அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முல்லைமலர் போலும்
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
விலைமாதர்கள் மேல் காம
உணர்வு கொண்டு அழிவதை நீக்கி,
ஞான உணர்வு பெற்று, அழியாத பதம் அடைய
அருள்.
தய்யதன
தானனத் தானனந் தானதன
தய்யதன
தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன ......
தனதான
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை
வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை
முல்லைமலர் மாலைசுற் றாடுகொந்
தாருகுழல் ....... அலைபோதம்
மொள்குசிலை
வாணுதற் பார்வையம் பானகயல்
கிள்ளைகுர
லாரிதழ்ப் பூவெனும் போதுமுக
முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை
...... மலையானை
வல்லகுவ
டாலிலைப் போலுசந் தானவயி
றுள்ளதுகில்
நூலிடைக் காமபண் டாரஅல்குல்
வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி
.....புரவோசை
மல்லிசலி
யாடபட் டாடைகொண் டாடமயல்
தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு
வல்லவர்கள் போலபொற் சூறைகொண்
டார்கள்மயல் ...... உறவாமோ
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய
வுள்ளமுற
வாகவைத் தாளுமெந் தாதைமகி
ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ......
முருகோனே
அன்னநடை
யாள்குறப் பாவைபந் தாடுவிரல்
என்னுடைய
தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல்
அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி
...... மணவாளா
செல்லுமுக
ஏழ்கடற் பாழிவிண் டோடதிர
வல்லசுரர்
சேனைபட் டேமடிந் தேகுருதி
செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக
...... வடிவேலா
தெள்ளுதமிழ்
பாடியிட் டாசைகொண் டாடசசி
வல்லியொடு
கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்
தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முல்லைமலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை,
வள்ளைகொடி போலும் நல் காது இலங்கு ஆடுகுழை,
முல்லைமலர் மாலை சுற்றாடு கொந்து ஆருகுழல்
.......அலைபோத,அம்
மொள்கு
சிலை வாள்நுதல், பார்வை அம்பான கயல்,
கிள்ளை
குரலார், இதழ்ப் பூ எனும் போது முகம்,
முன்னல் கமுகு ஆர் களத்தோய். சுணங்கு ஆயமுலை
...... மலையானை,
வல்ல
குவடு, ஆல்இலைப் போலு சந்தான
வயிறு,
உள்ள
துகில் நூல்இடை, காம பண்டார அல்குல்,
வழ்ழை தொடையார், மலர்க்கால் அணிந்து ஆடு பரி-......புர ஓசை
மல்லி
சலி ஆட, பட்டாடை கொண்டாட, மயல்
தள்ளு
நடையோடு சற்றே மொழிந்து, ஆசைகொடு
வல்லவர்கள் போலபொன் சூறைகொண்டார்கள் மயல்
...... உறவுஆமோ?
அல்லல்
வினை போக, அசத்தாதி விண்டு ஓட, நய
உள்ளம்
உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ்
அள்அமைய ஞானவித்து ஓது கந்தா! குமர! .....
முருகோனே!
அன்ன
நடையாள் குறப் பாவை, பந்து ஆடுவிரல்,
என்னுடைய
தாய், வெண் முத்தார் கடம்பு
ஆடுகுழல்
அன்னை, வலி சேர் தனக்கோடு இரண்டான வளி......மணவாளா!
செல்லும்
உக, ஏழ்கடல் பாழி விண்டு
ஓட, அதிர
வல்லசுரர்
சேனை பட்டே மடிந்தே, குருதி
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக
... வடிவேலா!
தெள்ளுதமிழ்
பாடிஇட்டு ஆசை கொண்டாட, சசி
வல்லியொடு
கூடி, திக்கோர்கள் கொண்டாட, இயல்
தில்லைநகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு
...... பெருமாளே.
பதவுரை
அல்லல் வினை போக
அசத்து ஆதி விண்டு ஓட --- அல்லலைத் தரும் வினைகள் தொலையவும், அசத்தான குற்றங்கள் நீங்கிடவும்,
நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை
மகிழ் --- இன்பமான உள்ளம் பொருந்தி அமையவும் அருள் வைத்து நம்மை ஆளுகின்ற
தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி உற
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா ---
காதில் குளிர்ந்து பொருந்த, ஞானத்துக்கு விதை போன்ற மூலப்பொருளை, உபதேசம் செய்த கந்தக்
கடவுளே!
குமர --- குமாரக் கடவுளே!
முருகோனே --- முருகவேளே!
அன்ன நடையாள்
குறப்பாவை பந்துஆடு விரல் என்னுடைய தாய் --- அன்னம் போன்ற
நடையை உடைய குறப் பெண், பந்தாடுகின்ற
விரல்களை உடைய என்னுடைய தாய்,
வெண்முத்தார் கடம்பு ஆடுகுழல் அன்னை ---
வெள்ளை முத்துக்கள் போன்ற கடப்ப மாலை விளங்கும் கூந்தலை உடைய அம்மை,
வலிசேர் தனக் கோடு இரண்டு ஆன வளி மணவாளா
--- வன்மை வாய்ந்த மலை போன்ற மார்பகங்கள் இரண்டினைக் கொண்டவள் ஆகிய வள்ளிநாயகியை
மணம் புணர்ந்தவரே!
செல்லும்உக ஏழ்கடல்
பாழி விண்டோடி அதிரவல்ல அசுரர் சேனை பட்டே மடிந்தே குருதி செல்ல --- மேகங்கள்
படிவற்கு இடமான ஏழு கடல்களும் பிளவுண்டு போகுமாறு சிதறி ஒலி செய்ய, வலிய அசுரர்களின் சேனைகள் அழிவுபட்டு
இறந்து அவர்களது குருதி பரவி
திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடிவேலா
--- பல திக்குகளிலும் ஓடும்படிச் செய்து விளங்கும் அழகிய திருமுகத்தை உடைய சுடர்வேலாயுதரே!
தெள்ளு தமிழ்
பாடியிட்டு ஆசை கொண்டாட --- தெளிந்த தமிழ்ப் பாடல்களால்
தேவரீரை அடியார் புகழ்ந்து பாடவும்,
சசி வல்லியோடு கூடி திக்கோர்கள் கொண்டாட --- இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து, பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட,
இயல் தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே
குலவு பெருமாளே --- தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே
மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
முல்லை மலர் போலும்
முத்தாய் உதிர்ந்தான நகை --- முல்லை மலர் போலவும், முத்துக்கள் உதிர்ந்தனவைகளால் அமைந்தன போலவும் உள்ள பற்களையும்,
வள்ளை கொடி போலும்
நல் காது இலங்கு ஆடு குழை --- வள்ளிக் கொடியைப் போல உள்ள நல்ல
காதுகளில் விளங்கி அசைகின்ற குண்டலங்களையும்,
முல்லை மலர் மாலை
சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது --- முல்லை மலர்
மாலை சுற்றி உள்ளதும், அசைகின்ற
பூங்கொத்துக்கள் நிறைந்துள்ளதும்,
அலை
வீசுவது போலப் புரளும் அந்தக் கூந்தலையும்,
அம் மொள்கு சிலை
வாள்நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் --- அழகாய்
எடுக்கப்பட்ட வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றியையும், அம்பையும் கயல் மீனையும் போன்ற
கண்களையும், கிளியின் குரல் போன்ற குரலையும் உடையவர்கள்.
இதழ்ப் பூ எனும் போது முகம், --- இதழ்களையுடைய தாமரைப் பூ என்னும்படியான மலர் முகத்தையும்,
முன்னல் கமுகார் களம் --- கமுக மரம் போன்ற கழுத்தையும்,
தோய்
சுணங்காய முலை மலை யானை வல்ல குவடு --- தேமல் பரந்துள்ளதும், எதிர்த்து வரும் யானை போன்றதும், வன்மை வாய்ந்ததுமான குன்றைப் போன்றதுமான மார்பகங்களும்,
ஆலிலை போலும் சந்தான
வயிறு
--- ஆலிலையைப் போன்றதும் பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிற்றையும்,
உள்ள துகில் நூல் இடை --- அந்த
வயிற்றின் மேல் உள்ள ஆடையில் அமைந்துள்ள நூல் போல் நுண்ணிய இடையையும்,
காம பண்டார அல்குல் --- காமத்துக்கு
நிதி இடமாகிய பெண்குறியையும்,
வழ்ழை தொடையார் --- வாழை போன்ற தொடைகளையும் உடையவர்கள்.
மலர்க் கால் அணிந்து
ஆடும் பரிபுர ஓசை மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட --- பூப் போன்ற
மெத்தென்ற காலில் அணியப்பட்டு அசைகின்ற சிலம்பின் ஒலி மல்லிட்டு வாதாடுவது போல்
மாறுபட்டுற, பட்டாடை தன்மேல்
படும்போதெல்லாம் அசைந்து ஒலிக்கவும்,
மயல் தள்ளு நடையோடு ---
காம
மயக்கத்தால் தள்ளுகின்ற நடையோடு,
சற்றே மொழிந்து ஆசை கொடு --- சிற்சில
வார்த்தைகளே குழறிப் பேசி, ஆசை பூண்டு,
வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள்
மயல் உறவு ஆமோ --- சாமர்த்தியம் உள்ளவர்கள் போலத் தம்மிடம் வருவோரிடம்
இருந்து பொன்னையும் பொருளையும் கொள்ளை கொள்ளும் விலைமாதர்கள் மேல் காமஉணர்வு கொள்ளுவது நன்றாகுமோ? நன்று ஆகாது.
பொழிப்புரை
அல்லலைத் தரும் வினைகள் தொலையவும், அசத்தான குற்றங்கள் நீங்கிடவும், இன்பமான உள்ளம் பொருந்தி அமையவும் அருள் வைத்து நம்மை ஆளுகின்ற தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி
உற, அவருடைய திருச்செவியில் குளிர்ந்து பொருந்த, ஞானத்துக்கு விதை போன்ற மூலப்பொருளை, உபதேசம் செய்த கந்தக்
கடவுளே!
குமாரக் கடவுளே!
முருகப் பெருமானே!!
அன்னம் போன்ற நடையை உடைய குறப் பெண், பந்தாடுகின்ற விரல்களை உடைய என்னுடைய
தாய், வெண்மையான முத்துக்கள் போன்ற கடப்ப மாலை விளங்கும் கூந்தலை உடைய அம்மை, வன்மை வாய்ந்த மலை போன்ற மார்பகங்கள் இரண்டினைக் கொண்டவள் ஆகிய வள்ளிநாயகியை மணம் புணர்ந்தவரே!
மேகங்கள் படிவற்கு இடமான ஏழு கடல்களும்
பிளவுண்டு போகுமாறு சிதறி ஒலி செய்ய, வலிய
அசுரர்களின் சேனைகள் அழிவுபட்டு இறந்து அவர்களது குருதி பரவி, பல திக்குகளிலும்
ஓடும்படிச் செய்து விளங்கும் அழகிய திருமுகத்தை உடைய சுடர்வேலாயுதரே!
தெளிந்த தமிழ்ப் பாடல்களால் தேவரீரை அடியார்
புகழ்ந்து பாடவும், இந்திராணியின் மகளான
தேவயானையோடு சேர்ந்து, பல திக்குகளில்
உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத்
திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
முல்லை மலர் போலவும், முத்துக்கள் உதிர்ந்தனவைகளால் அமைந்தன போலவும் உள்ள பற்களையும், வள்ளிக் கொடியைப் போல உள்ள நல்ல காதுகளில் விளங்கி அசைகின்ற குண்டலங்களையும், முல்லை மலர் மாலை சுற்றி
உள்ளதும், அசைகின்ற
பூங்கொத்துக்கள் நிறைந்துள்ளதும்,
அலை
வீசுவது போலப் புரளும் அந்தக் கூந்தலையும், அழகாய் எடுக்கப்பட்ட
வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றியையும், அம்பையும் கயல் மீனையும் போன்ற
கண்களையும், கிளியின் குரல் போன்ற குரலையும் உடையவர்கள். இதழ்களையுடைய தாமரைப் பூ என்னும்படியான மலர்
முகத்தையும், கமுக மரம் போன்ற கழுத்தையும், தேமல் பரந்துள்ளதும், எதிர்த்து வரும் யானை போன்றதும், வன்மை வாய்ந்ததுமான குன்றைப் போன்றதுமான மார்பகங்களும், ஆலிலையைப் போன்றதும்
பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிற்றையும், அந்த வயிற்றின் மேல்
உள்ள ஆடையில் அமைந்துள்ள நூல் போல் நுண்ணிய இடையையும், காமத்துக்கு
நிதி இடமாகிய பெண்குறியையும், வாழை போன்ற தொடைகளையும் உடையவர்கள். பூப் போன்ற மெத்தென்ற காலில் அணியப்பட்டு
அசைகின்ற சிலம்பின் ஒலி மல்லிட்டு வாதாடுவது போல் மாறுபட்டு உற, பட்டாடை தன்மேல் படும்போதெல்லாம்
அசைந்து ஒலிக்கவும், காம மயக்கத்தால்
தள்ளுகின்ற நடையோடு, சிற்சில வார்த்தைகளே
குழறிப் பேசி, ஆசை பூண்டு, சாமர்த்தியம் உள்ளவர்கள் போலத்
தம்மிடம் வருவோரிடம் இருந்து பொன்னையும் பொருளையும் கொள்ளை கொள்ளும் விலைமாதர்கள்
மேல் காமஉணர்வு கொள்ளுவது நன்றாகுமோ? நன்று ஆகாது.
விரிவுரை
முல்லை
மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை ---
முல்லை
மலர் போலவும், முத்துக்களால் அமைந்தன போலவும் உள்ள பற்கள்.
"அன்னமும்
கறியும் அசைவு இட்டு இறக்கும் முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்" என்கின்றார்
பட்டினத்து அடிகள்.
"வெள்ளைநகை முல்லை என்றாய், முல்லை முறித்து ஒருகோல் கொண்டு நிதம் ஒல்லை
அழுக்கு எடுப்பது உண்டேயோ?"
என்கின்றார்
வள்ளல்பெருமான். முல்லை மலரில் அழுக்குச் சேர்வது இல்லை. குச்சியைக் கொண்டு
நிதமும் அழுக்கு எடுக்கப்படும் பல்லை முல்லை மலர் என்பதா?
முத்து
என்றும் மாறாது ஒருபடியாய் ஒளி வீசிக் கொண்டே இருக்கும். ஆனால் பல்லானது
ஒருகாலத்தில் ஒளி இழந்து, தேய்ந்து, உதிர்ந்து போகும்.
வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை ---
வள்ளிக் கொடியைப் போல உள்ள நல்ல காதுகளில் விளங்கி அசைகின்ற குண்டலங்களை உடையவர்கள்
விலைமாதர்கள். காது வள்ளைக் கொடி அல்ல. அது போல உள்ளதாகக் காமுகர்களுக்குத்
தோன்றும்.
"உள்ளும்
குறும்பியும் ஒழுகும் காதை வள்ளத் தண்டின் வளம் என வாழ்த்தியும்" என்கின்றார்
பட்டினத்து அடிகள். உள்ளே குறும்பி என்னும் அழுக்கு ஒழுகுகின்ற காதை வள்ளைத்
தண்டின் வளமை பொருந்தியதாகக் கூறுவர் காமுகர்.
"எய்த்தல்
இலா வள்ளை என்றாய் வார் காது, வள்ளை தனக்கு உள் புழையோடு உள்ளு நரம்பின் புனைவும் உண்டேயோ?" என வினவுகின்றார் வள்ளல்
பெருமான்.
முல்லை
மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது ---
முல்லை
மலர் மாலை சுற்றப்பட்டும், அசைகின்ற பூங்கொத்துக்கள்
சூடப்பட்டும், அலை வீசுவது போலப்
புரளுகின்ற கூந்தல்.
அம் மொள்கு சிலை வாள்நுதல், பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் ---
அழகிய
வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றி.
அந்த
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போலவும், கயல் மீனைப் போன்ற கண்களையும், கிளியைப் போன்ற குரலையும் உடையவர்கள்.
வில், பிறை இவைகளுக்கு ஒப்பான நெற்றி.
"நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்" என்றார் பட்டினத்தடிகள். "பொய்
ஓதி, ஒண்பிறையே
ஒள்நுதல் என்று உன்னுகின்றாய், உள் எலும்பு ஆம் வெண்பிறை அன்றே அதனை விண்டிலையே, கண் புருவம் வில்
என்றாய், வெண்மயிராய் மேவி
உதிர்ந்திடுங்கால் சொல்
என்றால் சொல்லத் துணியாயே" என்கின்றார் வள்ளல் பெருமான்.
பெண்களின்
கண்ணானது மீன் போன்றும், அம்பு போன்றும்
உள்ளது என வருணிக்கப்படும். "தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக்
கழுநீர்" என்று காமுகர் சொல்வதாகப் பட்டினத்தடிகள் பாடினார்.
"வல்
அம்பில் கண் குவளை என்றாய், கண்ணீர் உலர்ந்துமிக
உள்குழியும்
போதில் உரைப்பாயே?" என்கின்றார்
வள்ளல்பெருமான்.
முன்னல்
கமுகார் களம்
---
பாக்கு
மரம் போன்ற கழுத்து.
"வேர்வையும்
அழுக்கும் மேவிய கழுத்தை பாரினில் இனிய கமுகு எனப் பகர்ந்தும்" என்று
இகழ்கின்றார் பட்டினத்து அடிகள்.
தோய்
சுணங்காய முலை மலை யானை வல்ல குவடு ---
தேமல்
பரந்துள்ளதும், எதிர்த்து வரும் யானை போன்றதும், வன்மை வாய்ந்ததுமான
குன்றைப் போன்றதுமான மார்பகங்கள்.
"சிலந்தி
போலக் கிளைத்து, முன் எழுந்து, திரண்டு, விம்மி, சீ பாய்ந்து ஏறி, உகிரால் கீற
உலர்ந்து உள் உருகி, நகுவார்க்கு இடமாய் நான்று, வற்றும் முலையைப்
பார்த்து முளரி மொட்டு என்றும் குலையும், காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்", என்கின்றார்
பட்டினத்து அடிகள்.
"மண்வாழும் ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய், மாதர்முலை ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே? சீரான வெற்பு
என்றால் ஏற விரைந்து அறியாய், மாதர்முலை வெற்பு என்றால் ஏற விரைந்தனையே"
என்றும், "மங்காத செவ் இளநீர் கொங்கை எனச்
செப்பினை, வல் ஊன் தடிப்பு இங்கு எவ்
இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே? செவ்வைபெறும் செப்பு
என்றனை முலையை, சீசீ சிலந்தி அது துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே? வப்பு இறுகச் சூழ்ந்த முலை மொட்டு என்றே
துள்ளுகின்றாய், கீழ்த் துவண்டு வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே? தாழ்ந்த அவை மண்கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய், முதிர்ந்து உடையாப் புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே? திண்கட்டும் அந் நீர்க்
குரும்பை அவை என்றாய், மேல் எழும்பும் செந்நீர்ப் புடைப்பு என்பார்
தேர்ந்திலையே?" என்கின்றார்
வள்ளல் பெருமான்.
மேலும்,
...... ...... ...... செவ்வைபெறும்
செப்பு
என்றனை முலையை, சீசீ சிலந்தியது
துப்பு
என்றவர்க்கு யாது சொல்லுதியே? - வப்பு இறுகச்
சூழ்ந்தமுலை
மொட்டு என்றே துள்ளுகின்றாய், கீழ்த்துவண்டு
வீழ்ந்த
முலைக்கு என்ன விளம்புதியே? - தாழ்ந்தஅவை
மண்கட்டும்
பந்து எனவே வாழ்ந்தாய், முதிர்ந்து உடையாப்
புண்கட்டி
என்பவர் வாய்ப் பொத்துவையே? - திண்கட்டும்
அந்நீர்க்
குரும்பை அவை என்றாய், மேல் எழும்பும்
செந்நீர்ப்
புடைப்பு என்பார் தேர்ந்திலையே, - அந்நீரார்
கண்ணீர்
தரும் பருவாய்க் கட்டுரைப்பார், சான்றாக
வெண்ணீர்
வரல் கண்டும் வெட்கிலையே? - தண்ணீர்மைச்
சாடியென்பாய்
நீ, அயலோர் தாதுக் கடத்து இடு மேல்-
மூடிஎன்பார்,
மற்று அவர்வாய் மூடுதியோ?
என்கின்றார்
வள்ளல்பெருமான்.
ஆல் இலை போலும் சந்தான வயிறு ---
ஆல
மரத்தின் இலையைப் போன்றதும் பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிறு.
"மலமும், சலமும், வழும்பும், திரையும் அலையும்
வயிற்றை ஆல் இலை என்றும்" காமுகர் கூறித் திரிகின்றார்களே என்று
வருந்துகின்றார் பட்டினத்து அடிகள்.
"மேடு
அதனை ஆல் இலையே என்பாய், அடர் குடரோடு ஈருளொடும் தோல் இலையே ஆல் இலைக்கு, என் சொல்லுதியே?" என்று வினவுகின்றார் வள்ளல்பெருமான்.
உள்ள
துகில் நூல் இடை ---
அந்த
வயிற்றின் மேல் உள்ள நூல் போல் நுண்ணிய இடை.
"நெடும்
உடல் தாங்கி நின்றிடும் இடையைத் துடி பிடி என்று சொல்லித் துதிப்பதாக"
இரங்குகின்றார் பட்டினத்து அடிகள்.
"பொற்பு
ஒன்றும் சிங்கம் என்றால்
வாடித் தியங்குகின்றாய், மாதர் இடைச் சிங்கம் எனில் காணத் திரும்பினையே"
"நூல்
இடைதான் உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய், கைதொட்டுக் கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே?" என்கின்றார்
வள்ளல்பெருமான்.
காம
பண்டார அல்குல் ---
காமநிதிக்கு
வைப்பு இடமாகிய பெண்குறி,
"தூமைக்
கட வழி,
தொளை
பெறு வாயில்,
எண்சாண்
உடம்பும் இழியும் பெருவழி;
மண்பால்
காமம் கழிக்கும் மறைவு இடம்,
நச்சிக்
காமுக நாய்தான் என்றும்
இச்சித்து
இருக்கும் இடை கழி வாயில்,
திங்கள்
சடையோன் திருவருள் இல்லார்
தங்கித்
திரியும் சவலைப் பெருவழி,
புண்
இது என்று புடவையை மூடி
உள்நீர்
பாயும் ஓசைச் செழும்புண்
மால்
கொண்டு அறியா மாந்தர் புகும் வழி,
நோய்
கொண்டு ஓழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய
காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய
காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணும்
ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம்
சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்
சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை
நீங்கள் இனிது என வேண்டா"
என்கின்றார்
பட்டினத்து அடிகள்.
"சிறு பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய், மாதர் அல்குல்
பாம்பு
என்றால் சற்றும் பயந்திலையே, ஆம்பண்டைக்
கீழ்க்கடலில்
ஆடு என்றால் கேட்கிலை நீ, மாதர் அல்குல்
பாழ்க்கடலில்
கேளாது பாய்ந்தனையே"
என்றும்,
..... ..... ..... ..... "விண்டு
ஓங்கும்
ஆழ்ங்கடல்
என்பாய் மடவார் அல்குலினை, சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறு
என்பார் அதனைப் பார்த்திலையே, - தாழ்ங்கொடிஞ்சித்
தேர்
ஆழி என்பாய் அச் சீக்குழியை, அன்று, சிறு
நீர்
ஆழி என்பவர்க்கு என் நேருதியே,-
ஆராப்புன்
நீர்
வீழியை ஆசை நிலை என்றாய், வன்மலம்தான்
சோர்
வழியை என்என்று சொல்லுதியே, - சார்முடைதான்
ஆறாச்
சிலை நீர் கான் ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப்
புண் என்று விடுத்திலையே, - ஊறு ஆக்கி
மூலை
எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி, மற்று அதன்மேல்
சீலை
இடக் கண்டும் தெரிந்திலையே, - மேலையுறு
மேநரகம்
என்றால் விதிர்ப்புறு நீ, மாதர் அல்குல்
கோ
நரகம் என்றால் குலைந்திலையே, - ஊனம் இதைக்
கண்டால்
நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்
தண்டா
தொளித்திடவும் சார்ந்தனையே, - அண்டாது
போத
விடாய் ஆகிப் புலம்புகின்றாய், மற்று அதன்பால்
மாதவிடாய்
உண்டால் மதித்திலையே"
என்றும்
அறிவுறுத்துகின்றார் வள்ளல்பெருமான்.
வழ்ழை தொடையார்
---
வாழை
என்னும் சொல் வழ்ழை என வந்தது.
பெண்களின்
தொடையானது வாழைத் தண்டைப் போல் உள்ளது.
ஆனால், பட்டினத்து அடிகள், "தசையும்
எலும்பும் தக்க புன் குறங்கை இசையும் கதலித் தண்டு என இயம்பியும்" என்கின்றார்.
"மாதர்
அவர்தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய், தண்டு ஊன்றி வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே?" என்று ஐயுற்றுக்
கேட்கின்றார் வள்ளல்பெருமான்.
வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல் உறவு ஆமோ ---
சாமர்த்தியம்
உள்ளவர்கள் போலத் தம்மிடம் வருவோரிடம் இருந்து பொன்னையும் பொருளையும் கொள்ளை கொள்ளும் விலைமாதர்கள் மேல் காமஉணர்வு கொள்ளுவது நன்றாகுமோ? நன்று ஆகாது.
நன்று
ஆகாது என்பதை வள்ளல்பெருமான் விளக்கமுறக் காட்டியதைப் பின்வருமாறு காண்போம்...
...... ...... ...... காம
வெப்பினிடை
ஆவது
அறியாது அழுந்தினையே - மேவும் அதில்
உள்
எரிய, மேலாம் உணர்வும் கருக, வுடல்
நள்
எரிய நட்பின் நலம் வெதும்ப, - விள்வது இன்றி
வாடிப்
பிலம் சென்று வான்சென்று ஒளித்தாலும்
தேடிச்
சுடும் கொடிய தீக் கண்டாய், - ஓடிஅங்கு
பேர்ந்தால்
அலது, பெருங்காமத் தீ நின்னைச்
சேர்ந்தாரையும்
சுடும் செந் தீக் கண்டாய் - சார்ந்தாங்கு
சந்தீ
என வருவார் தம்மைச் சுடும் காம்ம்ம
செந்தீயையும்
சுடும் ஓர் தீக் கண்டாய் - வந்து ஈங்கு
மண்ணில்
தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்,
நண்ணித்
தலைக்கு ஏறு நஞ்சம் காண் - எண்ணற்ற
போர்
உறும் உள் காமப் புதுமயக்கம் நின்னுடைய
பேரறிவைக்
கொள்ளைகொளும் பித்தம்காண், - சோர்அறிவில்
கள்அடைக்கும்
காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்
முள்அடைக்கும்
பொல்லா முரண்கண்டாய், - அள்ளல் உற
ஏதம்
எலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்
பேதம்
எலாம் ஒன்றிப் பிறப்பிடம் காண், - ஆதலினால்
வெம்மால்
மடந்தையரை மேவ ஒணாது, ஆங்கு அவர்கள்
தம்
ஆசை இன்னும் தவிர்ந்திலையே, - இம்மாய
மன்ற
அணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்
என்றகொடும்
சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில்
பெண்என்று
உரைப்பில், பிறப்பு ஏழும் ஆம் துயரம்
எண்
என்ற நல்லோர்சொல் எண்ணிலையே, - பெண்இங்கு
மாமாத்
திரையின் வருத்தனம் என்று எண்ணினை, அந்
நாமார்த்தம்
ஆசை என நாடிலையே - ஆமார்த்தம்
மந்திரத்தும்
பூசை மரபினும் மற்ற எவ்விதமாம்
தந்திரத்தும்
சாயாச் சழக்கு அன்றோ? - மந்திரத்தில்
பேய்பிடித்தால்
தீர்ந்திடும், இப் பெண் பேய் விடாதே, செந்
நாய்பிடித்தால்
போலும் என்று நாடிலையே, - ஆய்வில்உன்றன்
ஏழைமை
என் என்பேன், இவர்மயக்கம் வல்நரகின்
தோழைமை
என்று அந்தோ துணிந்திலையே? - ஊழ் அமைந்த
காரிருளில்
செல்லக் கலங்குகின்றாய், மாதர்சூழல்
பேரிருளில்
செல்வதனைப் பேர்த்திலையே -
...... ...... ....... வில் இயல்பூண்
வேய்ந்தால்
அவர்மேல் விழுகின்றாய், வெந்தீயில்
பாய்ந்தாலும்
அங்குஓர் பலன்உண்டே, - வேய்ந்தாங்கு
சென்றால்
அவர் பின்னர்ச் செல்கின்றாய், வெம்புலிப்பின்
சென்றாலும்
அங்குஓர் திறன்உண்டே, - சென்றாங்கு
நின்றால்
அவர்பின்னர் நிற்கின்றாய், கண்மூடி
நின்றாலும்
அங்குஓர் நிலை உண்டே, - ஒன்றாது
கண்டால்
அவர் உடம்பைக் கட்டுகின்றாய், கல்அணைத்துக்
கொண்டாலும்
அங்குஓர் குணம் உண்டே, - பெண்டு ஆனார்
வைதாலும்
தொண்டு வலித்தாய், பிணத் தொண்டு
செய்தாலும்
அங்குஓர் சிறப்பு உளதே - கைதாவி
மெய்த்தாவும்
செந்தோல் மினுக்கால் மயங்கினை நீ,
செத்தாலும்
அங்குஓர் சிறப்பு உளதே - வைத்தாடும்
மஞ்சள்
மினுக்கால் மயங்கினைநீ, மற்று ஒழிந்து
துஞ்சுகினும்
அங்குஓர் சுகம் உளதே, - வஞ்சியரைப்
பார்த்து
ஆடி ஓடிப் படர்கின்றாய், வெந்நரகைப்
பார்த்தாலும்
அங்குஓர் பலன் உண்டே - சேர்த்தார் கைத்
தொட்டால்
களித்துச் சுகிக்கின்றாய், வன்பூதம்
தொட்டாலும்
அங்குஓர் துணை உண்டே - நட்டாலும்
தெவ்வின்
மடவாரைத் திளைக்கின்றாய், தீவிடத்தை
வவ்வுகினும்
அங்குஓர் மதி உண்டே - செவ்விதழ்நீர்
உண்டால்
மகிழ்வாய்நீ, ஒண்சிறுவர்
தம்சிறுநீர்
உண்டாலும்
அங்குஓர் உரன் உண்டே - கண்டாகக்
கவ்வுகின்றாய்
அவ்விதழை, கார்மதுகம் வேம்பு இவற்றைக்
கவ்வுகினும்
அங்குஓர் கதி உண்டே, - அவ்விளையர்
மென்று
ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ,
வெறும்வாய்
மென்றாலும்
அங்குஓர் விளைவு உண்டே - முன்தானை
பட்டால்
மகிழ்வு பதிந்தாய், பதைக்க அம்பு
பட்டாலும்
அங்குஓர் பலன் உண்டே - கிட்டாமெய்த்
தீண்டிடில்
உள் ஓங்கிச் சிரிக்கின்றாய், செந்தேள்முன்
தீண்டிடினும்
அங்குஓர் திறன் உண்டே, - வேண்டி அவர்
வாய்க்கு
இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய், மற்று அதைஓர்
நாய்க்கு
இடினும் அங்குஓர் நலன் உண்டே - தாக்கவர்க்காய்த்
தேட்டாண்மை
செய்வாய், அத் தேட்டாண்மையைத் தெருவில்
போட்டாலும்
அங்குஓர் புகழ் உண்டே - வாட்டாரைக்
கொண்டாருடன்
உணவு கொள்கின்றாய், குக்கலுடன்
உண்டாலும்
அங்குஓர் உறவு உண்டே, - மிண்டு ஆகும்
இங்கு
இவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய், புன்மலத்தை
நுங்கினும்
அங்கு ஓர்நல் நொறில்உண்டே, - மங்கையர்தம்
ஏத்தா
மனை காத்து இருக்கின்றாய், ஈமம் அது
காத்தாலும்
அங்கு ஓர் கனம் உண்டே, - பூத்தாழ்வோர்
காட்டாக்
குரல்கேட்பாய், கர்த்தபத்தின்
பாழ்ங்குரலைக்
கேட்டாலும்
அங்குஓர் கிளர் உண்டே, - கோட்டாவி
ஆழ்ந்தார்
உடன்வாழ ஆதரித்தாய், ஆழ்ங்கடலில்
வீழ்ந்தாலும்
அங்கு ஓர் விரகு உண்டே - வீழ்ந்தார்உள்
வீட்டால்
முலையும், எதிர் வீட்டால் முகமும்
உறக்
காட்டா
நின்றார், கண்டும் காய்ந்திலையே, - கூட்டாட்குச்
செய்கை
இடும்படி தன் சீமான் தனது பணப்
பை
கை இடல் கண்டும் பயந்திலையே, - சைகை அது
கையால்
ஒருசிலர்க்கும், கண்ணால்
ஒருசிலர்க்கும்,
செய்யா
மயக்குகின்றார், தேர்ந்திலையே, - எய்யாமல்
ஈறு
இகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்
கூறுவனேல்
அம்ம குடர்கு ழம்பும், - கூறும்இவர்
வாய்
ஒருபால் பேச, மனம் ஒருபால் செல்ல, உடல்
ஆய்
ஒருபால் செய்ய அழிவார்காண், - ஆயஇவர்
நன்று
அறியார், தீதே நயப்பார், சிவதலத்தில்
சென்று
அறியார், பேய்க்கே
சிறப்பெடுப்பார், - இன்று இவரை
வஞ்சம்
என்கோ? வெவ்வினையாம்
வல்லியம் என்கோ? பவத்தின்
புஞ்சம்
என்கோ? மாநரக பூமி என்கோ? - அஞ்சு உறும் ஈர்
வாள்
என்கோ? வாய்க்கு அடங்கா
மாயம்என்கோ? மண்முடிவு
நாள்
என்கோ? வெய்ய நமன் என்கோ? - கோள் என்கோ?
சாலம்
என்கோ? வான் இந்த்ர சாலம் என்கோ? வீறு ஆல-
காலம்
என்கோ? நின்பொல்லாக் காலம்
என்கோ? - ஞாலம்அதில்
பெண்
என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்,
மண்
நின்றார் யார் நடுங்க மாட்டார்காண், - பெண்என்றால்
பேயும்
இரங்கும் என்பார், பேய்ஒன்றோ? தாம் பயந்த
சேயும்
இரங்கும் அவர் தீமைக்கே, - ஆயுஞ்செம்
பொன்னால்
துகிலால் புனையா விடில், அவர்மெய்
என்
ஆகும்? மற்று இதை நீ
எண்ணிலையே? - இன்னாமைக்
கொத்து
என்ற அம்மடவார் கூட்டம், எழுமைக்கும்
வித்து
என்று அறிந்தும் அதை விட்டிலையே? - தொத்தென்று
பாச
வினைக்கு உட்படுத்து உறும் அப் பாவையர்மேல்
ஆசை
உனக்கு எவ்வாறு அடைந்ததுவே?
அல்லல்
வினை போக, அசத்து ஆதி விண்டு
ஓட
---
உலகில்
உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பதுன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர்
வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின்
எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்? உயர்குடியில்தானே
பிறக்கும்?
இறைவன்
ஆணையின் வழி இவை நிகழ்கின்றன. அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன்
ஆகின்றான். இறைவனுடைய அருட்குணத்திற்கு
முரணும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன்
இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை
என்று அறிதல் வேண்டும்.
நிமித்தகாரணன்
ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும்
துணைக் காரணம் என்க.
வினையின்
வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால்,
இறைவன்
எதற்கு? எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது. ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு
இறைவன் வேண்டும்.
இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து
நுகருமே? வினைகளை ஊட்டுவதற்கு
இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா. அறிவித்தால்
மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு
இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.
அப்படி
ஆயின், வினையின் வழியே
உயிர்கட்கு, இறைவன்
சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய
சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே எனின், எய்தாது.
குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா?
எனவே செய்வான், செய்வினை, வினைப்பயன், அதனை ஊட்டுவான், என்ற நான்கினையும் நன்கு உரைப்பது சைவ நூல் ஒன்றேயாகும்.
செய்வினையும், செய்வானும், அதன்பயனும், கொடுப்பானும்,
மெய்வகையால் நான்குஆகும், விதித்த
பொருள் எனக் கொண்டே,
இவ் இயல்பு சைவநெறி அல்லவற்றுக்கு இல்லை என,
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்.
--- பெரியபுராணம்.
ஊட்டுவிப்பானும், உறங்குவிப்பானும், இங்கு ஒன்றோடு ஒன்றை
மூட்டுவிப்பானும், முயங்குவிப்பானும், முயன்ற வினை
காட்டுவிப்பானும், இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும், ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே. ---
பட்டினத்தார்.
வினை
ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லாதது தோன்றாது என்ற சற்காரிய வாதம்
பிழைபடும். ஆகவே, வினை அநாதியே உண்டு
என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.
நெல்லிற்கு
உமியும், நிகழ்செம்பினில்
களிம்பும்,
சொல்லில்
புதிதுஅன்று, தொன்மையே, ---
வல்லி
மலகன்மம்
அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம்
செய்கமலத்து ஆம்.
வினை, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய
அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள்
என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.
பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்திதத்துவத்தினிடமாக
மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றுக்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர்
பெறும்.
வினை
பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள்
எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.
அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால்
பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப்
பெயர் பெறும்.
எனவே
ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.
ஆகாமியம்
- செய்யப்படுவது.
சஞ்சிதம்
- பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம்
- அநுபவிப்பது.
இனி, பிராரத்தம் ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும்
என்றோமே, அதன் விவரம்
வருமாறு....
(1) ஆதி தைவிகம் --- தெய்வத்தால்
வரும் இன்பதுன்பங்கள்.
அவை
--- கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப
துன்பங்களாம்.
கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில்
திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு
தைவிகம்என்று ஓர்.
(2) ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.
அவை
--- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம், மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப
இன்பங்களாம்.
தன்னால்
பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா
விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்
அட்டை
அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும்
இங்கு ஆன்மிகமே காண்.
(3) ஆதிபௌதிகம் --- மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.
அவை
--- குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி, தென்றல் முதலியன.
பனியால்
இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம்
சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில்
பவுதிகம் ஆகும்.
இன்னும்
உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.
1. உலக வினை --- கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால்
உண்டாவதாய், நிவிர்த்தி கலையில்
அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
2. வைதிக வினை --- வேதத்துள்
விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய
புவனபோகங்களைத் தருவது.
3. அத்தியான்மிக வினை --- வேதநெறியால் செய்யும் பூசனை துறவு
முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில்
அடங்கிய புவன போகங்களைத் தருவது.
4. அதிமார்க்க
வினை --- இயமம் நியம் முதலிய யோகப்
பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில்
அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
5. மாந்திர வினை --- சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய
ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத
கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
எனவே, பிறவிக்கு வினை காரணம். அவ்வினை அற்றால்
அன்றி பிறவி அறாது எனத் தெளிக.
இருவினை
முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய்
நீயும் நானுமாய்
இறுகும்வகை
பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா
லோகநாயகா. --- (அறுகுநுனி) திருப்புகழ்.
அவையே
தானே ஆய்இரு வினையில்
போக்குவரவு
புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி
நிற்கும்அன்றே.
என்ற
சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு
மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல்
புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.
அல்லலைத்
தருகின்ற தீவினைகள் அகலவேண்டும். தீவினைகள் உடம்போடு கூடிய வாழ்வுக்குத்
துன்பத்தைத் தருவன. நல்வினையும் பிறவிக்கு வித்து ஆகும் என்பார் திருவள்ளுவ
நாயனார். "இருள்சேர் இருவினை" என்று அருளியதை நினைவில் கொள்ளவேண்டும்.
பிறவிகள்தோறும்
நல்வினை, தீவினை என்னும் இருவினைகள் நம்மைத்
தாக்குகின்றன. தீவினை இம்மையில் துன்பத்தைத் தருகின்றது. நல்வினை மீண்டும் பிறவியில் ஆழ்த்தித்
துன்பத்தைத் தருகின்றது. மனம் சிறப்பாய் வேலை செய்வதே மனிதப் பிறவியில் பெறவேண்டிய
மாட்சிமை ஆகும். மனத்தினால் செய்யப்படும் வேலைகளை விடவும், கையினால் செய்யப்படுபவை சிறியவை ஆகும். மனத்தினைல்
நினைக்கப்படுவன அனைத்தையும் உடம்பால் செய்துவிட முடியாது.
கை
கால்களால் செய்யப்படும் வேலைகள் வரம்புக்கு உட்பட்டவை. எவ்வளவு வேகமாக ஓடினாலும், மனிதக்
கால்களால் குதிரையின் வேகத்தை எட்டமுடியாது. ஆனால், அதை விட வேகமாக மனத்தால்
ஓட முடியும். மனதை ஒரு செயலில் பதிய வைப்பதற்கு பாவித்தல் என்று பெயர். நிலத்தின்
மேல் பதியும்படி வைக்கப்படுவது பாதம். பதியும்படி எண்ணவது பாவனை. எண்ணிய
எண்ணியாங்கு எய்துவர் என்னும்போது, எண்ணத்தின் அழுத்தத்தால் எய்தப்படும் என்பது
தெளிவாகும். ஆழ்ந்த எண்ணத்தால் வினைகளைச் செய்வதும், துய்ப்பதும் வேகமாக
நடந்து வருகின்றது.
வினை
வேகம் கொள்வதன் நோக்கம், அது விரைவில் துய்க்கப்பட்டு, ஓய்ந்து போய்
முடிந்து விடவேண்டும். அது ஓய்வதற்கு உயிரானது நல்லறிவைப் பெறவேண்டும். நல்லறிவு
பெறுவதற்கு,
நல்லறிவு
பெற்றவர்களை நாளும் சார்ந்து இருக்கவேண்டும்.
கல்லாரே
ஆயினும்,
கற்றாரைச்
சேர்ந்து ஒழுகின்,
நல்லறிவு
நாளும் தலைப்படுவர், - தொல்சிறப்பின்
ஒள்
நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத்
தான்பயந் தாங்கு. --- நாலடியார்.
தாம்
கல்வி அறிவு இல்லாதவரே ஆனாலும், கற்றறிந்த பெரியோரைச் சேர்ந்து பழகினால், அவர்களுக்கும்
அந்தப் பெரியோரது சேர்க்கையினால் கொஞ்சம் கொஞ்சமாக நல்லறிவு வாய்க்கப் பெறுவர்.
எப்படி என்றால்,
சிறந்த
அழகும் மணமும் நிறைந்த பாதிரிப்பூவை வைத்திருந்து மண்பாண்டத்தில் உள்ள
தண்ணீருக்கும் அந்த மணம் கிடைப்பது போல.
கற்பது
என்றால் மெய்யறிவைத் தரும் நூல்களையே கற்கவேண்டும். "கற்க" என்னும்
திருவள்ளுவ நாயானாரின் சொல்லுக்கு, "அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்
பொருள் உணர்த்துவன அன்றிப் பிறபொருள் உணர்த்துவன, சில்நாள், பல்பிணிச்
சிற்றறிவினர்க்கு ஆகா" என்று பரிமேலழகர் பெருமான் அறிவித்த உரையை உணர்க. இதையே நாலடியாரும் வலியுறுத்துகின்றது. உயிருக்குத்
தடுமாற்றத்தைத் தருகின்ற வினைகள் அறவேண்டும் என்றால், ஒருவன் உலக வாழ்வுக்கு
உரிய நூல்களைக் கல்லாமல், ஞானநூல்களைக் கற்று, உண்மை அறிவு எனப்படும்
மெய்யறிவைப் பெற வேண்டும்.
அலகுசால்
கற்பின் அறிவுநூல் கல்லாது,
உலகநூல்
ஓதுவது எல்லாம், - கலகல
கூஉந்
துணை அல்லால்,
கொண்டு
தடுமாற்றம்
போஒந்
துணை அறிவார் இல். ---
நாலடியார்.
ஆய்ந்து
அறிந்து மெய்யறிவைத் தருகின்ற நூல்களைக் கல்லாமல், இந்த உலக வாழ்க்கைக்குத்
தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கே
உதவும். அல்லாமல், அந்த நூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து
விடுபடுவதற்குத் துணை ஆக மாட்டா.
எனவே, அறிவு நூல்களைக்
கற்க,
கற்ற
பெரியோர்களோடு கூடி ஒழுக, நெறியில் நிற்கவேண்டும் என்னும் அவா உண்டாகும்.
சாதனமாகிய திருநீறு, கண்டிகை ஆகியவற்றைக் கைக்கொண்டு, நன்னெறியில் நின்று ஒழுக
ஒழுக,
உயிரானது
கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படும். உயிரினது பக்குவநிலையை உணர்ந்து, இறைவன்
குருநாதனாகத் திருமேனி கொண்டு, உயிருக்கு, தீக்கை புரிவான்.
பக்குவம்
உறாத பொழுது உயிர்க்குயிராய் உள்ளே மறைந்து நின்று அதன் அறிவை வளர்த்து வந்த சிவனே
இப்பொழுது அவ்வுயிரின் பக்குவ நிலையையும், ஞானத்தைப் பெறுதலில் உள்ள வேட்கையையும்
பார்த்தருளி, ஞானாசிரியராக
எழுந்தருளி முப்பொருளின் இயல்புகளையும் அறிவுறுத்துவார். பொருளியல்பு முற்றும் உள்ளவாறு
விளங்குதலே ஞானமாகும். அவ்வாறு ஞானம் விளங்கிய பொழுது, அவ்வுயிர் அசத்தை அசத்து என்று கண்டு
கழித்துச் சத்தாகிய சிவத்தோடு கூடி இன்புறுதலாகிய முத்தி நிலையைப் பெறும்.
ஆன்மாவினது
அறிவு தானே எதனையும் அறியமாட்டாது. யாதொன்றையும் இறைவன் அறிவிக்கவே அறிவதாகும். அங்ஙனம்
அறியுமிடத்தும் புறப்பொருள்களை அறியுமேயன்றி ஆன்மாவாகிய தன்னை அறியமாட்டாது. தன்னை
மட்டுமா? தன்னுள்ளே நின்று
செலுத்துகின்ற தலைவனாகிய இறைவனையும் அறியமாட்டாது.
ஆன்மாவினது
அறிவு பாசஞானம் என்றும் பசுஞானம் என்றும் இரண்டாகச் சொல்லப்பெறும்.
பாசஞானம்
என்பது பாசமாகிய கருவிகளின் வழியாக ஆன்மாவுக்கு உண்டாகும் சிற்றறிவாகும்.
பசுஞானம்
என்பது கருவிகளின் நீங்கியபோது உளதாகும் விரிந்த அறிவாகும். இந்தப் பாசஞான பசு
ஞானங்களால் முதல்வனை அறிய இயலாது. அவனது ஞானம் ஒன்றினாலேயே அவன் அறியப்படுவான்.
சிவனது
அறிவு சிவஞானம் எனப்படும். சிவன் பதியாதலின் அவனது அறிவு பதிஞானம் என்றும்
கூறப்படும். இன்னும் அருள் என்ற பெயராலும் அது வழங்கப்படும்.
பதியானது, பாசஞானம் பசுஞானங்களால்
உணரப்படாது என்பதும், பதிஞானத்தால்
உணரப்படும்.
நாம்
உலகப் பொருள்களை அறிவதற்குக் கண் என்ற சிறந்த கருவியைப் பெற்றுள்ளோம். கண்ணின்
துணையில்லையேல் எப்பொருளையும் காண இயலாது. அவ்வாறே ஆன்மா சிவமாகிய மெய்ப் பொருளைக்
காணுவதற்கும் ஒரு சிறந்த கண்ணைப் பெற வேண்டும். அக்கண் எது? அதுவே சிவஞானம் என்றும், பதிஞானம் என்றும் அருள் என்றும் மேலே
நாம் குறிப்பிட்டது. அதுவே இறைவனைக் காணத் துணை செய்வது. ஆன்மா கண்ணாகிய பொறியைப்
பெற்று அது வழியாக உலகப் பொருளையறிந்து அனுபவிப்பதைப் போலப் பதிஞானமாகிய கண்ணைப்
பெற்று அது வழியாகப் பதியையறிந்து அனுபவிக்கும். இந்நிலையை அவனருளே கண்ணாகக்
காணுதல் என்றும் அருட் கண்ணால் நோக்குதல் என்றும் கூறுவர்.
நாம்
சூரியனை அதனிற் பிரியாத சூரியஒளியின் துணைகொண்டே காணுகின்றோம். விடியலில்
கீழ்வானில் முதலில் தோன்றுவது சூரியனது
செவ்வொளியே. அவ்வொளியை நமது கண்முன்னே பற்றுகிறது. அவ்வாறு பற்றி அவ்வொளியோடு
ஒன்றி அவ்வொளி வழியே நம் கண்ணோக்கி நின்றால் பொன்மயமான சூரியனது காட்சி
புலப்படுவதாகும்.
சூரியனை
விட்டுப் பிரியாத அதன் ஒளி போல இறைவனை விட்டுப் பிரியாதிருப்பது அவனது ஞானம்.
முன்னே தோன்றும் சூரிய ஒளிபோல ஆன்ம அறிவில் முதலிற் புலப்படுவது அப்பதிஞானமே. கண்
முதலில் சூரிய ஒளியோடு பொருந்துவது போல ஆன்மா முதலில் பதிஞானத்தைப் பற்ற வேண்டும்.
அதனோடு பொருந்த வேண்டும். சூரிய ஒளி தன்னைப் பொருந்தித் தன் வழிப்பட்ட கண்ணுக்குச்
சூரியனைக்காட்டும். அதுபோலப் பதிஞானம் தன்னை உணர்ந்து தன்னோடு ஒன்றித் தன்
வழிப்பட்ட ஆன்மாவுக்குப் பதியைக் காட்டும்.
சூரிய
ஒளி தோன்றாத பொழது சூரியனைக் காணமுடியுமா? சூரிய ஒளியின்றி வேறு எந்த ஒளியை
வைத்தும் சூரியனைக் காணமுடியாது. அதுபோலப் பதிஞானமாகிய ஒளி ஆன்மாவிடத்தில்
புலப்பட்டாலன்றிப் பதியைக் காணவொண்ணாது. பதி தன் அறிவாலே உணரப்படுவான். வேறு
அறிவால் உணரவாராதவன்.
இறைவனை
அவனது ஞானமே கண்ணாகக் காணலாம் என்றால் அவனது ஞானத்தை ஆன்மா பெறுதல் எவ்வாறு? என்ற வினா எழுகிறது. ஆன்மா பாசப்பற்றை
விடுமானால் அதனறிவில் பதிஞானம் விளங்கித் தோன்றும்.
இந்த
உலகப் பற்றே உயிரறிவில் நின்று உணர்த்திவருகிற பதிஞானத்தை உணரவொட்டாது அதனை
மறைத்து நிற்பது. ஓர் உவமை வாயிலாக இதனை விளக்கலாம். ஒரு பெரிய சுவரில் அழகிய
ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை சுவரையே தமக்குப் பற்றுக்கோடாக உடையன. சுவரும்
ஓவியமும் ஆகிய இரண்டில் சுவரே நிலையுடையது. ஓவியங்கள் நிலையில்லாதனவாய்க் கழிவன.
ஆயின் அவ் ஓவியங்களைக் காண்போர் சுவரே அவற்றிற்கு நிலைக் களமாய் உள்ளது என்பதையும்
அதுவே நிலையானது என்பதையும் உணர்வதில்லை. அவர்கள் நிலையற்றனவாகிய ஓவியங்களை
மட்டுமே கண்டு அக்காட்சியில் மகிழ்ந்து போவர்.
இந்த
உலகமும் உலகபோகங்களும் அந்த ஓவியங்களைப் போன்றவை. அவை இறைவனது ஆற்றலாகிய பதி
ஞானத்தையே நிலைக்களமாக உடையன. அவையாவும் ஓவியங்களைப் போல நிலையின்றி நீங்குவன.
அவற்றிற்கு ஆதாரமாயுள்ள பதிஞானமே ஓவியத்திற்கு ஆதாரமாகிய சுவரைப் போல என்றும்
நிலைபெற்றிருப்பது. பக்குவமில்லாதவர் இவ்வுண்மையை உணரார். அவர்கள் நிலைபேறுடைய
பதிஞானமாகிய திருவருளை நினையாது நிலையற்ற உலக இன்பங்களிலேயே மகிழ்ந்து நிற்பர்.
நிலையற்றனவாகிய
சித்திரங்களைத் தள்ளி நோக்கினால் சுவரின் நிலை புலப்படும். அதுபோலத் தனு கரண புவன
போகங்களைத் தள்ளி நோக்கினால், அவற்றின் மீதுவைத்த
பாசப்பற்றை நீக்கினால், அவற்றிற்கெல்லாம்
ஆதாரமாய் உள்ள பதியினது ஆற்றலாகிய ஞானம் ஆன்ம அறிவில் விளங்கித் தோன்றும்.
இங்ஙனம்
ஆன்மா உலகமும் உலக போகங்களும் கானல் நீர் போல நிலையற்றவை என்பதைச் சிந்தனையின் வாயிலாக
உணர்ந்து உலகப் பற்றை விட்டபொழுது அதனறிவில் பதிஞானம் விளங்கித் தோன்ற, அப்பதிஞானத்தையே கண்ணாகக் கொண்டு
பதியைத் தன்னுள்ளே காணும். கண்டு அவனது தூய இன்பத்தை நுகரும்.
ஆயினும்
முன்னைப் பழக்கம் காரணமாக முன்பு அனுபவித்து விட்டொழித்த உலக இன்பத்தின் மேல்
மீண்டும் அதற்கு விருப்பம் செல்லும். இந்நிலைக்கு வேம்பு தின்ற புழுவை உவமை
காட்டுவர்.
வேப்ப
மரத்தில் பிறந்து வளர்ந்த புழு கசப்பான அதன் இலை காய் முதலியவற்றையே நின்று
வாழ்ந்து வருங்கால் தற்செயலாய் அது அருகில் வளர்ந்திருந்த கரும்பின் மேல் வீழ்ந்து
அக்கரும்பின் இனிய சாற்றைச் சுவைத்து மகிழ்ந்தது. இப்படிச் சிலகாலம் சென்றது. பின்
பழைய பழக்க வாசனை தலையெடுத்தது. முன்பு சுவைத்துப் பழகிய வேம்பின் இலை காய்
முதலியவற்றை மீண்டும் சுவைக்க அதற்கு விருப்பம் ஏற்பட்டதாம்.
அதுபோலத்
துன்பத்தையே மிகக் கொண்ட இவ்வுலகில் பிறப்பெடுத்த உயிர் துன்பக் கலப்பு உடைய
சிறிதாகிய இன்பத்தையே நுகர்ந்து வாழ்ந்த நிலையில் பதிஞானத்தைப் பெற்று அதனால்
பதியை அடைந்து தூய பேரின்பத்தை நுகர்ந்ததாயினும் முன்னைப் பழக்க வாசனையால் உலக
இன்பத்தின் மேல் விருப்பம் எழும்.
அவ்வாறு
உலக நோக்கம் வருமாயின் ஞானநிலை நீங்கிவிடும். அங்ஙனம் தலையெடுக்கின்ற உலகப்பற்றை
நீக்கி ஞான நிலையில் உறைத்து நிற்றற்குத் திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்க
வேண்டுவது இன்றியமையாதது.
அஞ்செழுத்தில் பாச எழுத்துக்களாகிய நகார மகாரங்கள் நீங்க
எஞ்சிய மூன்றெழுத்தே (சிவாய) முத்தி பஞ்சாக்கரம் எனப்படும் என்பதும், அதுவே குரு முகமாகப் பெற்றுப்
பலமுறையும் சிந்தனையில் வைத்துக் கணிக்கப்படும் என்பதும் அறியத் தகும்.
உடம்பும்
உலகுமாய் அமைந்த தத்துவங்களை அசத்து என்று கண்டு உயிர் அவற்றினின்றும் நீங்கும். அவ்வாறு
தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து நீங்குதலையே,
யாதனின்
யாதனின் நீங்கியான் நோதல்
அதனின்
அதனின் இலன்.
என்னும்
திருக்குறள் காட்டி நிற்கிறது.
சுவரில்
தீட்டிய ஓவியங்களை நோக்கியபோது, அவை காண்பவரை
மகிழ்விக்கும். மனத்தில் பற்றினை உண்டாக்கும். அவ்வோவியங்களை நோக்காது அவற்றிற்கு
ஆதாரமாய் உள்ள சுவரினையே நோக்கினால் அவ்வோவியத் தோற்றம் புலனாகாமையால் இருந்தும்
இல்லையாகும். அவற்றினால் வரும்
மகிழ்ச்சியும் பற்றுதலும் இல்லையாகும். அதுபோல, உலகப் பொருள்களைத் தனித்தனியே
நோக்குவார்க்கு அவை சிற்றின்பத்தையும் பற்றினையும் உண்டாக்கும். ஓவியங்களுக்கு எல்லாம்
சுவர் தாரகமாதல் போல ,உலகிற்கெல்லாம்
தாரகம் திருவருளே என்பதை உணர்ந்து, அத்திருவருள்
ஒன்றையே நோக்குவார்க்கு உலகப் பற்று ஒழியும். சிவம் ஒன்றுமே மெய் என்பது
விளங்கும். அசத்து விண்டு ஓடும். சத்து என உள்ள இறைவனை உயிரானது உணரும். இதனை,
திருவருள்
நாட்டம் கருணையில் பெறலும்
யாவையும்
எனக்குப் பொய் எனத் தோன்றி,
மேவரும்
நீயே மெய் எனத் தோன்றினை,
ஓவியப்
புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப
விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது
தடவினர் தமக்குச்
சுவராய்த்
தோன்றும் துணிவு போன்றனவே --- திருக்கழுமல மும்மணிக்கோவை.
என
வரும் பட்டினத்து அடிகள் திருவாக்கில் காணலாம்.
தத்துவங்களே
தனக்கு நிலைக்களமாக நின்ற ஆன்மா,
சிந்தனையால்
அவற்றை வேறாகக் கண்டு நீங்கிய பின்னர்ச் சிவனது அருளே அதற்கு நிலைக்களமாகும்.
நய
உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ, அள் அமைய ஞான வித்து
ஓதும் கந்தா
---
இன்பமான
உள்ளத்தை உயிரானது பொருந்தி அமைய,
ஏகன்
ஆகி இறைபணி நிற்கும். நிற்கவே, ஆணவமலம், மாயாமலம் ஆகியவற்றோடு கன்ம
மலமும் வலி குன்றும். இவ்வாறு இறைவனு உயிர்களை ஆட்கொள்ளுகின்றான். அருள் வைத்து நம்மை
ஆளுகின்ற தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி உற , அவரது
திருக்காதில்
குளிர்ந்து பொருந்த, ஞானத்துக்கு விதை போன்ற மூலப்பொருளை, உபதேசம் செய்தவர் முருகப்
பெருமான்.
தெள்ளு
தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட ---
தெளிந்த
தமிழ். தெள்ளுதல் - தெள்ளி வடிகட்டுதல். தமிழ் மொழி ஒன்றே
திருக்கயிலாயம் சென்று அரங்கேறியது. சேரமான் பெருமாள் நாயனார் பாடி அருளிய "திருக்கயிலாய
ஞானஉலா" திருக்கயிலையில் அரங்கேறியது. மொழிகளுக்குள் முதன்மை பெற்றது தமிழ்.
நக்கீரர்
முதலிய நற்றமிழ்ப் புலவர்கள் சொற்றமிழ்ப் பாடல்களைக் கேட்ட பரமன் மிகவும்
மகிழ்ச்சி அடைந்தனர்.
விரித்து
அருணகிரிநாதன் உரைத்த தமிழ் எனும் மாலை
மிகுத்த பலமுடன் ஓத ...... மகிழ்வோனே... --- (வரிக்கலையின்)
திருப்புகழ்.
தமிழ்
அமுதம் போன்றது. இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும். தமிழில் மூவகை இனம்
உண்டு. வல்லினம், மெல்லினம், இடையினம். தமிழ் என்ற சொல்லில், த- வல்லினம், மி -
மெல்லினம். ழ் - இடையினம். மூன்று இனங்களும் சேர்ந்த ஒரு சொல்லால் அது அமைந்துள்ள
அழகு இன்புறத்தக்கது.
உலகில்
பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியேயாம். இறைவனருளை எளிதில் பெறுதற்கு
ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து
தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான்
பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதி அனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும்
அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது.
முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கல் புணையை நல் புணை ஆக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது
போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது
தமிழ். கல் தூணில் காட்சி தரச்
செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச்
செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது
தமிழ்.
இறைவனுக்கு
முன்னே வருவது தமிழ். பின்னே வருவது வடமொழி.
திருமால்
கோயிலில் இன்றும் இங்ஙனம் நிகழ்வது கண்கூடு.
“பழமறைகள் முறையிடப்
பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே” --- குமரகுருபரர்.
பழமையான
வேதங்கள் முறையிடவும், பைந்தமிழின்
பின்னால் சென்றவனே என்று மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழில் குமரகுருபர அடிகள் திருமாலைப்
பாடி இருப்பதை எண்ணுக,
அத்தகைய
தமிழால் அடியவர்கள் பாடி வழிபட மகிழ்பவன் முருகப் பெருமான்.
கருத்துரை
முருகா!
விலைமாதர்கள் மேல் காம உணர்வு கொண்டு அழிவதை நீக்கி, ஞான உணர்வு பெற்று அழியாத பதம் அடைய அருள்.
No comments:
Post a Comment