67 - மனை கோலுவதற்கு மாதம்

 

              67. மனை கோலுவதற்கு மாதம்

                                -----


சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்

     செல்வம்உண் டதினும் நலமே

  சேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்

     தீயிட்ட தானி யாகா;


வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்

     வீறல்ல; ஆவ ணிசுகம்;

  மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;

     மேன்மையுண் டைப்ப சிக்கே;


உத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில்

     ஓங்குபா ரதம்வந் தநாள்;

  உயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம்

     உம்பர்கோன் உண்ட தாகாது;


அத்தநீ! மாரனை எரித்தபங் குனிதானும்

     ஆகுமோ! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அத்த - தலைவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, சித்திரைத் திங்கள் தனில் மனைகோல மனைபுகச் செல்வம் உண்டு - சித்திரைத் திங்களில் வீடுகோலினாலும் வீடு குடி புகுந்தாலும் செல்வம் உண்டாகும், அதினும் வைகாசிக்கு நலமே சேரும் - சித்திரையிலும் வைகாசித் திங்களில் நன்மையே உண்டாகும், மேனாள் ஆனி அரன்புரம் தீ இட்டது; ஆகா - முற்காலத்தில் ஆனித் திங்களிலேதான் சிவபெருமான் முப்புரத்திற்கு நெருப்பிட்டது ஆகையால் ஆனி ஆகாது, வெற்றிகொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம் வீறு அல்ல - வெற்றியைக் கொண்ட இராமன் மனைவி சிறைசென்ற ஆடித்திங்கள் சிறப்புடையது அன்று, ஆவணி சுகம் மேவிடும் - ஆவணித் திங்கள் நலம் பொருந்தும், கன்னி இரணியன் மாண்டது; ஆகாது - புரட்டாசித் திங்கள் இரணியன் இறந்தது, ஆகையால், தகாதது, ஐப்பசிக்கு மேன்மை உண்டு - ஐப்பசித் திங்களில் உயர்வு ஆண்டு, கார்த்திகைக்கு உத்தமம் - கார்த்திகைத்திங்களில் நன்மை, ஓங்கு பாரதம் வந்த நாள் மார்கழியில் ஆகாது - பெரிய பாரதச் சண்டை வந்த காலமான மார்கழித் திங்களில் தகாது, மகரத்தில் உயர்வு உண்டு - தைத்திங்களில் மேன்மை உண்டாகும், உம்பர்கோன் விடம் உண்டது மாசி மாதத்தில் ஆகாது - வானவர் தலைவனான சிவபிரான் நஞ்சுண்டதாகிய மாசித்திங்களில் தகாது, நீ மாரனை எரித்த பங்குனி தானும் ஆகுமோ - நீ காமனை எரித்த பங்குனித்திங்களும் தகுமோ? (தகாது)


      (வி-ரை.) கதிரவன் ஆடித்திங்களில் கடகராசியில் செல்கிறான். ஆகையால் கடகம் ஆடி ஆயிற்று. இவ்வாறே கன்னி மகரம் ஆகியவற்றிற்கும் கொள்க.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...