52. நல்ல செயல்கள்

 



                    52. நல்ல செயல்கள்

                                 -----


"கடுகடுத் தாயிரம் செய்குவதில் இன்சொலாற்

     களிகொண் டழைத்தல்நன்று

கனவேள்வி ஆயிரம் செய்வதிற் பொய்யுரை

     கருத்தொடு சொலாமைநன்று


வெடுவெடுக் கின்றதோர் அவிவேகி உறவினில்

     வீணரொடு பகைமைநன்று

வெகுமதிக ளாயிரம் செய்வதின் அரைக்காசு

     வேளைகண் டுதவல்நன்று


சடுதியிற் பக்குவம் சொல்லும் கொடைக்கிங்கு

     சற்றும்இலை என்னல்நன்று

சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற

     தாரித்தி ரியநன்றுகாண்


மடுவினில் கரிஓலம் என்னவந் தருள்செய்த

     மால்மருகன் ஆனமுதல்வா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---


மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள் செய்த மால்மருகன் ஆன முதல்வா - ஒரு மடுவிலே (முதலையின் வாயில் அகப்பட்ட)  யானை ஓலம் என்று கதற,  வந்து (முதலையைக் கொன்று) காத்தருளிய திருமாலின் மருகனான தலைவனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களிகொண்டு அழைத்தல் நன்று - முகம் கடுத்துப் பல உதவிகள் செய்வதைக் காட்டினும் இனியமொழியாலே மனமகிழ்வுடன் வரவேற்பது நல்லது; 

கனவேள்வி ஆயிரம் செய்வதில் பொய்உரை கருத்தொடு சொலாமை நன்று - ஆயிரம் பெரிய வேள்விகள் செய்வதினும் பொய்ம்மொழியைக் கருத்துடன் கூறாமை நல்லது.

வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் விவேகியோடு பகைமை நன்று - வெடுவெடு என்று நடந்துகொள்கிற முட்டாளின் நட்பினைக் காட்டிலும், அறிவாளியொடு பகை கொள்ளுதல் நல்லது; 

வெகுமதிகள் ஆயிரம் செய்வதின், அரைக்காசு வேளைகண்டு உதவல் நன்று - ஆயிரம் பரிசுகள் கொடுப்பதிலும், காலம் அறிந்து உதவிசெய்தல் நல்லது; 

சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு, இங்கு சற்றும் இலை என்னல் நன்று - விரைந்து நயமாகப் "போய் வா" என்று கூறுகின்ற கொடைத்தன்மைக்கு, "இப்போது இங்குச் சிறிதும் இல்லை" என்பது நல்லது; 

சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று - செல்வத்துடன் நோயால் வருந்துவதைவிட நோயில்லாத வறுமையே நல்லது.


                                    முதலை வாயினின்று யானையைக் காத்த கதை:

     இந்திரத்துய்மன் என்ற அரசன் ஒரு முனிவர் சாபத்தினாலே யானையாகிக் காட்டில் அலைந்துகொண்டிருந்தான். ஒருநாள் ஒரு மடுவிலே நீர் பருகும்போது அந்த யானையின் காலை முதலை பிடித்துக்கொண்டது. அது, ‘ஆதிமூலமே! வந்து காத்தருள்க!' என ஓலமிட்டது. உடனே திருமால் அங்குத் தோன்றி முதலையைத் தம் சக்கரத்தாலே பிளந்து யானையை விடுவித்தார். யானைதன் சாபமும் நீங்கியது.

     இன்சொல், பொய்ம்மை, அறிவிலியோடு கூடாமை வேண்டும்; இயன்ற வரையில் காலத்திலே உதவுதல் வேண்டும்; இரப்போரை ஏமாற்றுதல் கூடாது; "நோயற்ற வாழ்வே குறைவு அற்ற செல்வம்"  என்பது இப்பாடலின் கருத்து.   


பின்வரும் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.

"நல்லவர்கள் வாயால் நவிலும் மொழி பொய்யாமல்,

இல்லை எனாது உள்ள மட்டும் ஈவார்கள்; --- நல்லகுணம்

அல்லவர்கள் "போ வா" என்று ஆசை சொல்லி நாள் கழித்தே

இல்லை என்பார் இப் பாரிலே."


  மேலோர் தாழ்ந்தோர் இயல்பு பற்றி, சீகாழி அருணாசலக் கவிராயர் பாடிய இப் பாடலின் பொருள்---


  இவ்வுலகில் நல்லவர்கள் தமது வாயால் சொன்ன சொல் தவறாது, இல்லை என்று வந்தோர்க்கு, இல்லை என்று சொல்லாமல், தம்மிடத்தில் பொருள் இருக்கும் வரையில் கொடுத்து உதவுவார்கள். நல்லவர் அல்லாத புல்லர்கள், தம்மிடத்தில் வந்தவர்களை, "இன்று போய் நாளை வாருங்கள்" என்று ஆசை மொழிகளைச் சொல்லி, வீணே நாள்களைக் கழித்து, இறுதியில் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.


இந்தப் பாடலின் கருவாக அமைந்தது, சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடல் ஆகும். இல்லை என்று, செல்வந்தரிடம் சென்று இரப்பவரை ஆற்றுப்படுத்தும் முகமாகப் பாடிய பின்வரும் அருமையான பாடல்.


"நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல, நாளையும்

"உச்சிவம்" எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்,

பிச்சர், நச்சு அரவு அரைப் பெரியசோதி, பேணுவார்

இச்சை செய்யும் எம்பிரான் எழில்கொள் காழி சேர்மினே!"  


இதன் பொருள் ---


  பொருளை விரும்பிப் பிறர், தமது மனை வாயிலை வந்து  அடையக் கண்டும், அச் செல்வர், (தன்னிடத்து உள்ள பொருளை விரும்பிக் கொடுத்து உதவாமல்) "நாளை நண்பகல் போதில் வருக" எனக் கூறும் உரையைக் கேட்டு, உள்ளம் வருந்துவதன் முன்னம், நம் மேல் ஈடுபாடு உடையவரும்,  விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும், வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய சீகாழிப் பதியை அடைவீர்களாக.


  திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த சீகாழிக்குப் போந்து, அங்கே திருக்கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பாடிய அருணகிரிநாதரும், இக் கருத்தையே வைத்துத் திருப்புகழ் பாடியுள்ளார் என்பது அறிந்து இன்புறத்தக்கது. 


"செக்கர் வானப் பிறைக்கு, இக்கு மாரற்கு அலத்

     தெற்கில் ஊதைக்கு, அனல் ...... தணியாத

சித்ர வீணைக்கு, அலர்ப் பெற்ற தாயர்க்கு, அவச்

     சித்தம் வாடி, கனக் ...... கவிபாடி,


கைக் கபோலக் கிரி, பொன் கொள் ராசி, கொடைக்

     கற்ப தாரு, செகத் ...... த்ரயபாநு,

கற்றபேர் வைப்பு என,  செத்தை யோகத்தினர்க்

     கைக்குள் நான் வெட்கி நிற்- ...... பது பாராய்".


என்பது அத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதி.


இதன் பொருள் ---


  செவ்வானத்தில் தோன்றும் நிலவுக்கும், கரும்பு வில்லை உடைய மதவேளுக்கும், தென் திசையில் இருந்து வீசும் துன்பத்தைத் தரும் ஊதைக் காற்றுக்கும், தணியாத நெருப்பைப் போன்ற சித்திர வீணையின் இன்னிசைக்கும், வசை மொழிகளைப் பேசும் தாய்மார்க்கும் வீணாக மன வாட்டத்தினை அடைந்து, விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது பெருமை மிக்கப்

பாடல்களைப் பாடி, அப் பெருமை மிக்க பாடல்களில் அவர்களைத் துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் பொருந்தும் நல்வினைப் பயன் உள்ளவர் என்றும், கற்பக மரம் போன்று கேட்டதைத் தரும் கொடையில் மிக்கவர் என்றும்,  மூவுலகங்களிலும் விளங்கும் கதிரவன் என்றும், கற்ற புலவர்களுக்கு சேமநிதியாக விளங்குபவர் என்றும், பொருள் உள்ளோரைப் பொய்யாகப் புகழ்ந்து பாடித் துதித்து, குப்பையாகிய செல்வம் பொருந்தி உள்ளவர்களின் கைக்குள் பட்டு நான் வெட்கித்து நிற்கின்ற நிலையைப் பார்த்து அருளுவீராக.


  வறுமையில் வாடும் ஒருவன் தனது இருப்பிடத்தைத் தேடி வந்து, உயர்ந்த பொருள்களோடு கூடிய பாடல்களைப் பாடினாலும், உலோப சிகாமணிகளாகிய செல்வந்தர், தாராளமாகப் பொருளைத் தராமல், "இன்று போய், நாளை வா" என்று அலைய வைத்து, மிகச் சிறிய அளவில் பொருள் தருவர். தராமலும் விடுவர். அங்ஙனம் கிடைக்கின்ற பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துத் திரட்டிக் கொணர்ந்து, அதனை அறவழியில் செலவிடாமலும், தானும் அனுபவிக்காமலும், பொதுமகளிர்க்கு வழங்கிப் புன்கண் உறுவர்.


திருத்தணிகைத் திருப்புகழிலும் இக் கருத்தையே வைத்து, அருணகிரிநாதர் பாடி உள்ள திருப்புகழ்.....


"உடையவர்கள் ஏவர்? எவர்கள் என நாடி,

     உளமகிழ ஆசு ...... கவிபாடி,

உமதுபுகழ் மேரு கிரி அளவும் ஆனது

     என உரமுமான ...... மொழிபேசி,


நடைபழகி மீள, வறியவர்கள் நாளை

     நடவும் என வாடி, ...... முகம்வேறாய்,

நலியும் முனமே உன் அருண ஒளி வீசு


  நளின இரு பாதம் ...... அருள்வாயே.


இதன் பொருள் ---


  திருத்தணிகை முருகா! செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடிக்கொண்டு போய், அவர்கள் மனம் மகிழும்படி, ஆசு கவிகள் பாடியும், உமது புகழ் மேருகிரிபோல் அளவில்லாதது என்று வலிமையான துதிமொழிகளைக் கூறியும், ஓயாது நடந்து நடந்து சென்றும், பழையபடியே தரித்திரர்களாகவே வரும்படி “நாளை வா, நாளை வா” என்று அத் தனவந்தர் கூற, அதனால் அகமும் முகமும் வாடி வருந்துதற்கு முன்பாகவே, சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற உமது திருவடிகளைத் தந்தருளுவீர்.


ஒரு காசும் கொடுக்க மனமில்லாத பரம உலோபியைப் பார்த்து, “நீர் பெரிய கொடையாளி; கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கையை உடையவர்; அள்ளி வழங்குகின்ற வள்ளல்; பரம தாதா; தங்களின் புகழ் மேருமலை போல் உயர்ந்தது; மேருமலை வரை பரவியுள்ளது” என்று புகழ்ந்து கூறுவார்கள். ஆனால், ஒரு காசும் ஈய மனம் வராமல், "நாளை வாருங்கள்" என்று சொன்னதுமே, நாளைக்கு வந்தால் கொடுப்பார் என்னும் ஆசையோடு, இப்படியே சென்று சென்று வந்து, அகம் வாடி, முகம் வெளுத்து வருத்தமுற்றுத் தடுமாற்றம் அடைவார்கள். 


No comments:

Post a Comment

திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...