வெள்ளிகரம் - 0675. வதன சரோருக





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வதன சரோருக (வெள்ளிகரம்)

முருகா!
தேவரீரைத் துதித்து,
பிறவியை அறுத்துக் கொள்ள அருள் புரிவாய்.


தனன தனாதன தனன தனாதன
         தய்ய தனத்த தந்த
           தானாதன தானந் தானன ...... தந்ததான


வதன சரோருக நயன சிலீமுக
         வள்ளி புனத்தில் நின்று
          வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும்

வயலு மொரேவிடை யெனவொரு காவிடை
         வல்லப மற்றழிந்து
          மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே

இதவிய காணிவை ததையென வேடுவ
         னெய்திடு மெச்சில் தின்று
          லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும்

இளையவ மூதுரை மலைகிழ வோனென
         வெள்ள மெனக் கலந்து
          நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான்

கதைகன சாபதி கிரிவளை வாளொடு
         கைவசி வித்த நந்த
          கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக்

கயிறொ டுலூகல முருள வுலாவிய
         கள்வ னறப் பயந்து
          ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள

விதரண மாவலி வெருவ மகாவ்ருத
         வெள்ள வெளுக்க நின்ற
           நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே

விளைவய லூடிடை வளைவிளை யாடிய
         வெள்ளி நகர்க் கமர்ந்த
          வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


வதன சரோருக நயன சிலீமுக
         வள்ளி புனத்தில் நின்று
          வாராய், பதி காதம் காத அரை, ...... ஒன்றும் ஊரும்,

வயலும் ஒரே இடை, என ஒரு காவிடை
         வல்லபம் அற்று அழிந்து,
          மாலாய் மடல் ஏறும் காமுக! ...... எம்பிரானே!

இதவிய காண் இவை ததை என வேடுவன்
         எய்திடும் எச்சில் தின்று
          லீலாசலம் ஆடும் தூயவன் ...... மைந்த! நாளும்

இளையவ! மூதுரை மலை கிழவோன் என,
         வெள்ளம் எனக் கலந்து
          நூறு ஆயிர பேதம் சாதம் ...... ஒழிந்தவா தான்.

கதை, கன சாப, திகிரி, வளை, வாளொடு
         கை வசிவித்த, அநந்த
          கோபால மகீபன் தேவி  ...... மகிழ்ந்து வாழக்

கயிறொடு உலூகலம் உருள உலாவிய
         கள்வன் அறப் பயந்து
          ஆகாய கபாலம் பீற  ...... நிமிர்ந்து, நீள

விதரண மாவலி வெருவ, மகாவ்ருத
         வெள்ளம் வெளுக்க நின்ற
           நாராயண மாமன் சேயை  ...... முனிந்த கோவே!

விளை வயல் ஊடு இடை வளை விளையாடிய
         வெள்ளி நகர்க்கு அமர்ந்த
          வேலாயுத! மேவும் தேவர்கள் ...... தம்பிரானே.


பதவுரை


      கதை --- கதாயுதமும்,

     கன சாப --- பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும்,

     திகிரி --- சுதர்சனம் என்னும் சக்கரமும்,

     வளை --- பாஞ்சசன்னியம் என்னும் சங்கும்,

     வாளொடு --- நாந்தகம் என்னும் வாளும்,

     கை வசிவித்த --- (ஆகிய பஞ்சாயுதங்களை) திருக்கைகளில் தாங்கியவரும்,

      நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ --- நந்த கோபாலன் என்ற கோகுலத்து மன்னனது தேவியாகிய யசோதை பிராட்டி மகிழ்ந்து வாழ

      கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் --- கட்டப்பெற்ற கயிறோடு உரலை இழுத்தவண்ணம் உலாவியனும், வெண்ணெய் திருடும் கள்வனும்,

      அறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள --- மிகவும் பயப்படும்படியாக வானமுகட்டையும் கிழிக்கும்படி வளர்ந்து

      விதரண மாவலி வெருவ --- கொடையிற் சிறந்த மாபலிச் சக்கரவர்த்தி அஞ்சும்படி

     மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற --- பெருவிரத வாமனனாய் வந்து, பின்னர் உண்மைத் தோற்றத்தோடு வெளிப்பட்டு நின்றவனும்

     நாராயண மாமன் சேயை முனிந்த கோவே --- ஆகிய நாராயணமூர்த்தியாகிய மாமனின் மகனாகிய பிரமதேவனைக் கோபித்த தலைவரே!

      விளை வயலூடு இடை வளை விளையாடிய --- விளைந்துள்ள வயல்களின் இடையில் சங்குகள் தவழுகின்ற

     வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத --- வெள்ளிநகர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதப் பெருமானே!

      மேவும் தேவர்கள் தம்பிரானே --- விரும்பித் துதிக்கும் தேவர்களின் தனிப்பெரும் தலைவரே!

      வதன சரோருக நயன சிலீமுக வள்ளி --- தாமரை போன்ற முகமும், அம்பு போன்ற கண்களும் உடைய வள்ளிநாயகி (காவல் புரிந்து வருகின்ற)

      புனத்தில் நின்று --- தினைப்புனத்தில் இருந்துக் கொண்டு,

     வாராய் --- என்னோடு வருவாயாக,

     பதி காதம் காத அரை --- என் பதியானது இங்கிருந்து இரண்டரை காதம் தூரம்தான்,

      ஒன்றும் ஊரும் வயலும் ஒரே இடை --- என் ஊரும், உன் ஊரும் அருகருகில் உள்ளன, வயல் ஒன்றுதான் இடையில் உள்ளது,

      என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து --- என்று ஒரு சோலையிலே நின்று உமது வலிமை எல்லாம் இழந்து,

     மாலாய் மடல் ஏறும் காமுக --- வள்ளிநாயகி மீது மிக்க மயக்கம் கொண்டு மடல் ஏறிய மோகம் நிறைந்தவரே!

     எம்பிரானே --- எம்பெருமானே!

      இதவிய காண் இவை ததை என வேடுவன் --- இந்த உணவு இனிமை கூடியதாக உள்ளது பாருங்கள் என்று கூறிய வேடுவன்

      எய்திடும் எச்சில் தின்று லீலாசலம் ஆடும் --- அளித்த எச்சில் உணவைத் தின்று கண்ணில் குருதி பெருக நின்று திருவிளையாடல் புரிந்த

      தூயவன் மைந்த --- சுத்தசிவன் திருமைந்தரே!

      நாளும் இளையவ --- என்றும் இளையவரே!

      மூதுரை மலைகிழவோன் என --- பழைய நூல் ஆகிய திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள மலை கிழவோனே என்று எல்லாம் தேவரீரைப் போற்றித் துதித்தால்,

      வெள்ளம் எனக் கலந்து --- வெள்ளம் பாய்வது போல், என்னுள் கலந்து தேவரீர் இருத்தலினால்,

      நூறாயிர பேதம் சாதம் ஒழிந்தவா தான் --- நூறாயிர பேதமாக வருகின்ற பிறவிகள் தொலைந்து போய்விட்டனவே.


பொழிப்புரை

     கோமோதகம் என்னும் கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்சசன்னியம் என்னும் சங்கும், நாந்தகம் என்னும் வாளும், ஆகிய பஞ்சாயுதங்களைத் திருக்கைகளில் தாங்கியவரும்,
நந்த கோபாலன் என்ற கோகுலத்து மன்னனது தேவியாகிய யசோதை பிராட்டி மகிழ்ந்து வாழ, கட்டப்பெற்ற கயிறோடு உரலை இழுத்தவண்ணம் உலாவியனும், வெண்ணெய் திருடும் கள்வனும், மிகவும் பயப்படும்படியாக வானமுகட்டையும் கிழிக்கும்படி வளர்ந்து, கொடையில் சிறந்த மாபலிச் சக்கரவர்த்தி அஞ்சும்படி, பெருவிரத வாமனனாய் வந்து, பின்னர் உண்மைத் தோற்றத்தோடு வெளிப்பட்டு நின்றவனும் ஆகிய நாராயணமூர்த்தியாகிய மாமனின் மகனாகிய பிரமதேவனைக் கோபித்த தலைவரே!  

     விளைந்துள்ள வயல்களின் இடையில் சங்குகள் தவழுகின்ற வெள்ளிநகர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதப் பெருமானே!

      விரும்பித் துதிக்கும் தேவர்களின் தனிப்பெரும் தலைவரே!

      தாமரை போன்ற முகமும், அம்பு போன்ற கண்களும் உடைய வள்ளிநாயகி காவல் புரிந்து வருகின்ற தினைப்புனத்தில் இருந்துக் கொண்டு, என்னோடு வருவாயாக. என் பதியானது இங்கிருந்து இரண்டரை காதம் தூரம்தான், என் ஊரும், உன் ஊரும் அருகருகில் உள்ளன, வயல் ஒன்றுதான் இடையில் உள்ளது என்று கூறி, ஒரு சோலையிலே நின்று உமது வலிமை எல்லாம் இழந்து, வள்ளிநாயகி மீது மிக்க மயக்கம் கொண்டு மடல் ஏறிய மோகம் நிறைந்தவரே!

     எம்பெருமானே!

     இந்த உணவு இனிமை கூடியதாக உள்ளது பாருங்கள் என்று கூறிய வேடுவன் அளித்த எச்சில் உணவைத் தின்று கண்ணில் குருதி பெருக நின்று திருவிளையாடல் புரிந்த சுத்தசிவன் திருமைந்தரே!

      என்றும் இளையவரே!

      பழைய நூல் ஆகிய திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள மலை கிழவோனே என்று எல்லாம் தேவரீரைப் போற்றித் துதித்தால், வெள்ளம் பாய்வது போல், என்னுள் கலந்து தேவரீர் இருத்தலினால், நூறாயிர பேதமாக வருகின்ற பிறவிகள் தொலைந்து போய்விட்டனவே.


விரிவுரை

இது நித்திய வழிபாட்டிற்கு அமைந்த அற்புதத் திருப்புகழ்ப் பாடல் ஆகும்.

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று ---

வள்ளிநாயகியின் திருமுக மண்டலம் தாமரை போன்று உள்ளது. எம்பிராட்டியின் திருக்கண்கள் அம்பு போன்று அமைந்துள்ளன. அவள் வேடர் குல முறைப்படி தினைப்புனத்தில் தினைப்பயிரைக் காவல் செய்துகொண்டு இருக்கின்றாள்.

அகிலாண்ட நாயகியாகிய எம்பிராட்டியைக் கண்டார் முருகப் பெருமான். கண்ட அளவில், எப்பொழுதோ காவலாக வைத்த பழம்பொருள் ஒன்றினை இப்போது கண்டவன் எப்படி மகிழ்வானோ அப்படி மகிழ்ந்தார். கண்ட அளவிலேயே காமம் மீதூர, எம்பிராட்டி காவல் புரிகின்ற பரணுக்கு அருகில் சென்றார் முருகப் பெருமான்.

மண்டலம் புகழும் தொல்சீர்
     வள்ளி அம் சிலம்பின்மேல் போய்ப்
பிண்டி அம் தினையின் பைம் கூழ்ப்
     பெரும் புனத்து இறைவி தன்னைக்
கண்டனன் குமரன், அம்மா!
     கருதிய எல்லை தன்னில்
பண்டு ஒரு புடையில் வைத்த
     பழம் பொருள் கிடைத்தவா போல்.  

பூமஞ் சார் மின் கொல் என்னப்
     பெருப்பினில் ஏனல்காக்கும்
காமஞ் சால் இளைமையாளைக்
     கடம்பு அமர் காளை நோக்கித்
தூமஞ் சால் விரகச் செந்தீச்
     சுட்டிடச் சோர்ந்து வெம்பி
ஏமஞ் சால்கின்ற நெஞ்சன்
     இதணினுக்கு அணியன் சென்றான். ---  கந்தபுராணம்.   
    
    
வாராய், பதி காதம் காத அரை, ஒன்றும் ஊரும் வயலும் ஒரே இடை என ---

வள்ளயாகியைக் கண்டவுடனே, "நீ என்னோடு வருவாயாக. என்னுடைய பதியாகிய திருத்தணிகையும், நீ இப்போது இருக்கும் ஊராகிய வள்ளிமலையும் வெகு தொலைவில் இல்லை. இரண்டரை காத தூரமே உள்ளது. எனது பதிக்கும், உனது பதிக்கும் உடையில் வயல் வெளிதான் உள்ளது என்றார் முருகப் பெருமான். மேலும், எமது ஊரிலே உள்ள சோலைகளில் உள்ள வண்டுகள், உமது ஊரிலே உள்ள சோலைகளில் வந்து தேனை நுகரும். அது எப்படி இருக்கும் என்றால், கண் ஆனது காது வரை சென்று மீள்வதை விடவும் மிகவும் குறுகி இருக்கும்" என்றார்.

காந்தள்அம் போது கமழும்எம் ஊர்வரைக் காவியில் தேன்
மாந்து அளி பாய்ந்து, நும் ஊர்வரைச் சோலை மது நுகரும்,
தேந்து அளி தூவும் சில் ஓதி நல்லாய்! சென்று மீட்சி செவி
போந்து அளி வாட்கண் மறிவது நீட்டிக்கும் பூங்குழலே.

தணிகைப்புராணத்தில் வரும் இப்பாடலின் பொருள் வருமாறு ----பூவை அணிந்த கூந்தலை உடையவளே! காந்தள் செடியில் மலரும் பருவத்து அரும்பு கமழ்கின்ற எமது ஊரின் வரைக் கண் உள்ள காவிமலரிடத்துத் தேனை உண்ணுகின்ற வண்டினங்கள், பாய்தல் செய்து நுமது ஊரினது வரையின் கண் உள்ள சோலையின் இடத்துத் தேனை நுகரா நிற்கும் (அத்துணை அணிமைத்து ஆதலால்) தேனின் துளிகளைச் சிந்துகின்ற சிலவாகிய கூந்தலினை உடைய நற்குணங்கள் அமைந்தவளே! அவ்விடம் யான் சென்று மீளும்பொழுதினும் ஒளியோடு கூடிய கருணையை உடைய கண்கள் காதின் இடத்துச் சென்று திரும்பும்பொழுது நெடும் பொழுதாகும் என்க.

இது அகத்துறையில் இடம் அணித்துக் கூறி வறுபுறுத்தல் எனப்படும். திருக்கோவையாரிலும் இக்கருத்து அமைந்த பாடல் ஒன்று உள்ளது.

வரும் குன்றம் ஒன்று உரித்தோன், தில்லை
     அம்பலவன் மலயத்து
இரும் குன்றவாணர் இளம்கொடி
     யே! இடர் எய்தல்; எம் ஊர்ப்
பரும் குன்ற மாளிகை நுண் கள
         பத்து ஒளிபாய, நும் ஊர்க்
கரும் குன்றம், வெண் நிறக் கஞ்சுகம்
         ஏய்க்கும் கனம் குழையே!

         தலைவனது ஊரிலே உள்ள மலைபோன்ற மாளிகைகளில் உள்ள வெண்மை நிறமானது,  தலைவியின் ஊரில் உள்ள கருமை மிகுந்த குன்றில் படுவதால் அவை வெண்ணிறமாக உள்ளன. கருமை நிறக் குன்றுகள் வெள்ளை நிறச் சட்டையை அணிந்தது போல உள்ளது. ஆக, தலைவனின் ஊர் தலைவியின் ஊருக்கு அருகியேலே உள்ளது.

ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து, மாலாய் மடல் ஏறும் காமுக ---

வள்ளிநாயகியார் காவல் புரியும் தினைப்புனத்தில் எள்ள சோலையில் நின்று வள்ளிபிராட்டியை அடைய விரும்பிய முருகப் பெருமானின் இச்சை மேலிடவும், தான் மடல் ஏளப் போவதாக முருகப் பெருமான் வள்ளிநாயகியிடம் கூறுகின்றார்.

மடல் ஏறுதலாவது, பனை மரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.

பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை (பீலி), பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் திருநீற்றைப் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் பிடித்திருப்பான். (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்.

தலைவன் இவ்வாறு மடல் ஏறுவதால், தலைவனின் துன்பத்தை ஊரில் உள்ளவர்கள் பார்ப்பார்கள். அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியைத் தலைவனிடம் சேர்த்து வைக்க முயல்வார்கள். இதனால், தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு உள்ளது.

மேலும் தலைவனின் காமத்துயரம் நீங்க ஒரே வழி இது என்றும் கருதப்படுகிறது. எனவே தான், மடல் என்பதைக் காமம் ஆகிய கடலை நீந்துவதற்கு உரிய தெப்பம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. திருவள்ளுவ நாயனாரும்,

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி

என்று அருளினார்.

மணம் இரண்டு வகைப்படும். ஒன்று களவு. மற்றொன்று கற்பு. பண்டைக்காலத்தில் களவு மணம் நிகழ்ந்தபின் கற்பு மணம் நிகழும். தமிழ்க் கடவுளாகிய முருகவேள் இந்த இருமணங்களுக்கு இலக்கியமாகவே கற்பு நெறியினாலே தெய்வயானை அம்மையாரையும், களவு நெறியிலே வள்ளியம்மையாரையும் மணம் செய்து கொண்டு அருள் புரிந்தனர்.

களவு என்பது பிறர்க்குரிய பொருளை வௌவுதல் போன்றது அல்ல. ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் ஊழ் கூட்டத் தனியிடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒருமைப்பட்டு அன்பு வெள்ளத்தில் திளைத்துப் புணர்தலே ஆகும். வேதத்தை மறை என்றது போல, இம்மணத்தை களவு என்று கூறுவர்.

களவு எனப்படுவது யாது என வினவின்,
வலைகெழு முன்கை வளங்கெழு கூந்தலும்
முனைஎயிற்று அமர்நகை மடநல் லாளொடு
தளைவுஅவிழ் தண்தார்க் காமன் அன்னோன்
விளையாட்டு இடமென வேறுமலைச் சாரல்
மானிளம் குழவியொடு கடிந்து விளையாடும்
ஆயமும் தோழியும் மருவி நன்கறியா
மாயப் புணர்ச்சி மென்மனார் புலவர்.

இக்களவு மனத்தைக் காந்தர்வ மணம் என்றுங் கூறப்படும்.

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
 துறையமை நல்லயாழ்த் துணைமையோ ரியல்பே”

என்று தொல்காப்பிய சூத்திரத்தினால் அறிக.

இனி மேற்கண்ட சூத்திரத்துள் மன்றல் எட்டு எனப்பட்டதால், அந்த எட்டு மணத்தின் தன்மையையும் சிறிது விளக்குவாம்.

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்று மணம் எட்டாகப் பேசப் படுகின்றது. இவற்றுள்;

1.    பிரமம் --- ஒத்த கோத்திரத்தவனாய் நாற்பத்தியெட்டு யாண்டு இளமையில் கழித்த (பிரமசரியவிரத மிருந்த) ஒருவனுக்குப் பன்னிரண்டு யாண்டுடையவளாய்ப் பூப்பு எய்திய ஒருத்தியைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தா முன் அணிகலன் அணிப்பித்து தானமாகக் கொடுப்பது.

அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
   ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை”     --- திருமுருகாற்றுப்படை

2.    பிரசாபத்தியம் --- உரிய கோத்திரம் உடைய தலைமகனை அழைத்து அவனுக்குரியார் தந்த பரிசத்திற்கு இரட்டி தம்மகட்குத் தந்து தீ முன் மணஞ்செய்து தருவது.

3.    ஆரிடம் --- தாம் புரியும் வேள்வியாதி கருமங்களின் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு, பசு எருது இவைகளைப் பெற்றுக்கொண்டு மகளை மணஞ்செய்து தருவது.

4.    தெய்வம் --- வேள்வியில் வந்த கன்னியைத் தக்க தலைமகனுக்குத் தருவது.  அல்லது தம் மகளை வேள்வி வேட்பித்துத் தரும் ஆசானுக்குத் தக்கணையாகத் தருவது.

5.    ஆசுரம் --- கொல் ஏறு கோடல், திரி பன்றி யெய்தல், வில்லேற்றுதல் செய்து வீரத்தால் மிக்க ஒருவனுக்கு மகளைத் தருதல். இவைகளில் கொல் ஏறு தழுவுதல் என்பது முரட்டு எருதை வீரத்தால் அடக்குதல். இது ஆயர்க்கு உரியது. மற்ற இரண்டும் அரசர்க்கு உரியது.

6.    இராக்கதம் --- பெண் வீட்டாரிடம் தனது வலிமையைக் காட்டி அவர்கள் இணங்காதிருப்பினும் போராடி தலை மகளை வலிதிற் கொள்வது. (இது அரசர்க்கு உரியது).

7.    பைசாசம் ---  துயில்பவளை சென்று கூடுதல் பிசாச மணமாகும். இனி வயதில் மூத்தவளைப் புணர்தலும், இழிந்தவளைப் புணர்தலும் இதன் இனமாகும்.

8.    காந்தருவம் ---  கொடுப்பாரும் கேட்பாரும் இன்றி, ஒத்த ஆணும் ஒத்த பெண்ணும் பண்டை ஊழ் கூட்ட தனியிடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒன்றக் கூடுவது ஆகும். இந்த காந்தர்வ மணம் மிகவும் இனிமையானது என்க. அன்பின் பெருக்கினால் நிகழ்வது.

தான் களவு ஒழுக்கத்தினால் எய்திய தலைவியை, இடையில் எய்துதற்குக் காவல் முதலிய தடைகள் நேர்ந்த போது தலைவன் பெரிதும் வருந்துவன் தன் ஆற்றாமையைத் தோழியிடம் கூறி வேண்டுவான் அவள் உள்ளம் இரங்கித் தலைவியைக் கூட்டி வைப்பாள். ஒருக்கால் அவ்வாறு செய்திலளாயின், இறுதியாக மடல் ஏறியாவது விரும்பிய கரும்பனைய காரிகையை அடைய முயலும்.

காமம்உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.                ---- திருக்குறள்.

காதலியைப் பெற விரும்பிய காதலன், அவளது உருவத்தையும், பெயரையும், ஒரு படத்தில் எழுதி, தன் ஊரையும் பேரையும் அதன் மேல் எழுதி, அப்படத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, எருக்கம் பூ மாலையைச் சூடிக்கொண்டு, பழுத்த இலைகளைத் தலையில் சூடி, வாள் போல் கூர்மையாக உள்ள பனை மடலல் குதிரை போல் கட்டி அதன் மீது ஊர்ந்து காதலியின் ஊர் நடுவில் சென்று, நாற்சந்தியில் நின்று, ஒன்றும் பேசாமல்; பிறர் வசைக்கும் கூசாமல், படத்தில் எழுதிய உருவையே நோக்கி, பகல் இரவு பாராமல் உறுதியுடன் நிற்பான். அவனது காதலின் உறுதியைக் கண்ட காதலியின் உறவினர், உழுவலன்பு உடைய அவனுக்குத் தமது திருமகளை மணஞ்செய்து தருவர்.

ஏறிய மடல் திறம், இளமை தீர்திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்,
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணை குறிப்பே.     --- தொல்காப்பியம்.

காய்சின வேல்அன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுஉள்ள மீனிழந்தார், வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழிபிடித்து
பாய்சின மாஎன ஏறுவர் சீறூர்ப் பனைமடலே.    --- திருக்கோவையார்.

வாமத்து உமைமகிழ் வெங்கைபுரேசர் மணிவரைமேல்
தாமக்குவிமென் முலைமட்டுவார்குழல் தையல்நல்லாய்!
நாமக் கடலைக் கலம் இவர்ந்து ஏறுவர் நானிலத்தோர்
காமக் கடலை மடல்மா இவர்ந்து கடப்பர்களே.   --- திருவெங்கைக்கோவை.

மாவென மடலும் ஊர்ப; பூவெனக்
குவிழுகிழ் எருக்கம் கண்ணியுஞ் சூடுப;
மறுகி னார்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமங்காழ்க் கொளினே.   --- குறுந்தொகை

எனவே முருகவேள் வள்ளியம்மையாரைக் களவு ஒழுக்கத்தினால் அடைந்து, இடையே தடை எய்தியதாகக் கொண்டு, தோழியிடம் போய் மடல் ஏறுவேன் என்று கூறியருளிய திருவிளையாடல் கந்தபுராணத்துள் வருமாறு காண்க.

தோட்டின் மீதுசெல் விழியினாய்! தோகையோடு என்னைக்
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மாமடல் ஏறி, நும் ஊர்தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது என்று உரைத்தான்.

மதனன் விடு புஷ்பசர  படலம்  உடல் அத்தனையும்
 மடல்  எழுதி  நிற்கும் அதிமோகத் தபோதனனும்   --- வேடிச்சி காவலன்வகுப்பு.

செண்பக அடவியினும் இதணினும் உயர்
     சந்தன அடவியினும் உறை குறமகள்
     செம்பொன் நூபுர கமலமும், வளைஅணி ...... புதுவேயும்
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத
     குங்கும அசல யுகளமும், துரித
     இந்தள அம்ருத வசனமும், முறுவலும், ...... அபிராம
இந்த்ர கோபமும், மரகத வடிவமும்,
     இந்த்ர சாபமும் இருகுழையொடு பொரும்
     இந்த்ர நீலமும் மடல்இடை எழுதிய ...... பெருமாளே. --- (கொந்துவார்) திருப்புகழ்.

கவளத்த வேழக் கவர்மணிப் போர்வைக் கடவுள்விழை
தவளத்த நீறென் பெருக்குந் தரித்துத் தகுமடன்மா
பவளத்த வாய்நுங்கை பண்பினைப் பாடிப் படங்கை தழீஇத்
துவளத் தடாய உளத்தாய் நும் ஊர்வயின் தூண்டுதுமே.   ---  தணிகைப் புராணம்.


இதவிய காண் இவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலாசலம் ஆடும் தூயவன் மைந்த ---

காளத்தியப்பரைக் கண்ட உடன் திண்ணனாருக்கு எல்லை இல்லா அன்பு மேலிட்டது. இறைவர் பசியோடு இருக்கின்றாரே; இவருக்கு இறைச்சி கொண்டு வரவேண்டும் என விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை. சற்று நேரம் சஞ்சலப் பட்டபின், துணிவுகொண்டு கைகூப்பித் தொழுதுவிட்டு, வில் எடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பு அரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து, இனியன எல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவே இல்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளா வல் உடும்பு என்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை, நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர்.

திண்ணப்பர் கல்லையில் சேர்த்த ஊன் அமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையில் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பார் என இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகம் ஆடினார். தலையில் இருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையில் இருந்த ஊன் அமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே! நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண் துயிலாது நின்ற வீரர் விடியற்காலம் ஆனபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது.

அன்று பகல் போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரம் கற்ற ஆசார சீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரம் தவறாமல் பூசை செய்பவராக சிவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய் சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக இருப்பவரும் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே..

வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு ஆகியவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகல மிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணும் சிவலிங்கத்தின் முன் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடன் இணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினம் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார்.

பூசைக்கு நேரம் தாழ்க்கின்றது என்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின், பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார்.

இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாம் அறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினில் கோர்த்து, தீயினில் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையில் சேர்த்தார். அதில் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊன் அமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார்.

கண்ணப்பருடைய சிறந்த அன்பு நெறியை இதில் விளக்குகின்றனர். கண்ணப்பருடைய அன்பும் அவருடைய புனித வரலாறும் மாற்றம் மனம் கழிய நின்றவையாம். மானுடராகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்ணப்பருடைய கதையை ஓத வேண்டும். உன்னுதல் வேண்டும். உணருதல் வேண்டும்.  அன்பால் உருகுதல் வேண்டும். அன்புக்குக் கட்டளைக் கல் கண்ணப்பர் ஆவார்.

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்,
கேளார் கொல், அந்தோ கிறிப்பட்டார், –-- கீளாடை
அண்ணற்கு அணுக்கராய்க் காளத்தி உள்நின்ற
கண்ணப்பர் ஆவார் கதை.

என்கின்றார் தக்கோர் புகழும் நக்கீரதேவர்.

"கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்" என்பார் அன்புக் களஞ்சியமாகிய மணிவாசகனார்.

விதிமார்க்கமாவது முறையே வேதாகமங்களை ஓதி உணர்ந்து, அவற்றில் கூறியவாறு ஒழுகி, முறைப்படி இறைவனை வழிபட்டு மாறுபாடு இன்றி நிற்பது.

அன்பு மார்க்கமாவது, ஓரே அன்பு மயமாக நிற்பது.

அன்பு நெறியில் கலைஞானம் கூறும் விலக்குகள் எல்லாம் தீ முன் எரியும் பஞ்சுபோல் பறந்து ஒழியும்.

விதி மார்க்கத்தில் சென்றவர் சிவகோசரியார்.
அன்பு மார்க்கத்தில் நின்றவர் கண்ணப்பர்.

விதிமார்க்கத்தில் செல்பவர் அன்பு மார்க்கத்தினை அடைதல் வேண்டும். அதனாலே தான், சிவபெருமான் கண்ணப்பர் கனவிலே போய், "திண்ணப்பா நீ ஊன் வேதிப்பதும், வாயில் உள்ள நீரை உமிழ்வதும், செருப்பு அணிந்த காலுடன் திருக்கோயிலுக்குள் வருவதும் நமக்கு அருவருப்பை விளைக்கின்றன. அவைகளை இனி செய்யற்க. நமது அன்பன் சிவகோசரியார் வந்து பூசை செய்யும் விதியையும், மதியையும் எனக்குப் பின் ஒளிந்து இருந்து நீ தெரிந்து கொள்" என்று கூறியருளவில்லை.  ஏனெனில், அன்பு மார்க்கத்திற்கு விதிமார்க்கத்தைக் காட்ட வேண்டியது இல்லை.

அன்பும் அறிவும் உடைய அருமையை நேயர்கள் உற்று நோக்குதல் வேண்டும்.  சிவபெருமான் விதிமார்க்கத்திற்கு அன்புநெறியைக் காட்டுவார் ஆகி, சிவகோசரியார் கனவிலே போய் உரைத்தருளுகின்றார்.

அன்றுஇரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே
மின்திகழும் சடைமவுலி வேதியர்தாம் எழுந்தருளி
"வன்திறல் வேடுவன் என்று மற்றுஅவனை நீ நினையேல்
நன்றுஅவன்தன் செயல்தன்னை நாம்உரைப்பக் கேள்"என்று.

"அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும்
அவனுடைய அறிவுஎல்லாம் நமைஅறியும் அறிவுஎன்றும்
அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய ஆம் என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு அறிநீ" என்று அருள்செய்வார்.

"அன்பனே, திண்ணனாகிய அண்ணல் வேடன் வந்து என்மீது உள்ள பழைய மலர்களைச் செருப்பு அணிந்த காலால் நீக்குகின்றனன்.  அது எனது இளங்குமரன் திருமுருகன் செய்ய திருவடியினும் சிறப்பாக நமக்கு இன்பத்தைத் தருகின்றது”.

"பொருப்பினில் வந்து, அவன் செய்யும்
         பூசனைக்கு முன்பு, என்மேல்
அருப்பு உறும் மென்மலர் முன்னை
         அவை நீக்கும் ஆதரவால்,
விருப்பு உறும் அன்பு என்னும்
         வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த
செருப்பு அடி, அவ்விளம்பருவச்
         சேய் அடியின் சிறப்பு உடைத்தால்”,

"அவன் நமக்கு நீராட்டும் பொருட்டு உமிழும் எச்சில் நீரானது, கங்கை முதலிய புண்ணிய நீரினும் புனிதமானது”.

"உருகிய அன்பு, ஒழிவு இன்றி
         நிறைந்த  அவன் உரு என்னும்
பெருகிய கொள்கல முகத்தில்
         பிறங்கி, இனிது ஒழுகுதலால்
ஒருமுனிவன் செவி உமிழும்
         உயர்கங்கை முதல் தீர்த்தப்
பொருபுனலின், எனக்கு அவன்தன்
         வாய்உமிழும் புனல் புனிதம்",

"அவ் வேடர் கோமான் தனது அழுக்கு அடைந்த தலை மயிராகிய குடலையில் கொணர்ந்து நமக்கு அன்புடன் சூட்டும் மலர்களுக்கு மாலயனாதி வானவர்கள் மந்திரத்துடன் சூட்டும் மலர்கள் யாவும் இணையாக மாட்டா”.

"இம்மலை வந்து எனை அடைந்த
         கானவன் தன் இயல்பாலே
மெய்ம்மலரும் அன்புமேல்
         விரிந்தன போல் விழுதலால்,
செம்மலர்மேல் அயனொடு மால்
         முதல்தேவர் வந்து புனை
எம்மலரும் அவன் தலையால்
         இடும் மலர்போல் எனக்கு ஒவ்வா”,

அவன் "வெந்து உளதோ" என்று மெல்ல கடித்தும், "சுவை உளதோ" என்று நாவினால் அதுக்கியும் பார்த்துப் படைத்த ஊனமுது வேள்வியின் அவி அமுதினும் இனியதாகும்.

"வெய்யகனல் பதம்கொள்ள
         வெந்துளதோ எனும் அன்பால்
நையும் மனத்து இனிமையினில்
         நையமிக மென்றிடலால்
செய்யும் மறை வேள்வியோர்
         முன்பு தரும் திருந்து அவியில்
எய்யும் வரிச் சிலையவன்தான்
         இட்ட ஊன் எனக்கு இனிய",

முனிவர்கள் கூறும் வேதாக மந்திரங்களினும், அச் சிலை வேடன் நெக்கு உருகி அன்புடன் கூறும் கொச்சை மொழிகள் மிகவும் நன்றாக என் செவிக்கு இனிக்கின்றன.

"மன்பெருமா மறைமொழிகள்
         மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும்
இன்ப மொழித் தோத்திரங்கள்
         மந்திரங்கள் யாவையினும்,
முன்பு இருந்து மற்று அவன்தன்
         முகம் மலர அகம் நெகிழ
அன்பில் நினைந்து என்னைஅல்லால்
         அறிவுறா மொழி நல்ல”.

என்று சிவபெருமான் கூறியருளிய திருமொழிகள் கல் மனத்தையும் கரைத்து உருக்குவன.
  
கூசாது வேடன் உமிழ்தரு நீர் ஆடி, ஊன் உண் எனும் உரை
     கூறா மன் ஈய, அவன் நுகர் ...... தருசேடம்
கோது ஆம் எனாமல் அமுதுசெய், வேதாகம ஆதி முதல்தரு
     கோலோக நாத! குறமகள் ...... பெருமாளே.    --- (ஆசார ஈனன்) திருப்புகழ்.

பொக்கணத்து நீற்றை இட்ட ஒருத்தனார்க்கு
     புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்
பச்சிலைக்கும், வாய்க்குள் எச்சிலுக்கும், வீக்கு
     பைச் சிலைக்கும் ஆட்கொள் ...... அரன்வாழ்வே!
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட
     பத்தருக்கு வாய்த்த ...... பெருமாளே.      --- (மச்சமெச்சு) திருப்புகழ்.

"தூயவன் மைந்த" என்றார் அடிகள். தூயவர் சிவபெருமான்.

மைந்தன், பாலன், மகன், பிள்ளை, குமாரன், புத்திரன், புதல்வன் என்பன எல்லாம் ஒரு பொருள்பட நின்றாலும், அந்தச் சொற்களின் உண்மை வருமாறு....

1.    தனக்கு உரிய வயது வந்ததும், தந்தைக்கு என்ன வருவாய்? எப்படிக் குடும்பம் நடைபெறுகின்றது? பிற்காலத்தில் நாம் எப்படி வாழ்வது? என்ற சிந்தனையும், அறியும் ஆற்றலும் இன்றித் தாய் தந்தையர் பாதுகாப்பிலேயே இருக்கின்றவன் பாலன்.

2.   வயது முதிர்ந்த தந்தை வேலை செய்ய, தனக்கு உரிய பருவம் வந்ததும், தந்தைக்கு உதவி செய்யாது மேற்கொண்டும் செலவு செய்து கொண்டும், ஆடல், பாடல்களில் ஈடுபட்டுக் கொண்டும் இருப்பவன் பிள்ளை.

3.    தந்தைக்கு ஞானம் உரைக்கும்  அளவுக்கு உயர்ந்த அறிவு பெற்றவன் குமாரன்.

4.    தந்தைக்கு நற்கதி தருகின்றவன் புத்திரன்.

5.    தந்தைக்கு நன்மையைச் செய்கின்றவன் புதல்வன்.

6.    தான் பிறந்த குடும்பத்தைக் காத்து, ஆலமரத்தின் விழுது அந்த மரத்தைத் தாங்குவது போல் நிற்பவன் மகன்.

7.    தந்தையின் குடும்பம், தாயின் குடும்பம், குருவின் குடும்பம், நண்பரின் குடும்பம், இப்படிப் பல குடும்பங்களைக் காப்பாற்றுபவன் மைந்தன்.


நாளும் இளையவ ---

என்றும் இளையவர் முருகப் பெருமான். "என்றும் இளையாய்" என்று திருமுருகாற்றுப்படை வெண்பா கூறும். "என்றும் அகலாத இளமைக் கார" என்பார் அருணை அடிகள் பிறிதொரு திருப்புகழில்.

மூதுரை மலைகிழவோன் என ---

மூதுரை எனப்படும் பழைய நூல் ஆகிய திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள "மலை கிழவோனே" என்று முருகப் பெருமானைத் துதித்தல் வேண்டும்.

வெள்ளம் எனக் கலந்து ---

மேற்கூறியவாறு எல்லாம் முருகப் பெருமானைப் போற்றி உள்ளன்போடு வழிபாடு செய்தால், வெள்ளமானது பள்ளத்தை நோக்கிப் பாய்வதுபோல், உயிரினிடத்தே விளங்கித் தோன்றுவார். அப்பொழுது உயிரானது உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாக உருகும். உடம்பு எல்லாம் கண்ணாக வெள்ளம் பாயும்.


நூறாயிர பேதம் சாதம் ஒழிந்தவா தான் ---

சாதம் - பிறவி.

அப்போது, நூறாயிர பேதமாக வருகின்ற பல பிறவிகளும் தொலைந்து போய் விடும்.

நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறவி, எண்பத்துநான்கு நூறு ஆயிர பேதம் உடையது பிறவி.

நால்வகைத் தோற்றம் வருமாறு ---

அண்டசம் - முட்டையில் தோன்றுவன. (அண்டம் - முட்டை, சம் - பிறந்தது) அவை பறவை, பல்லி, பாம்பு, மீன், தவளை முதலியன. 

சுவேதசம் - வேர்வையில் தோன்றுவன. (சுவேதம் - வியர்வை)  அவை பேன், கிருமி, கீடம், விட்டில் முதலியன. 

உற்பிச்சம் - வித்து. வேர், கிழங்கு முதலியவற்றை மேல் பிளந்து தோன்றுவன (உத்பித் - மேல்பிளந்து)  அவை மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலியன.

சராயுசம், கருப்பையிலே தோன்றுவன (சராயு - கருப்பாசயப்பை)  இவை தேவர், மனிதர், நாற்கால் விலங்குகள் முதலியன.

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற எழுவகைப் பிறப்பு. 

இவற்றுள் முதல் ஆறும் இயங்கியல்பொருள். (இயங்குதிணை, சங்கமம், சரம்) எனவும்,  இறுதியில் நின்ற ஒன்று நிலையியல் பொருள் (நிலைத்திணைப் பொருள், தாவரம், அசரம்) எனவும் பெயர் பெறும்.

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அசைவுஇல அசைவு உள ஆர் உயிர்த் திரள்பல
அசல்அற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அறிவு ஒரு வகைமுதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்
 ஆவகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி        
         
பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
 ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

 தாய்கருப் பையினுள் தங்கிய உயிர்களை
 ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை
 அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
 அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை
 ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி. --- திருவருட்பா.

எண்பத்துநான்கு இலட்சம் யோனி போதங்கள். "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான்" என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் திருவீழிமிழலைத் தேவாரத்தின் மூலம் நமக்கு அறிவுறுத்துவது.

யோனி - கருவேறுபாடுகள். 

         தேவர் -      14 இலட்சம்,
         மக்கள் -     9 இலட்சம்,
         விலங்கு -    10 இலட்சம், 
         பறவை -     10 இலட்சம்,
         ஊர்வன -     11 இலட்சம், 
         நீர்வாழ்வன – 10 இலட்சம், 
         தாவரம் -     20 இலட்சம்,
        
ஆக, 84 இலட்சம் பேதம் ஆகும், இதனை,

         ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்
         நீர்பறவை நாற்கால் ஒர் பப்பத்தாம் - சீரிய
         பந்தமாம் தேவர் பதினால் அயன்படைத்த
         அந்தமில் தாவரம் நால்ஐந்து.

என்னும் பழம் பாடலால் அறியலாம்.


கதை, கன சாப, திகிரி, வளை, வாளொடு கை வசிவித்த  ---

கௌமோதகம் என்னும் கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்சசன்னியம் என்னும் சங்கும், நாந்தகம் என்னும் வாளும், ஆகிய ஐம்படைகளைத் திருக்கைகளில் தாங்கியவர் திருமால்.

செங்கம லப்பூவில் தேன் உண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப,
சங்கு,வில், வாள், தண்டு, சக்கரம் ஏந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ. --- பெரியாழ்வார்.

கோல்ஆர்ந்த நெடும் சார்ங்கம், கூனல் சங்கம்,
கொலை ஆழி, கொடும் தண்டு, கொற்ற ஒள்வாள்,
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும் பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப,
சேல்ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவுஅணையில் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டு, இன்பக் கலவி எய்தி,
வல்வினையேன் என்றுகொலோ வாழும்நாளே!     --- குலசேகர ஆழ்வார்.

நந்தகோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ, கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் ---

நந்தகோபனாலும், அசோதைப் பிராட்டியாலும் வளர்க்கப் பெற்றவர் கண்ணன்.

உலூகலம் - உரல்.

அசோதைப் பிராட்டியால் உரலில் கட்டப்பட்டுக் கிடந்தவர்.

துணைநிலை மற்று எமக்கொர் உளது என்று இராது
     தொழுமின்கள் தொண்டர்! தொலைய
உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி
     உக உண்டு, வெண்ணெய் மருவி,
பணமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட
     அதனோடும் ஓடி அடல் சேர்,
இணைமருது இற்று வீழ நடை கற்ற தெற்றல்
     வினை பற்று அறுக்கும் விதியே.     --- திருமங்கை ஆழ்வார்.


அறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள, விதரண மாவலி வெருவ, மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் ---

திருமால் வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண் கேட்டு வாங்கி, ஓரடியாக இம் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.

திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம் யாது? ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது. 

ஒருவனுக்கு இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும் இல்லை.

மாவலிபால் மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில் கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.

தாவடி ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடி ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.

வாமனாவதார வரலாறு

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன்.  விரோசனனுடைய புதல்வன் மாவலி.  சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான்.  அவனுடைய அமைச்சன் சுக்கிரன்.  மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன்.  அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான்.  தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர்.  காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர்.  தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான்.  அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான்.  திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர்.  மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான்.  வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன்.  மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை.  என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான்.  அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன்.  ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று.  இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார்.   ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம்.  இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர்.  ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார்.  மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார்.  "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி.  வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது.  அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும பதமும் மாவலி பெற்றனன்.

துடித்து தசமுகன் முடித் தலைகள் விழ
     தொடுத்த சரம் விடு ...... ரகுராமன்,
துகைத்து இ உலகை ஒர் அடிக்குள் அளவிடு
     துலக்க அரி திரு ...... மருகோனே!       --- (முடித்த குழலினர்) திருப்புகழ்.

உலுத்த ராவணனைச் சிரம் இற்றிட
     வதைத்து, மாபலியைச் சிறை வைத்தவன்,
     உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் ...... மருகோனே!
                                                          --- (எலுப்பு நாடிகள்) திருப்புகழ்.

அகில புவனமும் அளவிடு குறியவன்,
     அளவு நெடியவன், ளவிட அரியவன் ...... மருகோனே!
அரவு புனைதரு புநிதரும் வழிபட,
     மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
     அறிவை அறிவது பொருள் என அருளிய ...... பெருமாளே.
                                                          --- (குரமகுருபர குணதர) திருப்புகழ்.

பொல்லாக் குறள் உருவாய், பொன்கையில் நீர் ஏற்று,
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்,
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாக அணையான்,
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்துஉளனே. --- நாச்சியார் திருமொழி.

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்,
மண்தா என இரந்து மாவலியை - ஒண்தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்,
ஆரங்கை தோய அடுத்து.                                          --- பொய்கை ஆழ்வார்.

நாராயண மாமன் சேயை முனிந்த கோவே ---

நாராயணமூர்த்தியாகிய மாமனின் மகனாகிய பிரமதேவனைக் கோபித்தவர் குகப்பெருமான்.

குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடுஞ் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கைலாயமலையை நண்ணினர். பிரமனை யொழிந்த எல்லாக் கணர்களும் யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.

தருக்குடன் செல்லுஞ் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன். கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர். பிரமதேவர் அச்சம் கொண்டு “படைத்தல் தொழிலுடைய பிரமன்” என்றனன். முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர். பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன். “நன்று! வேதவுணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக் வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர். சதுர்முகன் இருக்கு வேதத்தை ஓம் என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.

தாமரைத்தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்றுஉடைக் குமரவேள், நிற்றிமுன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக,ன்று உரைத்தான்.   --- கந்தபுராணம்.

ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன; சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது; வெட்கத்தால் தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை யஉணராமற் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை யுணராது மருண்டு நின்றனன்.

குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.

பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.

அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம் முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

சிட்டி செய்வது இத் தன்மை யதோ? னச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க”     ---கந்தபுராணம்.

பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

வேதநான்முக மறையோ னொடும் விளை
  யாடியே குடுமியிலே கரமொடு
  வீரமோதின மறவா”               --- (காணொணா) திருப்புகழ்.

அயனைக் குட்டிய பெருமாளே”       -- (பரவை) திருப்புகழ்.

ஆரணன் தனை வாதாடித, ஓர் உரை
 ஓதுகின்று என, வாராது எனா, அவன்
 ஆணவம் கெடவே காவலாம் அதில்      இடும்வேலா
                                                                             --- (வாரணந்) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”  --- கந்தர் கலிவெண்பா.


விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர் ---

நெல் விளைந்துள்ள வயல்களின் இடையில் சங்குகள் தவழுகின்ற சிறப்பு உடையது வெள்ளிகரம் என்னும் திருத்தலம்.  "ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள" என்றார் கோதைநாச்சியார்.

கருத்துரை

முருகா! தேவரீரைத் துதித்து, பிறவியை அறுத்துக் கொள்ள அருள் புரிவாய்.

    











No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...