அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நசையொடு தோலும்
(திருவல்லம்)
முருகா!
இந்த உடம்போடு வாழுகின்ற
காலத்திலேயே அடியார் திருக்கூட்டத்தில் சேர்ந்து, உயிர்க் குற்றங்கள் அற்று, தேவரீரை
வழிபடும் பேற்றினை அருள்வாய்.
தனதன
தானந் தனதன தானந்
தனதன தானந் ...... தனதான
நசையொடு தொலுந் தசைதுறு நீரும்
நடுநடு வேயென் ...... புறுகீலும்
நலமுறு
வேயொன் றிடஇரு கால்நன்
றுறநடை யாருங் ...... குடிலூடே
விசையுறு
காலம் புலனெறி யேவெங்
கனலுயிர் வேழந் ...... திரியாதே
விழுமடி
யார்முன் பழுதற வேள்கந்
தனுமென வோதும் ...... விறல்தாராய்
இசையுற
வேயன் றசைவற வூதும்
எழிலரி வேழம் ...... எனையாளென்
றிடர்கொடு
மூலந் தொடர்வுட னோதும்
இடமிமை யாமுன் ...... வருமாயன்
திசைமுக
னாருந் திசைபுவி வானுந்
திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர்
தெரிவையர்
தாம்வந் தருநட மாடுந்
திருவல மேவும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நசையொடு தோலும், தசை துறு நீரும்,
நடு நடுவே என்பு ...... உறுகீலும்
நலம்
உறு வேய் ஒன்றிட, இரு கால்நன்று
உற, நடை ஆரும் ...... குடில் ஊடே,
விசையுறு
காலம் புலன் நெறியே வெம்
கனல் உயிர் வேழம் ...... திரியாதே,
விழும்
அடியார் முன் பழுது அற வேள் கந்-
தனும் என ஓதும் ...... விறல்தாராய்.
இசை
உறவே அன்று அசைவு உற ஊதும்
எழில் அரி வேழம் ...... எனை ஆள் என்று,
இடர்கொடு
மூலம் தொடர்வுடன் ஓதும்
இடம் இமையா முன் ...... வருமாயன்,
திசைமுகனாரும்
திசை புவி வானும்
திரிதர வாழும் ...... சிவன்மூதூர்,
தெரிவையர்
தாம்வந்து அருநடம் ஆடும்
திருவலம் மேவும் ...... பெருமாளே.
பதவுரை
இசை உறவே அன்று அசைவு
அற ஊதும் எழில் அரி --- முன்னொரு காலத்தில் இனிய இசை பொருந்தி எப்பொருளும் அசையாமல்
நிற்கும்படி, புல்லாங்குழலை ஊத
வல்ல அழகிய கண்ணனும்,
வேழம் எனை ஆள் என்று
இடர்கொடு மூலம் தொடர்வு உடன் ஓதும் இடம் --- கஜேந்திரனாகிய
யானை "என்னை ஆட்கொள்வாய், ஆதிமூலமே!" என்று துன்பத்துடனும்
பேரன்புடனும் கூச்சலிட்டு அழைத்த இடத்துக்கு,
இமையா முன் வரும்
மாயன்
--- கண்ணை இமைக்கும் நேரத்தில் வந்து உதவிய மாயனுமாகிய திருமாலும்,
திசைமுகனாரும் திசை புவி
வானும்
--- பிரமதேவனும், பல திசைகளில்
உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும், வானுலகில் உள்ளவர்களும்
திரி தர வாழும் சிவன்
மூதூர்
--- தொழுது வலம் வந்து சூழுகின்ற சிவபெருமானுடைய பழைய ஊரும்,
தெரிவையர் தாம் வந்து
அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே --- மாதர்கள் வந்து அருமையான நடனம்
புரியும் திருத்தலமும் ஆகிய திருவல்லத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!
நசையொடு தொலும்
தசைதுறு நீரும் --- ஈரத்துடன் தோலும் மாமிசமும் அடைந்துள்ள நீரும்
நடுநடுவே என்பு உறு கீலும் --- இடையிடையே
எலும்புகளைப் பூட்டியுள்ள இணைப்புக்களும்
நலம் உறு வேய் ஒன்றிட --- நலம் உறும்
வண்ணம் பொருந்தி ஒன்று சேர,
இருகால் நன்று உற --- இரண்டு
கால்களும் நன்கு பொருந்தி,
நடை ஆரும் குடில் ஊடே --- நடை பயின்ற
வரும் குடிசையாகிய இந்த உடலுக்குள்,
விசை உறு காலம் --- வேகமான வாழ்க்கை
செல்லும் காலத்தில்,
புலன் நெறியே --- ஐம்புலன்களின்
வழியாக
வெம்கனல் உயிர் வேழம் திரியாதே --- வெம்மையான,
மதம் நிறைந்த யானை போன்றதுமான ஐம்பொறிகளும் அலையாமல்,
விழும் அடியார் முன்
பழுது அற
--- உனது திருவடியில் விழும் அடியார்களின் முன், குற்றம் இல்லாத வகையில்,
வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் ---
முருகவேளே கந்தகப் பெருமானே என்று ஓதும் ஆற்றலைத் தந்து அருள வேண்டும்.
பொழிப்புரை
முன்னொரு காலத்தில் இனிய இசை பொருந்தி எப்பொருளும்
அசையாமல் நிற்கும்படி, புல்லாங்குழலை ஊத
வல்ல அழகிய கண்ணனும், கஜேந்திரனாகிய யானை "என்னை
ஆட்கொள்வாய், ஆதிமூலமே!" என்று துன்பத்துடனும் பேரன்புடனும் கூச்சலிட்டு
அழைத்த இடத்துக்கு, கண் இமைக்கும்
நேரத்தில் கடிது வந்து உதவிய மாயனுமாகிய திருமாலும், பிரமதேவனும், பல திசைகளில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும், வானுலகில் உள்ளவர்களும் தொழுது வலம்
வந்து சூழுகின்ற சிவபெருமானுடைய பழைய ஊரும், மாதர்கள் வந்து அருமையான நடனம் புரியும்
திருத்தலமும் ஆகிய திருவல்லத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!
ஈரத்துடன் கூடிய தோலும் மாமிசமும்,
அதில் அடைந்துள்ள நீரும், இடையிடையே எலும்புகளைப் பூட்டியுள்ள இணைப்புக்களும் நலம்
உறும் வண்ணம் பொருந்தி ஒன்று சேர, இரண்டு
கால்களும் நன்கு பொருந்தி, நடை பயின்று வரும் குடிசையாகிய இந்த உடலுக்குள், வேகமான வாழ்க்கை செல்லும் காலத்தில், ஐம்புலன்களின் வழியாக
வெம்மையான, மதம் நிறைந்த யானை போன்றதுமான ஐம்பொறிகளும் அலையாமல்,
தேவரீரது
திருவடியில் விழும் அடியார்களின் முன், குற்றம்
இல்லாத வகையில், முருகவேளே கந்தகப்
பெருமானே என்று ஓதும் ஆற்றலைத் தந்து அருள வேண்டும்.
விரிவுரை
நசையொடு தோலும் தசைதுறு நீரும், நடுநடுவே என்பு உறு கீலும், நலம் உறு வேய் ஒன்றிட, இருகால்
நன்று உற, நடை ஆரும் குடில் ஊடே ---
தாது
- மூலப் பொருள். இந்த மனித உடலிலே ஏழுவகையான மூலப் பொருள்கள் பொருந்தி உள்ளன. அவை இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து ஆகும்.
சத்த
தாதுக்களால் ஆன இந்த உடம்பை ஒரு குடிசை என்றார் அடிகளார். இரண்டு கால்களும்
தூண்கள். நடு நடுவே உள்ள எலும்புகள் செங்கற்கள். இடையிலை உள்ள நிணமானது சேறு.
இரண்டு கைகளுக் கொடுங்கைகள். முதுகு எலும்பு மேல் முகடு. பக்கத்தில் உள்ள விலா
எலும்புகள் கழிகள். வாய் தெருவாசல், எருவாய் புழைக்கடை வாசல். இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு மூக்குகள் தெருப்பக்கத்துச் சாளரங்கள். நீர் வரும் வழி
சலதாரை. தலைமயிர் மேலே வேயப்பட்ட மஞ்சம்புல். மூடி உள்ள தோல் பூசுவேலை. உள்ளே குடி
இருப்பது ஆன்மா. இந்தக் குடிசையை அமைத்துத் தந்தவன் இறைவன்.
என்பினால்
கழிநிரைத்து, இறைச்சிமண் சுவர்எறிந்து, இதுநம்
இல்லம்,
புன்புலால்
நாறுதோல் போர்த்து, பொல்லாமையால் முகடு கொண்டு,
முன்புஎலாம்
ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையின் மூழ்கிடாதே,
அன்பன்
ஆரூர் தொழுது உய்யலாம், மையல்கொண்டு அஞ்சல்
நெஞ்சே.
--- திருஞானசம்பந்தர்.
கால்கொடுத்து,
இருகைஏற்றி, கழிநிரைத்து, இறைச்சிமேய்ந்து,
தோல்படுத்து,
உதிர நீரால் சுவர்எடுத்து, இரண்டு வாசல்
ஏல்வு
உடைத்தா அமைத்து, அங்கு ஏழு சாலேகம் பண்ணி,
மால்கொடுத்து
ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே. ---
அப்பர்.
கால்கொடுத்து,
எலும்பு மூட்டி, கதிர்நரம்பு ஆக்கை ஆர்த்து,
தோல்உடுத்து,
உதிரம் அட்டி, தொகுமயிர் மேய்ந்த கூரை,
ஓல்எடுத்து
உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்,
சேல்உடைப்
பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்து உளானே. ---
அப்பர்.
ஒருமுழம்
உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்தாய்,
அரைமுழம்
அதன் அகலம், அதனில்வாழ் முதலை ஐந்து,
பெருமுழை
வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்றுகின்றேன்,
கருமுகில்
தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே. ---
அப்பர்.
தோலால்
சுவர் வைத்து, நால்ஆறு காலில் சுமத்தி, இரு
காலால்
எழுப்பி, வளைமுதுகு ஓட்டி, கை நாற்றி, நரம்-
பால்
ஆர்க்கை இட்டு, தசைகொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்,
வேலால்
கிரி தொளைத்தோன் இருதாள் அன்றி வேறுஇல்லையே.
--- கந்தர் அலங்காரம்.
இரதம்
உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய
அத்தி வழும்பொடு மச்சை
பரவிய
சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம்
அலால், உடல் ஒன்று எனல் ஆமே? --- திருமூலர்.
இப்படிப்பட்ட
உடம்பிலே இறைவன் உயிரை, அதனதன் பிராரத்த வினைகளுக்கு ஏற்பப் பொருத்துகின்றான்.
அப்படிப் பொருத்துகின்ற போதே அதன் சாதி, ஆயுள், போகம் என்பதும்
வரையறுக்கப்படுகின்றது.
விசை
உறு காலம்
---
விதிக்கப்பட்ட
காலத்தில் வாழ்க்கையானது மிக வேகமாகச் செல்லுகின்றது.
புலன்
நெறியே
---
ஐம்புலன்களின்
வழியை உயிரின் இச்சை, அறிவு, செயல் யாவும் செல்லுகின்றது. புலன்களை முதலை என்று
அருளாளர் சொல்லி வைத்தனர். பற்றியதை விடாது என்பதால்.
வெம்கனல்
உயிர் வேழம் திரியாதே ---
வெம்மையான,
மதம் நிறைந்த யானை போன்றதுமான ஐம்பொறிகளால் உயிரானது அலைக்கழிக்கப்படுகின்றது.
கூட்டமாய்
ஐவர் வந்து கொடுந்தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு
ஆற்றகில்லேன், ஆடுஅரவு அசைத்த கோவே!
காட்டுஇடை
அரங்கம் ஆக ஆடிய கடவுளே! ஓ!
சேட்டுஇரும்
பழனவேலித் திருக்கொண்டீச்சரத்து உளானே. ---
அப்பர்.
பொய்யினால்
மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ,
மெய்யனாய்
வாழமாட்டேன், வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்,
செய்ய
தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்,
ஐய!
நான் அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே. --- அப்பர்.
ஒரஒட்டார்,
ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டுஉனதாள்
சேர
ஒட்டார் ஐவர், செய்வது என் யான், சென்று தேவர் உய்ய,
சோர
நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,
கூர
கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே. ---
கந்தர் அலங்காரம்.
அடியார்
முன் பழுது அற, வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் ---
அடியார்கள்
குழுமி உள்ளதைத் திருக்கூட்டம் என்பர். திரு என்பதாகிய ஞானத்தை, சார்ந்தோருடைய உள்ளத்தில்
சேர்க்கின்ற திருக்கூட்டம் அது. அத் திருக்கூட்டத்தில் சேர்ந்து இருந்தால்
நாளடைவில் உயிரைப் பற்றி உள்ள குற்றங்கள் எல்லாம் நீங்கும் என்பதால் "பழுது
அற" என்றார் அடிகளார். பூசுகின்ற
திருநீறு எப்படிப் புனிதமானதோ (புனிதம் - தூய்மை, சுத்தம். "சுத்தம் அது ஆவது
நீறு" என்றார் திருஞானசம்பந்தர்) அப்படி உள்ளத்திலும் தூய்மையானவர்கள்
அடியவர்கள். "பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்" என்றார் தெய்வச்
சேக்கிழார் பெருமான்.
"தீயவை
புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால், தூயவர் ஆகி, மேலைத் தொல்கதி அடைவர்
என்கை ஆயவும் வேண்டும் கொல்லோ" என்கின்றது கந்தபுராணம்.
குமரவேளைத்
தனது உள்ளத்திலே கொண்டுள்ள அடியவர்களை வணங்கினாலும் ஆன்மா தனது குற்றமெல்லாம்
நீங்கிவிடும்.
"நின்
அடி உளமே கொண்ட கனத்த அடியவருடைய கழல் கமலம் உள்ளுகினும் கறைபோம்" என்று
அருளினார் பாம்பன் சுவாமிகள்.
எனவே,
அடியார் திருக்கூட்டதைச் சார்ந்து, இறைவன் திருப்புகழைப் பாடி உய்யும் வகையை
அருளவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.
வேழம்
எனை ஆள் என்று இடர்கொடு மூலம் தொடர்வு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் ---
கஜேந்திரனாகிய
யானை "என்னை ஆட்கொள்வாய், ஆதிமூலமே!" என்று துன்பத்துடனும்
பேரன்புடனும் கூச்சலிட்டு அழைத்த இடத்துக்கு, கண்ணை இமைக்கும் நேரத்தில் வந்து உதவியவர்
மாயவனாமாகிய திருமால்.
திருப்பாற்
கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம்உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது.
சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள்
நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த
நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணல் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து
அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய
இமையவரும், அப்சர மாதர்களும்
வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல
தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமை பொருந்திய ஒரு பெரிய தடாகம் இருந்தது.
அழகிய பூந்தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத்தடாகம்.
அந்தத் திரிகூடமலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற
ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே
சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித்
தாகந்தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த்துளிகளால் பெண்
யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக்கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக்
கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக்
கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி
பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு அந்த
யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும்
ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது. கஜேந்திரம் உணவின்மையாலும் முதலையால் பல
வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்யமுடியாமல்
அசைவற்றிருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில்
செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,
உடனே
கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு
முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம்
தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட
நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து
கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது
முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை
ஆதிமூலமே என்று அழைத்தது எல்லாம் வல்ல சிவபரம்பொருளையே. அப்படி அழைத்தபோது
நாராயணர் வந்து காத்தருளிய காரணம்,
நாராயணர்
தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி
வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய் என்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன்
கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத் தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன் வாளா
இருந்தால், தலைவனால் தண்டிக்கப்படுவான்
அல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை
நிறைவேற்ற நாராயணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
திசைமுகனாரும்
திசை புவி வானும் திரி தர வாழும் சிவன் மூதூர் திருவலம் ---
பிரமதேவன்
முதலாகிய தேவர்களும், மற்றும் வானலகில் உள்ளோர்களும், மண்ணுலகில் உள்ளோர்களும் வந்து
வலம் செய்து வழிபட்டு வணங்குகின்ற மிகப் பழமையான சிவத்தலம்.
திருவல்லம்
என்பது ஒரு சிவத்தலம். இது தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ்
தொண்டை நாட்டில் உள்ள 32 திருத்தலங்களில்
ஒன்று. தேவாரம், திருப்புகழ்ப்
பாடல்கள் பெற்றது. சேக்கிழார் பெரியபுராணத்தில் பாராட்டி இருக்கின்றார். நீவா
நதிக்கரையில் விளங்கும் அருமையான திருத்தலம். வில்வவனநாதர் தநுர்மத்யாம்பாளுடன்
எழுந்தருளியுள்ளார். காட்பாடி புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே எட்டு மைல்.
திருவல்லம் என்று தனியே இரயில் நிலையம் உண்டு.
இங்கிருந்து
வள்ளிமலை 8 கல் தொலைவு. பழமையான
திருத்தலம். பலர் இங்கு தெரிசித்து வினைகள் தீர்ந்து நலம் பெறுகின்றார்கள்.
"பயைழ
வல்லம்" என்று திருவல்லம் என்னும் திருத்தலத்தினை, "உய்யஞானத்து" எனத் தொடங்கும்
திருப்புகழிலும் வைத்து சுவாமிகள் இத் திருத்தலத்தினைச் சிறப்பித்துள்ளார். அத்தன் அன்னை இல்லம் எனத் தொடங்கும் சிதம்பரத் திருப்புகழில்
"வல்லை அத்தன்" என்று இத் திருத்தலத்தைச் சிறப்பித்து உள்ளார் அருணை அடிகள்.
கந்தர்
அந்தாதியில் 91-ஆம் பாடலில் வைத்தும் திருவல்லத்தைச் சிறப்பித்து உள்ளார் அருணை அடிகள்.
திகிரி
வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
திகிரி
வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
திகிரி
வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
திகிரி
வலம்புரி சூடிய வாநன்று சேடி இன்றே.
இதன்
பொருள் --- சக்ராயுதத்தை, வலக்கையில், தரித்துள்ள, திருமாலால், தேடி கண்டு கொள்ள முடியாத
(பரமசிவனுக்கு), பிரணவப் பொருளை
உபதேசித்த, சுவாமிமலைப் பதி, வலம்புரி சங்குகள், வயல்களில், நிறைந்திருக்கும், இலஞ்சிப் பதி, திருச்செந்தூர், மேகங்கள் சூழ்ந்த சர்ப்பம் போன்ற
திருச்செங்கோடு, திருவலம், வேறு பல தலங்களையும் படைத்து அருள்
செய்த, குமாரக் கடவுளின், திருத்தணியில், மூங்கில், நந்தியாவட்டை மலரை, சூடி இருக்கும் குறிப்பு, இத்தினத்தில் நன்றாக அமைந்திருக்கிறது, தோழியே.
தெரிவையர்
தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே ---
மாதர்கள்
வந்து அருமையான நடனம் புரியும் திருத்தலமும் ஆகிய திருவல்லத்தில் வீற்றிருக்கும் பெருமையில்
சிறந்தவரே என்கின்றார் அருணை அடிகள்.
தீது
நீங்கிடத் தீக்கலி யாம்அவு ணற்கு
நாதர்
தாம்அருள் புரிந்தது நல்வினைப் பயன்செய்
மாதர்
தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம்
பூதி
சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும். --- பெரியபுராணம்.
தீது
நீங்கும்படியாகத் தீக்காலி எனும் பெயருடைய ஓர் அசுரனுக்கு, இறைவன் அருள் புரிந்ததும், நல்வினைப் பயனைச் செய்தற்கேற்ற பெண்கள்
இருவரைப் பெற்ற மாதவமுடைய மறையவர்கள் வாழ்ந்து வருவதுமான திருவல்லம்
என்னும் திருப்பதியானது, திருநீறும்
உருத்திராக்கமும் ஆகிய சிவச்சின்னங்களைப் போற்றி வரும் சிறப்பினால் விளக்கம்
பெற்றிருக்கும்.
தீக்காலி
என்னும் அசுரன் திருமாலின் சக்கரத்தால் தான் இறவாதிருக்கப் பெருமானை வேண்ட, அவனுக்கு அருள் செய்த திருப்பதி
தீக்காலிவல்லமாகும். மறையவன் ஒருவன் ஆண் மகவு வேண்ட, இறைவன் அவனுக்கு இரு பெண்மக்களை அருள, அவர்களை அவன் இறைத்தொண்டிற்கு
ஆளாக்குமாறு வேண்ட, பெருமானும் அருளினன்
என்பது ஒரு வரலாறு.
அன்றியும்,
நல்வினைப் பயன் செய் மாதர் தோன்றிய மரபினை உடையது திருவல்லம் ஆதலால், மாதர்கள் வந்து
நடனம் புரிந்து முருகப்பெருமானை வழிபடுகின்றார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
கருத்துரை
முருகா!
இந்த உடம்போடு வாழுகின்ற காலத்திலேயே அடியார் திருக்கூட்டத்தில் சேர்ந்து, உயிர்க்
குற்றங்கள் அற்று, தேவரீரை வழிபடும் பேற்றினை அருள்வாய்.
No comments:
Post a Comment