வேலூர் - 0678. சேல்ஆலம் ஒன்று





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சேல் ஆலம் (வேலூர்)

முருகா!
விலைமாதரை நாடி உடல், பொருள், ஆவி மூன்றும் அழியாமல்,
உமது திருவடியை நாடி உய்ய அருள் புரிவாய்.


தானான தந்த தந்த
     தானான தந்த தந்த
     தானான தந்த தந்த ...... தனதான


சேலால மொன்று செங்கண்
     வேலாலும் வென்று மைந்தர்
     சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித்

தேன்மேவு செஞ்சொ லின்சொல்
     தானோதி வந்த ணைந்து
     தீராத துன்ப இன்ப ...... முறுமாதர்

கோலாக லங்கள் கண்டு
     மாலாகி நின்ற னன்பு
     கூராமல் மங்கி யங்க ...... மழியாதே

கோள்கோடி பொன்ற வென்று
     நாடோறு நின்றி யங்கு
     கூர்வாய்மை கொண்டி றைஞ்ச ...... அருள்தாராய்

மாலாலு ழன்ற ணங்கை
     யார்மாம தன்க ரும்பின்
     வாகோட ழிந்தொ டுங்க ...... முதல்நாடி

வாழ்வான கந்த முந்த
     மாறாகி வந்த டர்ந்த
     மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ

மேலாகு மொன்ற மைந்த
     மேனாடர் நின்றி ரங்க
     வேலாலெ றிந்து குன்றை ...... மலைவோனே

வேய்போல வுந்தி ரண்ட
     தோள்மாதர் வந்தி றைஞ்சு
     வேலூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சேல் ஆலம் ஒன்று செங்கண்
     வேலாலும் வென்று, மைந்தர்
     சீர்வாழ்வு சிந்தை பொன்ற, ...... முதல்நாடி,

தேன்மேவு செஞ்சொல் இன்சொல்
     தான் ஒதி வந்து, அணைந்து
     தீராத துன்ப இன்பம் ...... உறுமாதர்,

கோலாகலங்கள் கண்டு,
     மால் ஆகி, நின்தன் அன்பு
     கூராமல் மங்கி அங்கம் ...... அழியாதே,

கோள்கோடி பொன்ற வென்று,
     நாள்தோறும் நின்று இயங்கு
     கூர்வாய்மை கொண்டு இறைஞ்ச ...... அருள்தாராய்!

மாலால் உழன்ற அணங்கை
     ஆர் மாமதன், கரும்பின்
     வாகோடு அழிந்து ஒடுங்க ...... முதல்நாடி,

வாழ்வான கந்த! முந்த
     மாறாகி வந்து அடர்ந்த
     மாசூரர் குன்ற வென்றி ...... மயில் ஏறீ!

மேலாகும் ஒன்று அமைந்த
     மேல் நாடர் நின்று இரங்க,
     வேலால் எறிந்து குன்றை ...... மலைவோனே!

வேய்போலவும் திரண்ட
     தோள் மாதர் வந்து இறைஞ்சு
     வேலூர் விளங்க வந்த ...... பெருமாளே.


பதவுரை


      மாலால் உழன்று அணங்கை ஆர் மாமதன் --- செய்வது அறியாத மயக்கத்தால் மன வருத்தம் மிகக் கொண்ட மன்மதன்

      கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க --- தனது கையில் கொண்ட கரும்பு வில்லின் ஒளி அழிந்து ஒடுங்கும்படியாக,

     முதல் நாடி வாழ்வான கந்த --- முன்பு தன்னை நாடி வந்த அவனை எரித்த சிவபெருமானின் செல்வப் பிள்ளையான கந்தப் பெருமானே!

      முந்த மாறாகி வந்து அடர்ந்த மாசூரர் குன்ற --- முற்பட்டு, பகைமை பூண்டு வந்து எதிர்த்த பெரிய சூராதி அவுணர்கள் அழிய

     வென்றி மயில் ஏறீ --- வெற்றி பொருந்திய மயிலின் மேல் ஏறியவரே!

      மேல் ஆகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க --- மேலான பரம்பொருளைத் தியானித்து இருந்த விண்ணோர்கள் நின்று வேண்ட,

     வேலால் எறிந்து குன்றை மலைவோனே --- வேலாயுதத்தை விடுத்து, கிரெளஞ்ச மலையை அழித்தவரே!

      வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே --- பசுமையான மூங்கில் போன்று திரட்சி கொண்ட தோள்களை உடைய மாதர்கள் வேலூர் என்னும் திருத்தலத்தில் வந்து வணங்கி, அருள் விளக்கம் பெறுமாறு வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      சேல் ஆலம் ஒன்றும் செம்கண் வேலாலும் வென்று --- சேல் மீன் போலவும், ஆலகால விஷம் போலவும் உள்ள தம் செவ்விய கண்ணாகிய வேலாலும் ஆண்களை வென்று,

      மைந்தர் சீர்வாழ்வு, சிந்தை பொன்ற முதல்நாடி --- மைந்தர்களை அவர்களுடைய நல்ல வாழ்வும் மனமும் அழியும்படி அவர்கள் கொண்டுள்ள பொருளையே நாடி நின்று,

      தேன்மேவும் செம்சொல் இன்சொல் தான் ஓதிவந்து அணைந்து --- தேன் போன்றதும், செம்மை வாய்ந்ததும், இனியதுமாகிய சொற்களைப் பேசிக்கொண்டு வந்து அவர்களை அணைந்து,

       தீராத துன்ப இன்பம் உறுமாதர் கோலாகலங்கள் கண்டு மாலாகி --- முடிவு இல்லாத துன்பத்தை முடிவதாகிய இன்பத்தைத் தருகின்ற விலைமாதர்களின் ஆடம்பரங்களைப் பார்த்து காமமயக்கம் கொண்டவனாய்,

      நின் தன் அன்பு கூராமல் --- தேவரீர் பால் அன்பு வைக்காமல்,

     அங்கம் மங்கி அழியாதே --- உடலும் உள்ளமும் அழிந்து போகாமல்,

      கோள் கோடி பொன்ற வென்று --- கோடிக் கணக்கான இடையூறுகள் வரினும் அவைகளை அழிந்து போகும்படி வென்று,

      நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள் தாராய் --- தினமும் ஒழுக்க நெறியில் நின்று, சிறந்த உண்மை அன்பை மேற்கொண்டு தேவரீரை வழிபடும்படியாக திருவருளைத் புரிந்தருளுக.


பொழிப்புரை

     செய்வது அறியாத மயக்கத்தால் மன வருத்தம் மிகக் கொண்ட மன்மதன் தனது கையில் கொண்ட கரும்பு வில்லின் ஒளி அழிந்து ஒடுங்கும்படியாக, முன்பு தன்னை நாடி வந்த அவனை எரித்த சிவபெருமானின் செல்வப் பிள்ளையான கந்தப் பெருமானே!

         முற்பட்டு, பகைமை பூண்டு வந்து எதிர்த்த பெரிய சூராதி அவுணர்கள் அழிய வெற்றி பொருந்திய மயிலின் மேல் ஏறியவரே!

         மேலான பரம்பொருளைத் தியானித்து இருந்த விண்ணோர்கள் நின்று வேண்ட,  வேலாயுதத்தை விடுத்து, கிரெளஞ்ச மலையை அழித்தவரே!

         பசுமையான மூங்கில் போன்று திரட்சி கொண்ட தோள்களை உடைய மாதர்கள் வேலூர் என்னும் திருத்தலத்தில் வந்து வணங்கி, அருள் விளக்கம் பெறுமாறு வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         தேவரீர் பால் அன்பு வைக்காமல், சேல் மீன் போலவும், ஆலகால விஷம் போலவும் உள்ள தம் செவ்விய கண்ணாகிய வேலாலும் ஆண்களை வென்று, மைந்தர்களை அவர்களுடைய நல்ல வாழ்வும் மனமும் அழியும்படி அவர்கள் கொண்டுள்ள பொருளையே நாடி நின்று, தேன் போன்றதும், செம்மை வாய்ந்ததும், இனியதுமாகிய சொற்களைப் பேசிக்கொண்டு வந்து அவர்களை அணைந்து,  முடிவு இல்லாத துன்பத்தை முடிவதாகிய இன்பத்தைத் தருகின்ற விலைமாதர்களின் ஆடம்பரங்களைப் பார்த்து காமமயக்கம் கொண்டவனாய், உடலும் உள்ளமும் அழிந்து போகாமல், கோடிக் கணக்கான இடையூறுகள் வரினும் அவைகளை அழிந்து போகும்படி வென்று,  தினமும் ஒழுக்க நெறியில் நின்று, சிறந்த உண்மை அன்பை மேற்கொண்டு தேவரீரை வழிபடும்படியாக திருவருளைத் புரிந்தருளுக.

விரிவுரை

சேல் ஆலம் ஒன்றும் செம்கண் வேலாலும் வென்று, மைந்தர் சீர்வாழ்வு, சிந்தை பொன்ற முதல்நாடி ---

சேல், கயல் என்பன மீன் இனத்தில் உள்ளவை. பெண்களின் கண்களை சேல் என்றும் கயல் என்றும் வருணிப்பர். மீனானது நடுவில் பருத்து இருக்கும். தலைப்பாகமும், வால் பாகமும் சிறுத்து இருக்கும். அது போல் கண்கள் இடையில் பருத்தும், இரண்டு கடைகளில் சிறுத்தும் உள்ளன. மீனானது தண்ணீரில் பிறழ்ந்து பிறழ்ந்து ஓடுவது போலப் பெண்களின் கண்கள் பிறழும். அந்தப் பார்வையில் ஆடவர் மயங்குவர்.

சேல் வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி,
மால் வாங்கி, ஏங்கி, மயங்காமல், வெள்ளிமலை எனவே
கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டு
நூல்வாங்கிடாது, அன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே. 
                                                                            --- கந்தர் அலங்காரம்.

கலகக் கயல்விழி போர்செய வேள்படை
     நடுவில் புடைவரு பாபிகள் கோபிகள்
     கனியக் கனியவுமே மொழி பேசிய ...... விலைமாதர்

கலவித் தொழில் நலமே இனிதாம் என
     மனம் இப்படி தினமே உழலாவகை
     கருணைப்படி எனை ஆளவுமே அருள் ...... தரவேணும்.    --- திருப்புகழ்.

கலக வாள்விழி வேலோ சேலோ
     மதுர வாய்மொழி தேனோ பாலோ
     கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய்..         --- திருப்புகழ்.

நஞ்சு உண்டாரைத் தான் கொல்லும். பெண்களின் கண்கள் கண்டாரையும் கொல்லும் தன்மை வாய்ந்தவை. எனவே, பெண்களின் கண்கள் ஆலகால விடத்திற்கு ஒப்பாகச் சொல்லப்பட்டன.

"ஆலம் ஏற்ற விழியினர்" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

"ஆலம் போல் எழு நீலம் மேல் அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயும் மாய விழியாலே" என்றார் திருவேற்காட்டுத் திருப்புகழில்.

"ஆலம் வைத்த விழிச்சிகள், சித்தசன் ஆகமக் கலை கற்ற சமர்த்திகள், ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர்" என்றார் திருவானைக்காத் திருப்புகழில்.

"ஆலாலத்தை அழுத்திய வேல் போல், நல் குழையைப் பொருது, ஆகாரைத் தொடர்கைக்கு எணும் விழியாலே" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

"ஆலகாலம் என, கொலை முற்றிய வேல் அது ஆம் என, மிக்க விழிக்கடையாலும் மோகம் விளைத்து" என்றார் பழநித் திருப்புகழில்.

"ஆல விழி நீலத்தால்" என்றார் திருவருணைத் திருப்பகழில்.

இப்படி சேல் மீன் போலவும், ஆலகால விடம் போலவும் உள்ள தமது கண்களால் ஆடவரின் உள்ளத்தை வென்று, அவரிடம் உள்ள மிக்கபொருளைக் கவர்வது பரத்தையரின் தொழில். அவர்கள் தரும் இன்பத்தையே பெரிதாக மதித்து அவரிடம் வீழ்ந்து கிடந்து, உள்ளபொருளை எல்லாம் இழக்கும் ஆடவரின் உள்ளம் கெடும். அவர்களது சீரான வாழ்வு அழிந்து போகும்.

தேன்மேவும் செம்சொல் இன்சொல் தான் ஓதிவந்து அணைந்து ---

ஒன்றைப் பெறவேண்டுமானால் அதன் இயல்பு உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். ஒருவரிடம் உள்ள பொருளை எளிதாக அடையவேண்டுமானால், அவருக்கு இனியவராக நடந்துகொள்ள வேண்டும். அவர் நாடியதையே தானும் நாடி, அவருக்கு உதவியாக உள்ளது போல் காட்டிக் கொள்ள வேண்டும்.  காமுகர் வசம் உள்ள பொருள் தம் வசம் ஆகவேண்டும் என்னும் கருத்தை உடைய விலைமாதர், அவருக்கே தாம் உரியவராகக் காட்டி, அவரிடம் மிகவும் இனிமையாகத் தேன் ஒழுகுவது போல் பேசி, அவரோடு கூடி, அவர் வேண்டும் இன்பத்தைத் தருவார்கள்.

தீராத துன்ப இன்பம் உறுமாதர் கோலாகலங்கள் கண்டு மாலாகி ---

காலகாலமாகப் பாடுபட்டுத் தேடிய பொருளும், வாழ்வையும் இழந்து தீராத துன்பத்தைத் தருகின்ற இன்பத்தை விலைமாதர்கள், தாம் அடைந்து பொருளுக்குத் தக்கபடி தருவார்கள். அவர் தரும் இன்பத்தைப் பெரிதாக எண்ணி, காமுகர் இரவு பகல் பாராது மயங்கிக் கிடப்பார்கள்.
  
நின் தன் அன்பு கூராமல், அங்கம் மங்கி அழியாதே ---

உடம்பையும் உயிரையும் ஒருங்கே கேடு அடையச் செய்யும் விலைமாதர் பால் அன்பு வைக்காமல், ஊனும் உயிர்மு உருகப் பேரின்பத்தைத் தரும் இறைவன் திருவடியில் அன்பு வைத்து வாழ வேண்டும்.

விலைமாதரிடம் அன்பு வைத்தால், விலக்க முடியாத கேடு வந்து சூழும்.

இறைவனிடம் அன்பு வைத்தால், விலக்க முடியாத, எந்த நாளும் குறையாத, இறவாத இன்பம் வந்து சூழும்.


கோள் கோடி பொன்ற வென்று ---

எண்ணற்ற இடையூறுகள், துன்பங்கள் வந்தாலும் அவை இறைவன் திருவருளால், தீயிடைபட்ட தூசு பொல் அழிந்து போகும்.

"வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும், புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசு ஆகும் செப்பு" என்றார் கோதைநாச்சியார்.

"விண் உற அடுக்கிய விறகில் வெவ்வழல் உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லையாம்"; அதுபோல, "பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி, நின்று அறுப்பது நமச்சிவாயவே" என்றார் அப்பர் பெருமான்.

"வெந்து அறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகு இட்டு அன்றே" என்றார் பிறிதொரு தேவாரப் பாடலில் அப்பர் பெருமான்.


நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள் தாராய் ---

எனவே, அப்படிப்பட்ட இன்பத்தை அருளும் இறைவனின் திருவடியில் நாள்தோறும் அன்புடன் வழிபாடு செய்து, வாய்மை நெறியான சிவநெறி என்னும் பத்திநெறியில் நின்று ஒழுகுவதற்கு இறைவன் திருவருளை வேண்டுகின்றார் அடிகளார். "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்றார் மணிவாசகரும்.
  
மாலால் உழன்று அணங்கை ஆர் மாமதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க, முதல் நாடி வாழ்வான கந்த ---

பிரமதேவன் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற மனம் இல்லாத நிலையில், என்னசெய்வது என்று அறியாமல் மனமயக்கம் கொண்டு நின்றவன் காமன். பின்னர், பிரமதேவனின் சாபத்தால் அழிவதை விடவும், பெருமானின் கோபத்தால் அழிவது தகும் என்று வந்த,அவன் அழியும்படியாக விழியைக் காட்டியவர் சிவபரம்பொருள். அந்தச் சிவபரம்பொருளின் அருளால் அவதரித்தவர் முருகப் பெருமான்.

ஒரு காலத்தில், இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால் நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அது கண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும் நீரார்.

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுக முடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஒரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத் தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

திருமால், "பிரதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார்.

மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். 

"மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், சிவபெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச் செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. நீ அவரது அருளைப் பெற்றவன். உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்".

ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே.

"பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ?"

"பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ?"

"பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து சொல்" என்றார்.

மன்மதனை அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் "போகவேண்டாம்" என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, "யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய்" என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான்.  எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.  


கருத்துரை

முருகா! விலைமாதரை நாடி உடல், பொருள், ஆவி மூன்றும் அழியாமல், உமது திருவடியை நாடி உய்ய அருள் புரிவாய்.



No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...