திருக் குடவாயில்





திருக் குடவாயில்
( குடவாசல் )

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் "குடவாசல்" என்று அழைக்கப்படுகின்றது.

      கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் குடவாசல் இருக்கிறது. திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது.

     கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களிலிருந்தும் குடவாசல் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

     திருப்பெருவேளூர், திருதலையாலங்காடு என்ற பாடல் பெற்ற திருத்தலங்கள் அருகருகில் உள்ளன.

இறைவர்          : கோணேசுவரர், சூரியேசுவரர், ப்ருகநாதர்

இறைவியார்      : பெரிய நாயகி

தல மரம்           : வாழை

தீர்த்தம்            : அமிர்த தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர்  - 1. திகழும் திருமாலொடு,
                                                         2. கலைவாழும் அங்கையீர்.

         கோச்செங்கட் சோழ நாயனார் அமைத்த மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.

         காசிப முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருத்தியான விநதை இளையவள். அவளின் மகன் கருடன். மகாவிஷ்ணுவிற்கு வாகனமாகவும், பரம பக்தனாகவும் இருந்து "பெரிய திருவடி" என்று புகழ் பெற்றவர். ஒரு சமயம் கருடனும், அவன் தாய் விநதையும் மூத்த மனைவியின் அடிமையாக வேண்டிய நிலை உண்டானது. தாயின் அடிமைத்தனத்தை போக்குவதற்காக கருடன், பெரியன்னை கேட்டபடி தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்தான். பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து வரும்போது ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன் அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப் போர் புரிந்து அவனை வீழ்த்தினார். இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன் கோணேசப் பெருமான் அந்த அமிர்த குடத்தை மெள்ளத் தம்மிடம் இழுத்துக் கொண்டார். அசுரனை வீழ்த்திவிட்டு வந்த கருடன் அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன் மூக்கால் கிளறியபோது சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார். கோணேசப் பெருமான் அருளாணைப்படி கருடன் இத்திருத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால் கோணேசர் அமிர்தலிங்கமானார். அமிர்த துளிகள் சிந்தியதால் ஆலயத்திற்கு எதிரிலுள்ள தீர்த்தம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று.

         திருணபிந்து முனிவர் பூஜிக்க இறைவன் திருக்குடத்திலிருந்து வெளிப்பட்டு முனிவர் நோயினை நீக்கயருளிய தலம் இதுவாகும். அனுமனும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார். அவர் திருவுருவங்கள் இங்குள்ளன.

         பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக இருந்து சிவபெருமான் காத்தார்; குடத்திலிட்டுக் காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக் காலத்தில் வேடன் வடிவெடுத்து வந்த சிவபிரான் வில்லால் அக்குடத்தை உடைத்தார். குடம் மூன்றாக உடைந்து, முதற்பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம் (ஆதி கும்பேசம்) ஆகும். அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலையநல்லூர் ஆகும். குடத்தின் முகப்பு பாகம் விழுந்த இடமே குடவாயில் என்னும் குடவாசல்..

         இத்திருத்தலம் சங்ககாலச் சிறப்பும் பழைமையும் வாய்ந்தது. சோழன் கோச்செங்கணான், சேரமான் கணைக்கால் இரும் பொறையை வென்று, அவனை இக்குடவாயிற் சிறைக் கோட்டத்தே சிறை வைத்தான் என்னும் செய்தியை புறநானூறு தெரிவிக்கிறது. இதிலிருந்து அன்றைய குடவாயில், சோழப்பேரரசின் சிறைக்கோட்டமாக இருந்தது என்று தெரிய வருகிறது. குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

         மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோயிலுக்கு இராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரில் அமிர்த தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் ஆதிவிநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடதுபுறம் தெற்கு நோக்கிய பெரிய நாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறாள். அம்பிகையே பிருகத்துர்க்கையாக வழிபடப் பெறுவதால் கோயிலில் தனி துர்க்கையில்லை.

         உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. திருச்சுற்றில் இடும்பன், தண்டபாணி, கலைமகள் சந்நிதிகள் உள்ளன. உள் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில், மிகவும் பிரபலமான குடவாயில் குமரன் சந்நிதி உள்ளது. மயில் மண்டபம், மகா மண்டபத்துடன் கூடிய சந்நிதியில், வள்ளி-தெய்வானையுடன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் உடையவராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இரு பாடல்கள் உள்ளன.

     நவக்கிரக சந்நிதி, பைரவர், சனீசுவரர் முதலிய சிலாரூபங்கள் வரிசையாகவுள்ளன. சப்தமாதாக்கள் சந்நிதியும் உள்ளது. சண்டேசுவரர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது.

     நடராச சபை அழகானது. நடராசப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டகலாது. நடராசப் பெருமானின் திருமேனியின் பீடத்தில் 10 -11 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் எழுத்துக்கள் வடிவில் "களக்காடுடையார் மாலை தாழ்மார்பன்" என எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் எழுத்துக்களுடன் மத்தியில் இருகரங்கற் கூப்பிய நிலையில் அடியவர் ஒருவரின் உருவமும் உள்ளது. இராஜராஜ சோழனின் காலத்துக் கலைப்பாணியை உடைய இத்திருமேனி இத்தலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள களக்காட்டில் வாழ்ந்த 'மாலைதாழ் மார்பன்' என்பவரால் வடித்து வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.

       சந்நிதிக்கு வெளியில் பக்கவாட்டிலுள்ள காசிவிசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனி செம்மண் நிறத்தில் காணப்படுகிறது. இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலே சென்றால் மூலவர் கோணேசுவரர் மேற்கு நோக்கிய சந்நிதியில் பெரிய சிவலிங்கத் திருமேனி உருவில் எழுந்தருளியுள்ளார். இறைவன் திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் உள்ளன.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நிலைகொள் தடவாயில் வெண்மணிகள் சங்கங்கள் ஈனும் குடவாயில் அன்பர் குறிப்பே" என்று போற்றி உள்ளார்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 901
போற்றிஇசைத்துப் புறம்போந்துஅங்கு உறையும் நாளில்,
         பூழியன்முன் புன்சமயத்து அமணர் தம்மோடு
ஏற்றபெரு வாதின்கண் எரியின் வேவாப்
         பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி,
ஆற்றவும்அங்கு அருள்பெற்றுப் போந்து முன்னம்
         அணைந்தபதி களும்இறைஞ்சி, அன்பர் சூழ
நால்திசையும் பரவுதிரு நள்ளாறு எய்தி,
         நாடுஉடைநா யகர்கோயில் நண்ணினாரே.

         பொழிப்புரை : இங்ஙனம் திருக்கொள்ளம்பூதூர் இறைவரைப் போற்றி, வெளியில் வந்து, அப்பதியில் தங்கியிருந்த நாள்களில், பாண்டியனின் முன்னிலையில், புன்மையான சமயத்தவரான சமணர்களுடன் மேற்கொண்ட பெரிய வாதத்தில், தீயில் வேகாமல் இருந்து வெற்றி தந்த திருப்பதிகத்தின் தலைவரான திருநள்ளாற்றின் இறைவரை வணங்க வேண்டி, வழியில் முன்சென்று வணங்கிய பதிகளையும் திரும்பவும் வணங்கி, அன்பர் கூட்டம் சூழ்ந்துவரச் சென்று, நாற்றிசையும் போற்ற வரும் திருநள்ளாற்றைச் சார்ந்து, நாடுடை நாயகரின் கோயிலை ஞானசம்பந்தர் அடைந்தார்.

         முன் அணைந்த பதிகளாவன: திருக்குடவாயில், திருவாஞ்சியம், திருவம்பர், திருப்புகலூர் முதலாயினவாகலாம். நாடுடை நாயகர் - இறைவரின் பெயர் என்பர் சிவக்கவிமணியார்.  திருக் குடவாயிலில் அருளிய திருப்பதிகங்கள் இரண்டு.


2.022 திருக்குடவாயில்               பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
திகழும் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான், அடியார் புகல
மகிழும் பெருமான், குடவாயின் மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.

         பொழிப்புரை :குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், எல்லோராலும் அறியப்பெறும் திருமால், பிரமன் ஆகியோரால் புகழ்ந்து போற்றப்படும் தலைவனும், அடியவர்கள் தன்னைத் துதித்துப் போற்ற மகிழும் பெருமானும் ஆவான்.


பாடல் எண் : 2
ஓடும் நதியும் மதியோடு உரகம்
சூடுஞ் சடையன், விடைதொல் கொடிமேல்
கூடும் குழகன், குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.

         பொழிப்புரை :குடவாயிலில் நீடி விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான் பெருகி ஓடி வந்த கங்கையையும், பிறை மதியையும், பாம்பையும் சூடிய சடையை உடையவன். பழமையான தனது கொடியில் விடை இலச்சினை பொருந்தியவன். இளமைத் தோற்றம் உடையவன்.


பாடல் எண் : 3
கலையான், மறையான், கனல்ஏந் துகையான்,
மலையாள் அவள்பாகம் மகிழ்ந்த பிரான்,
கொலைஆர் சிலையான், குடவா யில்தனில்
நிலைஆர் பெருங்கோ யில்நிலா யவனே.

         பொழிப்புரை :குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்து விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், பீதாம்பர ஆடையணிந்த திருமால், வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும், கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும், அறக்கருணைபுரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணைபுரிய, கொலைத்தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன்.


பாடல் எண் : 4
சுலவுஞம் சடையான், சுடுகாடு இடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடம்
குலவும் குழகன், குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.

         பொழிப்புரை :குடவாயிலில் விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன், அழகிய தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழச் சுடுகாட்டை ஆடுகளமாகக்கொண்டு நடம்புரியும் இளையோன்.


பாடல் எண் : 5
என்தன் உளமேவி இருந்த பிரான்,
கன்றல் மணிபோல் மிடறன், கயிலைக்
குன்றன், குழகன், குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.

         பொழிப்புரை :குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய் நிற்கும் பெருங்கோயிலில் நிலவும் பெருமான், என் உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவன் ஆவான். ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினன். கயிலாய மலையில் உறைபவன்.


பாடல் எண் : 6
அலைசேர் புனலன், அனலன், அமலன்,
தலைசேர் பலியன், சதுரன், விதிரும்
கொலைசேர் படையன், குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.

         பொழிப்புரை :குடவாயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவன்: அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன்: அனல் ஏந்தியவன்: தலையோட்டில் பலி பெறுபவன்: சதுரப்பாடு உடையவன்: நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன்.


பாடல் எண் : 7
அறைஆர் கழலன், அழலன், இயலின்
பறையாழ் முழவும் மறைபாட நடம்
குறையா அழகன், குடவா யில்தனில்
நிறைஆர் பெருங்கோ யில்நிலா யவனே.

         பொழிப்புரை :குடவாயிலில் நிறைவாக அமைந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவன், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவன்: அழல் ஏந்தியவன்: இசைமரபுடன் கூடிய பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட நடனமாடும் அழகன்.


பாடல் எண் : 8
வரைஆர் திரள்தோள் அரக்கன் மடிய
வரைஆர ஒர்கால் விரல்வைத் தபிரான்,
வரைஆர் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரைஅர் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

         பொழிப்புரை :மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயிலில் நிலைபெற்ற கயிலைமலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் இறைவன், மலை போன்று திரண்ட தோள்களை உடைய இராவணன் மடியுமாறு அவன் பெயர்த்த கயிலைமலை அவன்மீது அழுந்திப் பொருந்தத் தன் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவான்.


பாடல் எண் : 9
பொன்ஒப் பவனும் புயல்ஒப் பவனும்
தன்ஒப்பு அறியாத் தழலாய் நிமிர்ந்தான்,
கொன்னல் படையான், குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

         பொழிப்புரை :குடவாயிலில் நிலை பெற்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் பெருமான், பொன்னிறத்தினனாகிய பிரமனும், புயல் நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமையாகாதவனாய்த் தழலுருவில் உயர்ந்து தோன்றியவன், கொல்லும் தொழில் புரியும் நல்ல படைக்கலன்களை ஏந்தியவன்.


பாடல் எண் : 10
வெயிலின் நிலையார், விரிபோர் வையினார்,
பயிலும் உரையே பகர்பா விகள்பால்
குயிலன், குழகன், குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யில்உயர்ந் தவனே.

         பொழிப்புரை :குடவாயிலில் உயர்ந்துள்ள பெருங்கோயிலில் உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன், வெயிலில் காய்பவராகிய சமணர்கள், விரித்துப் போர்த்த போர்வையினராகிய புத்தர்கள் ஆகிய சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும் பாவிகள்பால் பதியாதவன்; இளமையான தோற்றத்தை உடையவன்.


பாடல் எண் : 11
கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத்
தடம்ஆர் புகலித் தமிழார் விரகன்
வடஆர் தமிழ்வல் லவர்நல் லவரே

         பொழிப்புரை :வேகம் வாய்ந்த ஆற்றுநீரின் வளம் உடைய குட வாயில் நகரில் விளங்கும் நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவனை , நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியின னாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அருளிய மாலையாக அமைந்த இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர் .

                                             திருச்சிற்றம்பலம்


2.058 திருக்குடவாயில்                    பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கலைவாழும் அங்கையீர், கொங்கைஆருங் கருங்கூந்தல்
அலைவாழும் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்,
குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்கும் குடவாயில்
நிலைவாழும் கோயிலே கோயிலாக நின்றீரே.

         பொழிப்புரை :மான் வாழும் கையினை உடையவரே! மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய கங்கை தங்கிய செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் அணிந்தவரே! வாழை, குலைகளைத் தந்தும், கமுகு பொன்னையும் பவளத்தையும் போலப் பழுத்தும் பயன் தந்தும் வளம் செய்யும் குடவாயிலில் நிலைத்து விளங்கும் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 2
அடிஆர்ந்த பைங்கழலும் சிலம்பும்ஆர்ப்ப அங்கையில்
செடிஆர்ந்த வெண்தலைஒன்று ஏந்திஉலகம் பலிதேர்வீர்,
குடிஆர்ந்த மாமறையோர் குலாவிஏத்தும் குடவாயில்
படிஆர்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.

         பொழிப்புரை :திருவடிகளில் கட்டிய புதிய கழலும் சிலம்பும், ஆர்ப்ப, அகங்கையில் முடைநாற்றம் பொருந்திய வெண்டலை ஒன்றையேந்தி உலகம் முழுதும் திரிந்து பலிஏற்பவரே! குடியாக உள்ள சிறந்த மறையோர் கொண்டாடி ஏத்தும் குடவாயிலில் படிகள் அமைந்த உயர்ந்த மாடக் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 3
கழல்ஆர்பூம் பாதத்தீர், ஓதக்கடலில் விடம்உண்டுஅன்று
அழல்ஆரும் கண்டத்தீர், அண்டர்போற்றும் அளவினீர்,
குழல்ஆர வண்டுஇனங்கள் கீதத்துஒலிசெய் குடவாயில்
நிழல்ஆர்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

         பொழிப்புரை :கழல் அணிந்த அழகிய திருவடியை உடையவரே! முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை உண்டு அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில் நிறுத்தியவரே! தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர் கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி செய்யும் குடவாயிலில் ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர்.

 
பாடல் எண் : 4
மறிஆரும் கைத்தலத்தீர், மங்கைபாகம் ஆகச்சேர்ந்து,
எறிஆரும் மாமழுவும் எரியும்ஏந்தும் கொள்கையீர்,
குறிஆர வண்டுஇனங்கள் தேன்மிழற்றும் குடவாயில்
நெறிஆரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

         பொழிப்புரை :மான் பொருந்திய கையினரே! உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட மழுவையும் அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித் தேன் உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள, முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு வாழ்கின்றீர்.


பாடல் எண் : 5
இழைஆர்ந்த கோவணமும் கீளும்எழில்ஆர் உடையாகப்
பிழையாத சூலம்பெய்து ஆடல்பாடல் பேணினீர்,
குழைஆரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவுஆர்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.

         பொழிப்புரை :நூலிழையால் இயன்ற கோவணம் கீள் ஆகியவற்றை அழகிய உடைகளாகப் பூண்டு, கையில் தப்பாத சூலம் ஏந்தி ஆடல் பாடல்களை விரும்புபவரே! தளிர்கள் நிறைந்த பசிய பொழில்களும் வயலும் சூழ்ந்த குடவாயிலில் விழாக்கள் பலநிகழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு பெருமிதம் உற்றீர்.

 
பாடல் எண் : 6
அரவுஆர்ந்த திருமேனி யானவெண்ணீறு ஆடினீர்,
இரவுஆர்ந்த பெய்பலிகொண்டு, இமையோர்ஏத்த நஞ்சுஉண்டீர்,
குரவுஆர்ந்த பூஞ்சோலை வாசம்வீசும் குடவாயில்
திருஆர்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

         பொழிப்புரை :பாம்புகளைப் பூண்டுள்ள திருமேனியில் நன்கு அமைந்த திருநீற்றை அபிடேகமாகக் கொண்டவரே! இரத்தலை மேற்கொண்டு பிறர் இடும்பிச்சை ஏற்று இமையோர் பரவ நஞ்சுண்டவரே! குராமரங்கள் நிறைந்துள்ள பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் உள்ள அழகு பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.


பாடல் எண் : 7
பாடல்ஆர் வாய்மொழியீர், பைங்கண்வெள்ளேறு ஊர்தியீர்,
ஆடல்ஆர் மாநடத்தீர், அரிவைபோற்றும் ஆற்றலீர்,
கோடல்ஆர் தும்பிமுரன்று இசைமிழற்றும் குடவாயில்
நீடல்ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

         பொழிப்புரை :வேதப் பாடல்களில் அமைந்த உண்மை வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை ஊர்தியாக உடையவரே!ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே! உமையம்மை போற்றும் ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற் பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில் நீண்டுயர்ந்த கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.


பாடல் எண் : 8
கொங்குஆர்ந்த பைங்கமலத்து அயனும், குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர், இலங்கைக்கோன்
தம்காதல் மாமுடியும் தாளும் அடர்த்தீர், குடவாயில்
பங்குஆர்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.

         பொழிப்புரை :தேன் பொருந்திய பசிய தாமரையில் மேவும் பிரமனும், குறள் வடிவாய்ச் சென்றிருந்து பின் உயர்ந்த திருமாலும் வாய் திறந்து தளர்ச்சியுற அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர்.


பாடல் எண் : 9
* * * * *
பாடல் எண் : 10
தூசுஆர்ந்த சாக்கியரும் தூய்மையில்லாச் சமணரும்
ஏசுஆர்ந்த புன்மொழிநீத்து, எழில்கொள்மாடக் குடவாயில்
ஆசாரம் செய்மறையோர் அளவில்குன்றாது அடிபோற்றத்
தேசுஆர்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

         பொழிப்புரை :அழுக்கேறிய உடையினராகிய சாக்கியரும் தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன்மொழிகளை வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில், தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில் குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர்.


பாடல் எண் : 11
நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயில் கோயில்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாடல் இவைவல்லார்
தளர்வுஆன தான்ஒழிய, தகுசீர்வானத்து இருப்பாரே.

         பொழிப்புரை :தண்மையான நீரால் சூழப்பட்ட காழிப்பதியினனாகிய ஞானசம்பந்தன் குளிர்ந்த அழகிய குடவாயிற் கோயிலில் மேவிய இறைவனை, விளங்கும் தமிழ்மாலையாக உரைத்த பாடல்களாகிய இவற்றை வல்லவர் தளர்ச்சிகள் தாமே நீங்கத் தக்க புகழுடைய வானுலகில் இருப்பர்.


                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...