வெள்ளிகரம் - 0673. பையரவு போலும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பையரவு போலும் (வெள்ளிகரம்)

முருகா!
அடியேன் காமக் கடலில் வீழாமல்,
அருள்ஞானக்கடல் படிந்து அநுபூதி நிலை அடைய,  
அருளுபதேசம் புரிந்து அருள்க.


தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தான ...... தனதான
  
பையரவு போலு நொய்யஇடை மாதர்
     பையவரு கோலந் ...... தனைநாடிப்

பையலென வோடி மையல்மிகு மோக
     பவ்வமிசை வீழுந் ...... தனிநாயேன்

உய்யவொரு கால மையவுப தேச
     முள்ளுருக நாடும் ...... படிபேசி

உள்ளதுமி லாது மல்லதவி ரோத
     உல்லசவி நோதந் ...... தருவாயே

வையமுழு தாளு மையகும ரேச
     வள்ளிபடர் கானம் ...... புடைசூழும்

வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
     மையுததி யேழுங் ...... கனல்மூள

வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
     வெல்லயில்வி நோதம் ...... புரிவோனே

வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
     வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

பை அரவு போலும் நொய்ய இடை மாதர்,
     பைய வரு கோலம் ...... தனை நாடி,

பையல் என ஓடி, மையல் மிகு மோக
     பவ்வம் மிசை வீழும் ...... தனிநாயேன்,

உய்ய ஒரு காலம், ஐய, உபதேசம்
     உள் உருக நாடும் ...... படி பேசி,

உள்ளதும் இலாதும் அல்லது அவிரோத
     உல்லச விநோதம் ...... தருவாயே.

வையமுழுது ஆளும் ஐய! குமர ஈச!
     வள்ளிபடர் கானம் ...... புடைசூழும்

வள்ளிமலை வாழும் வள்ளி மணவாள!
     மை உததி ஏழும் ...... கனல்மூள,

வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ,
     வெல் அயில் விநோதம் ...... புரிவோனே!

வெள்ளிமணி மாடம் மல்கு திரு வீதி
     வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.


பதவுரை

      வையம் முழுது ஆளும் ஐய --- உலகம் முழுவதையும் ஆளுகின்ற தலைவரே!

     குமர ஈச --- குமாரக் கடவுளே!

     வள்ளி படர் கானம் புடை சூழும் வள்ளிமலை வாழும் வள்ளி மணவாளா --- வள்ளிக் கொடி படர்ந்துள்ள காடுகளால் சூழப்பட்டுள்ள வள்ளிமலையில் வாழ்கின்ற வள்ளிநாயகியின் மணவாளரே!

      மை உததி ஏழும் கனல் மூள --- கரிய கடல்கள் ஏழும் நெருப்பு எழ,

     வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல --- கொடிய அசுரத் தலைவர்கள், அவர்கள் இருந்த கிரவுஞ்சம் என்னும் மலையோடு மாண்டு விழ, வெற்றி கொள்ள

     அயில் விநோதம் புரிவோனே --- கூர்மை பொருந்திய வேலாயுதத்தை விடுத்து விந்தைகள் புரிந்தவரே!

      வெள்ளி மணிமாடம் மல்கு திருவீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே --- அழகிய வெண்ணிற மாளிகைகள் நிறைந்த,  அழகிய வீதிகள் அமைந்துள்ள வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      பைஅரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம் தனைநாடி --- படத்தைக் கொண்ட பாம்பைப் போன்ற நுண்ணிய இடையை உடைய விலைமாதர்கள் மென்மையாக நடந்து வரும் அழகினை விரும்பி.

     பையல் என ஓடி --- சிறு பையனைப் போல் அவரிடத்து ஓடி

     மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் --- காம மயக்கம் கொண்டு மோகம் என்னும் கடலில் விழுகின்ற, தனித்து நிற்கும் நாய் போன்றவனாகிய அடியேன்,

      உய்ய --- உய்தி பெறுவதற்கு,

     ஒரு காலம் --- தக்கதொரு காலத்தில்,

     ஐய --- ஐயனே!

     உபதேசம் --- உபதேச மொழியை

     உள் உருக நாடும் படி பேசி --- அடியேன் மனமானது அருள் நாட்டம் கொண்டு,  உருகுமாறு அறிவித்து,

     உள்ளதும் இ(ல்)லாதும் அல்லது --- உள்ள பொருள் என்றும், இல்லாத பொருள் என்றும் சுட்டி அறியும்படியான நிலை இல்லாத நிலையில்,

     அவிரோத உல்லச விநோதம் தருவாயே --- அல்லாததும் மாறுபாடு இல்லாதது ஆகிய, விநோதமான இன்பத்தைத் தந்து அருளுக.

பொழிப்புரை

     உலகம் முழுவதையும் ஆளுகின்ற தலைவரே!

     குமாரக் கடவுளே!

     வள்ளிக் கொடி படர்ந்துள்ள காடுகளால் சூழப்பட்டுள்ள வள்ளிமலையில் வாழ்கின்ற வள்ளிநாயகியின் மணவாளரே!

         கரிய கடல்கள் ஏழும் நெருப்பு எழ, கொடிய அசுரத் தலைவர்கள், அவர்கள் இருந்த கிரவுஞ்சம் என்னும் மலையோடு மாண்டு விழ, வெற்றி கொள்ள, கூர்மை பொருந்திய வேலாயுதத்தை விடுத்து விந்தைகள் புரிந்தவரே!

         அழகிய வெண்ணிற மாளிகைகள் நிறைந்த,  அழகிய வீதிகள் அமைந்துள்ள வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         படத்தைக் கொண்ட பாம்பைப் போன்ற நுண்ணிய இடையை உடைய விலைமாதர்கள் மென்மையாக நடந்து வரும் அழகினை விரும்பி. சிறு பையனைப் போல் அவரிடத்து ஓடி காம மயக்கம் கொண்டு, மோகம் என்னும் கடலில் விழுகின்ற, தனித்து நிற்கும் நாய் போன்றவனாகிய அடியேன் உய்தி பெறுவதற்கு, தக்கதொரு காலத்தில், ஐயனே! உபதேச மொழியை அடியேன் மனமானது அருள் நாட்டம் கொண்டு,  உருகுமாறு அறிவித்து, உள்ள பொருள் என்றும், இல்லாத பொருள் என்றும் சுட்டி அறியும்படியான நிலை இல்லாத நிலையில்,  வேறு அல்லாததும் மாறுபாடு இல்லாதது ஆகிய, விநோதமான இன்பத்தைத் தந்து அருளுக.


விரிவுரை


பைஅரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம் தனை நாடி ---

படத்தை உடைய பாம்பைப் போன்ற நுண்ணிய இடையை உடையவர் மாதர்.

கருமையின் ஒளிர்கடல் நஞ்சம்உண்ட
உரிமையின் உலகுஉயிர் அளித்தநின்தன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பரிது ஆயவனே
அரவுஏர் இடையாளொடும் அலைகடல் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே.    --- திருஞானசம்பந்தர்.

அளைப்பை அரவுஏர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.      --- சுந்தரர்.

கரவுசேர் மகளிர் குங்கும பயோதர தனங்-
     களின் அறா துயில்வதும், ...... சரிபேசும்
கர சரோருக நகம் பட, விடாய் தணிவதும்,
     கமல நாபியின் முயங் ...... கிய வாழ்வும்,

அரவுபோல் இடை படிந்து, இரவு எலாம் முழுகும் இன்ப
     நல் மகா உததி நலம் ...... பெறுமாறும்,
அதர பான அமுதமும் தவிரவே, மவுன பஞ்-
     சர மனோலய சுகம் ...... தருவாயே.      --- திருப்புகழ்.

பாம்புக்குக் காம நுகர்ச்சியில் நாட்டு அதிகம் என்பர். விலைமாதர் காம நுகர்ச்சியிலும், பொருள் மீதும் அதிக நாட்டம் கொண்டு, பொருளுடையோரை மயக்கி, இன்ப நாட்டம் உண்டாகச் செய்ய ஒசிந்து ஒய்யாரமாக மென்மையான நடையைக் காட்டுவார்கள் என்பதாகவும் கொள்ளலாம்.
  
பையல் என ஓடி ---

பையல் - சிறுவன், புல்லன், அற்பன்.

அறிவில்லாத சிறு பையன் தனது மனதுக்கு உகந்த ஒரு பொருளைக் கண்ணுற்றபோது, அதை அடைவதற்குப் பித்துப் பிடித்தவன்போல ஒடுவான். அதுபோல அற்ப அறிவு கொண்ட காமுகர், கண்ணுக்கு அழகான விலைமாதரைக் கண்டவுடன் அவர்பால் ஓடுவர்.

மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் ---

மோகம் - ஆசை, காமமயக்கம், மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி, மன மயக்கம்.

ஐம்புலன்களின் வழியே சென்று இன்பத்தை அனுபவிக்க ஆசை கொண்டு, அதிலேயே மனம் மயக்கம் கொள்ளுவது. ஐம்புலன்கள் உயிரில்லாத அஃறிணைப் பொருள்கள். என்றாலும், உயிர் அவைகளுடன் தொடர்பு கொண்டு, அவை தம்மினும் வேறு என்று உணராது, அவைகளைத் தன்னுடன் கூட்டி மயங்கி, அவைகட்கு உட்பட்டு இருக்கும் நிலையை மிகவும் விரும்பும். புலன்களின் வழியே செல்வதால், உயிருக்கு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளும் உண்டாகின்றன. பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்றும், நிலையில்லாதனவற்றை நிலையின என்றும் உணர்ந்து ஆன்ம அறிவு மயங்கி அழிகின்றது. மோகக் கடலில் முழுகிக் கிடப்பதால் துன்பக் கடலிலே அது கிடந்து துடிக்கின்றது. அதை விட்டுக் கரை ஏறும் வழி தெரியாமல் தவிக்கின்றது.

ஆசை உள்ளம் படைத்தவன் விலங்கு.
அன்பு உள்ளம் படைத்தவன் மனிதன்.
அருள் உள்ளம் படைத்தவன் தேவன்.

ஆசைக் கடலில் அகப்பட்டு, விலங்குத் தன்மையை அடைந்து, மனிதன் கேட்டினை அடைகின்றான்.

மூவாசைகளில், மண்ணாசை,பொன்னாசை என்னும் இரண்டும் மனிதப் பிறவி வந்த பின் உண்டாகின்றது. ஆனால், பெண்ணாசையானது பிறவிகள்தோறும் தொடர்ந்து வருவது. அதை எளிதில் ஒழிக்க முடியாது. அதனால் திருமால், பிரமன், இந்திரன் முதலியோரும் பட்டபாடு யாவரும் அறிந்ததே.

குவளை, பூசல் விளைத்திடும் அம்கயல்,
     கடு அதாம் எனு மைக்கண் மடந்தையர்,
     குமுத வாய் அமுதத்தை நுகர்ந்த், சை ......பொருகாடை
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு இனம்
     வனபதாயுதம் ஒக்கும் எனும்படி
     குரல் விடா, இரு பொற்குடமும் புள ...... கிதமாக,

பவள ரேகை படைத்த அதரம் குறி
     உற, வியாள படத்தை அணைந்து, கை
     பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதன்நூலின்
படியிலே செய்து, உருக்கி முயங்கியெ,
     அவசமாய் வட பத்ர நெடுஞ்சுழி
     படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ...... ஒழிவேனோ?    --- திருப்புகழ்.

தாது மாமலர் முடியாலே, பத-
     றாத நூபுர அடியாலே, கர
          தாளம் ஆகிய நொடியாலே, மடி ...... பிடியாலே, 
சாடை பேசிய வகையாலே, மிகு
     வாடை பூசிய நகையாலே, பல
          தாறு மாறு சொல் மிகையாலே, அன ...... நடையாலே,

மோதி மீறிய முலையாலே, முலை
     மீதில் ஏறிய கலையாலே, வெகு
          மோடி நாணய விலையாலே, மயல் ...... தருமானார் 
மோக வாரிதி தனிலே நாள்தொறும்
     மூழ்குவேன், னது அடியார் ஆகிய
          மோன ஞானிகள் உடனே சேரவும் ...... அருள்வாயே.     ---திருப்புகழ்.

காமக் கடலில் படிந்து அஞராம்
     கடலில் விழுந்தேன், கரைகாணேன்,
ஏமக் கொடுங்கூற்று எனும் மகரம்
    யாது செயுமோ? என்செய்கேன்?
நாமக் கவலை ஒழித்து, உன்தாள்
    நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே,
தாமக் கடிப்பூஞ் சடையாய்! உன்
    தன்சீர் பாடத் தருவாயே.                          --- திருவருட்பா.

காமக் கடல்மன்னும் உண்டே, அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்.                            --- திருக்குறள்.

இன்பம் கடல் மற்றுக் காமம், அஃது அடும்கால்
துன்பம் அதனின் பெரிது.                              --- திருக்குறள்.

இன்பம் உற்றான் மாயைதோள் தோய்ந்து, பின் எண்மடங்கு
துன்பம் உற்றான் காசிபன்தான், சோமேசா! - அன்புடையார்க்கு
இன்பம் கடல், மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனில் பெரிது.                         --- சோமேசர் முதுமொழி வெண்பா.

சுரசை என்னும் அசுரேசன் மகள் சுக்கிரபகவானிடம் மாயவித்தை எல்லாம் கற்று வல்லவளாகி அவன் கூறியவாறே காசிப முனிவர் தபோவனத்தை அடைந்து அவர் எதிரில் பேரழகுடையவளாய் நிற்க அவளை அம் முனிவர் கண்டு மயங்கித் தமக்கு இணங்குமாறு பலவாறு வேண்டியும், "நில்லும்" என்று சொல்லி மறைந்தாள். அவர் அவளைக் காணாது வருந்திப் புலம்புகையில் அவள் மறுபடி தோன்றி அவர்க்கு இணங்கிச் சூரபத்மன் முதலிய மக்களைப் பெற்றாள். "யான் எனது மக்களைப் புறந்தரல் வேண்டுமாகலின் உம்மைவிட்டுச் செல்கிறேன், நீர் வருந்தாதீர்" என்று கூறி மறைந்தாள். முனிவர் அவள் உருக் காணாது அறிவு மயங்கி அழுது புலம்பி உயிர் நீங்கின உடம்பு போல நின்றார். அது கண்டு, அவர்முன் பிரமன் தோன்றிக் காமத்தின் தீமைகளை எல்லாம் பலவாறு எடுத்துக் கூறித் தவத்தை மேற்கொள்ளுமாறு செய்தனன். இது கந்தபுராணத்து உள்ளது.

உய்ய ஒரு காலம் உபதேசம் உள் உருக நாடும்படி பேசி ---

ஞானாசிரியரின் உபதேசம் மாணவனின் அறிவில் பக்குவம் இருந்தாலே விளங்கும். பக்குவம் என்பது ஆசிரியர் அறிவுறுத்தும் உண்மையை விளக்கம் இல்லாதும், பொருள் மாறுபடவும் உணராமல், உள்ளவாறு உணரும் நிலையாகும்.

இந்தப் பக்குவம், ஆன்ம அறிவை ஆணவமலம் பற்றியுள்ள வரையில் உண்டாகாது. அம் மலம் அறிவைத் திசை திருப்பி, இழிந்த உலகப் பொருளையே பெரிதாக மதித்து அதனையே நாடும்படியாகச் செய்யுமேயன்றி, உயர்ந்த ஞானப் பொருளில் நாட்டத்தைச் செல்லவிடாது. எனவே ஆணவ மலத்தின் ஆற்றல் தேய வேண்டும். மலத்தின் ஆற்றல் தேயத் தேய, ஆன்ம அறிவு சிறிது சிறிதாக விளக்கம் பெற்றுப் படிப்படியே பக்குவம் எய்தும்.

ஆணவ மலத்தின் ஆற்றல் எவ்வாறு தேயும் எனில், பதியைத் தொழுதல் ஆகிய தவத்தினாலேயே மல ஆற்றல் தேய்வதாகும். அத்தவம் சரியை, கிரியை, யோகம் என மூன்றாய் நிகழும். அவற்றுள் சரியை என்பது திருக்கோயில் வழிபாடு செய்தல், அடியார்களைச் சிவன் எனவே கருதி வழிபடுதல் முதலியன. இது புற வழிப்பாடு. கிரியை என்பது தம் தம் இல்லங்களில் இறைவனை அவரவர் விரும்பிய வடிவில் ஆன்மார்த்த மூர்த்தியாக எழுந்தருளுவித்துக் கொண்டு அகத்தும் புறத்தும் வழிபடுதல். இதில் உடலோடு உள்ளமும் ஈடுபடுவதால் புறமும் அகமும் கலந்த வழிபாடாகிறது. யோகம் என்பது மனத்தை அடக்கி ஒருவழியில் நிறுத்தி இறைவனை அகக் காட்சியில் கண்டு அவனோடு உள்ளம் ஒன்றுபடுதல். இது அக வழிபாடு ஆகும்.

சரியை கிரியை யோகம் ஆகிய இவ்வழிபாட்டினை உலகப் பற்றுடன் செய்யாமல், பற்றற்ற நிலையில் செய்தால் அதுவே உண்மைத் தவம் ஆகும். உண்மைத் தவத்தினால் ஆன்மாவினது அறிவு மேலும் மேலும் நுணுகி வரும். அது நுணுகி வர வர, அதனை மறைத்து நின்ற ஆணவ மலமும் அதற்கேற்பத் தேய்ந்து தேய்ந்து வரும். அந்நிலையில் அவ்வான்ம அறிவின் கண் இறைவனது திருவருள் பதிந்து மேம்பட்டு விளங்கி வரும். அதனால் உலக இன்பத்தில் வெறுப்பும், வீட்டின்பத்தில் விருப்பும் வளர்ந்து வரும். ஞான நெறியில் மனம் செல்லும், இப் பக்குவநிலை உடையவரே சீடர் ஆதற்கு ஏற்றவர்.
சிவஞானமாகிய ஒளியைப் பெறாமல், அஞ்ஞானமாகிய இருளில் உயிர்கள் துன்பப்படுகின்றன. அவ்வுயிர்களுக்குச் சிவஞானம் ஆகிய விளக்கம் கிடைப்பது எப்படி?உயிர் தானே எதனையும் அறியமாட்டாது. துணை அறிவிக்கவே எதனையும் அறிவதாகும். இத்தன்மைக் கல்வி கற்கும் முறையில் சிறப்பாகக் காணலாம். குருவில்லாமல் எக்கல்வியையும் தானே திருத்தமாகப் பெற இயலாது. உலகியல் கல்வியையே குருவில்லாமல் அறிய முடியாத போது, உணர்தற்கரிய சிவஞானத்தை ஆசாரியரின் துணையில்லாமல் புறுதல் இழலாது என்று விளங்கும். சிவஞானம் ஆசாரியர் மூலமாகவே கிடைப்பதாகும். இனி, ஏனைய கலைகளைத் தருதற்கு உரிய ஆசிரியராக யாரும் அமையலாம். ஆனால் சிவஞானத்தைத் தரும் ஆசிரியராக அமைபவன் இறைவன் ஒருவனே.

உடம்பில் ஒரு நோய் வந்தால் உரிய காலத்தில் மருந்து கொடுத்து அதைக் குணப்படுத்துகிறோம். அதுபோல, உயிரில் உள்ள நோய் அஞ்ஞானம். ஞானந்தான் அதனைப் போக்கும் மருந்து. அஞ்ஞானமாகிய நோயின் நிலையை அறிந்து உரிய காலத்தில் ஞானமாகிய மருந்தைக் கொடுத்தல் வேண்டும். ஞானம் ஆகிய மருந்தைக் கொடுப்பதற்கு உரிய காலம் என்பது உயிரைப் பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தி மெலிவுற்ற நிலை. இது மலபரிபாகம் எனப்படும். அவ்வாறு மூலமலம் பரிபாகம் உற்ற காலமே ஞானத்தை உணர்த்துதற்கு உரிய காலமாகும். மல பரிபாகம் வாராத போது ஞானத்தை உணர்த்தினால் ஒரு பயனும் விளையாது. ஆகவே உயிரில் மல பரிபாகம் எப்பொழுது வரும் என்று பார்த்துக் கொண்டே இருந்து, தக்க காலம் வந்தவுடன் ஞானத்தைத் தருதல் வேண்டும். உயிரில் நிகழும் மல பரிபாகத்தை, உயிர்க்கு உயிராய் உள்ளிருக்கும் இறைவன் ஒருவனே அதனை அறிய முடியும். அது கருதியே, இறைவனே தக்க காலம் பார்த்துக் குருவாகி வந்து ஞானத்தை அருளுவான் என்று கூறப்படுகிறது.
  
மேற்கூறிய சரியை கிரியா யோகங்கள் ஆகிய தவத்தினைப் பொருள் புகழ் முதலிய உலகப் பயன்களைக் கருதாது, இறைவனிடம் கொண்ட அன்பு ஒன்றே காரணமாகச் செய்துவரின் அத்தவ முதிர்ச்சியால் இருவினையொப்பு உண்டாகும்.

நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது, அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்று போலக் கருதி அவற்றின்மேல் பற்றுச் செய்யாது நிற்கும் உணர்வே இருவினையொப்பு எனப்படும். இருவினையொப்பு வரப்பெற்றோர் உலகியலில் இச்சையின்றி இருப்பர்.  ஓடும் செம்பொன்னும் ஒன்று என நோக்குவர்.    

இருவினையொப்பு நிகழவே, வினை நிங்கும். வினை நீங்கவே, உயிரறிவு உள்ளவாறு விளங்கும். உணர்த்தியதனை உணர்த்தியவாறே உணரும் தன்மையைப் பெறும். உணர்த்தியவாறு கொள்ளும் அறிவு நிலையே உயிரினது பக்குவம் எனப்படுகிறது. இதுவே ஞானத்தை உணர்தற்கு ஏற்ற பருவம். எனவே, இருவினை யொப்பு வரும் காலமே உயிருக்கு ஞானம் வரும் காலம். அதனால் "ஒரு காலம்" என்றார் அடிகளார்.

சத்தி நிபாதம் அதி தீவிரமாய் நிகழும்பொழுது, பொருள்களின்  இயல்பை உள்ளவாறு உணர்தல் வேண்டும் என்னும் வேட்கை மிகுந்தெழும். அதாவது, நான் யார்? எனக்கும் இவ்வுடம்புக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டது? நான் வந்தவாறு எவ்வாறு? போமாறு ஏது? எனக்கு வரும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் யாது? இத்துன்பத்தினின்றும் நீங்கி நிலைத்த இன்பத்தைப் பெற முடியுமா? அதற்குரிய வழியாது? என்று இங்ஙனம் பொருள்களின் உண்மை நிலையை உள்ளவாறு உணர்தலில் பெரு விருப்பம் உண்டாகும்.

பக்குவம் உறாத பொழுது உயிர்க்குயிராய் உள்ளே மறைந்து நின்று அதன் அறிவை வளர்த்து வந்த சிவனே இப்பொழுது அவ்வுயிரின் பக்குவ நிலையையும், ஞானத்தைப் பெறுதலில் உள்ள வேட்கையையும் பார்த்தருளி, ஞானாசிரியராக எழுந்தருளி முப்பொருளின் இயல்புகளையும் அறிவுறுத்துவார். பொருளியல்பு முற்றும் உள்ளவாறு விளங்குதலே ஞானமாகும். அவ்வாறு ஞானம் விளங்கிய பொழுது, அவ்வுயிர் அசத்தை அசத்து என்று கண்டு கழித்துச் சத்தாகிய சிவத்தோடு கூடி இன்புறும். இந்த நிலையில் உயிரானது குருநாதனின் அருளை நினைந்து உள்ளம் உருகி வழிபடும்.
  
உள்ளதும் இ(ல்)லாதும் அல்லாது, அவிரோத உல்லச விநோதம் தருவாயே ---

"உல்லாச" என்னும் சொல் "உல்லச" என வந்தது.

அவிரோதம் - மாறுபாடு இல்லாதது. விரோதம் இல்லாதது.

கடவுள், இது அது என்று சுட்டி அறியப்படாத பொருள். இல்லை என்றாலும், உள்ள பொருளைத் தான் இல்லை என்று சொல்லமுடியும். எந்த பொருளை இல்லை என்று சொல்லுகின்றாய் என்றால், உள்ள பொருள் என்று பலரும் கூறுவதையே என்பர்.

"உளதாய் இலதாய்" என்பார் அருணை வள்ளல் கந்தர் அநுபூதியில். இது உண்டு, அது உண்டு என்றும், இது இல்லை, அது இல்லை என்றும் சுட்டி அறியப்படாத ஒன்றுதான் கடவுள். அது சத்து, சித்தாக எள்ளது.

"அவிரோத ஞானச் சுடர் வடிவாள்" என்றார் கந்தர் அலங்காரத்தில். ஞானம் அவிரோதமானது. எல்லாம் தானாகவும், எனது என்பதும், யான் என்பதும் வேறாகி நிற்கும் நிலையில், விரோதபாவம் இல்லை என்று ஆகின்றது. நான் என்பது அற்று, எல்லாம் தானாகி விட்டது. இந்த நிலையில் யாரையும் விரோதிக்க முடியாது. அமைதியே நிலவும். அது, மனவாக்கிற்கு எட்டாத அநுபவானந்த நிலை.

நான் என்பது தற்போதம். அது ஆன்ம அறிவு எனப்படும். இது அறவே அழிந்தால் அன்றி மேற்கூறிய இன்பம் தோன்றாது. நான் செய்கின்றேன். நான் அனுபவிக்கின்றேன் என்ற எண்ணங்கள் அணுத்துணையும் இல்லாமல் நீங்க வேண்டும்.

ஆனா அமுதே! அயில்வேல் அரசே!
ஞானாகரனே! நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே            --- கந்தர்அநுபூதி.

"தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ,
     சீவன் சிவச் சொருபம் ...... என தேறி,
நான் என்பது அற்று, உயிரொடு ஊன்என்பது அற்று, வெளி
     நாதம் பரப்பிரம ...... ஒளிமீதே
ஞானம் சுரப்ப, மகிழ் ஆநந்த சித்தியொடெ
     நாளும் களிக்க, பதம் ...... அருள்வாயே"          --- (தேனுந்து) திருப்புகழ்.
 
சாந்தம் அதீதம் உணர் கூந்தம சாதியவர்
     தாங்களும் ஞானம்உற, ...... அடியேனும்
தூங்கிய பார்வையொடு, தாங்கிய வாயுவொடு,
     தோன்றிய சோதியொடு, ...... சிவயோகம்
தூண்டிய சீவனொடு, வேண்டிய காலமொடு,
     சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ?     --- (சாங்கரி பாடி) திருப்புகழ்.

நான் ஆன தன்மை நழுவியே, எவ்வுயிர்க்கும்
   தான் ஆன உண்மை தனைச் சாருநாள் எந்நாளோ

நான் ஆன தன்மை என்று நாடாமல் நாட, இன்ப
   வான்ஆகி நின்றனை நீ வாழி பராபரமே

நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து
       நலிந்தவுடன், சகமாயை நானா ஆகித்
தான் வந்து தொடரும்; இத்தால் வளரும் துன்பச்
       சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார்.            --- தாயுமானார்.

வையம் முழுது ஆளும் ஐய ---

இந்த வரி வள்ளிமலைத் திருப்புகழிலும் பயின்று வந்துள்ளது.

கருத்துரை

முருகா! அடியேன் காமக் கடலில் வீழாமல், அருள்ஞானக்கடல் படிந்து, அநுபூதி நிலை அடைய, அருளுபதேசம் புரிந்து அருள்க.

    








No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...