அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அண்டர்பதி குடியேற
(சிறுவை-சிறுவாபுரி)
முருகா!
எல்லோரும் கண்டு இன்புறுமாறு
மயிலின் மீது திருநடனம் புரிந்து வந்து அருள வேண்டும்.
தந்ததன
தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான ...... தனதான
அண்டர்பதி
குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ
டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு
முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட
னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக
விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட
லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள
மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்தமு
மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அண்டர்பதி
குடிஏற, மண்டு அசுரர் உருமாற,
அண்டர்மனம் மகிழ்மீற, ...... அருளாலே
அந்தரியொடு
உடன்ஆடு சங்கரனும் மகிழ்கூர,
ஐங்கரனும் உமையாளும் ...... மகிழ்வாக,
மண்டலமும்
முநிவோரும் எண்திசையில் உள பேரும்
மஞ்சினனும் அயனாரும் ...... எதிர்காண,
மங்கையுடன்
அரிதானும் இன்பம்உற, மகிழ்கூர,
மைந்து மயில் உடன்ஆடி ...... வரவேணும்.
புண்டரிக
விழியாள! அண்டர்மகள் மணவாளா!
புந்திநிறை அறிவாள! ...... உயர்தோளா!
பொங்குகடல்
உடன்நாகம் விண்டு, வரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா!
தண்தரள
மணிமார்ப! செம்பொன்எழில் செறிரூப!
தண்தமிழின் மிகுநேய ...... முருகேசா!
சந்தமும்
அடியார்கள் சிந்தை அது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
பதவுரை
புண்டரிக விழியாள --- தாமரை போன்ற திருக்கண்களை
உடையவரே!
அண்டர் மகள் மணவாள --- தேவர்களின்
மகளாக வளர்ந்த தேவயானை அம்மையின் மணவாளரே!
புந்தி நிறை அறிவாள --- நிறையறிவு
கொண்டவரே!
உயர் தோளா --- உயர்ந்த திருத்தோள்களை
உடையவரே!
பொங்கு கடலுடன்
நாகம் விண்டு வரை இகல்சாடு --- பொங்கி எழுந்த கடல் வற்றச் செய்து, கிரவுஞ்ச மலையை பிளவுபடச் செய்து, ஏழு
மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்தவரே!
பொன் பரவு --- தேவ குருவால்
வழிபடப்பெற்றவரே!
கதிர் வீசு வடிவேலா --- சுடர் வீசும்
கூரிய வேலாயுதரே!
தண் தரள மணிமார்ப --- குளிர்ந்த
முத்துமாலையை அணிந்த திருமார்பரே!
செம்பொன் எழில் செறி
ரூப
--- செம்பொன்னின் அழகு நிறைந்த திருமேனி
உடையவரே!
தண் தமிழின் மிகு நேய ---- நல்ல தமிழின்
பால் மிகுந்த நேசம் கொண்டவரே!
முருக ஈசா --- முருகக் கடவுளே!
சந்ததமும் அடியார்கள்
சிந்தை அது குடியான --- எப்போதும் அடியார்களின்
சிந்தையைக் குடியாகக் கொண்டவரே!
தண் சிறுவை தனில்மேவு பெருமாளே --- குளிர்ந்த
சிறுவை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருத்தமையில் மிக்கவரே!
அண்டர் பதி குடி ஏற --- தேவர் தலைவனாகிய
இந்திரன் மீண்டும் தேவலோகத்தில் குடிபுகவும்,
மண்டு அசுரர் உருமாற --- நெருங்கி வந்த
அசுரர்கள் மாண்டு மடியவும்,
அருளாலே --- தேவரீரது திருவருளாலே,
அண்டர் மனம் மகிழ்மீற --- தேவர்களின் மனம்
மிக மகிழும்படி செய்து,
அந்தரியொடு உடனாடு
சங்கரனும் மகிழ் கூர --- காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமானும் மகிழ்ச்சி அடையும்படியாகவும்,
ஐங்கரனும் உமையாளும்
மகிழ்வாக
--- விநாயகனும், உமாதேவியும் மிகக்
களிப்படையவும்,
மண் தலமும்,
முநிவோரும், எண் திசையில் உள பேரும் --- பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளவர்களும்,
மஞ்சினனும் அயனாரும்
எதிர்காண
--- இந்திரனும், பிரமனும் நேர் நின்று
கண்டு களிக்கவும்,
மங்கையுடன் அரிதானும்
இன்பம் உற மகிழ் கூற --- இலக்குமிதேவியுடன் திருமாலும் மகிழ்ச்சியும் இன்பமும் அடையவும்,
மைந்து மயிலுடன் ஆடி
வரவேணும்
--- வலிமையான மயிலுடன் திருநடனம் புரிந்து அடியேன் முன்னர் வந்து அருளவேண்டும்.
பொழிப்புரை
தாமரை போன்ற திருக்கண்களை உடையவரே!
தேவர்களின் மகளாக வளர்ந்த தேவயானை அம்மையின்
மணவாளரே!
நிறையறிவு கொண்டவரே!
உயர்ந்த திருத்தோள்களை உடையவரே!
பொங்கி எழுந்த கடலை வற்றச் செய்து, கிரவுஞ்ச மலையை பிளவுபடச் செய்து, ஏழு
மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்தவரே!
தேவ குருவால் வழிபடப்பெற்றவரே!
சுடர் வீசும் கூரிய வேலாயுதரே!
குளிர்ந்த முத்துமாலையை அணிந்த திருமார்பரே!
செம்பொன்னின் அழகு நிறைந்த திருமேனி
உடையவரே!
நல்ல தமிழின் பால் மிகுந்த நேசம் கொண்டவரே!
முருகக் கடவுளே!
எப்போதும் அடியார்களின் சிந்தையைக் குடியாகக் கொண்டவரே!
குளிர்ந்த சிறுவை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருக்கும் பெருத்தமையில் மிக்கவரே!
தேவர் தலைவனாகிய இந்திரன் மீண்டும்
தேவலோகத்தில் குடிபுகவும், நெருங்கி வந்த
அசுரர்கள் மாண்டு மடியவும், தேவரீரது
திருவருளாலே, தேவர்களின் மனம் மிக மகிழும்படி செய்தவரே!
காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமானும்
மகிழ்ச்சி அடையும்படியாகவும், விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படையவும், பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளவர்களும், இந்திரனும், பிரமனும் நேர் நின்று கண்டு களிக்கவும், இலக்குமிதேவியுடன் திருமாலும்
மகிழ்ச்சியும் இன்பமும் அடையவும், வலிமையான மயிலுடன் திருநடனம் புரிந்து அடியேன்
முன்னர் வந்து அருளவேண்டும்.
விரிவுரை
இத்
திருப்புகழ்ப் பாடல் முழுவதும் துதிமயமாகவே அமைந்தது. முருகப் பெருமானுடைய அழகு மற்றும் அவன் அடியார்களின் உள்ளத்தில் எப்போதும்
நீங்காமல் உறைகின்ற பெருமையைக் குறித்தது. முருகப் பெருமான் மயில் மீது
திருநடனம் புரிந்து வந்து அருளுதல் வேண்டும் என்ற வேண்டுகோளைக் கொண்டது. அப்படி, முருகப்
பெருமான் திருநனடம் புரிந்து வருங்கால், சிவபெருமான், உமாதேவியார், விநாயகப்
பெருமான் கண்டு களிப்பார்கள். அந்தக் களி நடனத்தைக் கண்டு திருமாலும் திருமகளும்
மகிழ்வார்கள். மண்ணுலகத்தில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத் திக்குகளிலும்
உள்ளவர்களும்,
மட்டுமல்லாது
இந்திரனும்,
பிரமதேவனும்
எதிர்கண்டு மகிழ்வார்கள். இக் கருத்து அமைந்த இந்த அற்புதத் திருப்புகழினை, நாள் வழிபாட்டிலும்,
புதுவீடு புகுதல் போன்ற நிகழ்ச்சிகளின்போதும் ஓதி வழிபட்டால் நன்மை சிறக்கும் என்று வள்ளிமலை
சுவாமிகள் சொல்லியருளியதாகப் பெரியவர்கள் சொல்லக் கேட்டு உள்ளேன்.
அண்டர்
பதி குடி ஏற
---
அண்டர்
- தேவர்கள். பதி - தலைவன்.
சூரபதுமனால்
சிறைவைக்கப்பட்டு இருந்த தேவர்கள் தலைவனாகிய இந்திரனைச் சிறைமீட்டு, தனது அமராவதி
நகரில் மீளவும் குடிபுகுமாறு செய்தவர் முருகப் பெருமான்.
பதி
என்பதை நகரம் எனக் கொண்டு, சூரபதுமனால் சிறைவைக்கப்பட்ட தேவர்களைச் சிறையில்
இருந்து விடுவித்து, மீண்டும் தங்கள் பதிகளில் குடியேற வைத்தவர் ருபுகப் பெருமான்
எனவும் கொள்ளலாம்.
மண்டு
அசுரர் உருமாற
---
நெருங்கி
வந்த அசுரர்கள் தங்களது உருவம் மாறி அழிந்து போகவும்,
அருளாலே
அண்டர் மனம் மகிழ்மீற ---
இவ்வாறு
முருகப் பெருமான் திருவருள் புரிந்தமையால், திருவருளாலே, தேவர்களின் மனம் மிக மகிழ்ந்தது.
அந்தரியொடு
உடனாடு சங்கரனும் மகிழ் கூர ---
காளியுடன்
நடனம் புரிகின்ற சிவபெருமான் மகிழும்படியும்,
ஐங்கரனும்
உமையாளும் மகிழ்வாக ---
ஐங்கரன்
- விநாயகன்.
விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படையவும்,
மண்
தலமும், முநிவோரும், எண் திசையில் உள பேரும் ---
மண்
+ தலம் = மண்டலம்.
இந்த
மண்ணுலகில் வழ்வோரும், முநிவர்களும், எண் திசைக் காவலர்களும் மகிழும்படியாக,
மஞ்சினனும்
அயனாரும் எதிர்காண ---
மஞ்சு
- மேகம். மஞ்சினன்.
இந்திரனுக்கு
மேகவாகனன் என்றொரு பெயருண்டு.
அயன்
- பிரமதேவன்.
இந்திரனும்
பிரமதேவனும் நேர் நின்று கண்டு களிக்கவும்,
மங்கையுடன்
அரிதானும் இன்பம் உற மகிழ் கூற ---
மங்கை
- திருமகள். இலக்குமிதேவி.
இலக்குமிதேவி
திருமாலின் வலமார்பில் என்றும் நீங்காமல் உறைபவள். இலக்குமிதேவியும் திருமாலும்
மகிழ்ச்சியும் இன்பமும் அடையவும்,
மைந்து
மயிலுடன் ஆடி வரவேணும் ---
மைந்து
- வல்லமை.
“தாமரைக்கணான் முதலிய
பண்ணவர் தமக்கும், ஏம் உறப்படு மறைக்கு எலாம் ஆதிபெற்று இயலும் ஓம்” என்னும்
குடிலையில் சொரூபமாக மயில் ஆடுகின்றது. மயில் ஆடுகின்ற பொழுது உற்றுக் கவனித்தால்,
அதன் முகத்திலிருந்து தொடங்கி விரிந்துள்ள தோகை வழியே போய் காலில் வந்து
முடிந்தால் ஓகாரமாகும் என்பது விளங்கும். அவந்த ஓங்காரத்தின் நடுவே ஆண்டவன்
அருட்ஜோதி மயமாக வீற்றிருக்கின்றனன். இந்த நுட்பத்தை அழகாக “ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும்
மயில் என்பது அறியேனே” என்று, வாதினை அடர்ந்த எனத் தொடங்கும் திருப்புகழில்
குறித்து அருளினார் அடிகளார். “ஓகார பரியின்மிசை
வரவேணும்” என்றார் "இரவி என" என்று தொடங்கும் பழநித் திருப்புகழில்.
பன்னெடுங்காலமாக
அரும் பெரும் தவங்களைப் புரிந்து, சிவபெருமானிடம் உயர்ந்த வரங்களைப் பெற்று,
ஆயிரத்து எட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி
அரசு புரிந்த வச்சிர யாக்கையைப் பெற்ற சூரபதுமனே, தனது பண்டைத் தவ வலிமையால்
மயிலாக ஆனான். அவனது தவ வலியும், முருகப் பெருமானது அருள் வலியும் சேர்ந்து பெருமை
பெற்றது மயில் ஆகும். மயில் என்பது திரோதான சத்தி. அதன் வல்மையால் மாமேரு மலையும்,
குலமலைகளும், உலகங்களும் அசைகின்றன.
இவ்வளவு
பெருமை வாய்ந்த மயிலின் ஆற்றல் குறித்து அடிகளார் அருளியுள்ளமை காண்க...
நறை
இதழி, அறுகு, பல புட்பத் திரள்களொடு,
சிறுபிறையும், அரவும், எழில் அப்பு, திருத்தலையில்
நளினம் உற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவும்
......மயிலேறி.
நவநதிகள்
குமுகுகு என, வெற்புத் திரள் சுழல,
அகிலமுதல் எழுபுவனம் மெத்தத் திடுக்கிடவும்,
நவமணிகள் உரகன் உடல் கக்கத் துரத்திவரு
...... முருகோனே!
--- (சிறுபிறையும்) திருப்புகழ்.
குசைநெகிழா
வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்
கசையிடு
வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து
அசைபடு
கால்பட்டு அசைந்து, மேரு அடியிட, எண்
திசைவரை
தூள்பட்ட, அத் தூளின் வாரி
திடர்பட்டதே. ---
கந்தர் அலங்காரம்.
தடக்கொற்ற
வேள்மயிலே! இடர் தீரத் தனிவிடில் நீ,
வடக்கில், கிரிக்கு அப்புறத்து நின்று, ஓகையின் வட்டம் இட்டு,
கடற்கு
அப்புறத்தும், கதிர்க்கு
அப்புறத்தும், கனக சக்ரத்
திடர்க்கு
அப்புறத்தும், திசைக்கு
அப்புறத்தும் திரிகுவையே. --- கந்தர் அலங்காரம்.
சேலில்
திகழ்வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித்து,
அநந்தன் பணாமுடி தாக்க, அதிர்ந்து அதிர்ந்து
காலில்
கிடப்பன மாணிக்க ராசியும், காசினியைப்
பாலிக்கும்
மாயனும், சக்ரா யுதமும், பணிலமுமே. ---
கந்தர் அலங்காரம்.
சக்ரப்ர
சண்டகிரி முட்டக் கிழிந்து,வெளி
பட்டு, க்ரவுஞ்சசயிலம்
தகரப், பெருங்கனக சிகரச் சிலம்பும், எழு
தனிவெற்பும், அம்புவியும், எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே,
சேடன்முடி திண்டாட, ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்குமயிலாம்... --- மயில் விருத்தம்.
பட்டு, க்ரவுஞ்சசயிலம்
தகரப், பெருங்கனக சிகரச் சிலம்பும், எழு
தனிவெற்பும், அம்புவியும், எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே,
சேடன்முடி திண்டாட, ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்குமயிலாம்... --- மயில் விருத்தம்.
புண்டரிக
விழியாள
---
புண்டரிகம்
- தாமரை.
தாமரை போன்ற திருக்கண்களை உடையவர் முருகப் பெருமான்.
அண்டர்
மகள் மணவாள
---
அண்டம்
- தேவலோகம். அண்டர் - தேவலோக வாசிகள் ஆகிய
தேவர்கள்.
தேவர்களின்
மகளாக வளர்ந்த தேவயானை அம்மையின் மணவாளர் முருகப் பெருமான்.
புந்தி
நிறை அறிவாள
---
நிறை
அறிவு கொண்டவர் முருகப் பெருமான். ஆன்மாக்கள் ஆகிய நமக்கு நிறை அறிவு இல்லை. குறை
அறிவே உள்ளது.
பொன்
பரவு
---
பொன்
- தேவகுரு ஆகிய பிரகஸ்பதி.
வெள்ளி
- அசுர குரு ஆகிய சுக்கிரன்.
தேவ
குருவால் வழிபடப்பெற்றவர் முருகப் பெருமான் என்பது, சூரபதுமனாதிய அசுரர்களின் வரலாற்றை
முருகவேள் கேட்க, பிரகஸ்பதி எடுத்துரைத்து,
தொழுது வழிபட்டு, எல்லாம் தெரிந்த உமது திருமுன் நான் இவ் வரலாற்றை உரைத்த பிழையைப்
பொறுத்தருள வேண்டும்' எனக் கூறினர். முருகவேளும்
"கூறுக" என யாம் கேட்க நீ கூறினாய் - ஆதலின் பிழை ஒன்றும் இல்லை எனக் கூறிப்
பிரகஸ்பதியைத் தேற்றினர்.
அறிவினுள்
அறிவாய் வைகும்
அறுமுக அமல! வெஞ்சூர்
இறுசெயல்
நினைக்கில் ஆகும்,
ஈண்டையோர் ஆடல் உன்னிக்
குறுகினை,
அதுபோல் அன்னோன்
கொள்கையும் தேர்ந்தாய்! நிற்குஓர்
சிறியனேன்
உரைத்தேன் என்னும்
தீப்பிழை பொறுத்தி என்றான்.
பொறுத்தி
என் குற்றம் என்று
பொன்னடித் துணையைப் பொன்னோன்
மறத்தல்இல்
அன்பிற் பூண்டு
வணங்கினன் தொழுது போற்ற,
வெறித்தரு
கதிர்வேல் அண்ணல்
எம்உரை கொண்டு சொற்றாய்,
உறத்தகு
பிழைஇல், யாதும்
உன்னலை இருத்தி என்றான்.
செம்பொன்
எழில் செறி ரூப ---
"பொன்னார்
மேனியனே" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "பொன் போல மிளிர்வதொர்
மேனியினீர்" என்று அப்பர் பெருமானும் அருளினர். சிவபெருமான் பொன்னார்
மேனியர். அவருடைய திருவருளால் அவரையே நிகர்த்து அவதரித்த முருகப் பெருமானும்
பொன்மேனியர்.
பொன்
என்னும் சொல்லுக்கு அழகு, ஒளி என்றும் பொருள் உண்டு.
"அழகான
மேனி தங்கிய வேளே" என்று "போதகம் தரு" எனத் தொடங்கும்
திருப்புகழிலும், "அந்தம் வெகுவான ரூபக்கார" என்று,
"முந்துதமிழ்" எனத் தொடங்கும் திருப்புகழிலும், "மற்றவர் ஒப்பிலா
ரூப" என்று "மைக்குழல்" எனத் தொடங்கும் திருப்புகழிலும் அடிகளார்
அருளி உள்ளமை காண்க.
தண்
தமிழின் மிகு நேய ----
உலகில்
பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவன் அருளை எளிதில்
பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். "நமக்கும் அன்பில் பெருகிய
சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக
என்றார் தூமறை பாடும் வாயார் என்னும் தெய்வச் சேக்கிழார் அருள் வாக்கை உன்னுக.
இறைவன்
சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி
சிவத்தினிடம் சீட்டு எழுதி அனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும்
அடி எடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது.
முதலை
வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்.
எலும்பைப்
பெண்ணாக்கியது தமிழ்.
இறைவனை
இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்.
குதிரைச்
சேவகனாக வரச்செய்தது தமிழ்.
கற்றூணில்
காட்சிதரச் செய்தது தமிழ்.
பற்பல
அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்.
இயற்கையான
மொழி தமிழ்.
பேசுந்தோறும்
பேரின்பத்தை வழங்குவது தமிழ்.
ஆதலால்
நம் அருணகிரியார் “அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா” என்று வியந்தனர் பிறிதொரு
திருப்புகழில்.
தமிழால்
வைதாலும் முருகப் பெருமான் வாழவைப்பான் என்கின்றார் அடிகளார்.
மொய்தார்
அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும்
அங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்
கைதான்
இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க
எய்தான்
மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே. --- கந்தர்
அலங்காரம்.
பின்வருமாறு
பாடிய புலவர்கள், வைது அருள் பெற்றமையை வெளிப்படுத்தும்.
மாட்டுக்
கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைவனத்து
ஆட்டுக்
கோனுக்குப் பெண்டு ஆயினாள், கேட்டிலையோ?
குட்டி
மறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள்,
கட்டுமணிச்
சிற்றிடைச்சி காண்.
நச்சரவம்
பூண்ட தில்லை நாதரே! தேவரீர்
பிச்சை
எடுத்து உண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளம்
ஏன்? குஞ்சரம் ஏன்? கார்கடல்போல் தான்முழங்கும்
மேளம்
ஏன்? ராஜாங்கம் ஏன்?
தாண்டி
ஒருத்தித் தலையின்மேல் ஏறாளோ?
பூண்ட
செருப்பால் ஒருவன் போடானோ? மீண்டஒருவன்
வையானோ?
வில் முறிய மாட்டானோ? தென்புலியூர்
ஐயாநீர்
ஏழை ஆனால்.
செல்லாரும்
பொழில்சூழ் புலியூர் அம்பலவாண தேவனாரே!
கல்லாலும்
வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்து சாடும்
எல்லாரும்
நல்லவர் என்று இரங்கி அருள் ஈந்தது என்ன? இகழ்ச்சி ஒன்றும்
சொல்லாமல்
மலரைக் கொண்டு எறிந்தவனைக் கொன்றது என்ன சொல்லுவீரே.
அப்பன்
இரந்து உண்ணி, ஆத்தாள் மலைநீலி,
ஒப்பரிய
மாமன் உறிதிருடி, - சப்பைக் கால்
அண்ணன்
பெருவயிறன், ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும்
பெருமை இவை.
"சேணொணாயிடும்
இதண்மேல் அரிவையை மேவியே, மயல் கொளலீ லைகள் செய்து, சேர நாடிய திருடா! அருள் தரு
கந்தவேளே" என்று தேவனூர்த் திருப்புகழில் அடிகளார் காட்டி உள்ளமையும் முருகப்
பெருமானுக்குத் தமிழின்பால் உள்ள நேயத்தை வெளிப்படுத்தும்.
"இவர்
அலாது இல்லையோ பிரானார்" என்று வைத சுந்தரருக்கு அருள் புரிந்தவர்
சிவபெருமான். "வாழ்ந்து போதீரே" என்று வசை பாடியவருக்குக் கண்ணளித்தவர்
சிவபெருமான். பித்தா என்று தொடக்கத்திலேயே தம்மை வசை பாடிய வன்தொண்டருக்கு, முடிவில், சிவபெருமான் வெள்ளை
யானையை அனுப்பினார் என்பது சிந்தனைக்கு உரியது.
"பெண்அருங்
கலமே, அமுதமே எனப் பெண்
பேதையர்ப் புகழ்ந்து, அவம் திரிவேன்,
பண்உறும்
தொடர்பில் பித்த என்கினும், நீ
பயன்தரல் அறிந்து, நின் புகழேன்"
என்னும்
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சோணசைல மாலையையும் சிந்திக்கவும்.
சந்ததமும்
அடியார்கள் சிந்தை அது குடியான ---
சந்ததம்
- எப்பொழுதும்.
"சந்ததம்
பந்தத் தொடராலே" என்னும் அடிகளாரின் அருள்வாக்கை எண்ணுக.
இறைவன்
எப்போதும் தனது கோயிலாகக் கொண்டு இருப்பது உயிர்களின் உள்ளத்தையே.
இறைவன்
கொள்ளுகின்ற உருவத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாயையினால் ஆனது
அல்ல. உயிர்களாகிய நாமெல்லாம் மலம் உடையவர்கள். ஆதலின் மலங்களில் ஒன்றாகிய மாயை
நமக்கு உடம்பாக வந்து பொருந்துகிறது. இறைவன் மலம் இல்லாதவன். ஆதலின் மாயை அவனுக்கு
உருவமாய் அமைதல் இல்லை. தூயதாகிய அவனது அறிவே அவனுக்கு உருவமாய் அமையும். அறிவின்
இயல்பாவது பிறர் நிலைக்கு இரங்குதல், கருணை
கொள்ளுதல், அருளுதல். இறைவனது அறிவு பெருங் கருணையாயும், பேரருளாயும் நிற்கும். அது பற்றியே
அவனது அறிவை அருள் என்றும், கருணை என்றும்
குறிப்பர் பெரியோர். இறைவன் தனது அறிவினால் கொள்ளுகிற உருவம் எல்லாம் அருள்
திருமேனி எனப்படுகிறது. அவனது திருமேனி அருள்.
இறைவன்
அனைத்து உலகங்களிலும் கலந்து அவையேயாய் நிற்கின்றான். உயிர் உடலெங்கும் கலந்து
தான் சிறிதும் தோன்றாமல் உடலேயாய் நிற்பது போன்றது இது. அவ்வாறு கலந்திருக்கும்
உயிருக்கு உடம்பு வடிவமாய் அமைகிறது. அதுபோல எல்லாவற்றிலும் கலந்திருக்கும்
இறைவனுக்கு அவையனைத்துமே வடிவமாய் அமைகின்றன.
தத்துவங்களில்
இறுதியாக, எல்லாவற்றிற்கும்
மேலே உள்ளதாகச் சொல்லப்படுவது நாதம் ஆகும். அதனையும் கடந்தால்தான் முப்பத்தாறு
தத்துவங்களையும் கடந்ததாகும். தத்துவங்களைக் கடத்தலாவது, ஆன்மா அவற்றைத் தனக்கு வேறாகக் கண்டு
நீங்குதல். நிலம் முதல் நாதம் ஈறாகிய தத்துவம் முப்பத்தாறனையும் கடந்த நிலையில்
அவை நீங்கிய நிலையில் ஆன்மா தான் அவற்றின்
வேறாய் இருத்தலை உணரும். ஆணவத்திற்கு மாற்றாகவே மாயையிலிருந்து தத்துவங்கள்
இறைவனால் கூட்டப்பட்டன. ஆதலால், அவை நீங்கிய இடத்து
ஆணவம் நிற்றல் இயல்பாகும். ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம். ஒன்று மேலிடின்
ஒன்று ஒளிக்கும் என்று கூறியுள்ளபடி, பக்குவம்
இல்லாத பொழுது சிவம் மறைந்திருக்க ஆணவ இருள் மேலிட்டிருந்தது. பக்குவம் வந்துற்ற
இப்பொழுது ஆணவம் மேலிட மாட்டாமல் இருக்க, சிவமே
மேலிடும். சிவம் மேலிட்டபோது ஆன்மா அதனைச் சார்ந்து, தான் வேறு தோன்றாது அதனோடு ஒன்றிவிடும்
கதிரொளியில் விளக்கொளி போல உயிருணர்வு சிவத்தில் அடங்கி நிற்கும். அவ்விடத்தில்
ஆன்மா பேரா இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்தும். அவ்வாறு நாதாந்தத்தில் ஆனந்த
வாரிதியின் ஆன்மாவை அழுத்தும் குறிப்புடையது கூத்தப் பெருமான் செய்யும்
திருக்கூத்து.
பின்வரும்
உண்மை விளக்கப் பாடல் இதனைத் தெளிவுபடுத்தும்.
எட்டும்
இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம்
புதல்வா நவிலக்கேள் - சிட்டன்
சிவாயநம
என்னும் திருஎழுத்து அஞ்சாலே
அவாயம்
அற நின்று ஆடு வான்.
இதன்
பதவுரை ----
புதல்வா
-- நன்மாணாக்கனே,
எட்டும்
இரண்டும் உருவான லிங்கத்தே -- ய என்னும் எழுத்தால்
குறிக்கப்படுகிற உயிராகிய ஆதாரத்தில்
நட்டம் நவிலக்
கேள்
-- சிவபிரான் செய்கின்ற திருக்கூத்தினை யாம் சொல்லக் கேள்.
சிட்டன்
-- மேலோனாகிய சிவபிரான்
சிவாயநம
என்னும் திருஎழுத்து அஞ்சால் -- சிவாயநம என்கிற
திருவைந்தெழுத்துக்களையே
திருமேனியாகக் கொண்டு
அவாயம்
அற -- உயிர்களின் பிறவித் துன்பம் நீங்கும் படியாக
நின்று
ஆடுவான் -- ஆடல் புரிவான் என அறிவாயாக.
இறைவன்
எங்கும் நிறைந்தவன், உருவம் இல்லாதவன்.
அவன் நடனம் செய்கிறான் என்றால் அதற்கு ஓர் இடம் வேண்டும் அல்லவா? அவனுக்கு உருவம் வேண்டும் அல்லவா? அவன் ஆடல் புரிவதற்குக் கொள்ளும் இடம்
எது? உருவம் எது? என்ற வினாக்களுக்கு இச்செய்யுளில் விடை
கூறுகிறார் ஆசிரியர். எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே என்றதனால் அவன் ஆடும்
இடம் இன்னது என்பதைப் புலப்படுத்தினார். லிங்கம் என்பதற்கு அடையாளம் அல்லது குறி
என்பது நேர் பொருள். இங்கு அச் சொல் ஆதாரம் அல்லது இடம் என்ற பொருளில் வந்தது.
எட்டும் இரண்டும் உருவான இடமே அவன் ஆடல் புரியும் இடமாகும்.
பின்வரும்
அருட்பாடல்களை இதற்கு மேற்கோளாகக் கொள்க.
பொன் அம்பலம் என்பது அடியவர்களின் இதயத்தைக் குறிக்கும். தன்னை வணங்கும்
அடியவர்களின் இதயத்தையே திருக்கோயிலாகக் கொண்டு முருகப் பெருமான், வள்ளி நாயகியுடன் எழுந்தருளி இருப்பார்.
நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே. --- தாயுமானார்.
உள்ளம் பெருங்கோயில், ஊன்உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிலிங்கம்,
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. --- திருமந்திரம்.
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யில் பூசி,
வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று,
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்,
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே என்றும்,
துடிஅனைய இடைமடவாள் பங்கா என்றும்,
சுடலைதனில் நடமாடும் சோதீ என்றும்,
கடிமலர் தூய்த் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
எவரேனும் தாமாக இலாடத்து இட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்து, அடிமைத்
திறம் நினைந்து, அங்கு
உவந்து நோக்கி,
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி
இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி,
கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
இலம், காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து
இடையாதே,
யாவர்க்கும் பிச்சை இட்டு,
விலங்காதே நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு,
மெய்யன்பு புகப்பெய்து, பொய்யை நீக்கி,
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம் வைத்து,
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
விருத்தனே! வேலைவிடம் உண்ட கண்டா!
விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே! உமைகணவா! உலக மூர்த்தீ!
நுந்தாத ஒண்சுடரே! அடியார் தங்கள்
பொருத்தனே! என்றென்று புலம்பி, நாளும்
புலன்ஐந்தும் அகத்து அடக்கி, புலம்பி நோக்கி,
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப் பட்டே ஈட்டி,
பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,
வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக்
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு
ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி
மையினால் கண்எழுதி, மாலை சூட்டி,
மயானத்தில் இடுவதன்முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி, அன்பு மிக்கு,
அகம்குழைந்து,
மெய்அரும்பி,
அடிகள் பாதம்
கையினால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவித்
திகையாதே,
சிவாயநம என்னும் சிந்தைச்
சுருதி தனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு,
பருதி தனைப் பல் பறித்த பாவ நாசா!
பரஞ்சுடரே! என்றென்று பரவி, நாளும்
கருதிமிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
குனிந்த சிலையால் புரமூன்று எரித்தாய் என்றும்,
கூற்று உதைத்த குரைகழல் சேவடியாய் என்றும்,
தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய் என்றும்,
தசக்கிரிவன் மலைஎடுக்க விரலால் ஊன்றி
முனிந்து, அவன்
தன் சிரம் பத்தும் தாளுந் தோளும்
முரண் அழித்திட்டு அருள்கொடுத்த மூர்த்தீ! என்றும்
கனிந்து, மிகத்
தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. ---
அப்பர்.
துறவாதே யாக்கை துறந்தான் தன்னை,
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னை,
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகி,
பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்
தன்னை,
மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. --- அப்பர்.
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ. --- அப்பர்.
உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்.
--- பேய் ஆழ்வார்.
உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர். ---
பொய்கை ஆழ்வார்.
வானத்தான் என்பாரும் என்க, மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம்என்க, - ஞானத்தான்
முன் நஞ்சத்தால் இருண்ட மொய் ஒளி சேர் கண்டத்தான்
என் நெஞ்சத்தான் என்பன் யான். ---
அற்புதத் திருவந்தாதி.
பிரான்அவனை நோக்கும் பெருநெறியே பேணி,
பிரான்அவன்தன் பேரருளே வேண்டி, - பிரான்அவனை
எங்கு உற்றான் என்பீர்கள், என் போல்வார் சிந்தையினும்
இங்கு உற்றான்,
காண்பார்க்கு எளிது. --- அற்புதத்
திருவந்தாதி.
தண்
சிறுவை தனில் மேவு பெருமாளே ---
சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா
நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோ மீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின்
தோரண வாயில் உள்ளது.
இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
சிறுவாபுரியின் நுழைவாயிலில் சப்த மாதர் கோயில், நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோயில். மேற்கே பெருமாள் கோயில் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் விஷ்ணுதுர்கை கோயில்கள்
உள்ளன. வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்ரமண்ய சுவாமி ஆலய கோபுரம் கம்பீரமாக நம் கண்ணுக்கு
காட்சி தருகிறது. அருணகிரி நாதரால் போற்றி பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.
இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்ரமண்யர், ஆதிமூலவர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் அனைத்தும் மரகதப் பச்சைக் கல்லால் ஆனவை. கோயிலுனுள் உயரமான கொடிமரம் முன் காணப்படும் பச்சை மரகத
மயிலின் காட்சி
கண்கொள்ளா அழகு. இது போன்ற சிறந்த வடிவமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது.
சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார்.
அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட இராமபிரான் யாகப் பசுவாக குதிரையை ஏவி விட, அது வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த இராமபிரானின்
பிள்ளைகளான லவனும் குசனும்
கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. இராமபிரானே நேரில் வந்து சிறுவர்களிடம்
போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவரம்பேடு என்று
வழங்கபட்டது. நாளடைவில் சிறுவாபுரி என்று மருவியது.
சிறுவாபுரி முருகன் திருக்கோயில் ஞாயிறுதோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் 8 மணி
வரை திறந்து இருக்கும். செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து வழிபாடு செய்யலாம். மற்ற
நாட்களில் காலை 7.30 மணி முதல் 12 மணி
வரையிலும், மாலை 5 மணி
முதல் இரவு 8 மணி
வரையிலும் வழிபாடு செய்யலாம்.
கருத்துரை
முருகா! எல்லோரும் கண்டு இன்புறுமாறு மயிலின் மீது திருநடனம் புரிந்து வந்து
அருள வேண்டும்.
ஓம் சரவணபவாய நமஹ
ReplyDeleteஅருமை! இதை பாராயணம் செய்து பயன் அடைந்தவர் அனேகம்! முருகன் துணை
ReplyDelete