வெள்ளிகரம் - 0669. கள்ளம் உள்ள





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கள்ளம் உள்ள (வெள்ளிகரம்)

முருகா!
ஐம்புல வேடரால் அலைப்புண்டு அடியேன் படும் துன்பத்தை நீக்கி,  
திருவடி இன்பத்தை அடியேனுக்கு அருள்.


தய்ய தய்ய தய்ய தய்ய
     தய்ய தய்ய ...... தனதான


கள்ள முள்ள வல்ல வல்லி
     கையி லள்ளி ...... பொருளீயக்

கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
     கல்வி செல்வர் ...... கிளைமாய

அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
     மல்லல் சொல்ல ...... முடியாதே

ஐய ரைய மெய்யர் மெய்ய
     ஐய செய்ய ...... கழல்தாராய்

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
     வள்ளி கிள்ளை ...... மொழியாலே

மைய லெய்து மைய செய்யில்
     வையில் வெள்வ ...... ளைகளேற

மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
     வெள்ள வெள்ளி ...... நகர்வாழ்வே

வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

கள்ளம் உள்ள வல்ல வல்லி
     கையில், ள்ளி ...... பொருள் ஈய,

கல்லும், நெல்லும், வெள்ளி, தெள்ளு
     கல்வி, செல்வர், ...... கிளை மாய,

அள்ளல் துள்ளி, ஐவர் செல்லும்
     அல்லல் சொல்ல ...... முடியாதே.

ஐயர் ஐய! மெய்யர் மெய்ய!
     ஐய செய்ய ...... கழல்தாராய்.

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
     வள்ளி கிள்ளை ...... மொழியாலே,

மையல் எய்தும் ஐய! செய்யில்
     வையில் வெள் ...... வளைகள் ஏற,

மெள்ள மள்ளர் கொய்யும் நெல்லின்
     வெள்ள வெள்ளி ...... நகர்வாழ்வே!

வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல ...... பெருமாளே.


பதவுரை

         வள்ளல் --- வள்ளலே!

     புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே மையல் எய்தும் ஐய --- புள்ளிகளை உடைய பெண் மான்  ஈன்ற வள்ளி நாயகியாகிய கிளிமொழிகளைக் கேட்டு, மோகம் கொண்ட ஐயனே!

      செய்யில் வையில் வெள் வளைகள் ஏற --- வயல்களில், புல்லில் வெண்மையான சங்குகள் நிறைந்திட,

      மெள்ள மள்ளர் கொய்யும் நெல்லின் வெள்ள வெள்ளிநகர் வாழ்வே --- உழவர்கள் மெதுவாக அறுவடை செய்த நெல் மிக்க உள்ள வெள்ளிகர நகரத்தில் வாழ்பவரே!

      வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே --- விரும்புதற்குரிய மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு, பிரணவ மொழியின் பொருளை (அவருக்குக் குருவாயிருந்து) வெற்றியுடன் மொழிய வல்ல பெருமாளே.

      கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய --- கள்ளத் தனம் வாய்ந்த, சாமர்த்தியமான ஒரு விலைமகளின் கையிலே (நான்) அள்ளிப் பொருள்களைக் கொடுப்பதால்,

      கல்லும், நெல்லும், வெள்ளி, தெள்ளு கல்வி, செல்வர் கிளை மாய --- அடியேனிடம் இருந்த நவமணிகளும், நெற் குவியல்களும், வெள்ளிப் பொருள்களும், தெளிந்த கல்விச் செல்வமும், செல்வமுள்ள சுற்றத்தார்களும், எல்லாம் அழிந்து விலக,

      அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே --- மாயை என்னும் சேற்றில் துள்ளிக் குதித்து, ஐம்புலன்களால் அடியேன் படுகின்ற துன்பம் சொல்லி மாளாது.

      ஐயர் ஐய --- முனிவர்களுக்கு முனிவனே,

     மெய்யர் மெய்ய --- மெய்யன்பர்க்கு மெம்மையானவனே,

     ஐய செய்ய கழல் தாராய் --- அழகிய, செப்பமான கழலை அணிந்துள்ள தேரீரது திருவடியைத் தந்து அருள்வீராக.


பொழிப்புரை

     முனிவர்களுக்கு முனிவனே!

     மெய்யன்பர்க்கு மெம்மையானவனே!

     வள்ளலே!

     புள்ளிகளை உடைய பெண் மான் ஈன்ற வள்ளி நாயகியாகிய கிளிமொழிகளைக் கேட்டு, மோகம் கொண்ட ஐயனே!

         வயல்களில், புல்லில் வெண்மையான சங்குகள் நிறைந்திட, உழவர்கள் மெதுவாக அறுவடை செய்த நெல்குவை மிகுந்து உள்ள வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் வாழ்பவரே!

         விரும்புதற்குரிய மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு, பிரணவ மொழியின் பொருளை (அவருக்குக் குருவாயிருந்து) வெற்றியுடன் மொழிய வல்ல பெருமையில் மிக்கவரே!

         கள்ளத் தனம் வாய்ந்த, சாமர்த்தியமான ஒரு விலைமகளின் கையிலே (நான்) அள்ளிப் பொருள்களைக் கொடுப்பதால், அடியேனிடம் இருந்த நவமணிகளும், நெற் குவியல்களும், வெள்ளிப் பொருள்களும், தெளிந்த கல்விச் செல்வமும், செல்வமுள்ள சுற்றத்தார்களும், எல்லாம் அழிந்து விலக, மாயை என்னும் சேற்றில் துள்ளிக் குதித்து, ஐம்புலன்களால் அடியேன் படுகின்ற துன்பம் சொல்லி மாளாது. அழகிய, செப்பமான கழலை அணிந்துள்ள தேரீரது திருவடியைத் தந்து அருள்வீராக.


விரிவுரை

ஐயர் ஐய ---

முனிவர்களுக்கு முனிவனாக இருந்து மெய்ப்பொருள் உணர வைப்பவர் முருகவேள். அவரது தந்தையைப் போல.

மெய்யர் மெய்ய ---

மெய்யன்பர்க்கு மெம்மையானவன் இறைவன். "மெய்யர் மெய்யனே" என்றார் மணிவாசகப் பெருமான்.

செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.           ---  அப்பர்.

மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு,
         விரும்பாத அரும்பாவி அவர்கட்கு என்றும்
பொய்யானை, புறங்காட்டில் ஆடலானை,
         பொன்பொலிந்த சடையானை, பொடிகொள் பூதிப்
பையானைப் பைஅரவம் அசைத்தான் தன்னை,
         பரந்தானை பவளமால் வரைபோல், மேனிச்
செய்யானை, திருநாகேச் சரத்து உளானைச்
         சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே.      --- அப்பர்.

கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை, வெண்ணீறு அணிந்தானை, சேர்ந்தறியாக்
கையானை, எங்கும் செறிந்தானை, அன்பர்க்கு
மெய்யானை, அல்லாதார்க்கு அல்லாத வேதியனை,
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்.      --- திருவாசகம்.

வள்ளல் ---
  
வரையாது வார் வழங்குபவரை வள்ளல் என்பர் பெரியோர். அருட்பெருங்கருணையாளன் இறைவன்.

ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்
தாய் ஆகி வந்த தயாளன் எவன் - சேயாக

வேல்பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்
தால் பொசித்து நேர்ந்த தயாளன் எவன் - பாற்குடத்தைத்

தான்தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்குத்
தான் தந்தை ஆன தயாளன் எவன் - தான்கொண்டு

சம்பு நறுங்கனியின் தன் விதையைத் தாள்பணிந்த
சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் - அம்புவியில்

ஆண்டவன் என்று ஏத்த, பொன்னம்பலத்தில் ஆனந்தத்
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் - காண்தகைய

முத்துச் சிவிகையின்மேல் முன்காழி ஓங்கு,முழு
முத்தைத் தனிவைத்த முத்தன் எவன் - பத்திபெறு

நா ஒன்று அரசர்க்கு நாம் தருவேம், நல்லூரில்
வா, என்று வாய்மலர்ந்த வள்ளல்எவன் - பூவொன்று

நன்தொண்டர் சுந்தரரை நாம் தடுக்க வந்தமையால்
வன்தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் - நன்தொண்டின்

காணிக்கை யாகக் கருத்து அளித்தார் தம் மொழியை
மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் - தாள்நிற்கும்

தன் அன்பர் தாம் வருந்தில், சற்றும் தரியாது
மன் அன்பு அருள் அளிக்கும் வள்ளல் எவன் - முன்னன்பில்

சால்பு உடைய நல்லோர்க்குத் தண்அருள்தந்து ஆட்கொள, ர்
மால்விடைமேல் வந்து அருளும் வள்ளல் எவன் - மால் முதலோர்

தாம் அலையா வண்ணம் தகை அருளி, ஓங்குவெள்ளி
மாமலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் - ஆம் அவனே

நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாட அரிதாம்
செம்மைக் கதி அருள் நம் தெய்வம் காண்..      --- திருவருட்பா.

வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல   ெருமாளே ---

விரும்புதற்குரிய மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு, பிரணவ மொழியின் பொருளை, அவருக்குக் குருவாயிருந்து, மொழிந்து வெற்றிகொள்ள வல்ல பெருமாளே எனலாம்.

முருகப் பெருமான் நான்முகனைக் குட்டிச் சிறை இருத்திய போது, திருமால் வேண்ட, அயனைச் சிறைவிடுமாறு அறுமுகத்து அண்ணலைப் பணிக்க, நந்தியண்ணலைச் சிவபெருமான் அனுப்ப, அவர் சொல்லை மறுத்த ஆண்மையையும், சிவபெருமானே வந்து வேண்டவும், அயனை விடுத்து, அருமறைப் பொருளை உபதேசித்து அருளிய பெருமையையும் குறிப்பதாகவும் கொள்ளலாம். நமது சொந்தப் புராணமாகிய கந்தபுராணம் இதனை விளக்குமாறு காண்க.

கந்தவேள் எனக் கஞ்சனும், "ஐய! நின்
மைந்தனாம் அவன் வல்வினை ஊழினால்
அந்தம் இல்பகல் ஆழ் சிறைப்பட்டு உளம்
நொந்து வாடினன் நோவு உழந்தான் அரோ".

"ஆக்கம் அற்ற அயன் தன் சிறையினை
நீக்குக என்று நிமலனை வேண்டலும்"
தேக்கும் அன்பில் சிலாதன், நல் செம்மலை
நோக்கி ஒன்று நுவலுதல் மேயினான்.

"குடுவைச் செங்கையி னானைக் குமரவேள்
இடுவித்தான் சிறை என்றனர், ஆண்டு நீ
கடிதில் சென்று, நம் கட்டுரை கூறியே
விடுவித்தே இவண் மீள்க" எனச் சாற்றினான்.

எந்தை அன்னது இசைத்தலும், "நன்று" எனா,
நந்தி அக்கணம் நாதனைத் தாழ்ந்து போய்,
அந்தம் அற்ற அடல் கணம் சூழ்தரக்
கந்த வெற்பில் கடிநகர் எய்தினான்.

எறுழு உடைத்தனி ஏற்று முகத்தினான்,
அறுமுகத்தன் அமர்ந்த நிகேதனம்
குறுகி, மற்று அவன் கோல மலர்ப்பதம்
முறைதனில் பணிந்து ஏத்தி மொழிகுவான்.

"கடிகொள் பங்கயன் காப்பினை, எம்பிரான்
விடுதல் கூறி விடுத்தனன் ஈங்கு எனை,
தடைபடாது அவன் தன்சிறை நீக்குதி,
குடிலை அன்னவன் கூறற்கு எளியதோ".

என்னும் முன்னம், இளையவன் சீறியே,
"அன்ன ஊர்தி அருஞ்சிறை நீக்கலன்,
நின்னையும் சிறை வீட்டுவன் நிற்றியேல்,
உன்னி ஏகுதி ஒல்லையில்" என்றலும்.

வேறுஅது ஒன்றும் விளம்பிலன், அஞ்சியே
ஆறு மாமுகத்து அண்ணலை வந்தியா,
மாறு இலா வெள்ளி மால்வரை சென்றனன்,
ஏறு போல்முகம் எய்திய நந்தியே.

மை திகழ்ந்த மணிமிடற்று அண்ணல் முன்,
வெய்து எனச்சென்று மேவி, அவன் பதம்
கைதொழூஉ நின்று, கந்தன் மொழிந்திடும்
செய்தி செப்ப, சிறுநகை எய்தினான்.

கெழு தகைச் சுடர்க் கேசரிப் பீடமேல்
விழுமிது உற்ற விமலன் விரைந்து எழீஇ,
அழகு உடைத் தனது ஆலயம் நீங்கியே
மழ விடைத்தனி மால்வரை ஏறினான்.

முன்னர் வந்த முகில்புரை வண்ணனும்
கின்னரம் பயில் கேசரர் ஆதியோர்
நன்னர் கொண்டிடு நாகரும் நற்றவர்
என்னரும் தொழுது எந்தைபின் ஏகினார்.

படைகொள் கையினர், பன்னிறக் காழக
உடையர், தீயின் உருகெழு சென்னியர்,
இடிகொள் சொல்லினர், எண்ணரும் பூதர்கள்
புடையில் ஈண்டினர், போற்றுதல் மேயினார்.

இனைய காலை இனையவர் தம்மொடும்
வனிதை பாதியன் மால்விடை ஊர்ந்து உராய்ப்
புனித வெள்ளியம் பொற்றை தணந்துபோய்த்
தனது மைந்தன் தடவரை எய்தினான்.

சாற்ற அருந்திறல் சண்முக எம்பிரான்
வீற்றிருந்த வியன் நகர் முன் உறா,
ஏற்றினின்றும் இழிந்து, விண்ணோர் எலாம்
போற்ற, முக்கண் புனிதன் உள் போயினான்.

அந்தி போலும் அவிர்சடைப் பண்ணவன்
கந்தன் முன்னர்க் கருணையொடு ஏகலும்,
"எந்தை வந்தனன்" என்று எழுந்து, ங்கு அவன்
வந்து நேர் கொண்டு அடிகள் வணங்கியே.

பெருத்த தன்மணிப் பீடிகை மீமிசை
இருத்தி நாதனை, ஏழுலகு ஈன்றிடும்
ஒருத்தி மைந்தன், "உயிர்க்கு உயிராகிய
கருத்த! நீ வந்த காரியம் யாது?" என்றான்.

"மட்டு உலாவு மலர் அயனைச் சிறை
இட்டு வைத்தனை, யாம் அது நீக்குவான்
சுட்டி வந்தனம், மால்சுரர் தம்முடன்,
விட்டிடு ஐய!" என்று எந்தை விளம்பினான்.

நாட்ட மூன்றுஉடை நாயகன் இவ்வகை
ஈட்டும் அன்பொடு இசைத்திடும் இன்சொலைக்
கேட்ட காலையில், கேழ்கிளர் சென்னிமேல்
சூட்டு மௌலி துளக்கினன் சொல்லுவான்.

"உறுதி ஆகிய ஓர் எழுத்தின் பயன்
அறிகிலாதவன், ஆவிகள் வைகலும்
பெறுவன் என்பது பேதைமை, ஆங்குஅவன்
மறைகள் வல்லது மற்று அது போலுமால்".

"அழகிது ஐய! நின் ஆர்அருள், வேதம் முன்
மொழிய நின்ற முதல் எழுத்து ஓர்கிலான்,
இழிவில் பூசை இயற்றலும் நல்கிய
தொழில் புரிந்து சுமத்தினை ஓர்பரம்".

"ஆவி முற்றும் அகிலமும் நல்கியே
மேவுகின்ற வியன் செயல் கோடலால்,
தாவில் கஞ்சத் தவிசு உறை நான்முகன்
ஏவர் தம்மையும் எண்ணலன் யாவதும்".

"நின்னை வந்தனை செய்யினும், நித்தலும்
தன் அகந்தை தவிர்கிலன், ஆதலால்,
அன்னவன் தன் அருஞ்சிறை நீக்கலன்",
என்ன மைந்தன் இயம்பிய வேலையே.

"மைந்த! நின் செய்கை என்னே?
     மலர்அயன் சிறைவிடு என்று
நந்தி நம் பணியால் ஏகி
     நவின்றதும் கொள்ளாய், நாமும்
வந்து உரைத்திடினும் கேளாய்,
     மறுத்து எதிர் மொழிந்தாய்" என்னாக்
கந்தனை வெகுள்வான் போலக்
     கழறினன் கருணை வள்ளல்.

அத்தனது இயல்பு நோக்கி, அறுமுகத்து அமலன், "ஐய!
சித்தம் இங்கு இதுவே ஆகில், திசைமுகத்து ஒருவன் தன்னை
உய்த்திடு சிறையின் நீக்கி, ஒல்லையில் தருவன்" என்னாப்
பத்தியின் இறைஞ்சிக் கூற, பராபரன் கருணை செய்தான்.

நன்சிறை எகினம் ஏனம் நாடுவான் அருளை நல்க,
தன்சிறை நின்றோர் தம்மைச் சண்முகக் கடவுள் நோக்கி,
"முன்சிறை ஒன்றில் செங்கேழ் முண்டகத்து அயனை வைத்த
வன்சிறை நீக்கி, நம் முன் வல்லை தந்திடுதிர்" என்றான்.

என்றலும், சாரதர்க்குள்
     சிலவர்கள் ஏகி, அங்கண்
ஒன்று ஒரு பூழை தன்னுள்
     ஒடுங்கினன் உறையும் வேதா,
வன்தளை விடுத்தல் செய்து,
     மற்று அவன் தனைக் கொண்டு ஏகிக்
குன்றுதொறு ஆடல் செய்யும்
     குமரவேள் முன்னர் உய்த்தார்.

உய்த்தலும் கமலத்து அண்ணல் ஒண்கரம் பற்றி, செவ்வேள்
அத்தன் முன் விடுத்தலோடும், ஆங்கு அவன் பரமன் தன்னை
மெய்த்தகும் அன்பால் தாழ்ந்து, வெள்கினன் நிற்ப, நோக்கி,
"எய்த்தனை போலும் பன்னாள் இருஞ்சிறை எய்தி" என்றான்.

நாதன் இத் தன்மை கூறி, நல் அருள் புரிதலோடும்,
போதினன், "ஐய! உன்தன் புதல்வன் ஆற்றிய இத் தண்டம்
ஏதம் அன்று, ணர்வு நல்கி, யான் எனும் அகந்தை வீட்டி,
தீதுசெய் வினைகள் மாற்றி, செய்தது புனிதம்" என்றான்.

அப்பொழுது அயனை முக்கண் ஆதியம் பரமன் காணூஉ,
"முப் புவனத்தின் மேவும் முழுது உயிர்த் தொகைக்கும் ஏற்ற
துப்புறவு அதனை நன்று தூக்கினை, தொன்மையே போல்
இப்பகல் தொட்டு நீயே ஈந்தனை இருத்தி" என்றான்.

அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,
முருகவேள் முகத்தை நோக்கி, முறுவல்செய்து, ருளை நல்கி,
"வருதியால் ஐய!" என்று மலர்க்கை உய்த்து அவனைப் பற்றி,
திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.

காமரு குமரன் சென்னி கதும் என உயிர்த்து, செக்கர்த்
தாமரை புரையும் கையால் தழுவியே, "அயனும் தேற்றா
ஓம் என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?
போம் எனில், அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.

"முற்று ஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள், உலகம் எல்லாம்
பெற்றிடும் அவட்கு நீ முன், பிறர் உணராத ஆற்றால்
சொற்றது ஓர் இனைய மூலத் தொல்பொருள், யாரும் கேட்ப
இற்று என இயம்பலாமோ? மறையினால் இசைப்பது அல்லால்".

என்றலும், நகைத்து, "மைந்த! எமக்கு அருள் மறையின்" என்னா,
தன்திருச் செவியை நல்க, சண்முகன் குடிலை என்னும்
ஒன்றுஒரு பதத்தின் உண்மை உரைத்தனன், உரைத்தல் கேளா,
நன்று அருள் புரிந்தான் என்ப ஞான நாயகனாம் அண்ணல்.

அன்னதோர் ஐயம் மாற்றி
     அகம் மகிழ்வு எய்தி, அங்கண்
தன் இளங்குமரன் தன்னைத்
     தலைமையோடு இருப்ப நல்கி,
என்னை ஆளுடைய நாதன்
     யாவரும் போற்றிச் செல்ல,
தொல்நிலை அமைந்து போந்து
     தொல்பெரும் கயிலை வந்தான்.

கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய, கல்லும், நெல்லும், வெள்ளி, தெள்ளு கல்வி, செல்வர் கிளை மாய ---

பொன்னாசையும் மண்ணாசையும் மனிதப் பிறவிக்கே உள்ளன. பெண்ணாசை ஒன்றே எல்லாப் பிறவிகளுக்கும் உண்டு. எனவே, பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகிய பெண்ணாசையை இறைவன் திருவருளால் அன்றி ஒழிக்க முடியாது. இதுவேயும் அன்றி அவ்வாசை மிகவும் வலியுடையதாதலால் சிறிது அருகிலிருந்தாலும் உயிரை வந்து பற்றி மயக்கத்தைச் செய்யும். ஆதலால் இம்மாதராசை மிகமிகத் தூரத்திலே அகல வேண்டும்.

கள்ளானது குடித்தால் அன்றி மயக்கத்தை உண்டு பண்ணாது. காமமோ கண்டாலும் நினைத்தாலும் மயக்கத்தை உண்டு பண்ணும். ஆதலால் இப்பெண்ணாசையைப் போல் மயக்கத்தைத் தரும் வலியுடைய பொருள் வேறொன்றும் இல்லை.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.        --- திருக்குறள்.

தீயைக் காட்டிலும் காமத் தீ கொடியது. தீயில் விழுந்தாலும் உய்வு பெறலாம். காமத் தீயில் விழுந்தார்க்கு உய்வு இல்லை. தீயானது உடம்பை மட்டும் சுடும். காமத்தீ உடம்பையும் உயிரையும் உள்ளத்தையும் சுடும். அன்றியும் அணுக முடியாத வெப்பமுடைய அக்கினி வந்து சூழ்ந்து கொண்டால் நீருள் மூழ்கி அத்தீயினால் உண்டாகும் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். காமத் தீயானது நீருள் மூழ்கினாலும் சுடும். மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டாலும் சுடும்.

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும் - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே, குன்று ஏறி
ஒளிப்பினும் காமஞ் சுடும்.                   --- நாலடியார்.

தொடில்சுடின் அல்லது காமநோய் போல
விடில்சுடல் ஆற்றுமோ தீ,                                          --- திருக்குறள்.

தீயானது தொட்டால் தான் சுடும். காமத் தீயானது நினைத்தாலும் சுடும். கேட்டாலும் சுடும். இது வேண்டாமென்று தள்ளினாலும் ஒடிவந்து சுடும். இதுவேயும் அன்றி நஞ்சு அதனை அருந்தினால் தான் கொல்லும். இக்காமமாகிய விஷம் பார்த்தாலும் நினைத்தாலும் கொல்லும் தகையது. ஆதலால் காமமானது விஷத்தைக் காட்டிலும், கள்ளைக் காட்டிலும், தீயைக் காட்டிலும் ஏனைய கொல்லும் பொருள்களைக் காட்டிலும் மிகவும் கொடியது.

உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளினும் சுட்டிடுமு, குறுகி மற்று அதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத் தீ அதே.

நெஞ்சினும் நினைப்பரோ, நினைந்து உளார் தமை
எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல்,
விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும், ஆதலால்
நஞ்சினும் தீயது நலமில் காமமே.           --- கந்தபுராணம்.

அறம் கெடும், நிதியும் குன்றும்,
     ஆவியும் மாயும், காலன்
நிறம் கெடும் மதியும் போகி
     நீண்டதோர் நரகில் சேர்க்கும்,
மறம் கெடும், மறையோர் மன்னர்
     வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும், வேசை மாதர்
     குணங்களை விரும்பினோர்க்கே.     --- விவேகசிந்தாமணி.

காமமே குலத்தினையும் நலத்தினையும்
     கெடுக்க வந்த களங்கம் ஆகும்,
காமமே தரித்திரங்கள் அனைத்தையும்
     புகட்டி வைக்கும் கடாரம் ஆகும்,
காமமே பரகதிக்குச் செல்லாமல்
     வழி அடைக்கும் கபாடம் ஆகும்,
காமமே அனைவரையும் பகையாக்கிக்
     கழுத்து அரியும் கத்தி தானே.   --- விவேகசிந்தாமணி.

ஒக்க நெஞ்சமே! ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்,
மிக்க காமத்தின் வெம்மையால் வரும்
துக்கம் யாவையும் தூர ஓடுமே.          --- திருவருட்பா.


அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே ---

அள்ளல் - சேறு. ஏழு நரகங்களில் ஒன்று.

உலக மாயை சேறு போன்றது. அதில் காலை விட்டால் ஏறும் வழி இல்லை. "பிரஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்கின்றார் அருணை வள்ளல் கந்தர் அலங்காரத்தில். ஐம்புலன்களின் வழியே சென்று இந்த ஆன்மா படும் பாடு சொல்ல முடியாது. "கொடிய ஐவர் பராக்கு இறல் வேண்டும், மனமும் பதைப்பு அறல் வேண்டும்" என்றார் சுவாமிகள்.

ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று
தான் அலது ஒன்றைத் தான் என நினையும்
இது எனது உள்ளம், ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்பது எங்ஙனம்? முன்னம்
கல் புணை ஆகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ? இறைவ! கற்பம்

கடத்தல்யான் பெறவும் வேண்டும், கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும், நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும், நஞ்சுபொதி
உரை எயிற்று உரகம் பூண்ட
கறைகெழு மிடற்று எம் கண்ணுத லோயே.           --- பட்டினத்தார்.

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
கழப்பின் வாராக் கையுறவு உளவோ?
அதனால்,
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,
அன்பு என் பாத்தி கோலி, முன்புற
மெய் எனும் எருவை விரித்து, ங்கு ஐயம் இல்
பத்தித் தனிவித்து இட்டு, நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று
தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உள் சென்று
சாந்த வேலி கோலி, வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,
கருணை இளந்தளிர் காட்ட, அருகாக்
காமக் குரோதக் களை அறக் களைந்து,
சேமப் படுத்துழி, செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு அம் எனக்
கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்ந்து,
புண்ணிய
அஞ்செழுத்து அருங் காய் தோன்றி, நஞ்சுபொதி
காள கண்டமும், கண்ஒரு மூன்றும்,
தோள் ஒரு நான்கும், சுடர்முகம் ஐந்தும்,
பவளநிறம் பெற்று, தவளநீறு பூசி,
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்,
காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்

சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர,
எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்
செம்மாந்து இருப்ப, சிலர் இதின் வாராது,
மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி,

காமக் காடு மூடி, தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறு அலைத்து ஒழுக,
இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர,
இச்சைவித்து உகுத்துழி யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,
பொய் என் கவடுகள் போக்கி, செய்யும்
பாவப் பல்தழை பரப்பி, பூவெனக்
கொடுமை அரும்பி, கடுமை மலர்ந்து,
துன்பப் பல்காய் தூக்கி, பின்பு

மரணம் பழுத்து, நரகிடை வீழ்ந்து,
தமக்கும் பிறர்க்கும் உதவாது
இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே.        --- பட்டினத்தார்.

கருத்துரை

முருகா! ஐம்புல வேடரால் அலைப்புண்டு அடியேன் படும் துன்பத்தை நீக்கி, திருவடி இன்பத்தை அடியேனுக்கு அருள்.






                 


1 comment:

  1. இவ்வளவு அருமையான கருத்துக்களை தொகுத்து வழங்கிய ஆசிரியருக்கு நன்றி.

    முருகப்பெருமான் அவருக்கு இகபர சௌபாக்கியங்களை அருளுமாறு வேண்டுகின்றோம்.

    ReplyDelete

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...