"பிறவாது இருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டால்
இறவாது இருக்க மருந்து உண்டு காண்! இது எப்படியோ?
அறம்ஆர் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாது இரு மனமே, அதுகாண் நல் மருந்து உனக்கே."
பொழிப்புரை --- நெஞ்சமே! இந்த உலகத்தில் பிறவாது இருக்கும்படி வரம் பெறுவதே தக்கது. ஒருக்கால் பிறந்து விட்டால் இறவாமல் இருக்கவும் மருந்து உள்ளது. அது எப்படி என்றால், அறம் நிறைந்திருக்கின்ற தில்லையிலே திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி இன்பநடம் புரியும் அம்பலவாணனப் பெருமானின் திருவடித் தாமரையை மறவாது இருப்பதுதான், இறவாமல் இருப்பதற்கான நல்ல மருந்து ஆகும்.
விளக்கம் ---
இப்பிறவி என்னும்ஓர் இருட்கடலில் மூழ்கி, நான்
என்னும்ஒரு மகரவாய்ப்பட்டு,
இருவினை எனும்திரையின் எற்றுண்டு, புற்புதம்
எனக்கொங்கை வரிசைகாட்டும்
துப்புஇதழ் மடந்தையர் மயல்சண்ட மாருதச்
சுழல்வந்து வந்துஅடிப்ப,
சோராத ஆசையாம் கான்ஆறு வான்நதி
சுரந்ததுஎன மேலும்ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
கைவிட்டு மதிமயங்கி,
கள்ளவங் கக்காலர் வருவர்என்று அஞ்சியே
கண்அருவி காட்டும்எளியேன்,
செப்பரிய முத்தியாம் கரைசேரவும் கருணை
செய்வையோ, சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.
காக மோடுகழுகு அலகை நாய்நரிகள்
சுற்று சோறுஇடு துருத்தியை,
கால் இரண்டுநவ வாசல் பெற்றுவளர்
காமவேள் நடன சாலையை,
போகஆசைமுறி இட்ட பெட்டியை,மும்
மலமி குந்துஒழுகு கேணியை,
மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை,
முடங்க லார்கிடை சரக்கினை,
மாக இந்த்ரதனு மின்னை ஒத்துஇலக
வேதம் ஓதியகு லாலனார்
வனைய, வெய்யதடி காரன் ஆன யமன்
வந்து அடிக்கும்ஒரு மட்கலத்
தேக மானபொய்யை, மெய் எனக்கருதி
ஐய, வையமிசை வாடவோ,
தெரிவ தற்குஅரிய பிரம மே,அமல
சிற்சு கோதய விலாசமே.
என்னும் தாயுமானார் பாடல்களையும்,
மணம்என மகிழ்வர் முன்னே,
மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணம்எனச் சுடுவர் பேர்த்தே,
பிறவியை வேண்டேன் நாயேன்,
பணைஇடைச் சோலைதோறும்
பைம்பொழில் விளாகத்து எங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.
என்னும் சுந்தரர் தேவாரப் பாடலையும் நோக்குமிடத்துப் பிறவியால் வருவது துன்பமே என்றும், அதனால், அதனைப் பிறவிப் பிணி என்றும், அந்த நோயைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு மருந்து அவசியம் என்பதும் தெளிவாகும். பிறவாமல் இருக்க வரம் பெறல் வேண்டும் என்றது இதனால்.
இனி பிறவாதிருக்க வேண்டுமென்றால், இறவாது இருக்க வேண்டும். "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை" என்றார் சுந்தரர் பெருமான். மரணமிலாப் பெருவாழ்வை அடைவதற்கான வழியைப் பார்ப்போம்....
கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே தான், எனக்கு
மரணம் பிறப்பு என்று இவைஇரண்டின் மயக்கு அறுத்த
கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ
எனவும்,
முன்னை வினைஇரண்டும் வேர்அறுத்து முன்நின்றான்,
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன் - தென்னன்
பெருந்துறையின் மேய பெருங் கருணையாளன்
வரும்துயரம் தீர்க்கும் மருந்து.
என வரும் திருவாசகப் பாடல்கள் இறப்பைத் தவிர்ப்பது பெருமானுடைய திருவடியைச் சார்வதே என்றும், அத் திருவடியே பிறவித் துயரத்தைப் போக்கும் மருந்து என்பதும் தெளிவாகும். அத் திருவடியை மறவாமல் இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் திருவாசகப் பாடலால் அறியலாம்...
"மறந்தேயும் தன்கழல் நான் மறவா வண்ணம் நல்கிய அத்
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ".
அப்பர் பெருமானும், "மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி" என்றார்.
No comments:
Post a Comment