சிதம்பரம் - 0659. முத்த மோகன





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முத்த மோகன (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
தேவரீரது ஆறெழுத்தையும் மனத்தில் உன்னி,
ஆறுமுகமானதின் பொருளையும் அடியேன் அறிந்து உய்யுமாறு அருள் புரிவாயாக.


தத்த தானன தத்தன தானன
     தத்த தானன தத்தன தானன
          தத்த தானன தத்தன தானன ...... தனதான


முத்த மோகன தத்தையி னார்குர
     லொத்த வாயித சர்க்கரை யார்நகை
          முத்து வாரணி பொற்குவ டார்முலை ......விலைமாதர்

மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்
     பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்
          முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் ...... கலிசூழச்

சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ
     டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை
          சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் ...... மடமீதே

சித்தெ லாமொரு மித்துன தாறினம்
     வைத்து நாயென ருட்பெற வேபொருள்
          செப்பி யாறுமு கப்பரி வோடுணர் ...... வருள்வாயே

தத்த னானத னத்தன தானெனு
     டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்
          சத்த தீவுத யித்தியர் மாளிட ...... விடும்வேலா
  
சத்தி லோகப ரப்பர மேசுர
     நிர்த்த மாடுக ழற்கரு ணாகர
          தற்ப ராபர நித்தனொர் பாலுறை ...... யுமைபாலா

துத்தி மார்முலை முத்தணி மோகன
     பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்
          துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் ..மணிமார்பா

சுட்டி நீலஇ ரத்தின மாமயி
     லுற்று மேவிய ருட்புலி யூர்வளர்
          சுத்த னேசசி பெற்றபெ ணாயகி ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முத்த மோகன தத்தையினார் குரல்,
     ஒத்த வாய்இத சர்க்கரையார், நகை
          முத்து, வார்அணி பொன்குவடு ஆர்முலை.....விலைமாதர்,

மொக்கை போக செகுத்திடுவார், பொருள்
     பற்றி வேறும் அழைத்திடுவார், சிலர்
          முச் சலீலிகை சொக்கிடுவார்,டர் ...... கலிசூழச்

சித்தில் ஆட அழைத்திடுவார், கவடு
     உற்ற மாதர் வலைப் புகு நாய் எனை
          சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் ...... மடமீதே,

சித்து எலாம் ஒருமித்து, உனது ஆறு இனம்
     வைத்து, நாயென் அருள் பெறவே, பொருள்
          செப்பி, ஆறுமுகப் பரிவோடு உணர்வு ...அருள்வாயே.

தத்த னானத னத்தன தான்என்
     உடுக்கை பேரி முழக்கிடவே, கடல்
          சத்த தீவு தயித்தியர் மாளிட ...... விடும்வேலா!

சத்தி லோக பரப் பரமேசுர!
     நிர்த்தம் ஆடு கழல் கருணாகர!
          தற் பராபர நித்தன்ஒர் பால்உறை ...... உமைபாலா!

துத்தி மார்முலை முத்து அணி மோகன
     பொன் ப்ரகாசம் உளக் குறமான் மகள்
          துப்பு வாய்இதழ் வைத்துஅணை சோதிபொன் .....மணிமார்பா

சுட்டி நீல இரத்தின மாமயில்
     உற்று மேவி அருள் புலியூர் வளர்
          சுத்தனே! சசி பெற்றபெண் நாயகி ...... பெருமாளே.


பதவுரை

      தத்த னானத னத்தன தா என் உடுக்கை பேரி முழக்கிடவே --- தத்த னானத னத்தனதா என உடுக்கையும் பேரிகைகளும் பேரொலி செய்ய,

     கடல் சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா --- கடல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் இருந்த அசுரர்கள் இறந்து போகும்படியாக வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

      சத்திலோக பரப் பரமேசுர --- அருள் சக்தி உலகங்களுக்கு எல்லாம் முழுமுதற் கடவுளாய் உள்ளவரே!

     நிர்த்தம் ஆடுகழல் கருணாகர --- திருநடனம் புரிகின்ற திருவடிகளை உடைய கருணைக்கு இடமானவரே!

     தற் பராபர --- தாமே பரம்பொருளாய் உள்ளவரே!

     நித்தன் ஒர்பால் உறை உமைபாலா --- அழியாதவராய் உள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ள உமாதேவியின் திருக்குழந்தையே,

     துத்திமார் முலை முத்துஅணி --- தேமல் படர்ந்துள்ள மார்பகத்தின் மீது முத்து மாலை அணிந்துள்ள,

     மோகன பொன் ப்ரகாசம் உளக் குறமான் மகள் --- அழகும் பொலிவுள்ள ஒளியும் கொண்டுள்ள, மானின் வயிற்றில் அவதரித்து, குறவர் குலத்தில் வளர்ந்தவளாகிய வள்ளிநாயகியின்

     துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன்மணி மார்பா --- பவளம் போலச் சிவந்துள்ள வாயிதழ் ஊறலைப் பருகி அவளைத் தழுவும், ஒளி வீசும் அழகிய மணிகள் அணிந்துள்ள திருமார்பரே!

      சுட்டி நீல இரத்தின மாமயில் உற்று மேவிய --- நீலக் கொண்டையும், நீல நிறமும், ரத்தின ஒளியும் கொண்டுள்ள சிறந்த மயில் மீது பொருந்தி அமர்ந்து

     அருள் புலியூர் வளர் சுத்தனே --- அருள் வளரும் சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ள குற்றமற்றவரே!

     சசி பெற்ற பெண்நாயகி பெருமாளே --- இந்திராணி பெற்ற, பெண்களுக்கு எல்லாம் தலைவியாகிய தேவயானை அம்மையின் நாயகனாகிய பெருமைக்கு உரியவரே!

      முத்த மோகன தத்தையினார் --- முத்தம் தந்து காம மயக்கத்தைத் தருகின்ற கிளி போன்றவர்கள்.

     குரல் ஒத்தவாய் இத சர்க்கரையார் --- வாயினின்றும் வெளிப்படும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர்.

      நகை முத்து --- முத்தைப் போன்ற பற்களை உடையவர்.

     வார் அணி பொன் குவடுஆர் முலை விலைமாதர் --- கச்சு அணிந்த அழகிய மலை போன்ற முலைகளை உடைய பொதுமகளிர்.

     மொக்கை போக செகுத்திடுவார் --- மதிப்பை இழக்கும்படி அழிப்பவர்கள்.

      பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் --- பொருள் காரணமாக வேறு ஆடவர்களையும் அழைப்பவர்கள்.

     சிலர் முச் சலீலிகை சொக்கிடுவார் --- சிலர் வாய் நீர், சிறு நீர், நாத நீர் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கொடுப்பவர்கள்.

     இடர் கலி சூழச் சித்தில் ஆட அழைத்திடுவார் --- துன்பமும் தரித்திரமும் சூழச் செய்யும் மாய வித்தைகள் ஆட அழைப்பவர்கள்.

      கவடு உற்ற மாதர் வலைப் புகு நாய் எனை --- வஞ்சனை கொண்ட விலைமாதர்களின் வலையில் புகுகின்ற அடியேனுக்கு

     சித்தி ஞானம் வெளிப்படவே --- அட்டமா சித்திகளும், உண்மை ஞானமும் வெளிப்படும்படியாக,

     சுடர் மட மீதே சித்தி எலாம் ஒருமித்து --- ஒளி பொருந்திய புருவநடு நிலையில், அறிவு எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள

      உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள் பெறவே --- உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்துத் தியானித்து, அடியேன் திருவருளைப் பெறுமாறு

     பொருள் செப்பி ஆறுமுகப் பரிவோடு உணர்வு அருள்வாயே --- ஆறெழுத்தின் பொருளை விளங்கச் சொல்லி, தேவரீரது திருமுகங்கள் ஆறும் பொழியும் கருணை வெள்ளமாகிய ஞானத்தை அடியேனுக்கு அருள்வாயாக.


பொழிப்புரை

     தத்த னானத னத்தனதா என உடுக்கையும் பேரிகைகளும் பேரொலி செய்ய, கடல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் இருந்த அசுரர்கள் இறந்து போகும்படியாக வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

       அருள் சக்தி உலகங்களுக்கு எல்லாம் முழுமுதற் கடவுளாய் உள்ளவரே!

     திருநடனம் புரிகின்ற திருவடிகளை உடைய கருணைக்கு இடமானவரே!

     தாமே பரம்பொருளாய் உள்ளவரே!

     அழியாதவராய் உள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ள உமாதேவியின் திருக்குழந்தையே!

         தேமல் படர்ந்துள்ள மார்பகத்தின் மீது முத்து மாலை அணிந்துள்ள, அழகும் பொலிவுள்ள ஒளியும் கொண்டுள்ள, மானின் வயிற்றில் அவதரித்து, குறவர் குலத்தில் வளர்ந்தவளாகிய வள்ளிநாயகியின் பவளம் போலச் சிவந்துள்ள வாயிதழ் ஊறலைப் பருகி அவளைத் தழுவும், ஒளி வீசும் அழகிய மணிகள் அணிந்துள்ள திருமார்பரே!

         நீலக் கொண்டையும், நீல நிறமும், ரத்தின ஒளியும் கொண்டுள்ள சிறந்த மயில் மீது பொருந்தி அமர்ந்து, அருள் வளரும் சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ள குற்றமற்றவரே!

     இந்திராணி பெற்ற, பெண்களுக்கு எல்லாம் தலைவியாகிய தேவயானை அம்மையின் நாயகன் என்னும் பெருமைக்கு உரியவரே!

         முத்தம் தந்து காம மயக்கத்தைத் தருகின்ற கிளி போன்றவர்கள். வாயினின்றும் வெளிப்படும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர். முத்தைப் போன்ற பற்களை உடையவர். கச்சு அணிந்த அழகிய மலை போன்ற முலைகளை உடைய பொதுமகளிர். மதிப்பை இழக்கும்படி அழிப்பவர்கள். பொருள் காரணமாக வேறு ஆடவர்களையும் அழைப்பவர்கள். அவர்களில் சிலர் வாய் நீர், சிறு நீர், நாத நீர் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கொடுப்பவர்கள். துன்பமும் தரித்திரமும் சூழச் செய்யும் மாய வித்தைகள் ஆட அழைப்பவர்கள். இத்தகு வஞ்சனை கொண்ட விலைமாதர்களின் வலையில் புகுகின்ற அடியேனுக்கு அட்டமா சித்திகளும், உண்மை ஞானமும் வெளிப்படும்படியாக, ஒளி பொருந்திய புருவநடு நிலையில், அறிவு எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள தேவரீருடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்துத் தியானித்து, அடியேன் திருவருளைப் பெறுமாறு, ஆறுமுகம் ஆனதின் பொருளை விளங்க உபதேசித்து, தேவரீரது திருமுகங்கள் ஆறும் பொழியும் கருணை வெள்ளமாகிய ஞானத்தை அடியேனுக்கு அருள்வீராக.

விரிவுரை

        
சத்திலோக பரப் பரமேசுர, தற் பராபர ---

அருள் சக்தி உலகங்களுக்கு முழுமுதற் கடவுளாய் உள்ளவர் முருகப் பெருமான். தாமே பரம் பொருளாய் உள்ளவர் அவரே.

"தானே தனக்கு நிகராய் விளங்கும் தணிகாசலத்து எம் அரசே" என்றார் வள்ளல்பெருமான்.

அருள் புலியூர் வளர் சுத்தனே ---

புலியூர் என்பது புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதிர் வழிபட்டுப் பேறு பெற்று திருத்தலம். அருள் வளரும் புலியூர். தற்போது சிதம்பரம் என்று வழங்கப்படுகின்றது.  சித் - ஞானம். அம்பரம் - வெளி. ஞானவெளி அல்லது ஞானாகாயம் ஆகும். அது எல்லா நலங்களையும் உயிர்களுக்கு அருள வல்லது.

எண்இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள
         எல்லைஇல் அழகு சொல்லிய எல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன என்ன
         மங்கலம் பொலி வளத்தன ஆகி,
புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு
         புகழ்ந்து பாடல்புரி பொற்பின் விளங்கும்
அண்ணல் ஆடுதிரு அம்பலம் சூழ்ந்த
         அம்பொன் வீதியினை நம்பி வணங்கி,

என்று தில்லைக் காட்சியை விளக்கும்போது,  உலகு அனைத்தினும் உள்ள எல்லையில்லாத சிறப்பினை உடைய நலங்கள் எல்லாம் பொருந்தி மங்கலம் பொலியும் பதியாகத் தில்லையை நமக்குக் காட்டி அருள்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

எல்லா நலங்களும் விளங்கும் தில்லையையே நெஞ்சில் எப்போதும் வைத்து வழிபட்டுக் கொண்டிருந்த மணிவாசகப் பெருமானுக்கு, எல்லா அழகு நலங்களும் பொருந்திய ஒரு பெண்கொடியாகக் காட்சி தந்ததாகத் திருக்கோவையார் முதல் பாடலில் மணிவாசகப் பெருமான் காட்டினார். மனம் எதைச் சிந்திக்கிறதோ அதுவே சித்திக்கும். காணும் யாவும் அதுவாகவே தோன்றும். மணிவாசகப் பெருமான் கண்டது ஐவகை நிலத்திற்கும் உரிய ஐந்து பூக்கள் கொண்ட ஒரு கொடியை.  ஆனாலும் அம் மலர்களின் மணம் மணிவாசகப் பெருமானின் தெய்வத் திரு நாசிக்கு எட்டவில்லை. மாறாக தெய்வ மருவளர் மாலையாக அவர் கண்டார். தெய்வமணம் வளருகின்ற மாலையாம் அது. அண்டத்தில் நாம் காணும் மலர்களின் மணமானது,  குறைந்துக்கொண்டே வரும். தெய்வமரு வளர்கின்ற மாலையில் எப்போதும் அருள் மணம் கமழ்ந்துகொண்டே இருக்கும். அதனை ஆனந்தமாக உருவகித்தனர் அருளாளார்கள். நினைத்தொறும், காண்தொறும், பேசுந்தொறும், எப்போதும் அனைத்து எலும்பு உள் நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பினை உடையவன் ஆடுகின்ற அருள் வெளி சிதம்பரம்.

அண்டத்தில் விளங்கும் தில்லையை நாம் சிந்தித்தோம்.  இது புறவழிபாட்டுக் காட்சி. புறவழிபாடு அகவழிபாடாக மலர்வதுதான் சிறப்பு. அது எப்படியும் ஆன்மா பக்குவப்படும்போது கைகூடும்.  பிண்டத்தில் தில்லை எங்கே விளங்குகிறது என்பதைத் திருமூல நாயனார்,

நீடும் சிரசசு இடைப் பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர் எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின், நாதாந்த நம்பெருமான் உகந்து
ஆடும் இடம்திரு அம்பலம் தானே.

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுஉற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்,
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று தேர்ந்துகொண் டேனே.

என்றெல்லாம் காட்டுகின்றார்.

இதய அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்கு உரியது.
புருவநடு அம்பலம் தியானித்து ஞானம் பெறுதற்கு உரியது. 
துவாதசாந்த அம்பலம் அமைதியுற்று ஆனந்தம் எய்துதற்கு உரியது.

அண்டத்து அம்பலங்களும் வெள்ளி, பொன், மணி என வகைப்பட்டு நிற்றல்போல், பிண்டத்து அம்பலங்களும் இவ்வாறு வகைப்பட்டு நிற்கும் என உரை கண்டனர் பெரியோர்.

சிற்றம்பலம் என்பது சிதாகாயம் அல்லது ஞானாகாயம். அது உரை மனம் கடந்த ஒரு பெருவெளி. அங்கே பெருமான் ஆனந்த நடம் இடுகின்றான். ஆக வெளி என்பது ஞான உணர்வு. அந்த உணர்விலே எழுகின்ற ஆனந்தம் என்பது பெருமான் ஆடும்  நடனம். அது எப்போதும் குறையாமல் இருக்கும் என்பதை "அருள்வெளிப் பதி வளர் அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல் பெருமான்.  "வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவபதியே" என்றும் போற்றினால். இப்படித்தான் சிற்றம்பலத்தைத் திருஞானசம்பந்தப் பெருமான் கண்டதாகத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுகின்றார்.

அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்
         ஞானமே ஆனஅம் பலமும்தம்
உள்நிறைந்த ஞானத்து எழும்
         ஆனந்த ஒருபெரும் திருக்கூத்தும்
கண்ணில் முன்புஉறக் கண்டுகும்
         பிட்டு எழும் களிப்பொடும் கடல்காழிப்
புண்ணியக் கொழுந்து அனையவர்
         போற்றுவார் புனிதர் ஆடியபொற்பு.

அருள் வளரும் சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ள குற்றமற்றவன் இறைவன். அவனை ஐம்முகச் சிவமாகக் கொள்ளலாம். ஆறுமுகச் சிவமாகவும் கொள்ளலாம். இரண்டும் ஒன்றே.

முத்த மோகன தத்தையினார் ---

காம மயக்கம் கொண்டுள்ள ஆடவர்பால் உள்ள பொருள் பொருட்டு, கிளி போலும் இனிமையான மொழிகளைப் பேசி, முத்தம் தந்து மயக்குபவர்கள் விலைமாதர்கள்.

குரல் ஒத்தவாய் இத சர்க்கரையார் ---

வாயினின்றும் வெளிப்படும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர். "கண்டு மொழி" என்ற பிறிதொரு திருப்புகழிலும், "கண்டு உண்ட சொல்லியர்" என்று கந்தர் அலங்காத்திலும் காட்டினார் அடிகளார்.
  
நகை முத்து ---

முத்தைப் போன்ற பற்களை உடையவர். முத்து என்றதும் வெண்மை நிறம் என்ற கொள்ளக் கூடாது. வெண்மை நிறம் அல்லாத முத்துக்களும் உண்டு. முத்து இயல்பாகவே ஒளி விடுவது. மற்ற மணிகள் எல்லாம் பட்டை தீட்டினால்தான் ஒளிவிடும். முத்து அப்படி அல்ல.

பல் எல்லாம் தெரியக் காட்டிச் சிரித்து மயக்குவார்கள் விலைமாதர்கள்.

வார் அணி பொன் குவடுஆர் முலை விலைமாதர் ---

கச்சு அணிந்த, மலை போன்ற பருத்த முலைகளை உடைய பொதுமகளிர். முலையால் மயக்குவார்கள்.

மொக்கை போக செகுத்திடுவார் ---

மொக்கை குலைதல் என்றால் இழிவு அடைதல் என்று பொருள்.
மொக்கை போதல் என்றால் அவமானப்படுதல், முனை மழுங்குதல் என்று பொருள்.

செகுத்தல் - அழித்தல்.

ஈவு இரக்கம் இல்லாமல் தம்பால் வரும் ஆடவரை மயக்கி, உடைமைகளை எல்லாம் கவர்ந்து கொள்வார்கள். அதன்பின், ஆடவர் தனது பெருமை குறைந்து இழி நிலையை அடைந்து, அவமானப்பட்டு நிற்பார்கள்.

பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் ---

பொது மகளிர் ஒருவரைக் கண்களால் அழைத்தும், கண்களால் இனிது பார்த்தும் உறவாடுவார்கள். ஒருவரிடம் தழுவி தமது தனங்களால் உறவாடுவார்கள். தனங்களைத் தந்து தனங்களைக் கவர்வார்கள். ஒருவரிடம் கை குலுக்கியும் கைகாட்டி அழைத்தும் கைகளினால் உறவாடுவார்கள். ஒருவரிடம் அன்பாகப் பேசி உறவு செய்கின்ற போதே மற்றொருவர் மீது மனதை வைத்திருப்பார்கள். பொருள் கொடுக்கவில்லையானால் உலோபி, கஞ்சன் என்று நிந்திப்பார்கள். ஒருவரிடம் விருப்பு வார்த்தையும் வெறுப்பு வார்த்தையும் கூறாமல் மௌனம் சாதிப்பார்கள். எல்லாம் பொருள்பற்றிச் செய்கின்ற மயக்கு வித்தைகள்.
  
ஒருவரொடு கண்கள், ஒருவரொடு கொங்கை,
     ஒருவரொடு செங்கை ...... உறவாடி,
ஒருவரொடு சிந்தை, ஒருவரொடு நிந்தை,
     ஒருவரொடு இரண்டும் ...... உரையாரை

மருவ, மிக அன்பு பெருக உளது என்று
     மனம் நினையும் இந்த ...... மருள் தீர,
வனசம் என வண்டு தனதனன என்று
     மருவு சரணங்கள் ......  அருளாயோ?           --- திருப்புகழ்.

சிலர் முச் சலீலிகை சொக்கிடுவார் ---

சலிலம் - நீர். முச்சலிலம் - மூன்று வகையான நீர். வாய் நீர், சிறு நீர், நாத நீர் என்னும் சுரோணிதம் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கரும்புச் சாற்றில் கலந்து மருந்து செய்வார்கள்.  அந்த மருந்தை உருண்டைகளாகச் செய்வார்கள். அவற்றை நிழலிலே உலர்த்துவார்கள். அந்த மருந்தை உணவில் கலந்தோ அல்லது படுக்கைக்குச் செல்லும்போது தாம்பூலத்தில் வைத்தோ கொடுத்து, தம்பால் வந்த ஆடவரை காம மயக்கம் கொள்ளச் செய்வார்கள்.

மருந்து உருண்டைகளை வெய்யிலில் உலர்த்தினால் அதன் சத்துப் போய்விடும். அதனால் உயர்ந்த மருந்து உருண்டைகளையும், மூலிகைகளையும் நிழலிலே உலர்த்தவேண்டும் என்பது மருத்துவ முறை.
  
நிறுக்கும் சூது அன மெய்த்தன முண்டைகள்,
     கருப்பம் சாறொடு அரைத்து உள உண்டைகள்
          நிழல்கண் காண உணக்கி, மணம் பல ...... தடவா,மேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம்
     ஒளித்து, ன்பாக அளித்த பின், ங்கு எனை
          நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம்சொலி .....என ஓதி

உறக் கண்டு, சை வலைக்குள் அழுந்திட
     விடுக்கும் பாவிகள், பொட்டிகள், சிந்தனை
          உருக்கும் தூவைகள் செட்டை குணம் தனில் .....உழலாமே
உலப்பு இன்று ஆறு எனும் அக்கரமும், கமழ்
     கடப்பம் தாரும், முக ப்ரபையும் தினம்
          உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட ..... அருள்வாயே!  --- திருப்புகழ்.

மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில்
     மூடு சீலை திறந்த மழுங்கிகள்,
          வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள், ......பழையோர்மேல்
வால நேசம் நினைந்து அழு வம்பிகள்,
     ஆசை நோய் கொள் மருந்துஇடு சண்டிகள்,
          வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள்,....                --- திருப்புகழ்.

பழமை செப்பி அழைத்து, தமித்து, டன்
     முறை மசக்கி, அணைத்து, நகக்குறி
          பட அழுத்தி, முகத்தை முகத்து உற, ...... உறவாடி,
பதறி எச்சிலை இட்டு, மருத்து இடு
     விரவு குத்திர வித்தை விளைப்பவர்,
          பல விதத்திலும் அற்பர் எனச்சொலும் ...... மடமாதர்..     --- திருப்புகழ்.

மேகம் ஒத்த குழலார், சிலைப் புருவ,
     வாளி ஒத்த விழியார், முகக் கமலம்
          மீது பொட்டுஇடு, அழகார் களத்தில் அணி......வடம்ஆட
மேரு ஒத்த முலையார், பளப்பள என
     மார்பு துத்தி புயவார், வளைக் கடகம்
          வீறு இடத் துவளும் நூலொடு ஒத்த இடை ...... உடை மாதர்,

தோகை பட்சி நடையார், பதத்தில் இடு
     நூபுரக் குரல்கள் பாட, அகத் துகில்கள்
          சோர, நல் தெருவுடே நடித்து, முலை ......விலைகூறி,
சூதகச் சரசமொடெ எத்தி, வரு-
     வோரை நத்தி, விழியால் மருட்டி, மயல்
          தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள்......உறவாமோ?  ---  திருப்புகழ்.

திருடிகள், ணக்கிச் சம்பளம் பறி
     நடுவிகள், மயக்கிச் சங்கம் உண்கிகள்,
          சிதடிகள், முலைக் கச்சு உம்பல், கண்டிகள், ......சதிகாரர்,
செவிடிகள், மதப்பட்டு உங்கு குண்டிகள்,
     அசடிகள், பிணக்கிட்டும் புறம்பிகள்,
          செழுமிகள், ழைத்து இச்சம் கொளும்செயர், ......வெகுமோகக்

குருடிகள், நகைத்து இட்டம் புலம்பு கள்
     உதடிகள், கணக்கு இட்டும் பிணங்கிகள்,
          குசலிகள், மருத்து இட்டும் கொடும் குணர், ......விழியாலே
கொளுவிகள், மினுக்குச் சங்கு இரங்கிகள்,
     நடனமும் நடித்திட்டுஒங்கு சண்டிகள்,
          குணமதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள் ...... உறவுஆமோ? ---  திருப்புகழ்.

இடர் கலி சூழச் சித்தில் ஆட அழைத்திடுவார் ---

சித்து - ஒருவகையான வரிக்கூத்து. ஆடல் பாடலில் ஆடவர் மனத்தை மயக்குவார்கள் விலைமாதர்கள். துன்பமும் வறுமையும் சூழச் செய்யும் மாய வித்தைகள் ஆட அழைப்பவர்கள்.

சித்தி ஞானம் வெளிப்படவே ---

எண்வகைச் சித்திகளும், உண்மை ஞானமும் வெளிப்படும்படியாக முருகப் பெருமான் அருள்புரிய வேண்டுகின்றார்.

முருகனைப் பணிவார்க்கு அட்டமா சித்தியும் எளிதில் உண்டாகும். ஆனால், அந்த சித்தியானது, முத்திக்கு ஊறு தரும். எனவே, பெரியோர்கள் அட்டமா சித்திகளை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள்.

1.    அணிமா --- அணுவைப் போல் சிறிய உருவாகும் ஆற்றல்.

2.    மகிமா --- மேருகிரியிலும் பெரிய உருவாக நிற்கும் ஆற்றல்

3.    கரிமா --- மிகவும் கனமாக நிற்கும் ஆற்றல்.

4.    லகிமா --- பஞ்சிலும் நொய்தாக நிற்கும் ஆற்றல்.

5.   பிராத்தி --- விரும்பியதைப் பெறும் பேறு.

6.   பிராகாமியம் --- நினைத்த போகமெல்லாம் பெறுவது. (ஏககாலத்தில் பெண்கள் பலரோடும் இன்பம் நுகர்தல்.)

7.    ஈசத்துவம் --- யார்க்குந் தேவனாதல்.

8.    வசித்துவம் --- எல்லாவற்றையும் தன் வசமாக்கும் ஆற்றல்.

 கருப்புகழாம் பரசமயக் கதை கேளாது, நுதினம் உன்
 திருப்புகழைக் கற்பார்க்குச் சித்தி எட்டும் எளிதாமே”    --- தணிகைக் கலம்பகம்.

இப்படி அடையப்படும் சித்தியானது, ஆன்மா முத்தி பெறத் தடையாக இருக்கும். ஆதலால் உண்மை அடியவர்கள் சித்தியை விரும்ப மாட்டார்கள் என்பது பின்வரும் பாடல்களால் தெளிவாகும்.

மந்திரம் புவனங்கள் தத்துவம் கலை வன்னங்கள் பதம் வேதம்
தந்திரம் பல சமயநூல் புறந்தழீ இச் சார்ந்த நூல் தரும் ஆதி
முந்து இரங்கிய சதுர்விதம் சரியையே முதலிய சதுட்பாதம்,
இந்து இரங்கு நீர்முடி அவர் அடியவர் இச்சியா எண் சித்தி.  
                                                    ---  திருவிளையாடல் புராணம்.

இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர்...            --- திருவிடைமருதூர் மும்மணிக் கோவை.

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தர ஆதி இன்பமும்,
ஏக! நின் கழல்இணை அலாது இலேன் என் எம்பிரான்,
ஆகம் விண்டு, கம்பம் வந்து, குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக என்கை, கண்கள் தாரை ஆறதாக ஐயனே. ---  மணிவாசகம்.

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு, குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால், நரகம் புகினும்
எள்ளேன், திருவருளாலே இருக்கப் பெறின், இறைவா!
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. ---  மணிவாசகம்.
  
உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள் பெறவே, பொருள் செப்பி ஆறுமுகப் பரிவோடு உணர்வு அருள்வாயே ---

முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களையும், ஆறெழுத்தையும் இனமாக வைத்து, அவற்றையே தியானித்து, முருகப் பெருமானுடைய திருவருஇளைப் பெறுமாறு, ஆறு திருமுகங்களின் உண்மைப் பொருளை கருணைப் பெருக்கோடு உணர்த்தி அருள வேண்டுகின்றார் அடிகளார்.

முருகப் பெருமானுடைய ஆறுதிருமுகங்களின் அருட்குறிப்பை, கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர அடிகள் பின்வருமாறு உணர்த்துகின்றார்.

.....       .....       .....       .....       வில்மலிதோள்

வெவ்வசுரர் போற்று இசைக்கும் வெஞ் சூரனைத் தடிந்து,
தெவ்வர் உயிர்  சிந்தும் திருமுகமும்,  -  எவ்உயிர்க்கும்

ஊழ்வினையை மாற்றி, உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர் முகமும்,  -  சூழ்வோர்

வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும்,  -  விடுத்து அகலாப்

பாசஇருள் துரந்து பல்கதிரில் சோதிவிடும்
வாசமலர் வதன மண்டலமும், -  நேசமுடன்

போகம் உறும் வள்ளிக்கும்,  புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும், -  தாகமுடன்

வந்து அடியில் சேர்ந்தோர் மகிழ, வரம் பலவும்
தந்து அருளும் தெய்வமுகத் தாமரையும்...

1.    வெவ்வசுரர் போற்று இசைக்கும் வெஞ் சூரனைத் தடிந்து, தெவ்வர் உயிர் சிந்தும் திருமுகமும் -- வில்படை ஏந்திய தோள்களைக் கொண்ட கொடிய அசுரர்கள் துதித்துப் புகழும் கொடிய சூரபன்மனைக் கொன்று, மற்றுமுள்ள பகைவர்களுடைய உயிரைப் போக்கிய வீரத் திருமுகம் ஒன்று.

2.    எவ்உயிர்க்கும் ஊழ்வினையை மாற்றி, உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர் முகமும் -- மலபக்குவம் அடைந்த எல்லா உயிர்க்கும், அவ் அவற்றின் பழவினைகளைப் போக்கி, என்றும் அழியாத பேரின்பப் பெருவாழ்வைத் தரும் செந்தாமரை மலர் போன்ற திருமுகம் ஒன்று.

3.    சூழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் --  ஐயம்  திரிபு அற ஆராயும் தன் அடியார்கள் குற்றம் அறக் கற்றுத் தெளிந்து எடுக்கின்ற பழமையான  வேதங்கள் சிவாகமங்கள் ஆகிய அனைத்தையும், ஐயம் இன்றித் திருவாய் மலர்ந்து, நிறைவு பெறச் செய்யும் தாமரை மலர் போன்ற திருமுகம் ஒன்றும்.

4.    விடுத்து அகலாப் பாசஇருள் துரந்து பல்கதிரில் சோதிவிடும் வாசமலர் வதன மண்டலமும் --  உயிர்களை விட்டு நீங்காத ஆணவமலமாகிய பாச இருளைப் போக்கி,  பல சூரியர்கள் ஒருங்கு சேர்ந்தால் போல     ஒளி வீசும் நன்மணம் கமழ்கின்ற தாமரை மலர் போன்ற திருமுகம் ஒன்றும்.

5.    நேசமுடன் போகம் உறும் வள்ளிக்கும்,  புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் --  அன்புடன் தன்னை அனுபவிக்க எண்ணும் வள்ளியம்மையார்க்கும், தேவர்களது அழகிய கொடி போல்பவளாகிய தெய்வயானை அம்மையார்க்கும், ஆசையைப் பெருக்கும் சந்திரன் போன்ற குளிர்ந்த திருமுகம் ஒன்றும்,

6.    தாகமுடன் வந்து அடியில் சேர்ந்தோர் மகிழ, வரம் பலவும் தந்து அருளும்      தெய்வமுகத் தாமரையும் -- திருவருளைப் பெறும் வேட்கையுடன் வந்து தன் திருவடியே தஞ்சமென அடைந்தவர்கள் உள்ளம் மகிழும் வண்ணம் பலவரங்களையும் கொடுத்து அருளுகின்ற, தெய்வத்தன்மை மிக வாய்ந்த தாமரை மலர் போன்ற திருமுகம் ஒன்றும், 
  
ஆறு திருமுகங்களின் அருட்செயல்களை, பின் வரும் திருமுருகாற்றுப்படை அடிகளாலும் அறியலாம்.

மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப்
பல்கதிர் விரிந்துஅன்று ஒருமுகம்,  ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்து அன்றே, ஒருமுகம்
மந்திர விதியின் மரபுஉளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே, ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்
திங்கள் போலத் திசை விளக்கும்மே, ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டு அன்றே, ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந்து அன்றே, ஆங்குஅம்
மூஇரு முகனும் முறைநவின்று ஒழுகலின்,
          
முருகப்பெருமானின் ஆறு திருமுகங்களும், இறைவனின் சர்வஞ்ஞத்துவம் என்னும் முற்றுணர்வு,  பரிபூரணத்துவம் என்னும் எங்கும் நிறைந்து நிற்கும் தன்மை,  அநாதி பேதம் என்னும் இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கி நிற்கும் தன்மை, அலுப்த சக்தி என்னும் பேரருள் உடைமை,  சுதந்தரத்துவம் என்னும் தன் வயத்தனாதல்,  அநந்த சக்தி என்னும் முடிவில் ஆற்றல் உடைமை என்ற மேலான ஆறு குணங்களாய் (சுத்த சாட்குண்யமாய்) அமைந்தன ஆகும்.  "வரைவறு சாட்குண்ய வஸ்து" என்பார் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்.  "அமலர்க்குள்ள மூவிரு குணனும் சேய்க்கு முகங்களாய் வந்ததென்ன" என்பது கந்தபுராணம்.

அன்றியும் திருவைந்தெழுத்து ஆகிய "சிவயநம" ஐந்தும்,  ஓங்காரமாகிய பிரணவம் ஒன்றும் ஆகிய ஆறு எழுத்தும் முருகப் பெருமானுக்கு ஆறு திருமுகங்களாயும் அமைந்தன எனவும் கொள்ளலாம்.

இவையே அன்றியும்,  காணாபத்தியம் (கணபதி),  கௌமாரம் (குமரன்), சௌரம் (சூரியன்),  வைணவம் (விஷ்ணு) சாத்தேயம் (சத்தி),  சைவம் (சிவம்)  என்ற இந்த ஆறு வைதிக சமயத்தின் ஆறு தெய்வங்களின் கூட்டே முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களாயும் அமைந்தன என நூல்கள் கூறும்.


"ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்" என்று முருகப் பெருமானை ஒரு திருப்புகழில் வேண்டுகின்றார் அடிகளார்.

ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே,
     ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே, 
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே,
     குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே, 
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே,
     வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே, 
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்,
     ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது தேவரீரின் ஒரு திருமுகமே. ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் விந்துவைக் குறிக்கும்.

சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது தேவரீரின் ஒரு திருமுகமே. ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் நாதத்தைக் குறிக்கும்
  
தேவரீரது திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்து வைப்பதும் தேவரீரின் ஒரு திருமுகமே. கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் மலத்தைக் குறிக்கும்
 
கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வேலை ஏவியதும் தேவரீரது ஒரு திருமுகமே. குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் சத்தியைக் குறிக்கும்

மாறுபட்டு நின்ற அசுரர்களை வதைத்து அழித்ததும் தேவரீரது ஒரு திருமுகமே. மாறுபடு சூரரை வதைத்த முகம் இறைவனது அருளாற்றலைக் குறிக்கும்.
  
வள்ளிநாயகியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி வந்ததும் தேவரீரது ஒரு திருமுகமே. வள்ளியை மணம் புணர வந்த முகம், ஓம் என்னும் பிரணவத்தைக் குறிக்கும்.
  
இவ்வாறு தேவரீர் ஆறுமுகப் பரம்பொருளாகக் காட்சி அளிப்பதன் உண்மைப் பொருளை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

இனி, கந்தர் அநுபூதியில் அடிகளார் குறித்துள்ள இரு பாடல்களையும் இதனுடன் சிந்தித்தல் மேலும் தெளிவைத் தரும்.


உல்லாச நிராகுல யோக இத
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே.

இன்பத்தை உடையவனாய், துன்பம் இல்லாதவனாய்,  கலப்பு நிலையை உடையவனாய், இனிமை நிறைந்தவனாய், மகிழ்ச்சியான மொழிகளைப் பேசுபவனாய்,  புதுமையானவனாய் இருப்பவன் நீ அல்லவோ. முருகப் பெருமானே, தேவலோகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் தலைவனே, நான் அகப்பற்றும், எனது என்னும் புறப்பற்றும் அற்று, ஆன்ம அறிவும் இழந்து, பரவசமாய் நின்று பேரின்பத்தை அநுபவிக்கும் நிலையை  நான் அடைய எனக்கு உபதேசித்து அருள்வாயாக என்று இந்த அநுபூதிப் பாடலில் அடிகளார் வேண்டுகின்றார்.

முருகப் பெருமானை அருணகிரிநாதப் பெருமான் அனுபவித்த நிலையை இங்குக் கூறுகின்றார். அநுபூதி நிலையை அடையவேண்டுமானால் ஆன்மா எல்லாப் பற்றுக்களையும் விட்டு, இறையருளையே பற்றி, தன் வசமிழந்து நிற்கவேண்டும்.  அப்படி எல்லாப் பற்றுக்களும் அற்று, தன்னை இழந்து நிற்கும் நிலையில் ஆன்மா இறைத் தன்மையைப் பெற்று நிற்கும்.  உல்லாசமாகவும் நிராகுலமாகவும் இருக்கும் நிலையை அது பெறும். உண்மைஞானத்தால் கிடைக்கும் இந்த ஆனந்த நிலை சொல்லுக்கு அடங்காது. சீவகரணங்கள் சிவகரணங்கள் ஆக மாறும். சீவன் சிவனாகும்.  இத்தகு அற்பது நிலையை ஆன்மா பெறுவதற்கு உபாயமாகத்தான் இந்த உடம்பானது நமக்கு வாய்த்திருக்கிறது. புறக்கண்ணால் இறையநுபவத்தைக் கண்டு மகிழமுடியாது. புறக் கண்களால் பார்க்கின்ற எல்லாமே அழிந்து போகக் கூடியவை. அகக் கண்ணால் மட்டுமே காணமுடியும்.

எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருப்பினும்
கண்ஆர் அமுதினைக் கண்டு அறிவாரில்லை,
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து இருந்தானே

என்பார் திருமூல நாயனார்.

உள்நாடிக் காண்பதற்குத் துணையாக வாயத்ததே இந்த உடம்பு.  உடம்பினுள்ளே ஒன்றும் இல்லையானால், அதற்கு "மெய்" என்று பெயர் வந்து இருக்காது. மெய்ப்பொருளை உணரத் துணை செய்வதாலேயே அதற்கு "மெய்" என்று பெயர் வந்தது.

இந்தப் பருவுடல் மட்டுமல்லாமல் உள்ளே நான்கு நுண் உடம்புகள் உள்ளன.  இயற்கையிலும் கூட இந்த அமைப்பு உள்ளது. வெங்காயத்தை உரிக்க உரிக்க இறுதியில் ஒன்றும் இல்லாமல் போகும். கனிகளும் இந்த வகையில் உள்ளவையே.
        
முதலாவது "பரு உடல்".  இது நமது கண்ணுக்குப் புலனாவது.  உடல் என்பதற்குக் கோசம் என்று ஒரு பெயரும் உண்டு.  "அன்னமய கோசம்" என்றும் சொல்லப்படும். இந்த உடம்பிற்கு, மண், நீர், தீ முதலிய பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆன உணவினை இட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

இரண்டாவது "காற்று உடம்பு". கண்ணுக்குத் தெரியாது.  இதைப் "பிராணமய கோசம்" என்பர்.  இது பிராண சத்தியால் இயங்குவது.  உடம்பில் இருந்து உயிர் பிரியும்போது இது மேலெழுந்து போகும். நமது கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் நாய், கோட்டான் முதலியவைகளுக்குப் புலப்படும்.  நாய் அழும்போதும், கோட்டான் கத்தும்போதும், யாரோ இறந்துவிட்டார் என்று பேசுவதை நாம் கண்டும் கேட்டும் இருக்கின்றோம்.

மூன்றாவது "மன உடம்பு".  இது மிகவும் நுட்பானது.  நமது எண்ணத்திற்கு ஏற்ப உருப்பெறும், வலுப்பெறும். இது "மனோமய கோசம்" என்று அழைக்கப்படும். உயர்ந்த சிந்தனைகளால் மனமானது மென்மை அடைந்து, ஆற்றல் பெற்று விளங்கும்.  எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின் என்பது இதை வைத்துத் தான். தேவையற்ற, வீணான நினைப்புகளை அகற்ற வேண்டும்.

நான்காவது "அறிவு உடம்பு".  இதுவும் நுண்மையானது.  அறிவால் ஆனது.  அதனால், இதை "விஞ்ஞானமய கோசம்" என்பர்.  ஆன்மா அறிவுப் பொருள். ஆனாலும் அது சிற்றறிவு எனப்படும்.  இந்த அறிவைக் கொண்டுதான், மேலும் மேலும் அறிவு விளக்கத்தை அது பெற்று முற்றறிவினனான இறைவனை உணர முடியும். அதற்குத் தான் கல்வி, கேள்வி முதலானவை துணை செய்யும். "கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நல்தாள் தொழாஅர் எனின்" என்னும் திருக்குறளைச் சிந்தித்தால் இது விளங்கும். கண்ஒளியைக் கொண்டு சூரியன் ஒளியால் பொருள்களைக் கண்டு அறிவது போல இது. ஆன்ம அறிவு முதிரும்போது அன்பு பிறக்கும். அது மேலும் முதிரும்போது அருள் பிறக்கும். அறிவு முதிராத போது வன்மை உடையதாக இருக்கும். முரட்டுத் தனம் என்று இதைச் சொல்லலாம்.  அறிவு முதிர முதிரக் கூர்மை பெறும்.  அதனால் ஞானவாள் என்று சொன்னார்கள்.  முரட்டுத் தனத்தைக் காய்க்கு ஒப்பிடலாம். மென்மைத் தன்மையைக் கனிக்கு ஒப்பிடலாம். 

ஐந்தாவது உடம்பு, "காரண உடம்பு".  இதை "ஆனந்தமய கோசம்" என்பர். ஆன்ம அறிவு இந்த உடலுக்கு வந்த பிறகு மற்ற கருவிகளின் துணை இல்லாமல் விளங்கும். இந்த உடல் வந்தபின் ஆன்மா கருவியின் துணையில்லாமல் செயல்படும். அன்புடைய ஒருவரை இந்த உடம்பில் இருந்து நினைத்தாலே வந்துவிடுவார். கடிதம் எழுதவேண்டுவதில்லை.  இந்த உடம்போடு வாழ்வது சிறந்தது. மேன்மேலும் இன்பம் தருவதாக அமையும். இந்த உடம்பே மிகவும் நுட்பநானது. இறைவனும் மிக நுட்பமானவன். இந்த உடம்பிலே இறைவனுடைய அருட்காட்சி தோன்றும். 

இத்தகு நிலையைப் பெறுவதற்குக, பருஉடலையே பெரிதாக எண்ணி, அதற்கு உணவு தேடும் முயற்சியிலேயே காலத்தைக் கழிப்பதை மாற்றி,  உள் உடம்புகளுக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபடவேண்டும். சத்துவ உணவைக் கொள்ளவேண்டும். மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு அடிப்படை ஆதாரமா நல்ல நூல்களைப் பயில வேண்டும். நல்லவர் கூட்டத்திலே இருத்தல் வேண்டும். அப்போது தான் அதிசூக்கும உடலுக்குப் போகமுடியும். அங்கு ஆன்ம அறிவு விளங்கும்.  விளங்கிய ஆன்ம அறிவு அன்பாக மாறும். தத்துவங்களை எல்லாம் சடமாகக் காணும் நிலை உருவாகும். அந்த நிலையில் ஓங்காரத்தின் உட்பொருள், திருவைந்தெழுத்தின் உட்பொருள் விளங்கும். இறையருள் பெருகும். அந்த மனத்தினைக் கோயிலாகக் கொண்டு இறைவன் வந்து விளையாடுவான்.

எல்லாம் அற்ற நிலையில் உல்லாசமும், நிராகுலமும், யோகமும், இதமும், சல்லாபமும் ஆன்மா அநுபவிக்கும்.

உல்லாசம் என்பது இன்பத்தைக் குறிக்கும். "தேனுக்குள் இன்பம் கறுப்போ, சிவப்போ, வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர், தேனுக்குள் இன்பம் செறிந்து இருந்தால் போல், ஊனுக்குள் ஈசன் ஒளிந்து இருந்தானே" என்ற உண்மை வெளிப்படும்.

அது வெளிப்பட, நிராகுலமான நிலை, அதாவது துன்பமில்லாத நிலை வாய்க்கும். இன்பமே எந்நாளும் துன்பமில்லை. அது மேலும் சிறக்க வேண்டுமானால், யோகத்தைப் பயில வேண்டும்.  யோகம் என்பது நல்லோர் கூட்டுறவைக் குறித்தது.

இதம் என்பது இனிமையைக் குறிக்கும்.

சல்லாபம் என்பது மகிழ்வைக் குறிக்கும்.

விநோதம் என்பது புதுமையைக் குறிக்கும்.  பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியன். 

எல்லாம் அற என்பது, ஆன்மா தனக்கு உரியதாகக் கருதுகின்ற எல்லாவற்றையும், அது காரணமாகிய பற்றுக்களையும் குறிக்கும். சுருக்கமாக, நான் என்னும் அகப்பற்று, எனது என்னும் புறப்பற்று இரண்டையும் குறிக்கும்.  பத்தி நிலையிலே ஆன்மா பழகப் பழக இந்த நிலை நிச்சயம் வாய்க்கும். அந்நிலையில் ஆன்மாவை இறைவன் ஈர்த்து ஆட்கொள்ளுவான். ஆட்கொண்ட பிறகு ஆன்மா எல்லாவற்றையும் இழந்து நிற்கும்.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே,
அகம் மாடை மடந்தையர் என்று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

         மகமாயை எனப்படும் சுத்தமாயையை நீக்க வல்லவனாகிய முருகப் பெருமான் ஆறுமுகங்களின் பொருளை உணர்த்தி இருந்தும், விடவேண்டியவைகளான மண், பொன், பெண் என்று கூறப்படும், ஆழ்த்துகின்ற அசுத்தமாயையில் இருந்துகொண்டு முன்னேறாமல் நான் தயங்கலாமோ என்று அடிகளார் இந்தப் பாடலில் வேண்டுகின்றார்.

மாயை என்பது, தோன்றி ஒடுங்குவது என்பதைக் குறிக்கும்.  உயிர்கள் அறிவு விளக்கம் பெறுவதற்காகவே உடம்பும், கருவிகளும், உலகமும், உலகப் பொருள்களும் படைக்கப்பட்டன.  ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். அங்ஙனம் கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறியும் போது, அவ்வறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறிதல் கருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையிலிருந்து தோன்றிய காரியங்களேயாகும். மாயை பாசம் எனப்படும். எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் பாசஞானம் எனப்படுவதாயிற்று. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானமாக மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பை அறியாது போகிறது.

பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இந்தக் கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.

ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெற்ற காலத்திலேதான் ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கும். அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமல் நிற்றல். அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாயிருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்குரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில் அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபக உணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேக படலம் மூடியிருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேக படலம் நீங்கியபோது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்மவுணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அது ஆன்மாவின் பொதுவியல்பு செயற்கையியல்பு வியாபக அறிவே அதன் உண்மையியல்பு.

இவ்வாறு, கருவியறிவாகிய பாச ஞானம் நீங்கி, வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன் என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரியவொளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதே ஆகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.

மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும்.

மாயையிலிருந்து ஆன்மாக்களை விடுவிப்பதற்காகவே இறைவன் ஐந்தொழில்களைப் புரிகின்றான். அவன் எல்லாம் வல்லவன் ஆதலால், உயிர்களின் மீது கொண்ட அளப்பரும் கருணையால், இதனை எல்லா உயிர்களுக்கும், எல்லாக் காலத்திலும் செய்து வருகின்றான்.  இருப்பினும், இறைவன் கருணையை உணராமல் இன்னமும் அறியாமையிலேயே இருப்பதாக அருணகிரிநாதப் பெருமான் உணர்ந்தார்.  நாம் உணருகின்றோமோ இல்லையோ, அருளாளர்கள் அவ்வாறு தான் உணருவார்கள்.
  
இந்த உணர்வைப் பெறுவதற்கு, இறை வழிபாடு இன்றியமையாதது ஆகின்றது. வழிபாடு என்றால், புற வழிபாடு, அக வழிபாடு என்று இரு வகைப்படும்.

புறவழிபாடு தொடக்க நிலை.
அகவழிபாடு அடையவேண்டிய நிலை.  

அகவழிபாடு, ஆதார வழிபாடு, நிராதார வழிபாடு என்று வகைப்படும்.  இறைவனை நமக்கு உள்ளேயே ஆதாரங்களில் கண்டு வழிபடுவது.  இது ஆதாரயோகம் எனப்படும். யோகம் என்றால் ஒன்றியிருத்தல்.

முருகப் பெருமானுக்குத் திருமுகங்கள் ஆறு. நமக்கு உடம்பிலே உள்ள ஆதாரங்கள் ஆறு.

மூலாதாரம் பூமிக்கும், சுவாதிட்டானம் நீருக்கும், மணிபூரகம் நெருப்புக்கும், அனாகதம் காற்றுக்கும், விசுத்தி வானத்திற்கும், ஆக்ஞை மனத்திற்கும் உரியது.

"ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெளியேனே" என்கின்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

கருத்துரை

முருகா! தேவரீரது ஆறெழுத்தையும் மனத்தில் உன்னி, ஆறுமுகமானதின் பொருளையும் அடியேன் அறிந்து உய்யுமாறு அருள் புரிவாயாக.







No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...