அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஒருவரைச் சிறுமன
(விரிஞ்சிபுரம்)
முருகா!
சகல துக்கமும் அறவும், சகல சற்குணமும் வரவும்,
உலகில் புகழோடு வாழவும்,
தேவரீரது திருவடிகளை எப்போதும்
மறவாது இருக்கத் திருவருள் புரிக.
தனதனத்
தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான
ஒருவரைச்
சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்
தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்
டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட்
......டதனாலே
ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்
டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்
டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச்
......செயுமானார்
தருமயற்
ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச்
சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத்
தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத்
...... திரிவேனைச்
சகலதுக்
கமுமறச் சகலசற் குணம்வரத்
தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற்
சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட்
......டருவாயே
குருமொழித்
தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்
தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக்
கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத்
......திடும்வேலா
குயில்மொழிக்
கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்
சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்
கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப்
......புணர்வோனே
கருதுசட்
சமயிகட் கமைவுறக் கிறியுடைப்
பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்
கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத்
......திடுவோனே
கமுகினிற்
குலையறக் கதலியிற் கனியுகக்
கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற்
கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ......பெருமாளே.
பதம் பிரித்தல்
ஒருவரைச்
சிறுமனைச் சயன மெத்தையினில் வைத்து,
ஒருவரைத் தம தலைக் கடையினில் சுழலவிட்டு,
ஒருவரைப் பரபரப்பொடு தெருத் திரிய விட்டு,......அதனாலே
ஒருவருக்கு
ஒருவர் சக்களமையில் சருவவிட்டு,
உருவு பத்திரம் எடுத்து, அறையின் மல் புரியவிட்டு,
உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் எனச்
......செயும்
மானார்
தரு, மயல் ப்ரமைதனில் தவநெறிக்கு
அயல் என,
சரியையில் கிரியையில் தவமும் அற்று, எனது கைத்
தனம் அவத்தினில் இறைத்து, எவரும் உற்று, இகழ்வுறத் ......திரிவேனை,
சகல
துக்கமும் அற, சகல சற்குணம் வர,
தரணியிற் புகழ்பெற, தகைமை பெற்று, உனது பொன்
சரணம் எப்பொழுதும் நட்பொடு நினைத்திட அருள்
...... தருவாயே.
குருமொழித்
தவம் உடைப் புலவரைச் சிறையில் வைத்து,
அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை, முழுக்
கொடிய துர்க்குண அவத்தரை, முதல் துரிசு அறுத் ......திடும்வேலா!
குயில்மொழி, கயல்விழி, துகிர்இதழ், சிலைநுதல்,
சசிமுகத்து, இளநகை, கனகுழல், தனகிரி,
கொடிஇடை, பிடிநடை, குறமகள் திருவினைப் ......புணர்வோனே!
கருது
சட்சமயிகட்கு அமைவுற, கிறி உடைப்
பறிதலைச் சமணரை, குலமுதல் பொடிபடக்
கலகம் இட்டு, உடல் உயிர்க் கழுவின்
உச்சியினில் வைத் ...திடுவோனே!
கமுகினில்
குலை அற, கதலியில் கனி உக,
கழையின் முத்தம் உதிர, கயல் குதித்து உலவுநல்
கனவயல் திகழ் திருக் கரபுரத்து அறுமுகப்
......பெருமாளே.
பதவுரை
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில்
வைத்து --- தங்களுடைய குலத்தின் குருவான வியாழபகவான் சொன்ன சொற்படி
தவநெறியில் இருந்த தேவர்களை சிறையில் வைத்து,
அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை
--- மிகவும் கொடுமை செய்து வந்த அரக்கர்களை,
முழு கொடிய துர்க்குண அவத்தரை ---
முற்றிலும் கொடிய குணமே படைத்த பயனற்றவர்களை,
முதல் துரிசு அறுத்திடும் வேலா --- அவர்களுக்கு முதல்வனான சூரமன்பன் செய்து வந்த குற்றங்களுக்காக வேலாயுதத்தை
விடுத்து அழித்தவரே!
குயில் மொழி --- குயில்
போன்ற இனிமையான மொழியையும்,
கயல் விழி --- கயல் மீன் போன்ற கண்களையும்,
துகிர் இதழ் --- பவளம் போன்ற வாயிதழையும்,
சிலை நுதல் --- வில்லைப் போன்ற நெற்றியையும்,
சசி முகத்து --- முழுநிலவைப் போன்ற திருமுகத்தையும்,
இள நகை ---
சிறுநகையையும், (குறு
முறுவலையயும்)
கன குழல் --- அடர்த்தியான கூந்தலையும்,
தன கிரி --- மலை போன்ற முலைகளையும்,
கொடி இடை ---
கொடி
போன்ற இடையையும்,
பிடி நடை --- பெண் யானையைப் போன்ற
நடையையும்,
குறமகள் திருவினை புணர்வோனே --- குறப் பெண்களில்
மேலானவராகிய வள்ளிநாயகியைப் புணர்ந்தவரே!
கருது சட் சமயிகட்கு
அமைவு உற கிறி உடை --- ஆராய்ச்சி செய்துள்ள ஆறு சமயத்து அறிஞர்களுக்கும்
பொருந்தியுள்ள தந்திரத்தைக் கொண்டவர்களும்,
பறி தலை சமணரை குல முதல் பொடிபட
கலகமிட்டு --- தலையின் மயிரைப் பறிப்பவர்களான சமணர்களின் குலம் முழுவதும் அழிந்து
ஒழிய, வாதப் போர் செய்து
உடல் உயிர் கழுவின் உச்சியினில்
வைத்திடுவோனே --- அவர்களின் உயிருள்ள உடலை கழு முனையில் வைத்தவரே!
கமுகினின் குலை அற --- பாக்கு மரத்தின்
குலைகள் அற்று விழ,
கதலியின் கனி உக --- அக் குலைகள்
படுதலால் வாழை மரத்தில் உள்ள பழங்கள் விழ,
கழையின் முத்து உதிர --- அதன் விளைவாக, கரும்பில் தோன்றி
உள்ள முத்துக்கள் விழ,
கயல் குதித்து உலவு நல் கன வயல் திகழ்
--- கயல் மீன்கள் விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற
திருக் கரபுரத்து அறுமுக பெருமாளே ---
திருக் கரபுரம் என்றும் விரிஞ்சிபுரம் என்றும் வழங்கப்படும் திருத்தலத்தில்
எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!
ஒருவரைச் சிறுமனைச்
சயன மெத்தையினில் வைத்து --- ஒருவரை சிறு வீட்டில் உள்ள
மெத்தையில் படுக்க வைத்து,
ஒருவரைத் தம தலைக்
கடையினில் சுழல விட்டு …. ஒருவரைத் தம் வீட்டு முன்வாசலில்
மனக்குழப்பத்தோடு சுழன்று இருக்க வைத்து,
ஒருவரைப் பரபரப்பொடு
தெருத் திரிய விட்டு --- இன்னொருவரை
மிகுந்த பரபரப்பான மனத்துடன் தெருவினில் அலைய விட்டு,
அதனாலே --- அத்தகையச்
செயலாலே
ஒருவருக்கு ஒருவர் சக்களமையில் சருவ
விட்டு --- ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டும்படி விட்டு,
உருவு பத்திரம் எடுத்து --- தம்மிடத்து உள்ள
சிறுவாளைக் கொண்டு,
அறையில் மல் புரிய விட்டு --- அறையில்
மல் போர் புரியும்படி விட்டு,
உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம்
என செ(ய்)யும் மானார் --- எண்ணிப் பார்க்கில் உயிர் பிழைப்பதே முறையானது என்று
எண்ணச் செய்கின்ற பொது மகளிர்
தரும் மயல் ப்ரமை தனில்
---
தருகின்ற காம இச்சையால் உண்டான அறியாமை காரணமாக
தவநெறிக்கு அயல் என --- தவநெறியில்
இருந்து மாறுபட்டவனாகி,
சரியையில் கிரியையில் தவமும் அற்று
--- சரியை மார்க்கத்திலும், கிரியை
மார்க்கத்திலும் பயின்று ஒழுகுகின்ற தவமுயற்சி அற்றுப் போய்,
எனது கை தனம் அவத்தினில் இறைத்து ---
அடியைனது கை வசம் இருந்த பொருள் அனைத்தையும் வீணில் செலவழித்து,
எவரும் உற்று இகழ்வுற திரிவேனை --- யாவரும்
இகழும்படியாகத் திரிகின்ற அடியேனுக்கு
சகல துக்கமும் அற --- துக்கங்கள்
அனைத்தும் அற்று நீங்கவும்,
சகல சற்குணம் வர --- நற்குணங்கள் அனைத்தும்
பொருந்தவும்,
தரணியில் புகழ் பெற --- இந்தப்
பூவுலகில் புகழோடு வாழ
தகைமை பெற்று --- உரிய சிறப்பைப்
பெற்று,
உனது பொன் சரணம் எப்பொழுதும் நட்பொடு
நினைந்திட அருள் தருவாயே --- தேரீருடைய அழகிய திருவடிகளை எப்போதும் அன்புடன்
நினைக்கும்படி திருவருளைத் தந்தருள்க.
பொழிப்புரை
தங்களுடைய குலத்தின் குருவான வியாழபகவான் சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த தேவர்களை சிறையில் வைத்து, மிகவும் கொடுமை செய்து வந்த அரக்கர்களை,
முற்றிலும்
கொடிய குணமே படைத்த பயனற்றவர்களை,
அவர்களுக்கு
முதல்வனான சூரமன்பன் செய்து வந்த குற்றங்களுக்காக வேலாயுதத்தை விடுத்து
அழித்தவரே!
குயில் போன்ற இனிமையான மொழியையும், கயல் மீன் போன்ற
கண்களையும்,
பவளம்
போன்ற வாயிதழையும், வில்லைப்
போன்ற நெற்றியையும், முழுநிலவைப் போன்ற திருமுகத்தையும், சிறுநகையையும், (குறு
முறுவலையயும்) அடர்ந்த
கூந்தலையும்,
மலை
போன்ற முலைகளையும், கொடி போன்ற இடையையும், பெண் யானையைப் போன்ற
நடையையும், குறப் பெண்களில்
மேலானவராகிய வள்ளிநாயகியைப் புணர்ந்தவரே!
ஆராய்ச்சி செய்துள்ள ஆறு சமயத்து அறிஞர்களுக்கும்
பொருந்தியுள்ள தந்திரத்தைக் கொண்டவர்களும், தலையின் மயிரைப் பறிப்பவர்களான
சமணர்களின் குலம் முழுவதும் அழிந்து ஒழிய, வாதப் போர் செய்து, அவர்களின் உயிருள்ள
உடலை கழு முனையில் வைத்தவரே!
பாக்கு மரத்தின் குலைகள் அற்று விழ, அக் குலைகள் படுதலால் வாழை மரத்தில்
உள்ள பழங்கள் விழ, அதன் விளைவாக, கரும்பில் தோன்றி
உள்ள முத்துக்கள் விழ, கயல் மீன்கள்
விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற திருக் கரபுரம் என்றும்
விரிஞ்சிபுரம் என்றும் வழங்கப்படும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில்
மிக்கவரே!
ஒருவரை சிறு வீட்டில் உள்ள மெத்தையில்
படுக்க வைத்து, ஒருவரைத் தம் வீட்டு முன்வாசலில்
மனக்குழப்பத்தோடு சுழன்று இருக்க வைத்து, இன்னொருவரை மிகுந்த பரபரப்பான
மனத்துடன் தெருவினில் அலைய விட்டு, அத்தகையச் செயலாலே ஒருவருக்கு ஒருவர்
பகைமை பாராட்டும்படி விட்டு, தம்மிடத்து
உள்ள சிறுவாளைக் கொண்டு, அறையில் மல் போர்
புரியும்படி விட்டு, எண்ணிப் பார்க்கில் உயிர்
பிழைப்பதே முறையானது என்று எண்ணச் செய்கின்ற பொது மகளிர் தருகின்ற
காம இச்சையால் உண்டான அறியாமை காரணமாக தவநெறியில்
இருந்து மாறுபட்டவனாகி, சரியை மார்க்கத்திலும், கிரியை மார்க்கத்திலும் பயின்று
ஒழுகுகின்ற தவமுயற்சி அற்றுப் போய்,
அடியைனது
கை வசம் இருந்த பொருள் அனைத்தையும் வீணில் செலவழித்து, யாவரும் இகழும்படியாகத் திரிகின்ற அடியேனுக்கு, துக்கங்கள் அனைத்தும்
அற்று நீங்கவும்,
நற்குணங்கள்
அனைத்தும் பொருந்தவும், இந்தப் பூவுலகில் புகழோடு வாழ உரிய சிறப்பைப் பெற்று, தேரீருடைய அழகிய திருவடிகளை எப்போதும்
அன்புடன் நினைக்கும்படி திருவருளைத் தந்தருள்க.
விரிவுரை
ஒருவரைச்
சிறுமனைச் சயன மெத்தையினில் வைத்து ..... உயிர் பிழைப்பது கருத்து
அளவில் உச்சிதம் என செ(ய்)யும் மானார் ---
தம்மை
நாடி வந்தவருள் ஒருவரைத் தமது சிறு வீட்டில் உள்ள மெத்தையில் படுக்க வைத்து இன்பம்
தருவர்.
அதே வேளையில் வேறு ஒருவரைத் தம் வீட்டு முன்வாசலில்
மனக்குழப்பத்தோடு இருக்க வைப்பர்.
இன்னொருவரை
மிகுந்த பரபரப்பான மனத்துடன் தெருவினில் அலைய விட்டு வைப்பர். விலைமாதரின் இத்தகையச் செயலாலே, அவரை நாடி வந்தவர்களுள் ஒருவருக்கு ஒருவர்
பகைமை பாராட்டுவர். (சக்களமை -
சக்களத்திப் பகைமை. சக்களத்தி - மாற்றாள் ஆன மனைவி, போலிப் பொருள்.) பொறுக்க முடியாமல், தம்மிடத்து உள்ள
சிறுவாளைக் கொண்டு, (பத்திரம் - உடைவாள், சிறுவாள்.) போர் புரியும்படி விட்டு வைப்பர். இந்த
இழிநிலையை, எண்ணிப் பார்க்கையில், இவரோடு கூடுவதை விடவும், இவரைத்
தவிர்த்து, உயிர் பிழைப்பதே முறையானது
என்று எண்ணும்படியாகச் செய்வது பொதுமகளிர் இயல்பு என்று காட்டினார் சுவாமிகள்.
ஒருவரொடு கண்கள், ஒருவரொடு கொங்கை,
ஒருவரொடு செங்கை ...... உறவாடி,
ஒருவரொடு சிந்தை, ஒருவரொடு நிந்தை,
ஒருவரொடு இரண்டும் ......
உரையாரை
மருவ, மிக அன்பு
பெருக உளது என்று
மனம் நினையும் இந்த ......
மருள் தீர,
வனசம் என வண்டு தனதனன என்று
மருவு சரணங்கள் ...... அருளாயோ? --- திருப்புகழ்.
குமரேச
சதகம் என்னும் நூலில் விலைமாதரைக் குறித்துப் பாடி உள்ளதைக் காண்போம்.
பூவில்
வேசிகள் வீடு சந்தைப் பெரும்பேட்டை,
புனைமலர் படுக்கைவீடு
பொன் வாசல், கட்டில்பொது அம்பலம், உடுத்த துகில்
பொருவில் சூதாடுசாலை,
மேவல்
ஆகிய கொங்கை கையாடு திரள்பந்து,
விழிமனம் கவர்தூண்டிலாம்,
மிக்கமொழி
நீர்மேல் எழுத்து, அதிக மோகம் ஒரு
மின்னல், இரு துடை சர்ப்பமாம்,
ஆவலாகிய
அல்குலோ தண்டம் வாங்கும் இடம்,
அதிக படம் ஆம் மனது கல்,
அமிர்த
வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி,
அவர்க்கு ஆசை வைக்கலாமோ?
மாவடிவு
கொண்டே ஒளித்த வரு சூரனை
வதைத்த வடிவேலாயுதா!
மயிலேறி
விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
உலகில்
பொதுமகளிர் வீடு பெரிய சந்தைப்பேட்டை ஆகும். மலர்களாலே
அழகு செயப்பெற்ற படுக்கை அறையானது பொன்னைப் பறிக்கும் வாயில். படுக்கைக் கட்டில் என்பது பலருக்கும் பொதுவான இடம்; அவர்கள் உடுத்த ஆடையானது
ஒப்பற்ற சூதாடும் அரங்கு. விருப்பத்தை மிகச்
செய்யும் அவர்களின் கொங்கைகள் என்பவை பலரும் கையால் எடுத்து ஆடப்படுகின்ற
திரண்ட பந்து. அவர்களின் கண்கள்
பலருடைய மனத்தையும் கவர்கின்ற தூண்டில் ஆகும். அவர்கள் வெகுவாகப் பேசும் பேச்சு நீர்மேல் எழுத்தைப்
போன்றது. அவர்கள் காட்டும்
மிக்க ஆசை ஒரு மின்னல் போன்று கணப் பொழுதில் மாறக் கூடியது. அவர்களின் இரண்டு துடைகளும் பாம்புகள். விருப்பத்தை மூட்டும் அவரது அல்குலோ என்றால், அது தண்டனையை
நிறைவேற்றும் இடம். மிக்க வஞ்சகம்
பொருந்திய அவர்கள் உள்ளம் கல் ஆகும்.
அமுதம்
என்று கூறும் அவர்கள் வாய் இதழ் ஆனது ஓவியக் கூடத்திலே பலரும் எச்சில் துப்ப
இருக்கும் எச்சில் குழி. எனவே, இத்தகைய இழிகுணங்கள் பொருந்திய விலைமகளிரிடம் காதல் கொள்வது
தகாது.
தரும்
மயல் ப்ரமை தனில் தவநெறிக்கு அயல் என ---
பிரமை
- மயக்கம், பைத்தியம், பெருமோகம், அறியாமை.
தவம்
- பற்று நீங்கிய வழிபாடு. பற்று நீங்கச் செய்யும் வழிபாடு.
இத்தகு
இழிவை உடைய விலைமாதர் மீது அறியாமை காரணமாக உண்டான காம இச்சையால் தவநெறியில் இருந்து உயிரானது பாறுபடும்.
சரியையில்
கிரியையில் தவமும் அற்று ---
தவம்
- பற்று நீங்கிய வழிபாடு. பற்று நீங்கச் செய்யும் வழிபாடு.
அவ்வாறு மறுபட்டதன்
விளைவாக சரியை, கிரியை ஆகிய
நெறிகளில் நின்று தவம் உஞற்றுவதை மறக்கும் நிலை உண்டாகும்.
ஆன்மா
முத்தி என்னும் பாச நீக்கத்தை அடைவதற்கு உரிய நெறிகள் நான்கு ஆகும். சரியை என்னும் தாசமார்க்கம், கிரியை
என்னும் சற்புத்திர மார்க்கம், யோகம் என்னும் சகமார்க்கம், ஞானம் என்னும் சன்மார்க்கம்.
இம்முறைகளையே
திருமந்திரம் தெளிவு படுத்துகின்றது. இம் மார்க்கங்களின் இலக்கணம்...
தாசமார்க்கம் ---
எளியநல் தீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
சற்புத்திர
மார்க்கம்---
பூசித்தல் வாசித்தல் போற்றல்
செபித்திடல்
ஆசுஅற்ற நல்தவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்டு அன்னமும் நீர்சுத்தி
செய்தல்மற்று
ஆசுஅற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
சகமார்க்கம்
---
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.
சன்மார்க்கம்
---
பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்து,
ஒசியாத உண்மைச் சொரூபோ தயத்துஉற்று,
அசைவானது இல்லாமை ஆனசன் மார்க்கமே.
இதை
அரும்பு, மலர், காய், கனி ஆகியவற்றிற்கு ஒப்பிடுகின்றார்
தாயுமானார்.
விரும்பும்
சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர்
காய்கனிபோல் அன்றோ பராபரமே.
காய்
முற்றிக் கனியாவது போல், யோக சாதனையில் சித்தி
பெற்றோர்க்கே ஞானத்தில் இச்சை உண்டாகும். விட்ட குறையால், சில பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானத்தின்கண்
இச்சை எழுமாயின், அவர்கள்
முற்பிறப்பில் யோக அனுட்டிப்பில் சித்தி பெற்றவர்களே ஆவர்.
யோகியர்க்கே
ஞானம் ஒழுங்கு ஆம், பேர் அன்பான
தாகியரும்
யோகம் முன்னே சார்ந்தோர் பராபரமே. --- தாயுமானார்.
இந்
நான்கு நிலையில் நின்றோர் முறையே பெறும் முத்திகள் நான்கு. அவை சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம். சாரூபம் பெற்றார் அங்கிருந்தே மேலும் தவம்
செய்து சாயுச்சியம் பெறுவர்.
சன்மார்க்கம்
சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க் கம்என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம்
நால் அவைதாம் ஞானம் யோகம்
நல்கிரியா சரியைஎன நவிற்றுவதும் செய்வர்
சன்மார்க்க
முத்திகள்சா லோக்கிய சா மீப்பிய
சாரூப்பிய சாயுச்சியம் என்றுசதுர்
விதமாம்
முன்மார்க்க
ஞானத்தால் எய்தும் முத்தி
முடிவு என்பர்; மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்
தாதமார்க்
கம் சாற்றில், சங்கரன்தன் கோயில்
தலம் அலகுஇட்டு, இலகுதிரு மெழுக்கும் சாத்தி
போதுகளும்
கொய்து பூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடி
தீதுஇல்
திரு விளக்குஇட்டு, திருநந்த வனமும்
செய்து திருவேடங்கண்டால் அடியேன்
செய்வது
யாது? பணியீர்! என்று பணிந்து, அவர்தம் பணியும்
இயற்றுவது; இச்சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர்.
புத்திரமார்க்
கம்புகலின், புதியவிரைப் போது
புகைஒளிமஞ் சனம் அமுது முதல்கொண்டு
ஐந்து
சுத்திசெய்துஆ
சனம், மூர்த்தி மூர்த்தி
மானாம்
சோதியையும் பாவித்துஆ வாகித்து சுத்த
பத்தியினால்
அருச்சித்து பரவிப் போற்றிப்
பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலும்
இக் கிரியையினை இயற்று வோர்கள்
நின்மலன்தன் அருகிருப்பர், நினையுங் காலே.
சகமார்க்கம்
புலன் ஒடுக்கித் தடுத்து, வளி இரண்டும்
சலிப்பு அற்று, முச்சதுர முதல் ஆதாரங்கள்
அகமார்க்கம் அறிந்து,
அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து, அங்கு
அணைந்துபோய் மேல்ஏறி, அலர்மதி மண
டலத்தின்
முகமார்க்க
அமுது உடலம் முட்டத் தேக்கி,
முழுச் சோதி நினைந்திருத்தல் முதலாக
வினைகள்
உக, மார்க்க
அட்டாங்க யோக முற்றும்
உழத்தல், உழந்தவர் சிவன் தன் உருவத்தைப் பெறுவர்.
சன்மார்க்கம்
சகலகலை புராணம் வேதம்
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும்
உணர்ந்து
பன்மார்க்கப்
பொருள் பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக்
காட்டும்
நன்மார்க்க
ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்
பின்மார்க்கச்
சிவனுடனாம் பெற்றி ஞானப்
பெருமைஉடையோர் சிவனைப் பெறுவர் காணே. --- சிவஞானசித்தியார்.
எனது
கை தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை ---
பத்தி
நெறியில் பயிலாது, முத்தி நெறி அறியாத மூர்க்கராகிய விலைமாதர் பழக்கத்தினால், கை வசம் இருந்த பொருள் அனைத்தையும் வீணில்
செலவழித்து, பின்னர் யாரும்
இகழும்படியான இழி நிலையை அடைவர் காமுகர்.
சகல
துக்கமும் அற, சகல சற்குணம் வர, தரணியில் புகழ் பெற, தகைமை பெற்று, உனது பொன் சரணம்
எப்பொழுதும் நட்பொடு நினைந்திட அருள் தருவாயே ---
இறைநெறியில்
நின்று தவத்தைப் புரிந்து நிலையான இன்பத்தைப் பெற முயலாமல், சிற்றின்பத்தை வேண்டி, அதை விலைக்குத்
தருகின்ற மாதரை நாடி, அரிதில் முயன்று தேடிய பொருளைத் தொலைத்து, வாழ்வையும், வாழ்நாளையும்
அவத்திலே போக்கியதன் விளைவாக, நற்குணங்கள் எவையும் பொருந்தாது, சகல விதமான
துக்கங்கள் அனைத்தும் வந்து சேரும். உள்ள பொருளை எல்லாம் விலைமாதர்க்குக் கொடுத்ததால், அறவழியில்
பொருளைச் செலவிட்டு, உயிருக்கு ஊதியமாக வரும் புண்ணியத்தையும் புகழையும் தேடிக்
கொள்ளாத இழிநிலை நீங்கவேண்டுமானால், இறைவன் திருவருள் துணை புரிய வேண்டும். துணை புரிய
வேண்டுமானால் அதற்கு உரிய நெறியிலே நின்று, திருவருளை நாடி
நிற்கவேண்டும். இறைவனது திருவடியை மறவாத நிலையை அருளுமாறு அடிகள் வேண்டுகின்றார்.
கலகவிழி
மாமகளிர் கைக்குளே ஆய், பொய்
களவுமதன் நூல்பல படித்து, அவா வேட்கை
கனதனமும் மார்பும் உறல் இச்சையால் ஆர்த்து
..கழுநீர்ஆர்
கமழ்நறை
சவாது புழுகைத் துழாய் வார்த்து
நிலவரசு நாடு அறிய கட்டில் போட்டார்ச் செய்
கருமம் அறியாது, சிறு புத்தியால் வாழ்க்கை
...... கருதாதே,
தலம்
அடைசு சாளர முகப்பிலே காத்து,
நிறைபவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது
என உருகி ஓடி, ஒரு சற்றுளே வார்த்தை
......தடுமாறித்
தழுவி, அநுராகமும் விளைத்து, மா யாக்கை
தனையும் அரு நாளையும் அவத்திலே போக்கு
தலைஅறிவு இலேனை நெறி நிற்க நீ தீட்சை....தரவேணும். --- திருப்புகழ்.
அடியவர்கள் எப்போதும் இறைவன் திருவடியை மறவாதிருக்கும் தன்மை உடையவர்கள்.
இந்த நிலையை அவர்கள் ஆண்டவனிடம் வேண்டிப் பெறுவார்கள். “மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்”
என்று வேண்டுகின்றார் காரைக்காலம்மையார். “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரல்
வேண்டும்” என்கிறார் அப்பர்.
படையால் உயிர்கொன்று தின்று,
பசுக்களைப் போலச் செல்லும்
நடையால் அறிவு இன்றி, நாண் சிறிது
இன்றி, நகும் குலத்தில்
கடையாய்ப் பிறக்கினும், கச்சியுள்
ஏகம்பத்து எங்களை ஆள்
உடையான் கழற்கு அன்பரேல் அவர்
யாவர்க்கும் உத்தமரே. --- பதினோராம் திருமுறை.
எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
எய்துக, பிறப்பில் இனி நான்
எய்தாமை எய்துகினும் எய்திடுக, இருமையினும்
இன்பம் எய்தினும் எய்துக,
வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக,
மிகுவாழ்வு வந்திடினும் வருக,
வறுமை வருகினும் வருக, மதிவரினும் வருக, அவ
மதிவரினும் வருக, உயர்வோடு
இழிவகைத்து உலகின் மற்று எதுவரினும் வருக, அலது
எது போகினும் போக, நின்
இணைஅடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம்
எனக்கு அடைதல் வேண்டும் அரசே,
கழிவகைப் பவரோகம் நீக்கும் நல்அருள் என்னும்
கதிமருந்து உதவு நிதியே
கனகஅம் பலநாத கருணைஅம் கணபோத
கமலகுஞ் சிதபாதனே. --- திருவருட்பா.
பெருமானே! தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற இந்த ஏழுவகைப் பிறவிகளில் எந்தப்
பிறவியிலேனும் அடியேன் பிறக்கத் தயார். அது பற்றிச் சிறியேனுக்குக் கவலையில்லை.
ஒருவேளை பிறவாமை வந்தாலும் வரட்டும். இம்மையிலும் மறுமையில் இன்பமே
வருவதேனும் வரட்டும். அல்லது துன்பமே வருவதாயினும் சரி. அது பற்றியும் அடியேனுக்குக் கவலையில்லை.
சிறந்த வாழ்வு வந்தாலும் வரட்டும்; பொல்லாத வறுமை வருவதாயினும் நன்றே.
எல்லோரும் என்னை நன்கு மதிப்பதாயினும் மதிக்கட்டும்; அல்லது சென்ற சென்ற இடமெல்லாம் கல்லை விட்டு
எறிந்து கருப்புக்கொடி காட்டி `வராதே! திரும்பிப்போ’ என்று
அவமதி புரிந்தாலும் புரியட்டும்.
உயர்வும் தாழ்வும் கலந்துள்ள இந்த உலகிலே மற்று எது வந்தாலும் வரட்டும். எது போனாலும் போகட்டும்.
இறைவனே! எனக்கு இவைகளால் யாதும் கவலையில்லை.
ஒரே ஒரு வரத்தனை உன் பால் யாசிக்கின்றேன்.
உனது இரண்டு சரணாரவிந்தங்களையும் சிறியேன் மறவாமல் இருக்கின்ற மனம்
ஒன்றுமட்டும் வேண்டும். அந்த வரத்தை வழங்கி அருளும்” என்று வடலூர் வள்ளல் வேண்டுகின்றார். என்ன அழகிய வரம்?
நாரதர் ஒரு சமயம் முருகப் பெருமானை வேண்டித் தவம் புரிந்தார். முருகவேள்
அவர் முன் தோன்றி, “என்ன
வரம் வேண்டும்?” என்று
கேட்டருளினார். நாரதர், “ஐயனே! உன் திருவடியை மறவாத மனம் வேண்டும்” என்றார். முருகன் அந்த வரத்தை நல்கி விட்டு, “இன்னும் ஏதாவது வரம் கேள், தருகிறேன்” என்றார். நாரதர் “பெருமானே! உமது திருவடியை மறவாத மனத்தை
உமது திருவருளால் பெற்ற நான், அந்த மனத்தால் இன்னொரு
வரத்தைக் கேட்கின்ற கெட்ட புத்தி வராமல் இருக்க வேண்டும்” என்று
கேட்டார்.
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து, அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை, முழு கொடிய
துர்க்குண அவத்தரை, முதல் துரிசு
அறுத்திடும் வேலா ---
தங்களுடைய
குல குருவான வியாழபகவான் சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த தேவர்களை சிறையில்
வைத்து, மிகவும் கொடுமை
செய்து வந்த அரக்கர்களை, முற்றிலும் கொடிய
குணமே படைத்த பயனற்றவர்களை, அவர்களுக்கு
முதல்வனான சூரமன்பன் செய்து வந்த குற்றங்களுக்காக வேலாயுதத்தை விடுத்து
அழித்தவர் முருகப் பெருமான்.
"முதல்
துரிசு" என்பதை, உயிருக்குப்
பொருந்தி உள்ள குற்றத்தை விளைவிக்கின்ற மலங்களை அறுத்து என்றும் பொருள் கொள்ளலாம்.
எந்த உயிரையும் கொல்லவது இறைவனுடைய அருட்செயல் ஆகாது. உயிருக்கு உள்ள குற்றங்கள்
ஆகிய மலத்தை அறுத்துப் பக்குவம் வரச் செய்வதே இறைவனுடைய அருட்செயல்.
மாயை
தனை உதறி,
வல்வினையைச்
சுட்டு,
மலம்
சாய
அமுக்கி,
அருள்
தான் எடுத்து,
– நேயத்தால்
ஆனந்த
வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான், எந்தையார் பாதம்
தான். --- உண்மை விளக்கம்.
குயில் மொழி, கயல் விழி, துகிர் இதழ், சிலை நுதல், சசி முகத்து, இள நகை, கன குழல், தன கிரி, கொடி இடை, பிடி நடை, குறமகள் திருவினை புணர்வோனே ---
(திரு
- செல்வம், சிறப்பு, அழகு, பொலிவு, தெய்வத்தன்மை, பாக்கியம்)
திருகமளின்
மகள் வள்ளிபிராட்டி. ஆதலால், வள்ளிமலையில் அவதரித்து, குறவர் குலத்தில்
வளர்ந்த அந்த அகிலாண்ட நாயகியை, குறமகள் திரு என்றார் சுவாமிகள்.
குறமகளிரில்
அழகும் தெய்வத் தன்மையும் வாய்ந்தவர் வள்ளிநாயகியார். குறவர் குலத்தின் முன்னைத்
தவப் பயனாக வள்ளிமலையில் அவதரித்தார். குயில் போன்ற இனிமையான மொழியையும், கயல் மீன் போன்ற
கண்களையும், பவளம்
போன்ற வாயிதழையும், வில்லைப் போன்ற நெற்றியையும், முழுநிலவைப் போன்ற திருமுகத்தையும், சிறுநகையையும், (குறு
முறுவலையயும்) அடர்த்தியான கூந்தலையும், மலை போன்ற முலைகளையும், கொடி போன்ற இடையையும், பெண் யானையைப் போன்ற
நடையையும், உடையவரும், குறப் பெண்களில்
மேலானவரும் ஆகிய வள்ளிநாயகியைப் புணர்ந்தவர் முருகப் பெருமான்.
"பருத்த
முலை, சிறுத்த இடை, வெளுத்த நகை, கறுத்த குழல், சிவத்த இதழ்
பறச் சிறுமி" என்றார் வேல் வகுப்பில்.
பெண்
யானையைப் போன்றும், அன்னத்தைப்
போன்றும் நடையை உடையவர் உமாதேவியார் என்பதால், "மாதர்
மடப்பிடியும்,
மட
அன்னமும் அன்னது ஒர் நடை உடை மலைமகள்" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
கருது
சட் சமயிகட்கு அமைவு உற கிறி உடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட கலகமிட்டு, உடல் உயிர் கழுவின்
உச்சியினில் வைத்திடுவோனே ---
கிறி
- பொய், தந்திரம், மாயம். கலகம் - போர். கழு - கழுமரம். சூலம்.
ஒருகாலத்தில்
பாண்டிய நாடு சமண இருளால் மூடப்பட்டுக் கிடந்தது. அப்போது அங்கு அரசாண்டவன்
கூன்பாண்டியன். அங்கு பாண்டிமாதேவியும் குலச்சிறையார் என்கிற அமைச்சர் பெருமானும்
சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். அவ்விருவர்களது அழைப்பிற்க் இணங்கி
திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருஞானசம்பந்த சுவாமிகள் அடியார் குழாங்கள் சூழ
மதுரைக்கு எழுந்தருளினார். அப்பொழுது சமணர்கட்குப் பல துன்னிமித் தங்கள் உண்டாயின.
குலச்சிறை நாயனார் திருஞானசம்பந்தப் பெருமானை எதிர்கொண்டு இறைஞ்சி ஏத்தித் சொக்கநாதன்
திருக்கோயிலுக்குக் கொண்டு சென்றார். மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தப்
பெருமானை அங்கு தொழுதார்.
வெம்பந்தம்
நீக்கும் திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியாரையும் குலச்சிறையாரையும்
சிறப்பித்துப் பதிகம் பாடியருளினார். பிறகு திருமடத்தில் தங்கி இருந்தார்.
கொடுங்குணம் உடைய சமணர்கள் மனம் பொறாமையால், பிள்ளையார் இருந்த திருமடத்தில் தீ
வைத்தனர். திருஞானசம்பந்தப் பிள்ளையார் அத்தீயைப் “பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”
என்று திருவாய் மலர்ந்தருள, உடனே அத்தீ பாண்டியனைப்
பற்ற வெப்பு நோயால் வெதும்பி கழிபெருந் துன்புற்றான். சமணர் மணி மந்திர ஒளடதங்களால்
நீக்க முயன்று, பயன் பெறாது
ஓய்ந்தனர். அவர்கள் முயற்சியால் கணவன் அனுமதி பெற்று திருஞானசம்பந்தப் பெருமாளை
எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அங்கு வர அவரது அருளுருவைச் சமணர்கள் கண்டு
கதிரவனைக் கண்ட குமுத மலர்கள் போலாயினார்,
மங்கையர்க்கரசியாரும், குலச்சிறைநாயனாரும்,
ஞானத்தின்
திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின்
மிசை அன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை
தேன்
நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின்
எழுபிறப்பைக் கண்குளிரக் கண்டார்கள்.
பெருமான்
“மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தை உலகம் உய்யப் பாடி, திருநீறு பூசி, பாண்டியன் வெப்பு நோயைத்
தீர்த்தருளினார். பிறது சமணருடன் கனல்வாது புரிந்து வென்றார்.
பின்னரும்
புனல்
வாது புரிய நேர்ந்த பொழுது,
"வாழ்க
அந்தணர், வானவர் ஆன் இனம்,
வீழ்க
தண்புனல், வேந்தனும் ஓங்குக‘,
ஆழ்க
தீயது, எல்லாம் அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர்
தூர்கவே"
என்று
தொடங்கும் திருப்பாடல் உடைய திருப்பாசுரத்தைப் பாடியருளி, அந்த ஏட்டினை வையை ஆற்றின் வெள்ளத்தில்
விட்டார். அது நீரினை எதிர்ந்து மேலேறிச் சென்றது. ஏடு நிற்க, வன்னியும் மத்தமும் என்னும் திருப்பதிகம்
பாடி அருளினார். குதிரை மீதேறிக் காற்றினும் கடியச் சென்று, குலச்சிறை
நாயனார் ஏட்டினை எடுத்து வந்தார். எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று
எழுதப்பட்ட அந்த திருப்பாசுரம் காரணமாக, சமண இருள் நீங்கியதோடு, பாண்டியனின்
கூனும் நிமிர்ந்தது. கூன் பாண்டியன், நின்றசீர் நெடுமாற பாண்டியன் ஆனான். முன்பே
செய்து கொண்ட ஒப்பந்தப்படி, எண்ணாயிரம் சமணர்கள் கழு ஏறினார்கள்.
அழிந்து
புவனம் ஒழிந்திடினும்
அழியாத் தோணி புரத்தின்மறை
யவர்கள்
குலத்தின் உதித்து, அரனோடு
அம்மை தோன்றி அளித்த வள்ளச்
செழுந்தண்
முலைப்பால் குடித்து, முத்தின்
சிவிகை ஏறி மதுரையில் போய்,
செழியன்
பிணியும், சமண் பகையும்,
தேவி துயரும் தீர்த்து அருளி,
வழிந்து
நறுந்தேன் உகுவனபோல்
மதுரம் கனிந்து கடைதுடிக்க
வடித்துத்
தெளிந்த செந்தமிழ்த் தே-
வாரப் பாடல் சிவன் கேட்க
மொழிந்து
சிவந்த கனிவாய்ச்சண்
முகனே! முத்தம் தருகவே.
முத்துக்
குமரா! திருமலையின்
முருகா! முத்தம் தருகவே. --- திருமலை முருகன்
பிள்ளைத்தமிழ்.
கமுகினின்
குலை அற, கதலியின் கனி உக, கழையின் முத்து உதிர, கயல் குதித்து உலவு
நல் கன வயல் திகழ் திருக் கரபுரத்து அறுமுக பெருமாளே ---
பாக்குமரத்தின்
குலைகள் அற்று விழ, அக் குலைகள் படுதலால் வாழை மரத்தில்
உள்ள பழங்கள் விழ, அதன் விளைவாக, கரும்பில் தோன்றி
உள்ள முத்துக்கள் விழ, கயல் மீன்கள்
விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற திருக் கரபுரம் என்றும்
விரிஞ்சிபுரம் என்றும் வழங்கப்படும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில்
மிக்கவர் முருகப் பெருமான். பாலாறு
அருகில் பாய்வதால் வளம் கொழிக்கும் விரிஞ்சிபுரத்தின் இயற்கை அழகை சுவாமிகள்
அழகாகக் காட்டினார்.
நெல்
வயல்களில் நீர் நிறைந்து இருக்கும். அந்த நீரில் மீன்கள் இங்கும் அங்குமாக
விளையாடிக் கொண்டு இருக்கும். "தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி
பெய்து, ஓங்கு பெரும் செந்நெல்
ஊடு கயல் உகள" என்னும் திருப்பாவைப் பாடல் வரிகளை எண்ணுக.
கரம்
- கழுதை. கழுதை முகமுடைய அரக்கன் பூசித்தது.
விரிஞ்சன்
- பிரமன் பூசித்தது.
விரிஞ்சிபுரம் என்னும் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாநகரில் இருந்து சுமார் பன்னிரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. அழகான பழமையான திருக்கோயில். இறைவர் திருப்பெயர் வழித்துணைநாதர். மார்க்கபந்தீசுவரர் என்ற வடமொழியில் வழங்கப்படுகின்றது. கரன் என்னும் கழுதை முகமுடைய அரக்கன் பூசித்ததால் கரபுரம் என்றும், விரிஞ்சன் ஆகிய பிரமதேவன் பூசித்ததால் விரிஞ்சிபுரம் என்றும் வழங்கப் படுகின்றது. இயற்கை அழகு மிளிரும் சூயலில், பாலாற்றின் கரையில் உள்ள அருமையான திருத்தலம்.
அருணகிரிநாதர் பாடிய கரபுரம் இது அல்ல.
காவேரிப்பாக்கத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயில் என்று சிலர் கூறுகின்றனர்.
பொருத்தம் உடையதாக இல்லை. பொருந்துமேல்
கொள்க. இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் ஆராயும் கொள்ககையை உடையோருக்கும், ஓரு தலத்திற்கு உயர்வு
கற்பிக்க முயல்வோருக்கும் ஏற்பு உடையதாக அமையுமை அல்லாது, அருளைப் பெறுவதற்குத் துணை
புரியாது.
எப்படிக்
கொண்டாலும்,
அருணகிரிதாநப்
பெருமான் அருளிய பாடல் கருத்தை மட்டும் மறவாதீர் அன்பர்களே!
கருத்துரை
முருகா!
சகல துக்கமும் அறவும், சகல சற்குணமும் வரவும், உலகில் புகழோடு வாழவும், தேவரீரது திருவடிகளை
எப்போதும் மறவாது இருக்கத் திருவருள் புரிக.
No comments:
Post a Comment