ஊழின் பெருவலி யா உள





54. ஊழின் பெருவலி யா உ?

கடல்அளவு உரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
     காணும் படிக்கு உரைசெய்வர்,
  காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்
     காயத்தின் நிலைமை அறிவார்,

விடலரிய சீவநிலை காட்டுவார், மூச்சையும்
     விடாமல் தடுத்து அடக்கி
  மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி
     விண்மீதி னும்தா வுவார்,

தொடலரிய பிரமநிலை காட்டுவார், எண்வகைத்
     தொகையான சித்தி யறிவார்,
  சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்! அது
     துடைக்கவொரு நான்மு கற்கும்

அடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்,
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அண்ணலே --- தலைவனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     கடல் அளவு உரைத்திடுவர் --- கடலின் பரப்பளவு, ஆழம் ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கூறுவர்,

     அரிபிரமர் உருவமும் காணும் படிக்கு உரைசெய்வார் --- திருமால் பிரமன் ஆகிய கடவுளர்களின் வடிவத்தையும் நாம் காணுமாறு விளக்கிக் கூறுவர்.

     காசினியின் அளவு பிரமாணமும் சொல்லுவார் --- உலகின் அளவையும் விளக்குவர்.

     காயத்தின் நிலைமை அறிவார் --- உடல் கூறுபாட்டை அறிவர்,

     விடல் அரிய சீவநிலை காட்டுவார் --- விடுதற்கு அரிய உயிரின் நிலையையும் காண்பிப்பர்,

     மூச்சையும் விடாமல் தடுத்து அடக்கி மேன்மேலும் யோக சாதனை விளைப்பார் --- மூச்சையும் விடாமல் தடுத்து அடக்கி மேலும் மேலும் யோக சித்தியைச் செய்வர்.
     விண் மீதினும் எட்டித் தாவுவார் --- வான மண்டலத்திலும் எட்டித் தாவுவர்,

     தொடல் அரிய பிரமநிலை காட்டுவார் --- அடைய முடியாத பிரமத்தின் நிலையையும் காண்பிப்பர்,

     எண்வகைத் தொகையான சித்தி அறிவார் --- எட்டு வகையான சித்திகளையும் அறிவர்.

இவர்கள் யாவருமே,

     சூழ்வினை வரும்போது சிக்கி உழல்வார் --- சூழுகின்ற பழைய வினைப்பயனை அனுபவிக்க வரும்போது அதனில் சிக்கித் தவிப்பர்,

     ஒரு நான்முகற்கும் அது துடைக்க அடைவு அல --- ஒப்பற்ற பிரமனுக்கும் அந்த ஊழ்வினையைத் துடைக்கும் வழி இல்லை,

     என அளவு இல் பலநூல் தெரிந்து சொலும் --- என்று கணக்கற்ற பல நூல்களும் அறிந்து கூறும்.

       விளக்கம் --- ‘ஊழிற் பெருவலி யாவுள, மற்று ஒன்று  சூழினும் தான் முந்துறும்' என்றார் திருவள்ளுவர். வினை வலியது என்றார். ஊழ் என்பது நல்வினை தீவினை என்னும் இரண்டையும் குறிக்கும். நல்வினைப் பயன் உள்ளபோது எதையும் சாதிக்கலாம். தீவினையின் பயன் வந்து உற்றபோது, அதை விலக்குதற்கு இயலாது என்று நூல் வல்லோர் உரைப்பர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...