வெள்ளிகரம் - 0671. சிகரிகள் இடிய





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சிகரிகள் இடிய (வெள்ளிகரம்)

முருகா!
உனது திருப்புகழை வாயாரப் பாடி,
மனமாரத் துதித்தால் ஒழிய,
உனது திருவருளைப் பெறுதல் கூடாது.


தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதான


சிகரிக ளிடிய நடநவில் கலவி
     செவ்வி மலர்க்க டம்பு ...... சிறுவாள்வேல்

திருமுக சமுக சததள முளரி
     திவ்ய கரத்தி ணங்கு ...... பொருசேவல்

அகிலடி பறிய எறிதிரை யருவி
     ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவாஎன்

றகிலமு முணர மொழிதரு மொழியி
     னல்லது பொற்பதங்கள் ...... பெறலாமோ

நிகரிட அரிய சிவசுத பரம
     நிர்வச னப்ர சங்க ...... குருநாதா

நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
     நெல்லி மரத்த மர்ந்த ...... அபிராம

வெகுமுக ககன நதிமதி யிதழி
     வில்வ முடித்த நம்பர் ...... பெருவாழ்வே

விகசித கமல பரிமள கமல
     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சிகரிகள் இடிய நடம் நவில் கலவி,
     செவ்வி மலர்க் கடம்பு, ...... சிறுவாள், வேல்,

திருமுக சமுக! சததள முளரி,
     திவ்ய கரத்து இணங்கு ...... பொருசேவல்,

அகில் அடி பறிய எறிதிரை அருவி,
     ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவா, என்று

அகிலமும் உணர மொழி தரு மொழியின்
     அல்லது, பொன் பதங்கள் ...... பெறல் ஆமோ?

நிகர் இட அரிய சிவ சுத! பரம!
     நிர் வசன ப்ரசங்க ...... குருநாதா!

நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய
     நெல்லி மரத்து அமர்ந்த ...... அபிராம!

வெகுமுக ககன நதி, மதி, இதழி,
     வில்வம் முடித்த நம்பர் ...... பெருவாழ்வே!

விகசித கமல பரிமள கமல
     வெள்ளிகரத்து அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை


         நிகர் இட அரிய சிவசுத --- ஒப்பிடுதற்கு அரியவரான சிவபரம்பொருளின் திருக்குழந்தையே!

     பரம --- மேலானவரே!

      நிர்வசன ப்ரசங்க குருநாதா --- வாக்குக்கு எட்டாததான பிரணவ உபதேசத்தைச் செய்த குருநாதரே!

      நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம --- பசுக் கூட்டங்களைக் கொண்டு இடையர்கள் செல்லும் வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின் கீழே வீற்றிருந்த அழகரே!

      வெகுமுக ககன நதி, மதி --- ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும்,

      இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே --- கொன்றையையும், வில்வத்தையும் சடையில் தரித்த நம் சிவபெருமானுடைய பெருஞ் செல்வமே!

      விகசித கமல பரிமள கமல --- நறுமணம் மிகுந்த தாமரைகள் நிறைந்து விளங்கும்

      வெள்ளிகரத்து அமர்ந்த பெருமாளே --- வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!

      சிகரிகள் இடிய நடம் நவில் கலவி --- அட்ட குல மலைகளும் பொடிபடும்படியாக நடனமாடும் கலாபத்தை உடைய மயில்,

      செவ்வி மலர்க் கடம்புய, சிறுவாள், வேல் --- அன்றலர்ந்த கடப்பமலர், சிறிய வாள், வேல்,

      திருமுக சமுக சததள முளரி --- நூறு இதழ்த் தாமரை மலர்ந்தது போன்ற அழகுடைய ஆறுதிருமுகங்கள்,

      திவ்ய கரத்து இணங்கு பொரு சேவல் --- தெய்வத் தன்மை விளங்கும் திருக்கரத்திலே பொருந்திய போர் செய்ய வல்ல சேவல், (ஆகிய இவைகள் எல்லாம் பொருந்தியுள்ள)

      அகில் அடி பறிய எறிதிரை அருவி --- அகில் மரத்தின் வேரைப் பறித்து எறியும்படியாக அலைத்து வீசும் அருவிகள் உள்ள,

      ஐவன வெற்பில் வஞ்சி கணவா --- நெல் விளையும் வள்ளிமலையில் தினைப்புனத்தில் இருந்த வஞ்சிக்கொடி போன்றவளான வள்ளிநாயகியின் மணவாளா!

      என்று அகிலமும் உணர மொழிதரு மொழியின் அல்லது --- என்று உலகமெல்லாம் உமது பெருமையை உணர்ந்துகொள்ளுமாறு கூறி வழிபடுகின்ற சொற்களால் அல்லது

      பொன் பதங்கள் பெறல் ஆமோ --- தேவரீரது அழகிய திருவடிகளைப் பெறுதல் கூடுமோ? கூடாது. 


பொழிப்புரை


     ஒப்பிடுதற்கு அரியவரான சிவபவரம்பொருளின் திருக்குழந்தையே!

     மேலானவரே!

         வாக்குக்கு எட்டாததான பிரணவ உபதேசத்தைச் செய்த குருநாதரே!

         பசுக் கூட்டங்களைக் கொண்டு இடையர்கள் செல்லும் வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின் கீழே வீற்றிருந்த அழகரே!

         ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், கொன்றையையும், வில்வத்தையும் சடையில் தரித்த நம் சிவபெருமானுடைய பெருஞ் செல்வமே!

         நறுமணம் மிகுந்த தாமரைகள் நிறைந்து விளங்கும் வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!

         அட்ட குல மலைகளும் பொடிபடும்படியாக நடனமாடும் கலாபத்தை உடைய மயில், அன்றலர்ந்த கடப்பமலர், சிறிய வாள், வேல், நூறு இதழ்த் தாமரை மலர்ந்தது போன்ற அழகுடைய ஆறுதிருமுகங்கள், தெய்வத் தன்மை விளங்கும் திருக்கரத்திலே பொருந்திய போர் செய்ய வல்ல சேவல், (ஆகிய இவைகள் எல்லாம் பொருந்தியுள்ள) அகில் மரத்தின் வேரைப் பறித்து எறியும்படியாக அலைத்து வீசும் அருவிகள் உள்ள,நெல் விளையும் வள்ளிமலையில் தினைப் புனத்தில் இருந்த வஞ்சிக்கொடி போன்றவளான வள்ளிநாயகியின் மணவாளா!

         என்று உலகமெல்லாம் உமது பெருமையை உணர்ந்துகொள்ளுமாறு கூறி வழிபடுகின்ற ணொற்களால் அல்லாது தேவரீரது அழகிய திருவடிகளைப் பெறுதல் கூடுமோ? கூடாது. 


விரிவுரை

சிகரிகள் இடிய நடம் நவில் கலவி ---

தாமரைக் கணான் முதலிய பண்ணவர் தமக்கும்,
ஏம் உறப்படு மறைக்கு எலாம் ஆதி பெற்று இயலும்
ஓம் எனப்படும் குடிலையே ஒப்பிலா முருகன்
மா முகத்துள் ஒன்று ஆம், அவன் தன்மையார் வகுப்பார்.   --- கந்தபுராணம்.

ஒங்காரம் குடிலை ஆகும். அது அறுமுகப் பரம்பொருளின் ஆறுதிருமுகங்களுள் ஒன்று. அந்த "ஓம்" என்னும் குடிலையின் சொரூபமாக மயில் ஆடுகின்றது. மயில் ஆடுகின்ற பொழுது உற்றுக் கவனிக்க இது விளங்கும். அதன் முகத்திலிருந்து தொடங்கி விரிந்துள்ள தோகை வழியே போய் காலில் வந்து முடிந்தால் ஓங்காரமாகும். அவ் ஓங்காரத்தின் நடுவே ஆண்டவன் அருட்ஜோதி மயமாக வீற்றிருக்கின்றனன். இந்த நுட்பத்தை நமது சுவாமிகள், "ஆன தனி மந்த்ர ரூபநிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே" என்கின்றார். பின்வரும் திருப்புகழிலும், மயில் என்பது ஒங்கார வடிவமானது என்றே தெரிவிக்கின்றார்.
 
அரஅர என வநிதைபடு பாடு ஓத அரிது அரிது,
     அமுதமயில் அதுகருதி யாரோடும் இகல்புரிவள்,
     அவசம்உற அவசம்உற ஆர்ஓமல் தரவும் மிக ...... மெலிவு ஆனாள்,
அகுதி இவள் தலையில்விதி, ஆனாலும் விலக அரிது,
     அடிமை கொள உனதுபரம், ஆறாத ஒரு தனிமை
     அவளை அணை தர இனிதின் ஓகார பரியின்மிசை ...... வருவாயே.
                                                                 --- (இரவியென) திருப்புகழ்.

முருகப் பெருமான் ஏறும் பரியாகிய மயிலின் ஆற்றல் அளக்க ஒண்ணாதது.


சக்ரப்ர சண்டகிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டு, க்ரவுஞ்ச சயிலம்
தகர, பெருங் கனகச் சிகரச் சிலம்பும், எழு
தனிவெற்பும், அம்புவியும், எண்

திக்குத் தடம் குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம் பெயரவே,
சேடன்முடி திண்டாட, ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கும் மயிலாம்....            ---   மயில் விருத்தம்.

 
உககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்தது என்று அயன் அஞ்சவே,
ஒருகோடி அண்டர் அண்டங்களும், பாதாள
லோகமும், பொன் குவடு உறும்

வெகுகோடி மலைகளும், அடியினில் தகர்ந்து, இரு
விசும்பிற் பறக்க, விரிநீர்
வேலை சுவற, சுரர் நடுக்கங் கொள, சிறகை
வீசிப் பறக்கும் மயிலாம்....               --- மயில் விருத்தம்.

எம்பெருமான் ஏறும் மயிலின் பெருமையை அடிகளார் மயில் வகுப்பில் விளக்குமாறு காண்க.
 
ஆதவனும் அம்புலியும் ஆசுற விழுங்கி உமிழ்
    ஆலமருவும் பணி               இரண்டும் அழுதே
ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவுள்
    ஆம் என மொழிந்து அகல      வென்று விடுமே; 
ஆர்கலி கடைந்த அமுது வானவர் அருந்த அருள்
    ஆதிபகவன் துயில்              அநந்தன் மணிசேர்
ஆயிரம் இருந்தலைகளாய் விரி பணங்குருதி
    ஆகம் முழுதும் குலைய         வந்து அறையுமே; 

வேதம் முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை
    வீடணன் அருந்தமையன்         மைந்தன் இகலாய்
வீசும் அரவம் சிதறி ஓட, வரு வெங்கலுழன்
    மேல் இடி எனும்படி             முழங்கி விழுமே; 
மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க, நக
    மேவு சரணங்கொடு உலகு      எங்கும் உழுமெ;
வேலி என எண்திசையில் வாழும் உரகம் தளர-
    வே, அழல் எனுஞ்சினம்         உடன்ப டருமே; 

போதினில் இருந்த கலை மாதினை மணந்தஉயர்
    போதனை இரந்து மலர்          கொண்டு முறையே
பூசனை புரிந்து கொடி யாகி மகிழ் ஒன்று துகிர்
    போல் முடி விளங்க வரும் அஞ்சம் அடுமே; 
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
    பூரண கணங்களொடு             வந்து தொழவே
போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் உயிர்
    போயினம் எனும்படி            எதிர்ந்து விழுமே; 

கோதுஅகலும் ஐந்துமலர் வாளி மதனன் பொருவில்
    கோல உடலம் கருகி            வெந்து விழவே
கோபமொடு கண்டவிழி நாதர் அணியும் பணிகள்
    கூடி, மனம் அஞ்சி வளை       சென்று புகவே
கூவி இரவந்தம் உணர் வாழி என நின்று பொரு
    கோழியொடு வென்றி முறை    யும்ப கருமே; 
கோலம்உறு செந்தில் நகர் மேவு குமரன் சரண
    கோகனதம் அன்பொடு           வணங்கு மயிலே.        --- மயில் வகுப்பு.

குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்த்து மேரு, அடியிட  எண்
திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே.      --- கந்தர் அலங்காரம்.      

செவ்வி மலர்க் கடம்புய, சிறுவாள், வேல் ---

அன்றலர்ந்த கடப்ப மலர், சிறிய வாள், வேல். கடப்ப பலரை முருகப் பெருமான் சூடிக் கொள்வார். அது அவருக்கு உகந்த மலர். சிறியவாள் எனப்படும் உடைவாள், வேல் ஆகியவை எம்பெருமானுக்கு ஆயுதங்கள்.

திருமுக சமுக சததள முளரி ---

முகத்தைத் தாமரை மலருக்கு ஒப்பிடுவர். முருகப் பெருமானுடைய திருமுக மண்டலம் நூறு இதழ்த் தாமரை போன்று அழகுற விளங்குகின்றது.
  
திவ்ய கரத்து இணங்கு பொருசேவல் ---

தெய்வத் தன்மை விளங்கும் திருக்கரத்திலே பொருந்தி உள்ள கொடியிலே சேவல் அமைந்து உள்ளது. சேவல் என்னும் சொல்லுக்கு "பாதுகாப்பு" என்றும் பொருள் உண்டு. சேவல் எம்பெருமான் திருக்கரத்தில் உள்ள கொடியிலே விளங்கி, நாத தத்துவமாக நின்று உயிர்களை உய்விக்கும்.

இந்த உண்மையை அடிகளார் சேவல் விருத்தத்தில் பாடி அருள்வதை அநுபவிப்போமாக.

உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடர்அகல,
உரிய பரகதி தெரியவே,
உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும்,
இருள்கள் மிடி கெட அருளியே,

கலகம் இடும் அலகை, குறள், மிகுபணிகள் வலிமையொடு
கடினம் உற வரில், அவைகளைக்
கண்ணைப் பிடுங்கி, உடல் தன்னைப் பிளந்து, சிற
கைக்கொட்டி நின்று ஆடுமாம்...          --- சேவல் விருத்தம்.

கரிமுரட்டு அடிவலைக் கயிறு எடுத்து எயிறு பற்-
களை இறுக்கியும் முறைத்து,
கலகம்இட்டு இயமன் முன்கரம் உறத் துடரும் அக்
காலத்தில், வேலும் மயிலும்

குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரல் ஒலித்து, அடியர் இடரை
குலைத்து அலறு மூக்கில் சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்டவருமாம்...         --- சேவல் விருத்தம்.


பூவில் அயன் வாசவன் முராரி முனிவோர்அமரர்
பூசனை செய்வோர் மகிழவே,
பூதரமும் எழுகடலும் ஆட, அமுது ஊற, அனு
போக பதினால் உலகமும்

தாவு புகழ் மீறிட, நிசாசரர்கள் மாள, வரு
தான தவ நூல் தழையவே,
தாள் வலியதான பல பேய்கள் அஞ்ச, சிறகு
கொட்டிக் குரல் பயிலுமாம்...             --- சேவல் விருத்தம்.


அகில் அடி பறிய எறிதிரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா ---

மலைமுகட்டில் பெய்கின்ற மழையானது மலைக் குன்றுகளின் வழியே கீழ் இறங்கிப் பாயும். அப்போது அது அருவியாக வேகமாக நிலத்தில் விழும். வருகின்ற வேகத்தில் வழியில் உள்ள அகில் மரங்களை வேரோடு அகழ்ந்து சுமந்துகொண்டும், பெரிய சந்தன மரத்தைச் சாய்த்துத் தள்ளியும், சிறுமூங்கில்களை வேரோடு பிளந்தும் விழும்.

"சந்தம், ஆர், அகிலொடு, சாதித் தேக்கம் மரம், உந்து மா முகலியின் கரை" என்று திருஞானசம்பந்தப் பெருமான் திருக்காளத்தித் திருப்பதிகத்தில் பாடி உள்ளது காண்க.

திருமுருகாற்றுப்படையில், முருகப் பெருமான் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பழமுதிர்சோலையின் அழகினை, நக்கீரதேவ நாயனார் கூறுமாறு காண்க.

வேறு பஃறுகிலின் நுடங்கி, அகில்சுமந்து,
ஆர முழுமுதல் உருட்டி, வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர் கீண்டு,
விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய, நன்பல

ஆசினி முதுசுளை கலாவ, மீமிசை
நாக நறுமலர் உதிர, யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்ப, பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசி,  பெரும்களிற்று
முத்து உடை வான்கோடு தழீஇத் தத்துற்று,

நன்பொன் மணிநிறம் கிளர, பொன்கொழியா,
வாழை முழுமுதல் துமிய, தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கி,
கறிக்கொடிக் கரும்துணர் சாய, பொறிப்புற
மடநடை மஞ்ஞை  பலவுடன் வெரீஇ,

கோழி வயப்பெடை இரிய, கேழலோடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கை குடாஅடி உளியம்,
பெரும்கடல் விடர்அளை செறிய, கரும்கோட்டு
ஆமா நல்ஏறு சிலைப்ப, சேண்நின்று
        
இழும்என இழிதரும் அருவி,
பழமுதிர் சோலை மலை கிழவோனே.

இதன் பொருள் --- "முருகன் இவ்வாறு ஆங்காங்கே தங்கி விளங்கி இருக்கும் பல இடங்களுள் பழமுதிர்சோலை என்னும் திருத்தலமும் ஒன்று. அங்குள்ள மலையினின்று பெருகும் அருவி, பல நிறம் பொருந்திய ஆடைகளைப் போல ஒடுங்கி அசைந்து வரும். அகில் மரங்களைச் சுமந்து வரும். சந்தன மரங்களை உருட்டிக் கொண்டு வரும். மூங்கில் கிளைகளைப் பறிக்கும். மலைமேல் தொடுக்கப்பட்ட தேன் கூடுகளைச் சிதைக்கும். ஆசினிப் பலாவின் முதிர்ந்த சுளைகளும், சுரபுன்னை மரத்துப் பூக்களும் அவ்வருவி நீரில் உதிர்ந்து விழும். ஆணும் பெண்ணும் ஆகிட கருங்குரங்குகள் நடுங்கவும்,  யைனைகள் குளிரால் ஒடுங்கவும், அவ் அருவி வெள்ளம் அலை வீசிச் செல்லும். பெரிய களிறுகளின் முத்து உடைய தந்தங்களை வாரி எடுத்துப் பொன்னும் மணியும் கொழித்துக் கொண்டு, அருவி வெள்ளம் தாவிக் குதித்து ஓடும். அதுபோது அருவி நீர்ப்பெருக்கு வாழை மரங்களைச் சாய்க்கும். தெங்கங் குலைகளை உருட்டும்.  கரடிகளும் பள்றிகளும் கோழிகளை அஞ்சிக் கல்பிளவாகிய குகைகளில் ஒளிந்து கொள்ளச் செய்யும்.  காட்டெருமைக் கிடாய்கள் கதறும்படி உயரத்தில் இருந்து, இழும் என்ற ஓசை உண்டாகும்படி மலைமேல் இருந்து அருவிகள் கீழே விழும்.  இத்தகைய பல அருவிகளை உடைய பழமுதிர்சோலை என்னும் தலத்திற்கு உரிமை உடையவன் முருகன்".

இத்தகு இயற்கை வளம் நிறைந்த வள்ளிமலையில் ஐவனம் என்னும் நெல் விளையும். அந்த மலையில் வாழும் வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, அவதரித்து, வேடர்களால் வளர்க்கப் பெற்று, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார். தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். நாரத மாமுனிவர் அறிவிக்க, முருகப் பெருமான் வள்ளிமலைக்கு எழுந்தருளி, பல அருள் விளை ஆடல்கள் புரிந்து வள்ளிநாகியைத் திருமணம் பெணர்ந்தார்.

        
அகிலமும் உணர மொழிதரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறல் ஆமோ ---

அட்டகுல மலைகளும் பொடிபடும்படியாக நடனமாடும், தோகைமயிலை வாகனமாக உடையவரே! அன்றலர்ந்த கடப்பமலர் மாலையை அணிபவரே!, உடைவாள் மற்றும் வேலாயுதத்தைத் திருக்கரங்களில் தாங்கியவரே!  நூறு இதழ்த் தாமரை மலர்ந்த்து போன்ற அழகுடைய ஆறுதிருமுகங்களை உடையவரே! தெய்வத் தன்மை விளங்கும் திருக்கரத்திலே பொருந்தியுள்ள சேவல் கொடியினரே!  வள்ளிநாயகியின் மணவாளா! என்றெல்லாம் முருகப் பெருமானைப் புகழ்ந்து போற்றிப் பாடி வழிபட்டால் ஒழிய, அவரது திருவருளைப் பெறுதல் கூடாது என்கின்றார் சுவாமிகள்.

பாலறாவாயராகிய நம் திருஞானசம்பந்த நாயனார் திருப்பெண்ணாகடத்துத் திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தைத் தொழுது, திருவரத்துறை என்னும் அரும்பதியை வணங்க விரும்பிச் செல்லும்போது, இதற்கு முன்பு எல்லாம் தமது திருத்தாதையரது தோளின் மேல் அமர்ந்தருளும் நியமம் ஒழிந்து, தமது பாதபங்கயம் சிவந்து வருந்த, மெல்ல மெல்ல நடந்து சென்று மாறன்பாடி என்னுந் திருத்தலத்தை அடையும்போது அப்பரம குருமூர்த்தியின் திருவடித் தளர்வினைக் கண்டு வருந்தினான் போல் சூரியன் மேற்கடலில் வீழ்ந்தனன்.

வெம்பந்தம் தீர்த்து உலகை ஆளவந்த நம் சம்பந்தப் பிள்ளையார், அன்றிரவு அப்பதியில் திருவஞ்செழுத்தை ஓதித் தங்கினார். திருவரத்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், திருஞானசம்பந்தப் பெருமானுடைய திருவடியின் வருத்தத்தைப் பொறாதவராய், ஏறுதற்கு முத்துச் சிவிகையும், மணிக்குடையும், கூறி ஊதக் குலவு பொற்சின்னங்களும் அமைத்துக் கொடுக்கத் திருவுளம் கொண்டு, அவ்வூர் வாழும் மேலோர் கனவில் தோன்றி, “ஞானசம்பந்தன் நம்பால் வருகின்றான்; அவனுக்குத் தருமாறு முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் நம் திருக்கோயிலில் வைத்திருக்கின்றோம். நீங்கள் அவைகளை அவன்பால் கொண்டு கொடுங்கள்” என்று பணித்தருளினார்.

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்,
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆள சின்னம் நம்பால் கொண்டு, அருங்கலைக்
கோன், அவன்பால் அணைந்து கொடும் என.   --- பெரியபுராணம்.

அவர்கள் ஆலமுண்ட அண்ணலின் திருவருளையும் திருஞானசம்பந்தருடைய பெருமையையும் உன்னி உள்ளத்தில் உவகையும் வியப்பும் எய்தி, நீராடி விடியற்காலை திருக்கோயிலின் திருக்கதவம் திறந்து பார்க்க, அவைகள் அவ்வாறிருக்கக் கண்டு மிகவும் விம்மிதமுற்று, அவைகளை எடுத்துக் கொண்டு, திருஞானசம்பந்தப் பெருமானை எதிர்கொண்டு சென்றனர்.

சிவபெருமான் திருஞானசம்பந்தர் கனவிலும் சென்று, “குழந்தாய்! முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் உனக்குத் தந்தனம். அவைகளைக் கொண்டு நம் பதிகள் தோறும் வருக” என்று கட்டளை இட்டருளினார். திருஞானசம்பந்த அடிகள் கண் துயிலுணர்ந்து, எந்தையாரது எளிவந்த வான் கருணையை உன்னி, உள்ளம் உவந்து, நீராடி திருவரத்துறைக்கு வருவாராயினார்.

அவ்வூர் வாசிகள் எதிர்கொண்டு திருவடியில் வீழ்ந்து பணிந்து பாம்பணிந்த பரமனது கட்டளையை விண்ணப்பித்தனர். திருஞானசம்பந்த மூர்த்தி அவைகள் இறைவன் திருவருள் மயமாதலால் சோதி முத்தின் சிவிகையை வலம் வந்து நிலமுறப் பணிந்து, அச் சிவிகையின் ஒளி வெண்ணீறு போன்று விளங்கலால் அதனையும் துதித்து, அச் சிவிகை திருவருள் வடிவாதலின் திருவஞ்செழுத்தை ஓதி எல்லா உலகமும் ஈடேற அதன் மீது எழுந்தருளினார். முத்துச் சின்னங்கள் முழங்கின; அடியவர் அரகர முழக்கஞ் செய்தனர். முத்துக் குடைகள் நிழற்றின. வேதங்கள் முழங்கின; புங்கவர் பூமழை பொழிந்தனர்.

பல்குவெண் கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றுஒளி யுடன்பொலி புகலி காவலனார்
அல்கு வெள்வளை அலைத்து எழு மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி உதித்தென வந்தார். --- பெரியபுராணம்

இதுபொழுது திருஞானசம்பந்தப் பெருமானார், திருவரத்துறை இறைவர் அருளை உணர்ந்து, அவரைப் போற்றிப் பாடிய திருப்பதிகத்தினைக் காண்போம்.

                                       திருச்சிற்றம்பலம்

எந்தை, ஈசன்,எம்பெருமான், ஏறுஅமர் கடவுள் என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்றுகை கூடுவது அன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

இதன் பொருள்---

மணம் பொருந்திய மலர்களை உந்திக்கொண்டு பெருகிவரும் நீரை உடைய நிவா நதிக்கரை மேல் அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருளானது, எம்தந்தை, ஈசன், பெரியோன், ஆன் ஏற்றை ஏறி வருவோன் என்று அவன் பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி வழிபடவல்லவர்கட்கு அல்லால், ஏனையோர்க்குக் கைகூடாதது .


ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை அணிந்தஎம் பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச்செல்வது அன்றால்,
வாரி மாமலர் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.


பிணி கலந்தபுன் சடைமேல் பிறையணி சிவன்எனப் பேணிப்
பணி கலந்துசெய் யாத பாவிகள் தொழச்செல்வது அன்றால்,
மணி கலந்துபொன் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணி கலந்தநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.


துன்னஆடை ஒன்று உடுத்து, தூயவெண் ணீற்றினர் ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றுங்கை கூடுவது அன்றால்,
பொன்னும் மாமணி உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்னம் ஆரும்நெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே


வெருகு உரிஞ்சுவெங் காட்டில் ஆடிய விமலன்என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கை கூடுவது அன்றால்,
முருகு உரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்துஇழி நிவாவந்து
அருகு உரிஞ்சுநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.


உரவு நீர்சடைக் கரந்த ஒருவன் என்று உள்குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்துகை கூடுவது அன்றால்,
குரவ நீடுஉயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவம் ஆரும்நெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.


நீல மாமணி மிடற்று நீறு அணி சிவன் எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால், சென்றுகை கூடுவது அன்றால்,
கோல மாமலர் உந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலும் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.


செழுந்தண் மால்வரை எடுத்த செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான், போற்றி என்பார்க்கு அல்லது அருளான்,
கொழுங்க னிசுமந்து உந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்தும் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம்அருளே.


நுணங்கு நூல்அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்துகை கூடுவது அன்றால்
மணங்க மழ்ந்துபொன் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்கும் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம்  அருளே.


சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்
பாக்கியப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வது அன்றால்,
பூக்க மழ்ந்துபொன் உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம்அருளே.


கறையின் ஆர்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை,
முறைமை யால்சொன்ன பாடல் மொழியும் மாந்தர், தம் வினைபோய்ப்
பறையும் ஐயுறவு இல்லைப் பாட்டுஇவை பத்தும்வல் லார்க்கே.

                                   திருச்சிற்றம்பலம்
  
நிர்வசன ப்ரசங்க குருநாதா ---

சொல்லால் பிரசங்கம் செய்வது ஒன்று. அது எல்லோரும் செய்யக் கூடியது. எல்லோரும் கேட்கக் கூடியது.

பக்குவ ஆன்மாக்களுக்கு இறைவன் குருநாதனாக மானிடச் சட்டை தாங்கி வந்து புரிவது நிர்வசனப் பிரசங்கம் ஆகும்.

நாட அரும் சுடர் தானா ஓது,
     சிவாகமங்களின் நானா பேத
          அநாத! தந்த்ர கலா மா போதக! ...... வடிவாகி
நால் விதம் தரு வேதா! வேதமும்
     நாடி நின்றதொர் மாயா தீத,
          மனோலயம் தரு நாதா! ஆறு இரு ...... புயவேளே!

வாள் தயங்கிய வேலாலே பொரு
     சூர் தடிந்து அருள் வீரா! மாமயில்
          ஏறு கந்த! விநோதா! கூறு என, ...... அரனார்முன்
வாசகம் பிறவாத ஓர் ஞான
     சுக உதயம் புகல் வாசா தேசிக!
          மாடை அம்பதி வாழ்வே! தேவர்கள் ...... பெருமாளே.
                                                                     ---  (தோடுறும்) திருப்புகழ்.

நினைவாலும் சொல்லாலும் உணரவொண்ணாத பிரணவத்தின் பெருமையை, சனகாதி முனிவர்களுக்கு, கல்லால மரத்தின் நிழலில் எழுந்தருளி இருந்து, சொல்ல அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தி, சொரூப அனுபூதி காட்டி அருளியவர் சிவபெருமான். அது சொல்லாமல் சொன்ன நிலை. நிர்வசனப் பிரசங்கம்.

கல்லாலின் புடை அமர்ந்து, நான்மறை, ஆறு    
     அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த
     பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்த தனை
     இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
     நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.     --- திருவிளையாடல் புராணம்.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுக வள்ளல் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தமாதனகிரியின் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி,

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையான் ஆதல், உரிமைக் குறித்து ஆதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் பிரமதேவனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவன் ஆவது எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது.  நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர்.

குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசம் எல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.       --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே”                    --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”                  --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
                                                                                 --- (கொடியனைய) திருப்புகழ்.

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....                                            --- (விறல்மாரன்) திருப்புகழ்.

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா...                   --- திருப்புகழ்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                                                --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.   ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக.

 `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.
  
பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.
 
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
                                                                              --- அபிராமி அந்தாதி.

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.

நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம ---

பசுக் கூட்டங்களைக் கொண்டு இடையர்கள் செல்லும் வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின் கீழே வீற்றிருந்த அழகரே என்கின்றார் அடிகளார். நெல்லியைத் தலமரமாகக் கொண்ட திருத்தலங்கள் உள்ளன.

கருத்துரை

முருகா! உனது திருப்புகழை வாயாரப் பாடி மனமாரத் துதித்தால் ஒழிய, உனது திருவருளைப் பெறுதல் கூடாது.


















                 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...