முயல் விட்டு, காக்கைப் பின் போவது கூடாது.
-----
இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள். எளிமையாகச் செய்யக்கூடிய ஒரு செயலை விட்டு, செய்து முடிக்க இயலாத ஒரு செயலைச் செய்வதால் பயனில்லை என்பதை, "முயல் விட்டுக் காக்கைப் பின் போனது" என்றும் "இருப்பதை விட்டுப் பறப்பதை பிடிக்கப் போனது" என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.
"முயல் விட்டுக் காக்கைப் பின் போனவாறு" என்று பயனற்ற செயலைச் செய்கின்ற மக்களைப் பார்த்து, நக்கீரதேவ நாயனார், பதினோராம் திருமுறையில், "கோபப் பிரசாதம்" என்னும் அகவல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பயனற்ற செயல்களைச் செய்கின்ற மக்களை, இயமன் கொண்டு போகாமல் இன்னும் உலகில் வைத்திருப்பது ஏன் என்று, இயமன் மீது கோபம் கொண்டு பாடிய பாடல். ஆதலால், "கோபப் பிரசாதம்" எனப்பட்டது. மிக நீண்டதொரு பாடலை, சுருக்கித் தந்து உள்ளேன்.
"நீற்றிடைத் திகழும் நித்தனை,முத்தனை,
வாக்கும் மனமும் இறந்த மறையனை,
பூக்கமழ் சடையனை,புண்ணிய நாதனை,
இனைய தன்மையன் என்று அறிவு அரியவன்
தனை, முன் விட்டுத் தாம் மற்று நினைப்போர்,
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம் கலவர் போலவும்....
..... ..... .....
முன்னே அறியா மூர்க்க மாக்களை
இன்னே கொண்டு ஏகாக் கூற்றம்
தவறு பெரிது உடைத்தே,தவறு பெரிது உடைத்தே".
இதன் பொருள் ---
திருநீற்றில் பொலியும் திருமேனியன் ஆகியவனும்,இயல்பாகவே பாசத்தின் நீங்கியவனும், சொல்லுக்கும் மன உணர்வுக்கும் எட்டாத வேதப் பொருளாய் உள்ளவனும், மலர்கள் மணக்கும் திருச்சடையை உடையவனும், புண்ணியத்தின் வடிவாக இருப்பவனும், இன்ன தன்மையை உடையவன் என்று அறிவதற்கு அருமையானவனும் ஆகிய சிவபரம்பொருளை, இளமைக் காலத்திலேயே வழிபடுவதை விடுத்து, வேறு ஒன்றை நினைப்பவர், முயலை விட்டுக் காக்கையின் பின் செல்கின்ற வேடர்களைப் போன்றவர்கள். இவர்களைக் கூற்றுவன் ஆனவன் இப்பொழுதே கொண்டு போகாதது பெரும் தவறு ஆகும்.
வேட்டையாடுபவன் தரையில் ஓடுகின்ற முயலின்பின் விடாது சென்றால் பயன் பெறுவான். அதை இடையில் விட்டுவிட்டு பறக்கின்ற காக்கையின் பின் போனால் என்ன பயன் பெறுவான்? ஒன்றையும் பெறான். இது பயன் தருவதை விட்டுப் பயன் தாராததைத் தொடர்வதற்கு உவமையாகும். கலவர் --- படைக்கலம் எந்தியவர்; வேட்டையாடுபவர்.
இளமைக் காலத்திலேயே,சிவபரம்பொருளை வழிபடாது விட்டு, சமணர்களைச் சார்ந்து இருந்ததற்கு இரங்கி அப்பர் பெருமான், பாடிய தேவாரப்பாடல் ஒன்று....
"என்பு இருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு,
என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு,
என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு
அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போனவாறே".
இதன் பொருள் ---
எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து,எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இன்பங்களை நுகர் பொருளாக வைத்து, முன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத் தமது இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்தி, அடியேனை ஆளுதலைக் கடமை(கூழைமை)யாகக் கொண்டதிருவாரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழ விட்டு, கைப் பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்து,கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உண்பதற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!
அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த திருவாரூரருடைய திருமுன் இருக்கும் விதியில்லாதவன் என்று தன்னை நொந்து கொள்கின்றார். முன்பு இருக்கும் விதியில்லை என்றதால் பின்பு இருக்கும் விதியுள்ளது என்பது பெறப்பட்டது. எதன் பின்பு? சமண் சமயக் கொள்கையின் நீங்கி வந்ததன் பின்பு.
திருமங்கை ஆழ்வாரும், "சிறிய திருமடல்" என்னும் ஒரு அகவல் பாடலில், இக் கருத்தை வைத்துப் பாடி உள்ளார்.
"ஆராயில் தானே அறம்பொருள் இன்பம் என்று
ஆர்ஆர் இவற்றின் இடையதனை எய்துவார்,
சீரார் இருகலையும் எய்துவர் --- சிக்கென மற்று
ஆரானும் உண்டு என்பார், என்பதுதான் அதுவும்
ஓராமை அன்றே, உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆமாறு அது உரைக்கேன், கேளாமே
கார்ஆர் புரவி ஏழ் பூண்ட தனிஆழி
தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி,அதினின்றும்
வாராது ஒழிவது ஒன்று உண்டே. அது நிற்க,
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே".
இதன் பொருள் ---
நூல் பயன் என்று சொல்லப்பட்ட அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றனுள் இன்பத்தைப் பெறுவோர், சிறப்புள்ள அதன் பகுதிகளான அறம் பொருள் என்னும் இரண்டையும் பெறுவர். இவை அல்லாமல் சிறந்தது வேறு உண்டு என்று உலகத்தார் சொல்லுவது அறிவின்மை ஆகும். அது எவ்வாறு என்று கூறுகின்றேன் கேளுங்கள். மேக மண்டலத்தில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ஒரே சக்கரம் உடைய தேரில் சஞ்சரிக்கின்றான். வெப்பக் கிரணங்களை உடைய அச் சூரியனின் மண்டலத்தைத் தாண்டி, மேலே பரமபதத்தைச் சென்று அடைந்து,அங்கு திருப்தி பிறக்காமல், அமுதமாகிய பரம்பொருளை அடைந்து, அவ்விடத்தில் இருந்து திரும்பி வராமல் இருத்தல் ஒன்று உண்டோ? புலாலை விரும்புவோர், உடலில் தசைப் பகுதி அதிகமாக உள்ள முயலைத் தொடராமல், வானில் மரக்கிளைகளில் பறக்கும் காக்கையைப் பிடிக்க வேட்டையாடித் தொடர்வதோ?
அர்ச்சை நிலையானது பற்றுவதற்கு எளிதாய் இருக்க, அதை விடுத்துப் பரத்துவத்தை நாடுவதோ என்பது கருத்து.
இதே கருத்தில் அமைந்த ஒரு பாடல், "பழமொழி நானூறு" என்னும் நூலில் இருந்து.....
"அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்,--- தெற்ற
முதல்விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்
முயல்விட்டுக் காக்கை தினல்".
இதன் பொருள் ---
அறச் செயல்களைச் செய்வதற்கு அடிப்படையாக உள்ளத்தில் அருளை (அன்பு, கருணை, இரக்கம்)உடையவராக இருத்தல் சிறந்த பண்பாகும். இதனையே தமது ஒழுக்கமாகக் கொண்டு, தெளிந்து அறிவோடு,அறம் செய்யவேண்டியதன் காரணத்தை முழுதுமாக அறிந்து அறச் செயல்களை செய்பவர் ஆவார்.
அறத்திற்கு முதலாக இருக்கவேண்டிய பண்பாகிய அருளை விட்டு, அறச் செயல்களின் திறத்தை அறியாமல், அறச் செயல்களைக் கைவிட்டவருடைய பாதுகாப்பு அற்ற ஒழுக்கமானது,நிலத்தில் ஓடுகின்ற,தசைப் பகுதி நிறைந்ததும், உண்பதற்குச் சுவை உள்ளதும் ஆகிய முயலைப் பிடிப்பதை விட்டுவிட்டு,வானத்தில் பறந்து செல்லுகின்ற காக்கையைப் பிடித்துத் தின்ன ஆசைப்பட்டதைப் போன்றது.
முயல் காக்கையை விடச் சிறந்தது. அதுபோலவே, நல்லொழுக்கமும் சிறந்த பயனைத் தருவது. எளிதில் அடையக் கூடியதை விட்டு அரிது முயன்றும் அடையக் கூடாத செயலுக்கு ஆளப்படும் பழமொழி, "முயல் விட்டுக் காக்கை தினல்" என்பது.
இல்லற ஒழுக்கத்தில் இருந்து எளிதில் இறையருளைப் பெறலாம். துறவறத்தில் நிற்பது மிகவும் அரியது. அன்பு நெறியில் நிற்போர் இவ்வுலக இன்பத்தையும், அவ்வுரக இன்பத்தையும் பெறுவர். அடயோகம் பயில்வது அந்த மேலான பயனைத் தராது. உடம்பை நிலைநிறுத்த வேண்டுமானால் பயன் தரலாம். காக்கைப் பின் சொல்வோர் துறவறத்தார் ஆகவும், இல்லறத்தில் நிற்போர் முயலின் பின் செல்வோர் என்று கொள்ளலாம்.
இதற்கு ஆதாரமாகப் பட்டினத்து அடிகளார் பாடி அருளிய "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை" என்னும் நூலில் வரும் பின்வரும் பாடல் வரிகளைக் கொள்ளலாம்...
"மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ,
மனையும் பிறவும் துறந்து,நினைவரும்
காடும் மலையும் புக்கு,கோடையில்
கைம்மேல் நிமிர்த்துக் கால்ஒன்று முடக்கி,
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று,
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்,
சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்,
உடையைத் துறந்தும் உண்ணாது உழன்றும்,
காயுங் கிழங்கும் காற்று உதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியும்,
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும்,
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து, ஆங்கு அவர்,
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்".....
இது துறவறத்தார் நிலையைக் குறித்தது.
"ஈங்கிவை செய்யாது,யாங்கள் எல்லாம்
பழுது இன்று உயர்ந்த எழுநிலை மாடத்தும்,
செழுந்தாது உதிர்ந்த நந்தன வனத்தும்,
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்,
அஞ்சொல் மடந்தையர் ஆகம் தோய்ந்தும்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாது,
ஆடினர்க்கு என்றும்,பாடினர்க்கு என்றும்,
வாடினர்க்கு என்றும் வரையாது கொடுத்தும்,
பூசுவன பூசியும்,புனைவன புனைந்தும்,
தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும்,
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்,
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி,
இவ்வகை இருந்தோம்,ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்து ஐந்தும் வாய் இடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ!"
இது இல்லறத்தார் நிலையைக் குறித்தது.
"நாங்கள் இவ்வகை இல்லற நெறியில் இயல்பாக இருந்தோம். ஆயினும் அந்த முத்தியும் இழந்திலம்" என்றதனால், தம்மைத் தாமே ஒறுப்பவர்" அவ்வாறு ஒறுப்பினும் அந்த முத்தியைப் பெறமாட்டார் என்பது பெறப்பட்டது. பல வகையிலும் உடலை வருத்தி நோற்றல் மன ஒருக்கத்தின் பொருட்டே ஆகும். மனம் ஒருங்குதலின் பயன், மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது சிந்தை சிவன்வழிச் செலுத்தலே ஆகலின், தம்மைத் தாமே ஒறுத்தும், அது செய்யாதார், அந்த முத்தியை அடைவார் அல்லர்` எனவும், `முன்னைப் புண்ணிய மிகுதியால் இம்மையில் மனம் ஒருங்கப் பெற்றோர் உடல் வருந்த நோலாதே, மாறாக, ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் அந்த முத்தியையும் இழவாது பெறுவர்` எனவும் `எந்த நிலையில் நின்றாலும் சிவனை நினைதலே முத்தி சாதனம்` என்பதும், `எனவே, எதனைச் செய்யினும் அச்சாதனத்தைப் பெறாதார் முத்தியாகிய பயனைப் பெறுமாறு இல்லை` என்பதும் உணர்த்தியவாறு.
அப்பர் பெருமானும் இக்கருத்தை,
``கங்கை யாடில் என், காவிரி யாடில் என்`` என்பது முதலாக எடுத்துக் கூறி, ``எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே`` என நியமித்து அருளிச் செய்தார்.
அதனால் அவர்,அங்குக் கங்கை ஆடுதல் முதலியவற்றையும், இங்கு இவ்வாசிரியர், மக்களை, மனைவியை, ஒக்கலை ஒரீஇக் காடும், மலையும் புகுந்து கடுந்தவம் புரிதலையும் இகழ்ந்தார் என்பது அல்ல. எவ்வாற்றானும் சிவனை நினைத்தலே சாதனம் ஆதலையே வலியுறுத்தினர்.
கல் ஒன்றை வல்லான் ஒருவன் கைம்முயன்று எரிதல், மக்களை, மனைவியை, ஒக்கலை ஒருவுதல் முதலியவற்றைச் செய்வோர் ஐந்தெழுத்தை ஓதுதற்கும், மாட்டா ஒருவன் வாளா எறிதல், அவற்றைச் செய்யமட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்வார் ஐந்தெழுத்தை ஓதுதற்கும் உவமைகள்.
கல்லின் இயல்பு, யார் உயர எறியினும் தப்பாது நிலத்தில் வீழ்தல் ஆதல் போல, ஐந்தெழுத்தின் இயல்பு, யாவர் ஓதினும் முத்தியில் சேர்த்தல்` என்பது இவ்வுவமைகளால் விளக்கப்பட்டது.