வெள்ளிகரம் - 0670. குவலயம் மல்கு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குவலயம் மல்கு (வெள்ளிகரம்)

முருகா! 
திருவடி இன்பத்தை அடியேனுக்கு அருள்.


தனதன தய்ய தனதன தய்ய
     தனதன தய்ய ...... தனதான


குவலய மல்கு தவலிகள் முல்லை
     குளிர்நகை சொல்லு ...... முதுபாகு

குழையிள வள்ளை யிடைசிறு வல்லி
     குயமுலை கொள்ளை ...... விழைமேவிக்

கவலைசெய் வல்ல தவலரு முள்ள
     கலவியில் தெள்ளு ...... கவிமாலை

கடிமல ரைய அணிவன செய்ய
     கழலிணை பைய ...... அருள்வாயே

தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு
     தனியுழை புள்ளி ...... யுடனாடித்

தருபுன வள்ளி மலைமற வள்ளி
     தருதினை மெள்ள ...... நுகர்வோனே

அவநெறி சொல்லு மவரவை கொல்லு
     மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே

அடையலர் செல்வ மளறிடை செல்ல
     அமர்செய வல்ல ...... பெருமாளே.
பதம் பிரித்தல்


குவலயம் மல்கு தவலிகள், முல்லை
     குளிர் நகை, சொல்லும் ...... முதுபாகு,

குழை இள வள்ளை, இடை சிறு வல்லி,
     குய முலை கொள்ளை ...... விழை மேவி,

கவலை செய் வல்ல தவல் அரும் உள்ள
     கலவியில், தெள்ளு ...... கவிமாலை

கடிமலர், , அணிவன, செய்ய
     கழல் இணை பைய ...... அருள்வாயே.

தவநெறி உள்ளு சிவமுனி, துள்ளு
     தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்

தரு புன வள்ளி,  மலை மற வள்ளி,
     தரு தினை மெள்ள ...... நுகர்வோனே!

அவநெறி சொல்லும் அவர் அவை கொல்லும்,
     அழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே!

அடையலர் செல்வம் அளறு இடை செல்ல
     அமர்செய வல்ல ...... பெருமாளே.


பதவுரை


         தவ நெறி உள்ளும் சிவமுனி துள்ளும் தனி உழை புள்ளி உடன் ஆடித் தரு புனவள்ளி --- தவநெறியில் நின்று தியானித்தில் இருந்த சிவமுனிவராகிய திருமால் தனது தவத்தைக் கலைத்துத் துள்ளிச் சென்ற ஒப்பற்ற திருமகளாகிய புள்ளிமானுடன் கலந்ததனால் பிறந்தவள், தினைப்புனத்தில் இருந்தவள்,

         மலை மறவள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே --- வள்ளிமலையில் வேட்டுவ குலத்தில் வளர்ந்தவளான வள்ளியம்மையார் அளித்த தினைமாவை மெதுவாக உண்டவரே!

         அவநெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளிநகர் வாழ்வே --- பயனற்ற மார்க்கத்தைச் சொல்லி வந்த சமணர்களின் கூட்டத்தை மாய்த்த திருஞானசம்பந்தராக வந்து, அழகு மிக்க வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள செல்வமே!

         அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே --- பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கி அழியும்படி போர் புரிய வல்ல பெருமையில் மிக்கவரே!

         குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லும் முதுபாகு --- உலகில் நிறைந்துள்ள, ஒழுக்கக் குறைபாடுகள் உள்ள விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்றவை, பேச்சும் முதிர்ந்த பாகு போன்றது,

      குழை இள வள்ளை --- குழையை அணிந்த காது இளமையான வள்ளைக் கொடி போன்றது,

     இடை சிறு வல்லி --- இடையானது சிறிய கொடியினை ஒத்தது.

     குயமுலை கொள்ளை --- இளமை வாய்ந்த கொங்கைகள் பூரித்து உள்ளன என்று மனத்தில் கொண்டு,

      விழை மேவி --- விருப்பம் அடைந்து,

     கவலை செய்வல்ல --- பின்னர் மனக் கவலை தரக்கூடிய,

     தவலரும் உள்ள கலவியில் --- தீராத கலவி இன்பத்தில் அடியேன் திளைத்து இருந்தாலும்,

      தெள்ளு கவிமாலை --- தெளிந்த பாமாலைகளையும்,

     கடிமலர் --- நறுமணம் உள்ள பூமாலைகளையும்

     ஐய அணிவன --- அழகுற அணிந்துள்ள

     செய்ய கழல் இணை --- அழகிய கழல் அணிந்த திருவடி இணையை,

     பைய அருள்வாயே --- மெல்ல அடியேனுக்கு அருள் புரிவாயாக.


பொழிப்புரை

     தவநெறியில் நின்று தியானித்தில் இருந்த சிவமுனிவராகிய திருமால் தனது தவத்தைக் கலைத்துத் துள்ளிச் சென்ற ஒப்பற்ற திருமகளாகிய புள்ளிமானுடன் கலந்ததனால் பிறந்தவள், தினைப்புனத்தில் இருந்தவள்,  வள்ளிமலையில் வேட்டுவ குலத்தில் வளர்ந்தவளான வள்ளியம்மையார் அளித்த தினைமாவை மெதுவாக உண்டவரே!

     பயனற்ற மார்க்கத்தைச் சொல்லி வந்த சமணர்களின் கூட்டத்தை மாய்த்த திருஞானசம்பந்தராக வந்து, அழகு மிக்க வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள செல்வமே!

         பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கி அழியும்படி போர் புரிய வல்ல பெருமையில் மிக்கவரே!

         உலகில் நிறைந்துள்ள, ஒழுக்கக் குறைபாடுகள் உள்ள விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்றவை, பேச்சும் முதிர்ந்த பாகு போன்றது, குழையை அணிந்த காது இளமையான வள்ளைக் கொடி போன்றது, இடையானது சிறிய கொடியினை ஒத்தது. இளமை வாய்ந்த கொங்கைகள் பூரித்து உள்ளன என்று மனத்தில் கொண்டு, அவர்கள் பால் விருப்பம் அடைந்து, பின்னர் மனக் கவலை தரக்கூடிய, தீராத கலவி இன்பத்தில் அடியேன் திளைத்து இருந்தாலும், தெளிந்த பாமாலைகளையும்,  நறுமணம் உள்ள பூமாலைகளையும் அழகுற அணிந்துள்ள, அழகிய கழல் அணிந்த திருவடி இணையை அடைய மெல்ல அடியேனுக்கு அருள் புரிவாயாக.


விரிவுரை

குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லும் முதுபாகு ---

தவல் - குற்றம், கேடு, குறைவு. தவல் உள்ளவர்கள் தவலிகள்.

ஒழுக்கக் கேடுகள் என்பன அனைத்தும் நிறைந்தவர்கள் விலைமாதர்கள்.  அவர்களிடம் உள்ள குற்றங்கள் காமுகர்க்குத் தோன்றாது. புற அழகு அழகு அல்ல, அக அழகே அழகு  என்றாலும், புறத்தோற்றத்தில் மயங்குவார்கள். அவர்களுக்கு விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்று தோன்றும்.

"அன்னமும் கறியும் அசைவு இட்டு இறக்கும் முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்" என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"வெள்ளைநகை முல்லை என்றாய், முல்லை முறித்து ஒருகோல் கொண்டு நிதம் ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ?" என்கின்றார் வள்ளல்பெருமான். முல்லை மலரில் அழுக்குச் சேர்வது இல்லை. குச்சியைக் கொண்டு நிதமும் அழுக்கு எடுக்கப்படும் பல்லை முல்லை மலர் என்பதா?

பேச்சும் முதிர்ந்த பாகு போன்றது, விலைமாதர்கள் பொருள் பொருட்டு குழைந்து முழைந்து பேசுவது, காமுகர்க்கு வெல்லப் பாகு போல் இனிமையைத் தரும்.

குழை இள வள்ளை ---

குழையை அணிந்த காது இளமையான வள்ளைக் கொடி போன்றது என எண்ணி மயங்குவர் காமுகர்.

காது வள்ளைக் கொடி அல்ல.

"உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்" என்கின்றார் பட்டினத்து அடிகள். உள்ளே குறும்பி என்னும் அழுக்கு ஒழுகுகின்ற காதை வள்ளைத் தண்டின் வளமை பொருந்தியதாகக் கூறுவர் காமுகர்.

"எய்த்தல் இலா வள்ளை என்றாய் வார் காது, வள்ளை தனக்கு உள் புழையோடு உள்ளு நரம்பின் புனைவும் உண்டேயோ?" என வினவுகின்றார் வள்ளல் பெருமான்.

 
இடை சிறு வல்லி ---  

இடையானது சிறிய கொடியினை ஒத்தது.

"நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத் துடி பிடி என்று சொல்லித் துதிப்பதாக" இரங்குகின்றார் பட்டினத்து அடிகள்.

"பொற்பு ஒன்றும் சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய், மாதர் இடைச் சிங்கம் எனில் காணத் திரும்பினையே"  "நூல் இடைதான் உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய், கைதொட்டுக் கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே?"  என்கின்றார் வள்ளல்பெருமான்.

குயமுலை கொள்ளை ---

இளமை வாய்ந்த கொங்கைகள் பூரித்து உள்ளன என்று மனத்தில் மகிழ்வர் காமுகர்.

"ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்"

என்றார் மணிவாசகப் பெருமான்.

"சிலந்தி போலக் கிளைத்து, முன் எழுந்து, திரண்டு, விம்மி, சீ பாய்ந்து ஏறி, உகிரால் கீற உலர்ந்து உள் உருகி, நகுவார்க்கு இடமாய் நான்று, வற்றும் முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும் குலையும், காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்", என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"மண்வாழும் ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய், மாதர் முலை ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே? சீரான வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய், மாதர்முலை வெற்பு என்றால் ஏற விரைந்தனையே" என்றும், "மங்காத  செவ் இளநீர் கொங்கை எனச் செப்பினை, வல் ஊன் தடிப்பு இங்கு எவ் இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே? செவ்வைபெறும் செப்பு என்றனை முலையை, சீசீ சிலந்தி அது துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே? வப்பு இறுகச் சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய், கீழ்த் துவண்டு வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே? தாழ்ந்த அவை மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய், முதிர்ந்து உடையாப் புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே?  திண்கட்டும் அந் நீர்க் குரும்பை அவை என்றாய், மேல் எழும்பும் செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே?" என்கின்றார் வள்ளல் பெருமான்.

மேலும்,
......           ......           ......      அந்நீரார்

கண்ணீர் தரும் பருவாய்க் கட்டுரைப்பார், சான்றாக
வெண்ணீர் வரல் கண்டும் வெட்கிலையே? - தண்ணீர்மைச்

சாடியென்பாய் நீ, அயலோர் தாதுக் கடத்து இடு மேல்-
மூடிஎன்பார், மற்று அவர்வாய் மூடுதியோ?

என்கின்றார் வள்ளல்பெருமான்.
  
விழை மேவி ---

வாலப் பருவத்தில் உள்ள ஆடவர்க்கு, இத்தகைய புற அழகுள்ள விலைமாதர் மேல் விருப்பம் மிகும்.

கவலை செய்வல்ல ---

இந்த விருப்பம் அல்லது ஆசையானது பின்னர் மனக் கவலை தரக்கூடியதே.

வள்ளல்பெருமான் அறிவுறுத்துவதைச் சிறுது ஊன்றிப் படித்து, ஆய்ந்து அறிந்து கொள்ளலாம். 

"மெல்லியலார் என்பாய், மிகுகருப்ப வேதனையை
வல்லியலார் யார் பொறுக்க வல்லார்காண்; - வில்லியல்பூண்

வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய், வெந்தீயில்
பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே; - வேய்ந்தாங்கு

சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய், வெம்புலிப் பின்
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே; - சென்றாங்கு

நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய், கண்மூடி
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே; - ஒன்றாது

கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய், கல் அணைத்துக்
கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே; - பெண்டு ஆனார்

வைதாலும் தொண்டு வலித்தாய், பிணத்தொண்டு
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே; - கைதாவி

மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினை நீ,
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே; - வைத்தாடும்

மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ, மற்று ஒழிந்து
துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே; - வஞ்சியரைப்

பார்த்து ஆடி ஓடிப் படர்கின்றாய், வெந்நரகைப்
பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே, - சேர்த்தார் கைத்

தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய், வன்பூதம்
தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே; - நட்டாலும்

தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய், தீ விடத்தை
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே; - செவ்விதழ்நீர்

உண்டால் மகிழ்வாய் நீ, ஒண் சிறுவர் தம் சிறுநீர்
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே; - கண்டாகக்

கவ்வுகின்றாய் அவ்விதழை, கார்மதுகம் வேம்பு இவற்றைக்
கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே; - அவ் இளையர்

மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ, வெறும் வாய்
மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே - முன்தானை

பட்டால் மகிழ்வு பதிந்தாய், பதைக்க அம்பு
பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே - கிட்டா மெய்த்

தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய், செந்தேள்முன்
தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே; - வேண்டி அவர்

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய், மற்றதை ஓர்
நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே; - தாக்கு அவர்க்காய்த்

தேட்டாண்மை செய்வாய், த் தேட்டாண்மையைத் தெருவில்
போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே; - வாள் தாரைக்

கொண்டாருடன் உணவு கொள்கின்றாய், குக்கலுடன்
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே; - மிண்டு ஆகும்

இங்கிவர்வாய்ப் பாகு இலையை ஏற்கின்றாய், புன்மலத்தை
நுங்கினும் அங்கு ஓர்நல் நொறில் உண்டே; - மங்கையர் தம்

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய், ஈமம் அது
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே; - பூத்தாழ்வோர்

காட்டாக் குரல் கேட்பாய், கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே; - கோளொ தாவி

ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய், ஆழ்ங்கடலில்
வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே; - வீழ்ந்தார் உள்

வீட்டால் முலையும், திர் வீட்டால் முகமும் உறக்
காட்டா நின்றார், கண்டும் காய்ந்திலையே; - கூட்டு ஆட்குச்

செய்கை இடும்படி தன் சீமான் தனது பணப்
பை கையிடல் கண்டும் பயந்திலையே; - சைகை அது

கையால் ஒருசிலர்க்கும், கண்ணால் ஒருசிலர்க்கும்,
செய்யா மயக்குகின்றார், தேர்ந்திலையே; - எய்யாமல்

ஈறு இகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கை எலாம்
கூறுவனேல், அம்ம! குடர்குழம்பும்; - கூறும் இவர்

வாய் ஒருபால் பேச, மனம் ஒருபால் செல்ல, உடல்
ஆய் ஒருபால் செய்ய, அழிவார்காண்; - ஆயஇவர்

நன்று அறியார், தீதே நயப்பார், சிவதலத்தில்
சென்று அறியார், பேய்க்கே சிறப்பு எடுப்பார், - இன்று இவரை

வஞ்சம் என்கோ? வெவ்வினையாம் வல்லியம் என்கோ? பவத்தின்
புஞ்சம் என்கோ? மாநரக பூமி என்கோ? - அஞ்சுறும் ஈர்

வாள் என்கோ? வாய்க்கு அடங்கா மாயம் என்கோ? மண்முடிவு
நாள் என்கோ? வெய்ய நமன் என்கோ? - கோள் என்கோ?

சாலம் என்கோ? வான் இந்த்ர சாலம் என்கோ? வீறு ஆல-
காலம் என்கோ? நின்பொல்லாக் காலம் என்கோ? - ஞாலம்அதில்

பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்,
மண் நின்றார் யார் நடுங்க மாட்டார்காண்; - பெண் என்றால்

பேயும் இரங்கும் என்பார், பேய் ஒன்றோ? தாம் பயந்த
சேயும் இரங்கும் அவர் தீமைக்கே; - ஆயுஞ்செம்

பொன்னால் துகிலால் புனையாவிடில், அவர் மெய்
என் ஆகும்? மற்று இதை நீ எண்ணிலையே; - இன்னாமைக்

கொத்து என்ற அம்மடவார் கூட்டம், எழுமைக்கும்
வித்து என்று அறிந்தும், தை விட்டிலையே; - தொத்து என்று

பாச வினைக்கு உள் படுத்துறும் அப் பாவையர்மேல்
ஆசை, உனக்கு எவ்வாறு அடைந்ததுவே....."

தவலரும் உள்ள கலவியில் --- 

விலைமாதர் தரும் கலவி இன்பமானது எப்போதும் குறிவில்லாத இன்பத்தைத் தான் முதலில் தரும். குறைவில்லாத கலவி இன்பத்தில் அடியேன் திளைத்து இருந்த போதிலும் என்கின்றார் அடிகளார்.

"கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர், காமக் கலவிக் கள்ளை
மொண்டு, உண்டு அயர்கினும் வேல் மறவேன்'

என்றார் கந்தர் அலங்காரத்தில்.

இதனால், அருணகிரிநாதர் இவ்வாறு மாதர் கலவி நலத்தில் முழுகினார் என்று கொள்ளக் கூடாது.

உலகமயல் என்னும் சகமாயை தன்னை மயக்காது என்கின்றார். இதேபோல் வேறு இடங்களிலும் கூறி அருள்கின்றார் அடிகளார்.

பகடிஇடுகினும் அமளியில் அவர்தரும் அநுராகப்
பரவை படியினும் வசம் அழியினும், முதல்
அருணை நகர்மிசை கருணையொடு அருளிய
பரம் ஒருவச னமுமிரு சரணமு மறவேனே.....    ---  (மகரமெறி) திருப்புகழ்.

தமிழ் ஓதிய குயிலோ? மயில் ஆண்டலையாம், புறவம்,
     கிளி காடையின், ணில், ர் அளியாம் குரல் வாய்ந்து அதிசெந்
     தகு மாமிடறு ஒலியார் இதழாம் சுளை தேன்கனியின் ...... சுவைசேரும்,

தனபாரமும் மலையாம் என ஓங்கிட, மாம்பொறி சிந்-
     திட, வேல்விழி நுதலோ, சிலை, வான்பிறை, மாந்துளிரின்
     சரிர, ர் குழல் இருளா நகை ஓங்கிய வான்கதிரின்  ...... சுடர்பாய,

குமிழ்நாசியின், முகமோ மதியாம், குளிர் சேங்கமலம்
     சரி தோடு இணை செவியாடு உசலாம், கள பூங்கமுகம்,
     கொடிநூல் இடை உடையார் அனமாம் ப்ரியர், மாண் புரி மின்  ...... கொடிமாதர்,

குணமோடு அமளியின் ஆடினும், ஓங்கிய பூங்கமலம்,
     சரண் நூபுர குரல் ஓசையும், ஏந்திடும் ஆண்டலையின்
     கொடியோடு, ழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும்,மன் ...... தகையேனே.

தெள்ளு கவிமாலை ---  

பூமாலை சூட்டுதல் கிரியை நெறி.
பாமாலை சூட்டுதல் ஞானநெறி.

தெள்ளுதல் - தெள்ளி வடிகட்டுதல். பலப்பல சங்கப் புலவர்களால் ஆய்ந்து ஆய்ந்து ஒழுங்கு செய்து ச்ப்பம் செய்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி ஒன்றே திருக்கயிலாயம் சென்று அரங்கேறியது. சேரமான் பெருமாள் நாயனார் பாடி அருளிய "திருக்கயிலாய ஞானஉலா" திருக்கயிலையில் அரங்கேறியது. மொழிகளுக்குள் முதன்மை பெற்றது தமிழ்.

இதனை மாத்ருகா புட்ப மாலை என்கின்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். ஆறு ஆதாரங்களிலும் அகாராதி க்ஷகாராந்தமாக ஐம்பத்தொரு அட்சரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அட்சரங்களை "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலா மந்திரம்" என்றும் கூறுவர். இந்த மாத்ருகா மந்திரங்களை மலர்களாகத் தொடுத்து மாலை புனையவேண்டும் என்கின்றனர்.

இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே கந்தர் அநுபூதி. ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதைச் சிந்திக்கவும். "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரமுதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தோர் அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்கட்கு மாத்ருகா மந்திரம் என்றும், மாலாமந்திரம் என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

"முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான்.

நம்பியாரூரைத் தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார், பனிமதிச்சடை அண்ணல் என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறியராம்.

"மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார்.
    
தேடிய அயனும் மாலும் தெளிவு உறா ஐந்து எழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன
நாடிய மனத்தர் ஆகி நம்பி ஆரூரர். மன்றுள்
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று.
    
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட
கோதுஇலா அமுதே! இன்றுஉன் குணப் பெருங் கடலை நாயேன்
யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்?’ என மொழிந்தார்.

அன்பனை அருளின் நோக்கி அங் கணர் அருளிச் செய்வார்
"முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்றார்; நின்ற
வன் பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.
    
கொத்து ஆர் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான்
"பித்தா பிறைசூடி"  எனப் பெரிதாம் திருப்பதிகம்
இத் தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.

முறையால் வரு மதுரத் துடன் மொழி இந் தளம் முதலில்
குறையா நிலை மும்மைப் படிக் கூடும் கிழமை யினால்
நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால்
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.

சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.      --- பெரியபுராணம்.

உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும்.  ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை, இறைவா! உனக்கு அணிகின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.

விரைவிடை இவரும் நினை, பிறவாமை
      வேண்டுநர் வேண்டுக, மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்
      பிறவியே வேண்டுவன் தமியேன்;
இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த
      இடையுறல் மணிக்குடக் காவைத்
தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண
      சைலனே கைலைநா யகனே. 

இதன் பொருள் ----          

         சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே!  விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும்.  இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.
  
செய்ய கழல் இணை பைய அருள்வாயே ---

"அழகிய கழல் அணிந்த திருவடி இணையை, மெல்ல அடியேனுக்கு அருள் புரிவாயாக" என்று அடிகளார் வேண்டுகின்றார். நமக்கும் அதுவே வேண்டுகோள் ஆகட்டும். இறைவன் திருவடி எல்லா உயிர்க்குள்ளும் நிறைந்து உள்ளது. உயிரானது பக்குவ நிலையைச் சிறிது சிறிதாக அடைய, மெல்ல மெல்ல இறைவன் தனது திருவடி நிலையை உணர்த்தி ஆட்கொண்டு அருள் புரிவான்.

தவ நெறி உள்ளும் சிவமுனி துள்ளும் தனி உழை புள்ளி உடன் ஆடித் தரு புனவள்ளி மலை மறவள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே ---

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல்? என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                              
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

அவநெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளிநகர் வாழ்வே ---

தவநெறி என்ற தமது நெறியினைச் சொல்லிக் கொண்டு, அவன் ஒன்றுகின்ற நெறியிலே வாழ்ந்தவர்கள், தமழிநாட்டில் அக் காலத்தில் இருந்த சமணர்கள்.

"தவம் என்று பாய் இடுக்கி, தலைபறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான், வீழாமே அருளும் எனச்
சிவம் ஒன்று நெறிநின்ற திலகவதியார் பரவப்
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திருவுள்ளம் பற்றுவார்"           --- பெரியபுராணம்.

கொல்லாமை என்பதைத் தமது சமய நெறியாக இருந்தபோதிலும், கொல்லுவதையே மேற்கொண்டு வாழ்ந்தவர்கள் அக் காலத்து, தமிழ்நாட்டுச் சமணர்கள். "கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம்" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

அத்தகைய சமணர்கள் தென்பாண்டி நாட்டில் மிகுந்து இருந்து, பலவாறு மக்களுக்குத் துன்பத்தை விளைத்து வந்தனர் என்பது மூர்த்தி நாயனார் வரலாற்றால் விளங்கும். நெடுமாற பாண்டியனையும் சமண் சமயத்தைச் சார வைத்தனர். தென்பாண்டி நாடு அளவில்லாத துன்பத்தில் அழுந்தியது.

உயிர்களின் வெம்பந்தம் தீர இறையருளால் அவதரித்த எம்பெருமான் திருஞானசம்பந்தப் பெருமானார், மங்கையர்க்குத் தனி அரசி, எங்கள் தெய்வம், வளவர் திருக்கொழுந்து, வளைக்கைமானி, செங்கமலத் திருமடந்தை, கன்னிநாடாள் ஆகிய நமது தாயாரும், அவருக்குச் சீதனமாகச் சோழ மன்னனால் கொடுக்கப்பட்டு, பாண்டி நாட்டின் முதலமைச்சராக விளங்கிய குலச்சிறை நாயனாரும் வேண்டிக் கொண்டதன் பொருட்டு, மதுரையம்பதிக்கு எழுந்தருளி, சமணம் என்னும் வல்லிருளை மாய்த்து, தெய்த் திருநீற்றின் ஒளி விளங்கச் செய்தார். அவர் அபரசுப்பிரமணியத்தின் அருளால் அவதரித்தவர். அவரை முருகப் பெருமானாகவே வழிபடுவர் சைவப் பெருமக்கள்.

அழிந்துபுவனம் ஒழிந்திடினும்
     அழியாத் தோணி புரத்தின் மறை-
யவர்கள் குலத்தின் உதித்து, ரனோடு
     அம்மை தோன்றி அளித்த வள்ளச்

செழுந்தண் முலைப்பால் குடித்து, முத்தின்
     சிவிகை ஏறி, மதுரையில் போய்ச்
செழியன் பிணியும் சமண் பகையும்,
     தேவி துயரும் தீர்த்து அருளி,

வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
     மதுரம் கனிந்து, கடைதுடிக்க
வடித்துத் தெளிந்த செந்தமிழ்த் தே-
     வாரப் பாடல் சிவன் கேட்க

மொழிந்து, சிவந்த கனிவாய்ச் சண்-
     முகனே! முத்தம் தருகவே
முத்துக் குமரா! திருமலையின்
     முருகா! முத்தம் தருகவே.

என்பது, மகாவித்துவான் கவிராச பண்டாரத்தையா அவர்கள் அருளிய திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல்.

அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே ---

பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கி அழியும்படி செய்தவர் முருகப் பெருமான்.  மகேந்திரபுரியை மண்ணை விழுங்குவது போல் விழுங்குமாறு கருணைக் கடல் ஆகிய முருகப் பெருமான் பணிக்க, கடல் அரசனான வருணனும் அவ்வாறே செய்தான் என்கின்றது கந்தபுராணம்.

கருணை அம்கடல் ஆகியோன் கனைகடற்கு இறையாகும்
வருணன் மாமுகம் நோக்கியே, "வெய்ய சூர் வைகுற்ற
முரண் உறும் திறல் மகேந்திர நகரினை முடிவு எல்லைத்
தரணி ஆம் என உண்குதி, ஒல்லையில் தடிந்து" என்றான்.  

என்ற மாத்திரை, சலபதி விழுமிது என்று இசைவு உற்று,
துன்று பல் உயிர் தம்மொடு மகேந்திரத்து தொல் ஊரை
அன்று வன்மைசேர் புணரியுள் அழுத்தினன் அவனிக் கீழ்                            
நின்று மாயவன் அடு உலகு உண்டிடு நெறியே போல்.

கருத்துரை

முருகா!  திருவடி இன்பத்தை அடியேனுக்கு அருள்.

    


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...