திருச் சேறை





திருச் சேறை

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில், "உடையார் கோயில்" என்று அழைக்கப்படுகின்றது.

      கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாக குடவாசல் செல்லும் சாலையில் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை செல்லலாம்.

     திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது.

இறைவர்               : செந்நெறியப்பர், சாரபரமேசுவரர்.

இறைவியார்           : ஞானவல்லி.

தல மரம்                : மாவிலங்கை.

தீர்த்தம்                 : மார்க்கண்டேய தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - முறியுறு நிறமல்கு.

                                      2. அப்பர்   -  1. பெருந்திரு இமவான்,
                                                           2. பூரியா வரும் புண்ணியம்.

         இவ்வாலயம் கிழக்கு நோக்கிய அமைப்புடையது. சிறிய இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதல் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் இறைவன் செந்நெறியப்பர் எனும் சாரபரமேசுவரர் சந்நிதிக்கு இடப்புறம் இறைவி ஞானாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்திலிருந்து உட்பிரகாரம் சென்றவுடன் கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி உள்ளது. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் மேற்குப் பிரகாரத்தில் தல விநாயகரும் அவரையடுத்து மார்க்கண்டேயரும் அடுத்து அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் உள்ளது. இதையடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சந்நிதியும் பாங்குற அமைந்துள்ளது.

     மற்ற எங்கும் இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும். மேலும் நடராஜப் பெருமான் சந்நிதியும் அதன் அருகில் பைரவர் சந்நிதியும் உள்ளது. எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்குள்ள பைரவருக்கு உண்டு. திருநாவுக்கரசரால் தனி தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவராவார்.

விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

என்று அவர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒரு பதிகத்தின் 6வது பாடலில் சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறுகிறார். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று அபிஷேக ஆராதனை செய்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகிய பலன்களைப் பெறலாம்.

         சூரியன் இறைவனை பூஜை செய்யும் தலங்களில் திருச்சேறை தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரியனது ஒளி இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகை பாதங்களிலும் நேரடியாகப் படுகின்றது. அச்சமயங்களில் இவ்வாலயத்தில் சூரியபூஜை மிகச்சிறப்பாக நடைபெறும்.

         மார்க்கண்டேயர் வழிபட்டு அவரது பிறவிக்கடன் நீங்க அருள் புரிந்த ரிணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால் நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

         இவ்வாலயத்தின் தல மரம் மாவிலங்கை ஆகும். இந்த மரம் வருடத்தின் 4 மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த 4 மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த 4 மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மடவாட்கு ஓர் கூறை உவந்து அளித்த கோவே என்று அன்பர் தொழச் சேறை உவந்து இருந்த சிற்பரமே" என்று போற்றி உள்ளார்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 403
பாடும் அரதைப்பெரும் பாழியே முதலாக,
சேடர்பயில் திருச்சேறை, திருநாலூர், குடவாயில்,
நாடியசீர் நறையூர்,தென் திருப்புத்தூர் நயந்துஇறைஞ்சி
நீடுதமிழ்த் தொடை புனைந்து, அந் நெடுநகரில் இனிது அமர்ந்தார்.

         பொழிப்புரை : போற்றப் பெறுகின்ற `அரதைப் பெரும்பாழி' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற `திருச்சேறையும்', `திருநாலூரும்', `திருக்குடவாயிலும்', சிறப்புகள் பலவும் தாமே நாடி வருதற்குரிய `திருநறையூரும்', `தென்திருப்புத்தூரும்' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே வீற்றிருந்தார் பிள்ளையார்.

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

பதியின் பெயர்        பாட்டுமுதற்குறிப்பு      பண்
அரதைப்பெரும்பாழி - பைத்தபாம்போடு  கொல்லி - தி.3 ப.30

திருச்சேறை -          முறியுறு               சாதாரி - தி.3 ப.86

திருநாலூர்மயானம் -  பாலூரும்           சீகாமரம் - தி.2 ப.46

திருக்குடவாயில் 1.திகழுந்திருமாலொடு   இந்தளம் - தி.2 ப.22                            2.கலைவாழும்               காந்தாரம் - தி.2 ப.58

திருநறையூர்ச் சித்தீச்சரம்    1.ஊருலாவு               தக்கராகம் - தி.1 ப.29                                               2.பிறைகொள்சடையர் தக்கேசி - தி.1 ப.71                                               3.நேரியனாகும்           பியந்தைக்காந்தாரம் - தி.2 ப.87 

தென் திருப்புத்தூர் -  மின்னும் சடைமேல்       காந்தாரம் - தி.2 ப.63

         திருஅரதைப்பெரும்பாழி இது பொழுது அரித்துவாரமங்கலம் என வழங்கப்பெறுகிறது. திருநாலூர்மயானம், திருநாலூர் எனவும், நாலூர் மயானம் எனவும் இரு பதிகளாகவுள்ளன. குடவாயில், குடவாசல் என வழங்கப்படுகிறது. திருநறையூர் - பதியின் பெயர். சித்தீச்சரம் - திருக்கோயிலின் பெயர். தென்திருப்புத்தூர், அரிசில்கரைப்புத்தூர் என வழங்கப்பெறுகிறது.


3. 086  திருச்சேறை      திருவிராகம்        பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முறிஉறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ,முன்
வெறிஉறு மதகரி அதள்பட உரிசெய்த விறலினர்,
நறிஉறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறிஉறு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் , தளிர் போன்ற நிறமும் , அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு , மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர் . நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு , கங்கை நதியையும் , பிறைச்சந்திரனையும் , மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 2
புனம்உடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்,
மனம்உடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்,
இனம்உடை மணியினொடு அரசிலை ஒளிபெற மிளிர்வதுஓர்
சினமுதிர் விடைஉடை அடிகள்தம் வளநகர் சேறையே.

         பொழிப்புரை : வனங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்துத் தூவித் தொழுகின்ற அடியவர்கட்கும் , மன உறுதிப்பாட்டுடன் அன்பால் உருகித் தியானம் செய்யும் அடியவர்கட்கும் துயர் களைந்து அருள்புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில் கட்டப்படும் மணியும் , அரசிலை போன்ற அணியும் ஒளிர , மிக்க கோபமுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவராய் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
புரிதரு சடையினர், புலிஅதள் அரையினர், பொடிபுல்கும்
எரிதரும் உருவினர், இடபம் அதுஏறுவர், ஈடுஉலா
வரிதரு வளையினர், அவரவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர், உறைதரு வளநகர் சேறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் முறுக்குண்ட சடைமுடி உடையவர் . புலியின் தோலை அரையில் கட்டியவர் . நீறுபூத்த நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசி விளங்கும் உருவினர் . இடப வாகனத்தில் ஏறுபவர் . சரிந்த வரிகளையுடைய வளையல்களை அணிந்த , பெருமையுடைய மகளிர் மகிழும்படி வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் இயல்புடையவர் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
துடிபடும் இடைஉடை மடவரல் உடன்ஒரு பாகமா,
இடிபடு குரல்உடை விடையினர், படம்உடை அரவினர்,
பொடிபடும் உருவினர், புலிஉரி பொலிதரும் அரையினர்,
செடிபடு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.

         பொழிப்புரை : உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமாதேவியைச் , சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . இடிமுழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர் . படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர் . திருவெண்ணீறு அணிந்த உருவினர் . இடையில் புலித்தோலாடை அணிந்தவர் . செடிபோன்று அடர்த்தியான சடைமுடி உடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒருநொடி அளவினில்
மந்தர வரிசிலை அதன்இடை அரவுஅரி வாளியால்
வெந்துஅழி தரஎய்த விடலையர், விடம்அணி மிடறினர்,
செந்தழல் நிறம்உடை அடிகள்தம் வளநகர் சேறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரிபுரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும் , அதனிடை வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி , திருமால் , வாயு , அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந்தழியுமாறு செய்த வீரமிக்க வாலிபர் . தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தர் . செந்தழல் போன்ற மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
மத்தரம் உறுதிறல் மறவர்தம் வடிவுகொடு, உருஉடைப்
பத்துஒரு பெயர்உடை விசயனை அசைவுசெய் பரிசினால்,
அத்திரம் அருளும் நம்அடிகளது அணிகிளர் மணிஅணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

         பொழிப்புரை : மந்தர மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கி வந்து , பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்ட விசயனைப் பொருது தளரச்செய்து , அவன் கௌரவர்களைத் தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் என்னும் அம்பைக் கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வளநகராய் , அடர்ந்த சோலைகள் சூழப்பெற்ற திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
பாடினர் அருமறை முறைமுறை பொருள்என அருநடம்
ஆடினர், உலகுஇடை அலர்கொடும் அடியவர் துதிசெய,
வாடினர் படுதலை இடுபலி அதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

         பொழிப்புரை : இறைவன் முறைப்படி வரிசையாக அரிய வேதங்களைப் பாடியருளியவர் . ஐந்தொழில்களை ஆற்றும் திருநடனம் செய்பவர் . உலகில் அடியவர்கள் மலரும் , பூசைக்குரிய பிற பொருள்களும் கொண்டு போற்றித் துதிக்க அருள்செய்பவர் . வாட்டமுற்ற பிரமனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்பவர் . அப்பெருமான் பெருமையுடன் வீற்றிருந்தருளும் வளநகர் , அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
கட்டுஉரம் அதுகொடு கயிலைநன் மலைமலி கரம்உடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிசெய்தார்,
மட்டுஉரம் மலர்அடி அடியவர் தொழுதுஎழ அருள்செயும்
சிட்டர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

         பொழிப்புரை : தனது உறுதியான உடல்வலிமை கொண்டு கயிலைமலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற கொடியவனான இராவணனின் உடலும் , பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர் சிவபெருமான் . அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்புடையவர் . அவர் வீற்றிருந்தருளும் வளநகர் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர,
அன்றிய அவர்அவர் அடியொடு முடியவை அறிகிலார்,
நின்றுஇரு புடைபட நெடுஎரி நடுவெயொர் நிகழ்தரச்
சென்றுஉயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே.

         பொழிப்புரை : திருமால் பன்றி உருவெடுத்தும் , பிரமன் அன்னப்பறவை உருவெடுத்தும் இறைவனைக் காணமுயல , அவ்விருவரும் தன் அடியையும் , முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றுமாறு , ஓங்கி , தன் மேலாந்தன்மை வெளிப்பட அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
துகள்துறு விரிதுகில் உடையவர், அமண்எனும் வடிவினர்
விகடம் அதுஉறுசிறு மொழியவை நலம்இல வினவிடல்,
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகுஉற முதுநதி
திகழ்தரு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.

         பொழிப்புரை : அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக் கொள்ளும் புத்தர்களும் , தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள் என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடைய சமணர்களும் , குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை பயக்காதவை . எனவே அவற்றைக் கேளற்க . அரும்பையொத்த இளம்பிறைச் சந்திரனையும் , பாம்பையும் , கங்கையையும் அழகுற அணிந்த சடைமுடியுடைய அடிகளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 11
கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவின்உறு
சிற்றிடை அவளொடும் இடம்என உறைவதொர் சேறைமேல்
குற்றம்இல் புகலியுள் இகல்அறு ஞானசம் பந்தன
சொல்தகவு உறமொழி பவர்அழி விலர்,துயர் தீருமே

         பொழிப்புரை : நன்மை தரும் வேதங்களை ஐயந்திரிபறக் கற்று ஓதும் அடியவர்கள் , தன்னுடைய திருவடிகளைத் தொழ , அழகிய குறுகிய இடையுடைய உமாதேவியோடு , சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக் , குற்றமற்ற புகலியில் அவதரித்த , எவரோடும் பகைமையில்லாத ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை முறையோடு ஓதுபவர்கள் அழிவற் றவர்கள் . அவர்களின் துன்பங்கள் யாவும் தீரும் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 215
நல்லூரில் நம்பர்அருள் பெற்றுப்போய், பழையாறை,
பல்ஊர்வெண் தலைக்கரத்தார் பயிலும்இடம் பலபணிந்து,
சொல்ஊர்வண் தமிழ்பாடி, வலஞ்சுழியைத் தொழுதுஏத்தி,
அல்ஊர்வெண் பிறைஅணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.

         பொழிப்புரை : திருநல்லூர் இறைவரிடம் அருள்விடை பெற்றுக் கொண்டு, பழையாறை முதலாக உள்ள பல ஊர்களுக்கும் சென்று, வெண்மையான தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியை அடைந்து தொழுது ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும் வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து.

        
பெ. பு. பாடல் எண் : 216
நாலூர்,தென் திருச்சேறை, குடவாயில், நறையூர்சேர்
பால்ஊரும் இன்மொழியாள் பாகனார் கழல்பரவி,
மேல்ஊர்தி விடைக்கொடியார் மேவும்இடம் பலபாடி,
சேல்ஊர்தண் பணைசூழ்ந்த தென்திருவாஞ் சியம்அணைந்தார்.

         பொழிப்புரை : திருநாலூரும், அழகான திருச்சேறையும் திருக்குடவாயிலும், திருநறையூரும் என்ற இத்திருப்பதிகளில் எல்லாம் வீற்றிருக்கின்ற பால்போன்ற இனிய சொற்களையுடைய உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளைப் பணிந்து போற்றிச் சென்று, விடையை ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் பல இடங்களையும் பாடிச் சென்று, சேல் மீன்கள் உலாவும் தண்ணிய வயல்கள் சூழ்ந்த அழகான திருவாஞ்சியத்தை அடைந்தார்.

         முதற்கண் குறிக்கப்பட்டிருக்கும் நான்கு திருப்பதிகளுள் திருச்சேறைக்கு மட்டுமே பதிகம் கிடைத்துள்ளது.

 1. `பெருந்திரு` (தி.4 ப.73) - திருநேரிசை.
2. `பூரியாவரும்` (தி.5 ப.77) - திருக்குறுந்தொகை .

         `விடைக்கொடியார் மேவும் இடம் பல பாடி` என்பதால், கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பதியை இங்குக் கொள்ளலாம். பதிகம்: `ஒருத்தனை` - திருக்குறுந்தொகை. திருநாலூர் மயானம், பேணுபெருந்துறை முதலிய பதிகளும் ஆகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை). இதுபொழுது பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருவாஞ்சியத்தை அணைந்தார் என்பதால், கிடைத்துள்ள பதிகம் பின்னர்ப் போற்றிப் பாடியதாம்.
 

4. 073    திருச்சேறை                     திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பெருந்திரு இமவான் பெற்ற
         பெண்கொடி பிரிந்த பின்னை,
வருந்துவான் தவங்கள் செய்ய
         மாமணம் புணர்ந்து, மன்னும்
அருந்திரு மேனி தன்பால்
         அங்குஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு , மிக்க செல்வத்தை உடைய , இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய , பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு , தன் உடம்பில் ஒருபாகமாகக் கொண்டார் .


பாடல் எண் : 2
ஓர்த்துஉள வாறு நோக்கி
         உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்என்று எண்ணி
         மயக்கில்வீழ்ந்து அழுந்து வேனை,
பேர்த்துஎனை ஆளாக் கொண்டு
         பிறவிவான் பிணிகள் எல்லாம்
தீர்த்துஅருள் செய்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆராய்ந்து உள்ளவாறு உண்மையை உணராத , உடல் பருத்த சமணரின் சொற்களை உண்மையென்று எண்ணி , மயக்கம் தரும் அவர்கள் , சமயத்தில் விழுந்து அழுந்திய நிலையில் இருந்த என்னை , வயிற்று வலியால் , அழுந்திய நிலையிலிருந்து எடுத்து , என்னை அடியவனாகக் கொண்டு , பிறவியைத் தருகின்ற பெரிய பிணிப்புக்களை எல்லாம் போக்கி , அடியேனுக்கு அருள் செய்தவராவர் .


பாடல் எண் : 3
ஒன்றிய தவத்து மன்னி
         உடையனாய் உலப்புஇல் காலம்
நின்றுதம் கழல்கள் ஏத்து
         நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேடன் ஆகி   
         விரும்பிவெங் கான கத்துச்
சென்றுஅருள் செய்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : சேறைச் செந்நெறிச் செல்வனார் , மனம் அலையாமல் ஒருமையுற்ற தவத்தில் நிலைபெற்று , தபோதனனாய்ப் பல காலம் நின்று தம் கழல்களைத் தியானித்த நீண்ட வில்லை உடைய அருச்சுனனிருந்த காட்டிற்கு வெற்றியைப் பெறும் வேடனாக விரும்பிச் சென்று , அவனுக்கு அருள்கள் பல செய்தார் .


பாடல் எண் : 4
அஞ்சையும் அடக்கி யாற்றல்
         உடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று
         மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி
         விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : சேறைச் செந்நெறிச் செல்வனார் , ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்யும் ஆற்றல் உடையவனாய் , பல்லாண்டுகள் வஞ்சனையற்ற தவத்தில் நிலைபெற்ற பகீரதனுக்காக , மிகுந்த கோபத்தை உடைய பல முகங்களாகப் பிரிந்து வேகத்தோடு பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கையைத் தமது சிறந்த சடையில் ஏற்றருளினார் .


பாடல் எண் : 5
நிறைந்தமா மணலைக் கூப்பி
         நேசமோடு ஆவின் பாலைக்
கறந்துகொண்டு ஆட்டக் கண்டு
         கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கு,அப் போதே
         எழில்கொள்சண் டீசன் என்னச்
சிறந்தபேறு அளித்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : சேறைச் செந்நெறிச் செல்வனார் , மண்ணியாற்றின் நிறைந்த , சிறந்த மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அந்த இலிங்கத்திற்குப் பசுவின் பாலைக் கறந்து அபிடேகம் செய்ய . அதனைக் கோபித்த தன் தந்தையின் கால்களை மழுவினால் வீழ்த்திய பிரமசாரியான விசாரசருமனுக்கு அப்பொழுதே சண்டீசன் என்று சொல்லப்படும் சிறந்த பதவியை வழங்கினார் .


பாடல் எண் : 6
விரித்தபல் கதிர்கொள் சூலம்
         வெடிபடு தமருகம் கை
தரித்ததுஓர் கோல கால
         பயிரவன் ஆகி, வேழம்
உரித்துஉமை அஞ்சக் கண்டு
         ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்துஅருள் செய்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : சேறைச் செந்நெறிச் செல்வனார் பலவாறு விரிந்த ஒளியை உடைய சூலத்தையும் , உடுக்கையையும் கையில் ஏந்திய அழகினை உடைய கால பைரவ மூர்த்தியாகி , யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச, ஒளி பொருந்திய அழகிய பவளம்போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார் .


பாடல் எண் : 7
சுற்றுமுன் இமையோர் நின்று
         தொழுது,தூ மலர்கள் தூவி
மற்றுஎமை உயக்கொள் என்ன,
         மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றுஒரு நொடியின் முன்னம்
         ஒள்அழல் வாயின் வீழச்
செற்று,அருள் செய்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : சேறைச் செந்நெறிச் செல்வனார் , தம்மைச் சுற்றி ஒரு காலத்தில் தேவர்கள் எல்லோரும் நின்று கொண்டு வணங்கி , தூய மலர்களைத் தூவி, ` எம்மைக் காப்பாற்றுவாயாக` என்று வேண்ட , வானத்திலே உலவிக் கொண்டிருந்த மும்மதில்களையும் ஒரே நொடியில் தீக்கு இரையாகுமாறு அழித்து , தேவர்களுக்கு அருள் செய்தார் .


பாடல் எண் : 8
முந்திஇவ் உலகம் எல்லாம்
         படைத்தவன் மாலி னோடும்
எம்தனி நாத னே,என்று
         இறைஞ்சிநின்று ஏத்தல் செய்ய
அந்தம்இல் சோதி, தன்னை
         அடிமுடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : சேறைச் செந்நெறிச் செல்வனார் , முற்பட்டு இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன் , திருமாலோடு , ` எங்கள் ஒப்பற்ற தலைவனே !` என்று வணங்கித் துதிக்க , முன்னர் எல்லை யில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப் பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கினார் .


பாடல் எண் : 9
ஒருவரும் நிகர் இலாத
         ஒண்திறல் அரக்கன் ஓடிப்
பெருவரை எடுத்த திண்தோள்
         பிறங்கிய முடிகள் இற்று,
மருவிஎம் பெருமான் என்ன
         மலர்அடி மெல்ல வாங்கி,
திருவருள் செய்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.

         பொழிப்புரை : சேறைச் செந்நெறிச் செல்வனார் , தனக்கு நிகரில்லாத மேம்பட்ட ஆற்றலை உடைய இராவணன் , விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட தன்னுடைய தோள்களும் , தலைகளும் சிதறப் பின் அன்பொடு பொருந்தி எம் பெருமானே ! என்று வழிபட , தம்முடைய திருவடியை அழுத்துதலைத் தவிர்த்து , அவனுக்குச் சிறந்த அருள் செய்தார் .
                                             திருச்சிற்றம்பலம்


5. 077   திருச்சேறை                    திருக்குறுந்தொகை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பூரியா வரும் புண்ணியம், பொய்கெடும்,
கூரிது ஆய அறிவு கை கூடிடும்,
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரி பாகன்தன் நாம நவிலவே.

         பொழிப்புரை : சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும் ; பொய்கெடும் ; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும் .


பாடல் எண் : 2
என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே,
மின்னு வார்சடை, வேத விழுப்பொருள்,
செந்நெல் ஆர்வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும் , வேதவிழுப்பொருளும் , செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க , நீ என்ன மாதவம் செய்தாய் !.


பாடல் எண் : 3
பிறப்பு, மூப்பு, பெரும்பசி, வான்பிணி,
இறப்பு நீங்கி, இங்கு இன்பம்வந்து எய்திடும்,
சிறப்பர் சேறையுள் செந்நெறி யான்கழல்
மறப்பது இன்றி மனத்தின்உள் வைக்கவே.

         பொழிப்புரை : திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால் , பிறப்பு , மூப்பு , மிக்கபசி , மிக்கபிணி , இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும் .

 
பாடல் எண் : 4
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்,
ஓடி எய்த்தும் பயனிலை, ஊமர்காள்,
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்தன் அடிஅடைந்து உய்ம்மினே.

         பொழிப்புரை : ஊமைகளே ! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை ; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப்பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக .


பாடல் எண் : 5
எண்ணி நாளும் எரிஅயில் கூற்றுவன்
துண்என் தோன்றில் துரக்கும் வழிகண்டேன்,
திண்ணன், சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லார்உளர் அஞ்சுவது என்னுக்கே.

         பொழிப்புரை : நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால் , அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன் ; திண்மை உடையவரும் , சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?


பாடல் எண் : 6
தப்பி வானம் தரணி கம்பிக்கில்என்,
ஒப்புஇல் வேந்தர் ஒருங்குஉடன் சீறில்என்,
செப்ப மாம்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னார்உளர் அஞ்சுவது என்னுக்கே.

         பொழிப்புரை : வானம் முறை தவறி ( வறண்டு ) உலகம் நடுங்கினால் என்ன ? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச்சினந்தால் என்ன ? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?


பாடல் எண் : 7
வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்துஒவ் வாதஉற் றார்களும் என்செய்வார்,
சித்தர் சேறைத் திருச்செந் நெறிஉறை
அத்தர் தாம்உளர் அஞ்சுவது என்னுக்கே.

         பொழிப்புரை : தேடிவைத்த செல்வமும் , பெண்களும் , ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார் ? சித்தரும் , சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?


பாடல் எண் : 8
குலங்கள் என்செய்வ, குற்றங்கள் என்செய்வ,
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே,
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்க னார்உளர் அஞ்சுவது என்னுக்கே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! குலங்கள் என்னசெய்யும் திறத்தன ? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன ? மனம் அசைந்து நீ நின்று சோராதே ; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்காக ?.


பாடல் எண் : 9
பழகி னால்வரும் பண்டுஉள சுற்றமும்
விழவிடா விடில் வேண்டிய எய்தஒணா,
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

         பொழிப்புரை : பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும், உண்மையானதுஅல்ல என்று அறிந்து அவர்கள் நம்மை நீங்கும்படி விட்டுவிடவில்லையானால்,  உண்மையாய் நமக்குத் துணை செய்யும் பொருள் என்று உணர்ந்து விரும்பிய நன்மைகளை அடையமுடியாது . ; விளங்குதலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்கு?


பாடல் எண் : 10
பொருந்து நீண்மலை யைப்பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி மலர்அடி வாங்கினான்,
திருந்து சேறையில் செந்நெறி மேவிஅங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடர்இல்லையே.

         பொழிப்புரை : பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும் , திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை .

திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...