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
         பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.           ---  அப்பர்.

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே.         ---  சுந்தரர்.

 
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. --- மணிவாசகர்.

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற.        --- மணிவாசகர்.

மாநாக நாண் வலுப்புறத் துவக்கி ஒர்
     மாமேரு பூதரத் தனுப் பிடித்து, ரு
          மால் ஆய வாளியைத் தொடுத்து, ரக்கரில் ...... ஒரு மூவர்
மாளாது, பாதகப் புர த்ரயத்தவர்
     தூளாகவே, முதல் சிரித்த வித்தகர் வாழ்வே!     --- (ஆனாத ஞான) திருப்புகழ்.

மலைமகள் இடத்து வைத்து, மதிபுனல் சடைக்குள் வைத்து,
     மழுஅனல் கரத்துள் வைத்து, ...... மருவார்கள்
மடிவுற நினைத்து, வெற்பை வரிசிலை இடக்கை வைத்து,
     மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே!    --- (சலமலம்) திருப்புகழ்.

உருவு கரியது ஒர் கணை கொடு, பணிபதி
     இரு குதையும் முடி தமனிய தநுவுடன்,
     உருளை இருசுடர், வலவனும் அயன்என, ...மறைபூணும்
உறுதி படு சுர ரத மிசை அடியிட,
     நெறு நெறு என முறிதலும், நிலை பெறுதவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற, ......ஒருகோடி

தெருவும், நகரியும், நிசிசரர் முடியொடு
     சட சட என வெடி படுவன, புகைவன,
     திகுதிகு என எரிவன, அனல் நகைகொடு ...முனிவார் தம்
சிறுவ! வனசரர் சிறுமியொடு உருகிய
     பெரும! அருணையில் எழுநிலை திகழ்வன
     சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய ...... பெருமாளே. 
                                                              --- (அருவமிடையென) திருப்புகழ்.

அனகன் பெயர் நின்று உருளும் திரி
     புரமும் திரி வென்றிட, இன்புடன்
     அழல் உந்த நகும் திறல் கொண்டவர்....புதல்வோனே!
                                                              --- (கனகம் திரள்கின்ற) திருப்புகழ்.

சிகி பரியதான குமர ஈசா ---

பரி --- குதிரை. வேகமாக ஓடக் கூடியது. முருகப் பெருமான் ஏறியுள்ள மயிலானது ஆடுகின்ற பரி. அதனால் "ஆடும் பரி" என்றார் அநுபூதியில்.

மயிலை வாகனமாகக் கொண்டவர் குமாரக் கடவுளே! ஆதியில் பழத்தை வேண்டி உலகை ஒரு நொடியில் வலம் வந்தது ஒரு மயில். 
சூரசம்மாரத்தின் போது முருகப்பெருமானை மயிலாகத் தாங்கியவன் இந்திரன். கடலிலே மாமரமாக் தோன்றிய சூரபதுமனை இரு கூறாகப் பிளந்து, ஒரு கூறு மயிலாக முருகனைத் தாங்கியது.

திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழு ஏற வருவோனே ---

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கி வந்த பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம்மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின. உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழ மன்னனது திருமகளாய், பாண்டி மாதேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள்.

அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் அறிந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள். அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள். திருஞானசம்பந்தர் திருமறைக்காடு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை அநுபவித்தவர். எனவே, ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்கள் உள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

வேயுறு தோளிபங்கன்விடமுண்ட கண்டன்" எனத் தொடங்கும் கோளறு திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார்.

எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனங்கள் ஏற்பட்டன. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலிவேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.

சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கூகைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை யறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டு இழிந்து, அவரை எடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் நம் பெருமான் தன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி, “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும், இனி எதிர் காலத்தின் சிறப்பும், இன்றுஎழுந்தருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்குந் திருவருள் உடையேம். நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நலதமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் பெற்றனம்” என்றார்.

மதுரையும் ஆலவாயரன் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி, கோயிலுள் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க, பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயரனைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார். சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவனநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவில் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை அடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசனாணையால் வந்ததென்றுணர்ந்து,

  செய்யனே! திரு ஆலவாய் மேவிய
  ஐயனே! அஞ்சல் என்று அருள் செய் எனை,
  பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

என்று பாடியருளினார். “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற்பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிருங் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றுங் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

ஞானத்தின் திருவுருவை, நான்மறையின் தனித்துணையை,
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை,
தேன்நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். திருஞானசம்பந்தர் அவர்களுக்கு அபயம் தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாய் உலகாண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார். பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பீடம் தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,

மானின்நேர் விழிமாதராய், வழுதிக்கு மாபெருந் தேவி,கேள்
பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன்என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை மாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு ஏளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

என்று பாடித் தேற்றினார்.

அரசன் சமணரையும் சம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென; அமணர் இடப்புற நோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல்வாதம் தொடங்கினர். பெருநெருப்பு மூட்டினர். சம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை யிட, அவை சாம்பலாயின.  

புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவதென்று துணிந்தனர். வையை ஆற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது. திருஞானசம்பந்தப் பெருமான், "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் திருப்பாசுரத்தைப் பாடி அருளி, அந்த ஏட்டினை வையை ஆற்றில் ஒடும் வெள்ளத்தில் விடுத்தருளினார். அந்த ஏடு நீரினை எதிர்த்து, மேல் ஏறி வேகமாகச் சென்றது. பெருமான் ஏடு நிற்க, வன்னியும் மத்தமும் எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி அருளினார். ஏடு நின்றது. அந்த இடம் திருவேடகம் எறப்படுகின்றது.  குலச்சிறை நாயனார் குதிரை மீது ஏறி, காற்றினும் கடியச் சென்று, வையை ஆற்றில் நின்ற ஏட்டினை எடுத்து வந்தார். சமணர்கள் கழு ஏறினர்.

"எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்" என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஒங்கப் பாட,
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே.
                                                                        --- பெரியபுராணம்.

பால் அறாத் திரு வாயால் ஓதிய
     ஏடு நீர்க்கு எதிர் போயே, வாதுசெய்,
          பாடல் தோற்று, ரு நாலாம் ஆயிர ...... சமண்மூடர்
பாரின் மேல் கழு மீதே ஏறிட,
     நீறறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட
          பாது காத்து, அருளாலே கூன்நிமிர் ......இறையோனும்
ஞாலம் ஏத்தியது ஓர் மா தேவியும்,
     ஆலவாய்ப் பதி வாழ்வு ஆமாறு எணும்
          ஞான பாக்கிய பாலா! வேலவ! ...... மயில்வீரா!        --- (காலன்வேல்) திருப்பகழ்.


க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான கமல பத மாயன் மருகோனே ---

கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின் திருமருகரே என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார் அடிகளார்.

காட்டிலே இராமபிரான், தனது தம்பியாகிய இலக்குவனோடும், விசுவாமித்திர மாமுனியோடும் வருகையில், அங்கிருந்த கல் ஒன்றின் மீது, இராமபிரானுடைய அழகிய திருவடி பட்டதும், முன் ஒரு சாபத்தால் கல்லாய் இருந்த அகலிகை, தன் துன்பம் தீர்ந்து பழைய உருவினை அடைந்தாள்.

இனைய நாட்டினை இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து, இழி மாதவப் பன்னி,
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள் இடைக் கண்டார்.

கண்ட கல் மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற, வேறுபட்டு, உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்பப்
பண்டை வண்ணம் ஆய் நின்றனள்; மாமுனி பணிப்பான்.

இந்திரன் கௌதம முனிவரின் பன்னியான அகலிகை மேல் காதல் கொண்டு,  முனிவரைத் தமது குடிலை விட்டு, காலைக் கடன் கழிக்கச் செல்லுமாறு உபாயம் செய்து போக்கி, கௌதமர் வடிவில் வந்து அகலிகையைத் தழுவினான். இதனை அறிந்ததும் அகலிகையைக் கல்லாகுமாறு கௌதம முனிவர் சபித்தார்.

முனிவர் அருளியபடியே, இராமபிரானுடைய திருவடியின் துகள் பட்டவுடன் கௌதமருக்கு மனைவியாக ஆவதற்கு முன் இருந்த கன்னி அகலிகையாக அத் திருவடித் துகள் அருளியது.
          
மா இரு விசும்பில் கங்கை மண் மிசை இழித்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீ வினை நயந்து செய்த தேவர் கோன் தனக்குச் செங்கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி, அகலிகை ஆகும், என்றான்

பொன்னை ஏர் சடையான் கூறக் கேட்டலும் பூமின், கேள்வன்,
என்னையே! என்னையே! இவ் உலகியல் இருந்த வண்ணம்;
முன்னை ஊழ் வினையினாலோ? நடுவு ஒன்று முடிந்தது உண்டோ?
அன்னையே அனையாட்கு இவ்வாறு அடுத்த ஆறு அருளுக என்றான்.

அவ் உரை இராமன் கூற, அறிவனும் அவனை நோக்கிச்
செவ்வியோய்! கேட்டி, மேல் நாள் செறி சுடர்க் குலிசத்து அண்ணல்,
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்வி போல் விழியினாள் தன் வனமுலை நணுகல் உற்றான்.

தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்

புக்கு, அவேளாடும் காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்.

சரம் தரு சாபம் அல்லால் தடுப்பு அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்,
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசையாய்ப் போகல் உற்றான

தீ விழி சிந்த நோக்கிச், செய்ததை உணர்ந்து, செய்ய,
தூயவன், அவனை நின்கைச் சுடுசரம் அனைய சொல்லால்,
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம்.

எல்லையில் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போயபின்றை,
மெல்லியலாளை நோக்கி, "விலை மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி" என்றான்; கரும் கல் ஆய் மருங்கு வீழ்வாள்.

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே என்பர்,
அழல் தரும் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக என்னத்,
தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரத ராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி என்றான்.

அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்கத்,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள் கல்லாய்.

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரின் மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

தீது இலா உதவி செய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு,
மாதவன் அருள் உண்டாக வழிபடு, படர் உறாதே
போது நீ அன்னை என்று பொன் அடி வணங்கிப் போனான்.

அருந்தவன் உறையுள் தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர் தம்மைக் காணா விம்மலால் வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்குக் கடன் முறை பழுது உறாமல்
புரிந்த பின், காதி செம்மல், புனித மாதவனை நோக்கி.

அஞ்சன வண்ணத்தான் தன் அடித் துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழை இலாளை, நீ அழைத்திடுக என்னக்,
கஞ்ச நாள் மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான்.

குணங்களால் உயர்ந்த வள்ளல், கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந்தவனொடும் வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார்.    ---  கம்பராமாயணம்.

கௌதமர் மணப்பதற்கு முன் கன்னி அகலிகை; மணந்த பின்
பன்னி அகலிகை. இந்திரன் தீண்டிய பின் தூய்மை இழந்த அகலிகை.

இராமருடைய திருவடியில் துகள், கல்லான அகலிகையை, அமுதத்துடன் பாலாழியில் பிறந்தபோது இருந்த கன்னி அகலிகையாகச் செய்துவிட்டது.

மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு
     பாலன் ஆகி உதித்து, ஒர் முநிக்கு ஒரு
     வேள்வி காவல் நடத்தி, அ கற்கு உரு ...... அடியாலே

மேவியே, மிதிலைச் சிலை செற்று, மின்
     மாது தோள் தழுவிப் பதி புக்கிட,
     வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின் ...... னவனோடே

ஞால மாதொடு புக்கு அ வனத்தினில்,
     வாழும் வாலி படக்கணை தொட்டவன்,
     நாடி இராவணனைச் செகுவித்தவன் ...... மருகோனே!
                                                          --- (ஆலகாலப் படப்பை) திருப்புகழ்.

கல்லிலே பொன் தாள் படவே, அது
     நல்ல ரூபத்தே வர, கான் இடை
     கெளவை தீரப் போகும் இராகவன் ...... மருகோனே!
                                                         ---  கொள்ளையாசை (திருப்புகழ்).

குறைவிலா உனது வடிவினின் வந்தான்,
     குலிசன் என்று அறிந்திலேன், இசைந்தேன்,
கறை இலா எனது மனநிலை, ஐய,
     நாள்தொறும் கண்டு உளே தெளிந்து,
பொறையுடன் அதற்குத் தக்க செய்யாமல்
     இகழ்ந்து," கல் ஆகு" எனப் புகன்ற
அறிவு இலா முனியே! இக் கொடும் சாபம்
     அகல்வது எந்நாள் எனும் அளவில்...     --- திருச்சுழியல் புராணம்.

கருத்துரை

முருகா! விலைமாதர் மேல் வைத்த சிந்தையை மாற்றாது உழலும் பாதகனாகிய என்னையும் ஆண்டு அருள் புரிவாய்.


பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...