வெள்ளிகரம் - 0674. பொருவன கள்ள





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பொருவன கள்ள (வெள்ளிகரம்)
  
முருகா!
மாதர் மயிலில் உருகி அழியாமல்
தேவரீரது திருவடியில் உருக அருள்வாய்.


தனதன தய்ய தனதன தய்ய
     தனதன தய்ய ...... தனதான


பொருவன கள்ள இருகயல் வள்ளை
     புரிகுழை தள்ளி ...... விளையாடும்

புளகித வல்லி யிளகித வல்லி
     புரியிள முல்லை ...... நகைமீதே

உருகிட வுள்ள விரகுடை யுள்ள
     முலகுயி ருள்ள ...... பொழுதேநின்

றுமைதரு செல்வ னெனமிகு கல்வி
     யுணர்வொடு சொல்ல ...... வுணராதோ

மருவலர் வள்ளி புரமுள வள்ளி
     மலைமற வள்ளி ...... மணவாளா

வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை
     மரகத நல்ல ...... மயில்வீரா

அருவரை விள்ள அயில்விடு மள்ள
     அணிவயல் வெள்ளி ...... நகர்வாழ்வே

அடையலர் செல்வ மளறிடை செல்ல
     அமர்செய வல்ல ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பொருவன கள்ள இருகயல், வள்ளை
     புரி குழை தள்ளி ...... விளையாடும்,

புளகித வல்லி, இளகுஇத வல்லி,
     புரி இள முல்லை ...... நகைமீதே,

உருகிட உள்ள விரகு உடை உள்ளம்,
     உலகு உயிர் உள்ள ...... பொழுதே, நின்று

உமை தரு செல்வன் என மிகு கல்வி,
     உணர்வொடு சொல்ல ...... உணராதோ?

மரு அலர் வள்ளிபுரம் உள வள்ளி-
     மலை மற வள்ளி ...... மணவாளா!

வளர்புவி எல்லை அளவிடு தொல்லை
     மரகத நல்ல ...... மயில்வீரா!

அருவரை விள்ள அயில்விடு மள்ள!
     அணிவயல் வெள்ளி ...... நகர்வாழ்வே!

அடையலர் செல்வம் அளறு இடை செல்ல
     அமர்செய வல்ல ...... பெருமாளே.


பதவுரை


      மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளிமலை மறவள்ளி மணவாளா --- நறுமணம் மிக்க மலர்கள் மலர்ந்துள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளிமலையில் இருக்கும் குறவர் குலமகளாகிய வள்ளியநாயகியின் மணவாளரே!

      வளர் புவி எல்லை அளவிடும் --- வளர்கின்ற இந்தப் பூமியின் எல்லை முழுதையும் அளவிட்ட,

     தொல்லை மரகத நல்ல மயில்வீரா --- பழைய பச்சை நிறமுள்ள அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட பெருவீரரே!

      அருவரை விள்ள அயில்விடும் மள்ள --- அரிய கிரவுஞ்ச மலை பொடிபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உடையவரே!

     அணி வயல் வெள்ளிநகர் வாழ்வே --- அழகிய வயல்கள் சூழ்ந்த வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய செல்வமே!

      அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர்செய வல்ல பெருமாளே --- பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கி அழியும்படி போர் புரிய வல்ல பெருமையில் மிக்கவரே!

      பொருவன கள்ள இருகயல் வள்ளை புரிகுழை தள்ளி விளையாடும் --- வள்ளிக் கொடி போன்ற காதுகளை போரிட்டுத் தாக்கி விளையாடுவது போல் அமைந்த கள்ளத்தனம் உள்ள கயல் மீன் போன்ற இருகண்கள் அமைந்துள்ள

     புளகித வல்லி, இளகு இத வல்லி புரிஇள முல்லை நகை மீதே --- புளகாங்கிதம் கொண்ட, கொடி போல் இடை அமைந்த, இளம் பெண்கள் முல்லை அரும்பு போன்ற பற்கள் தெரியப் புரியும் சிறுநகையில்

      உருகிட உள்ள விரகு உடை உள்ளம் --- உருகி மகிழும்  எனது உள்ளமானது,

      உலகு உயிர் உள்ள பொழுதே நின்று --- இவ்வுலகில் உயிரோடு வாழும் காலத்திலேயே,

     உமை தரு செல்வன் என --- உமாதேவியார் பெற்றெடுத்த செல்வமே என்று

     மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ --- மிகுந்த கல்வியால் பெற்ற உணர்ச்சியால் தேவரீருடைய புகழைச் செல்லுவதற்கு உணர்வு வராதோ?


பொழிப்புரை


     நறுமணம் மிக்க மலர்கள் மலர்ந்துள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளிமலையில் இருக்கும் குறவர் குலமகளாகிய வள்ளியநாயகியின் மணவாளரே!

     வளர்கின்ற இந்தப் பூமியின் எல்லை முழுதையும் அளவிட்ட, பழைய பச்சை நிறமுள்ள அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட பெருவீரரே!

         அரிய கிரவுஞ்ச மலை பொடிபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உடையவரே!

     அழகிய வயல்கள் சூழ்ந்த வெள்ளிகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய செல்வமே!

     பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கி அழியும்படி போர் புரிய வல்ல பெருமையில் மிக்கவரே!

         வள்ளிக் கொடி போன்ற காதுகளை போரிட்டுத் தாக்கி விளையாடுவது போல் அமைந்த கள்ளத்தனம் உள்ள கயல் மீன் போன்ற இருகண்கள் அமைந்துள்ள, புளகாங்கிதம் கொண்ட, கோடி போல் இடை அமைந்த, இளம் பெண்கள் முல்லை அரும்பு போன்ற பற்கள் தெரியப் புரியும் சிறுநகையில் உருகி மகிழும்  எனது உள்ளமானது, இவ்வுலகில் உயிரோடு வாழும் காலத்திலேயே, உமாதேவியார் பெற்றெடுத்த செல்வமே என்று மிகுந்த கல்வியால் பெற்ற உணர்ச்சியால் தேவரீருடைய புகழைச் செல்லுவதற்கு உணர்வு வராதோ?


விரிவுரை

பொருவன கள்ள இருகயல் வள்ளை புரிகுழை தள்ளி விளையாடும் ---

குழைகளை அணிந்து வள்ளிக் கொடி போன்று அமைந்துள்ள காதுகளை போரிட்டுத் தாக்கி விளையாடுவது போல், காதளவு ஓடிய கள்ளத்தனம் பொருந்திய இருகண்கள். கயல்மீன்களைப் போன்று உள்ளதாகக் காமுகர் கருதுவர்.

காது அளவு ஓடிய கண்கள். மீனைப் போன்று உள்ள கண்கள் காது அளவு ஓடி, மானைப் போல மருண்டு பிறழ்ந்து பிறழ்ந்து நோக்கும்.

வள்ளைக் கொடி போன்றுள்ள காது என்பார் காமுகர். உண்மையில் காது வள்ளைக் கொடியே அல்ல.

"உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்" என்கின்றார் பட்டினத்து அடிகள். உள்ளே குறும்பி என்னும் அழுக்கு ஒழுகுகின்ற காதை வள்ளைத் தண்டின் வளமை பொருந்தியதாகக் கூறுவர் காமுகர்.

"எய்த்தல் இலா வள்ளை என்றாய் வார் காது, வள்ளை தனக்கு உள் புழையோடு உள்ளும் நரம்பின் புனைவும் உண்டேயோ?" என வினவுகின்றார் வள்ளல் பெருமான்.

மனத்தில் உள்ள வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்தும் திருட்டுப் பார்வை உடையவர்கள் விலைமாதர்கள்.


புளகித வல்லி, இளகு இத வல்லி புரிஇள முல்லை நகை மீதே உருகிட உள்ள விரகு உடை உள்ளம் ---

விலைமாதரின் இடையானது இளங்கொடிபோல் உள்ளதாக எண்ணிக் காமுகர் மயங்குவர். விலைமாதர் தம்மை அவ்வாறு அழகுபடுத்திக் கொண்டு கயங்க வைப்பர்.

"வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத் துப்பு முருக்கின் தூய்மலர் என்றும், அன்னமும் கறியும் அசைவு இட்டு இறக்கும் முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்" என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"பொற்பு ஒன்றும் சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய், மாதர் இடைச் சிங்கம் எனில் காணத் திரும்பினையே" என்றும், "வெள்ளை நகை முல்லை என்றாய், முல்லை முறித்து ஒருகோல் கொண்டு நிதம் ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ?" என்றும் வள்ளல்பெருமான் பாடுகின்றார்.

புற அழகால் ஆடவரை அவர்பால் உள்ள பொருளின் பொருட்டு மயக்குகின்ற விலைமாதரின் சிறுநகையால் ஆடவரின் உள்ளமானது உருகும்.


உலகு உயிர் உள்ள பொழுதே நின்று உமை தரு செல்வன் என மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ ---

விலைமாதரின் அழகில் மயங்கி அவர் தரும் கலவியை வேண்டி உருகுகின்ற உள்ளத்தால் உயிருக்கு எள்ளளவும் நன்மை இல்லை.

எம்பெருமான் முருகனை உமாதேவியார் பெற்றருளிய செல்வமே என்று போற்றி வணங்கினால் உயிருக்கு நலம் விளையும்.

நில்லாதனவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு கூடாது. தோன்றி அழியக்கூடிய பொருள்களால் பெறப்படும் இன்பமானது உள்ளது போல் தோன்றி, பின்பு இல்லாமல் ஆகி, துன்பத்தையே மிகுக்கும்.

அருள் நூல்களை ஓதி, நூலறிவு பெற்று, அவை சொன்ன நெறியிலே நாளும் ஒழுகி வர, நூலறிவானது நுண்ணறிவாக மாறும். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுதல் வேண்டும்.

சொல்பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்து இருளை வாங்காதவன் இறைவன். மனத்தை மூடி உள்ள அஞ்ஞானமாகிய இருள் நீங்கி, ஞானமாகிய ஒளி நிறைய வேண்டுமானால், இறைவனைக் காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி ஓதி வழிபட்டு வரவேண்டும். அதுவே உயிரை நன்னெறிக்கு உய்ப்பது ஆகும்.

அதற்காகத் தான் இறைவனால் இந்த உடம்பு வழங்கப்பட்டுள்ளது. இது பெறுதற்கு அரிய பிறவி ஆகும். அரிது "அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றார் ஔவைப் பிராட்டியார்.

"பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்று, நின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன்" என்றார் அருணை அடிகள் கந்தர் அலங்காரத்தில்.

பிறவியின் நோக்கமே பிறப்பை அறுப்பதுதான். அது மனிதப் பிறப்பு ஒன்றால் தான் இயலும். மனிதர்களிலும் உயர்ந்த பிறப்பாகிய தேவர்களால் கூட அதைச் சாதிக்க முடியாது. தேவப்பிறப்பு என்பது, முற்பிறவிகளில் ஈட்டிய புண்ணியத்தின் பெரும்பயனை அடைவதற்கு மட்டுமே உள்ள பிறப்பு. அதனால் தான், புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே. இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கி, திருமால் விருப்புக் கொள்கின்றான். மலரவன் ஆகிய பிரமதேவன் ஆசைப்படுகின்றான். ஆனால், திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானோ, அவனுடைய மலர்ந்த கருணை என்னும் அருட்சத்தியாகிய உமாதேவியாரோடு, இந்த அவனியில் புகுந்து மனிதர்களாகிய நம்மை எல்லாம் ஆட்கொள்கின்றான்.

புவனியில் போய் பிறவாமையில், நாள் நாம்
போக்குகின்றோம் அவமே, இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கி,
திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம்
அவன் விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப்படவும்,
நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!         --- மணிவாசகம்.

இன்பத்து உளே பிறந்து, இன்பத்து உளே வளர்ந்து,
இன்பத்து உளே நினைக்கின்ற இது மறந்து,
துன்பத்து உளே சிலர் சோறொடு கூறை என்று
துன்பத்து உளே நின்று தூங்குகின்றார்களே.    --- திருமூலர்.
             
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்,
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்,
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது ஓர் பேர் இழந்தாரே.       --- திருமூலர்.
         
ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்பு உறு காலத்து,
தீர வருவது ஓர் காமத் தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே.      --- திருமூலர்.

மேற்கூறிய மூன்று திருமந்திரப் பாடல்கள் திருமந்திரம் என்னும் அருள் நூலில் ஏழாவது தந்திரத்தில், "கேடு கண்டு இரங்கல்" என்னும் தலைப்பில் திருமூல நாயனார் நமக்காகப் பாடி அருளியவை ஆகும். உலகியல் இன்பத்தில் திளைத்து, கேடு அடைகின்ற மனிதர்களைப் பார்த்து இரக்கம் மேலீட்டால் திருமூல நாயனார் பாடி அருளியவை இவை.

இப்பாடல்களின் கருத்தைச் சற்று ஆழ்ந்து நோக்குவோம்.

மக்கள் யாவரும் பிறக்கும்பொழுதே இன்பத்தில் பிறந்து, வளரும் பொழுதும் இன்பத்திலே வளர்ந்து, இன்பத்திலே திளைக்கின்றவர்களே. திருவருளால் பிறந்தோம். திருவருளால் வளர்ந்தோம். திருவருளால் இன்புற்று வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும், சிலர் இதன் அருமையை அறியாது, தாங்கள் துன்பத்திலே ஆழ்ந்து இருப்பதாக எண்ணிக் கொண்டு, அந்தத் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழி இதுவே என்று மாறுபட்டு உணர்ந்து, உணவு, உடை என்று ஆசை கொண்டு, அவற்றைப் பெறவேண்டி அல்லல் மிக அடைந்து, அந்த அல்லலை நீக்கிக் கொள்ள அறியாமல், செய்வது இன்னது என்று அறியாமல் சோம்பிக் கிடக்கின்றார்கள்.

பெறுவதற்கு அருமையான இந்த மானிடப் பிறவியைப் பெற்றிருந்தும், அதைக் கொண்டு, பெறுவதற்கு அருமையான இறைவன் திருவடியை வழிபட்டு, அதன் பயனாக வீட்டு இன்பத்தைப் பெற இயலாதவர்களாகிய இந்தப் பிராணிகள் பெறுதற்கு அரிய பேற்றினை இழந்து நிற்கின்றார்களே. பிராணிகள் என்றது, மக்களாக எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழாமல், மக்களை ஒழித்த ஏனைய உயிர்கள் போல் வாழுகின்றார்கள் என்பதே. ஆறாவது அறிவு என்னும் மன அறிவு ஆகிய பகுத்தறிவு இல்லாதவர்கள் எல்லாம் பிராணிகள். மனித வடிவில் இருந்தாலும் பிராணன் மட்டுமே உள்ளவர்கள்.

அந்தப் பிராணிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், எல்லோரிடத்தும் நட்பையே பாராட்டுகின்ற மனமும், எந்தச் செயலிலும் சோர்வு அடையாத ஊக்கமும், சுற்றத்தார் எல்லாரிடமும் செலுத்துகின்ற அன்பும் குறைவு இன்றி இருப்பதால், தாமும், பிறரும், இது நல்ல பருவம் என்று மகிழ்ச்சி அடையக் கூடிய இளமைப் பருவத்தில், அவை எல்லாவற்றையும், உமை ஒரு பாகனாகிய இறைவனுக்குப் பணிசெய்வதில் பயன்படுத்தி, அவனுடைய இன்பத்தைப் பெற மறந்து, இறைவன் கொடுத்த நலங்கள் எல்லாம் விரைந்து கெடுவதற்கு ஏதுவாகிய சிற்றின்பத்தைப் பெறுகின்ற செயல்களிலேயே சிலர் ஈடுபட்டு ஒழிகின்றார்களே. இது என்ன அறியாமை.

இந்த நிலையினை, மணிவாசகப் பெருமான், "பெற்ற அது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின் வெற்று அடியேன்" என்று காட்டினார். பெற இந்த உடம்பைக் கொண்டு, ஒழிக்க வேண்டிய பிழைகளைப் பெருக்குகின்றோம். பெருக்க வேண்டிய அன்பினைச் சுருக்குகின்றோம்.

"பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சி, சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட வள்ளலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணை அடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே"

எனப் பட்டினத்து அடிகள் அறிவுறுத்துகின்றார். வெறும் போகத்தைத் தருகின்ற மாதரைப் போற்றாமல், அழியாத நிலையாகிய சிவபோகத்தைத் தருகின்ற இறைவனைப் போற்றுங்கள்.

இந்த உண்மையைத் திருவிசைப்பாவில்,

"தத்தை அங்கனையார் தங்கள்மேல் வைத்த
    தயாவை, நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒருகூறு உன்கண் வைத்தவருக்கு
    அமர் உலகு அளிக்கும் நின் பெருமை,
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும்
    பிழைத்தவை பொறுத்து அருள் செய்யும்
கைத்தலம், அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை
    கொண்ட சோளேச்சரத்தானே"

என்று பாடிக் காட்டினார் கருவூர்த் தேவர்.

பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை, கொற்ற மயூரம் என்கிலை, வெட்சித் தண்டைக்
கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?. ---  கந்தர் அலங்காரம்.

வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே.                  ---  திருவாசகம்.

மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.              --- பட்டினத்தார்.
    

வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில்வீரா ---

மயிலின் ஆற்றலை, அருணகிரிநாதப் பெருமான் பின்வருமாறு பாடி உள்ளதை அறியலாம். பழத்தைப் பெறவேண்டி, விநாயகப் பெருமான் சிவனை வலம் வரும் அளவிலேயே இந்த உலக முழுதையும் மயிலில் ஏறி எம்பெருமான் முருகன் வலம் வந்தான். அது தொல்லை மரகத மயில் ஆகும்.

பின்னர் இந்திரன் மயில் ஆனான்.  அதன் பின்னர் சூரபதுமன் மயிலாக ஆனான். அந்தச் சூர் மயிலையும் உலக முழுதும் நடாத்தியவர் முருகப் பெருமான்.

சந்தான புஷ்ப பரிமள, கிண் கிணீமுகச்
சரண யுகள அமிர்த ப்ரபா
சந்த்ரசேகர, மூஷிக ஆரூட, வெகுமோக
சத்யப்ரிய ஆலிங்கனச்

சிந்தாமணிக் கலச கரகட கபோல, த்ரி
அம்பக விநாயகன், முதல்
சிவனைவலம் வரும்அளவில், உலகு அடைய நொடியில்வரு
சித்ரக் கலாப மயிலாம்....                 --- மயில் விருத்தம்.

தீரப் பயோததி திக்கும் ஆகாயமும்
ஜகதலமும் நின்று சுழல,
திகழ்கின்ற முடி மவுலி சிதறி விழ, வெஞ்சிகைத்
தீக்கொப்புளிக்க,வெருளும்

பாரப் பணாமுடி அனந்தன்முதல் அரவு எலாம்
பதை பதைத்தே நடுங்க,
படர்ச் சக்ர வாளகிரி துகள்பட, வையாளி வரு
பச்சை ப்ரவாள மயிலாம்                 --- மயில் விருத்தம்.

வடகனக சயிலம் முதலிய சயிலம் என, நெடிய
   வடிவுகொளும் நெடியவிறல் மருவாரை
வகிரும் ஒரு திகிரிஎன, மதிமுதிய பணிலம் என
   மகரசல நிதிமுழுகி விளையாடி,

கடல் உலகை அளவுசெய வளரும் முகில் என, அகில
   ககன முகடு உற நிமிரும் முழுநீலக்
கலப கக மயில் கடவி, நிருதர்கஜ ரததுரக
   கடகமுடன் அமர்பொருத பெருமாளே.    --- (குடருமல சலமுமிடை) திருப்புகழ்.

சூரபதுமன் போரில் மாயத்தினாலே சக்கரவாகப் பறவையாக வடிவுகொண்டு எதிர்ந்த போது, இந்திரன் மயில் உருக் கொள்ள, முருகக்கடவுள் அதன்மேல் ஏறிப் போர் செய்து சூரனது மாய உருவைப் பிளந்தார். இறுதியில் மாயத்தால் பெரிய மாமரமாய் நின்ற சூரனது உருவை, முருகப் பெருமானின் வேலாயுதம் இருகூறாகப் பிளந்தது. அவ்விரு கூறுகளில் ஒன்று மயிலும் மற்றொன்று சேவலுமாகி வர, மயிலை ஊர்தியாகவும் சேவலைக் கொடியாகவும் சுவாமி கொண்டு ஆட்கொண்டனர். அப்போது முருகப் பெருமான், இந்திரனாகிய மயிலை விட்டு இறங்கி, சூரனாகிய மயிலில் ஏறி, எம்மைச் சுமப்பாயாக என்று ஆணையிட்டு, இந்த மண்ணுலகையும், வானுலகையும் வலம் வந்தார். இது கந்தபுராணத்தில் உள்ளது.

இந்திரன் அனைய காலை எம்பிரான் குறிப்பும், தன்மேல்
அந்தம் இல்அருள் வைத்துள்ள தன்மையும் அறிந்து நோக்கி,
சுந்தர நெடுங்கண் பீலித் தோகைமா மயிலாய்த் தோன்றி
வந்தனன், குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான்.

ஆட்படு நெறியில் சேர்த்தும் ஆதியின் ஊழ்தந்து உய்க்கத்
தாட்படை மயூரம் ஆகி, தன்னிகர் இல்லாச் சூரன்
காட்படை உளத்தன் ஆகிக் கடவுளர் இரியல் போக
ஞாட்பியல் செருக்கில் வந்தான், ஞானநாயகன் தன் முன்னம்.
            
சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை
ஊர்தியின் இருக்கை நீங்கி, உணர்வு கொண்டு ஒழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞை ஏறி, சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும் பரி என நடாத்தல் உற்றான்.        ---  கந்தபுராணம்.


அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர்செய வல்ல பெருமாளே ---

இந்த வரிகள் முன்னர் "குவலயம் மல்கு" எனத் தொடங்கும் திருப்புகழிலும் பயின்று வந்துள்ளது.

பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கி அழியும்படி செய்தவர் முருகப் பெருமான்.  மகேந்திரபுரியை மண்ணை விழுங்குவது போல் விழுங்குமாறு கருணைக் கடல் ஆகிய முருகப் பெருமான் பணிக்க, கடல் அரசனான வருணனும் அவ்வாறே செய்தான் என்கின்றது கந்தபுராணம்.

கருணை அம்கடல் ஆகியோன் கனைகடற்கு இறையாகும்
வருணன் மாமுகம் நோக்கியே, "வெய்ய சூர் வைகுற்ற
முரண் உறும் திறல் மகேந்திர நகரினை முடிவு எல்லைத்
தரணி ஆம் என உண்குதி, ஒல்லையில் தடிந்து" என்றான்.  

என்ற மாத்திரை, சலபதி விழுமிது என்று இசைவு உற்று,
துன்று பல் உயிர் தம்மொடு மகேந்திரத்து தொல் ஊரை
அன்று வன்மைசேர் புணரியுள் அழுத்தினன் அவனிக் கீழ்                            
நின்று மாயவன் அடு உலகு உண்டிடு நெறியே போல்.

கருத்துரை

முருகா! மாதர் மயிலில் உருகாமல் தேவரீரது திருவடியில் உருக அருள்வாய்.







No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...