மரம் வைத்தவர் தண்ணீர் ஊற்றுவார்





37. மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்.

இரந்தனையித் தனைநாளும் பரந்தனைநான்
     என்றலைந்தாய்! இனிமே லேனும்
கரந்தைமதி சடையணியும் தண்டலைநீள்
     நெறியாரே காப்பார் என்னும்
உரந்தனைவைத் திருந்தபடி இருந்தனையேல்1
     உள்ளவெலாம் உண்டாம்! உண்மை!
மரந்தனைவைத் தவர்நாளும் வாடாமல்
     தண்ணீரும் வார்ப்பர் தாமே.

     நெஞ்சறிவுறுத்தலாக அமைந்துள்ளது இப் பாடல்.

     இதன் பொருள் ---

     மரந்தனை வைத்தவர் வாடாமல் நாளும் தண்ணீரும் வார்ப்பர் --- மரத்தை வைத்தவர்கள் அது வாடிடாமல் வளர நாளும் தண்ணீர் விட்டு வருவாவார்கள்,

     ஆகையால், ஏ மனமே!

     இத்தனை நாளும் இரந்தனை, பரந்தனை --- இவ்வளவு காலமாக உணவுக்கு என்று இரந்து திரிந்தாய், எங்கெங்கோ ஒடி ஓடி அலைந்தாய்,

     நான் என்று அலைந்தாய் --- உன்னையே பெரிதாக எண்ணி, நான் என்னும் இறுமாப்போடு அலைந்தாய்,

     இனிமேலேனும் ---இனியாவது,

     கரந்தை மதி சடை அணியும் தண்டலைநீள் நெறியாரே காப்பார் --- திருநீற்றுப் பச்சையையும்  பிறைத் திங்களையும்  திருச் சடையில் அணிந்துள்ள திருத்தண்டலை நீள்நெறி இறைவரே காத்து அருள் புரிவார்,

     என்னும் உரம் தனை வைத்து, இருந்தபடி இருந்தனையேல் --- என்கிற உறுதியை உள்ளத்தில் கொண்டு (பேராசை கொண்டு இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து அவதிப் படாமல்) அமைதியாக இருந்தாயானால்,

     உள்ள எலாம் உண்டாம் உண்மை --- பழவினை காரணமாக உனக்கு என்று உள்ள எல்லாம் உனக்குக் கிடைக்கும். இதுவே உண்மை ஆகும்.

     கருத்து - "மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்" என்பது பழமொழி. இதற்கு முன்னர் இந் நூலில் ஒரு பாடல் வந்தது.

மண்ணுலகு ஆளவும் நினைப்பார், பிறர் பொருள்மேல்
     ஆசை வைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில்
     அலக்கழிந்து புரண்டே போவார்;
பண்உலவு மொழிபாகர் தண்டலையார்
     வகுத்த விதிப்படி அல்லாமல்
எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே
     மெய் ஆகும் இயற்கை தானே!

என்பது அது ஆகும். இதையே வேறு விதமாக இப் பாடலில் காட்டினார் ஆசிரியர்.

ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
     உயர் செல்வம் எல்லாம்
அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்;
     நல் அறமும் நட்பும்
நன்று என்று இரு; நடு நீங்காமலே
     நமக்கு இட்ட படி
என்று என்று இரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

என்னும் பட்டித்தடிகளின் பாடல் கருத்தை மனத்தில் கொள்ளவேண்டும்.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி - தோழி!
நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

         ஆழமாகிய கடலின் நீரை அழுந்தும்படியாக அமிழ்த்தி மொண்டாலும் ஒரு படியானது, நான்கு படி நீரை மொள்ளாது; அதுபோல, தோழியே, மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும், அவரவருக்கு விதிக்கப்பட்ட விதியின் அளவாகிய பயனே அனுபவிக்கப்படும் பயனாகும்.

எழுதியவறே காண் இரங்கு மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,
முற்பவத்தில் செய்த வினை.

         வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே! நல்ல பயனைப் பெறலாம் என்று நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு, அது எட்டிக்காயைக் கொடுத்ததாயின், அதற்குக் காரணம் அவர் முற்பிறப்பில் செய்த தீவினையாகும். செய்கின்ற செயல்கள் எல்லாம் நீ நினைத்தபடியே ஆகுமோ?  கடவுள் விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக.

என வரும் ஔவைப் பிராட்டியின் மூதுரைப் பாடல்களின் கருத்தை உள்ளத்தில் இருத்துக.

புண்ணியம்ஆம், பாவம்போம், போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள், - எண்ணுங்கால்
ஈது ஒழிய வேறு இல்லை, எச்சமயத்தோர் சொல்லும்
தீது ஒழிய நன்மை செயல்.

ஒருவன் செய்யத்தக்கது அறச்செயல்களையே. செய்யாமல் ஒழியத்தகுவது பாவச் செயல்களையே. முற்பிறவியில் செய்த அந்த அறமும், பாவமுமே இந் உலகில் பிறந்தவர்களுக்கு இன்ப துன்பங்களை அனுபவிக்கும்படி சேர்த்து வைத்த பொருக்ளகள் ஆகும். எண்ணிப் பார்க்கும்பொழுது, எல்லாச் சமயத்தவர்களும் சொல்வது இதைத் தவிர வேறு இல்லை. எனவே, பாவத்தைச் செய்யாது, அறத்தையே செய்க.

என வரும் ஔவைப் பிராட்டியின் நல்வழிப் பாடல் கருத்தையும் எண்ணுக.

வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருட்கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்று ஒர் அன்ன,
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கு மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ருயிர்
முறைவழிப் படூஉம் என்பது, திறவோர்
காட்சியில் தெளிந்தனம், கலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

என்னும் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் சிந்தித்தற்கு உரியது.

எல்லாமே எமக்கு ஊர் தான். எல்லோருமே எமக்கு உறவினர் தான். தீமையோ, நன்மையோ நமக்குப் பிறரால் உண்டாகாது. வருத்தமும், அது தணிந்த மகிழ்வும், இன்னும் இது போன்ற நிகழ்வுகளும் தாமே வருவன. பிறர் தர வருபவை அல்ல. சாவு என்பது உலகுக்குப் புதியது அல்ல. மனிதன் தோன்றிய நாளில் இருந்து மரணம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.  அதே போல், வாழ்வு மிகவும் இனிமையானது என்று எண்ணி மகிழ்வதும் இல்லை. துன்பம் மிக உடையது என்று சொல்லித் துடிப்பதும் இல்லை. மின்னல் ஒளிர, இடி இடித்து, வானம் துளித் துளியாய்ப் பெய்யும் குளிர்ந்த மழை நீர், மலைச் சரிவுகளில் ஒலி எழுப்பி, அருவிழாழ்ப் பாய்ந்து, மண்ணில் பெரிய ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் போது, அதில் மிதந்து செல்லும் பொருளானது அந்த நீர் செல்லும் வழியை சென்று அமைவதைப் போல, உயிர்க் குலமானது, அதற்கு விதித்த விதியின் வழியே செல்லும் என்ற உண்மையைக் கற்று அறிந்து, தெளிந்த அறிவில் சிறந்த பெரியோர்கள் உணர்ந்து, உணர்த்த அறிந்து உள்ளோம். எனவே, நாங்கள் பெருமைக்கு உரிய பெரியோரைக் கண்டு வியப்பது இல்லை. அதற்காக, சிறியவர்களைப் பழிப்பதும் இல்லை.

புறநானூற்றுப் பாடல்களிலேயே பொன்னான பாடல் இது. இந்த நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் ஒருவர், உலகம் முழுமைக்கும் ஒரே படை. ஒரே நீதிமன்றம் என்னும் கனவு கண்டார். ஆனால், பல நூறு ஆண்டுகளிக்கு முன்னரேயே, உலகம் எல்லாம் ஊரே, வாழும் மக்கள் எல்லாம் உறவினரே என்னும் அற்புதச் சிந்தனை தமிழன் உள்ளத்தில் மட்டுமே தோன்றியது. மனித நேயத்தைமுதன் முதலில் உலகுக்குக் காட்டிய பெருமை தமிழனுக்கு உண்டு. இதை உணர்ந்து, நம் முன்னோர் காட்டிய வழியில் வாழ்ந்து காட்டவேண்டும்.

உலகைக் கணித்துப் பார்த்து "யாதும் ஊரே" என்றார்.
மக்களைக் கணித்துப் பார்த்து "யாவரும் கேளிர்" என்றார்.
நன்மை தீமைகளைக் கணித்துப் பார்த்து "அவை பிறர் தர வாரா" என்றார்.
சாதலைக் கணித்துப் பார்த்து "அது புதிது அன்று" என்றார்.
வாழ்தலைக் கணித்துப் பார்த்து "அது பிறவியால் வந்தது" என்றார்.
பிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப் பார்த்து, "அதனை இனிது என மகிழக் கூடாது" என்றார்.
வாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து, அதனை முனிந்து வாழ்க்கையே "துன்ப மயமானது" என வெறுக்கக் கூடாது என்றார்.
பிறவியைக் கணித்துப் பார்த்து, "அது மின்னல் போன்றது" என்றார். மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது என்றார்.
வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து, "அது மல்லல் பேர் யாறு" போன்றது என்றார்.
வளமான பெரிய ஆற்று நீரோட்டம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் - என்பதைப் பிறிது மொழிதல் அணியால் உய்த்து உணர வைத்தார்.
வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து, ஆறு பாறைகளில் மோதிக்கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி நம்மைத் தூண்டினார்.
நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து, ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார். (ஊழ் அல்லது முறை என்பது, ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது உயிர் படகைச் செலுத்தும் துடுப்பு)

மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.

என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே!
உன்செயலே என்று உணரப் பெற்றேன், இந்தஊன் எடுத்த
பின், செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு
முன்செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே.      --- பட்டினத்தார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...