அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அதிக ராய்ப்பொருள்
(வேலூர்)
முருகா!
விலைமாதர் போகத்தால் வீணழிவதை
விடுத்து,
உமது திருவடியில் பொருந்தி,
சிவபோகத்தை அனுபவிக்க அருள்
புரிதல் வேண்டும்.
தனன
தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ...... தந்ததான
அதிக
ராய்ப்பொரு ளீவார் நேர்படில்
ரசனை காட்டிக ளீயார் கூடினும்
அகல வோட்டிகள் மாயா ரூபிகள் ......
நண்புபோலே
அசட
ராக்கிகள் மார்மே லேபடு
முலைகள் காட்டிகள் கூசா தேவிழும்
அழகு காட்டிக ளாரோ டாகிலு ......
மன்புபோலே
சதிர
தாய்த்திரி வோயா வேசிகள்
கருணை நோக்கமி லாமா பாவிகள்
தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் .....நம்பொணாத
சரச
வார்த்தையி னாலே வாதுசெய்
விரக மாக்கிவி டாமூ தேவிகள்
தகைமை நீத்துன தாளே சேர்வதும் ......
எந்தநாளோ
மதுரை
நாட்டினி லேவாழ் வாகிய
அருகர் வாக்கினி லேசார் வாகிய
வழுதி மேற்றிரு நீறே பூசிநி .....
மிர்ந்துகூனும்
மருவு
மாற்றெதிர் வீறே டேறிட
அழகி போற்றிய மாறா லாகிய
மகிமை யாற்சமண் வேரோ டேகெட .....வென்றகோவே
புதிய
மாக்கனி வீழ்தே னூறல்கள்
பகலி ராத்திரி யோயா ஆலைகள்
புரள மேற்செல வூரூர் பாயஅ ......
ணைந்துபோதும்
புகழி
னாற்கடல் சூழ்பார் மீதினி
லளகை போற்பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
அதிகராய்ப் பொருள் ஈவார் நேர்படில்,
ரசனை காட்டிகள், ஈயார் கூடினும்
அகல ஒட்டிகள், மாயா ரூபிகள், ...... நண்பு போலே
அசடர்
ஆக்கிகள், மார் மேலே படு
முலைகள் காட்டிகள், கூசாதே விழும்
அழகு காட்டிகள், ஆரோடு ஆகிலும் ......
அன்பு போலே
சதிர்
அதாய்த் திரி ஒயா வேசிகள்,
கருணை நோக்கம் இலா மா பாவிகள்,
தரும் உபேட்சை செய் தோஷா தோஷிகள், .....நம்ப ஒணாத
சரச
வார்த்தையினாலே வாதுசெய்,
விரகம் ஆக்கி விடா மூதேவிகள்,
தகைமை நீத்து, உன தாளே சேர்வதும் ......எந்தநாளோ?
மதுரை
நாட்டினிலே வாழ்வு ஆகிய,
அருகர் வாக்கினிலே சார்வு ஆகிய
வழுதி மேல், திரு நீறே பூசி, ..... நிமிர்ந்து கூனும்,
மருவும்
ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட,
அழகி போற்றிய மாறால் ஆகிய
மகிமையால், சமண் வேரோடே கெட
...... வென்ற கோவே!
புதிய
மாக்கனி வீழ் தேன் ஊறல்கள்,
பகல் இராத்திரி ஒயா ஆலைகள்,
புரள மேல் செல ஊர்ஊர் பாய, ......அணைந்து போதும்
புகழினால்
கடல் சூழ் பார் மீதினில்,
அளகை போல் பல வாழ்வால் வீறிய,
புலவர் போற்றிய வேலூர் மேவிய ......
தம்பிரானே.
பதவுரை
மதுரை நாட்டினிலே
வாழ்வாகிய அருகர் வாக்கினிலே சார்வாகிய வழுதி மேல் திரு நீறே பூசி நிமிர்ந்து
கூனும்
--- மதுரையம்பதியைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டில் வாழ்ந்திருந்த சமணர்களின்
சொற்களில் ஈடுபட்டிருந்த பாண்டிய மன்னன் மீது திருநீற்றைப் பூசி, அவனுடைய வெப்பு நோய் ஒழிந்ததோடு,
அவனுடைய உடல் கூனையும், உள்ளக் கூனையும் நிமிரச் செய்து,
மருவும் ஆற்று எதிர்
வீறு ஏடு ஏறிட
--- வைகை ஆற்று வெள்ளத்தில் இட்ட ஏடானது நீரை எதிர்த்து மேலேறிச் செல்லும்படியாக,
அழகி போற்றிய மாறால் ஆகிய மகிமையால்
--- அழகு நிறைந்த பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார் வேண்டுகோளுக்கு இணங்க, மதுரையம்பதிக்கு எழுந்தருளித்
திருவிளையாடல்கள் புரிந்த மகிமையால்,
சமண் வேரோடே கெட வென்ற கோவே --- அந்நாட்டில்
வாழ்ந்திருந்த சமணர்கள் தனைவரும் அழியும்படி வெற்றி கொண்ட தலைவரே!
புதிய மாக் கனி வீழ்
தேன் ஊறல்கள்
--- அப்போது பழுத்த மாம்பழங்களில் இருந்து ஊறி விழுகின்ற தேன் துளிகள்,
பகல் இராத்திரி ஓயா ஆலைகள் புரள மேல் செல
ஊர் ஊர் பாய அணைந்து போதும் புகழினால் --- பகலிலும், இரவிலும் ஓயாது தொழில்படும் கரும்பாலைகளின்
மேலே புரண்டு மேற்சென்று அருகில் உள்ள ஊர்களிலும் பாயும்படி சேர்ந்து போகின்ற வளத்தால்,
கடல் சூழ் பார்
மீதினில் அளகை போல் பல வாழ்வால் --- கடலால் சூழப்பட்டுள்ள இந்தப்
பூவுலகில் அளகாபுரி போல் பல வகையிலும் சிறந்துள்ளதால்,
வீறிய புலவர் போற்றிய வேலூர் மேவிய
தம்பிரானே ---பெருமைக்குரிய புலவர் பெருமக்களால் போற்றப்பட்ட வேலூரில் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!
அதிகராய்ப் பொருள்
ஈவார் நேர் படில் ரசனை காட்டிகள் --- பொருளை நிரம்பக் கொடுப்பவர் தம்மிடத்தில்
நேர்பட்டால் அவர்களிடத்தே இன்பம் மிகக் காட்டுவார்கள்.
ஈயார் கூடினும் அகல ஓட்டிகள் --- பொருள் கொடாதவர் வந்தால் அவர்களைத் தம்மிடத்தில் சாராது ஓட்டுபவர்கள்.
மாயா ரூபிகள் --- மயக்கும் தொழிலையே
கொண்டவர்கள்.
நண்பு போலே அசடர்
ஆக்கிகள்
--- தம்மிடத்து வந்தவர்களிடத்து நட்பு பாராட்டுவது போலப் பழகி, அவர்களை மூடர்களாக
ஆக்குபவர்கள்.
மார் மேலே படு முலைகள் காட்டிகள் --- மார்பு
மேலே உள்ள முலைகளைக் காட்டுபவர்கள்.
கூசாதே விழும் அழகு காட்டிகள் --- வந்தவர்
மீது கூச்சம் இல்லமால் விழுந்து, தமது அழகைக் காட்டுபவர்கள்.
ஆரோடு ஆகிலும் அன்பு போலே சதிர் அதாய்த் திரி ஓயா வேசிகள் --- யாராக இருந்தாலும் அவர்கள் மீது அன்பு
உள்ளவர்கள் போல சமர்த்துக் காட்டி, தமக்குரிய பரத்தைத் தொழிலில் எப்போதும்
ஈடுபட்டு இருப்பவர்கள்.
கருணை நோக்கம் இலா மா பாவிகள் --- உள்ளத்தில்
கருணை என்பது சிறிதேனும் இல்லாத பெரிய பாவிகள்.
தரும் உபேட்சை செய் தோஷா தோஷிகள் ---
வேண்டும் என்றே வந்தவரைப் புறக்கணிப்பதைச் செய்கின்ற குற்றத்தை உடையவர்கள்.
நம்ப ஒணாத சரச
வார்த்தையினாலே வாது செய் --- நம்புதற்கு முடியாத இனிமையான
வார்த்தைகளைப் பேசி வாது செய்து,
விரகம் ஆக்கி விடா மூதேவிகள் --- காமத்
துன்பத்தை மூட்டி, தம்மிடம்
வந்தவர்களைத் தம்மை விட்டுப் போக ஒட்டாது செய்யும் மூதேவிகள்.
தகைமை நீத்து --- இவர்களுடன் கூடும்
தன்மையை ஒழித்து,
உன தாளே சேர்வதும் எந்த நாளோ --- தேவரீருடைய
திருவடிகளைச் சேர்வது எந்த நாளோ அறியேன்?
பொழிப்புரை
மதுரையம்பதியைத் தலைநகராகக் கொண்ட
பாண்டிய நாட்டில் வாழ்ந்திருந்த சமணர்களின் சொற்களில் ஈடுபட்டிருந்த பாண்டிய
மன்னன் மீது திருநீற்றைப் பூசி,
அவனுடைய
வெப்பு நோய் ஒழிந்ததோடு, அவனுடைய உடல்கூனையும், உள்ளக் கூனையும் நிமிரச் செய்து,
வைகை ஆற்று வெள்ளத்தில் இட்ட ஏடானது நீரை எதிர்த்து மேலேறிச் செல்லும்படியாக, அழகு
நிறைந்த பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார் வேண்டுகோளுக்கு இணங்க, மதுரையம்பதிக்கு எழுந்தருளித்
திருவிளையாடல்கள் புரிந்த மகிமையால், அந்நாட்டில் வாழ்ந்திருந்த சமணர்கள் தனைவரும்
அழியும்படி வெற்றி கொண்ட தலைவரே!
அப்போது பழுத்த மாம்பழங்களில் இருந்து
ஊறி விழுகின்ற தேன் துளிகள், பகலிலும், இரவிலும்
ஓயாது தொழில்படும் கரும்பாலைகளின் மேலே புரண்டு மேற்சென்று அருகில் உள்ள
ஊர்களிலும் பாயும்படி சேர்ந்து போகின்ற வளத்தால், கடலால்
சூழப்பட்டுள்ள இந்தப் பூவுலகில் அளகாபுரி போல் பல வகையிலும் சிறந்துள்ளதால், பெருமைக்குரிய புலவர் பெருமக்களால் போற்றப்பட்ட வேலூரில் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
தனிப்பெரும் தலைவரே!
பொருளை நிரம்பக் கொடுப்பவர் தம்மிடத்தில்
நேர்பட்டால் அவர்களிடத்தே இன்பம் மிகக் காட்டுவார்கள். பொருள் கொடாதவர் வந்தால்
அவர்களைத் தம்மிடத்தில் சார ஒட்டாமல் ஓட்டுபவர்கள். மயக்கும் தொழிலையே கொண்டவர்கள். தம்மிடத்து
வந்தவர்களிடத்து நட்பு பாராட்டுவது போலப் பழகி, அவர்களை மூடர்களாக ஆக்குபவர்கள். மார்பு
மேலே உள்ள முலைகளைக் காட்டுபவர்கள். வந்தவர் மீது கூச்சம் இல்லமால் விழுந்து, தமது
அழகைக் காட்டுபவர்கள். யாராக இருந்தாலும் அவர்கள் மீது அன்பு உள்ளவர்கள் போல
சமர்த்துக் காட்டி, தமக்குரிய பரத்தைத் தொழிலில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவர்கள்.
உள்ளத்தில் கருணை என்பது சிறிதேனும் இல்லாத பெரிய பாவிகள். வேண்டும் என்றே
வந்தவரைப் புறக்கணிப்பதைச் செய்கின்ற குற்றத்தை உடையவர்கள். நம்புதற்கு
முடியாத இனிமையான வார்த்தைகளைப் பேசி வாது செய்து, காமத் துன்பத்தை
மூட்டி, தம்மிடம் வந்தவர்களைத் தம்மை
விட்டுப் போக
ஒட்டாது செய்யும் மூதேவிகள். இவர்களுடன் கூடும் தன்மையை ஒழித்து, தேவரீருடைய திருவடிகளைச் சேர்வது எந்த
நாளோ அறியேன்?
விரிவுரை
இத்
திருப்புகழில் அடிகளார் விலைமாதர்களின் தன்மைகளையும், அவர்கள் புரியும் தொழிலையும்
எடுத்துக் காட்டி, அவர்கள் தொடர்பால்
வரும் உடம்பு சார்ந்த இழிவுகளையும், உணர்வு சார்ந்த கேடுகளையும், பலவகையிலும் தமது திருப்புகழ்ப் பாடல்களில்
அடிகளார் காட்டி உள்ளார்.
தம்மை
மறந்த நிலையில் விலைமாதர்கள் பால் கூடி, அவர் தரும் சுகத்தையே பெரிதாக எண்ணி, உள்ள
பொருளை எல்லாம் இழந்து, பின்னர் பெரும் கேட்டினை அடைந்து தவித்து, பிறவிகள் தோறும்
உழல்வதை விடுத்து, இறையின்பத்தையே பெரிதாக மதித்து, உடல், பொருள், ஆவி என்னும்
மூன்றையும் இறை பணியில் செலுத்தி, கேடு இல்லாத வீட்டின்பத்தை அடைந்து உய்ய
வேண்டும் என்பது கருத்தாகின்றது.
திருமாலின்
உந்திச் சுழியில் அவதரித்த பிரமதேவனால் படைக்கப்பட்டு வருகின்ற எழுவகைப்
பிறவிகளிலும் மேலான மனிதப் பிறவியை எடுத்து, உமையொரு பாகனின் மலர்ப் பாதங்களைப்
பணிந்து, அவனுடைய திருவடிகளை அடைய முயலாமல், வீணாகப் பெண்கள் மேல் இச்சை கொண்டு,
அவர்கள் தரும் இன்பத்தைப் போற்றுகின்ற மாந்தர்கள் யாவருக்கும் ஓர் உண்மையை அடியேன்
எடுத்துச் சொல்லுவேன். புறக்கண்களை மட்டும் உடைய மனிதர்களே! நீங்கள் தெளிவு பெறக்
கேளுங்கள்.
முள்ளின்
மீதும், கல்லின் மீதும் முயன்று நடக்கின்ற உள்ளங்கால்களைச் செம்பஞ்சு என்று
சொல்லியும், வெண்மையான எலும்புகளால் ஆக்கப்பெற்ற கணைக்காலைத் துள்ளுகின்ற வரால்
மீன் என்று சொல்லிப் புகழ்ந்தும், மாமிசமும் எலும்பும் பொருந்திய புன்மை வாய்ந்த
தொடையினை வாழைத்தண்டு என்ற சொல்லியும், நெடிய உடம்பைத் தாங்கி நிற்கின்ற இடையினை
உடுக்கை போன்றது என்றும், பிடியளவு உள்ளது என்றும் சொல்லிப் புகழ்ந்தும், மலமும்,
சிறுநீரும், நிணமும், திரைச்சலும் தங்கி இருந்து அசைகின்ற வயிற்றைப் பார்த்து,
ஆலமரத்தின் இலை என்று கூறியும், இரண்டு பெரிய கொப்புளம் போல மார்பகத்தில் தோன்றி,
திரண்டு, பூரித்து, சில காலத்திற்குப் பின்னர் தொங்கி, வற்றிப் போகின்ற முலைகளைத்
தாமரை மொட்டு என்று மயங்கிக் கூறியும் குழறுகின்ற காமாந்தகாரத்தில் முழுகிக்
கிடக்கும் அறிவுக் குருடர்களுக்கு ஒன்று சொல்லுவேன். நீட்டுவதற்கும்,
முடக்குவதற்கும், பொருள்களை ஏற்றுக்கொள்வதற்கும், உணவு முதலியவற்றை உண்பதற்கும்,
பிசைவதற்கும் உரிய தொழில்களைப் புரிகின்ற அழகிய கைகளைப் பார்த்துக் காந்தள் மலர்
என்று கூறியும், வேர்வையும், அழுக்கும் பொருந்தியுள்ள கழுத்தை, பாக்கு மரம் என்றும்,
தீ நாற்றமும், ஊத்தையும் தங்கியுள்ள வாயைப் பார்த்து, பவளம் என்றும், புனிதமாகிய
முருக்கமலர் என்றும், சோற்றையும் கறிகளையும் மென்று வயிற்றுக்குள் இறக்குகின்ற
பற்களைப் பார்த்து முல்லை மொட்டு என்று மயங்கியும், நீரும், சளியும் நின்று
ஒழுகுகின்ற கூர்மை பொருந்திய மூக்கைக் குழிழம்பூ என்று கூறியும், தண்ணீரும்
பீளையும் சிந்துகின்ற கண்களைப் பார்த்து, கழுநீர் மலர் என்றும், உள்ளே இருந்து
குறும்பி ஒழுகுகின்ற காதைப் பார்த்து வள்ளைத்தண்டின் வளம் பொருந்தியது என்று
கூறியும், கையினால் எண்ணெயைக் குழப்பித் தடவாது இருந்தால், வெப்பமாகிய நோய்களை
உண்டு பண்ணுவதோடு, பேனும் விளைவதற்கு உரிய தலை ஓட்டின் மேல் முளைத்துத் தோன்றி
உள்ள சிக்கொடு கூடிய மயிரைப் பார்த்து, திரண்ட மேகம் என்று கூறியும், இவ்வாறு பல
உவமானச் சொற்களால் புகழ்ந்து கூறி, மனிதர்களாகிய நீங்கள் சேருகின்ற அல்குலானது
நரகத்திற்கு வாயிலாக உள்ளதே. அதன் தன்மை
என்னவென்றால், தோலும் சதையும் நெருங்கிச் சீயானது பெருகுகின்ற காமக் குகை. சூதகம்
என்னும் உதிரம் பெருகி ஒழுகுகின்ற குகை. எண்சாண் உடம்பானது இறங்கி வருவதற்கு உரிய
பெரிய வழி. இந்திரியத்தை இறக்குகின்ற மறைவிடம். காமாந்தகாரம் என்னும் நாயானது
எப்போதும் ஆசைப்பட்டுக் கிடக்கின்ற திட்டி வாசல். சந்திரசேகரன் ஆகிய இறைவனது
திருவருளைச் சிறிதும் பெறாதவர்கள் தங்கித் திரிகின்ற பெரிய வழி. இது புண்ணுக்குச்
சமானம் என்று உணர்ந்து, புடவையால் மூடப்பட்டுள்ளது. காம மயக்கம் கொண்டுள்ள அறியாத
மாந்தர்கள் நுழைகின்ற வழி. செருக்குக் கொண்ட காமுகர்கள் விழுகின்ற படுகுழி. ஆணும்
பெண்ணும் பிறப்பதற்கு ஏதுவாகின்ற பெரிய வழி அது ஆகும். இத்தகைய இழிதகைமைகளைக்
கொண்டுள்ள அல்குலை நீங்கள் இனியது என்ற நினைக்கவேண்டாம். இவர்களை அனுபவித்தலில்
இருந்து நீங்குங்கள்.
பச்சிலையைக்
கொண்டு அருச்சித்தாலும் அடியார்கள் மீது அன்பு வைத்து, சிவபதம் ஆகிய வீடுபேற்றை
அருள்கின்றவனை, முத்திக்குத் தலைவனை, அழியாத பொருளாக உள்ளவனை, விண்ணலகையும்
மண்ணுலகையும் வேறுள்ள எவற்றையும் படைத்த பெரியோனை, திருக்கச்சியில் எழுந்தருளி
இருக்கும் தனிமுதலாகிய பரம்பொருளைப் பணியுங்கள். அவன் உங்களுக்கு
இறவாத
பேரின்பத்தை அருளுவான்.
இது
பட்டினத்து அடிகள் பாடி அருளிய கச்சித் திரு அகவல் என்னும் பாடலின் கருத்து.
பாடலைப் பார்ப்போம்.
திருமால்
பயந்த திசைமுகன் அமைத்து
வரும்
ஏழ் பிறவியும் மானுடத்து உதித்து,
மலைமகள்
கோமான் மலர் அடி இறைஞ்சிக்
குலவிய
சிவபதம் குறுகாது, அவமே
மாதரை
மகிழ்ந்து, காதல் கொண்டாடும்
மானிடர்க்கு
எல்லாம் யான் எடுத்து உரைப்பேன்
விழிவெளி
மாக்கள் தெளிவுறக் கேண்மின்;
முள்ளும்
கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங்
காலைப் பஞ்சு என உரைத்தும்,
வெள்
எலும்பாலே மேவிய கணைக்கால்
துள்ளும்
வரால் எனச் சொல்லித் துதித்தும்,
தசையும்
எலும்பும் தக்கபுன் குறங்கை
இசையுங்
கதலித் தண்டு என இயம்பியும்
நெடும்
உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி
என்று சொல்லித் துதித்தும்,
மலமும்
சலமும் வழும்பும் திரையும்
அலையும்
வயிற்றை ஆல் இலை என்றும்,
சிலந்தி
போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு
விம்மிச் சீப் பாய்ந்து ஏறி
உகிரால்
கீறல் உலர்ந்து உள் உருகி
நகுவார்க்கு
இடமாய் நான்று வற்றும்
முலையைப்
பார்த்து முளரிமொட்டு என்றும்,
குலையும்
காமக் குருடர்க்கு உரைப்பேன்;
நீட்டவும்
முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும்
பிசையவும் உதவி இங்கு இயற்றும்
அங்கையைப்
பார்த்துக் காந்தள் என்று உரைத்தும்,
வேர்வையும்
அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில்
இனிய கமுகு எனப் பகர்ந்தும்,
வெப்பும்
ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு
முருக்கின் தூய்மலர் என்றும்,
அன்னமும்
கறியும் அசைவிட்டு இறக்கும்
முன்னிய
பல்லை முத்து என மொழிந்தும்,
நீரும்
சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய
மூக்கைக் குமிழ் எனக் கூறியும்,
தண்ணீர்
பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப்
பார்த்துக் கழுநீர் என்றும்,
உள்ளுங்
குறும்பி ஒழுகுக் காதை
வள்ளைத்
தண்டின் வளம் என வாழ்த்தியும்க்,
கையும்
எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய
அதரும் பேனும் விளையத்
தக்க
தலை யோட்டில் முளைத்து எழுந்த
சிக்கின்
மயிரைத் திரள் முகில் என்றும்,
சொற்பல
பேசித் துதித்து, நீங்கள்
நச்சிச்
செல்லும் நரக வாயில்,
தோலும்
இறைச்சியும் துதைந்து சீப்பாயும்
காமப்
பாழி; கருவிளை கழனி;
தூமைக்
கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண்
உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால்
காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக்
காமுக நாய்தான் என்றும்
இச்சித்து
இருக்கும் இடைகழி வாயில்;
திங்கள்
சடையோன் திருவருள் இல்லார்
தங்கித்
திரியும் சவலைப் பெருவழி;
புண்
இது என்று புடவையை மூடி
உள்
நீர் பாயும் ஓசைச் செழும்புண்;
மால்கொண்டு
அறியா மாந்தர் புகும்வழி;
நோய்
கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய
காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய
காமுகர் சேரும் சிறுகுழி;
பெண்ணும்
ஆணும் பிறக்கும் பெருவழி;
மலம்
சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்
சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை
நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை
இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச்
சிவபத வீடு அருள்பவனை,
முத்தி
நாதனை, மூவா முதல்வனை,
அண்டர்
அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட
அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக
நாதனை இணையடி இறைஞ்சுமின்,
போக
மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!
மதுரை
நாட்டினிலே வாழ்வாகிய அருகர் வாக்கினிலே சார்வாகிய வழுதி மேல் திரு நீறே பூசி
நிமிர்ந்து கூனும், மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய
மாறால் ஆகிய மகிமையால், சமண் வேரோடே கெட வென்ற கோவே ---
பாண்டி
மாதேவியாகிய மங்கையர்க்கரசியார் குறித்து, தெய்வச் சேக்கிழார் பெருமான் பரவிப்
போற்றுவதை அறிவோம்...
மங்கையர்க்குத்
தனிஅரசி, எங்கள் தெய்வம்,
வளவர்திருக் குலக்கொழுந்து, வளைக்கை
மானி,
செங்கமலத்
திருமடந்தை, கன்னி நாடாள்,
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை,
எங்கள்பிரான்
சண்பையர்கோன் அருளினாலே
இருந் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி,
தங்கள்
பொங்கு
ஒளிவெண் திருநீறு பரப்பினாரைப்
போற்றுவார் கழல் எம்மால் போற்றல் ஆமே.
பூசுரர்
சூளாமணியாம் புகலி வேந்தர்
போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசு
உடைய பாடல்பெறும் தவத்தினாரைச்
செப்புவது யாம் என் அறிந்து, தென்னர்
கோமான்
மாசு
இல் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
வழித்துணையாய் நெடுங்காலம் மன்னி,
பின்னை
ஆசு
இல் நெறியவரோடும் கூட ஈசர்
அடிநிழல் கீழ் அமர்ந்து இருக்க அருளும்
பெற்றார்.
தொன்று
தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டில், கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம்
பரவி, பாண்டியன் நெடுமாறனும் அம் மாய
வலைப்பட்டுற, சைவசமய சீலங்கள்
மாறின. உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழமன்னனது திருமகளாய், பாண்டி மாதேவியாய் விளங்கும்
மங்கையர்க்கரசியாரும், அவருக்கு சீதனமாக சோழமன்னனால்
தரப்பட்டு வந்துமன்ன, பாண்டிய அமைச்சராய்
இருந்து, சைவ நிலைத் துணையாய், அரசியார்க்கு உடன் உதவி செய்து வருகின்ற
குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய்
அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ
ஒளி ஓங்கும் நாள் என்றோ?” என்று ஏங்கி நின்றார்கள்.
அப்போது
திருஞானசம்பந்தப் பெருமானாரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும்
அறிந்து, முறைப்படி அவரை அழைத்து
வருமாறு தகுந்த ஏவலர் சிலரை அனுப்பினார்கள். அவர்கள் திருமறைக்காட்டிற்கு வந்து,
பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில்
சைவநிலை கரந்து, சமண நிலை
பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த
அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து
நின்றார்கள்.
திருஞானசம்பந்தர்
மறைக்காட்டு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் நிலைமையை
விளக்கி, அவரிடம் விடை கேட்டனர். திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை அனுபவித்தவர்.
ஆதலால், சிறு பிள்ளையாகிய திருஞானசம்பந்தர் அவர்களிடத்தில் போதல் தகாது என்னும்
கருத்தில், தான்போய் வருவதாகச்
சொன்னார். பாண்டி நாடு தன்னைத் தான் அழைத்தது. ஆகையால், தானே சென்று, அமணை வென்று
வருவதாகப் பிள்ளையார் சொன்னார். அதற்கு, அஞ்சிய அப்பர் பெருமான், எப்படியாவது பிள்ளையார்
மதுரைக்கு எழுந்தருளுவதைத் தவிர்க்க வேண்டும் என்னும் கருத்தில், ”பிள்ளாய்!
வஞ்சனையில் மிக்க சமணர்கள் உள்ள இடத்திற்கு நீர் போவது தகுதி அல்ல. கோளும் நாளும்
வலியில்லை” என்றனர்.
“வேயுறு தோளிபங்கன் விடம்
உண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே,
ஆசு அறும் நல்லநல்ல, அவைநல்ல, நல்ல
அடியாரவர்க்கு மிகவே”
என்று
தொடங்கும் திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று
கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு
எழுந்தருளி வருவாராயினார்.
எண்ணாயிரம்
சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம்
ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த
மங்கையர்க்கரசியார் அவரைத் தக்க முறையில் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித்
தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.
“சீகாழிச் செம்மல் பல
விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் எதிர் சென்று
ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி, கைகூப்பி, மண்மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க்
கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டு இழிந்து, அவரைத் தமது திருக்கைகளால் எடுத்து
“செம்பியர் பெருமான் குலமகளார்க்கும், திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம்
பெருமான் தன் திருவருள் பெருகுதம் நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி,
“சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்,
இன்று
எழுந்தருளப் பெற்ற பேறு இதனால்
எற்றைக்கும் திருவருள் உடையேம்;
நன்றியில்
நெறியில் அழுந்திய நாடும்
நல்தமிழ் வேந்தனும் உய்ந்து,
வென்றி
கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்
மேன்மையும் பெற்றனம் என்பார்"
மதுரையும்
ஆலவாயரன் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருசானசம்பந்தர்
பதிகம் பாடி, கோயிலுள் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார்
ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க,
பிள்ளையார்
அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயரனைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில்
தங்கியருளினார்.
சமணர்கள்
அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு
முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அநுமதி பெற்று திருமடத்தில்
தீப்பிடிக்க அபிசார மந்திரம் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு
தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றதாய் ஆனது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவில் வலியப் போய் திருமடத்தில்
தீ வைத்தனர். அதனை இடியார்கள் அவித்து, ஆளுடைய
பிள்ளையாரிடம் தெரிவிக்க, திருஞானசம்பந்தப்
பெருமான், இது
அரசன் ஆணையால் வந்த கேடு என்று உணர்ந்து,
“செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல் என்று அருள் செய் எனை,
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று
பாண்டியற்கு ஆகவே”
என்று
பாடியருளினார்.
“பையவே”
என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது, சுர நோயாகி பாண்டியனைப்
பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரம் சொல்லி, மயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத்
தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும்
உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான்.
மங்கையர்க்கரசியார்
தமது மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர்
திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான்
சேருவேன்; அவரை அழைமின்”
என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,
“ஞானத்தின் திருவுருவை,
நான்மறையின் தனித்துணையை,
வானத்தின்
மிசை அன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை,
தேனக்க
மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின்
எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”
கண்டு
வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும்
உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பம் செய்தனர். திருஞானசம்பந்தர் அவர்களுக்கு அபயம்
தந்து, அடியார் குழத்துடன்
புறப்பட்டு திருக்கோயில் சென்று,
தென்னவனாய்
உலகு ஆண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம்
நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார்.
ஆலமே
அமுதமாக உண்டு, வானவர்க்கு அளித்துக்
காலனை
மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை, அடியேற்கு இன்று
ஞாலம்நின்
புகழே மிக வேண்டும், நான் மறைகள் ஏத்தும்
சீலமே!
ஆல வாயில் சிவபெருமானே! என்றார். ---
பெரியபுராணம்.
பாண்டியன்
சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பொன்னால்
ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க, சமணர் பலரும் அது கண்டு பொறாராய்
சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச,
கவுணியர்
வேந்து,
“மானின் நேர்
விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந்தேவி! கேள்,
பானல்வாய்
ஒருபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்,
ஆனைமாமலை
ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு
எளியேன் அலேன், திரு ஆலவாய் அரன் நிற்கவே.”
என்று
பாடித் தேற்றினார்.
அரசன்
சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின்
உண்மையைக் காட்டலாம் என, அமணர் இடப்புற நோயை நீக்குவோம் என்று
மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவவும் நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி
புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற
திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில்
தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து
வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை
பணிந்து ஆனந்தமுற்றான்.
பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற
சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெரு நெருப்பு மூட்டினர். திருஞானசம்பந்தர் தாம்
பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை
எடுத்து, “தளரிள வளரொளி” என்ற திருப்பதிகம்
பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை இட, அவை சாம்பலாயின.
பின்
புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழு ஏறுவது என்று துணிந்தனர். வையை ஆற்றில்
சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன்
கீழ்நோக்கிச் சென்றது.
திருஞானசம்பந்தப்
பெருமான் வாழ்க அந்தணர் என்று தொடங்கும் திருப்பாசுரத்தைப் பாடி அருளினார். திருப்பாசுரம்
பொருந்திய ஏட்டை வைகை ஆற்று வெள்ளத்தில் விட்டார். அந்த ஏடு ஆற்று வெள்ளத்தை எதிர்த்து
வேகமாக மேலேறிச் சென்றது. திருஞானசம்பந்தப் பெருமான் தனது பாசுரத்தில்,“வேந்தனும் ஓங்குக” என்று பாடியதனால், பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு
நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி
அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையும் தோற்ற சமணர் கழுவேறி
மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.
பாண்டியன்
கூன் நிமிர்ந்தது குறித்து, தெய்வச் சேக்கிழார்
பெருமான் பின் வருமாறு பாடி அருளுகின்றார்.
"எம்பிரான்
சிவனே எல்லாப்
பொருளும்" என்றுஎழுதும் ஏட்டில்,
தம்பிரான்
அருளால் வேந்தன்
தன்னை முன் ஓங்கப் பாட,
அம்புய
மலராள் மார்பன்
அநபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன்
செங்கோல் என்னத்
தென்னன்கூன் நிமிர்ந்தது அன்றே.
கூன்
பாண்டியன் பின்னர் நின்றசீர் நெடுமாற பாண்டியன் ஆனான். அவனது உள்ளக் கூனும், உடல் கூனும் நிமிர்ந்தது.
புதிய
மாக் கனி வீழ் தேன் ஊறல்கள் ---
அளகாபுரி
என்று அடிகளாரால் போற்றப் பெற்ற வேலூர் நகரைச் சுற்றிலும் உள்ள சோலைகளில் மாமரங்கள்
பழுத்துக் கிடக்கின்றன. அப்போது பழுத்த மாம்பழங்களில் இருந்து ஊறி விழுகின்றன தேன்
துளிகள்,
பகல்
இராத்திரி ஓயா ஆலைகள் புரள மேல் செல ஊர் ஊர் பாய அணைந்து போதும் புகழினால் ---
அந்தத்
தேன்துளிகள் இரவும் பகலும் ஓயாது தொழிற்படும் கரும்பாலைகளின் மேல் விழுந்து புரண்டு
சென்று, அருகில் உள்ள ஊர்களிலும்
பாய்ந்து வளம் கொழிக்கச் செய்கின்றது.
கடல்
சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் ---
இத்தகு
வளம் நிறைந்து விளங்குவதால்,கடலால் சூழப்பட்டுள்ள
இந்தப் பூவுலகில் அளகாபுரி போல் பல வகையிலும் சிறந்து விளங்குகின்றது வேலூர் என்னும்
திருத்தலம்.
அளகாபுரி
என்பது குபேரனுக்கு உரியது. அது விண்ணுலகில் உள்ளது. அதற்கு நிகராக மண்ணுலகில் விளங்குவது
வேலூர். இது
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளது.
வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே ---
இவ்வாறு
பெருமைக்குரிய புலவர் பெருமக்களால் போற்றப்பட்ட வேலூரில் என்னும் திருத்தலத்தில் முருகப்
பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளார்.
கருத்துரை
முருகா!
விலைமாதர் போகத்தால் வீணழிவதை விடுத்து, உமது
திருவடியில் பொருந்தி, சிவபோகத்தை அனுபவிக்க அருள் புரிதல் வேண்டும்.
No comments:
Post a Comment