பொது --- 1099. அனகனென அதிகனென

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அனகனென அதிகனென (பொது)


முருகா!

தேவரீரையே புகழ்ந்து பாடி, வாக்கும் மனமும் அற்ற 

பெருநிலையைப் பெறவேண்டும்.


தனனதன தனனதன தனனதன தனனதன

     தனனதன தனனதன ...... தனதான


அனகனென அதிகனென அமலனென அசலனென

     அபயனென அதுலனென ...... அநபாயன்


அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி

     யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி


வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை

     மகிபஎன தினையளவு ...... ளவுமீயா


மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய

     மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே


இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென

     இருசதுர திசையிலுர ...... கமும்வீழ


இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில

     மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக்


ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி

     கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக்


கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக

     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அனகன் என, அதிகன் என, அமலன் என, அசலன் என,

     அபயன் என, அதுலன் என, ...... அநபாயன்,


அடல்மதனன் என, விசையன் என, முருகன் என, நெருடி

     அவர் பெயரும் இடைசெருகி, ...... இசைபாடி,


வனசமணி, பணில மழை, சுரபி, சுரர் தரு நிகர்கை,

     மகிப என, தினை அளவு ...... உளவும் ஈயா,


மனிதர்கடை தொறும் உழலும், மிடி ஒழிய, மொழி ஒழிய,

     மனம்ஒழிய, ஒருபொருளை ...... அருள்வாயே.


இனன் நிலவு தலைமலைய, அடியின் உகிர் இலைகளென

     இருசதுர திசையில் உர ...... கமும்வீழ,


இரணிய சயிலம், ரசித சயிலம், மரகத சயிலம்

     என, விமலை, யமுனை என ...... நிழல்வீசி,


ககனமழை உகை கடவுள் உடலம் என, முதியவிழி

     கதுவி, எழில் பொதியமிசை ...... படர்கோலக்


கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக

     கடகமுடன் அமர் பொருத ...... பெருமாளே.


பதவுரை


அனகன் என அதிகன் என ---  பாவம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும், 


அமலன் என அசலன் என --- மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும், 


அபயன் என அதுலன் என --- அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகரில்லாதவன் என்றும், 


அநபாயன், அடல்மதனன் என --- அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும், 


விசையன் என முருகன் என --- வீரத்தில் அர்ச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும், 


நெருடி, அவர்பெயரும் இடைசெருகி இசைபாடி --- இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி, 


வனசம், மணி, பணிலம், மழை ---  பதுமநிதி, சிந்தாமணி என்று கூறப்படும் இரத்தினம், சங்கநிதி, மேகம், 


சுரபி, சுரர் தரு …. காமதேனு, கற்பகமரம் - (இவைகளுக்கு கொடையில்) 


நிகர்கை மகிப என --- ஒப்பான கைகளை உடைய அரசனே என்று போற்றவும், 


தினை அளவு உளவும் ஈயா --- தினையளவு கூடத் தன்னிடத்தில் உள்ள பொருளைக் கொடுக்காத,


மனிதர்கடை தொறும் உழலும் மிடி ஒழிய --- மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை ஒழியவும், 


மொழி ஒழிய, மனம் ஒழிய --- வாக்கு அடங்கவும், மனம் அடங்கவும்,


ஒரு பொருளை அருள்வாயே --- ஒப்பற்ற உபதேசப் பொருளை அடியேனுக்கு அருள் புரிவீராக.


இனன் நிலவு தலை மலைய --- சூரியகனின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க, 


அடியின் உகிர் இலைகள் என --- காலின் நகங்கள் நொச்சி இலைகளைப் போல் இருக்க, 


இருசதுர திசையில் உரகமும் வீழ --- எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும் அஞ்சிக் கீழே விழ, 


இரணிய சயிலம், ரசித சயிலம், மரகத சயிலம் என --- பொன்மலை ஆகிய மேருமலையைப் போலவும்,  வெள்ளிமலை என்னும் திருக்கயிலாய மலையைப் போலவும், மரகதமலை என்னும் திரு ஈங்கோய் மலையைப் போலவும் வலிய உடலைக் கொண்டதாய், 


விமலை யமுனை என நிழல் வீசி --- தூயவள் ஆகிய உமாதேவியாரின் திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையைப் போல நீலநிற ஒளியை வீசி, 


ககன மழை உகை கடவுள் உடலம் என --- வான்மேகத்தை வாகனமாக உடைய இந்திரனின் உடம்பு என்று சொல்லும்படியாக,


முதிய விழி கதுவி --- உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய்,


எழில் பொதிய --- அழகு நிறைந்து, 


மிசை படர் கோலக் கலபகக மயில் கடவு --- மேலே படர்ந்த தோகையினை உடைய பறவையாகிய மயிலினை நடத்திச் சென்று, 


நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே ---  அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 


பொழிப்புரை

பாவம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும்,  மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும்,  அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகர் இல்லாதவன் என்றும்,  அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும்,  வீரத்தில் அருச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும் இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி,  பதுமநிதி, சிந்தாமணி என்று கூறப்படும் இரத்தினம், சங்கநிதி, மேகம்,  காமதேனு, கற்பகமரம் ஆகிய இவைகளுக்கு கொடையில் ஒப்பான கைகளை உடைய அரசனே என்று போற்றவும், தினையளவு கூடத் தன்னிடத்தில் உள்ள பொருளைக் கொடுக்காத, மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை ஒழியவும்,  வாக்கு அடங்கவும், மனம் அடங்கவும் ஒப்பற்ற உபதேசப் பொருளை அடியேனுக்கு அருள் புரிவீராக.

சூரியனின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க,  காலின் நகங்கள் நொச்சி இலைகளைப் போல் இருக்க,  எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும் அஞ்சிக் கீழே விழ, பொன்மலை ஆகிய மேருமலையைப் போலவும்,  வெள்ளிமலை என்னும் திருக்கயிலாய மலையைப் போலவும், மரகதமலை என்னும் திரு ஈங்கோய் மலையைப் போலவும் வலிய உடலைக் கொண்டதாய்,  தூயவள் ஆகிய உமாதேவியாரின் திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையைப் போல நீலநிற ஒளியை வீசி,  வான்மேகத்தை வாகனமாக உடைய இந்திரனின் உடம்பு என்று சொல்லும்படியாக, உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய், அழகு நிறைந்து,  மேலே படர்ந்த தோகையினை உடைய பறவையாகிய மயிலினை நடத்திச் சென்று, அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 

விரிவுரை

வறுமை நிலையில் உள்ளவர்கள், தமது வறுமையைப் போக்கிக் கொள்ள, தனம் உடையவர்கள் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று, அருமையினும் அருமையான இனிய தமிழை, ஈசனுக்கு அர்ப்பணியாமல் வாழ்கின்றவர்களும், பரமலோபிகளும், மகாமூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப் பரதவிக்கின்றார்கள். இந்த அவல நிலையைக் கண்டு அருணகிரிநாதர் இத் திருப்புகழில் வருந்துகின்றார். "யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம் உஐயவன் முருகப் பெருமான். கேட்டதெல்லாம் தரும் பரம கருணாநிதியாகிய முருகனைப் பாடினால் இகம் பரம் இரண்டு நலன்களையும் வழங்குவான்.  அப்பரமனை வாழ்த்தக் கூடவேண்டாம். தமிழால் வைதாலும் வாழவைப்பானே?


முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாக இறையருளால் வாய்த்த நல்ல செல்வத்தை, இல்லாதவர்க்கு மனம் உவந்து ஈந்து, புண்ணியத்தைத் தேடிக் கொள்ளமால் வாழும் மூடர்களிடம் சென்று அவர்களைப் பாவம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும்,  மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும்,  அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகர் இல்லாதவன் என்றும்,  அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும்,  வீரத்தில் அருச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும் இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி,  பதுமநிதி, சிந்தாமணி என்று கூறப்படும் இரத்தினம், சங்கநிதி, மேகம்,  காமதேனு, கற்பகமரம் ஆகிய இவைகளுக்கு கொடையில் ஒப்பான கைகளை உடைய அரசனே என்று போற்றவும், தினையளவு கூடத் தன்னிடத்தில் உள்ள பொருளைக் கொடுக்காத, மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை ஒழிய வேண்டுமானால், செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.


அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,

    ஆண்மைஉள விசயன்நீ, என்று

எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கஞ் செயார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,

பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பி,அப்

பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன், வேடுவப்

    பெண்மணவன், என்றுஏசினும்,

சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!       ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்


தமிழினிடம் பெருங்காதல் கொண்ட முருகன் தமிழ்நாட்டு வள்ளியிடம் காதல் கொண்டான். அதனாலே, அந்தத் தமிழால் வைதாலும் அவன் அருள் செய்வான் என்னும் கருத்தில், "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழல் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" என்கிறார் அருணகிரிநாதர்.


இரட்டைப் புலவர்கள் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஒரு பணமுடிப்பை பிள்ளையார் பின்புறத்தில் வைத்து நீராடச் சென்றார்கள். விநாயகர் புலவர்களிடம் விளையாடக் கருதி அப் பணமுடிப்பை மறைத்தருளினார்.  இரட்டையர்கள் வந்து பார்த்தார்கள். பணமுடிப்பு இல்லை. வறிய புலவர்கட்கு உள்ளம் எப்படியிருக்கும்? உடனே பெருமானைப் பார்த்துப் பாடுகின்றார்கள்.


"தம்பியோ பெண்திருடி, தாயாருடன் பிறந்த

வம்பனோ நெய்திருடி மாயனாம்,-அம்புவியில்

மூத்த பிள்ளையாரே முடிச்சு அவிழ்த்துக் கொண்டீரோ?

கோத்திரத்தில் உள்ள குணம்."


"பிள்ளையாரே, நீர் பேசாமல் உள்ளீர்.  உம்மைத் தவிர வேறு யார் இங்கே வந்தார்கள்?  நீர்தான் எமது முடிச்சை அவிழ்த்துக் கொண்டு விட்டீர். உம்முடைய தம்பி யார் என்று எனக்குத் தெரியும். தமிழ்நாட்டுப் பெண் வள்ளியைத் திருடிக் கொண்டு போனவன் அவன். உம் தாயாருடன் பிறந்த மாமன் ஒரு வம்பன், மாமாயன்; அவன் நெய் திருடி. நீரோ  இப்போது என் முடிச்சைத் திருடி விட்டீர். ஐயா கோத்திரத்திற்கு உள்ள குணம் உம்மைவிட்டு எப்படிப் போகும்?' என்று பாடினார்கள். ஏசுவதைப் போலப் பாட்டு இருந்தாலும் இது ஏச்சு அல்ல. ஏசுவது  போல இறைவன் புகழை முத்தமிழால் சொல்கிறார்கள் புலவர்கள். அந்தத் தமிழைக் கேட்பதில் இறைவனுக்கு விருப்பம் உண்டு. 


சுந்தர் மூர்த்தி நாயனார் பாடுகின்றார்.


"நலம்இலாதானை நல்லனே என்றும்,

         நரைத்த மாந்தரை இளையனே,

குலமிலாதானைக் குலவனே என்று

         கூறினும் கொடுப்பார்இலை,

புலம்எலாம்வெறி கமழும் பூம்புக

         லூரைப் பாடுமின் புலவீர்காள்,

அலமராது அமருலகம் ஆள்வதற்கு

         யாதும் ஐயுறவு இல்லையே."


வனசம், மணி, பணிலம், மழை ---  

வனசம் = தாரமை. இங்கே பதுமநிதியைக் குறிக்கும்.

மணி என்பது சிந்தாமணியைக் குறிக்கும்.

மணிலம் = சங்கு. இங்கே சங்கநிதியைக் குறிக்கும்.

கைம்மாறு கருதாமல் எல்லாரொக்கும் பொழிவது மழை.


இனன் நிலவு தலை மலைய --- 

இனன் = சூரியன்.  மலைய = ஒப்ப என்னும் வாய்ப்பாடு.


அடியின் உகிர் இலைகள் என --- 

உகிர் = நகம். மயிலின் காலில் உள்ள நகங்கள் நொச்சி இலைகளைப் போன்று நீண்டு உள்ளன.


இருசதுர திசையில் உரகமும் வீழ --- 

இரு - இரண்டு. சதுரம் - நான்கு. இருசதுரம் - எட்டு.

உரகம் - நாகம்.


இரணிய சயிலம், ரசித சயிலம், மரகத சயிலம் என --- 

இரணியம் - பொன். ரசதம், ரசிதம் - வெள்ளி. மரகதம் - பச்சை.

முருகப் பெருமான் ஆரோகணித்து வரும் மயிலின் உடலானது, 

பொன்மலை என்னும் மேருமலையைப் போலவும்,  வெள்ளிமலை என்னும் திருக்கயிலாய மலையைப் போலவும், மரகதமலை என்னும் திரு ஈங்கோய் மலையைப் போலவும் வலிமை கொண்டதாய் உள்ளது. 


விமலை யமுனை என நிழல் வீசி --- 

விமலை - மலமற்றவள், தூயவள். யமுனை - கருநிறம், நீலநிறம்.

தூயவள் ஆகிய உமாதேவியாரின் திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையைப் போல நீலநிறம் கொண்டதாக மயிலின் உடல் உள்ளது.


ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி --- 

ககனம் - வானம்.

மழை - இங்கே மேகத்தைக் குறித்து வந்தது.

உகை, உகைத்தல் - செலுத்துதல்.

இந்திரனுக்கு மேகநாதன், மேகவாகனன் என்று பெயர் உண்டு. கௌதம முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன் உடம்பெல்லாம் கண்ணாய் ஆனான். அதுபோல, மயிலின் தோகையில் கண்கள் உள்ளன.


மிசை படர் கோலக் கலபகக மயில் கடவு --- 


கோலக் கலபம் - அழகிய தோகை. ககம் - பறவை. அழகிய தோகையினை உடைய மயில்.


நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே ---  


நிருதர் - அரக்கர்கள். கஜம் - யானை. இரதம் - தேர், துரகம் - குதிரை.

கடகம் - படை.


கருத்துரை

முருகா! தேவரீரையே புகழ்ந்து பாடி, வாக்கும் மனமும் அற்ற பெருநிலையைப் பெறவேண்டும்.



No comments:

Post a Comment

திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...