68. விருந்துக்கு உரிய கிழமை

 


               68. விருந்துக்கு உரிய கிழமை

                                 ----- 


செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்

     செய்யொணா துண்ணொ ணாது;

  திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்

     செவ்வாய் விருந்த ருந்தார்;


பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்

     பொன்னவற் கதிக பகைஆம்;

  புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்

     போனவுற வுந்தி ரும்பும்;


மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்

     மனமொத் திருந்த இடமே

  வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ

     வாய்த்தநாள் என்ற றியலாம்;


அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அம்கையில் விளங்கி வளர் துங்க மழுவாளனே - உள்ளங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுப்படையை உடையவனே!, அண்ணலே - பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


செங்கதிர்க்கு விருந்து ஒருவர் செய்ய ஒணாது; உண்ண ஒணாது; உறவு போம், பகை வரும் - ஞாயிற்றுக் கிழமையில் ஒருவர் விருந்து செய்யவும் உண்ணவும் ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும்;


திங்களுக்கு உறவு உண்டு; நன்மை ஆம் - திங்கட் கிழமையில் (விருந்து உண்டால்) உறவு வரும்; வேறு நன்மையும் உண்டாகும்;


செவ்வாய் விருந்து அருந்தார், பகை வரும் - செவ்வாய்க் கிழமையில் விருந்து உண்ணமாட்டார், (உண்டால்) பகை உண்டாகும்;


பொங்கு புதன் நன்மை உண்டு; உறவுஆம் - நலம் மிகு புதன்கிழமையில் நலம் உண்டாகும், உறவும் உண்டாகும்; 


பொன்னவற்கு விருந்து உண அதிக பகை ஆம் - வியாழனில் விருந்து உண்டால் மிகு பகைவரும்;


புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போன உறவும் திரும்பும் - வெள்ளிக் கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும் திரும்புவர்;


மங்குல் நிகர் சனிவாரம் நல்லது ஆம் - முகில் அனைய சனிக்கிழமை நலம் உண்டாகும்;


இதனினும் மனம் ஒத்து இருந்த இடம் வாலாயமாய்ப்போய் விருந்து உண விருந்து உதவ வாய்த்த நாள் என்று அறியலாம் - மேலும் இந்த நாளே உள்ளம் ஒத்து உள்ள இடத்தில் வழக்கமாகச் சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என உணரலாம்.


சனியின் நிறம் கருமை. ஆகையால், ‘மங்குல் நிகர் சனி' என்றார். அகம் + கை - அங்கை. உள்ளங்கை. விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் தகாதவை; மற்ற நாள்கள் நலமானவை என்பது கருத்து.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...