திருப் பெருவேளூர்




திருப் பெருவேளூர்
(மணக்கால் ஐயம்பேட்டை)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் "மணக்கால் ஐயம்பேட்டை" என்று அழைக்கப்படுகின்றது.

         திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை, வடகண்டம் ஊர்களைத் தாண்டி மணக்கால் அய்யம்பேட்டை என்ற இடத்தில் இறங்கி அரை கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.

     திருத்தலையாலங்காடு என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இறைவர்               : அபிமுக்தீசுவரர், பிரியாஈசுவரர்.

இறைவியார்           : அபின்னாம்பிகை, ஏலவார்குழலி.

தல மரம்                : வன்னி.

தீர்த்தம்                  : சரவணப் பொய்கை.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - அண்ணாவும் கழுக்குன்றும்.
                                      2. அப்பர்   - மறையணி நாவினானை.

         தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து போது,  அமுதமானது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்யத் திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் எனக்  கூறப்படுகின்கிறது. திருமால் இங்கு தனிச் சன்னதியில் வைகுந்த நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார்.

       தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் வழிபட்ட செய்த திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் பெருவேளூர் ஒன்றாகும். முருகன் இத்திருத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்றதாகக் கூறப்படுகின்றது. முருகன் வழிபட்ட செய்ததால் இத்திருத்தலம் பெருவேளூர் எனப்பட்டது.

      கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்று. மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது பிரதான விநாயகர் சந்நிதி, அதையடுத்து வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதி, அடுத்து யோகசண்டிகேஸ்வரர் சந்நிதி ஆகியவை உள்ளன. கிழக்கு வெளிப் பிராகாரத்தில் இடதுபுறம் மாடக்கோயிலுக்குச் செல்லும் படிகள் உள்ளன. மாடக் கோயிலில் உள்ளே இடதுபக்கம் சிவன் சந்நிதியும், நடுவில் முருகன் சந்நிதியும், வலது பக்கம் அம்மன் சந்நிதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நேர் எதிரில் சாளரம் வைக்கப்பட்டுள்ளது. கோட்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மிருகண்டு மகரிஷி, துர்க்கை முதலியோர் உள்ளனர். துர்க்கைச் சந்நிதி தனிச் சந்நிதியாகவுள்ளது. சண்டேசுவரர் உருவம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

      வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் தனி சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.

     இந்த வெளிப் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு இலிங்கம் சரஸ்வதீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகிறது. ஒரு முறை ஊமைச் சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்கு பேசும் சக்தியை தந்தார் என கோயில் வரலாறு கூறுகின்றது.

      இத்திருத்தல விநாயகர் கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார்கள். கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
  
     காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தானம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், " உருக்க வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலைப் பெருவேளூர் இன்பப் பெருக்கே" என்று போற்றி உள்ளார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 573
நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
         நீலமிடற்று அருமணியை வணங்கிப் போற்றி,
பாடுஒலிநீர்த் தலையாலங் காடு மாடு,
         பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி,
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி,
         நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடி,
தேடுமறைக்கு அரியார்தம் விளமர் போற்றி,
         திருஆரூர் தொழநினைந்து சென்று புக்கார்.

         பொழிப்புரை : நிலைபெறும் `திருவாஞ்சியத்தில்\' விரும்பி எழுந்தருளியிருக்கும், மூன்று கண்களும் திருநீலகண்டமும் உடைய அரிய மணியான இறைவரை வணங்கிப் போற்றிப் பெருமை பொருந்திய ஒலியையுடைய நீர் சூழ்ந்த திருத்தலையாலங்காடும், அதன் அருகிலுள்ள இறைவரின் திருப்பெருவேளூரும் பாடி, நாடும் புகழை உடைய ஒப்பில்லாத திருச்சாத்தங்குடியில் சென்று அடைந்து, இறை வரின் திருக்கரவீரத்தையும் விரும்பிப் பாடியருளித் தேடுகின்ற மறைகளுக்கும் எட்டாத இறைவரின் திருவிளமரையும் போற்றிப் பின் திருவா ரூரைத் தொழுவதற்கு நினைந்து சென்று அந்நகரில் புகுந்தார்.

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

திருவாஞ்சியம் - வன்னிகொன்றை (தி.2 ப.7) - இந்தளம்.

திருப்பெருவேளூர் - அண்ணாவும் (தி.3 ப.64) - பஞ்சமம்.

திருக்கரவீரம் - அரியும் நம்வினை (தி.1 ப.58)- பழந்தக்கராகம். திருவிளமர் - மத்தகம் அணிபெற (தி.3 ப.88) - சாதாரி.

திருத்தலையாலங்காட்டிலும் திருச்சாத்தங்குடியிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.


3. 064     திருப்பெருவேளூர்           பண் - பஞ்சமம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அண்ணாவும் கழுக்குன்றும் ஆயமலை அவைவாழ்வார்,
விண்ணோரும் மண்ணோரும் வியந்துஏத்த அருள்செய்வார்,
கண்ஆவார் உலகுக்கு, கருத்துஆனார், புரம்எரித்த
பெண்ஆண்ஆம் பெருமானார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் திருவண்ணாமலையும் , திருக்கழுக் குன்றமும் ஆகிய மலைகளில் தம்மை அடைந்தோர்க்கு வாழ்வுதரும் பொருட்டு எழுந்தருளியுள்ளார் . விண்ணுலகத்தவரும், மண்ணுலகத்தவரும் வியந்து போற்ற அருள்செய்வார். உலகிற்குக் கண்ணாக விளங்குபவர். வழிபடுபவர்களின் கருத்தில் இருப்பவர். முப்புரங்களை எரித்தவர், பெண்ணும், ஆணுமாக விளங்கும் அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தைப் பிரியாது வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 2
கருமானின் உரிஉடையர், கரிகாடர், இமவானார்
மருமானார் இவர்என்று மடவாளோடு உடன்ஆவர்,
பொருமான விடைஊர்வது உடையார்,வெண் பொடிப்பூசும்
பெருமானார், பிஞ்ஞகனார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் கரியமானின் தோலை ஆடையாக உடுத்தவர் . சுடுகாட்டில் ஆடுபவர் . இமவான் மருமகன் இவர் என்று சொல்லும்படி உமாதேவியை உடனாகக் கொண்டவர் . போர்புரிய வல்ல பெருமையையுடைய இடப வாகனத்தில் ஊர்ந்து செல்பவர் . திருவெண்ணீற்றினைப் பூசியவர். பிஞ்ஞகன் என்று போற்றப்படும் அச்சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரிய நாதர் ஆவார் .


பாடல் எண் : 3
குணக்கும்தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்
கணக்குஎன்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும்,
வணக்கம் செய் மனத்தராய் வணங்காதார் தமக்கு என்றும்
பிணக்கம் செய் பெருமானார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என எத்திசையிலுள்ளோர்க்கும் ஒன்றுபோல் அருள்புரிவார். அஞ்ஞானத்தால் நாள்களைக் கழிப்பவர்கட்கும், மெய்ஞ்ஞானத்தால் தம்மைப் போற்றுவார்கட்கும் , மனத்தால் சிந்தித்துக் காயத்தால் தம்மை வழிபடும் அடியவர்கட்கும் அருள்புரிபவர் . வணங்கிப் போற்றாதவர்கட்கு மாறுபாடாக விளங்குபவர் . அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .


பாடல் எண் : 4
இறைக்கொண்ட வளையாளோடு இருகூறாய், ஒருகூறு
மறைக்கண்டத்து இறைநாவர், மதில்எய்த சிலைவலவர்,
கறைக்கொண்ட மிடறுஉடையர், கனல்கிளரும் சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை : சிவபெருமான், முன்கையில் வளையலணிந்த உமாதேவி ஒரு கூறாகவும், தாம் ஒரு கூறாகவும் இருகூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவர். வேதங்களை அருளிச் செய்த நாவுடையர். மும்மதில்களை எய்த மேருமலையை வில்லாக உடையவர். நஞ்சை அடக்கியதால் கறைகொண்ட கண்டத்தர். நெருப்புப்போல் மிளிரும் ஒளிரும் சிவந்த சடையில் பிறையணிந்த பெருமானாகிய அவர் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.


பாடல் எண் : 5
விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசி,
குழையாதார், குழைவார்போல் குணம்நல்ல பலகூறி,
அழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்குஎன்றும்
பிழையாத பெருமானார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை : உலகப் பொருள்களில் பற்றுக் கொண்டு விழையாமல் இறைவன்பால் விழைந்து பலவாறு போற்றி , உலகியலில் மருள்கொண்டு குழையாது , இறைவனின் திருவருளில் குழைந்து அவன் புகழ்களைப் பலவாறு எடுத்துக்கூறி, ` பெருமானே ! அருள் புரிவீராக !` என அழைத்தும், அரற்றியும் , அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்குபவர்கட்கு என்றும் தவறாது உடனே அருள்புரியும் சிவ பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .



பாடல் எண் : 6
விரித்தார்நான் மறைப்பொருளை, உமைஅஞ்ச விறல்வேழம்
உரித்தாராம், உரிபோர்த்து, மதின்மூன்றும் ஒருகணையால்
எரித்தாராம் இமைப்பளவில், இமையோர்கள் தொழுது இறைஞ்சப்
பெருத்தார்,எம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் நான்மறைகளை விரித்துப் பொருள் உரைத்தவர் . உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் . மும்மதில்களையும் ஓர் அம்பினால் இமைக்கும் அளவில் எரித்தவர் . தேவர்கள் வணங்கிப் போற்ற விசுவரூபம் கொண்ட எம்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .


பாடல் எண் : 7
மறப்புஇலா அடிமைக்கண் மனம்வைப்பார், தமக்குஎல்லாம்
சிறப்பில்ஆர் மதில்எய்த சிலைவல்லார் ஒருகணையால்,
இறப்புஇலார், பிணிஇல்லார், தமக்குஎன்றும் கேடுஇலார்,
பிறப்புஇலாப் பெருமானார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை : இறைவர் தம்மை மறவாது தமக்கு அடியவர்களாய் விளங்குபவர்கள் மனத்தில் வீற்றிருப்பவர் . சிறப்பில்லாத பகையசுரர்களின் மும்மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு , அக்கினியைக் கணையாக எய்து நெருப்புண்ணும்படி அழித்தவர் . அவர் இறப்பற்றவர் . நோயில்லாதவர் . கேடு இல்லாதவர் . பிறப்பில்லாத அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

பாடல் எண் : 8
எரியார்வேல் கடல்தானை இலங்கைக்கோன் தனைவீழ
முரிஆர்ந்த தடந்தோள்கள் அடர்த்துஉகந்த முதலாளர்,
வரிஆர்வெஞ் சிலைபிடித்து மடவாளை ஒருபாகம்
பிரியாத பெருமானார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை :நெருப்புப் போல் சிவந்த வேற்படை உடைய சேனைகளைக் கடல்போல் விரியப் பெற்றுள்ள இராவணன் அலறுமாறு , வலிமை வாய்ந்த அவனுடைய அகன்ற தோள்களை நெரித்துப் பின்னர் அவன் சாமகானம் பாடக் கேட்டுகந்த முதல்வரான சிவபெருமான் , கட்டுக்களையுடைய கொடிய வில்லேந்தி , உமா தேவியைத் தம்திருமேனியின் ஒருபாகமாகப் பிரியாது பெற்று , திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .


பாடல் எண் : 9
சேண்இயலும் நெடுமாலும் திசைமுகனும் செருஎய்திக்
காண்இயல்பை அறிவிலராய்க் கனல்வண்ணர், அடியிணைக்கீழ்
நாணிஅவர் தொழுதுஏத்த, நாணாமே அருள்செய்து,
பேணியஎம் பெருமானார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை :திருவிக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும் , பிரமனும் செருக்குற்றுத் தாமே தலைவர் எனக் கருதி இறைவனைத் தேட , அவனைக் காணும் முறையை அறியாதவராய் , நெருப்பு வண்ணமாய் நின்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் நாண முற்று நின்று தொழுது போற்ற , அவர்களின் நாணத்தைப் போக்கி அருள்செய்து பாதுகாத்த அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .


பாடல் எண் : 10
புற்றுஏறி உணங்குவார், புகைஆர்ந்த துகில்போர்ப்பார்,
சொல்தேற வேண்டாநீர், தொழுமின்கள், சுடர்வண்ணம்,
மல்தேரும், பரிமாவும், மதகளிறும், இவைஒழியப்
பெற்றுஏறும் பெருமானார், பெருவேளூர் பிரியாரே.

         பொழிப்புரை : புற்றேறும்படிக் கடுமையான தவத்தால் உடம்பை வாட்டும் சமணர்களும் , மஞ்சட்காவியூட்டிய ஆடையை அணியும் புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களை நீங்கள் ஏற்க வேண்டா . நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையவனும் , தேரும் , குதிரையும் , யானையும் வாகனமாகக் கொள்ளாது , இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள தலைவனுமான , திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதனை நீவிர் தொழுது வணங்குங்கள் .


பாடல் எண் : 11
பைம்பொன்சீர் மணிவாரி, பலவும்சேர் கனிஉந்தி,
அம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவேளூர்,
நம்பன்தன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
சம்பந்தன், தமிழ்வல்லார்க்கு அருவினைநோய் சாராவே.

         பொழிப்புரை : அழகிய பொன்னையும் , சிறந்த மணிகளான இரத்தினங்களையும் , பலவகையான கனிகளையும் அடித்துக் கொண்டுவரும் காவிரியில் , பொன்னாலாகிய அழகிய ஆபரணங்களை அணிந்த , நீராடும் மகளிர்கள் மிகுந்த திருப்பெருவேளூரில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிஅருளிய வேதம்வல்ல ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்களை அருவினைகளும், அவற்றால் வரும் பிறவிநோயும் சாரா .

                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 217
பெருவாச மலர்ச்சோலைப் பெருவேளூர் பணிந்து ஏத்தி,
முருகு ஆரும் மலர்க்கொன்றை முதல்வனார் பதிபிறவும்,
திருஆரும் விளமருடன் சென்று இறைஞ்சி, வாகீசர்
மருவார்ஊர் எரித்தவர் தம் திருஆரூர் வந்து அடைந்தார்.

         பொழிப்புரை : நாவரசர் நறுமணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்பெருவேளூரைப் போற்றி, வாசனையுடைய கொன்றை மலர்களை அணிந்த இறைவரின் பிற பதிகளையும், திருவிளமரையும் சென்று வணங்கிப், பகைவரின் முப்புரங்களையும் எரித்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருவாரூருக்கு வந்து சேர்ந்தார்.

         1. திருப்பெருவேளூர் - `மறையணிநாவினானை` (தி.4 ப.60)- திருநேரிசை.

         2. திருவிளமர் - இப்பதிக்குரிய பதிகம் கிடைத்திலது.

         பிற பதிகள் என்பன திருக்கரவீரம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை). பதிகம் கிடைத்திலது.

  
4. 060    திருப்பெருவேளூர்                        திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மறைஅணி நாவி னானை, மறப்புஇலார் மனத்து உளானை,
கறைஅணி கண்டன் தன்னை, கனல்எரி ஆடி னானை,
பிறைஅணி சடையி னானை, பெருவேளூர் பேணி னானை,
நறைஅணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்கு வேனே.

         பொழிப்புரை : வேதம் ஓதும் நாவினராய் , தம்மை மறவாதார் மனத்தில் உள்ளவராய், நீலகண்டராய் , ஒளிவீசும் நெருப்பில் கூத்து நிகழ்த்துபவராய் , பிறையை அணிந்த சடையினராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை நறுமண மலர்களைத் தூவி நாள்தோறும் வணங்குவேன் நான் .


பாடல் எண் : 2
நாதனாய், உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம், பரம யோகி, பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானை, பெருவேளூர் பேணி னானை,
ஓதநா உடையன் ஆகி உரைக்குமாறு உரைக்குற் றேனே.

         பொழிப்புரை : தலைவனாய் , உலகிலுள்ளார் எல்லாம் நம்முடைய பெருமான் என்று கூறுமாறு நிலைபெற்ற திருவடிகளை உடைய மேம்பட்ட யோகியாய் , பலவகையாலும் ஒன்றோடொன்று ஒவ்வாப் பலவேடமும் தரித்துக் கொண்டு தோன்றுபவனாய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைத் தோத்திரிக்கும் நாவினை உடையேனாகிச் சான்றோர் உரைக்கும் வகையிலே உரைத்தலை உடையேன் நான் .


பாடல் எண் : 3
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்,
நறவுஇள நறுமென் கூந்தல்  நங்கைஓர் பாகத் தானை,
பிறவியை மாற்று வானை, பெருவேளூர் பேணி னானை,
உறவினால் வல்லன் ஆகி, உணருமாறு உணர்த்து வேனே.

         பொழிப்புரை : குறத்தியாகிய வள்ளியின் தோள்களை மணந்த செல்வனாகிய குமரவேளுடைய தந்தையாராய் , என்றும் மணமுள்ள கூவிளம் பூவை அணிந்த நறிய மெல்லிய கூந்தலை உடைய இளைய நங்கையாகிய பார்வதி பாகராய்ப் பிறவிப் பிணியைப் போக்குபவராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை அவரிடத்து அடியேன் கொண்ட உறவினால் உணர்ந்த வண்ணம் உணர்த்துவேன் நான் .

  
பாடல் எண் : 4
மைஞ்ஞவில் கண்டன் தன்னை, வலங்கையின் மழுஒன்று ஏந்திக்
கைஞ்ஞவில் மானி னோடும் கனல்எரி ஆடி னானை,
பிஞ்ஞகன் தன்னை, அந்தண் பெருவேளூர் பேணி னானை,
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறிஇலா அறிவு இலேனே.

         பொழிப்புரை : நஞ்சுண்ட கருமை படர்ந்த நீல கண்டனாய் , வலக்கையில் ஒரு மழுவை ஏந்தி , இடக்கையிற் பொருந்திய மானோடு ஒளி வீசும் தீயிடை ஆடுபவனாய் , தலைக்கோலம் அணிந்தவனாய் , அழகிய பெருவேளூரில் விரும்பி உறையும் பெருமானைப் பொய்ம்மை நீங்க நினைக்க இயலேனாய் நினைதற்காம் நல்வினையும் அறிவும் இல்லாதவன் நான் .


பாடல் எண் : 5
ஓடை சேர் நெற்றி, யானை உரிவையை மூடி னானை,
வீடு அதே காட்டு வானை, வேதம் நான்கு ஆயி னானை,
பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணி னானை,
கூடநான் வல்ல மாற்றம் குறுகுமாறு அறிகி லேனே.

         பொழிப்புரை : நெற்றிப்பட்டம் அணிந்த யானைத் தோலைப் போர்த்தவராய் , அடியார்களுக்கு வீடுபேறு வழங்குபவராய் , நான்கு வேத வடிவினராய் , பேடையொடு கூடிய புறாக்கள் நீங்காது உறையும் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைக் கூடவல்ல , உலகியலுக்கு மாறுபட்ட வழியாகிய இறை நெறியிலே சென்று அவனை நெருங்கும் முறையை அறியேன் .


பாடல் எண் : 6
கச்சைசேர் நாகத் தானை, கடல்விடம் கண்டத் தானை,
கச்சிஏ கம்பன் தன்னை, கனல்எரி ஆடு வானை,
பிச்சைசேர்ந்து உழல்வினானை, பெருவேளூர் பேணி னானை,
இச்சைசேர்ந்து அமர நானும் இறைஞ்சுமாறு இறைஞ்சுவேனே.

         பொழிப்புரை : நாகத்தைக் கச்சாக அணிந்து , கடல் விடத்தைக் கழுத்தில் இருத்தி , காஞ்சியில் ஏகம்பத்தில் உறைபவராய் , ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்துபவராய் , பிச்சை எடுப்பதற்கு அலைபவராய் , பெருவேளூரை விரும்பித் தங்கும் பெருமானை என் இச்சை நிறைவுற வழிபடும் வழியாலே வழிபடுவேன் நான் .


பாடல் எண் : 7
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள்
முத்தனை, மூர்த்தி ஆய முதல்வனை, முழுதும் ஆய
பித்தனை, பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணி னானை,
மெத்த நேயவனை, நாளும் விரும்புமாறு அறிகி லேனே.

         பொழிப்புரை : ஞானிகளாய் வந்து தம் திருவடிகளை வணங்குபவர்களுக்கு முத்தியை வழங்குபவராய் , ஞானமூர்த்தியாகிய முதல்வராய் , எல்லா உலகமும் தாமேயாகிய பித்தராய் , மற்றவர் யாவரும் தம்மைத் துதிக்குமாறு பெருவேளூரை விரும்பிய மிக்க அன்புடைய பெருமானை நாளும் விரும்பும் திறத்தை அறியாதேன் நான் .


பாடல் எண் : 8
முண்டமே தாங்கி னானை, முற்றிய ஞானத் தானை,
வண்டுஉலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானை,
பிண்டமே ஆயி னானை, பெருவேளூர் பேணி னானை,
அண்டமாம் ஆதி யானை, அறியுமாறு அறிகி லேனே.

         பொழிப்புரை : தலைமாலையைப் பூண்டவராய் , பூரண ஞான முடையவராய் , வண்டுகள் உலவும் கொன்றை மாலையையும் பிறையையும் முடிமாலையாக உடையவராய், என் உடலாகவும் உள்ளவராய்ப் பெருவேளூர்ப் பெருமானாய் எல்லா உலகங்களுமான முதற் கடவுளாய் உள்ள பெருமானை அறியும் வழியால் அறிய இயலாதேனாய் உள்ளேன் நான் .


பாடல் எண் : 9
விரிவிலாஅறிவி னார்கள் வேறுஒரு சமயம்  செய்து
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்,
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவி, நான் வாழ்த்தி உய்யும் வகை, அது நினைக்கின் றேனே.

         பொழிப்புரை : விரிவடையாத சிற்றறிவுடையவர்கள் புதியதொரு சமயத்தை உண்டாக்கி வயிற்றெரிச்சலால் அச்சமயத்துக்குப் பிரசாரம் செய்தாராகிலும் அதுவும் பெருமானுக்கு ஏற்புடைய செயலேயாகும் . பெரியோர்கள் அன்போடு துதிக்கும் பெருவேளூர்ப் பெருமானைப் பொருந்தி அடியேன் வாழ்த்திப் பிறவிப் பிணியிலிருந்து விடுபடும் வழியை விருப்புற்று நினைக்கின்றேன் நான் .


பாடல் எண் : 10
பொருகடல் இலங்கை மன்னன் உடல்கெடப் பொருத்தி, நல்ல
கருகிய கண்டத் தானை, கதிர்இளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானை, பெருவேளூர் பேணி னானை,
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்கு வேனே.

         பொழிப்புரை : அலைகள் மோதும் கடலிடை அமைந்த இலங்கை மன்னனாகிய இராவணனுடைய உடல் நசுங்குமாறு தம் கால்விரலை அழுத்தியவராய் , நல்ல நீலகண்டராய் , ஒளிவீசும் பிறையைச் சூடும் பரந்த சடையினராய்ப் பெரு வேளூரில் உள்ள பெருமானாரை மனம் உருகிய அடியவர்கள் போற்றும் உள்ளத்தை அடியேனும் பக்குவத்தால் பெற்று அப்பெருமானை விருப்புற்று நினைப்பேன் நான் .

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...