திருத் தலையாலங்காடு
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில்
உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8.கி.மீ. தூரத்திலும் திருப்பெருவேளூர்
என்ற மற்றொரு திருத்தலத்தில் இருந்து 6
கி.மீ. தூரத்திலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இறைவர்
: நடனேசுவரர், ஆடவல்லநாதர்.
இறைவியார்
: உமாதேவி, பாலாம்பிகை
தீர்த்தம் : கோயிலின் முன்புள்ள தீர்த்தக்
குளம்.
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - தொண்டர்க்குத்
தூநெறியாய்.
செருக்குற்றுத் திரிந்த தாருகாவன
முனிவர்கள் இறைவனின் பெருமையை உணராது, அவரை
அழித்திடத் தீர்மானித்து ஆபிசார வேள்வி நடத்தினர். இறைவரோ முனிவர்கள் விடுத்த
புலியைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்து
வீர நடனம் புரிந்தார். நாகங்களை ஆபரணமாகச் சூடினார். மானை ஏந்தினார். மழுவைத்
தாங்கினார். தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை ஒடுக்கி, இறைவன் ஒருவனே என்பதையும், அவன் அருளாலேயே எல்லாம்
ஆகும் என்பதையும்
உணர்த்தி அருள்புரிந்தார். தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய முயலகனை அடக்கி, அவன் முதுகின் மீது இறைவன் நடனம்
புரிந்த திருத்தலம் இதுவாகும்.
இவ்வூர் சங்க காலத்தில்
"தலையாலங்கானம்" என்று போற்றப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட கடும்
போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றான். இந்தப் போர் நடந்த இடம்
தலையாலங்கானம். எனவே இவனுக்கு தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற
சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதனைப் புறநானூற்றில் காணலாம்.
இராஜகோபுரமோ மதில்களோ இல்லை. கிழக்கு
நோக்கிய ஆலயத்தின் முன்பு, தலத்தின்
திருக்குளமான சங்கு தீர்த்தம் உள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள்
சென்றால் முதலில் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு
கூடிய தனிச் சந்நிதிக்குள் பாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணை புரிகிறாள். திரு
மடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேசுவரி சந்நிதியும் இங்குண்டு.
சந்நிதிக்கு வெளியே சனீசுவரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நந்திதேவர் தனி
மண்டபத்துள் அமர்ந்துள்ளார். பின் திறந்தவெளியில் நீண்ட பாதை. அது சுவாமி
சந்நிதியைச் சென்றடைகிறது. செங்கற்களால் ஆன இறைவன் சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது.
நீண்ட பாணம் கொண்டு சதுர ஆவுடையார் மீது அற்புதமாய் தரிசனம் தருகின்றார்
ஆடல்வல்லநாதர்.
இவரது தரிசனம் முடித்து, ஆலயத்தை வலம் வருகையில், வடக்கே தலமரமான பலா மரத்தை வணங்கலாம்.
தனியே ஒரு இலிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதியும்
இங்கே உள்ளது. சுவாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரசுவதியின் சிலை உள்ளது.
வீணையில்லா சரசுவதியை இங்கே காணலாம். சரசுவதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்க தரிசனத்தைத் தந்து
அருள்புரிந்துள்ளார். பங்குனி 30,
31
மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில்
சூரியக் கதிர்கள் சுவாமி மீது விழுகின்றன.
இத்தல தீர்த்தக்
குளமான சங்கு தீர்த்தம் மிக சிறப்புடையது. இத்தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் நீராடி, இறைவன், இறைவி முன்பு நெய்
தீபமேற்றி வழிபட, சகல வியாதிகளும்
தீரும். வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களும் மறையும். முன்னோர்களது
சாபங்கள் அகலும். இத்தல பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபட எதிரி நாசமடைவர். இத்தல
இறைவருக்கும் அம்பிகைக்கும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து
வழிபட, தடைப்பட்ட காரியங்கள்
விரைவில் நடைபெறும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். பிள்ளைப் பேறு கிட்டும்.
இறைவன் நடனமாடிய அரிய தலங்களுள் இதுவும் ஒன்றென்பதால், நடனப் பயிற்சியாளர்கள் அவசியம் வழிபட
வேண்டிய திருத்தலமாகும்.
காலை 8 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலேயே அர்ச்சகர் இல்லம் உள்ளதால் எப்போதும் வழிபடலாம்.
வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், " கருமை மிலை ஆலம் காட்டு மிடற்றாய்
என்று ஏத்தும் தலையாலங்காட்டுத் தகவே" என்று போற்றி உள்ளார்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 263
வாய்ந்த
மிழலை மாமணியை
வணங்கி, பிரியா விடைகொண்டு,
பூந்தண்
புனல்சூழ் வாஞ்சியத்தைப்
போற்றி, புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த
அன்பி னால் இறைஞ்சி,
இசைவண் தமிழ்கள்
புனைந்துபோய்
சேர்ந்தார், செல்வத்
திருமறைக்காடு,
எல்லை இல்லாச்
சீர்த்தியினார்.
பொழிப்புரை : அரிதில் கிடைக்கப்
பெற்ற திருவீழிமிழலையின் பெருமணியாம் இறைவரை வணங்கிப் பிரிய இயலாத நிலையில் விடை
பெற்றுக் கொண்டு, அழகான குளிர்ந்த
நீரினாலே சூழப்பட்ட திருவாஞ்சியத்திற்குச் சென்று வழிபட்டு, வினையின் நீங்கி விளங்கிய அறிவினனாய
சிவபெருமான் வெளிப்பட நிலையாய் எழுந்தருளிய மற்ற திருப்பதிகளையும் அன்பினால்
இறைஞ்சித் தொழுது, இசையும் வளமையுமுடைய
தமிழ்ப் பதிகங்களைப் பாடி, மேற்சென்று, அளவில்லாத சிறப்புடையராய அப்பெருமக்கள்
இருவரும், செல்வம் மிக்க
திருமறைக்காட்டைச் சென்றடைந்தனர்.
நாவரசர்
திருவாஞ்சியத்திற்கு முன்னரும் (பா.216) எழுந்தருளியிருப்பினும், ஆசிரியர் சேக்கிழார் ஆங்கு அணைந்தார்
என்ற அளவிலேயே கூறியுள்ளனர். இம்முறை எழுந்தருளிய பொழுது திருவாஞ்சியத்தைப் போற்றி
என்பதால் இதுபொழுது பதிகத்தைப் பாடினர் என்றலே பொருந்துவதாம். அப்பதிகம்: `படையும் பூதமும்` (தி.5 ப.67) - திருக்குறுந்தொகை. `புனிதர் வாழ்பதிகள் ........
வண்டமிழ்கள் புனைந்து` என்பதால்
திருவாஞ்சியத்திற்கும் திருமறைக்காட்டிற்கும் இடையில் உள்ள பல பதிகளையும்
ஞானசம்பந்தரொடு இவரும் சேர்ந்து சென்றிருப்பதால், அங்கெல்லாம் பதிகங்கள் பாடியே
சென்றிருக்க வேண்டும்.
அப்பதிகளாக அறியப்படுவன: திருத்தலையாலங்காடு, திருச்சாத்தங்குடி, திருக்கரவீரம், திருவிளமர், திருக்காறாயில், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருத்தண் டலை நீணெறி, திருக்களர் என்பனவாம். (தி.12 பு.28 பா.575)
எனினும், இப்பதிகளுள் திருத்தலையாலங்காடு என்ற
பதிக்கு மட்டுமே திருப்பதிகம் கிடைத்துள்ளது, அப்பதிகம்: `தொண்டர்க்கு` (தி.6 ப.79) - திருத்தாண்டகம்.
6. 079
திருத்தலையாலங்காடு திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தொண்டர்க்குத்
தூநெறியாய் நின்றான் தன்னை,
சூழ்நரகில் வீழாமே
காப்பான் தன்னை,
அண்டத்துக்கு
அப்பாலைக்கு அப்பா லானை,
ஆதிரைநாள் ஆதரித்த
அம்மான் தன்னை,
முண்டத்தின்
முளைத்துஎழுந்த தீ ஆனானை,
மூவுருவத்து
ஓர்உருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில்
தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை : தொண்டர்க்குத் தன்வழி
நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும் , சூழும் நரகில் வீழாமல் தொண்டரைக்
காப்பவனும் , இப்புவிக்கு
அப்பாலைக்கு அப்பால் ஆனவனும் , ஆதிரை நாளை
விரும்பிக்கொண்ட தலைவனும் , நெற்றியிடத்துத்
தோன்றி வளரும் தீயினனும் , அயன் , அரி , அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய
அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய
தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
பாடல்
எண் : 2
அக்குஇருந்த
அரையானை, அம்மான் தன்னை,
அவுணர்புரம்
ஒருநொடியில் எரிசெய் தானை,
கொக்குஇருந்த
மகுடத்துஎம் கூத்தன் தன்னை,
குண்டலஞ்சேர் காதானை, குழைவார் சிந்தை
புக்குஇருந்து
போகாத புனிதன் தன்னை,
புண்ணியனை எண்ண
ருஞ்சீர்ப் போகம்எல்லாம்
தக்குஇருந்த
தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :சங்குமணி கட்டிய
இடையினனும் , தந்தை ஆனவனும் , அசுரர் புரங்கள் மூன்றையும்
ஒருவிநாடியில் எரித்தவனும் , கொக்கிறகு
செருகப்பட்ட சடைமுடிக்கூத்தனும் ,
குண்டலஞ்சேர்
காதினனும் , தன்னை எண்ணி
உருகுவார் மனத்துட்புக்கு அங்கிருந்து போகாத புனிதனும் , புண்ணிய உருவினனும் , அளவற்ற செல்வத்தான் ஆகும் இன்பமெல்லாம்
வாய்த்திருந்தானும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்
.
பாடல்
எண் : 3
மெய்த்தவத்தை, வேதத்தை, வேத வித்தை,
விளங்கிளமா மதிசூடும்
விகிர்தன் தன்னை,
எய்த்துஅவமே
உழிதந்த ஏழை யேனை
இடர்க்கடலில் வீழாமே
ஏற வாங்கிப்
பொய்த்தவத்தார்
அறியாத நெறிநின் றானை,
புனல்கரந்திட்டு
உமையொடுஒரு பாகம் நின்ற
தத்துவனை, தலையாலங் காடன் தன்னை,
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :உண்மைத் தவமாகி , வேதமுமாகி , வேதத்தின் முதலும் ஆகி , ஒளிரும் இளம்பிறையைச் சூடி , வேறுபட்ட இயல்பினனும் , வீணே அலைந்து இளைத்த அறிவற்ற என்னைத்
துன்பக் கடலில் வீழாமல் கரையேற எடுத்துப் பொய்த்தவத்தார் அறிய முடியாத நெறியில்
என்னை நிற்பித்தவனும் , கங்கையைச் சடையில்
கரந்து உமையம்மையை ஒரு கூற்றிலே கொண்டு நின்றவனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை
அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன் .
பாடல்
எண் : 4
சிவனாகி, திசைமுகனாய், திருமால் ஆகி,
செழுஞ்சுடராய், தீயாகி, நீரும் ஆகி,
புவனாகி, புவனங்கள் அனைத்தும்
ஆகி,
பொன்ஆகி, மணிஆகி, முத்தும் ஆகி,
பவனாகி, பவனங்கள் அனைத்தும்
ஆகி,
பசுஏறித் திரிவான்ஓர்
பவனாய் நின்ற
தவனாய
தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :சிவனாய் , நான்முகனாய்த் திருமாலாய் , சூரிய சந்திரராய் , தீயாய் , நீராய் , புவலோகமாய் , புவனங்கள் யாவுமாய் , பொன்னாய் , மணியாய் , முத்துமாய் , வேண்டுமிடங்களில் வேண்டிய வாறே
தோன்றுபவனாய் , உயிர்கள்
வாழ்தற்கேற்ற இடங்கள் யாவுமாய் ,
இடபத்தை
ஊர்ந்து திரியும் ஒரு கோலத்தை உடையனாய் , தவ
வேடந்தாங்கிநின்ற தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
பாடல்
எண் : 5
கங்கையெனும்
கடும்புனலைக் கரந்தான் தன்னை,
காமருபூம்
பொழிற்கச்சிக் கம்பன் தன்னை,
அங்கையினில்
மான்மறிஒன்று ஏந்தி னானை,
ஐயாறு மேயானை, ஆரூ ரானை,
பங்கம்இலா
அடியார்க்குப் பரிந்தான் தன்னை,
பரிதிநிய மத்தானை, பாசூ ரானை,
சங்கரனை, தலையாலங் காடன்
தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :விரைந்து வரும்
புனலையுடைய கங்கையைச் சடையில் கரந்தவனாய் , விரும்பத்தக்க அழகிய பொழில் சூழ்ந்த
கச்சி ஏகம்பனாய் , அழகிய கையில்
மான்கன்றொன்றை ஏந்தியவனாய் , ஐயாறு மேயவனாய் , ஆரூரனாய் , குற்றமில்லா அடியார் மாட்டுப்
பரிவுடையனாய் , பரிதி நியமத்தவனாய் , பாசூரினனாய் , சங்கரனாய் நின்ற தலையாலங்காட்டு அண்ணலை
அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
பாடல்
எண் : 6
விடம்திகழும்
அரவுஅரைமேல் வீக்கி னானை,
விண்ணவர்க்கும்
எண்ணரிய அளவி னானை,
அடைந்தவரை
அமர்உலகம் ஆள்விப் பானை,
அம்பொன்னை, கம்பமா களிறுஅட் டானை,
மடந்தைஒரு
பாகனை, மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும்
மதியும் வைத்த
தடங்கடலை, தலையாலங் காடன்
தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :விடமுடைய பாம்பினை
இடையின்மேல் கட்டியவனாய் , தேவர்களாலும்
எண்ணுதற்கரிய அளவினனாய் , தன்னை அடைந்தவரைத்
தேவருலகம் ஆளச் செய்பவனாய் , அழகிய பொன்னாய் , அசையும் பெரிய களிற்றியானையை
அழித்தவனாய் , உமை திகழ் ஒருபாகனாய்
, சடைமுடிமேல் ஒழுகும்
நீரையுடைய கங்கையையும் , கொடிய பாம்பையும் , பிறையையும் வைத்தவனாய் அகன்ற கடலை
ஒத்தவனாய்த் திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண் நாள் ஆக்கினேன்
.
பாடல்
எண் : 7
விடைஏறிக்
கடைதோறும் பலிகொள் வானை,
வீரட்டம் மேயானை, வெண்ணீற் றானை,
முடைநாறு
முதுகாட்டில் ஆட லானை,
முன்னானை, பின்னானை, அந்நா ளானை,
உடைஆடை
உரிதோலே உகந்தான் தன்னை,
உமைஇருந்த பாகத்துள்
ஒருவன் தன்னை,
சடையானை, தலையாலங் காடன்
தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :இடபமூர்ந்து வீட்டு
வாயில்கள் தோறும் பிச்சை யேற்பவனாய் , வீரட்டங்கள்
எட்டும் மேவினவனாய் , வெண்ணீறு அணிந்தவனாய்
, பிணம் எரிந்து
முடைநாறும் சுடுகாட்டில் ஆடுபவனாய் , இறப்பு
எதிர்வு நிகழ்வு ஆகிய முக்காலமும் ஆபவனாய் , அரையிலுடை புலித்தோலாகவும் மேலாடை
யானைத் தோலாகவும் அமைய விரும்பினனாய் , உமைபொருந்திய
பாகத்தோடுள்ள ஒருவனாய் , சடையவனாய்த் திகழும்
தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.
பாடல்
எண் : 8
கரும்புஇருந்த
கட்டிதனை, கனியை, தேனை,
கன்றாப்பின் நடுதறியை, காறை யானை,
இரும்புஅமர்ந்த
மூவிலைவேல் ஏந்தி னானை,
யென்னானை, தென்னானைக் காவான்
தன்னை,
சுரும்புஅமரும்
மலர்க்கொன்றை சூடி னானை,
தூயானை, தாயாகி உலகுக்
எல்லாம்
தரும்பொருளை, தலையாலங் காடன்
தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :கரும்பின்கண் இருந்த
சாறுகொண்டு சமைத்த கட்டியையும் கனியையும் தேனையும் ஒப்பவனாய் , கன்றாப்பூரின் நடுதறியாய் , பன்றியின் வெண்மருப்பாலாகிய காறை
அணியினனாய் , இரும்பாலான மூவிலை
வேலை ஏந்தியவனாய் , எனக்கு முதல்வனாய் , அழகிய ஆனைக் காவனாய் , வண்டுமொய்க்கும் கொன்றை மலரைச் சூடியவனாய், தூயவனாய் , தாயானவனாய் , உலகுக் கெல்லாம் பொருள் வழங்குபவனாய்த்
திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
பாடல்
எண் : 9
பண்டுஅளவு
நரம்புஓசைப் பயனை, பாலை,
படுபயனை, கடுவெளியை, கனலை, காற்றை,
கண்டஅளவில்
களிகூர்வார்க்கு எளியான் தன்னைக்
காரணனை, நாரணனை, கமலத் தோனை,
எண்டளவில்
என்நெஞ்சத்து உள்ளே நின்ற
எம்மானை, கைம்மாவின் உரிவை
பேணும்
தண்டுஅரனை, தலையாலங் காடன்
தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :பண்டுதொட்டுவரும்
இசையிலக்கணத்தொடு பொருந்திய யாழிசையின் பயனாய் , பாலாய் , பாலின் சுவையாய், பெரியவானமாய் , கனலாய் , காற்றாய் , தன்னைக் கண்ட அளவிலே மகிழ்ச்சி
மிகுவார்க்கு எளியனாய் , முதல்வனாய் , திருமாலாய் , நான் முகனாய் , எட்டிதழ்த் தாமரை வடிவிலுள்ள இல்லமாகிய
என் நெஞ்சத் துள்ளே நின்ற எம் தலைவனாய் , யானைத்
தோற் போர்வையைப் பேணுபவனாய் , இலிங்க வடிவினனாய்த்
திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.
பாடல்
எண் : 10
கைத்தலங்கள்
இருபதுஉடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக்
கருதாது ஓடி
முத்துஇலங்கு
முடிதுளங்க வளைகள் எற்றி
முடுகுதலும், திருவிரல்ஒன்று
அவன்மேல் வைப்ப,
பத்துஇலங்கு
வாயாலும் பாடல் கேட்டு,
பரிந்துஅவனுக்கு
இராவணன்என்று ஈந்த நாமத்
தத்துவனை, தலையாலங் காடன்
தன்னைச்
சாராதே சாலநாள்
போக்கி னேனே.
பொழிப்புரை :இருபது கைகளையுடைய
அரக்கர் கோமான் தோள்வளைகளைப் புடைத்து ஓடிச்சென்று ஆராயாது கயிலை மலையை விரைந்தெடுக்க,
அவன் முத்து விளங்கும் முடிகள் பத்தும் நடுங்கும் வண்ணம் திருவிரல் ஒன்றை அவன்மேல்
வைத்து ஊன்ற, அவன் தன் பத்து வாயாலும் பாடிய சாமகீதப் பாடலைக் கேட்டு இரக்கம்
மிக்கவனாய் அவனுக்கு இராவணன் என்ற பெயரை ஈந்த தத்துவனாய்த் திகழும் தலையாலங்காட்டு
அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேனே .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment