8. நல்லது நாயகனுக்கு
---
"அல்லமரும் குழலாளை வரகுணபாண்
டியராசர் அன்பால் ஈந்தார்!
கல்லைதனில் மென்றுமிழ்ந்த ஊன்அமுதைக்
கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!
சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா
வடுவும்ஒரு தொண்டர் ஈந்தார்!
நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக்
கென்றதனை நல்கு வாரே."
இதன் பொருள் ---
அல் அமரும் குழலாளை வரகுண பாண்டிய ராசர் அன்பால் ஈந்தார் - இருள்போலும் கரிய நிறம் பொருந்திய கூந்தலை உடையவளை வரகுண பாண்டிய மன்னர் அன்புடன் அளித்தார்,
கல்லைதனில் மென்று உமிழ்ந்த ஊன் அமுதைக் கண்ணப்பர் கனிவால் ஈந்தார் - தேக்கிலைக் கலத்திலே மென்று உமிழ்ந்த இறைச்சியாகிய உணவைக் கண்ணப்ப நாயனார் அன்புடன் காளத்தி இறைவருக்குக் கொடுத்தார்.
சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும் ஒரு தொண்டர் ஈந்தார் - புகழ் பெறுகிற திருத் தண்டனை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருள் ஆகிய தண்டலையாருக்குச் செங்கீரையும் மாவடுவும் ஓர் அடியவர் படைத்தார்.
பெரியோர் நல்லது கண்டால் அதனை நாயகனுக்கு என்று நல்குவார் - சான்றோர்கள் நல்ல பொருளைப் பார்த்தால், அது நம் இறைவனுக் காகட்டும் எனக் கொடுப்பார்கள்.
வரகுணபாண்டியர் தாம் மணந்த மனைவி அழகாய் இருந்ததனால் சிவபிரானுக்கென்று படைத்தார்; அந்த அம்மையார் சிவலிங்கத்தில் மறைந்தார். ஆனால்; இவர் பற்றிய கைமட்டும் மறையாதிருந்தது வரகுணர் வருந்திச் சிவபிரானை வேண்ட அக்கையும் மறைந்தது. வேடரான திண்ணனாா் காளத்தியப்பரைக் கண்டவுடன் தம்மை மறந்து தாயினும் அன்புடையராய்க், கான விலங்குகளின் ஊனை நெருப்பில் வதக்கி வாயிலிட்டுச் சுவை பார்த்துக் கல்லையில் வைத்துக் கொண்டு வந்து ஊட்டினார்.
கணமங்கையில் வாழ்ந்த அரிவாள்தாய நாயனார் திருத் தண்டலை இறைவர்க்குச் செங்கீரையும் மாவடுவும் (தாம் உணவின்றி இளைத்தபோது கூட) படைத்து அருள்பெற்றார்.
அடியவர்கள் தமக்கு வாய்த்த நல்ல பொருளை இறைவனுக்கு அளிப்பர் என்பது கருத்து.
No comments:
Post a Comment