வெள்ளிகரம் - 0672. தொய்யில் செய்யில்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தொய்யில் செய்யில் (வெள்ளிகரம்)

முருகா!
விலைமாதர் சொல்லில் மகிழாமல்,
உனது அருட்பாடலில் மகிழ்ந்து உய்ய அருள்.


தய்ய தய்ய தய்ய தய்ய
     தய்ய தய்ய ...... தனதான

 தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
     தொய்யு மைய ...... இடையாலுந்

துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
     சொல்லு கள்ள ...... விழியாலும்

மைய செவ்வி மவ்வல் முல்லை
     மல்கு நல்ல ...... குழலாலும்

மையல் கொள்ள எள்ளல் செய்யும்
     வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ

செய்ய துய்ய புள்ளி நவ்வி
     செல்வி கல்வ ...... ரையிலேனல்

தெய்வ வள்ளி மையல் கொள்ளு
     செல்வ பிள்ளை ...... முருகோனே

மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
     வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே

வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தொய்யில் செய்யில் நொய்யர், கையர்,
     தொய்யும் ஐய ...... இடையாலும்,

துள்ளி வள்ளை தள்ளி உள்ளல்
     சொல்லு கள்ள ...... விழியாலும்,

மைய செவ்வி மவ்வல் முல்லை
     மல்கு நல்ல ...... குழலாலும்,

மையல் கொள்ள எள்ளல் செய்யும்
     வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ?

செய்ய துய்ய புள்ளி நவ்வி
     செல்வி கல்வ ...... ரையில் ஏனல்

தெய்வ வள்ளி மையல் கொள்ளு
     செல்வ பிள்ளை ...... முருகோனே!

மெய்யர் மெய்ய! பொய்யர் பொய்ய!
     வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே!

வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல ...... பெருமாளே.


பதவுரை


      செய்ய --- நடுவு நிலை உடையவரே!

     துய்ய --- புனிதத் தன்மை வாய்ந்தவரே!

     புள்ளி நவ்வி செல்வி --- புள்ளிகளை உடைய பெண்மான் வடிவில் வந்த திருமகளின் புதல்வியும்,

      கல்வரையில் ஏனல் தெய்வ வள்ளி மையல் கொள்ளும் செல்வ பிள்ளை முருகோனே --- வள்ளிமலையின்கண் தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த தெய்வமான வள்ளிநாயகி மேல் மோகம் கொண்ட, சிவபிரானின் செல்வப் பிள்ளையான முருகப் பெருமானே!

      மெய்யர் மெய்ய --- மெய்யர்க்கு மெய்யரே!

     பொய்யர் பொய்ய --- பொய்யர்க்குப் பொய்யரே!

     வெள்ளை வெள்ளி நகர் வாழ்வே --- கள்ளம் இல்லாத உள்ளத்தினை உடைய அடியவர்கள் வாழுகின்ற வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் வாழும் செல்வமே!

      வெய்ய சையவல்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே --- எல்லா உயிர்களும் விரும்பம் கொள்ளுதற்கு உரிய திருக்கயிலைமலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமான் சொல்லிய சொல்லை வெற்றி கொண்ட பெருமையில் மிக்கவரே!.

       தொய்யில் செய்யில் நொய்யர் --- தோள்கள் மேலும், முலைகள் மேலும் சந்தனக் குழம்பினால் வரிக்கோலம் எழுதிக் கொள்ளும் மெல்லியலார்கள்.

     கையர் --- கபட உள்ளம் படைத்தவர்கள்.

     தொய்யும் ஐய இடையாலும் --- இளைத்து, உள்ளதோ இல்லையோ என்று ஐயப்படும்படியாக உள்ள அவர்களின் இடை அழகிலும்,

      துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு(ம்) கள்ள விழியாலும் --- எழுந்து பாய்ந்து வள்ளைக் கொடி போன்றுள்ள காது வரை நீண்டு, மனத்தில் உள்ள வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்தும் திருட்டுக் கண்களாலும்,

      மைய -- கரு நிறம் கொண்,

     செவ்வி --- செம்மையாக அமைந்துள்ள,

     மவ்வல் முல்லை மல்கும் நல்ல குழலாலும் --- காட்டு மல்லிகை, முல்லை மலர்கள் நிறைந்துள்ள நல்ல கூந்தலாலும்,

      மையல் கொள்ள --- அடியேன் காம இச்சை கொள்ளவும்,

     எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ --- அடியேனை இகழ்கின்ற பெண்களின் சொல்லுக்கு மகிழ்ச்சி கொள்வேனோ? கொள்ளக் கூடாது.
    
 
பொழிப்புரை
  
     நடுவு நிலை உடையவரே!

     புனிதத் தன்மை வாய்ந்தவரே!

     புள்ளிகளை உடைய பெண்மான் வடிவில் வந்த திருமகளின் புதல்வியும், வள்ளிமலையின்கண் தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த தெய்வமான வள்ளிநாயகி மேல் மோகம் கொண்ட, சிவபிரானின் செல்வப் பிள்ளையான முருகப் பெருமானே!

      மெய்யர்க்கு மெய்யரே!

     பொய்யர்க்குப் பொய்யரே!

     கள்ளம் இல்லாத உள்ளத்தினை உடைய அடியவர்கள் வாழுகின்ற வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் வாழும் செல்வமே!

     எல்லா உயிர்களும் விரும்பம் கொள்ளுதற்கு உரிய திருக்கயிலைமலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமான் சொல்லிய சொல்லை வெற்றி கொண்ட பெருமையில் மிக்கவரே!.

         தோள்கள் மேலும், முலைகள் மேலும் சந்தனக் குழம்பினால் வரிக்கோலம் எழுதிக் கொள்ளும் மெல்லியலார்கள். கபட உள்ளம் படைத்தவர்களின், இளைத்து, உள்ளதோ இல்லையோ என்று ஐயப்படும்படியாக உள்ள அவர்களின் இடை அழகிலும்,
எழுந்து பாய்ந்து வள்ளைக் கொடி போன்றுள்ள காது வரை நீண்டு, மனத்தில் உள்ள வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்தும் திருட்டுக் கண்களாலும், கரு நிறம் கொண்,செம்மையாக அமைந்துள்ள, மை போன்று கருநிறம் கொண்டதும்,  காட்டு மல்லிகை, முல்லை மலர்கள் நிறைந்துள்ள நல்ல கூந்தலாலும், அடியேன் காம இச்சை கொள்ளவும், அடியேனை இகழ்கின்ற பெண்களின் சொல்லுக்கு மகிழ்ச்சி கொள்வேனோ? கொள்ளக் கூடாது.


விரிவுரை

செய்ய ---

நடுவு நிலை உடையவர் முருகப்பெருமான். மெய்யரும் பொய்யரும் ஆகிய எல்லாரும் இறைவனை வழிபடுவார்கள். மெய்யர்கள் இறையருளை வேண்டுமாறு போலவே, பொய்யர்களும் இறையருளை வேண்டுவார்கள். இறைவன் அவரவர் உள்ளம் அறிந்து, நடுநிலையோடு அருள்வான்.

நிறைய பொருள்களைக் கொண்டு வழிபட்டால் நிறைய அருளுவான் என்ற எண்ணத்தோடும் வழிபடுபவர்கள் உள்ளனர். அந்த உள்ளத்தோடுதான் இன்றை நாளில் போட்டிக்குப் போட்டியாக வழிபாடுகள் நிகழ்கின்றன. மனம் போல் வாழ்வு என்றது போல அவரவர் கருத்து அறிந்து அதற்குத் தக அருள் புரிவான் இறைவன்.

திருஞானசம்பந்தப் பெருமானார் தங்கி இருந்த மடத்திற்குத் தீயை இட்டனர் சமணர்கள். பெருமான் திருவாலவாய் இறைவரைத் திருப்பதிகம் பாடினார். "செய்யனே" என்று தொடங்கிப் பாடினார்.

துய்ய ---

துய்ய என்னும் சொல்லுக்கு, தூய்மையுள்ள, கலப்பற்ற, உறுதியான என்று பொருள். 

அடியவரின் உள்ளத்து உள்ள அழுக்கைத் தனது அருள் என்னும் புனலால் போக்கித் தூய்மை செய்பவன் இறைவன். உள்ளத்தில் அழுக்கு உள்ளவரையில் இறைவனருள் வாய்க்காது. "அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய், அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்" என்றார் அப்பரடிகள்.

புள்ளி நவ்வி செல்வி, கல்வரையில் ஏனல் தெய்வ வள்ளி ---

நவ்வி - பெண்மான். புள்ளி நவ்வி - உடம்பில் புள்ளிகளை உடைய பெண்மான்.

திருமால் சிவமுனிவராகத் தவம் புரிந்திருந்த காட்டின் இடத்தில், புள்ளிகளை உடைய பெண்மான் வடிவில் திருமகள் வந்தாள். சிவமுனிவர் பெண்மானைக் கண்டார். உணர்வால் புணர்ந்தார். மானின் வயிற்றில் அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகி அவதரித்தார். வேடர்களிடை வளர்ந்ததால், அவர் குல முறைப்படி தினைப்புனம் காத்து இருந்தார் எம்பிராட்டி.

மாதவன் ஓர் மாதவனாய் மாதவம் செய்திடலும்,
     வனமானாய் வந்து எதிர்ந்த மலர்மானை புணர,
பூதல மங்கையர் உருவாய் அவதரித்து, வள்ளிப்
     பொருப்பு உறையும் பொருப்பர் மனை விருப்பமுடன் வளர்ந்து,
தீது அகலும் தினை காத்து, வேங்கை உரு எடுத்த
     செவ்வேளை அவ்வேளை சேர்ந்து, ருக்கை கோளும்
காதலுடன் புரிந்து, றைவன் வலப் பாகத்து அமரும்
     கன்னி எனும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.

தெய்வ வள்ளி மையல் கொள்ளும் செல்வ பிள்ளை முருகோனே ---

வள்ளிமலையின்கண் தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த தெய்வமான வள்ளிநாயகி மேல் மோகம் கொண்டவர் சிவபிரானின் செல்வப் பிள்ளையான முருகப் பெருமான்.

அன்றியும், முருகப் பெருமான் மீது வள்ளிநாயகி காதல் கொண்டார் என்னலும் பொருந்துமேல் கொள்ளலாம். வள்ளியம்மையார் காதல் கொள்ளும் செல்வப் பிள்ளை முருகப்பெருமான்.

மெய்யர் மெய்ய ---

முன்னர், "கள்ளம் உள்ள" எனத் தொடங்கும் வெள்ளிகரத் திருப்புகழிலும் இந்த சொற்றொடர் பயின்று வந்தது.

மெய்யன்பர்க்கு மெம்மையானவன் இறைவன். "மெய்யர் மெய்யனே" என்றார் மணிவாசகப் பெருமான்.

செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.           ---  அப்பர்.

மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு,
         விரும்பாத அரும்பாவி அவர்கட்கு என்றும்
பொய்யானை, புறங்காட்டில் ஆடலானை,
         பொன்பொலிந்த சடையானை, பொடிகொள் பூதிப்
பையானைப் பைஅரவம் அசைத்தான் தன்னை,
         பரந்தானை பவளமால் வரைபோல், மேனிச்
செய்யானை, திருநாகேச் சரத்து உளானைச்
         சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே.      --- அப்பர்.

ஐயனை, அத்தனை, ஆள்உடை ஆமாத்தூர் அண்ணலை,
மெய்யனை மெய்யர்க்கு, மெய்ப்பொருளான விமலனை,
மையனை மைஅணி கண்டனை, வன்தொண்டன் ஊரன்சொல்
பொய்ஒன்றும் இன்றிப் புலம்புவார் பொன்கழல் சேர்வரே.     --- சுந்தரர்.

கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை, வெண்ணீறு அணிந்தானை, சேர்ந்தறியாக்
கையானை, எங்கும் செறிந்தானை, அன்பர்க்கு
மெய்யானை, அல்லாதார்க்கு அல்லாத வேதியனை,
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்.           --- திருவாசகம்.

பொய்யர் பொய்ய ---

பொய்யான உள்ளத்தோடு தன்னை வழிபடுபவர்களுக்குப் பொய்யானவனாகவே இறைவன் இருப்பான். அன்றியும், தெய்வம் இல்லை என்பார்க்கு இல்லாதவனாகவே இருப்பான்.

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம்இறை,
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே.  --- திருமந்திரம்.

உண்டு எனில் உண்டாகும், இல்லாமை இல்லையெனில்
உண்டாகும், ஆனமையின் ஓர் இரண்டாம் -- உண்டு இல்லை
என்னும் இவை தவிர்த்த இன்பத்தை எய்தும் வகை
உன்னில், அவன் உன்னுடனே ஆம்.  --- திருக்களிற்றுப்படியார்.

கருவி கரணங்களால் அறியப்பட்டு உயிரால் உண்டு என்று காணப்படும் பொருள் சிவம் எனில் உண்மையில் அப்பொருள் நிலையாதது ஆகும். ஏனெனில் உயிர் அறிவினால் அறியப்படும் எப்பொருளும் அசத்துப் பொருளே ஆகும். சிவபரம் பொருள் கருவி கரணங்கள் இல்லாத நிலையில் அறியப்படுவது எனின் உயிர் கருவி கரணங்களின் துணையின்றி எதனையும் அறிய முடியாது. ஆதலின், சிவபரம் பொருளும் ஒரு காலும் அறியப்படாத பொருளே ஆகி இல்பொருளாய் முடியும். இந்த இரண்டினுள்ளும் அடங்காது உயிர் அறிவினால் உண்டு என்றும் இல்லை என்றும் கொள்ளப்படுவதற்கு அப்பால், திருவருளே கண்ணாகக் காணுமிடத்து இன்ப வடிவாகத் தோன்றும் பொருளே சிவம். அவனைப் பேரன்பினால் நினைந்து போற்றினால் அவன் தன் பேரருளால் தன்னைப் போற்றுபவரடு இரண்டறக் கலந்து நிற்பான்.

கையாற் கயிலை எடுத்தான் தன்னைக்
         கால்விரலால் தோள்நெரிய ஊன்றினான் காண்,
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு
         மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண்.
பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான் காண்,
         போர்ப்படையான் காண்,பொருவார் இல்லாதான் காண்,
மைகொள் மணிமிடற்று வார்சடையான் காண்,
         மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே.    --- அப்பர்.
  
வெய்யவன் காண், வெய்யகனல் ஏந்தினான் காண்,
         வியன்கெடில வீரட்டம் மேவினான் காண்,
மெய்யவன் காண், பொய்யர் மனம் விரவாதான் காண்,
         வீணையோடு இசைந்து மிகு பாடல் மிக்க
கையவன் காண், கையில்மழு ஏந்தினான் காண்,
         காமன்அங்கம் பொடிவிழித்த கண்ணினான் காண்,
செய்யவன் காண், செய்யவளை மாலுக்கு ஈந்த
         சிவன் அவன் காண், சிவபுரத்து எம்செல்வன் தானே.   --- அப்பர்.

வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர், ஆல்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர், இருவரோடும்
பொருந்தினர், பிரிந்து தம்பால் பொய்யராம் அவர்கட்கு என்றும்
விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்த னாரே.         ---அப்பர்.

மெய்யானை, பொய்யரொடு விரவாதானை
         வெள் இடையை, தண் நிழலை, வெந்தீ ஏந்தும்
கையானை, காமன் உடல் வேவக் காய்ந்த
         கண்ணானை, கண்மூன்று உடையான் தன்னை,
பைஆடு அரவம் மதியுடனே வைத்த
         சடையானை, பாய்புலித்தோல் உடையான் தன்னை,
ஐயானை, ஆவடுதண் துறையுள் மேய
         அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே.     --- அப்பர்.


மெய்யர்க்கே மெய்யன் ஆகும், விதி இலா என்னைப் போல
பொய்யர்க்கே பொய்யன் ஆகும், புள்கொடி உடைய கோமான்,
உய்யப் போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே,
                                                             --- தொண்டரடிப்பொடி ஆழ்வார்.


மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்,
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்,
செய்யில் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன், ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே.     --- நம்மாழ்வார்.
 
வெள்ளை வெள்ளி நகர் வாழ்வே ---

"வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை" என்பது கொன்றைவேந்தன்.

கள்ளம் இல்லாத உள்ளத்தினை உடைய அடியவர்கள் வாழுகின்ற வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் வாழும் செல்வமாகிய முருகப் பெருமான் வெள்ளை உள்ளம் படைத்த அடியவர்களின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருப்பான்.

என்பு இருத்தி, நரம்பு தோல் புகப் பெய்திட்டு,
     என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு,
     என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி, அடியேனைக் கூழ் ஆட்கொண்டு
     அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி,-முயல் விட்டுக்
     காக்கைப்பின் போன ஆறே!              --- அப்பர்.

கல் மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே?
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலையில் வெள்ளிக் குன்றுஅது போலப் பொலிந்து இலங்கி,
என் மனமே ஒன்றிப் புக்கனன் போந்த சுவடு இல்லையே.    --- அப்பர்.

நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்து இருந்தேன்,
வந்தாய், போய்அறியாய், மனமே புகுந்து நின்ற
சிந்தாய்! எந்தை பிரான் திரு மேற்றளி உறையும்
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே.           ---  சுந்தரர்.

மைஆர் கண்டத்தினாய்! மத மாவுரி போர்த்தவனே!
பொய்யாது என்உயிருள் புகுந்தாய், இன்னம் போந்து அறியாய்,
கையார் ஆடு அரவா! கடவூர்தனுள் வீரட்டத்து எம்
ஐயா! என்அமுதே! எனக்கு ஆர்துணை நீ அலதே.              ---  சுந்தரர்.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே.                       ---  திருமூலர்.


வந்தாய், என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை,
எந்தாய்! போய் அறியாய், இதுவே அமையாதோ?-
கொந்து ஆர் பைம்பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா! உன்னை என்றும் மறவாமை பெற்றேனே.   --- திருமங்கை ஆழ்வார்.   

வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே ---

இதை வரிகள் முன்னர் வெள்ளிகரத்திற்கு உரிய "கள்ளம் உள்ள" எனத் தொடங்கும் திருப்புகழிலும் பயின்று வந்துள்ளது.

எல்லா உயிர்களும் விரும்பம் கொள்ளுதற்கு உரிய திருக்கயிலைமலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமான் சொல்லிய சொல்லை வெற்றி கொண்ட பெருமையில் மிக்கவர் முருகப்பெருமான்.

முருகப் பெருமான் நான்முகனைக் குட்டிச் சிறை இருத்திய போது, திருமால் வேண்ட, அயனைச் சிறைவிடுமாறு அறுமுகத்து அண்ணலைப் பணிக்க, நந்தியண்ணலைச் சிவபெருமான் அனுப்ப, அவர் சொல்லை மறுத்த ஆண்மையையும், சிவபெருமானே வந்து வேண்டவும், அயனை விடுத்து, அருமறைப் பொருளை உபதேசித்து அருளிய பெருமையையும் குறிப்பதாகவும் கொள்ளலாம். நமது சொந்தப் புராணமாகிய கந்தபுராணம் இதனை விளக்குமாறு காண்க.

கந்தவேள் எனக் கஞ்சனும், "ஐய! நின்
மைந்தனாம் அவன் வல்வினை ஊழினால்
அந்தம் இல்பகல் ஆழ் சிறைப்பட்டு உளம்
நொந்து வாடினன் நோவு உழந்தான் அரோ".

"ஆக்கம் அற்ற அயன் தன் சிறையினை
நீக்குக என்று நிமலனை வேண்டலும்"
தேக்கும் அன்பில் சிலாதன், நல் செம்மலை
நோக்கி ஒன்று நுவலுதல் மேயினான்.

"குடுவைச் செங்கையி னானைக் குமரவேள்
இடுவித்தான் சிறை என்றனர், ஆண்டு நீ
கடிதில் சென்று, நம் கட்டுரை கூறியே
விடுவித்தே இவண் மீள்க" எனச் சாற்றினான்.

எந்தை அன்னது இசைத்தலும், "நன்று" எனா,
நந்தி அக்கணம் நாதனைத் தாழ்ந்து போய்,
அந்தம் அற்ற அடல் கணம் சூழ்தரக்
கந்த வெற்பில் கடிநகர் எய்தினான்.

எறுழு உடைத் தனி ஏற்று முகத்தினான்,
அறுமுகத்தன் அமர்ந்த நிகேதனம்
குறுகி, மற்று அவன் கோல மலர்ப்பதம்
முறைதனில் பணிந்து ஏத்தி மொழிகுவான்.

"கடிகொள் பங்கயன் காப்பினை, எம்பிரான்
விடுதல் கூறி விடுத்தனன் ஈங்கு எனை,
தடைபடாது அவன் தன்சிறை நீக்குதி,
குடிலை அன்னவன் கூறற்கு எளியதோ".

என்னும் முன்னம், இளையவன் சீறியே,
"அன்ன ஊர்தி அருஞ்சிறை நீக்கலன்,
நின்னையும் சிறை வீட்டுவன் நிற்றியேல்,
உன்னி ஏகுதி ஒல்லையில்" என்றலும்.

வேறுஅது ஒன்றும் விளம்பிலன், அஞ்சியே
ஆறு மாமுகத்து அண்ணலை வந்தியா,
மாறு இலா வெள்ளி மால்வரை சென்றனன்,
ஏறு போல்முகம் எய்திய நந்தியே.

மை திகழ்ந்த மணிமிடற்று அண்ணல் முன்,
வெய்து எனச்சென்று மேவி, அவன் பதம்
கைதொழூஉ நின்று, கந்தன் மொழிந்திடும்
செய்தி செப்ப, சிறுநகை எய்தினான்.

கெழு தகைச் சுடர்க் கேசரிப் பீடமேல்
விழுமிது உற்ற விமலன் விரைந்து எழீஇ,
அழகு உடைத் தனது ஆலயம் நீங்கியே
மழ விடைத்தனி மால்வரை ஏறினான்.

முன்னர் வந்த முகில்புரை வண்ணனும்
கின்னரம் பயில் கேசரர் ஆதியோர்
நன்னர் கொண்டிடு நாகரும் நற்றவர்
என்னரும் தொழுது எந்தைபின் ஏகினார்.

படைகொள் கையினர், பன்னிறக் காழக
உடையர், தீயின் உருகெழு சென்னியர்,
இடிகொள் சொல்லினர், எண்ணரும் பூதர்கள்
புடையில் ஈண்டினர், போற்றுதல் மேயினார்.

இனைய காலை இனையவர் தம்மொடும்
வனிதை பாதியன் மால்விடை ஊர்ந்து உராய்ப்
புனித வெள்ளியம் பொற்றை தணந்துபோய்த்
தனது மைந்தன் தடவரை எய்தினான்.

சாற்ற அருந்திறல் சண்முக எம்பிரான்
வீற்றிருந்த வியன் நகர் முன் உறா,
ஏற்றினின்றும் இழிந்து, விண்ணோர் எலாம்
போற்ற, முக்கண் புனிதன் உள் போயினான்.

அந்தி போலும் அவிர்சடைப் பண்ணவன்
கந்தன் முன்னர்க் கருணையொடு ஏகலும்,
"எந்தை வந்தனன்" என்று எழுந்து, ங்கு அவன்
வந்து நேர் கொண்டு அடிகள் வணங்கியே.

பெருத்த தன்மணிப் பீடிகை மீமிசை
இருத்தி நாதனை, ஏழுலகு ஈன்றிடும்
ஒருத்தி மைந்தன், "உயிர்க்கு உயிராகிய
கருத்த! நீ வந்த காரியம் யாது?" என்றான்.

"மட்டு உலாவு மலர் அயனைச் சிறை
இட்டு வைத்தனை, யாம் அது நீக்குவான்
சுட்டி வந்தனம், மால்சுரர் தம்முடன்,
விட்டிடு ஐய!" என்று எந்தை விளம்பினான்.

நாட்ட மூன்றுஉடை நாயகன் இவ்வகை
ஈட்டும் அன்பொடு இசைத்திடும் இன்சொலைக்
கேட்ட காலையில், கேழ்கிளர் சென்னிமேல்
சூட்டு மௌலி துளக்கினன் சொல்லுவான்.

"உறுதி ஆகிய ஓர் எழுத்தின் பயன்
அறிகிலாதவன், ஆவிகள் வைகலும்
பெறுவன் என்பது பேதைமை, ஆங்குஅவன்
மறைகள் வல்லது மற்று அது போலுமால்".

"அழகிது ஐய! நின் ஆர்அருள், வேதம் முன்
மொழிய நின்ற முதல் எழுத்து ஓர்கிலான்,
இழிவில் பூசை இயற்றலும் நல்கிய
தொழில் புரிந்து சுமத்தினை ஓர்பரம்".

"ஆவி முற்றும் அகிலமும் நல்கியே
மேவுகின்ற வியன் செயல் கோடலால்,
தாவில் கஞ்சத் தவிசு உறை நான்முகன்
ஏவர் தம்மையும் எண்ணலன் யாவதும்".

"நின்னை வந்தனை செய்யினும், நித்தலும்
தன் அகந்தை தவிர்கிலன், ஆதலால்,
அன்னவன் தன் அருஞ்சிறை நீக்கலன்",
என்ன மைந்தன் இயம்பிய வேலையே.

"மைந்த! நின் செய்கை என்னே?
     மலர்அயன் சிறைவிடு என்று
நந்தி நம் பணியால் ஏகி
     நவின்றதும் கொள்ளாய், நாமும்
வந்து உரைத்திடினும் கேளாய்,
     மறுத்து எதிர் மொழிந்தாய்" என்னாக்
கந்தனை வெகுள்வான் போலக்
     கழறினன் கருணை வள்ளல்.

அத்தனது இயல்பு நோக்கி, அறுமுகத்து அமலன், "ஐய!
சித்தம் இங்கு இதுவே ஆகில், திசைமுகத்து ஒருவன் தன்னை
உய்த்திடு சிறையின் நீக்கி, ஒல்லையில் தருவன்" என்னாப்
பத்தியின் இறைஞ்சிக் கூற, பராபரன் கருணை செய்தான்.

நன்சிறை எகினம் ஏனம் நாடுவான் அருளை நல்க,
தன்சிறை நின்றோர் தம்மைச் சண்முகக் கடவுள் நோக்கி,
"முன்சிறை ஒன்றில் செங்கேழ் முண்டகத்து அயனை வைத்த
வன்சிறை நீக்கி, நம் முன் வல்லை தந்திடுதிர்" என்றான்.

என்றலும், சாரதர்க்குள்
     சிலவர்கள் ஏகி, அங்கண்
ஒன்று ஒரு பூழை தன்னுள்
     ஒடுங்கினன் உறையும் வேதா,
வன்தளை விடுத்தல் செய்து,
     மற்று அவன் தனைக் கொண்டு ஏகிக்
குன்றுதொறு ஆடல் செய்யும்
     குமரவேள் முன்னர் உய்த்தார்.

உய்த்தலும் கமலத்து அண்ணல் ஒண்கரம் பற்றி, செவ்வேள்
அத்தன் முன் விடுத்தலோடும், ஆங்கு அவன் பரமன் தன்னை
மெய்த்தகும் அன்பால் தாழ்ந்து, வெள்கினன் நிற்ப, நோக்கி,
"எய்த்தனை போலும் பன்னாள் இருஞ்சிறை எய்தி" என்றான்.

நாதன் இத் தன்மை கூறி, நல் அருள் புரிதலோடும்,
போதினன், "ஐய! உன்தன் புதல்வன் ஆற்றிய இத் தண்டம்
ஏதம் அன்று, ணர்வு நல்கி, யான் எனும் அகந்தை வீட்டி,
தீதுசெய் வினைகள் மாற்றி, செய்தது புனிதம்" என்றான்.

அப்பொழுது அயனை முக்கண் ஆதியம் பரமன் காணூஉ,
"முப் புவனத்தின் மேவும் முழுது உயிர்த் தொகைக்கும் ஏற்ற
துப்புறவு அதனை நன்று தூக்கினை, தொன்மையே போல்
இப்பகல் தொட்டு நீயே ஈந்தனை இருத்தி" என்றான்.

அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,
முருகவேள் முகத்தை நோக்கி, முறுவல்செய்து, ருளை நல்கி,
"வருதியால் ஐய!" என்று மலர்க்கை உய்த்து அவனைப் பற்றி,
திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.

காமரு குமரன் சென்னி கதும் என உயிர்த்து, செக்கர்த்
தாமரை புரையும் கையால் தழுவியே, "அயனும் தேற்றா
ஓம் என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?
போம் எனில், அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.

"முற்று ஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள், உலகம் எல்லாம்
பெற்றிடும் அவட்கு நீ முன், பிறர் உணராத ஆற்றால்
சொற்றது ஓர் இனைய மூலத் தொல்பொருள், யாரும் கேட்ப
இற்று என இயம்பலாமோ? மறையினால் இசைப்பது அல்லால்".

என்றலும், நகைத்து, "மைந்த! எமக்கு அருள் மறையின்" என்னா,
தன்திருச் செவியை நல்க, சண்முகன் குடிலை என்னும்
ஒன்றுஒரு பதத்தின் உண்மை உரைத்தனன், உரைத்தல் கேளா,
நன்று அருள் புரிந்தான் என்ப ஞான நாயகனாம் அண்ணல்.

அன்னதோர் ஐயம் மாற்றி
     அகம் மகிழ்வு எய்தி, அங்கண்
தன் இளங்குமரன் தன்னைத்
     தலைமையோடு இருப்ப நல்கி,
என்னை ஆளுடைய நாதன்
     யாவரும் போற்றிச் செல்ல,
தொல்நிலை அமைந்து போந்து
     தொல்பெரும் கயிலை வந்தான்.

தொய்யில் செய்யில் நொய்யர் ---

நொய்ய - அற்பமான, வலியற்ற, நுட்பமான, மென்மையான என்று பொருள்படும். மென்மையானவர்கள் பெண்கள். எனவே, மெல்லியலார் என்று வழங்கப்படுவர்.

தடம் எங்கும் புனல் குடையும்
    தையலார் தொய்யில் நிறம்,
இடம் எங்கும் அந்தணர்கள்
    ஓதுகிடை யாக நிலை,
மடம் எங்கும் தொண்டர்குழாம்,
    மனை எங்கும் புனை வதுவை,
நடம் எங்கும் ஒலி ஓவா
    நற்பதிகள் அவைகடந்து.      ---- பெரியபுராணம்.

தோள்கள் மேலும், முலைகள் மேலும் சந்தனக் குழம்பினால் வரிக்கோலம் எழுதிக் கொள்ளும் மெல்லியலார்கள் ஆகிய விலைமாதர்களைச் சுவாமிகள் இங்கே குறிப்பிடுகின்றார்.


கையர் ---

கையர் - கீழ்மக்கள், கள்ளர், வஞ்சகர், மூடர்.

விலைமாதர்கள் வஞ்சக உள்ளம் படைத்தவர்கள். பொருள் படைத்தவரோடு இனிமையாகப் பேசி, அவருக்கே உரியவர் போல நடித்து, பொருளைப் பறித்து, பின் துரத்தி விடுபவர்கள்.

தொய்யும் ஐய இடையாலும் ---

தொய்தல் - இளைத்தல், சோர்வு அடைதல், துவளுதல், வளைதல்.

துவண்டு, இளைத்து, உள்ளதோ இல்லையோ என்று ஐயப்படும்படியாக உள்ள விலைமாதரின் இடை அழகில் காமுகர் மயங்குவர்.,

துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு(ம்) கள்ள விழியாலும் ---

காது அளவு ஓடிய கண்கள். மீனைப் போன்று உள்ள கண்கள் காது அளவு ஓடி, மானைப் போல மருண்டு பிறழ்ந்து பிறழ்ந்து நோக்கும்.

வள்ளைக் கொடி போன்றுள்ள காது என்பார் காமுகர். உண்மையில் காது வள்ளைக் கொடியே அல்ல.

"உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்" என்கின்றார் பட்டினத்து அடிகள். உள்ளே குறும்பி என்னும் அழுக்கு ஒழுகுகின்ற காதை வள்ளைத் தண்டின் வளமை பொருந்தியதாகக் கூறுவர் காமுகர்.

"எய்த்தல் இலா வள்ளை என்றாய் வார் காது, வள்ளை தனக்கு உள் புழையோடு உள்ளும் நரம்பின் புனைவும் உண்டேயோ?" என வினவுகின்றார் வள்ளல் பெருமான்.

மனத்தில் உள்ள வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்தும் திருட்டுப் பார்வை உடையவர்கள் விலைமாதர்கள்.

மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கும் நல்ல குழலாலும் ---

செம்மையாக அமைந்து, மை போன்று கருநிறம் கொண்டதும், செம்மை வாய்ந்த காட்டு மல்லிகை, முல்லை மலர்கள் நிறைந்துள்ள நல்ல கூந்தல் காமுகரை மயக்கும்.

"கையும் எண்ணெயும் கலவாது ஒழியில் வெய்ய வதரும், பேனும் விளையத் தக்க தலை ஓட்டின் முளைத்து எழுந்த சிக்கின் மயிரைத் திரள் முகில்" என்று மயங்குவதாகப் பட்டினத்து அடிகள் அறிவுறுத்துகின்றார்.

"அல் அளகம் மையோ? கருமென் மணலோ? என்பாய், மாறி, ஐயோ! நரைப்பது அறிந்திலையோ?" என்கின்றார் வள்ளல்பெருமான்.

மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ ---

இப்படி அழகால் மயக்கும் விலைமாதர் பால் காம இச்சை கொள்வோர் இருக்கலாம். அந்த இச்சையை அவர்கள் பால் தணித்துக் கொள்ள வேண்டுமாயின் கைவசம் பொருள் இருக்கு வேண்டும். பெறுகின்ற பொருளுக்குத் தக்கவாறு இன்பத்தை வழங்குபவர்கள் விலைமாதர்கள்.  பொருள் இல்லையானால் எள்ளி நகையாடுவார்கள். துரத்துவார்கள்.
  
அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர்,
     பொருள் உளாரை என்ஆணை உன்ஆணை, என்
     அருகு வீடு, து தான, தில் வாரும் என் ...... உரைகூறும்,
அசடு மாதர், குவாது சொல் கேடிகள்,
     தெருவின் மீது குலாவி உலாவிகள்,
     அவர்கள் மாயை படாமல், கெடாமல் நின் .....அருள்தாராய்.
                                             --- திருப்புகழ்.

கருத்துரை

முருகா! விலைமாதர் சொல்லில் மகிழாமல், உனது அருட்பாடலில் மகிழ்ந்து உய்ய அருள்.


















2 comments:

  1. i just stumbled over your blog. I am awestruck. I wonder how you are able to upload all these . உங்கள் உழைப்பிற்குப் பாராட்டுக்கள் பல

    ReplyDelete

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...