திரு நாலூர் மயானம்
திரு நாலூர் மயானம்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

      கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற திருத்தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். இவ்வூர் ஒரு தேவார வைப்புத் தலம். நாலூர் தாண்டி குடவாசல் செல்லும் வழியில் உள்ள அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

இறைவர்                : பலாசவனநாதர், ஞானபரமேசுவரர்

இறைவியார்           : பெரிய நாயகி,ஞானாம்பிகை

தல மரம்                : பலாசு

தீர்த்தம்                  : ஞான தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பாலூரும் மலைப்பாம்பும்.

         தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நான்கு தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன - 1) நாலூர் மயானம், 2) திருக்கடவூர் மயானம், 3) காழி மயானம், 4) கச்சி மயானம். இவற்றில் முதல் மூன்றும் பாடல் பெற்ற தலங்கள். நான்காவது கச்சி மயானம் ஒரு தேவார வைப்புத் தலம்.

         கும்பகோணம் - திருச்சேறை - குடவாசல் வழித்தடத்தில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். இது ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். நாலூர் என்ற இந்த ஊரைக் கடந்து அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருமெய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள ஞானபரமேசுவரர் திருக்கோயிலே திருநாலூர் மயானம் என்று திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாடல் பெற்ற தலம். நான்கு வேதங்களாலும் வழிபடப்பட்ட இத்தலம் சோழர் காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று வழங்கியது.

         சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இககோயில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது. பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேசுவர், சட்டநாதர், ஏகாம்பரேசுவரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. அதையடுத்து நாகாராஜா, சண்டிகேசுவரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் காணலாம். நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.

         பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர், நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பைப் பெற்ற தலம். இறைவன் கருவறை விமானம் உருண்டை வடிவத்திலுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.

         இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இத்தல இறைவனின் திருமேனி மேல் பாம்பு ஊர்வதாகக் கூறி, அதற்குத்  திருஞானசம்பந்தரின் பதிகத்தின் முதல் பாடலில் வரும் "பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான்" என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியைக் காட்டுவர்.

         காலை 7 மணி முதல் 9 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், வேறுபடாப் பால் ஊர் நிலவில் பணிலங்கள் தன்கதிர் செய் நாலூரில் அன்பர் பெறு நல்நயமே" என்று போற்றி உள்ளார்.திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 403
பாடும் அரதைப்பெரும் பாழியே முதலாக,
சேடர்பயில் திருச்சேறை, திருநாலூர், குடவாயில்,
நாடியசீர் நறையூர்,தென் திருப்புத்தூர், நயந்துஇறைஞ்சி,
நீடுதமிழ்த் தொடைபுனைந்து, அந் நெடுநகரில் இனிது  அமர்ந்தார்.

         பொழிப்புரை : போற்றப் பெறுகின்ற `அரதைப் பெரும்பாழி' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற `திருச்சேறையும்', `திருநாலூரும்', `திருக்குடவாயிலும்\', சிறப்புகள் பலவும் தாமே நாடி வருதற்குரிய `திருநறையூரும்', `தென்திருப்புத்தூரும\' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே வீற்றிருந்தார் பிள்ளையார்.

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

பதியின் பெயர்        பாட்டுமுதற்குறிப்பு      பண்
அரதைப்பெரும்பாழி - பைத்தபாம்போடு  கொல்லி - தி.3 ப.30

திருச்சேறை -  முறியுறு                 சாதாரி - தி.3 ப.86

திருநாலூர்மயானம் -  பாலூரும்     சீகாமரம் - தி.2 ப.46

திருக்குடவாயில் 1.திகழுந்திருமாலொடு --  இந்தளம் - தி.2 ப.22                            2.கலைவாழும்  --- காந்தாரம் - தி.2 ப.58

திருநறையூர்ச் சித்தீச்சரம்       1.ஊருலாவு  -- தக்கராகம் - தி.1 ப.29                                                   2.பிறைகொள்சடையர் -- தக்கேசி - தி.1 ப.71                                                   3.நேரியனாகும் -- பியந்தைக்காந்தாரம் - தி.2 ப.87 

தென் திருப்புத்தூர் -  மின்னும் சடைமேல் காந்தாரம் - தி.2 ப.63

திருஅரதைப்பெரும்பாழி இதுபொழுது அரித்துவாரமங்கலம் என வழங்கப்பெறுகிறது. திருநாலூர்மயானம், திருநாலூர் எனவும், நாலூர் மயானம் எனவும் இரு பதிகளாகவுள்ளன. இப்பதிகம் நாலூர் மயானத்திற்குரிய பதிகமாகும். குடவாயில், குடவாசல் என வழங்கப்படுகிறது. திருநறையூர் - பதியின் பெயர். சித்தீச்சரம் - திருக்கோயிலின் பெயர். தென்திருப்புத்தூர், அரிசில்கரைப்புத்தூர் என வழங்கப்பெறுகிறது.


2.046   திருநாலூர் மயானம்              பண் - சீகாமரம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பால்ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேல்ஊரும் செஞ்சடையான், வெண்ணூல்சேர் மார்பினான்,
நாலூர் மயானத்து நம்பான்தன் அடிநினைந்து,
மால்ஊரும் சிந்தையர்பால் வந்துஊரா மறுபிறப்பே.

         பொழிப்புரை :பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப்பெற்ற செஞ்சடையினனும், வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது.


பாடல் எண் : 2
சூடும் பிறைச்சென்னிச் சூழ்காடு இடமாக
ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகாக
நாடும் சிறப்புஓவா நாலூர் மயானத்தைப்
பாடும் சிறப்போர்பால் பற்றாவாம் பாவமே.

         பொழிப்புரை :பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில் பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும் நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப் பாவம் பற்றா.


பாடல் எண் : 3
கல்ஆல் நிழன்மேவி, காமுறுசீர் நால்வர்க்குஅன்று
எல்லா அறன்உரையும் இன்அருளால் சொல்லினான்,
நல்லார் தொழுதுஏத்தும் நாலூர் மயானத்தைச்
சொல்லா தவர்எல்லாம் செல்லாதார் தொல்நெறிக்கே.

         பொழிப்புரை :கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர் சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர்.


பாடல் எண் : 4
கோலத்துஆர் கொன்றையான், கொல்புலித்தோல் ஆடையான்,
நீலத்துஆர் கண்டத்தான், நெற்றிஓர் கண்ணினான்,
ஞாலத்தார் சென்றுஎத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே.

         பொழிப்புரை :அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன், கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம் பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று பரவிப்புகழும் நாலூர்மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத் தொல்வினை சூழா.


பாடல் எண் : 5
கறைஆர் மணிமிடற்றான், காபாலி, கட்டங்கன்,
பிறைஆர் வளர்சடையான், பெண்பாகன், நண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்துஎம்
இறையான்என்று ஏத்துவார்க்கு எய்துமாம் இன்பமே.

         பொழிப்புரை :விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன். தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும்.


பாடல் எண் : 6
கண்ஆர் நுதலான், கனல்ஆடு இடமாகப்
பண்ஆர் மறைபாடி ஆடும் பரஞ்சோதி,
நண்ணார் புரம்எய்தான், நாலூர் மயானத்தை
நண்ணா தவர்எல்லாம் நண்ணாதார் நல்நெறியே.

         பொழிப்புரை :கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும் களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும், நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும் ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நன்னெறியைச் சாரார்.


பாடல் எண் : 7
கண்பாவு வேகத்தாம் காமனைமுன் காய்ந்துஉகந்தான்,
பெண்பாவு பாகத்தான், நாகத்தோல் ஆகத்தான்,
நண்புஆர் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே.

         பொழிப்புரை :நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால் மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத்தோல் போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறைவதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத் தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா.


பாடல் எண் : 8
பத்துத் தலையோனைப் பாதத்து ஒருவிரலால்
வைத்து, மலைஅடர்த்து, வாளோடு நாள்கொடுத்தான்
நத்தின் ஒலிஓவா நாலூர் மயானத்துஎன்
அத்தன் அடிநினைவார்க்கு அல்லல் அடையாவே.

         பொழிப்புரை :பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில் விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை அல்லல்கள் அடையா.

பாடல் எண் : 9
மாலோடு நான்முகனும் நேட வளர்எரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான், வேதங்கள்
நாலோடும் ஆறுஅங்கம், நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்ஆடி பாதம் பணிவோமே.

         பொழிப்புரை :திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ் காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர் மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின் பாதங்களைப் பணிவோம்.


பாடல் எண் : 10
துன்புஆய மாசார், துவர்ஆய போர்வையார்,
புன்பேச்சுக் கேளாதே, புண்ணியனை நண்ணுமின்கள்,
நண்பால் சிவாயஎனா நாலூர் மயானத்தே
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே.

         பொழிப்புரை :துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை நட்போடு `சிவாய` என்னும் மந்திரத்தைக் கூறிக் கொண்டு நண்ணுங்கள். அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்ப வடிவினனாய் இருந்தருளுகின்றான். அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும்.


பாடல் எண் : 11
ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்தான்
நாலு மறையோதும் நாலூர் மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்துஎத்த வல்லாருக்கு
எலும் புகழ்வானத்து இன்பாய் இருப்பாரே.

         பொழிப்புரை :உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில் விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ் கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...