அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வாத பித்தமொடு
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
நோயுற்ற வாழ்வுறாமல், தாயுற்று வந்து,
என்னைத் தயாவோடு காத்தருளி,
தேவரீரது பொற்பதத்தில் வாழ
அருள்.
தான
தத்ததன தான தத்ததன
தான
தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான
வாத
பித்தமொடு சூலை விப்புருதி
யேறு
கற்படுவ னீளை பொக்கிருமல்
மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ......
டந்திமாலை
மாச
டைக்குருடு காத டைப்பு செவி
டூமை
கெட்டவலி மூல முற்றுதரு
மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ......
ளுண்டகாயம்
வேத
வித்துபரி கோல முற்றுவிளை
யாடு
வித்தகட லோட மொய்த்தபல
வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ......
சிங்கியாலே
வீடு
கட்டிமய லாசை பட்டுவிழ
வோசை
கெட்டுமடி யாமல் முத்திபெற
வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ......
சிந்தியாதோ
ஓத
அத்திமுகி லோடு சர்ப்பமுடி
நீறு
பட்டலற சூர வெற்பவுண
ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ......
ழங்கிவேலா
ஓந
மச்சிவய சாமி சுத்தஅடி
யார்க
ளுக்குமுப காரி பச்சையுமை
ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ......
தந்தசேயே
ஆதி
கற்பகவி நாய கர்க்குபிற
கான பொற்சரவ ணாப ரப்பிரம
னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ......
றிந்தகோவே
ஆசை
பெற்றகுற மாதை நித்தவன
மேவி
சுத்தமண மாடி நற்புலியு
ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
வாத
பித்தமொடு சூலை விப்புருதி,
ஏறு
கல்படுவன் ஈளை பொக்கு இருமல்
மாலை புற்று எழுதல் ஊசல் பல்சனியொடு
......அந்திமாலை
மாசு
அடைக் குருடு, காது அடைப்பு, செவிடு,
ஊமை, கெட்டவலி மூலம் முற்றுதரு,
மாலை உற்ற தொணுறுஆறு தத்துவர்கள் ......
உண்டகாயம்
வேத
வித்து பரி கோலம் உற்று, விளை-
யாடுவித்த
கடல் ஓடம், மொய்த்த பல
வேடம் இட்டு, பொருள் ஆசை பற்றிஉழல்
...... சிங்கியாலே
வீடு
கட்டி, மயல் ஆசை பட்டு, விழ
ஓசை
கெட்டு மடியாமல் முத்திபெற,
வீடு அளித்து மயிலாடு சுத்தவெளி ......
சிந்தியாதோ?
ஓத
அத்தி முகிலோடு சர்ப்ப முடி
நீறு
பட்டு அலற. சூர வெற்பு அவுண-
ரோடு பட்டு விழ வேலை விட்டபுகழ் ......
அங்கிவேலா
ஓ
நமச்சிவய சாமி, சுத்த அடி-
யார்களுக்கும்
உபகாரி, பச்சை, உமை
ஓர் புறத்து அருள் சிகாமணிக் கடவுள்
...... தந்த சேயே!
ஆதி
கற்பக விநாயகர்க்கு பிறகு
ஆன பொன் சரவணா! பரப்பிரமன்
ஆதி உற்றபொருள் ஓதுவித்தமை ...... அறிந்தகோவே!
ஆசை
பெற்ற குறமாதை நித்த வனம்
மேவி
சுத்த மணம் ஆடி நற்புலியுர்
ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் ......
தம்பிரானே.
பதவுரை
ஓம் நமச்சிவய சாமி --- ஓம் நமசிவய
என்னும் பிரணவத்தோடு கூடிய திருவைந்தெழுத்திற்கு மூலப் பொருளாகிய கடவுளும்,
சுத்த அடியார்களுக்கும் உபகாரி --- தூய
அடியார்களுக்கு உதவி செய்பவரும்,
பச்சை உமை ஓர்
புறத்து அருள் சிகாமணி கடவுள் தந்த சேயே --- பச்சை நிறம் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமும் ஆகிய
சிவபெருமான் பெற்ற குழந்தையே!
ஆதி கற்பக விநாயகற்கு
பிறகான பொன் சரவணா --- முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய
அழகிய சரவண மூர்த்தியே!
பரப் பிரமன் ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே --- ஆதியாய் உள்ள மூலமந்திரப் பொருளை அறிந்து
ஓதுவிக்கும் அரசே!
ஆசை பெற்ற குறமாதை நித்தம்
வனம் மேவி ---
தேவரீரது காதலைப் பெற்ற குறமாதாகிய வள்ளிநாயகியை நாடி, நாள்தோறும் தினைப் புனத்துக்குச்
சென்று
சுத்த மணம் ஆடி --- திருமணம்
புரிந்து
நல் புலியூர் ஆடகப்
படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே --- நல்ல பெரும்பற்றப்புலியூர்
என்னும் சிதம்பர தலத்தில் பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில்
மகிழ்ந்து வீற்றிருக்கும் தனிப்பெருந்தலைவரே!
ஓத அத்தி முகிலோடு
சர்ப்ப முடி நீறுபட்டு அலற ---- அலை ஓசை மிகுந்த கடல், மேகங்கள், ஆதிசேடனாகிய பாம்பின் முடிகள் எல்லாம் பொடிபட்டுக் கலங்க,
சூர(ன்) வெற்பு
அவுணரோடு பட்டுவிழ --- சூரனும்,
அவனுடைய
எழுகிரியும், அங்கிருந்த
அசுரர்களோடு அழிந்து விழும்படி
வேலை விட்ட புகழ்
அங்கி வேலா ---
கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப் போன்ற வேலாயுதத்தை உடையவரே!
வாதம் பித்தமொடு
சூலை விப்புருதி --- வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று வலி, சிலந்தி,
ஏறு கல் படுவன், ஈளை, பொக்கு இருமல் --- கல் போன்ற ஒரு
வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல்,
மாலை, புற்று எழுதல், ஊசல், பல் சனி ஓடு
அந்திமாலை
--- கண்ட மாலை, புற்றுநோய், மனத்தடுமாற்றம், உடல் தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண்,
மாசு அடை குருடு, காது அடைப்பு செவிடு, ஊமை --- கண் மாசு
படுவதால் வரும் குருட்டுத் தன்மை,
காது
அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, வாய்
பேசாத தன்மை,
கெட்ட வலி மூலம்
முற்று தரு
--- கெட்ட வலிப்புகள், மூல நோய் ஆகிய நோய்கள் காய்த்து முதிர்ந்த மரம் போன்றது இந்த உடல்,
மாலை உற்ற தொணூறு ஆறு
தத்துவர்கள் உண்ட காயம் --- முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம் பெற்றுள்ள உடல்,
வேத வித்து --- வேதமூலம் ஆகிய இறைவன் கருணாயினால்,
பரிகோலம் உற்று --- பலவிதமான பிறவிகளை
எடுத்து,
விளையாடுவித்த கடல் ஓடம் --- விளையாட்டாக
ஆட்டுவிக்கின்ற, கடலிடைத் தோணிபோல
அலைப்புறும் இந்த உடல்,
மொய்த்த பல வேடம்
இட்டு --- சூழ்கின்ற
பலவிதமான வேடங்களைப் பூண்டு
பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே --- பொருளாசை கொண்டு திரிகின்ற அழிவுக்கு இடமான செயலால்,
வீடு கட்டி --- வீடு கட்டி,
மயல் ஆசை பட்டு விழ --- காம மயக்கத்தில்
வீழ்ந்து,
ஓசை கெட்டு மடியாமல் ---
புகழ்
இழந்து அடியேன் இறந்து படாமல்
முத்திபெற வீடு அளித்து --- மல நீக்கத்தைப்
பெறுமாறு அருளி, மோட்ச வீட்டை அளித்து,
மயில் ஆடு சுத்தவெளி
சிந்தியாதோ ---
தேவரீர் மயில் மீது திருநடனம் புரிகின்ற அருள்வெளியிலே பரமானந்த நிலையை அடியேன்
தேவரீர் திருவுள்ளம் கொள்ளத்தகாதோ?
பொழிப்புரை
ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய திருவைந்தெழுத்திற்கு
மூலப் பொருளாகிய கடவுளும், தூய அடியார்களுக்கு
உதவி செய்பவரும், பச்சை நிறம் கொண்ட
உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமும் ஆகிய
சிவபெருமான் பெற்ற குழந்தையே!
முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப்
பின்னர் தோன்றிய அழகிய சரவண மூர்த்தியே!
ஆதியாய் உள்ள மூலமந்திரப் பொருளை அறிந்து
ஓதுவிக்கும் அரசே!
தேவரீரது காதலைப் பெற்ற குறமாதாகிய
வள்ளிநாயகியை நாடி, நாள்தோறும் தினைப்
புனத்துக்குச் சென்று, அவரைத் திருமணம் புரிந்து, நல்ல பெரும்பற்றப்புலியூர்
என்னும் சிதம்பர தலத்தில் பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில்
மகிழ்ந்து வீற்றிருக்கும் தனிப்பெருந்தலைவரே!
அலை ஓசை மிகுந்த கடல், மேகங்கள், ஆதிசேடனாகிய பாம்பின் முடிகள் எல்லாம்
பொடிபட்டுக் கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு அழிந்து
விழும்படி கடலில் செலுத்திய
புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலாயுதத்தை உடையவரே!
வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று வலி, சிலந்தி, கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல், கண்ட மாலை, புற்றுநோய், மனத்தடுமாற்றம், உடல் தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண், கண் மாசு படுவதால் வரும்
குருட்டுத் தன்மை, காது அடைப்பினால்
வரும் செவிட்டுத் தன்மை, வாய் பேசாத
தன்மை, கெட்ட வலிப்புகள், மூல நோய் ஆகிய நோய்கள் காய்த்து
முதிர்ந்த மரம் போன்றது இந்த உடல்.
முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம் பெற்றுள்ள உடல். வேதமூலம் ஆகிய இறைவன் கருணாயினால், பலவிதமான பிறவிகளை எடுத்து,
விளையாட்டாக
ஆட்டுவிக்கின்ற, கடலிடைத் தோணிபோல
அலைப்புறும் இந்த உடல். சூழ்கின்ற பலவிதமான
வேடங்களைப் பூண்டு, பொருளாசை கொண்டு
திரிகின்ற அழிவுக்கு இடமான செயலால் வீடு கட்டி, காம மயக்கத்தில் வீழ்ந்து, புகழ் இழந்து, அடியேன் இறந்து படாமல், மல நீக்கத்தைப் பெறுமாறு அருளி, மோட்ச வீட்டை அளித்து, தேவரீர் மயில் மீது திருநடனம்
புரிகின்ற அருள்வெளியிலே பரமானந்த நிலையை அடியேன் தேவரீர் திருவுள்ளம் கொள்ளத்தகாதோ?
விரிவுரை
வாதம்
பித்தமொடு சூலை விப்புருதி ---
அண்டவாதம், பட்சவாதம், கீல்வாதம், பீனசவாதம், முதலிய வாத நோய்கள், பிடிவாதமாக வீடு
தங்காமல் திரிந்து பலப் பல மகளிர் உறவு பூண்பார்க்கு எய்தும்.
பித்தத்தால்
வரும் மஞ்சள் காமாலை, மயக்கம், சுரம் முதலிய நோய்கள்.
சூலை
என்பது வயிற்றில் கொடிய வேல் நுழைந்தது போல் குடல் சுருட்டிச் சுருட்டிப் புரள
வரும் பொல்லாத நோய்.
உடம்பில்
உண்டாகும் புண்கள்.
ஏறு
கல் படுவன், ஈளை, பொக்கு இருமல் ---
கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, ஒரு வகையான
சிலந்தி நோய். கோழை நோய், குத்திருமல்,
கோழை
மிகுந்து வரும் க்ஷயம், ஆஸ்துமா, இருமல் முதலிய நோய்கள்.
மாலை, புற்று எழுதல், ஊசல், பல் சனி ஓடு
அந்திமாலை
---
கண்ட
மாலை, புற்றுநோய், மனத்தடுமாற்றம், உடல் தடுமாற்றம், மற்றும் பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண் என்னும் நோய்,
மாசு
அடை குருடு, காது அடைப்பு செவிடு, ஊமை ---
கண்
மாசு படுவதால் வரும் குருட்டுத் தன்மை, காது
அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, வாய்
பேசாத தன்மை,
கெட்ட
வலி மூலம் முற்று தரு ---
முற்று
தரு - முதிர்ந்த மரம்.
கெட்ட
வலிப்புகள், ஆசனத் தொளையில் வரும்
நோய்கள்; ரத்த மூலம், சீழ் மூலம், பவுத்திரம் முதலிய நோய்கள் காய்த்து முதிர்ந்த மரம் போன்றது இந்த உடல்.
மாலை
உற்ற தொணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம் ---
முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்களுடன் கூடியது இவ்வுடம்பு. அதன் விவரம் வருமாறு.
ஆன்ம
தத்துவம் 24, நாடி 10, அவத்தை 5, மலம் 3, குணம் 3, மண்டலம் 3, பிணி 3, விகாரம் 8, ஆதாரம் 6, தாது 7, வாயு 10, கோசம் 5, வாயில் 9, ஆக தொண்ணூற்றாறு தத்துவங்கள் (பூதம் 5, புலன் 5, ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, காரணம் 4, ஆகிய 24- உம் ஆன்ம தத்துவம்)
வேத
வித்து ---
வேதங்களின்
வித்தாக உள்ளவன் இறைவன்.
வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி
வினைஆயின
கோதுவித்தாய், நீறுஎழக் கொடிமா மதில்ஆயின
ஏத
வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பைதனுள்
மாதவத்தோர்
மறையோர் தொழநின்ற மாகாளமே. ---
திருஞானசம்பந்தர்.
நிருத்தனை
நிமலன் தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை
வேத வித்தை விளைபொருள் மூலம்ஆன
கருத்தனைக்
கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஒருத்தனை
உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சி னீரே. ---
அப்பர்.
நெருப்புஅனைய
திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதுஎன் உள்ளத்தின் உள்ளே நின்ற
விருப்பவனை
வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை
இடைமருதோடு ஈங்கோய் நீங்கா
இறையவனை எனைஆளுங் கயிலை என்னும்
பொருப்பவனைப்
புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. --- அப்பர்.
மெய்த்தவத்தை
வேதத்தை வேத வித்தை
விளங்குஇளமா மதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்துஅவமே
உழிதந்த ஏழையேனை
இடர்க்கடலில் வீழாமே ஏற வாங்கிப்
பொய்த்தவத்தார்
அறியாத நெறி நின்றானை,
புனல் கரந்திட்டு உமையொடு ஒரு பாகம்
நின்ற
தத்துவனை, தலையாலங் காடன் தன்னைச்
சாராதே, சாலநாள் போக்கி னேனே. --- அப்பர்.
உரித்தானைக்
களிறு, அதன்தோல் போர்வை யாக
உடையானை, உடைபுலியின் அதளே ஆகத்
தரித்தானை, சடைஅதன்மேல் கங்கை, அங்கைத்
தழல்உருவை, விடம்அமுதா உண்டு இதுஎல்லாம்
பரித்தானை, பவளமால் வரைஅன் னானை,
பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி
நல்கிச்
சிரித்தானை, தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. --- அப்பர்.
பரிகோலம்
உற்று, விளையாடுவித்த கடல் ஓடம்
---
இறைவன்
கருணையால் பலவிதமான பிறவிகளை உயிரானது எடுத்து, பிறவிக் கடலிலே விழுகின்றது. கடலிலே விடுக்கப்பட்ட தோணி போலக் கரை ஏற முடியாமல் அலைப்புறுகின்றது இந்த உடல்.
துன்பத்தைத்
தரும் பிறவிக் கடலில் இருந்து முத்தியாகிய கரையில் சேர வேண்டுமானால், தெப்பம் ஒன்று தேவை. அந்தத் தெப்பமே
இறைவன் திருவடியாகும். இதனை அப்பர் பெருமான்,
துன்பக்
கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக்
கரை முகந்து ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு
ஒழுகப் பொருந்து ஒளி செய்யும், அப் பொய் பொருந்தா
அன்பர்க்கு
அணியன காண்க ஐயாறன் அடித்தலமே.
என்று
காட்டினார்.
தனியனேன்
பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியைநேர்
துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி
என்னே உய்யுமாறு என்று என்று எண்ணி,
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே!
முதல் அந்தம் இல்லா மல்லல்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. ---
மணிவாசகம்.
அறிவுஇல்
ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித்
தொகையும், இடும்பை ஈட்டமும்
இனையன
பலசரக்கு ஏற்றி, வினை எனும்
தொல்மீ
காமன் உய்ப்ப, அந்நிலைக்
கரு
எனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலன்
எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பு
எனும் பெருங்கடல் உறப்புகுந்து,
அலைக்கும்
துயர்த்திரை
உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்து,
குடும்பம்
என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை
எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு
எனும் நெடும்பாய் கீறி, புணரும்
மாயப்
பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு
கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன்
அணிந்த பொதி அவிழ் சடிலத்துப்
பை
அரவு அணிந்த தெய்வ நாயக!
தொல்
எயில் உடுத்த தில்லை காவல!
வம்பு
அலர் தும்பை அம்பலவாண! நின்
அருள்
எனும் நலத்தார் பூட்டி,
திருவடி
நெடுங்கரை சேர்த்துமா செய்யே. --- கோயில்
நான்மணிமாலை
ஓசை
கெட்டு மடியாமல் ---
ஓசை
- புகழ். புகழ் இழந்து, இறந்து படாமல்.
"ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை
உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். திருவருளால் கிடைத்த பொருளை, இல்லை
என்பவர்க்கு ஈந்து, புகழோடு வாழ்வதுதான் உயிருக்கு ஊதியமாக வருவது.
"தோன்றில்
புகழொடு தோன்றுக, அஃது இல்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று" என்றும் காட்டினார் நாயனார்.
முத்திபெற
வீடு அளித்து
---
முத்தி
- பாச நீக்கம். மல நீக்கம். மல நீக்கத்தைப் பெறுமாறு இறையருள் கூட்ட வேண்டும்.
மலநீக்கம் பெற்றபின், மோட்ச வீடு
வாய்க்கும்.
மயில்
ஆடு சுத்தவெளி சிந்தியாதோ ---
மோட்ச
வீட்டை ஆன்மா அடைந்த பின்னர், ஒப்பற்ற இருள் வெளியிலே இறைவன் புரிகின்ற ஆனந்தத்
திருநடனத்தைத் தரிசித்து, என்றும் நீங்காத பேரின்ப நிலையில் ஆன்மா திளைத்து
இருக்கும். அந்த நிலை வாய்க்கத் திருவுள்ளம் இரங்கவேண்டும் என்று அடிகளார் முருகப்
பெருமானை வேண்டுகின்றார்.
ஓம்
நமச்சிவய சாமி ---
இறைவன்
ஓங்கார வடிவமாக, ஓங்காரப்
பெருளாக உள்ளவன்.
"உய்ய
என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா" என்றார் மணிவாசகப் பெருமான்.
தையலார்
மையலிலே தாழ்ந்து விழக் கடவேனை,
பையவே
கொடு போந்து, பாசம் எனும் தாழ் உருவி,
உய்யுநெறி
காட்டுவித்திட்டு, ஓங்காரத்து உட்பொருளை
ஐயன்
எனக்கு அருளியவாறு
ஆர்
பெறுவார் அச்சோவே. ---
மணிவாசகம்.
முருகப்
பெருமானை "நமசிவயப் பொருளோனே" என்றார் அருணை அடிகளார்.
நமசிவய
என்பது தூல பஞ்சாக்கரம். இறுதியில் வந்த யகரம் தமிழில் நான்காம் வேற்றுமையாம். நம-நமஸ்காரம், சிவய-சிவனுக்கு, எனப் பொருள்படும் வடமொழியில்.
"ந"
என்னும் எழுத்து மும்மலங்களையும் தத்தம் தொழில்களில் ஏவிப் பாகம் வருவித்தற் பொருட்டு
அவற்றோடு உடனாய் நின்று உயிரை மரைத்தலால் திரோத சக்தி என்றும் திரோதமலம் என்றும் கூறப்படும்
சிவ சக்தியையும்,
"ம" என்னும் எழுத்து
உயிரைக் கட்டி நிற்கும் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும்,
"சி"
என்னும் எழுத்து செம்பொருட் கடவுளையும்,
"வ"
என்னும் எழுத்து அம் முழுமுதற் கடவுளோடு நெருப்பில் சூடுபோல் உடனாய் நிற்கும் திருவருளையும்,
"ய"
என்னும் எழுத்து உயிரையும் உணர்த்தும்.
உயிரைத்
திரோத சக்தியால் மலத்தைக் கெடுத்து அருளைக் கெடுத்து சிவம் தன்னோடு அத்துவிதமாக்கிக்
கொள்ளும் என்பது அம்மந்திரத்தின் திரண்ட கருத்து.
திருவைந்தெழுத்தையே
தனது திருமேனியாகக் கொண்டு இறைவன் திருநடனம் புரிவான் என்பது, பின்வரும் உண்மை விளக்கப் பாடல்களால்
தெளிவாகும்.
ஆடும்
படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும்
திருவடியிலே நகரம் கூடும்
மகரம்
உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம்
வாமுடியப் பார்.
அன்பர்கள்
நாடும் திருவடி "ந" காரம் ஆகும். வயிறு "ம" காரம் ஆகும்.
தோள்கள் "சி" காரம் ஆகும். முகம் "வா" ஆகும். திருமுடி "ய"
ஆகும். இதுதூல ஐந்தெழுத்து ஆகும்.
சேர்க்கும்
துடிசிகரம் சிற்கனவா வீசுகரம்
ஆர்க்கும்யகரம்
அபயகரம் பார்க்கில் இறைக்கு
அங்கி
நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும்
மகரம்அது தான்.
உடுக்கையை
ஏந்திய திருக்கை "சி"காரம். வீசிய திருக்கை ஞான உருவாகிய "வா"
ஆகும். அஞ்சாதே என்று காட்டும் அபயத் திருக்கை "ய"காரம். நெருப்பு
ஏந்திய திருக்கை "ந"காரம். முயலகனைக் கீழே அழுத்தும் திருவடி "ம"
காரம் ஆகும்.
இது
சூக்கும ஐந்தெழுத்து.
"சிவயநம
நமசிவய காரணன்" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.
சுத்த
அடியார்களுக்கும் உபகாரி ---
உள்ளத்தால்
தூய அடியார்களுக்கு இறைவன் எவ்வாறெல்லாம் உபகாரம் புரிகின்றான் என்பதை வள்ளல்
பெருமான் உணர்த்தி அருள்வது காண்க.
பாண்டியன்முன்
சொல்லிவந்த பாணன் பொருட்டு,அடிமை
வேண்டி
விறகு எடுத்து விற்றனையே, - ஆண்டுஒருநாள்
வாய்முடியாத்
துன்பு கொண்ட வந்திக்கு ஓர் ஆளாகித்
தூய்முடிமேல்
மண்ணும் சுமந்தனையே,........ஆய்துயர
மாவகஞ்சேர்
மாணிக்க வாசகருக்காய் குதிரைச்
சேவகன்போல்
வீதிதனில் சென்றனையே, -மாவிசையன்
வில்அடிக்கு
நெஞ்சம் விரும்பியது அல்லால், ஒருவன்
கல்அடிக்கும்
உள்ளம் களித்தனையே, -மல்லல் உறும்
வில்வக்கிளை
உதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத்
துரைமகனாய்ச் செய்தனையே, - சொல்அகலின்
நீளுகின்ற
நெய் அருந்த நேர் எலியை மூவுலகம்
ஆளுகின்ற
மன்னவனாய் ஆக்கினையே, - கோள்அகல
வாய்ச்சங்கு
நூல்இழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
கோச்செங்கட்
சோழன்எனக் கொண்டனையே, - ஏச்சுறு நல்
ஆறுஅடுத்த
வாகீசர்க்கு ஆம்பசியைக் கண்டு,கட்டுச்
சோறுஎடுத்துப்
பின்னே தொடர்ந்தனையே,-கூறுகின்ற
தொன்மைபெறுஞ்
சுந்தரர்க்குத் தோழன்என்று, பெண்பரவை
நன்மனைக்குந்
தூது நடந்தனையே.... --- திருவருட்பா.
பரப்
பிரமன் ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே ---
மேலான
பரம்பொருளும், முழுமுதற்கடவுளும்
ஆகிய சிவபெருமானுக்கு, உண்மைப்பொருளை ஓதுவிக்கும் தன்மையை அறிந்தவர் முருகப்
பெருமான்.
ஆசை
பெற்ற குறமாதை நித்தம் வனம் மேவி சுத்த மணம் ஆடி ---
நாவலர் பாடிய நூல்இசையால் வரு
நாரதனார் புகல் ...... குறமாதை
நாடியெ,
கானிடை கூடிய சேவக!
என்று முருகப் பெருமான் வள்ளிநாயகியை நாடிச் சென்று திருமணம் புணர்ந்த
அருட்செயலை அடிகளார் பிறிதொரு திருப்புகழில் தெரிவிக்கின்றார்.
முருகப் பெருமான்
வள்ளி நாயகியைத் திருமணம் புரிந்த வரலாறு
தீய
என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு
வடபுறத்தே,
மேல்பாடி
என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே
கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர்
இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி
என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக
வருந்தி,
அடியவர்
வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு
அயர்ந்தும்,
பெண்
மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.
கண்ணுவ
முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன்
நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம்
சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார்.
பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால்
முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப்
புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில்
நிலைபெற்று நின்றார்.
ஆங்கு
ஒரு சார், கந்தக்
கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு
இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின்
வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய்
நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த
குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக்
குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக
இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.
அதே
சமயத்தில்,
ஆறுமுகப்
பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு
பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய
அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில்
பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது
என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய
கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு
அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும்
சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில்
இட்டு,
முருகப்
பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை
அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக
மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.
வேடுவர்கள்
முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர்
குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில்
உலாவியும், சிற்றில்
இழைத்தும்,
சிறு
சோறு அட்டும்,
வண்டல்
ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது
வளர்ந்து, கன்னிப்
பருவத்தை அடைந்தார்.
தாயும்
தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய
ஆசாரப்படி,
அவரைத்
தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும்
காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள்
தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில்
இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.
வள்ளி
நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை
மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத்
தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப்
பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின்
திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை
மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார்.
வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும்
அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள்
புரிந்தார்.
வள்ளிநாயகிக்குத்
திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில்
வீரக்கழலும்,
கையில்
வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை
மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த
நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.
முருகப்பெருமான்
வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள
மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது
தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து
விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப்
போகும் வழி எது?
என்று
வினவினார்.
நாந்தகம்
அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்
ஏந்திழையார்கட்கு
எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்
பூந்தினை
காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு
ஆய்ந்திடும்
உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல்
என்றான்.
வார்
இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு
உன்தன்
பேரினை
உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய்
என்னின்,
ஊரினை
உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது
என்னில்
சீரிய
நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.
மொழிஒன்று
புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,
விழிஒன்று
நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்
வழி
ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய்
ஆயின்
பழி
ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.
உலைப்படு
மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான்
போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு
மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு
தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.
இவ்வாறு
எந்தை கந்தவேள், உலகநாயகியிடம்
உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள்
சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை
மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம்
நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது
வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.
நம்பி
சென்றதும்,
முருகப்
பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே
புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை
மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன். தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம்
புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள்
என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக்
கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி
நடுங்கி,
"ஐயா!
எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி
உய்யும்" என்றார். உடனே, முருகப்
பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.
நம்பி, அக் கிழவரைக்
கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி
உண்டாகுக.
உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப்
பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில்
விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு
வேண்டியது யாது?" என்று
கேட்டான்.
பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது
கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள
குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள்
கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது
குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும்
துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக்
கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச்
சேர்ந்தான்.
பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும்
பசி" என்றார். நாயகியார் தேனையும்
தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார்.
"சுவாமீ!
ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில்
சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி
காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார்
பெருமான்.
(இதன்
தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் -
ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம்
பெற,
பக்குவப்படாத
ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத்
தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம்
என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி
தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப்
பிராட்டியார்,
பக்குவப்
படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா
என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார் என்று கொள்வதும் பொருந்தும்.)
வள்ளிநாயகியைப்
பார்த்து,
"பெண்ணே!
எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச்
செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும்
என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை
அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு
சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து
விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.
தனக்கு
உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான், தந்திமுகத் தொந்தியப்பரை
நினைந்து,
"முன்னே
வருவாய், முதல்வா!"
என்றார்.
அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர்.
அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத்
தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய
அவரும் நீங்கினார்.
முருகப்
பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு
ஆனந்தமுற்று,
ஆராத
காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத்
திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து
அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள்
மழை பொழிந்து, "பெண்ணே! நீ
முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க
வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம்
செல். நாளை வருவோம்" என்று மறைந்து
அருளினார்.
அம்மையார்
மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள
புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து, "அம்மா!
தினைப்புனத்தை
பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச்
சென்றேன்" என்றார்.
"அம்மா!
கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது.
முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை
இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.
மை
விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய்
வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை
வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை
இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.
இவ்வாறு
பாங்கி கேட்க, அம்மையார், "நீ என் மீது
குறை கூறுதல் தக்கதோ?" என்றார்.
வள்ளியம்மையாரும்
பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார்
போல வந்து,
"பெண்மணிகளே!
இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி
அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது
முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும்
உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று
எண்ணி,
புனம்
சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன்
தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை
வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்"
என்றாள்.
தோட்டின்
மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்
கூட்டிடாய்
எனில், கிழிதனில் ஆங்கு அவள்
கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது"
என்று உரைத்தான்.
பாங்கி
அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல்
ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத்
தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில்
மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை
உரைத்து,
உடன்பாடு
செய்து,
அம்மாதவிப்
பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு
மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி
நீங்கவும், பரமன்
வெளிப்பட்டு,
பாவையர்க்கு
அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச்
செல்" என்று கூறி நீங்கினார்.
இவ்வாறு
பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி
மகிழ்ந்து,
வள்ளியம்மையை
நோக்கி,
"அம்மா!
மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.
வள்ளிநாயகி
அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி
தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு
குடிலுக்குச் சென்றார்.
வள்ளிநாயகியார்
வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர்.
பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள
தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர்
உள்ளம் வருந்தி,
முருகனை
வழிபட்டு,
வெறியாட்டு
அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம்
இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று
குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.
முருகவேள்
தினைப்புனம் சென்று, திருவிளையாடல்
செய்வார் போல்,
வள்ளியம்மையைத்
தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த
பாங்கி,
வெளி
வந்து,
பெருமானைப்
பணிந்து,
"ஐயா!
நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள்.
இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம்
ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி
வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.
தாய்துயில்
அறிந்து,
தங்கள்
தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில்
அறிந்து,
மற்றுஅந்
நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில்
கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில்
கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.
(இதன்
தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில்
திருவருளாகிய பாங்கி, பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப்
பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில்
மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)
வள்ளி
நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு
இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று
தொழுது நின்றார்.
பாங்கி
பரமனை நோக்கி,
"ஐயா!
இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும்.
இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து
அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத்
தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன்
சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி
விடுத்து,
குகைக்குள்
சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில்
தங்கினார்.
விடியல்
காலம்,
நம்பியின்
மனைவி எழுந்து,
தனது
மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான்
அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம்
கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல
ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது. எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.
முருகவேள், "பெண்ணரசே!
வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள்
போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி
வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து
அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி
வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக்
கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை
விட்டு நீங்க,
அம்மையாரும்
ஐயனைத் தொடர்ந்து சென்றார்.
இடையில்
நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக்
கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும்
சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு
வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார்
"அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன்
எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு
திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின்
அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே
இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள்
என்ன செய்வோம்?
தாயே
தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக
எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப்
பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.
கந்தக்
கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார்
தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய
வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று
மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில்
வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.
முருகப்
பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள்
பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள்
வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.
ஓத
அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறுபட்டு அலற, சூர(ன்) வெற்பு அவுணரோடு பட்டுவிழ, வேலை விட்ட புகழ்
அங்கி வேலா ----
மாயையின்
மகனாகிய சூரபன்மன் சிவமூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று உள்ளம் தருக்கி, அறநெறிப் பிறழ்ந்து, அமரர்க்கு அலக்கண் விளைத்த காலத்தில், குமாரக்கடவுள் தேவர் சிறை தீர்ப்பான்
அமர்த் தொடங்கி அசுரர் அனைவரையும் அட்டனர். முடிவில் சூரபன்மன் போர்க்கோலங்கொண்டு
ஆயிரத்தெட்டு அண்டங்களிலும்
உள்ள சேனைகளைத் திரட்டிக்கொண்டு போர்க்களம் உற்றனன். அப் பெருந்தானையைக் கண்ட
பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள்ளம்
நடுங்கினர். தேவர்கள் அளக்கவொணா அலக்கணை அடைந்தனர். குகப்பெருமானார் அப்பெருஞ்
சேனைகளையெல்லாம் அழித்தனர். முருகவேளும் சூரபன்மனும் நெடுநேரம் போர் புரிந்தனர்.
சூரபன்மனுடையப் பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன.
அவுணர்கோன்
முடிவில், “இக்குமரனைக்
கொணர்ந்து யுத்தத்தை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று சிறிது சினந் தணிந்தபின்
இக்குமரனோடு போர் புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து உலகம் முழுவதும்
பெரிய இருள் சூழுமாறு செய்து, அவ்விருளில் வாளை ஏந்தித்
தேவர்களைக் கொல்லும் பொருட்டு விண்ணிடைப் பாய்ந்தனன். அதனைக் குறிப்பால் உணர்ந்த
அரியயனாதி அமரர்கள்,
தேவர்கள்
தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க்கு
இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு
எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும்
ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்”
என்று
முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிரு முகங் கொண்டுள்ள முழுமுதற்கடவுள், சேய் அழுகை கேட்ட தாயைப்போல் தண்ணருள்
சுரந்து, தமது திருக்கரத்தில்
வைகும் செங்கதிர் வேலாயுதத்தை நோக்கி, “நீ
விரைந்து சென்று சூரபன்மனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப்
பிளந்து வருதி” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள்
ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட
இருள் உருவத்தை இமைப்பொழுதில் அழித்தது.
“அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள் மேல் விடுவோனே” --- (இருவர்)
திருப்புகழ்.
சூரபன்மன்
“முடிவில்லாத வரத்தையுடைய என்னை இவ்வேற்படை யாது செய்ய வல்லது? இதன் திறத்தைக் காண்கின்றனன்” என்று
அண்ட முகடுகள் நடுங்கச் சிரித்து,
மிகுந்த
சீற்றங்கொண்டு “சமுத்திரம், பூதலம், பிரமாதி தேவர்களது உலகங்கள், உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே அழிப்பேன்”
என்று விரைந்து சென்றுகடல் நடுவில்,
நெருப்புப்
போலும் தளிர்களும், புகைபோன்ற இலைகளும், மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும், மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும், மாணிக்கத்தை ஒத்த பழங்களும் கொண்டு
பிரமாண்டச் சுவர் வரையிலும் வேரோடி,
இலக்க
யோசனைத் தூரம் அளவும் விசாலித்த தலைகீழான மாமர வடிவங்கொண்டு, சகல லோகங்களையும் நடுநடுங்க மோதினன்.
வன்னியின்
அலங்கல் கான்று, வான்தழை புகையின் நல்கி,
பொன்என
இணர்கள் ஈன்று, மரகதம் புரையக்
காய்த்து,
செந்நிற
மணிகள் என்னத் தீப்பழம் கொண்டு, கார்போல்
துன்னுபல்
கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்.
அட்ட
நாகங்களும் திக்கஜங்களும் சந்திர சூரியரும் எல்லாவுயிர்களும் அஞ்சி ஓலமிட்டன. அந்த
மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா உலகங்களும் அசைந்தன; குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத்
தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அண்டங்களெல்லாம் தகர்ந்தன. நாரணன் உலகும்
நான்முகன் உலகும் அழிந்தன. தேவர்கள் எல்லாம் வெருவி, திருக்கயிலையை நாடி இரிந்தனர். அக்கால் அறுமுகப்
பெருமான் விடுத்த அயிற்படை, ஆயிரங்கோடி அண்டத்து
அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் பேரனல் வடிவு தாங்கிச் சென்று,
தேயுவின்
எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்து
ஆயிரகோடி
அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன
மீஉயர்ந்து
ஒழுகி ஆன்று ஓர் வெருவரும் தோற்றங் கொண்டு
நாயகன்
தனது தெய்வப் படைக்கல நடந்த தன்றே.
மூதண்ட
முகடுவரை வளர்ந்தோங்கி கிளைகளை அசைத்து உலகங்களை எல்லாம் அசைத்து அழிக்கின்ற
மாமரத்தை இரு கூறாகப் பிளந்தது.
விடம்பிடித்து
அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம்பிடித் திட்டதீயில் தோய்த்துமுன் இயற்றி அன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி,
மடம் பிடித் திட்டவெஞ்சூர் மாமுதல் தடிந்தது அன்றே.
இடம்பிடித் திட்டதீயில் தோய்த்துமுன் இயற்றி அன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி,
மடம் பிடித் திட்டவெஞ்சூர் மாமுதல் தடிந்தது அன்றே.
கருத்துரை
முருகா!
நோயுற்ற வாழ்வுறாமல், தாயுற்று வந்து என்னைத் தயாவோடு காத்தருளி, தேவரீரது பொற்பதத்தில்
வாழ அருள்.
No comments:
Post a Comment