வெள்ளிகரம் - 0668. இல்லையென நாடி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இல்லையென நாணி (வெள்ளிகரம்)

முருகா!
அடியேனைக் கைவிட்டு விடாமல் ஆட்கொண்டு,
திருவடி இன்பத்தை அருள்வாய்.


தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தான ...... தனதான


இல்லையென நாணி யுள்ளதின் மறாம
     லெள்ளினள வேனும் ......       பகிராரை

எவ்வமென நாடி யுய்வகையி லேனை
     யெவ்வகையு நாமங் ......        கவியாகச்

சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
     தொல்லைமுத லேதென் ......    றுணரேனைத்

தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
     துய்யகழ லாளுந் ......      திறமேதோ

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     மையவரை பாகம் ......      படமோது

மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
     வள்ளிமலை வாழுங் ......    கொடிகோவே

வெல்லுமயி லேறு வல்லகும ரேச
     வெள்ளிலுட னீபம் ......          புனைவோனே

வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
     வெள்ளிநகர் மேவும் ......        பெருமாளே.


பதம் பிரித்தல்

இல்லை என நாணி, உள்ளதின் மறாமல்,
     எள்ளின் அளவேனும் ......       பகிராரை,

எவ்வம் என நாடி, உய்வகை இலேனை,
     எவ்வகையும் நாமம் ......        கவியாகச்

சொல்ல அறியேனை, எல்லை தெரியாத
     தொல்லை முதல் ஏது என்று ......உணரேனை,

தொய்யும் உடல் பேணு பொய்யனை, விடாது
     துய்ய கழல் ஆளும் ......        திறம்ஏதோ?

வல் அசுரர் மாள, நல்ல சுரர் வாழ,
     மைய வரை பாகம் ......         படமோது,

மை உலவு சோலை, செய்யகுளிர் சாரல்,
     வள்ளிமலை வாழும் ......        கொடிகோவே!

வெல்லும் மயில் ஏறும் வல்ல குமரஈச!
     வெள்ளில் உடன் நீபம் ......      புனைவோனே!

வெள்ளிமணி மாடம் மல்கு திரு வீதி
     வெள்ளிநகர் மேவும் ......        பெருமாளே.

பதவுரை


         வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ --- வலிமை பொருந்திய அசுரர்கள் மாளவும், நல்ல தேவர்கள் வாழவும்,

         மைய வரை பாகம் பட மோது --- குற்றமுள்ள கிரெளஞ்சகிரி கூறுபட்டழிய மோதியவரே!

         மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் --- இருண்ட சோலைகளும், செவ்விய குளிர்ந்த சாரலை உடைய

         வள்ளிமலை வாழும் கொடி கோவே --- வள்ளிமலையில் வாழும் குறக்குலக் கொடியாகிய வள்ளிபிராட்டியின் நாயகரே!

         வெல்லுமயில் ஏறு வல்ல குமர ஈச --- வெல்லும் திறல் படைத்த மயில் மீது ஏறுகின்ற வல்லமை பொருந்திய குமாரக் கடவுளே!

         வெள்ளில் உடன் நீபம் புனைவோனே --- விளாத் தளிருடன் கடப்பமலர் மாலையை அணிபவரே!

         வெள்ளி மணிமாட மல்கு திருவீதி --- வெண்ணிறம் பொருந்திய அழகிய மாளிகைகள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள வீதிகளை உடைய

         வெள்ளி நகர் மேவும் பெருமாளே --- வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         இல்லை என நாணி --- இல்லை என்று சொல்ல வெட்கப்பட்டு, 

         உள்ளதின் மறாமல் --- உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல்,

         எள்ளின் அளவேனும் பகிராரை --- ஓர் எள்ளின் அளவாவது பகிர்ந்து கொடுக்காதவர்களை,

         எவ்வம் என நாடி --- வெறுக்கத் தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து

         உய் வகை இலேனை --- பிழைக்கும் வழி இல்லாத அடியேனை,

         எவ்வகையும் நாமம் கவியாக சொல்ல அறியேனை --- எந்த வகையிலாவது தேவரீரது திருநாமங்களைப் பாடலாக அமைத்துச் சொல்லும் அறிவில்லாத அடியேனை,

         எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை --- முடிவு காண முடியாததும் பழைமையானதும் ஆகிய மூலப்பொருள் இன்னது என்று உணரும் அறிவில்லாத அடியேனை,

         தொய்யும் உடல் பேணு பொய்யனை ---  இளைத்துத் துவளும் உடம்பைப் போற்றும் பொய்யனாகிய அடியேனை,

         விடாது --- புறக்கணித்து விட்டுவிடாமல்

       துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ ---  திருவடிகளில் ஆண்டு அருளும் வழி ஏதேனும் உண்டோ?

பொழிப்புரை


     வலிமை பொருந்திய அசுரர்கள் மாளவும், நல்ல தேவர்கள் வாழவும், குற்றமுள்ள கிரெளஞ்சகிரி கூறுபட்டழிய மோதியவரே!

     இருண்ட சோலைகளும், செவ்விய குளிர்ந்த சாரலை உடைய வள்ளிமலையில் வாழும் குறக்குலக் கொடியாகிய வள்ளிபிராட்டியின் நாயகரே!

         வெல்லும் திறல் படைத்த மயில் மீது ஏறுகின்ற வல்லமை பொருந்திய குமாரக் கடவுளே!

         விளாத் தளிருடன் கடப்பமலர் மாலையை அணிபவரே!

         வெண்ணிறம் பொருந்திய அழகிய மாளிகைகள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள வீதிகளை உடைய வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         இல்லை என்று சொல்ல வெட்கப்பட்டு,  உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல், ஓர் எள்ளின் அளவாவது பகிர்ந்து கொடுக்காதவர்களை, வெறுக்கத் தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து பிழைக்கும் வழி இல்லாத அடியேனை,  எந்த வகையிலாவது தேவரீரது திருநாமங்களைப் பாடலாக அமைத்துச் சொல்லும் அறிவில்லாத அடியேனை, முடிவு காண முடியாததும் பழைமையானதும் ஆகிய மூலப்பொருள் இன்னது என்று உணரும் அறிவில்லாத அடியேனை,  இளைத்துத் துவளும் உடம்பைப் போற்றும் பொய்யனாகிய அடியேனைப் புறக்கணித்து விட்டுவிடாமல் திருவடிகளில் ஆண்டு அருளும் வழி ஏதேனும் உண்டோ?


விரிவுரை

இத் திருப்புகழில் அடிகளார் நான்கு வகையான குற்றங்களைக் கூறுகின்றார். 1. தம்மிடம் உள்ள பொருளின் அளவுக்கு ஏற், இல்லை என்று கூறி இரந்தவருக்கு இல்லை என்னாமல் கொடுத்து உதவாதவர்களின் தொடர்பை அறுத்து, வாழும் வழியைத் தேட அறியாமையாகிய குற்றம். 2. இறைவனை வழிபடாத குற்றம். 3. உண்மைப்பொருளாகிய இறைவனை இன்ன தன்மையன் என்று அறியும் அறிவு இல்லாமையாகிய குற்றம். 4. அழியும் தன்மை உடைய உடம்பையே பெரிது என்று எண்ணி மயங்குகின்ற குற்றம்.

இக் குற்றங்களை உடைய அடியேன் மீது பாராமுகமாக இல்லாமல் ஆண்டுகொள்ளும் திறம் இறைவனிடம் உள்ளது. அதனை வேண்டி, இப் பாடலைப் பாடினார் அடிகளார். திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்னும் அற்புதப் பகுதியை, இத் திருப்புகழ் நினைவுறுத்துகின்றது. இத் திருப்புகழ், அன்பர்கள் மனனம் செய்து, நித்திய பாராயணமாகக் கொள்ளும் சிறப்பு உடையது.

இல்லை என நாணி, உள்ளதின் மறாமல் ---

பொருள் தம்மிடம் உள்ளது என்பதை மனதார உணர்ந்து இருந்தும்,  கொஞ்சமும் நாணம் இல்லாமல், இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லுவது பாவம். இல்லை என்று சொன்னால், உள்ளதும் இல்லாமலே போகும். "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்றார் நாயனார். "நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்" என்பது உலகநீதி.

அந்தக் காலத்துப் புலவர்கள் பலர்க்கு, நல்ல சொல்வளமும் கற்பனைத் திறனும் அமைந்திருந்தன. ஆயினும் அவர்கள் புதிய நூல்களைப் படைத்து மகிழ்ச்சியோடு வாழ முடியவில்லை. வாழ்க்கையில் வறுமை அவர்களை வாட்டியது. தம் பாடல்களை மக்களிடம் பாடி, அதனால் வயிறு வளர்க்க முடியாத நிலை இருந்தது. செல்வர்களைப் புகழ்ந்து பாடினார்கள். செல்வந்தர்கள் பெரிதும் உதவ முன் வந்தது இல்லை. அவர்களின் பொருளுதவியைப் பெறவும் முடியவில்லை.அதனால் மனம் நொந்து வாடிய புலவர்களின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது பின்வரும் பாடல்;-

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,
காடு எறியும் மறவனை நாட் ஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,
போர்முகத்தை அறியானைப் புலி ஏறு என்றேன்,
மல்ஆரும் புயம் என்றேன் சூம்பல் தோளை,
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்,
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.

காலம் எல்லாம் பலரைப் புகழ்ந்து பாடினேன். இல்லாதவை எல்லாம் சொல்லிப் பாடி வந்தேன். எனக்குக் கிடைத்த மறுமொழியும் இல்லை என்றே ஆனது.

எந்த நலமும் இல்லாதாரைப் புகழ்ந்து பாடியதும் பாவம்.
பாடி வந்தவரின் வறுமை நிலையை அறிந்தும், தம்மிடம் உள்ள பொருளில் சிறிதளவாவது ஈயாமல் இருந்ததும் பாவம்.

மரணம் என்பது எப்படி எண்ணினாலும் இனிமை தரக் கூடியது அல்ல. அப்படிப்பட்ட மரணமும் இனிமை தரும் என்கின்றார் நாயனார். எப்போது?  பிறருக்குக் கொடுத்து உதவ முடியாத நிலை உண்டாகும் போது.

சாதலின் இன்னாதது இல்லை, இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை.

எள்ளின் அளவேனும் பகிராரை ---

ஆற்றின் அளவு அறிந்து ஈ, அது, பொருள்
போற்றி வழங்கும் நெறி.

என்றார் நாயனார். உரிய முறையில் தன்னுடைய பொருளின் அளவை அறிந்து உதவ வேண்டும். அதுதான் பொருளைப் பேணிப் பாதுகாத்து வழங்கும் வழியாகும்.

உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை,
வளவரை வல்லைக் கெடும்.

என்றும் காட்டினார். பொருள் உள்ள அளவை எண்ணிப் பார்த்துக் கொண்டு உதவுதல் வேண்டும்.  அவ்வாறு இல்லை ஆயின், பொருள் வளமானது விரைவில் அழியும்.

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து --- மெல்லக்
கொடையொடு கட்ட குணன் உடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.              ---  நாலடியார்.

செல்வம் நிறைய இருந்த போது வாரி வழங்கியதைப் போலவே, செல்வ வளம் இல்லாத போதும், இயன்ற வரை தந்து உதவுவார்கள்.  இந்த நல்ல குணம் உடையவஐ மகிழ்ச்சியுடன் வரவேற்கச் சொர்க்கத்தின் கதவுகள் கூட மூடப்படாமல் நிறந்தை இருக்கும்.

எவ்வளவு கொடுத்து உதவலாம். எள்ளின் அளவாவது கொடுத்து உதவுதல் வேண்டும் என்கின்றார் அடிகளார்.

"தர்மம் சர" என்று வேதத்தின் தொடக்கத்திலும், "அறம்செய விரும்பு" என்று ஆத்திசூடியின் தொடக்கத்திலும், தருமமானது வற்புறுத்தி உபதேசிக்கப்பட்டது. உயிர்க்கு உறுதுணையாக என்றும் நின்று உதவுவது அறம் ஒன்றே ஆகும்.  "பொன்றுங்கால் பொன்றாத் துணை" என்பார் திருவள்ளுவ நாயனார்.

வறியவர்க்கு வழங்குவது மிகமிகச் சிறந்த புண்ணியம்.  வறியவர் வயிற்றில் விழுந்த ஒரு அரிசி, மறுபிறப்பில் ஒரு பொற்காசாக வந்து உதவும்.

அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.                 ---  திருக்குறள்.

எப்போதும் தரும சிந்தையுடன் இருத்தல் வேண்டும். இயல்பு உள்ளவர்கள் நிரம்பவும் அறம் செய வேண்டும்.

கோச்செங்கட்சோழன், சுந்தரமாற பாண்டியன், சேரமான் பெருமாள் முதலிய மன்னர்கள் இன்று இல்லை.அவர்கள் இருந்த அரண்மனை, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் முதலியன ஒன்றேனும் இல்லை.ஆனால், அவர்கள் செய்த அறச் செயல்களாகிய திருக்கோயில்கள் இன்றும் நின்று நிலவுகின்றன. அழியாமல் நிற்பது அறம் ஒன்றே ஆகும்.

உலக முழுவதும் ஒடுங்கிய போது, அறம் ஒன்றே ஒடுங்காது விடை வடிவாக நின்று இறைவனைத் தாங்கியது. உலகங்களை எல்லாம் தாங்கும் இறைவனையும் தாங்கும் ஆற்றல் அறத்திற்கு உண்டு.

இறைவனுக்கு அறவன் என்ற திருநாமமும் உண்டு.  காரைக்கால் அம்மையார் இறைவனை, "அறவா" என்று விளிக்கின்றார்கள். "அறவாழி அந்தணன்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறக் கடலாகிய ஆண்டவனை அடைவதற்கு வழி அறமே ஆகும்.

இயல்பு இல்லாதவர்கள் ஒல்லும் வகையால் இம்மி அளவேனும் அறம் செய்தல் வேண்டும்.

"அவர் ஒருவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டார். அவர் பணத்தையும் ஒருவருக்குத் தர மாட்டார்" என்று சிலரைச் சுட்டி உலகம் உரைக்கும். அப்படிப்பட்டவர்கள் இருப்பதை விட மறைவது நல்லது. எனெனில், கல்லும் ஆலயம் ஆகின்றது.  கட்டம் வயலுக்கு உரமாகின்றது. புல்லும் கூட்டுவதற்கு ஆகின்றது. நாய் வேட்டைக்கு உதவுகின்றது. கழுதை பொதி சுமந்து உபகரிக்கின்றது. எட்டியும் மருந்துக்கு ஆகின்றது.  துரும்பும் பல்குத்த உதவுகின்றது. மனிதனாகப் பிறந்து ஒருவருக்கும் உதவாமல் இருப்பானாயின், அவன் இருப்பதனால் பயனில்லை. 

பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவது இல்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!

நாயாய் பிறந்திடில் நல்வேட்டை ஆடி நயம் புரியும்,
தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்
காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சி ஏகம்பனே!
                                                                                          ---  பட்டினத்தார்.
கட்டு மாங்கனி வாழைக் கனி பலவின்
     கனிகள் உபகாரம் ஆகும்;
சிட்டரும் அவ்வணம் தேடும் பொருளை எல்லாம்
     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,
மட்டு உலவும் சடையாரே! தண்டலையா
     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
     வாழ்ந்தாலும் என் உண்டாமே?    --- தண்டலையார் சதகம்.

ஆதலினால், மிகமிகக் குறைந்த அளவிலாவது ஒவ்வொருவரும் வறியார்க்கு உதவுதல் வேண்டும். உதவுவதற்கு ஆற்றல் இல்லையேல், உதவவேண்டும் என்ற நினைவாவது இருக்கவேண்டும். அந்த நினைவும் பனையளவு இல்லையேனும் தினையளவாவது இருத்தல் வேண்டும்.

தினை சிறிய தானியம். ஆதலினாலேயே, "பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி" என்று அடிகளார் கல்லும் கரையுமாறு ஒரு திருப்புகழில் உபதேசிக்கின்றார்.

வையில் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்
நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே.                                                                                               --- கந்தர்அலங்காரம்.  

சிறுமிக்குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
 சிறுமிக்குமர சரணமென்னீ ருயிர்வீர்      --- கந்தர் அந்தாதி

இதன் பொருள்:-  சிறு-சிறிதான, உமிக்கும்-குற்றுமியை ஆயினும், பகிர மர நிகர்வீர்-பிறர்க்கு இட்டு உண்ண மனம் கூடாமல் மரம் போன்றிருப்பவரே! சிதை அழிந்து போவதும், உயிர்-பிராணனுக்கு, துச்சில்-ஒதுக்கிடமுமாகிய இவ்வுடலின் கண், துமி-ஒரு தும்மல் உண்டாகும் காலையிலும், குமர-குமரனே, சரணம்- உனக்கு அடைக்கலம், என்னீர்-என்று சொல்வீர், உய்வீர்-பிழைப்பீர்கள்.

எமது பொருள் எனும் மருளை இன்றி, குன்றிப்
     பிளவு அளவு தினைஅளவு பங்கிட்டு உண்கைக்க்
     இளையும், முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு ...... என நாடாது

இடுக கடிது எனும் உணர்வு பொன்றிக் கொண்டிட்டு,
     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு
     என அகலும் நெறிகருதி, நெஞ்சத்து அஞ்சிப் ...... பகிராதோ?
                                                                        --- (அமுதுததி) திருப்புகழ்.  

அவைஅஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும், கல்லார்
அவைஅஞ்சா ஆகுலச் சொல்லும், - நவைஅஞ்சி
ஈத்து உண்ணார் செல்வமும், நல்கூர்ந்தார் இன்னலமும்
பூத்தலில் பூவாமை நன்று.           --- நீதிநெறி விளக்கம்.

கற்றார் அவைக்கு அஞ்சி உடம்பு நடுங்குவோருடைய கல்வி அறிவும், படிக்காதவர்கள் உடைய அவைக்கு அஞ்சாத ஆரவாரச் சொல்லும், குற்றத்துக்கு அஞ்சிக் கொடுத்து உண்ணாதவர்கள் செல்வமும், வறியவர்களுடைய ஈகை முதலிய இனிமையான தன்மைகளும், ஆக இந்த நான்கு தன்மைகளும், உண்டாதலை விட உண்டாகாமலிருத்தலே நன்று.

பட்டார்ப் படுத்து, படாதார்க்கு வாள்செறித்து
விட்டு ஒழிவது அல்லால் வெங்கூற்றம்--ஒட்டிக்
கலாய்க் கொடுமை செய்யாது. கண்டது பாத்து உண்டல்
புலால் குடிலால் ஆய பயன்.         --- அறநெறிச்சாரம்.

கொடிய இயமன் ஆனவன், முற்பிறவியில் அறம் செய்யாது, குறைந்த வாழ்நாளை இப்பிறவியில் பெற்றவர்களைக் கொல்வான். முற்பிறவியில் அறம் செய்தலால் நீண்ட வாழ்நாளை இப்பிறவியில் பெற்றவர்களைக் கொல்லாமல், தனது வாளை உறையின் உள் புதைத்து விடுவான்.  எனவே, ஒருவன் தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பங்கிட்டுக் கொடுத்து, தானும் உண்ணுதலே, இந்தப் புலால் உடம்பைப் பெற்றதன் பயன் ஆகும்.

பொன்னிநீர் நாட்டில் நீடும்
         பொன்பதி புவனத்து உள்ளோர்
"இன்மையால் இரந்து சென்றோர்க்கு
         இல்லை என்னாதே ஈயும்
தன்மையார்" என்று நன்மை
         சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
         மறைத் திருஆக்கூர் அவ்வூர்.        --- பெரியபுராணம்.
  
நன்மையராம் நாரணனும் நான்முகனும் காண்பரிய
தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல்கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.        --- திருஞானசம்பந்தர்.

மலர்ந்தசெவ் வந்திப் போதும் வகுளமும் உதிர்ந்து வாடி
உலர்ந்து, மொய்த்து அளி தேன் நக்கக் கிடப்பன, உள்ளம் மிக்க
குலந்தரு நல்லோர் செல்வம் குன்றினும் தம்பால் இல்என்று
அலந்தவர்க்கு உயிரை மாறியாயினும் கொடுப்பர் அன்றோ.

விரிந்த செவ்வந்தி மலரும் மகிழம் பூவும், நிலத்தில் உதிர்ந்து வாடிப் புலர்ந்தும், வண்டுகள் மொய்த்துத் தேன் உண்ணக் கிடப்பன ஆயின. உள்ள மிகுதியையுடைய, உயர்குடிப் பிறந்த நல்லோர்கள் தமது செல்வம் சுருங்கிய இடத்தும், தம்மிடத்து வந்து இல்லை என்று கூறி வருந்தியவர்க்கு,  தம் உயிரை மாறியாகிலும் கொடுப்பார் அல்லவா.
                                                                        --- திருவிளையாடல் புராணம்.
  
வைத்த அதனை வைப்பு என்று உணரற்க, தாம் அதனைத்
துய்த்து வழங்கி, இருபாலும் --- அத்தகத்
தக்குழி நோக்கி அறம் செய்யின், அஃது அன்றோ
எய்ப்பினில் வைப்பு என்பது.         --- பழமொழி நானூறு.

தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன் தரக் கூடிய வைப்பு என்று கருதவேண்டாம். தாம் அப்பொருளை நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும், இருமைக்கும் அழகு உண்டாகுமாறு, செய்யத் தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்தால், தளர்ந்த காலத்து உதவும் பொருள் ஆகிய வைப்பு என்பது அது அன்றோ?

மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம், - மெல்லியல்
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்! பைங்கரும்பு
மென்று இருந்து பாகு செயல்.    --- பழமொழி நானூறு.

மென்மையான சாயலையும், தளர்ந்து துவண்டு வளையும் இடையினையும் உடையவளே!  வளமையைத் தரும் மிக்க செல்வத்தை, மாட்சிமை உடையார் பெற்றால்,  இனிச் செல்லுகின்ற மறுமையிலும் இன்புறுமாறு அதற்கான அறத்தைச் செய்து கொள்வது, பசிய கரும்பினைச் சுவைத்து அறிந்து மேலும் சுவைக்கப் பாகு செய்து கொள்ளுதலை ஒக்கும்.
  
எவ்வம் என நாடி உய் வகை இலேனை ---

எவ்வம் --- துன்பம். தீராநோய், குற்றம், இகழ்ச்சி, இழிவு, வெறுப்பு.

செல்வம் உள்ளபோதே பிறருக்குக் கொடுத்து உதவாது, உள்ளத்தில் கரவு வைத்துக் கொண்டு, வஞ்சக உணர்வோடு வாழ்பவர்கள் துன்பத்தை அடைவார்கள். அவர்கள் குற்றம் உடையவர்களே. அவர்கள் இகழ்ச்சிக்கு உரியவர்களே. அவர்கள் இழிவானவர்களே. அவர்கள் வெறுக்கத் தக்கவர்களே.

இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்;
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்;
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்;
அரக்கனுக்கு அருளும் வைத்தார், ஐயன் ஐயாறனாரே.

என்னும் அப்பர் பெருமானின் அருள்வக்கின்படி அவர்கள் எல்லாம் அருநரகம் சார உள்ளவர்கள்.

அப்படிப்பட்ட தீயோரை நாடாமல் இருப்பது அறிவுடைமை ஆகும். தீயோரை நாடினால் தீமையே விளையும். அவர்க்கு உய்வகை இல்லை. நல்லோரை நாடினால் நன்மையே விளையும். அவர்க்கு உய்வகை உண்டு.

எவ்வகையும் நாமம் கவியாக சொல்ல அறியேனை ---

இறைவனுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லவேண்டும்.  அவனுடைய அருட்குணங்களைப் பாடிப் பரவுதல் வேண்டும்.

வாய் என்பது உணவுப்பொருளை உண்பதற்கு மட்டுமே உரியது அல்ல. உண்மையைப் பேசவும்,  உண்மைப் பொருளாகிய இறைவனைத் துதிக்கவுமே அமைந்தது. மற்ற நேரங்களில் இறைவனுடைய திருநாமத்தையும், திருப்புகழையும் செவியாரக் கேட்க வேண்டும். கேட்டல் என்பது ஞானபாதங்களில் முதன்மையானது. "செவிக்கு உணவு இல்லாத போது, சிறிது அளவு வயிற்றுக்கு ஈயப்படும்".

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே.        --- அப்பர்.

வாயே, வாழ்த்துக் கண்டாய்!-
மதயானை உரி போர்த்து,
பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை-
வாயே, வாழ்த்து கண்டாய்!                   --- அப்பர்.

வணங்கத் தலைவைத்து, வார்கழல்வாய் வாழ்த்தவைத்து,
இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து, எம்பெருமான்
அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணம்கூரப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ.     --- மணிவாசகம்.

சொல்லாதன கொழு நா அல்ல,
    சோதியுள் சோதி தன் பேர்
செல்லாச் செவி மரம், தேறித்
    தொழாத கை மண் திணிந்த
கல்லாம், நினையா மனம் வணங்
    காத் தலையும் பொறையாம்,
அல்லா அவயவம் தானும்
    மனிதர்க்கு அசேதனமே. --- சேரமான்பெருமாள் நாயனார்.

ஆசை அறாய், பாசம்விடாய், ஆன சிவபூசை பண்ணாய்,
நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய், - சீசீ
சினமே தவிராய், திருமுறைகள் ஓதாய்,
மனமே! உனக்கு என்ன வாய்.            --- குருஞானசம்பந்தர்.

மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே.    --- திருஞானசம்பந்தர்.

நன் நெஞ்சே! உனை இரந்தேன், நம்பெருமான் திருவடியே
உன்னம் செய்து இரு கண்டாய்! உய்வதனை வேண்டுதியேல்,
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும்
பன், அம் சீர் வாய் அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே!    --- திருஞானசம்பந்தர்.

வண்டினம் முரலும்  சோலை,
     மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீது அணவும் சோலை,
     குயிலினம் கூவும் சோலை,
அண்டர் கோன் அமரும் சோலை
     அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை
     விலக்கி நாய்க்கு இடுமின் நீரே.         --- தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

ஆமையின் முதுகத்திடை குதிகொண்டு,
     தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு
     நீர்த் திருக் கோட்டியூர்,
நேமி சேர் தடம் கையினானை
     நினைப்பிலா வலி நெஞ்சு உடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை
     வாங்கி, புல்லைத் திணிமினே.           ---  பெரியாழ்வார்.

எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை ---

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாக உள்ளவன் இறைவன். அவன் மன வாக்குக் காயங்களால் உணர்ந்து அனுபவிக்க முடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன். "சொல்பதம் கடந்த தொல்லோன்" அவன்.
வேதங்கள் எல்லாம் ஐயா எ, ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்.

அந்தப் பரம்பொருளை உணர்ந்து கொள்ள, அது அப்படிப்பட்டது என்றாவது உணர்ந்து கொண்டால், அதை உணரும் வழி எது என்பதை நாடி நிற்க முடியும்.

வாசித்துக் காண ஒணாதது,
     பூசித்துக் கூட ஒணாதது,
     வாய்விட்டுப் பேச ஒணாதது, ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோண ஒணாதது,
     நேசர்க்குப் பேர ஒணாதது,
     மாயைக்குச் சூழ ஒணாதது, ...... விந்துநாத

ஓசைக்குத் தூரம் ஆனது,
     மாகத்துக்கு ஈறு அது ஆனது,
     லோகத்துக்கு ஆதி ஆனது ...... கண்டு, நாயேன்

யோகத்தைச் சேருமாறு, மெய்ஞ்
     ஞானத்தைப் போதியாய், னி
     ஊனத்தைப் போடிடாது  ......மயங்கலாமோ?   --- திருப்புகழ்.

வேதத்தில் கேள்வி இலாதது,
     போதத்தில் காண ஒணாதது,
     வீசத்தில் தூரம் இலாதது, ...... கதியாளர்

வீதித்துத் தேட அரிது ஆனது,
     ஆதித்தன் காய ஒணாதது,
     வேகத்துத் தீயில் வெகாதது, ...... சுடர்கானம்

வாதத்துக்கே அவியாதது,
     காதத்தில் பூஇயல் ஆனது,
     வாசத்தில் பேரொளி ஆனது, ...... மதம்ஊறு

மாயத்தில் காய மத சல
     தீதர்க்குத் தூரம் அதுஆகிய
     வாழ்வை, சற்காரம் அதா, இனி ...... அருள்வாயே.     ---  திருப்புகழ்.

காண ஒணாதது, உருவோடு அரு அது,
     பேச ஒணாதது, உரையே தருவது,
     காணும் நான்மறை முடிவாய் நிறைவது, .....பஞ்சபூதக்

காய பாசம் அதனிலே உறைவது,
     மாயமாய் உடல் அறியா வகையது,
     காயம் ஆனவர் எதிரே அவர் என ...... வந்துபேசிப்

பேண ஒணாதது, வெளியே ஒளியது,
     மாயனார் அயன் அறியா வகையது,
     பேத அபேதமொடு உலகாய் வளர்வது, ...... விந்துநாதப்

பேருமாய் கலை அறிவாய் துரிய
     அதீதம் ஆனது, வினையேன் முடி தவ
     பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது, ...ஒன்றுநீயே.       --- திருப்புகழ்.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
     மயானத்தான், வார்சடையான், என்னின் அல்லால்,
ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்;
     ஓர் ஊரன் அல்லன்; ஓர் உவமன் இல்லி;
அப்படியும் அந்நிறமும் அவ் வண்ணமும்
     அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன் இந்நிறத்தின் இவ்வண்ணத்தன்
     இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே.      --- அப்பர்.

தொய்யும் உடல் பேணு பொய்யனை ---  

பொய் - நிலையில்லாதது. அழியக் கூடியது. இதற்கு நேர் மாறானது மெய்.

என்றும் அழிவில்லாத இன்பத்தை உயிர்களுக்கு அருளவல்ல பரம்பொருள் உண்மைப்பொருள் எனப்படும். அதை உணர்வதற்கு உபாயமாக இறைவன் பெருங்கருணாயால் கிடைத்தது இந்த உடல். மெய்யை உணர்ந்து தெளிய வந்த உடம்பை மெய் என்றனர் நம் முன்னோர்.

அறிவு மயக்கத்தினால் உடம்பையே பெரிதாக எண்ணி, இதை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருத்தல் கூடாது.

வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது,
புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,
மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை,
பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது,
மக்கள் யாக்கை இது என உணர்ந்து         
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்....

என்கின்றார் மணிமேகலை ஆசிரியர்.

நாலடியாரும் இதனையே வலியுறுத்துகின்றது...

தோல்போர்வை மேலும் தொளை பலவாய்ப் பொய்ம் மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பு ஆனால், - மீப்போர்வை
பொய்ம் மறையாக் காமம் புகலாது, மற்று அதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.                 

உள் இருக்கும் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையை உடையது இவ்வுடம்பு. என்றால், அந்த உடம்பைக் கொண்டு காமத்தால் மகிழாமல்,  அம்மேற் போர்வையாகிய ஆடையை, அழுக்கு மறைக்கும் திரையாகவும், மற்றொரு போர்வையாகிய தோல் போர்வையை, ஒரு பையின் திருப்பமாகவும், நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

கைப்பை ஒன்றிலே பொருள்களை வாங்கித் திணித்து வைக்கின்றோம்.  வைத்துள்ள பொருள்களால் கையின் உட்புறம் அழுக்கு அடைந்து இருக்கும். ஆனால் பையின் வெளிப்புறம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பையின் உட்புறம் மேற்புறமாகத் திருப்பிப் பார்த்தால் அதில் உள்ள அழுக்கு விளங்கும்.  அதுபோல, இந்த உடம்பிலே, பல அழுக்குகள் நிறைந்து உள்ளன. "சீ வார்ந்து, ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்" என்பார் மணிவாசகப் பெருமான். "புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதில் பொருந்தி நான் இருக்கின்ற புணர்ப்பும்" என்பார் வள்ளல் பெருமான்.

இந்த உடம்பின் தன்மையை பட்டினத்து அடிகள், "கோயில் திரு அகவல்" என்னும் பாடலில் விளக்குமாறு காண்க...

விழுப் பொருள் அறியா வழுக்கு உறு மனனும்,
ஆணவ மலத்து உதித்து அளைந்து, அதின் ஊடு
நிணவைப் புழு என நெளிந்திடு சிந்தையும்;
படிறும், பாவமும், பழிப்பு உறு நினைப்பும்,
தவறும், அழுக்காறும், இவறு பொய்ச்சாப்பும்,
கவடும், பொய்யும், சுவடும், பெரும் சினம்,
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும், பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை;
எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்து,
கொழும் தசை மேய்ந்தும் ஒழுக்கும் விழும் குடிலை;
செம்பு எழு உதிரச் சிறுகுழுக் குரம்பையை;
மல உடல் குடத்தை, பல உடல் புட்டிலை;
தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை;
கொலை படைக்கலம் பல கிடக்கும் கூட்டை;
சலிப்பு உறு வினைப் பலசரக்குக் குப்பையை;
கோள்சரக்கு ஒழுகும் பீறல் கோணியை;
கோபத் தீ மூட்டும் கொல்லன் துருத்தியை;
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை;
புலராக் கவலை விளை மரப் பொதும்பை;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை;
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை;
மக்கள் வினையின் மயங்கும் திகிரியை;
கடுவெளி உருட்டிய சகடக் காலை;
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்கு
காமக் காற்று எடுத்து அலைப்ப,
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை;
இருவினை விலங்கொடும் இயங்கு புன்கலனை,
நடுவன் வந்து அழைத்திட நடுங்கிடும் யாக்கையை,
பிணம் எனப் படுத்து, யான் புறப்படும் பொழுது
அடிமலர்க் கமலத்துக்கு அபயம், நின் அடைக்கலம்....

எனவே, இந்த உடம்பின் மேல் வைக்குப் பற்றினை விட்டு, அதிலே உள்ளிட்டு இருக்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் சரக்குகளைத் தூக்கி எறிந்து விட்டு, இறைவன் குடியிருக்கும் கோயிலாக உள்ளத்தை மாற்ற வேண்டும்.

அப்பர் பெருமான் அருளியுள்ள, சரக்கு அறைத் திருவிருத்தத் திருப்பதிகத்தை ஓதி உணர்ந்து, இறைவன் திருவருளைப் பெற முயலுதல் வேண்டும். சரக்கு இறைத் திருவிருத்தப் பாடல் ஒன்று இதோ.....

விண்டார் புரம்மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம், மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும், தொழுது பாதம்
கண்டார்கள் கண்டு இருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்
தண் தார் இருக்கும் சரக்கு அறையோ என் தனிநெஞ்சமே.    --- அப்பர்.


விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ ---

குற்றங்கள் பலவும் நிறைந்தவன். ஆனாலும் என்னைக் கை விட்டு விடல் ஆகாது என்கின்றார் அடிகளார்.

பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய், விடிலோ கெடுவேன்,
மற்று அடியேன்தன்னைத் தாங்குநர் இல்லை,என் வாழ்முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே.   --- திருவாசகம்.

இரும்புநேர் நெஞ்சகக் கள்வன் ஆனாலும், உனை
            இடைவிட்டு நின்றது உண்டோ?
  என்று நீ, அன்று யான், உன் அடிமை அல்லவோ?
            யாதேனும் அறியா வெறுந்

துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ?
            தொண்டரொடு கூட்டுகண்டாய்!
   சுத்தநிர்க் குணமான பரதெய்வ மே!பரஞ்
              சோதியே சுகவாரியே.                               ---  தாயுமானார்.

ஊன்பெறும் உயிரும், உணர்ச்சியும், அன்பும்,
     ஊக்கமும், உண்மையும்; என்னைத்
தான்பெறு தாயும், தந்தையும், குருவும்,
     தனிப்பெருந் தெய்வமும், தவமும்,
வான்பெறு பொருளும், வாழ்வும், நல் துணையும்,
     மக்களும், மனைவியும், உறவும்,
நான்பெறு நண்பும்,  யாவும் நீ என்றே
     நம்பினேன், கைவிடேல் எனையே.                        --- திருவருட்பா.
  
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ ---

வலிமை பொருந்திய அசுரர்கள் மாளவும், நல்ல தேவர்கள் வாழவும்.

இந்த வரி வள்ளிமலைத் திருப்புகழிலும் பயின்று வந்துள்ளது.

துட்ட நிக்கிரகமும், சிட்ட பரிபாலனமும் செய்தவர் முருகப் பெருமான். 

"மறக்கருணையும் தன் அறக்கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மைப் பதம்" என்றார் வள்ளல் பெருமான்.

அகரம் என அறிவாகி, உலகம் எங்கும்
     அமர்ந்து அகர உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி, வேறுமாகி,
     பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு,
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்ந்து எய்தப்
     போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து, ல்லார்க்கு
நிகர்இல் மறக்கருணை புரிந்து, ண்டு கொள்ளும்
     நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்.     --- கச்சியப்பர்.

இறைவன் இங்கு ஏற்பது என்னை
         இதம் அகி தங்கள்? என்னின்
நிறைபரன் உயிர்க்கு வைத்த
         நேசத்தின் நிலைமை யாகும்;
அறம்மலி இதம் செய்வோருக்கு
         அநுக்கிரகத்தைச் செய்வன்;
மறம்மலி அகிதம் செய்யின்
         நிக்கிர கத்தை வைப்பன்.     --- சிவஞான சித்தியார்.

உயிர்கள் செய்த நலம் தீங்குகள் இரண்டினையும் இறைவனே ஏற்றுக் கொள்வான் என்பது ஏன்? எனில் எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்திருக்கும் இறைவன் உயிர்களிடத்து பேரருளினால் அவை வீடு பேறு அடைவதன் பொருட்டேயாகும். அறம் மிகுந்த நன்மைகளைச் செய்வோர்க்கு இறைவன் அருள்புரிவான். மறம் மிகுந்த தீங்கு புரிவோரை அதற்கு ஏற்ப ஒறுப்பான்.

         அனுக்கிரகம் - அருள் செய்தல். நிக்கிரகம் - ஒறுத்தல்.
  
நிக்கிரகங்கள் தானும்
         நேசத்தால் ஈசன் செய்வது;
அக்கிரமத்தால் குற்றம்
         அடித்துத் தீர்த்து அச்சம் பண்ணி
இக்கிர மத்தி னாலே
         ஈண்டு அறம் இயற்றிடு என்பன்;
எக்கிர மத்தி னாலும்
         இறைசெயல் அருளே என்றும்.  --- சிவஞான சித்தியார்.

இறைவன் உயிர்களை ஒறுத்தலும் கூட அவன் திருவருட் செயலே ஆகும். எவ்வாறு என்னில், முறைமை தப்பிக் குற்றம் இழைத்த உயிரை ஒறுத்து இனித் தீவினை செய்யாத வண்ணம் அச்சுறுத்தி, இனியேனும் அறத்தோடு பொருந்திய செயல்களைச் செய்வாயாக என்று உள் நின்று உணர்த்துவான். எம்முறையில் பார்த்தாலும் இறைவனின் செயல் என்றென்றும் அருளே ஆகும்.

கருத்துரை

முருகா! அடியேனைக் கைவிட்டு விடாமல் ஆண்டுகொண்டு, திருவடி இன்பத்தை அருள்வாய்.








                 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...