வெள்ளிகரம் - 0667. அடல்அரி மகவு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அடல்அரி மகவு (வெள்ளிகரம்)

முருகா!
மகமாயை களைந்து, முகம் ஆறும் மொழிந்து,
திருவடி இன்பத்தைப் பெற ஞானோபதேசம் அருள்வாய்.


தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதானா


அடலரி மகவு விதிவழி யோழுகு
     மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும்

அலைகட லுலகி லலம்வரு கலக
     வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி

இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
     டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர

எனதற நினது கழல்பெற மவுன
     வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே

வடமணி முலையு மழகிய முகமும்
     வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும்

மரகத வடிவு மடலிடை யெழுதி
     வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா

விடதர திகுணர் சசிதரர் நிமலர்
     வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா

விகசித கமல பரிபுர முளரி
     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

அடல் அரி மகவு விதி வழி ஒழுகும்
     ஐவரும் மொய்க் குரம்பை ...... யுடன், நாளும்

அலை கடல் உலகில் அலம் வரு கலக
     ஐவர் தமக்கு உடைந்து ...... தடுமாறி,

இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு
     எல்லை விட, ப்ரபஞ்ச ...... மயல் தீர,

எனது அற, நினது கழல் பெற, மவுன
     எல்லை குறிப்பது ஒன்று ...... புகல்வாயே.

வடம் அணி முலையும், அழகிய முகமும்,
     வள்ளை எனத் தயங்கும் ...... இருகாதும்,

மரகத வடிவும், மடல் இடை எழுதி,
     வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா!

விடதர், அதிகுணர், சசிதரர், நிமலர்,
     வெள்ளி மலைச் சயம்பு ...... குருநாதா!

விகசித கமல பரிபுர முளரி
     வெள்ளிகரத்து அமர்ந்த ...... பெருமாளே.

பதவுரை


         வடம் அணி முலையும் அழகிய முகமும் --- நவமணிகளால் ஆன வடங்களை அணிந்த மார்பும், அழகான முகமும்,

         வள்ளை என தயங்கும் இரு காதும், மரகத வடிவும் ---  வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், அழகிய பச்சை நிறமும்,

         மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா --- படத்தில் எழுதி வள்ளியம்மையார் காவல் காக்கின்ற தினைப்புனத்தில் நின்ற மயில் வீரரே!

      விடதர் --- ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தவர்,

     அதி குணர் --- மேலான குணத்தை உடையவர்,

     சசிதரர் --- சந்திரனைத் திருச்சடையில் தரித்தவர்,

     நிமலர் --- தூயவர்,
        
      வெள்ளிமலைச் சயம்பு குருநாதா --- வெள்ளி மலையாகிய திருக்கயிலையில் வீற்றிருக்கும் தான்தோன்றியான சிவபெருமானுக்கு குருநாதரே!

      விகசிதம் கமல பரிபுர முளரி --- மலர்ந்த தாமரை போன்ற, சிலம்பணிந்த  திருவடியை உடையவனே,
        
     வெள்ளிகரத்து அமர்ந்த பெருமாளே --- வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் --- வலிமை வாய்ந்த திருமாலின் மகனாகிய பிரமதேவன் வகுத்த விதியின் வழிப்படி செல்லுகின்ற

      ஐவரும் மொய் குரம்பையுடன் --- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து புலன்களும் நெருங்கி அமைந்த குடிலாகிய இந்த உடலுடன்

      நாளும் --- நாள்தோறும்

     அலைகடல் உலகில் --- அலைகளை உடைய கடலால் சூழப்பட்டுள்ள உலகத்தில்

     அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி --- துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து,

      இடர் படும் அடிமை --- துன்பங்களுக்கு ஆளான அடிமையாகிய அடியேன்,

     உளம் உரை உடலொடு எல்லை விட --- மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றில் இருந்து விடுபட்டு,

      ப்ரபஞ்ச மயல் தீர --- உலக மாயையில் ஈடுபடுதலில் உண்டான மயக்கம் தீர்ந்து,

      எனது அற --- எனது எனப்படும் புறப்பற்று ஆகிய மமகாரம் நீங்கவும்,

     நினது கழல் பெற --- தேவரீரது திருவடி இன்பத்தைப் பெறவும்,

      மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே --- மோன வரம்பைக் குறிப்பதாகிய உபதேசத்தை அருள் புரிவாயாக.


பொழிப்புரை

         நவமணிகளால் ஆன வடங்களை அணிந்த மார்பும், அழகான முகமும், வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், அழகிய பச்சை நிறமும், படத்தில் எழுதி வள்ளியம்மையார் காவல் காக்கின்ற தினைப்புனத்தில் நின்ற மயில் வீரரே!

         ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைத் திருச்சடையில் தரித்தவர், தூயவர், வெள்ளி மலையாகிய திருக்கயிலையில் வீற்றிருக்கும் தான்தோன்றியான சிவபெருமானுக்கு குருநாதரே!

         மலர்ந்த தாமரை போன்ற, சிலம்பணிந்த  திருவடியை உடையவரே!
        
        வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         வலிமை வாய்ந்த திருமாலின் மகனாகிய பிரமதேவன் வகுத்த விதியின் வழிப்படி செல்லுகின்ற சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து புலன்களும் நெருங்கி அமைந்த குடிலாகிய இந்த உடலுடன், நாள்தோறும், அலைகளை உடைய கடலால் சூழப்பட்டுள்ள உலகத்தில் துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து, துன்பங்களுக்கு ஆளான அடிமையாகிய அடியேன், மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றில் இருந்து விடுபட்டு, உலக மாயையில் ஈடுபடுதலில் உண்டான மயக்கம் தீர்ந்து, எனது எனப்படும் புறப்பற்று ஆகிய மமகாரம் நீங்கவும், தேவரீரது திருவடி இன்பத்தைப் பெறவும், மோன வரம்பைக் குறிப்பதாகிய உபதேசத்தை அருள் புரிவாயாக.

விரிவுரை

அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ---

வலிமை வாய்ந்த திருமாலின் உந்தியில் தோன்றியவர் பிரமதேவர். அவர் படைப்புக் கடவுள். உயிர்களை அவற்றின் வினைக்கு ஏற்ப படைத்து அருளுபவர். விதிப்பதனால், பிரமதேவருக்கு விதி என்ற ஒரு பெயரும் உண்டு.

உயிர்கள் தன்முனைப்போடு செய்யும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் ஆகாமியம் என்று பெயர் பெறும். ஒரு பிறப்பில் செய்கின்ற ஆகாமிய வினைகள் யாவும் அந்தப் பிறப்பிலையே பயனுக்கு வந்து விடா. எடுத்து வந்துள்ள இந்தப் பிறப்பிலும், எடுத்த முன்னைப் பிறப்புக்களிலும் செய்த ஆகாமியம் என்னும் வினைகள் பயனுக்கு வராமல் குவிந்து கிடக்கும். இந்தக் குவியலுக்கு சஞ்சிதம் என்றும் தொல்வினை என்றும் பழவினை என்றும் பெயர்.

ஒவ்வொரு பிறப்பிலும் அனுபவிக்க வேண்டிய வினைகளை, வினைக் குவியிலில் இருந்து, ஒரு பகுதியாக எடுத்து, அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்க வேண்டி வரும். இந்த வினைக்கு, "பிராரத்தம்" என்றும் "ஊழ்வினை" என்றும் பெயர்.

இந்தப் பிராரத்தம் இறைவனால் விதிக்கப்படுகின்றது. அதனால் இது "விதி" என்று பெயர் பெறுகின்றது.

வினைகள் சடம். அவை தாமே இயங்கும் திறன் அற்றவை. இறைவனை அவற்றை உயிர்களுக்கு ஊட்டுகின்றான். ஊட்டுதல் என்பது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனுபவிப்பது ஆகும். குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தாய் அதற்கு உணவை ஊட்டுவது போல என்று கொள்க. உயிர்க்கு வரும் இன்பம் துன்பம் ஆகிய இரண்டினையும் இறைவனே ஊட்டுகின்றான். இந்த உண்மை, சிவஞான சித்தியாரில் பின்வருமாறு காட்டப்பட்டது.

இதம் அகிதங்கள் என்பது  
     இகல் மனவாக்குக் காயத்து,
இதம் உயிர்க்கு உறுதி செய்தல்,
     அகிதம் மற்று அது செய்யாமை,
இதம் அகிதங்கள் எல்லாம்
     இறைவனே ஏற்றுக் கொண்டு, இங்கு
இதம் அகிதத்தால் இன்பத்
     துன்பங்களை ஈவன் அன்றே.

நலம் தீங்குகள் என்பன மனம் மொழி மெய்களால் உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தலும் செய்யாது விடுதலுமாகும். இறைவனே ஒரு செயலின் நன்மை தீமைகளை மதிப்பிட வல்லவன். ஆகையால் அவற்றை அவனே கைக் கொண்டு அதனைச் செய்த உயிர்களுக்கு இன்பத் தையும் துன்பத்தையும் கூட்டுவான்.

இறைவன் இங்கு ஏற்பது என்னை
         இதம் அகி தங்கள்? என்னின்
நிறைபரன் உயிர்க்கு வைத்த
         நேசத்தின் நிலைமை யாகும்;
அறம்மலி இதம் செய்வோருக்கு
         அநுக்கிரகத்தைச் செய்வன்;
மறம்மலி அகிதம் செய்யின்
         நிக்கிர கத்தை வைப்பன்.

உயிர்கள் செய்த நலம் தீங்குகள் இரண்டினையும் இறைவனே ஏற்றுக் கொள்வான் என்பது ஏன்? எனில் எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்திருக்கும் இறைவன் உயிர்களிடத்து பேரருளினால் அவை வீடு பேறு அடைவதன் பொருட்டேயாகும். அறம் மிகுந்த நன்மைகளைச் செய்வோர்க்கு இறைவன் அருள்புரிவான். மறம் மிகுந்த தீங்கு புரிவோரை அதற்கு ஏற்ப ஒறுப்பான்.

அனுக்கிரகம் - அருள் செய்தல். நிக்கிரகம் - ஒறுத்தல்.

நிக்கிரகங்கள் தானும்
         நேசத்தால் ஈசன் செய்வது;
அக்கிரமத்தால் குற்றம்
         அடித்துத் தீர்த்து அச்சம் பண்ணி
இக்கிர மத்தி னாலே
         ஈண்டு அறம் இயற்றிடு என்பன்;
எக்கிர மத்தி னாலும்
         இறைசெயல் அருளே என்றும்.

இறைவன் உயிர்களை ஒறுத்தலும் கூட அவன் திருவருட் செயலேயாகும். எவ்வாறு என்னில் முறைமை தப்பிக் குற்றம் இழைத்த உயிரை ஒறுத்து இனித் தீவினை செய்யாத வண்ணம் அச்சுறுத்தி இனியேனும் அறத்தோடு பொருந்திய செயல்களைச் செய்வாயாக என்று உள் நின்று உணர்த்துவான். எம்முறையில் பார்த்தாலும் இறைவனின் செயல் என்றென்றும் அருளே ஆகும்.
  
தந்தையாய் பெற்ற தத்தம்
         புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடின் உறுக்கி
         வளாரினால் அடித்து தீய
பந்தமும் இடுவர்; எல்லாம்
         பார்த்திடின் பரிவே ஆகும்;
இந்த நீர் முறைமை யன்றோ-
         ஈசனார் முனிவும் என்றும்?

தந்தையும் தாயும் தாம் பெற்றெடுத்த மக்கள் தம் சொல்படி நடக்கவில்லை எனின் அம்மக்களைச் சொல்லால் கடிந்தும், வளாரினால் அடித்தும், அதற்கும் பணியாத போது கட்டி வைத்து அவர்களைத் திருத்த முயல்வார்கள். வெளிப்பார்வைக்குச் சினத்தால் ஒறுப்பது போல் தோன்றினாலும் ஆய்ந்து பார்க்கும் போது தாய்தந்தையர்களின் இச் செயல்கள்யாவும் தம் மக்களிடத்து அவர்கள் கொண்ட அன்பினால் விளைந்தனவே ஆகும். அவ்வாறே இறைவன் உயிர்களை ஒறுப்பது என்றென்றும் அவன் அருளால் விளைந்ததே.
  
செயல்களே பலத்தைச் செய்யும்;
         தெய்வம் வேண்டா இங்கு என்னின்
முயலும் இச்செயல்கள் இங்கே
         முழுவதும் அழியும்; எங்கே
பயன் அளிப்பன்? அழிந்தே
         பலன்களைப் பண்ணும் கெட்டே
வயல் இடும் தழையும் தின்னும்
         மருந்தும்பின் பலிக்கு மாபோல்.

செய்த வினைகளே தத்தம் பயன்களைச் செய்தவர்க்குக் கூட்டுவிக்கும். இதவை ஊட்டுவிப்பதற்கு ஒரு தெய்வம் வேண்டியதில்லை என்று சிலர் மறுப்பர். செயல்கள் யாவும் செய்த அப்பொழுதே அழிந்து ஒழிகின்றன. ஆதலால் வினைகளே வந்து பயனைத் தரும் என்ற கொள்கை பொருந்தாது. அழிந்த வினைகள் எவ்வாறு பயன் அளித்தல் கூடும் என்று மறுப்பாரை வினவுதல் வேண்டும். அவர்கள் மீட்டும்  உவமை கூறி ஐயம் எழுப்புவர். வயலில் இட்ட தழை உரம் முழுவதும் கெடுகிறது. ஆயினும் அழிந்த தழையே பின்னர் பயிர்கள் செழித்து வளர உரமாகிறது. ஒருவன் நோய் தீர்க்கும் மருந்தை அருந்து வானாயின் அம்மருந்து அவனால் செரிக்கப்பட்டு அழிகிறது. ஆனால் அழிந்த மருந்தே நோயை நீக்குகிறது. இந்த உவமைகள் வினைக்கும் பொருந்துவனவன்றோ. அழிந்த வினையும் பயன் தருமன்றோ என்பன அவர்கள் தொடுக்கும் வினாக்கள்.

செய்க்கு இடும் தழையும் தின்னும்
         திரவியம் அதுவும் போல
உய்த்திடும் செய்தி கெட்டே
         உறுவிக்கும் பலத்தை என்னின்
வைத்திடும் சோறும் பாக்கும்
         அருந்தினர் வயிற்றில் மாய்ந்தால்
மெய்த்திடும் பலம் உனக்கு;
         மலம் அலால் வேறும் உண்டோ?

வயலுக்கு இடும் உரமும் நோய் தீர உண்ட மருந்தும் தாம் அழிந்தே பயனைத் தருகின்றன என்ற உவமை எல்லா இடத்துக்கும் பொருந்தாது. உண்ணும் சோறும் தின்னும் வெற்றிலையும் அருந்தியவர்களின் வயிற்றில் மாய்ந்தது என்றால் அதனால் விளைந்த பயன் மலம் அல்லது வேறு உண்டோ? இல்லை ஆகலின் நீ கூறிய உவமை எல்லா விடத்தும் பொருந்தாது என்பதை நீ உணர்க.


திரவியம் உவமை அன்று
         செய்திக்கண்; திரவியங்கள்
விரவிய இடத்து வீந்து
         பலம் தரும்; இம்மை அம்மை
பரவி நீ பார்; நீர் அங்கி
         பாத்திரத்து இட்ட எல்லாம்
கரவிடும் இங்கே; எங்கே
         பலன் கொளக் கருதினாயே?

நீ கூறிய உரமும் மருந்தும் கெட்டு அந்த இடத்திலேயே பயன் தருவன என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வினையின் பயன்கள் செய்த அப்பிறவியிலேயே பயன் தருவன அல்ல. மறுபிறவியிலேயே பயன் தருவன என்பது உனக்கும் உடன்பாடு. ஆகவே இப்பிறவியில் நீரிலும் நெருப்பிலும் சொரிந்தனவும், ஏற்போர் கலத்தில் இட்டனவும் இங்கேயே அழிந்து போகின்றன. இவை நம் கண்ணால் காண்கிறோம். அவ்வாறு இருக்க அச்செயல்களின் பயன்கள் எங்கே வந்து உனக்குப் பொருந்தும் என்று எண்ணிப் பார்ப்பாயாக.

செய்தவர் மனத்தே எல்லாச்
         செய்தியும் கிடந்து பின்னர்
எய்தவே பலன்கள் ஈனும்
         என்றிடின் இரும் சுவர்க்கம்
பொய்யர் வாழ் நரகம் பூமி;
         புந்தியில் கிடந்து போந்தது
ஐயனே! அழகிது உன் சொல்;-
         இந்திர சாலம் ஆய்த்தே.

வினை தன்னைச் செய்தவர் மனத்திலே அடங்கிக் கிடக்கிறது. அதன் பின்னர் அடுத்த பிறவியில் வந்து தத்தம் பயனுக்கு ஏற்ப வந்து பொருந்தும் என்பர் சிலர். இனிய துறக்கம், பொய்யர்கள் வாழ்கின்ற நிரயம், அதன் பின்னர் இந்த நில உலகம் ஆகிய பல உலகங்களிலும் உள்ள இன்ப துன்பங்களை புத்தியில் கிடந்த வினை தானே தரும் என்று உன் சொல் அழகாக உள்ளது. இது கண் கட்டு வித்தை போன்று உளது.

தானம்செய் பொருள், தரித்தோர்,
         செய்தவர், தக்க செய்தி
ஊனம்பின் உறவே காண்டும்;
         பலம் உறுவிப்பான் வேண்டும்;
ஈனம் இல் செய்தி ஈசன்
         இடும் பணி; இவை நாம் செய்தால்
நூனங்கள் அதிகம் நோக்கி
         நுகர்விப்பன் வினைநோய் தீர.

ஒருவருக்குக் கொடையாக வழங்கப்பட்ட பொருள்களும், அக்கொடையை ஏற்றவரும், அக்கொடையை வழங்கியவரும், வழங்கியதாகிய செயலும் ஆகிய யாவும் நிலைபேறு இன்றி அழிவதை உலகில் காண்கிறோம். இவற்றால் நிகழும் பயன் நிலை பெற்றதாக விளங்கிச் செய்தவரைச் சென்று பொருந்துவதற்கு நிலைத்த தன்மை உடையவனாகிய ஒருவனே கூட்டுதல் வேண்டும். அத்தகைய நிலை பேறு உடையவன் இறைவனே. இறைவன் வினைகளின் பயன்களைக் கூட்டுவதற்கு இயைபு யாது என்னில் அறச் செயல்கள் யாவும் இறைவனின் கட்டளைகளே. ஆதலால் அவன் அருளிய விதிப்படி நடந்தால் அவற்றுள் குறைவு, மிகுதி நோக்கி அவற்றின் பயன்களை வினையாகிய நோய் தீருமாறு உயிர்களை நுகர்விப்பான்.

என்று காட்டப்பட்டது.

நாளும் ---

வாழ்வதற்கு என்று விதிக்கப்பட்ட ஒவ்வொரு நாளும்,

அலைகடல் உலகில் ---

அலைகளை உடைய கடலால் சூழப்பட்டுள்ளது நாம் வாழுகின்ற இந்த உலகம்.

கடலில் அலைகள் எழுவது காரண காரியத் தொடர்ச்சியாய் இடைவிடாது நிகழும். அது போ, உயிர்களுக்கு அனுபவிக்க வேண்டிய வினைகளின்படி, இன்பமும் துன்பமும், எல்லாக் காலத்திலும், காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றி வருவன. இதனை,மணிவாசகப் பெருமான், "பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வத் தடம் திரையால் எற்றுண்டு" எனக் காட்டினார். பிறவியைப் பெருங்கடலுக்கு உவமையாகக் காட்டினார் திருவள்ளுவ நாயனார். "பிறவிப் பெருங்கடல்" என்றார். பிறவியாகிய பெருங்கடலில் காரண காரியத் தொடர்ச்சியாய் துன்பங்கள் வரும்.காரணம் செய்த வினைப் பயன். காரியமும் அனுபவிக்கின்ற வினைப்பயனே.

ஐவரும் பொய் குரம்பையுடன்,  அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி இடர் படும் அடிமை ---

பிரகிருதி மாயை முக்குண வடிவாய் இருக்கும். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள். மணத்தினைத் தன்னுள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்புநிலை போலப் பிரகிருதி மாயை அம்முக்குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை எனலாம். பிரகிருதி என்ற சொல்லுக்குக் காரணம் என்பது பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல் பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில் அது மூலப்பகுதி எனப்படும்.

பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் ஆன்ம தத்துவங்கள் தோன்றும்.

உயிருக்கு உதவுவனவாகிய அகக் கருவிகள் முதலில் தோன்றும். அகக் கருவிகளை அந்தக் கரணங்கள் என்பர். சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் நான்குமே அவ்வகக்கருவிகள்.

சித்தம்

முக்குணங்களும் வெளிப்படாத காரண நிலையில் நின்ற பிரகிருதி பின்பு அக்குணங்கள் வெளிப்பட்டுத் தம்முள் சமமாய் நிற்கும் நிலையினதாய் ஆகும். அந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். வெளிப்பட்டதனை வியத்தம் என்றும் வெளிப்படாது நிற்பதனை அவ்வியத்தம் என்றும் கூறுவர். பிரகிருதிக்கு அவ்வியத்தம் என்ற மறு பெயரும் உண்டு. அவ்வியத்தமாய் நின்ற பிரகிருதியே முக்குணங்களும் சமமாய் வெளிப்பட்டு வியத்தமாய் நிற்கையில் குணதத்துவம் எனப்படுகிறது. இக்குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும். சித்தம், ஆன்மா யாதொன்றையும் சிந்திப்பதற்குக் கருவியாய் அமையும்.

புத்தி

முக்குணங்களும் சமமாய் நின்ற இக்குண தத்துவத்தில் புத்தி என்னும் அந்தக்கரணம் தோன்றும். புத்தியில் சாத்துவிக குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் இருக்கும். இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுகிறது என்றால் ஒன்று மற்றொன்றாய்ப் பரிணாமம் அடைகிறது என்பது கருத்தாகும். பரிணாமத்தில் இரண்டு வகையுண்டு. பால் முழுவதும் திரிந்து தயிராகி விடுகிறது. இம்மாற்றம் முழுப் பரிணாமம் எனப்படும். வெண்ணெயைச் சிலநாள் வைத்திருந்தால் அதன் ஒரு பகுதியில் புழுத்தோன்றும், ஒரு பகுதி புழுவாக மாறுவதால் இம்மாற்றம் ஏகதேச பரிணாமம் எனப்படும். பிரகிருதியிலிருந்து காரியங்கள் தோன்றுவது பால் தயிராவது போல முழுப் பரிணாமம் அன்று. வெண்ணெயில் புழுத் தோன்றுவது போல ஏகதேச பரிணாமமே. ஆகையால், ஒரு தத்துவம் தனது ஒரு பகுதியில் வேறொரு தத்துவமாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பின்பும் பரிணமியாது நின்ற பகுதி முன்னைத் தத்துவமாகவே நின்று தனக்குரிய செயலைச் செய்யும். அம் முறையில் குணதத்துவம் தனது ஒரு பகுதியில் புத்தியாய்ப் பரிணமித்த பின்பும் தனது நிலையில் நின்று தனக்குரிய செயலைச் செய்வதற்குத் தடைஇல்லை. இது இனிவரும் பிற தத்துவங்களுக்கும் பொருந்தும்.

குணங்களுள் சாத்துவிக குணம் பிரகாசம், மென்மை, அமைதி முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும் இராசத குணம் வன்மை. செயலூக்கம், கொடுமை முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும், தாமத குணம், மந்தம், மூடம், மோகம் முதலிய இயல்புகளை விளைவிக்கும். சாத்துவிக குணம் இன்பத்திற்கும் இராசத குணம் துன்பத்திற்கும், தாமத குணம் மயக்கத்திற்கும் ஏதுவாகும். குண தத்துவத்தில் புத்தி தோன்றும் என அறிந்தோம். இவ்வந்தக்கரணமே ஆன்மா யாதொன்றையும் இஃது இன்னது என்று நிச்சயம் செய்வதற்குக் கருவியாகும். இக் கருவி நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்தற்கு ஏற்றவாறு பிரகாசமான சாத்துவிக குணம் மிக்குடைய தாயிருத்தல் நோக்குதற்குரியது.

அகங்காரம்

புத்தி தத்துவத்தினின்றும் அகங்காரம் என்னும் அந்தக்கரணம் தோன்றும். இதில் இராசத குணம் மிகுதியாகவும் ஏனை இரு குணங்களும் குறைவாகவும் நிற்கும். யான் இதனை அறிவேன். யான் இதனைச் செய்வேன். யான் இதனை நுகர்வேன் என்றாற் போல எச்செயலிலும் ஆன்மா முனைத்தெழுவதற்கு இவ்வகங்காரமே கருவியாகும். அவ்வாறு எழுச்சியுறுவதற்கு ஏற்றவாறு இக்கருவி இராசத குணம் மிக்குடையதாயிருத்தல் காணலாம். எல்லா வகையான எழுச்சிக்கும் அகங்காரமே காரணமாய் இருத்தலால், இனித்தோன்றும் பல தத்துவங்களுக்கு அது காரணமாய் நிற்கிறது.

மனம்

சாத்துவிக குணக் கூறாகிய தைசத அகங்காரத்தினின்றும் முதலில் மனம் என்னும் அந்தக்கரணம் தோன்றம். இவ்வந்தக்கரணம் புறத்தேயுள்ள பொருளைச் சென்று பற்றுவதாகும்.

ஞானேந்திரியங்கள்  

அகக் கருவிகளாகிய அந்தக்கரணங்களின் பின்னர்ப் புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும்,

மனத்தின் பின்னர் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன. இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும் இவை புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் என்னும் புலன்களை ஆன்மா அறிதற்குக் கருவிகளாதலின் ஞானேந்திரியங்கள் எனப்பட்டன. தமிழில் அறிகருவிகள் என்றும், ஐம்பொறிகள் என்றும் கூறப்படும்.

செவி முதலிய ஞானேந்திரியங்களை வாயிலாகக் கொண்டு ஓசை முதலிய புலன்களைச் சென்று பற்றுவது மனமேயாகும். அகக் கருவியாகிய மனம் இவ்வாறு புறத்தேயும் சென்று புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கவர்ந்த வெளிப்புலன்களை மனமானது பற்றி அகத்தேயுள்ள புத்திக்குத் தருகிறது. இவ்வாறு மனம் ஏனைய அகக் கருவிகளுக்கும் ஞானேந்திரியங்களாகிய புறக் கருவிகளுக்கும் இடையே நின்று அகம் புறம் ஆகிய ஈரிடத்தேயும் விரைந்து செல்வதாய் உள்ளது. இதனால், ஏனைய அகக் கருவிகளைப் போலல்லாமல் மனமானது புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களோடும் இயைந்து நிற்கும் என்பது விளங்கும்.

சாத்துவிக குணம் பிரகாசம் உடையது. ஆதலால், குண தத்துவத்தில் சாத்துவிக குணம் மிகுந்து போது நிச்சயித்தல் ஆகிய அறிவுத்தொழிலைச் செய்யும் புத்தி தோன்றிற்று. அது போலவே, பிரகாசம் உடைய சாத்துவிகக் கூறிலிருந்து மனமும் ஞானேந்திரியங்களும் தோன்றின.

ஞானேந்திரியங்களாவன செவி, தோல், கண், நாக்கு, மூக்கு. இப்பெயர்கள் உறுப்புக்களின் பெயர்களாய் இருப்பினும் அவ்வுறுப்புக்கள் ஞானேந்திரியங்கள் அல்ல. அவ்வுறுப்புக்களில் நின்று அவ்வப்புலன்களை அறிவனவாகிய ஆற்றல்களே ஞானேந்திரியங்கள் எனப்படுகின்றன. எனவே செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே செவி இந்திரியம். கண் ஆகிய உறுப்பில் நின்று ஒளி என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே கண் இந்திரியம். இவ்வாறே பிற இந்திரியங்களையும் கொள்ள வேண்டும். செவியாகிய உறுப்பு இருந்தும் ஓசையை அறிகின்ற ஆற்றல் அவ்விடத்தே இல்லாத போது கேட்டல் நிகழ்வதில்லை. இவ்வாறே பிற உறுப்புக்களிலும் அந்த அந்த ஆற்றல் இல்லாவிடில் அவ்வவ்வறிவு நிகழாமை கண்கூடு, இதனால் உறுப்பு என்பது வேறு. இந்திரியம் என்பது வேறு என்பதும். இந்திரியம் தங்கி நின்று அறிவதற்கு உறுப்பு இடமாகவுள்ளது என்பதும் தெளிவாகும்.

கன்மேந்திரியங்கள்

தைசத அகங்காரத்தினின்று மனமும், ஞானேந்திரியங்களும் தோன்றிய பின்னர், வைகாரிக அகங்காரத்தினின்றும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை வாய், கல், கை, எருவாய், கருவாய் என்பன இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும். இவை பேசுதல், நடத்தல் முதலிய தொழில்களைச் செய்தற்குக் கருவியாகலின் கன்மேந்திரியங்கள் எனப் பெயர் பெற்றன. தமிழில் தொழிற்கருவிகள் எனவும், செயற்பொறிகள் எனவும் கூறலாம். இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல் என்பன. கை இடுதல் ஏற்றல்களைச் செய்வதாகக் கூறினாலும் உடம்பில் உள்ள எந்த உறுப்பின் இயக்கமும் கையின் செயலாகவே கொள்ளப்படும். அஃதாவது காலை நீட்டுதல், மடக்குதல், தலையை அசைத்தல், புருவத்தை நெரித்தல், கண்களை இமைத்தல், வாயை அசைத்தல் முதலியவையெல்லாம் கை இந்திரியத்தின் தொழில்களாகவே கொள்ள வேண்டும். எருவாய் என மலக்கழிவு வாயினையே கூறினாலும், அது உடம்பில் உள்ள பிற கழிவு மண்டலம் முழுவதையும் குறிக்கும். எனவே மலசலம் கழித்தல், எச்சில் உமிழ்தல், உண்டதைக் கக்குதல், மூக்கு நீர் சிந்துதல், வியர்வையை வெளிப்படுத்தல் முதலியவை எல்லாம் எருவாயின் தொழில்களாகவே கொள்ளப்படும்.

எருவாயின் செயலிலும் கருவாயின் செயலிலும் வேறுபாடு உண்டு. எருவாயின் செயலை அடக்கினால், அது உடலுக்குத் தீங்கு பயக்கும். ஆனால் கருவாயின் செயலை அடக்கினால் அது உடலை நன்றாக வைக்கும். உயிருக்கும் நலம் தரும். இவ்வேறுபாட்டினால் எருவாயும் கருவாயும் வெவ்வேறு இந்திரியங்கள் என்பது விளங்கும். மேலும் கருவாயின் செயலால் இனப்பெருக்கம் உண்டாதலாகிய வேறுபாடும் குறிப்பிடத்தக்கது. ஞானேந்திரியங்களைப் பற்றிக் கூறும்போது உறுப்புக்கள் இந்திரியமல்ல. அவற்றை இடமாகக் கொண்டு நிற்கும் ஆற்றல்களே இந்திரியங்கள் எனக் கண்டோம். கன்மேந்திரியங்களுக்கும் இது பொருந்தும். வாய், கால் முதலிய இடங்களில் நின்று பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும் ஆற்றல்களே கன்மேந்திரியங்களாகும். கன்மேந்திரியங்கள் தொழில் செய்யும் கருவிகளாதலின், ஊக்கத்தைத் தரும் இராசத குணக் கூறாகிய வைகாரிக அகங்காரத்தினின்றும் அவை தோன்றின என்றது பொருத்தம் உடையதாகும்.

இனி, கன்மேந்திரியங்களுக்குப் பின்னர் மூன்றாவது கூறாகிய பூதாதி அகங்காரத்திலிருந்து முதலில் தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. சத்த தன்மாத்திரை, பரிச தன்மாத்திரை, ரூப தன்மாத்திரை, ரச தன்மாத்திரை, கந்த தன்மாத்திரை, ஆகிய இவை ஐந்தும் இம் முறையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இவ் வைந்து தன்மாத்திரைகளிலிருந்தே பின்பு ஐம்பூதங்கள் தோன்றும். ஐம்பூதங்களுக்கு முதற்காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதி அகங்காரம் எனப்பட்டது. ஆயின் இதிலிருந்து பூதங்கள் நேரே தோன்றுவதில்லை. முதலில் தன்மாத்திரைகள் தோன்ற, அவற்றிலிருந்தே பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் காரியமான பூதங்கள் பருமையானவை. தன்மாத்திரைகளைச் சூக்குமபூதம் எனவும். பூதங்களைத் தூலபூதம், மகாபூதம் எனவும் வழங்குவர். பொதுவாகப் பூதம் என்றால் அது தூலபூதத்தையே குறிக்கும்.

தன்மாத்திரை என்ற சொல்லுக்கு அதனளவில் நிற்பது என்பது பொருள். ஓசையை நாம் கேட்கும் பொழுது அது வல்லோசை என்றோ, மெல்லோசை என்றோ, இனிய ஓசை என்றோ, இன்னா ஓசை என்றோ சில வேறுபாடுகளை உடையதாய்ச் சிறப்பு வகையால் நமக்குப் புலனாகுமேயன்றி, அவ்வேறுபாடுகள் இல்லாமல் வெறும் ஓசை என்னும் அளவில் பொதுவாய் அது புலனாகாது. ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு என்றாற் போலச் சிறப்பு வகையால் உணர்கின்றோமேயன்றி, அவ்வேறுபாடுகள் அற்ற வெறும் ஊற்றினை நாம் உணர்வதில்லை. சுவையும் இவ்வாறே, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்றாற் போலச் சிறப்பாகப் புலனாகுமேயன்றி வெறும் சுவை என்னும் நிலையில் பொதுவாய் அது புலனாவதில்லை. ஏனையவையும் இவ்வாறே.

ஓசை முதலிய ஐந்தும் இங்குக் கூறிய சிறப்பு நிலையை எய்தாமல் பொதுவாய் நிற்கும் நிலை உண்டு. அஃதாவது ஓசை வன்மை மென்மை முதலிய பாகுபாடு இன்றி ஓசை என்னும் அளவில் நிற்கும். ஊறு வழுவழுப்பு முதலிய பாகுபாடு இன்றி ஊறு என்னும் அளவில் நிற்கும். சுவை இனிப்பு கசப்பு முதலிய பாகுபாடு இன்றிச் சுவை என்னும் அளவில் நிற்கும் அதனளவில் நிற்றல் என்பதன் பொருள் இதுதான். இவ்வாறு நிற்கும் பொதுநிலையிலே அவை தன் மாத்திரைகள் எனப்படுகின்றன. செவி முதலிய பொறிகளுக்குப் புலனாகாத நுண்ணிய நிலை இது.

ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும் அவ்வாறு பரிணமித்த பொழுது இவ்வோசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது அவற்றின் குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும் குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும் அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும். தன்மாத்திரைகள், பூதங்களும் முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.

தன்மாத்திரைகளிலிருந்து பூதங்கள் தோன்றும் எனக் குறிப்பிட்டோம். சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். ரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.

காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும். இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின் குணமாய் நிற்கும்; ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும்; சுவை நீரின் குணமாய் நிற்கும்; நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும். தன்மாத்திரைகளைப் பற்றி அறிய வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. அஃதாவது, சத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும். பரிச தன்மாத்திரை சத்தம்மும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும். உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய் நிற்கும். இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும். கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய் நிற்கும்.

காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம் ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையவாயிருக்கும் அஃதாவது, ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும். காற்று, ஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும். நெருப்பு ஓசை, ஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும். நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும். நிலம், ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும். இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல்வேண்டும்.

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த்
தரணி தலத்து அஞ்சாகி         ---  அப்பர்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி.     --- திருவாசகம்.

பூதங்கள் இக்குணங்களையே அன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது. அவைகளைப் பற்றிச் செய்யுள் 9- இல் நாம் பார்க்க விருக்கிறோம். பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்திற் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும், பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாயிருத்தல் தெளிவு. இவற்றிற்கெல்லாம் முதற் காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம் எனவும், அது தாமதகுணக் கூறு எனவும் பார்த்தோம். தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். மேற்கண்டவாறு அமைத்துக் காட்டுதல், அவற்றின் தோற்ற முறையை நினைவிற் கொள்ள உதவும் இங்குக் காட்டிய காரியங்கள் இருபத்து நான்கும் தத்துவங்கள் எனப்படும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.

தத்துவங்கள் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுதல்

தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். எவ்வகையாலேனும் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுவதே தத்துவமாகும். மேற்கூறிய தத்துவங்களில் அந்தக்கரணங்கள் நான்கும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பதினான்கும் ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக் கருவியாய் நிற்றல் வெளிப்படை. அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும் பூதங்களும் ஆகிய தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு எவ்வாறு கருவியாய் நின்று உதவுகின்றன என எண்ணலாம். தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன.

இனி தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும்.

இவ்வாறு பிரகிருதி மாயை இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி உலக நுகர்ச்சியைத் தருகிறது. காரணத்தில் உள்ளது காரியத்திலும் இருக்கும் எனப் பார்த்தோம். முதற்காரணமாகிய பிரகிருதி முக்குண வடிவானது. ஆகவே அதன் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமாயிருக்கும். இவற்றைப் பொருந்துகிற ஆன்மாக்களும் முக்குணவயப்பட்டு இன்ப துன்ப மயக்க உணர்வுகளை அடையும். பிரகிருதி தனது முக்குண வேறுபாட்டான் உயிர்களது உள்ளத்தைப் பலவாறு மயங்கச் செய்யும். இவ்வகையில் பிரகிருதி மயக்கும் தன்மையுடைய ஒரு பெண் மகளைப் போன்றது. அவள் தன் ஆடை அணிகளாலும் குணங்களாலும் ஆடவனை மயக்குவது போலப் பிரகிருதி தன் காரியமாகிய முக்குணங்களால் ஆன்மாக்களை மயக்குகிறது என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய தத்துவம் இருபத்து நான்கும் ஆன்மாக்களுக்குப் போக சாதனமும், போக்கியமுமாய் அமைகின்றன.

ஆன்ம தத்துவம்

இத்தத்துவங்கள் இருபத்து நான்கும் ஆன்ம தத்துவம் எனப்படுகின்றன இப்பெயருக்கான காரணம் அறிதற்குரியது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாலும் கட்டுண்ட ஆன்மாக்கள் சகலர் எனப்படுவர். சகலராகிய ஆன்மாக்களுக்குத் தலைவர் சீகண்டவுருத்திரர். அவரே இறைவனது ஆணை வழி நின்று பிரகிருதி முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களைத் தோற்றி ஒடுக்குபவர் ஆவர். ஆன்ம தத்துவம் என்பதில் உள்ள ஆன்மா என்ற சொல் சகலராகிய ஆன்மாக்களை முதலில் குறித்துப் பின்னர் அவர்கட்குத் தலைவராகிய சீகண்டவுருத்திரரைக் குறித்தது அவரால் செயற்படுத்தப் படுதலின் அத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப் பெயர் பெற்றன. இது மரபாகச் சொல்லி வரும் விளக்கம். இவ்வாறன்றிச் சகலராகிய ஆன்மாக்களுக்குச் சிறப்பாக உரியனவாய் நிற்றல் பற்றி இத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப்பட்டன என்று கூறுதலும் அமையும்.

இதுகாறும் நாம் விரிவாக அறிந்த செய்திகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். உலகுக்கு முதற் காரணம் மாயை. அது சுத்த மாயை, அசுத்த மாயை என் இரு பகுதியாய் நிற்கும். அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியமே பிரகிருதி மாயை, நாம் வாழும் உலகுக்கும், நமது உடம்புக்கும் நேரே காரணமாய் இருப்பது இப்பிரகிருதியேயாகும். பிரகிருதியிலிருந்து முதலில் அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும். பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.

மாயை என்பது மயக்கவும் செய்யும். தெளிவதற்கும் துணை புரியும். "மகமாயை களைந்திட வல்ல பிரான்" என்று முருகப் பெருமானைக் காட்டினார் நம் அருணைவள்ளல். உயிரானது சகமாயை என்னும் உலகமாயையில் நின்று தயங்கும் நிலையை மாற்றுபவர் முருகப் பெருமான்.


இவ்வளவு அற்புதமாக உயிர்களுக்கு உடலையும், அவற்றின் அநுபோகத்திற்கு உலகப் பொருள்களையும் இறைவன் படைத்து அளித்துள்ளான். உயிர்களின் அறிவு ஆணவமலத்தால் விளங்காமல் இருக்கின்றது. இந்த ஆணவ மல மறைப்பை நீக்க, உயிர்களுக்கு வினைகளின் பயனை அநுபவிக்கத் தருபவன் இறைவன், அநுபவித்த இன்பத் துன்பங்களின் வாயிலாகப் பக்குவ நிலையை அடைந்து, உடலையும், உலகப் பொருள்களையும் நிலையில்லாதன, அவற்றால் பெறப்படும் இன்பமும் நிலையில்லாததே என்று உணர்ந்து, மெய்யறிவைப் பெற்று, மெய்ப்பொருளாகிய சிவத்தை அடைந்து, என்றும் நீங்காத உண்மை இன்பத்தில் திளைத்து இருக்க வேண்டும்.

ஆனால், அறிவு மயக்கத்தால், நிலையில்லாத உடம்பை நான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருள்களை எனதுஎன்றும் மயங்கி, புலன்களின் வழியே சென்று, சிற்றின்பத்தையே அநுபவித்து, வினைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டு பிறவித் துன்பத்திலேயே உழலுகின்றது. புலன்களை வெல்லும் உபாயத்தை, வென்றவர்களோடு இருந்து பெற முயலுதல் வேண்டும்.

வென்றிலேன் புலன்கள் ஐந்தும், வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன், ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்,
நின்று உளே துளும்புகின்றேன், நீதனேன், ஈசனே, ஓ!
இன்று உளேன், நாளை இல்லேன், என்செய்வான் தோன்றினேனே.   ---  அப்பர்.

பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர்வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்
ஐயநான் அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே.                         ---  அப்பர்.

 அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டு,இங்கு உழிதரும் ஆதனேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு, அச்சம்தீர்ந்தேன்,
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகை வீரட்டனீரே.                    ---  அப்பர்.

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனது தாள்
சேர ஒட்டார் ஐவர்; செய்வது என் யான்? சென்று தேவர் உய்யச்
சோர நிட்டூரனை சூரனை கார் உடல் சோரி கக்கக்
கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே!  --- கந்தர் அலங்காரம்.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.                              ---  கந்தர் அநுபூதி.

உளம் உரை உடலொடு எல்லை விட ---

மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றில் இருந்து விடுபட்டால்தான் பரம்பொருளை உணரமுடியும். பரம்பொருள் என்பது அனுபவப் பொருள் ஆகும்.கருவிகரணாதிகளால் அறியப்படும் பொருள் அழியக் கூடியது. நிலையில்லாதது.

உலகப் பொருள்களில் பற்று வைத்து உழல்வதை விடவேண்டும்.  "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என்பது திருவாய்மொழி.

உரை - வாக்கின் தொழில். செயல் - உடம்பின் தொழில்.  உணர்வு - மனத்தின் தொழில். மனவாக்குக்காயம் என்ற மூன்று காரணங்களின் தொழில் நீங்க வேண்டும்.

"தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஒர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல் பெருமான்.

உடலும்உடல் உயிரும்நிலை பெறுதல்பொருள் எனஉலகம்
    ஒருவிவரும் மநுபவன  ......  சிவயோக சாதனையில்
ஒழுகும்அவர் பிறிதுபர வசம்அழிய விழிசெருகி
    உணர்வுவிழி கொடுநியதி  ......  தமதூடு நாடுவதும்,

உருஎனவும் அருஎனவும் உளதுஎனவும் இலதுஎனவும்
    உழலுவன பரசமய  ......  கலைஆர வாரம்அற 
உரைஅவிழ உணர்வுஅவிழ உளம்அவிழ உயிர்அவிழ
    உளபடியை உணரும்அவர்  ......  அநுபூதி ஆனதுவும்... ---  சீர்பாத வகுப்பு.

கருணை சிறிதும் இல் பறிதலை நிசிசரர்,
     பிசித அசன மறவர் இவர் முதலிய,
          கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடி,
கலகல என நெறி கெட, முறை முறைமுறை
     கதறி, வதறிய, குதறிய கலைகொடு
          கருத அரியதை, விழிபுனல் வர, மொழி ..குழறா,அன்பு

உருகி உனது அருள் பரவு கை வரில், விரகு
     ஒழியில், லகியல் பிணை விடில், ரை செயல்
          உணர்வு கெடில், யிர் புணர் இருவினை அளறு ......அது போக
உதறில், னது எனும் மலம் அறில், றிவினில்
     எளிது பெறல் என, மறை பறை அறைவதொர்
          உதய மரணம் இல் பொருளினை அருளுவது ..... ஒருநாளே.
                                                                                                                        ---  திருப்புகழ்.

பொற்புக் கச்சியுள் நிற்கும் .....பெருமான் ன்று,
அவிழும் அன்பு உற்றுக் கற்று, மனத்தின்
     செயல் ஒழிந்து, ட்டப் பட்ட அதனைச் சென்று
     அடைதரும் பக்வத்தை, தமியெற்கு, ன்று ......அருள்வாயே.
                                                                         --- (செறிதரும்) திருப்புகழ்.


ப்ரபஞ்ச மயல் தீர ---

உலக மாயையில் ஈடுபடுதலில் உண்டான மயக்கம் தீரவேண்டும். அதற்குத் திருவருள் துணைபுரிய வேண்டும் என்று முருகப் பெருமானை நாடுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே,
அகம் மாடை மயநிதையர் என்று அயரும்
சகமாயையில் நின்று தயங்குவதே.       ---  கந்தர் அநுபூதி.

எனது அற ---

எனது எனப்படும் புறப்பற்று ஆகிய மமகாரம் நீங்கவேண்டும் என்றார். நான் என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரம் நீங்கினால், எனது என்பது இல்லை ஆகிவிடும். நானை இல்லை என்கிற போது எனது என்று எதுவும் இருக்கப் போவது இல்லை.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.              --- திருக்குறள்.

தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும் என்று உரை கண்டார் பரிமேலழகர்.

"யான்தான் என்னும் இரண்டும் கெட்டால் அன்றி யாவர்க்கும் தோன்றாது சத்தியம்" என்றார் நமது அருணை வள்ளல்.

மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே ---

மோன வரம்பைக் குறிப்பதாகிய உபதேசத்தை அருள் புரிவாயாக.

வாக்கிறந்த பெருநிலை. இது மௌன நிலை, பேசா அநுபூதி எனப்படும். இதை உபதேசித்து அருள வேண்டும் என்கின்றார் சுவாமிகள்.

அறிவு வடிவாக விளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில் எல்லையாகத் திகழ்வது மோனம் என உணர்க. "மோனம் என்பது ஞானவரம்பு" என்று உபதேசிக்கின்றார் ஔவையார்.

மன சம்பந்தம் அற்ற இடத்திற்கு "மௌனம்" என்று பேர். 

வாய் பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும். அது "வாய்மௌனம்" எனப்படும்.

கைகால் அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு "காஷ்டமௌனம்" என்று பேர்.

மனமே அற்ற நிலைக்குத் தான் "பூரண மௌனம்" என்று பேர்.

அங்கே தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும். 

அந்த இன்ப வெள்ளத்தில் திளைத்தவர் இந்திர போக இன்பத்தை வேப்பங்காயாக எண்ணுவர்.

இந்த மௌனத்தை அருளுமாறு ஒரு திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகக் கடவுளை வேண்டுகின்றார்.

அருவம் இடைஎன வருபவர், துவர்இதழ்
  அமுது பருகியும் உருகியும், ம்ருகமத
    அளகம் அலையவும், அணிதுகில் அகலவும் ......     அதிபார
அசல முலைபுள கிதம்எழ, அமளியில்
  அமளி படஅந வரதமும் அவசமொடு
     அணையும் அழகிய கலவியும் அலம்அலம்,..... உலகோரைத்

தருவை நிகரிடு புலமையும் அலம்அலம்,
  உருவும் இளமையும் அலம்அலம், விபரித
    சமய கலைகளும் அலம்அலம், அலமரும்...... வினைவாழ்வும்
சலில லிபியன சனனமும் அலம்அலம்,
   இனிஉன் அடியரொடு ஒருவழி பட.இரு
     தமர பரிபுர சரணமும் மவுனமும் ...... அருள்வாயே..    ---  திருப்புகழ்.

அந்த மோனமாகிய கோயிலின் அகல நீளத்தை எவராலும் எதனாலும் ஆராய்ந்து அறிய முடியாது. அதை ஞானகுரு உணர்த்த உணர்வினாலேயே உணரமுடியும். அதனைப் பெற்ற தாயுமானப் பெருந்தகையார் கூறுகின்ற அமுத வசனங்களை இங்கு உன்னுக...

ஆனந்த மோனகுரு ஆம்எனவே, என்அறிவில்
மோனம் தனக்குஇசைய முற்றியதால், - தேன்உந்து
சொல்எல்லாம் மோனம், தொழில்ஆதி யும்மோனம்,
எல்லாம்நல் மோனவடிவே.             

எல்லாமே மோன நிறைவு எய்துதலால், எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார், - பொல்லாத
நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு, இங்கு
ஏன் அலைந்தேன் மோனகுருவே.                     

மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,
ஞானம் அருளும் அது, நானும் அது, - வான்ஆதி
நின்ற நிலையும் அது, நெஞ்சப் பிறப்பும் அது
என்று அறிந்தேன் ஆனந்தமே.                    

அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை,
மறிந்த மனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.                              

குருஆகித் தண்அருளைக் கூறுமுன்னே, மோனா!
உரு,நீடுஉயிர், பொருளும் ஒக்கத் - தருதிஎன
வாங்கினையே, வேறும்உண்மை வைத்திடவும் கேட்டிடவும்
ஈங்குஒருவர் உண்டோ இனி.                

இனிய கருப்புவட்டை என் நாவில் இட்டால்
நனி இரதம் மாறாது, நானும் - தனிஇருக்கப்
பெற்றிலேன், மோனம் பிறந்தஅன்றே மோனம்அல்லால்
கற்றிலேன் ஏதும் கதி.                       

ஏதுக்கும் சும்மா இருநீ என உரைத்த
சூதுக்கோ, தோன்றாத் துணையாகிப் - போதித்து
நின்றதற்கோ, என்ஐயா! நீக்கிப் பிரியாமல்
கொன்றதற்கோ பேசாக் குறி.                 

குறியும் குணமும்அறக் கூடாத கூட்டத்து
அறிவுஅறிவாய் நின்றுவிட, ஆங்கே - பிறிவுஅறவும்
சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோன! நின்பால்
கைம்மாறு நான்ஒழிதல் காண்.                   

நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால், என்ஆணை
வான்தான் எனநிறைய மாட்டாய்நீ, - ஊன்றாமல்
வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து
துய்த்து விடும் ஞான சுகம்.             

ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானம் தருமம் தழைத்த குரு, - மானமொடு
தாய் எனவும் வந்து என்னைத் தந்த குரு, என்  சிந்தை
கோயில்என வாழும் குரு.                   

சித்தும் சடமும் சிவத்தை விட இல்லை என்ற
நித்தன் பரமகுரு நேசத்தால், - சுத்தநிலை
பெற்றோமே, நெஞ்சே! பெரும்பிறவி சாராமல்
கற்றோமே மோனக் குரு.  

தொக்கு அறாக் குடில் அசுத்த ஏற்ற, சுக
     துக்கமால் கடம், ...... மும் மல மாயை
துற்ற கால் பதலை, சொல் படாக் குதலை,
     துப்பு இலாப் பல ...... சமய நூலைக்

கைக் கொளா, கதறுகை கொள் ஆக்கை, அவல
     புலால் தசை ...... குருதியாலே,
கட்டு கூட்டு, ருவருப்பு வேட்டு உழல்
     அசட்ட வாக்கு அழிவது ...... ஒருநாளே?            --- திருப்புகழ்.

வடம் அணி முலையும் அழகிய முகமும், வள்ளை என தயங்கும் இரு காதும், மரகத வடிவும், மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா ---

மணம் இரண்டு வகைப்படும். ஒன்று களவு. மற்றொன்று கற்பு. பண்டைக்காலத்தில் களவு மணம் நிகழ்ந்தபின் கற்பு மணம் நிகழும். தமிழ்க் கடவுளாகிய முருகவேள் இந்த இருமணங்களுக்கு இலக்கியமாகவே கற்பு நெறியினாலே தெய்வயானை அம்மையாரையும், களவு நெறியிலே வள்ளியம்மையாரையும் மணம் செய்து கொண்டு அருள் புரிந்தனர்.

களவு என்பது பிறர்க்குரிய பொருளை வௌவுதல் போன்றது அன்று. ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் ஊழ்கூட்டத் தனியிடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒருமைப்பட்டு அன்பு வெள்ளத்தில் திளைத்துப் புணர்தலே ஆகும். வேதத்தை மறை என்றது போல, இம்மணத்தை களவு என்று கூறுவர்.

களவு எனப்படுவது யாது என வினவின்,
வலைகெழு முன்கை வளங்கெழு கூந்தலும்
முனைஎயிற்று அமர்நகை மடநல் லாளொடு
தளைவுஅவிழ் தண்தார்க் காமன் அன்னோன்
விளையாட்டு இடமென வேறுமலைச் சாரல்
மானிளம் குழவியொடு கடிந்து விளையாடும்
ஆயமும் தோழியும் மருவி நன்கறியா
மாயப் புணர்ச்சி மென்மனார் புலவர்.

இக்களவு மனத்தைக் காந்தர்வ மணம் என்றுங் கூறப்படும்.

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
 துறையமை நல்லயாழ்த் துணைமையோ ரியல்பே”

என்று தொல்காப்பிய சூத்திரத்தினால் அறிக.

இனி மேற்கண்ட சூத்திரத்துள் மன்றல் எட்டு எனப்பட்டதால், அந்த எட்டு மணத்தின் தன்மையையும் சிறிது விளக்குவாம்.

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்று மணம் எட்டாகப் பேசப் படுகின்றது. இவற்றுள்;

1.    பிரமம் --- ஒத்த கோத்திரத்தவனாய் நாற்பத்தியெட்டு யாண்டு இளமையில் கழித்த (பிரமசரியவிரத மிருந்த) ஒருவனுக்குப் பன்னிரண்டு ஆண்டு உடையவளாய்ப் பூப்பு எய்திய ஒருத்தியைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தா முன் அணிகலன் அணிப்பித்து தானமாகக் கொடுப்பது.

அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
   ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை”   --- திருமுருகாற்றுப்படை

2.    பிரசாபத்தியம் --- உரிய கோத்திரம் உடைய தலைமகனை அழைத்து அவனுக்குரியார் தந்த பரிசத்திற்கு இரட்டி தம்மகட்குத் தந்து தீ முன் மணஞ்செய்து தருவது.

3.    ஆரிடம் --- தாம் புரியும் வேள்வியாதி கருமங்களின் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு, பசு எருது இவைகளைப் பெற்றுக்கொண்டு மகளை மணஞ்செய்து தருவது.

4.    தெய்வம் --- வேள்வியில் வந்த கன்னியைத் தக்க தலைமகனுக்குத் தருவது.  அல்லது தம் மகளை வேள்வி வேட்பித்துத் தரும் ஆசானுக்குத் தக்கணையாகத் தருவது.

5.    ஆசுரம் --- கொல் ஏறு கோடல், திரி பன்றி யெய்தல், வில்லேற்றுதல் செய்து வீரத்தால் மிக்க ஒருவனுக்கு மகளைத் தருதல். இவைகளில் கொல் ஏறு தழுவுதல் என்பது முரட்டு எருதை வீரத்தால் அடக்குதல். இது ஆயர்க்கு உரியது. மற்ற இரண்டும் அரசர்க்கு உரியது.

6.    இராக்கதம் --- பெண் வீட்டாரிடம் தனது வலிமையைக் காட்டி அவர்கள் இணங்காதிருப்பினும் போராடி தலை மகளை வலிதிற் கொள்வது. (இது அரசர்க்கு உரியது).

7.    பைசாசம் ---  துயில்பவளை சென்று கூடுதல் பிசாச மணமாகும். இனி வயதில் மூத்தவளைப் புணர்தலும், இழிந்தவளைப் புணர்தலும் இதன் இனமாகும்.

8.    காந்தர்வம் ---  கொடுப்பாரும் கேட்பாரும் இன்றி, ஒத்த ஆணும் ஒத்த பெண்ணும் பண்டை ஊழ் கூட்ட தனியிடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒன்றக் கூடுவது ஆகும். இந்த காந்தர்வ மணம் மிகவும் இனிமையானது என்க. அன்பின் பெருக்கினால் நிகழ்வது.

தான் களவு ஒழுக்கத்தினால் எய்திய தலைவியை, இடையில் எய்துதற்குக் காவல் முதலிய தடைகள் நேர்ந்த போது தலைவன் பெரிதும் வருந்துவன் தன் ஆற்றாமையைத் தோழியிடம் கூறி வேண்டுவான் அவள் உள்ளம் இரங்கித் தலைவியைக் கூட்டி வைப்பாள். ஒருக்கால் அவ்வாறு செய்திலளாயின், இறுதியாக மடல் ஏறியாவது விரும்பிய கரும்பனைய காரிகையை அடைய முயலும்.

காமம்உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.                ---- திருக்குறள்.

காதலியைப் பெற விரும்பிய காதலன், அவளது உருவத்தையும், பெயரையும், ஒரு படத்தில் எழுதி, தன் ஊரையும் பேரையும் அதன் மேல் எழுதி, அப்படத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, எருக்கம் பூ மாலையைச் சூடிக்கொண்டு, பழுத்த இலைகளைத் தலையில் சூடி, வாள் போல் கூர்மையாக உள்ள பனை மடலல் குதிரை போல் கட்டி அதன் மீது ஊர்ந்து காதலியின் ஊர் நடுவில் சென்று, நாற்சந்தியில் நின்று, ஒன்றும் பேசாமல்; பிறர் வசைக்கும் கூசாமல், படத்தில் எழுதிய உருவையே நோக்கி, பகல் இரவு பாராமல் உறுதியுடன் நிற்பான். அவனது காதலின் உறுதியைக் கண்ட காதலியின் உறவினர், உழுவலன்பு உடைய அவனுக்குத் தமது திருமகளை மணஞ்செய்து தருவர்.
  
ஏறிய மடல் திறம், இளமை தீர்திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்,
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணை குறிப்பே.
                --- தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல்.

காய்சின வேல்அன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுஉள்ள மீனிழந்தார், வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழிபிடித்து
பாய்சின மாஎன ஏறுவர் சீறூர்ப் பனைமடலே.      --- திருக்கோவையார்.

வாமத்து உமைமகிழ் வெங்கைபுரேசர் மணிவரைமேல்
தாமக்குவிமென் முலைமட்டுவார்குழல் தையல்நல்லாய்!
நாமக் கடலைக் கலம் இவர்ந்து ஏறுவர் நானிலத்தோர்
காமக் கடலை மடல்மா இவர்ந்து கடப்பர்களே.     --- திருவெங்கைக்கோவை.

மாவென மடலும் ஊர்ப; பூவெனக்
குவிழுகிழ் எருக்கம் கண்ணியுஞ் சூடுப;
மறுகி னார்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமங்காழ்க் கொளினே.   --- குறுந்தொகை

எனவே முருகவேள் வள்ளியம்மையாரைக் களவு ஒழுக்கத்தினால் அடைந்து, இடையே தடை எய்தியதாகக் கொண்டு, தோழியிடம் போய் மடல் ஏறுவேன் என்று கூறியருளிய திருவிளையாடல் கந்தபுராணத்துள் வருமாறு காண்க.

தோட்டின் மீதுசெல் விழியினாய்! தோகையோடு என்னைக்
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மாமடல் ஏறி, நும் ஊர்தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது என்று உரைத்தான்.

மதனன் விடு புஷ்பசர  படலம்  உடல் அத்தனையும்
 மடல்  எழுதி  நிற்கும் அதிமோகத் தபோதனனும்                                                                                            --- வேடிச்சி காவலன்வகுப்பு.

செண்பக அடவியினும் இதணினும் உயர்
     சந்தன அடவியினும் உறை குறமகள்
     செம்பொன் நூபுர கமலமும், வளைஅணி ...... புதுவேயும்
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத
     குங்கும அசல யுகளமும், துரித
     இந்தள அம்ருத வசனமும், முறுவலும், ...... அபிராம
இந்த்ர கோபமும், மரகத வடிவமும்,
     இந்த்ர சாபமும் இருகுழையொடு பொரும்
     இந்த்ர நீலமும் மடல்இடை எழுதிய ...... பெருமாளே.
                                --- (கொந்துவார்) திருப்புகழ்.

வதன சரோருக நயன சிலீமுக
         வள்ளி புனத்தில் நின்று
          வாராய், பதி காதம் காத அரை, ...... ஒன்றும் ஊரும்,

வயலும் ஒரே இடை, என ஒரு காவிடை
         வல்லபம் அற்று அழிந்து,
          மாலாய் மடல் ஏறும் காமுக! ...... எம்பிரானே!           --- திருப்புகழ்.


விடதர் ---

ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தவர்.

மால் அயன் ஆதி வானவர்கள் இறவாமையைப் பெறுதல் வேண்டி, திருப்பற்கடலைக் கடையல் உற்றனர்.  மந்தர கிரியை மத்தாகவும், வாசுகியைத் தாம்பாகவும் கொண்டு, தேவல்களும் அசுரர்களும் பன்னெடும் காலம் வருந்தி, பலப்பல ஔடதங்களைக் கடலில் விடுத்து, மெய்யும் கையும் தளரக் கடைந்தனர். அமிர்தத்திற்கு மாறாக, ஆலகால விடம் தோன்றியது. அது கண்ட அரி, அயன், இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அஞ்சி, "அந்தோ ஒன்றை நினைக்க ஒழிநிதிட்டு வேறு ஒன்று ஆகியதே. இதனுடைய வெம்மை உலகங்களை எல்லாம் கொளுத்துகின்றது. நமது உயிர் வெதும்புகின்றது. என் செய்வோம்" என்று புலம்பி, வாடி, திருக்கயிலையை அடைந்தனர். திருநந்தி தேவரிடம் விடை பெற்று, திருக்கோயிலுள் சென்று, சிவபெருமானுடைய திருவடியில் வீழ்ந்து, எழுந்து கரங்களைக் கூப்பி முறையிடுவாரானார்கள்.

"எந்தையே! சிந்தையில் தித்திக்கும் தெள்ளமுதே! கருணைக் கடலே! கண்ணுதல் கடவுளே! அடியேங்கள் தேவரீருடைய திருவருளால் அமரத்துவம் பெற நினையாமல், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற முயன்றோம். அதற்கு மாறாக ஆலகால விடம் வெளிப்பட்டது. அதன் வெம்மையால் உலகங்களும், உயிர்களும் யாமும் துன்புறுகின்றேம். எமக்கு இன்றே இறப்பும் எய்தும் போலும். தேவரீரே எமக்குத் தனிப்பெரும் தலைவர். முதலில் விளைந்த விளைவுப் பொருளைத் தலைவருக்குத் தருதல் உலக வழக்கு. அடியேங்கள் பெரிதும் முயன்று பாற்கடலைக் கடைந்த போது, முதலில் விளைந்த பொருள் விடம். அதனைத் தங்கட்குக் காணிக்கையாகத் தருகின்றோம்.  அதனை ஏற்றுக் கொண்டு எம்மை ஆட்கோள்வீர்" என்று இனிமையாகவும், கனிவுடனும் முறையிட்டனர்.

அதனைக் கேட்டு அருளிய அந்திவண்ணராகிய அரனார் சுந்தரரைக் கொண்டு, ஆலகால விடத்தைக் கொணர்வித்து, நாவல் பழம் போல் திரட்டி, உண்டால் உள் முகமாகிய ஆன்மாக்கள் அழியும் என்றும், உமிழ்ந்தால் வெளிமுகமாகிய ஆன்மாக்கள் அழியும் என்றும் திருவுள்ளம் கொண்டு, உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்து, நீலகண்டர் ஆயினார். அன்று எம்பெருமான் அவ்விடத்திலே அவ் விடத்தை உண்ணாராயின், தேவர் அனைவரும் பொன்றி இருப்பர். அத்தனை பேருக்கும் வந்த கண்டத்தை நீக்கியது பெருமானுடைய கண்டம். இனிய ஒரு உணவுப் பொருளைக் கூட நம்மால் கண்டத்தில் நிறுத்த முடியாது. வாயிலோ வயிற்றிலோ வைக்கலாமேயன்றி, கண்டத்தில் நிலைபெறச் செய்ய முடியாது. எனில், எம்பெருமான் ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தது எத்துணை வியப்பு.

ஆலங்குடி யானை, ஆலாலம் உண்டானை,
ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார், ஆலம்
குடியானே ஆயின் குவலையத்தார் எல்லாம்
மடியாரோ மண் மீதிலே.                 --- காளமேகப் புலவர்.

வானவரும் இந்திரரும் மால்பிரமரும் செத்துப்
போன இடம் புல்முளைத்துப் போகாதோ --- ஞானம்அருள்
அத்தர் அருணேசர் அன்பாக நஞ்சுதனை
புத்தியுடன் கொள்ளாத போது.        --- அருணாசலக் கவிராயர்.

சசிதரர் ---

சந்திரனைத் திருச்சடையில் தரித்தவர் சிவபெருமான்.

சிவபெருமான் சந்திரனைத் தரித்த வரலாறு

மலர்மிசை வாழும் பிரமனது மானத புத்திரருள் ஒருவனாகியத் தட்சப் பிரசாபதி வான் பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்கு மணம் புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சம் இன்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்து, பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இருவரும் பேரழகு உடையராய் இருத்தலால் அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாரானாயினன். மற்றைய மாதர்கள் மனங்கொதித்து தம் பிதாவிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, குமுதபதியாகிய சந்திரனை விளித்து “நின் அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தனன்.

அவ்வாறே சந்திரன் நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் ஏகித் தனக்கு உற்ற இன்னல்களை எடுத்து ஓதி “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர்பால் இதனைக் கூறுதியேல், அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனம் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் சதுர்முகனைச் சரண்புக, மலரவன் “சந்திரா! தக்கன் தந்தையென்று என் சொல்லைக் கேளான். ஆதலால் நீ கயிலையை அடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற்கடவுளைச் சரண் புகுவாயேல் அப்பரம பிதா நின் அல்லலை அகற்றுவார்” என்று இன்னுரை பகர, அது மேற்கண்ட சந்திரன் திருக்கயிலைமலைச் சென்று, நந்தியெம்பெருமானிடம் விடைபெற்று மகா சந்நிதியை அடைந்து, அருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறையே வணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரமதயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பம் அருள்வீர்” என்ற குறையிரந்து நின்றனன்.

மலைமகள் மகிணன் மனமிரங்கி, அஞ்சேலென அருள் உரை கூறி அவ்வொரு கலையினைத் தம் முடியில் தரித்து, “நின் கலைகளில் ஒன்று நம் முடிமிசை இருத்தலால் நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போது ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணைப் பாலித்தனர்.

எந்தை அவ்வழி மதியினை நோக்கி, "நீ யாதும்
சிந்தை செய்திடேல், எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றும் நின் கலையெலாம் நாடொறும் மரபால்".
                                                                                         ---  கந்தபுராணம்.
    
வெள்ளிமலைச் சயம்பு குருநாதா ---

வெள்ளி மலையாகிய திருக்கயிலையில் வீற்றிருக்கும் தான்தோன்றியான சிவபெருமானுக்கு குருநாதர் முருகப் பெருமான்.

வெள்ளிகரத்து அமர்ந்த பெருமாளே ---

வெள்ளிகரம் என்னும் திருத்தலம், வேலூர் மாவட்டம் அரக்கோணத்துக்கு வடக்கில் சுமார் 35 கி. மீ. தொலைவில் உள்ள வேப்பகுண்டா இரயில் நிலையத்திற்கு மேற்கே 15  கி. மீ. தொலைவில் உள்ளது.

கருத்துரை

முருகா! மகமாயை களைந்து, முகம் ஆறும் மொழிந்து, திருவடி இன்பத்தைப் பெற ஞானோபதேசம் அருள்வாய்.
                 

                 


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...