"அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும்,
பாதாளம் அதில் சென்றாலும்,
பட்டம்என வான் ஊடு பறந்தாலும்,
என்ன? அதில் பயன் உண்டாமோ?
பிட்டுவர மண்சுமந்த தண்டலையா
ரே! முன்னாள் பெரியோர் கையில்
இட்டபடி யே ஒழிய வேறு ஆசைப்
படின்வருவது இல்லை தானே."
இதன் பொருள் ---
பிட்டு வர மண்சுமந்த தண்டலையாரே - பிட்டை விரும்பி மண்ணைச் சுமந்த திருத் தண்டலை இறைவரே!, முன்நாள் பெரியோர் கையில் இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின் வருவது இல்லை - முற்காலத்தில் பெரியோர்களின் கையிலே கொடுத்தவாறே தவிர மற்றொரு வகையாக ஆசைப்பட்டால் ஒன்றும் வராது. (ஆகையால்), அட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும் - எட்டுத் திக்கிலும் எங்கும் சென்று திரிந்து உழைத்தாலும். பாதாளம் அதில் சென்றாலும் - பாதாள உலத்திலே சென்று தேடினாலும், வான் ஊடு பட்டம் எனப் பறந்தாலும் - வானத்திலே காற்றாடி போலப் பறந்து திரிந்தாலும், என்ன அதில் பயன்தான் உண்டோ - என்ன கிடைக்கும்? அவ்வாறு அலைவதனால் பயன் ஏதும் உண்டாகாது.
‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோடு' என்பது பழமொழி. இந்தப் பழமொழியினை வைத்து ஒரு பாடலும் மேலே வரும். சொக்கநாதப் பெருமான் மணிவாசகர் பொருட்டாகப். பிட்டுக்கு மண் சுமந்தது மதுரையில். வந்தியம்மை என்னும் ஒரு பிட்டு வாணிச்சிக்காக, சோமசுந்தரக் கடவுள் கூலியாள் போல் வந்து உதிரும் பிட்டைக் கூலியாக விரும்பிப் பெற்று மண் சுமந்தார் என்று திருவிளையாடல் புராணம் கூறும்.
தக்க பெரியோர் கையில் கொடுத்து உதவியது சிறு பொருளானாலும், அது மலைபோல, நிலம் போலப் பெருகும் என்பது நாலடியார் கூறும் கருத்து. உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்வதும், ஆபத்து நேர்ந்த காலத்தில் செய்வதும், பயனை எதிர்பாராது செய்வதும், பிறர் செய்த உதவிக்கு ஏற்றவண்ணம், பிரதி உதவி (கைம்மாறு) செய்யாது, அவர் மனம் மகிழும் வண்ணம், தமது தகுதிக்கு ஏற்றவாறு மறு உதவி செய்வதும் ஆகும். காரணம் கருதியும், பொருள் கருதியும், காலம் கருதியும் செய்யும் உதவியானது, ஒரு பயனை நோக்கியதாக இருத்தலால், அது சிறந்தது ஆகாது.
நல்லோர்க்குச் செய்த உதவியானது எப்போதும் நிலைத்து நின்று, நல்ல பயனையே தரும் என்பதற்குப் பின்வரும் பாடல்களைக் காணலாம்.
"உறக்கும் துணையது ஓர் ஆலம்வித்து, ஈண்டி
இறப்ப நிழல் பயந்தாஅங்கு, - அறப்பயனும்
தான்சிறிது ஆயினும், தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்." --- நாலடியார்.
இதன் பொருள் ---
உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து - (செயல் ஏதும் இல்லாமல் ஒடுங்கி இருக்கின்ற) மிகச் சிறிய அளவினதான ஓர் ஆலம் விதையானது, ஈண்டி - (மண்ணில் விழுந்து முளைத்துத்) தழைத்துப் (பெரிய மரமாகி), இறப்ப நிழல் பயந்தாங்கு - (பல நூறு பேர் வந்து தங்கி, இளைப்பாற) மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப் பயனும் தான் சிறிதாயினும் - அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தருகின்ற பொருளும், அளவில் சிறியதே ஆனாலும், தக்கார் கைப் பட்டக்கால் - தகுதியுடைய பெரியோர் கையில் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்து விடும் - வானமும் சிறிது என்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.
"கடித்தாமரைக் கண்ணன்விழிக் கமலம் தர,
அடித்தாமரைச் சுடர்ப்பரிதி அளித்தருளினை, அதனால்
புதுமலர்ப் பொழில் தில்லை வாண!
உதவியின் வரைத்தோ அடிகள் கைம்மாறே."
என்கின்றார் "சிதம்பர செய்யுட் கோவை" என்னும் நூலில் குமரகுருபர அடிகள்.
இதன் பொருள் ---
தாமரைக் கண்ணன் ஆகிய திருமால் தனது கண்ணை இடந்து, சிவபெருமான் திருவடியில் இட்டுப் பூசையை நிறைவு செய்தான். அதற்கு, சிவபெருமான் சூரியன் போலப் போரொளி விளங்கும் (சலந்தராசுரனை வதம் செய்த) சக்கரப்படையை அவன் கையில் தந்தான். எனவே, மேலோர்க்குச் செய்த உதவி மேலான பயனை விளைக்கும். சிவபெருமான் அருளிய உதவி, திருமால் புரிந்த பூசைக்கும் மேலானது. எனவே, சிவபெருமான் திருமால் புரிந்த பூசனைக்குக் கைம்மாறாகப் புரிந்த உதவியானது மிக உயர்ந்தது. மேலான பரம்பொருளைப் பூசித்ததால், மேலான பலனைத் திருமால் பெற்றார்.
"மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனுநெறி
போன தண்குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன, தழைத்தது நீத்தமே." --- கம்பராமாயணம்.
இதன் பதவுரை ---
மானம் நேர்ந்து - மான உணர்வு பொருந்தி; அறம் நோக்கி - தருமநெறி கருதி; மனுநெறி போன - மனுநீதிப்படி நடக்கும், தண் குடை வேந்தன் புகழ் என - குளிர்ந்த வெண்கொற்றக் குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும்; ஞானம் முன்னிய - ஞான வழியை நாடுகின்ற; நான்மறையாளர் கைத் தானம் என்ன - நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்; நீத்தம் தழைத்தது - சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.
மானம் பேணி அறநெறி நோக்கி உயிர்க் குலத்திற்கு நல்லருட் காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும். தக்கார்க்கு வழங்கிய கொடையின் பயன் ஓங்கும். அதுபோல, சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஓயாது.
ஓலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல் நிழற்றும் குடை நிழலுக்காக ஏற்பட்டதன்று. துன்புறும் உயிர்க் குலத்தின் துயர் துடைக்கும் அருளுக்கு ஓர் அடையாளம்.
மாவலிச் சக்கரவர்த்தி, "உனது காலடிகளால் மூன்று அடி மண்ணை அளந்து கொள்க" என்று கூறிக்கொண்டு வாமனன் கையிலிருந்த குண்டிகை நீரை வாங்கித் தாரை வார்த்தான். மாவலி தாரை வார்த்த நீரரானது, தனது கையில் பட்டதும், பெற்றவர்களும் இகழும்படியான மிகச் சிறிய வடிவத்தை உடைய வாமனமூர்த்தி, வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். அவன் உயர்ந்த்து எப்படி இருந்தது என்றால், உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல இருந்தது. "உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்ற திருக்குறள் கருத்துத் தோன்ற, உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல, வாமனமூர்த்தி வானுற ஓங்கி வளர்ந்து நின்றான் என்றார் கம்பநாட்டாழ்வார்.
"கயம்தரு நறும்புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து, எதிர்
வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்,
உயர்ந்தவக்கு உதவிய உதவி ஒப்பவே." --- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
கயம் தரு நறும் புனல் - குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர்; கையில் தீண்டலும் - தனது கைகளில் தீண்டபப்பட்ட உடனே; பயந்தவர்களும் இகழ் குறளன் - பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமனமூர்த்தி; எதிர் பார்த்து வியந்தவர் வெருக்கொள - எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்- அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல; விசும்பின் ஓங்கினான் - வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.
இதையே "சிவஞானசித்தியார்" என்னும் மெய்கண்ட சாத்திர நூல் கூறுவதையும் காணலாம்...
"சிவஞானச் செயல்உடையோர் கையில் தானம்
திலம்அளவே செய்திடினும், நிலம் மலைபோல் திகழ்ந்து,
பவமாயக் கடலின் அழுந் தாதவகை எடுத்து,
பரபோகந் துய்ப்பித்து, பாசத்தை அறுக்கத்
தவம்ஆரும் பிறப்புஒன்றில் சாரப் பண்ணி,
சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே,
நவம்ஆகும் தத்துவஞா னத்தை நல்கி,
நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே." --- சிவஞானசித்தியார்.
இதன் பதவுரை ---
சிவஞானச் செயல் உடையோர் கையில் தானம் திலம் அளவே செய்திடினும் - (விதிவழி இன்றிப் பத்தி வழியில் நின்கின்ற) சிவஞானிகள் கையில் தானம் செய்து அளித்த பொருள் சிறிதே ஆயினும், நிலம் மலைபோல் திகழ்ந்து - நிலமும் மலையும் போல விரிவாகி ஓங்கி விளங்கும். (அத் தானம் செய்த அந்த பத்தருக்கு), பரபோகம் துய்ப்பித்து - மேலாகிய (சிவசாலோகம் முதலிய பதங்களில் பொருந்தி உள்ள) இன்பங்களை அனுபவிக்கச் செய்து, பவமாயக் கடலில் அழுந்தாத வகை எடுத்து - சனனம் மரணம் என்னும் கடலியல் அமிழ்ந்தாத வண்ணம் எடுத்து, பாசத்தை அறுக்க - பாசத்தினை நீக்க, தவம் ஆரும் பிறப்பு ஒன்றில் சாரப் பண்ணி - தவம் செய்தற்கு உரிய (உயர்ந்த குலத்தில்) ஒரு பிறவியை அடையச் செய்து, சரியை கிரியா யோகம் தன்னினும் சாராமே - சரியை கிரியை யோகங்கள் (ஏனோர்க்குப் போலக் கால நீட்டிப்பும் அருமையும் இன்றி) எளிதில் கைகூடி முற்றுப் பெறச் செய்து, நவம் ஆகும் தத்துவ ஞானத்தை நல்கியே நாதன் அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தான் - (முடிவில்) புதுமையாகிய உண்மை ஞானநெறியைத் தலைப்படுத்தி முதல்வனது செங்கமல மலர்போலும் திருவடியாகிய வீட்டினை எய்துவிக்கும்.
சிவஞானம் மிகுந்த அடியார்கள் கையில் கொடுத்த தானமானது, அதன் அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், அதன் பயனானது, இந்த நிலம் போலப் பரந்து விளங்கும். மலை போல மாண்பு பெற்று விளங்கும்.
இதனையே, நமது கருமூலம் ஆறுக்க வந்த திருமூல நாயனாரும் வலியுறுத்துவார்.
"திலம் அத்தனையே சிவஞானிக்கு ஈந்தால்,
பலமுத்தி சித்தி பரபோகமும் தரும்;
நிலம் அத்தனைப் பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்,
பலமும் அற்றே, பரபோகமும் குன்றுமே." --- திருமந்திரம்.
இதன் பொருள் ---
கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னே ஆயினும், அதனைச் சிவஞானம் கைவரப் பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெரும் சித்திகளையும், பதமுத்தி, அபரமுத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று, யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலம் அத்தனைப் பொன்னைக் கொடுத்தாலும், அது யாதும் பயன் தராது. அல்லாமல், ஞானம் குறைதற்கும் ஏதுவாகி விடும்.
குறித்ததொரு பயனுக்குத் தடையாய் நிற்கும் தீவினை நீங்குதலும், அதற்கு ஏதுவாய நல்வினை கிடைத்தலும் கருதி, உயர்ந்தோரை வருவித்து அவரை வழிபட்டுக் கொடுத்தல் கொடையாகும்.
எனவே, தக்கார்க்கு உதவி செய்தல் வேண்டும். அது சிறிதளவாக இருந்தாலும் பெரும்பயனைத் தரும் என்பதை அறிதல் வேண்டும். இந்த நற்செயலை விடுத்து, பேராசை கொண்டு அலைவதால் பயனில்லை என்பது இப் பாடலின் கருத்து.
No comments:
Post a Comment