திருவக்கரை - 0735. பச்சிலை இட்டு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பச்சிலை இட்டு (திருவக்கரை)

முருகா!
விலைமாதர் ஆசையுள் பட்டு அழியாமல்
திருவடியை அருள்வாய்.


தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான


பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
     குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
     பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ......நினைவோர்கள்

பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
     யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்
     பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யிதழூறல்

எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்
     இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
     மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர்

இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
     பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
     இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத ...... மருள்வாயே

நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
     ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்
     நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள ...... வணிமார்பர்

நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
     நட்டர வப்பணி சுற்றிம தித்துள
     நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே

கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
     றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
     றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா

கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு
     குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
     கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள்,
     குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்,
     பப்பர மட்டைகள், கைப்பொருள் பற்றிட ......நினைவோர்கள்,

பத்தி நிரைத்த வளத் தரளத்தினை
     ஒத்த நகைப்பில், விழிப்பில் மயக்கிகள்,
     பட்சம் மிகுத்திட முக்கனி சர்க்கரை ...... இதழ்ஊறல்

எச்சில் அளிப்பவர், கச்சு அணி மெத்தையில்
     இச்சகம் மெத்த உரைத்து, நயத்தொடும்
     எத்தி அழைத்து, அணைத்து மயக்கிடு ...... மடமாதர்,

இச்சையில் இப்படி நித்தம் உனத்துயர்
     பெற்று, லகத்தவர் சிச்சி எனத் திரி
     இத்தொழில், க்குணம் விட்டிட நற்பதம்.....அருள்வாயே.

நச்சு அரவில் துயில் பச்சை முகில், கரு-
     ணைக்கடல், பத்ம மலர்த் திருவைப் புணர்
     நத்து தரித்த கரத்தர், திருத் துளவு ...... அணிமார்பர்,

நட்ட நடுக்கடலில் பெரு வெற்பினை
     நட்டு அரவப் பணி சுற்றி, மதித்துள
     நத்து அமுதத்தை எழுப்பி அளித்தவர் ...... மருகோனே!

கொச்சை மொழிச்சி, கறுத்த விழிச்சி,
     சிறுத்த இடைச்சி, பெருத்த தனத்தி,
     குறத்தி தனக்கு மன ப்ரியம் உற்றிடு ...... குமரஈசா!

கொத்து அவிழ் பத்ம மலர்ப் பழனத்தொடு
     குற்றம் அறக் கடிகைப் புனல் சுற்றிய
     கொட்புஉள நல் திருவக்கரை உற்று உறை ......பெருமாளே.


பதவுரை

         நச்சு அரவில் துயில் பச்சைமுகில் --- விடம் கொண்ட பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளுகின்ற மேக வண்ணத்தர்,

     கருணைக் கடல் --- கருணைக் கடலாய் உள்ள வரதர்,

     பத்ம மலர்த் திருவைப் புணர் --- தாமரை மலரில் வாசம் புரியும் திருமகளை மணம் புணர்ந்தவர்,

     நத்து தரித்த கரத்தர் --- பாஞ்சசன்னியம் என்னும் சங்கினைத் திருக்கையில் தரித்தவர்,

      திருத்துளவம் அணி மார்பர் --- துளவ மாலை அணிந்துள்ள திருமார்பினை உடையவர்,

     நட்டநடுக் கடலில் பெருவெற்பினை நட்டு --- திருப்பாற்கடலின் மத்தியில் பெரிய மந்தர மலையை நட்டு,

     அரவப் பணி சுற்றி --- வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகச் சுற்றி,

     மதித்து  --- கடைந்து,

     உள நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே ---  உள்ளத்தில் விரும்பிய அமுதத்தை வரச்செய்து, தேவர்களுக்கு அளித்த திருமாலின் திருமருகரே!

      கொச்சை மொழிச்சி --- திருந்தாத சொற்களை உடையவள்,

     கறுத்த விழிச்சி --- கரிய கண்களை உடையவள்,

     சிறுத்த இடைச்சி --- சிறுத்த இடையினை உடையவள்,

     பெருத்த தனத்தி --- பருத்த தனங்களை உடைவயள் ஆகிய,

     குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமர ஈசா ---- குறமகளாகிய வள்ளிநாயகி மனத்தில் அன்பு கொண்ட குமாரக் கடவுளே!

         கொத்து அவிழ் பத்ம மலர்ப் பழனத்தொடு ---  கொத்துக் கொத்தாக இதழ்கள் அவிழ்கின்ற தாரமைகள் நிறைந்துள்ள வயல்களும்,

     குற்றம் அறக் கடிகைப்புனல் சுற்றிய கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே --- குற்றமற்றுத் தெளிந்து ஓடுகின்ற ஆற்றின் நீரும் சூழ்ந்துள்ள நல்ல திருவக்கரை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் --- பச்சிலைகளை அரைத்துப் பூசி முகத்தை மினுக்குபவர்கள்.

      குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் --- வஞ்சகமான செயல்களில் வல்லவர்கள்.

      பப்பர மட்டைகள் --- கூத்தாடும் பயனிலிகள்,

     கைப்பொருள் பற்றிட நினைவோர்கள் --- வருபவர்கள் கையில் உள்ள பொருளைப் பறிப்பதிலேயே எண்ணம் மிக்கவர்கள்.

      பத்தி நிரைத் தவளத் தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள் --- வரிசையாக உள்ள  வெண்முத்துக்களை ஒத்த பற்களாலும், பார்வைலும் மயக்குபவர்கள்.

      பக்ஷம் மிகுத்திட --- அன்பு மிகும்படி,

     முக்கனி சர்க்கரை இதழ் ஊறல் எச்சில் அளிப்பவர் --- முப்பழங்களும் சருக்கரையும் கலந்தது போல் இனிக்கும் வாயிதழ் ஊறலாகிய எச்சிலைக் கொடுப்பவர்கள்.

      கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து --- கயிற்றுக்கட்டிலின் மேல் மெத்தையில் இருக்க வைத்து, முகத்துதியான வார்த்தைகளை மெத்தப் பேசி,

      நயத்தொடும் எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மடமாதர் --- பக்குவமாக ஏமாற்றி திரும்பவும் வரும்படி அழைத்து, அணைத்து மயக்கும் அழகிய விலைமாதர்கள்.

      இச்சையில் --- (இவர்கள் மீது கொண்ட) ஆசையால்,

     இப்படி நித்தம் மனத் துயர் பெற்று --- இப்படி நாள்தோறும் மனத் துயரை அடைந்து,

     உலகத்தவர் சிச்சி எனத் திரி --- உலகில் உள்ளோர் சீச்சீ என இகழும்படியாகத் திரிகின்,

     இத்தொழில் இக்குணம் விட்டிட --- இந்த இழி செயலையும், இழி குணத்தையும் விடும்படியாக

     நல் பதம் அருள்வாயே --- நன்மையைத் தருகின்ற திருவடிகளைத் தந்து அருள் புரிவாயாக.


பொழிப்புரை


         விடம் கொண்ட பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளுகின்ற மேக வண்ணத்தரும், கருணைக் கடலாய் உள்ள வரதரும், தாமரை மலரில் வாசம் புரியும் திருமகளை மணம் புணர்ந்தவரும், பாஞ்சசன்னியம் என்னும் சங்கினைத் திருக்கையில் தரித்தவரும், துளவ மாலை அணிந்துள்ள திருமார்பினை உடையவரும், திருப்பாற்கடலின் மத்தியில் பெரிய மந்தர மலையை நட்டு, வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகச் சுற்றி, திருப்பாற்கடலைக் கடைந்து, உள்ளத்தில் விரும்பிய அமுதத்தை வரச்செய்து, தேவர்களுக்கு அளித்தவருமான திருமாலின் திருமருகரே!

         திருந்தாத சொற்கள், கரிய கண்கள், சிறுத்த இடை, பருத்த தனங்களை உடைவயள் ஆகிய, குறமகளாகிய வள்ளிநாயகி மனத்தில் அன்பு கொண்ட குமாரக் கடவுளே!

     கொத்துக் கொத்தாக இதழ்கள் அவிழ்கின்ற தாரமைகள் நிறைந்துள்ள வயல்களும், குற்றமற்றுத் தெளிந்து ஓடுகின்ற ஆற்றின் நீரும் சூழ்ந்துள்ள நல்ல திருவக்கரை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

     பச்சிலைகளை அரைத்துப் பூசி முகத்தை மினுக்குபவர்கள். வஞ்சகமான செயல்களில் வல்லவர்கள். கூத்தாடும் பயனற்றவர்கள், வருபவர்கள் கையில் உள்ள பொருளைப் பறிப்பதிலேயே எண்ணம் மிக்கவர்கள். வரிசையாக உள்ள  வெண்முத்துக்களை ஒத்த பற்களாலும், பார்வைலும் மயக்குபவர்கள். அன்பு மிகும்படி, முப்பழங்களும் சருக்கரையும் கலந்தது போல் இனிக்கும் வாயிதழ் ஊறலாகிய எச்சிலைக் கொடுப்பவர்கள். கயிற்றுக்கட்டிலின் மேல் மெத்தையில் இருக்க வைத்து, முகத்துதியான வார்த்தைகளை மெத்தப் பேசி, பக்குவமாக ஏமாற்றி திரும்பவும் வரும்படி அழைத்து, அணைத்து மயக்கும் அழகிய விலைமாதர்கள். இவர்கள் மீது கொண்ட ஆசையால், இப்படி நாள்தோறும் மனத் துயரை அடைந்து, உலகில் உள்ளோர் சீச்சீ என இகழும்படியாகத் திரிகின், இந்த இழி செயலையும், இழி குணத்தையும் விடும்படியாக நன்மையைத் தருகின்ற திருவடிகளைத் தந்து அருள் புரிவாயாக.


விரிவுரை

இத் திருப்புகழில் அடிகளார் விலைமாதர்களின் அழகையும், அவர்கள் புரியும் வஞ்சகச் செயல்களையும், அவரால் கவரப்பட்டுப் படுகின்ற புன்மையையும் எடுத்துக் கூறி, இழிவான குணத்தையும், செயலையும் விட்டு ஈடேறத் திருவடியைத் தந்து அருள் புரியுமாறு முருகப் பெருமானை வேண்டுகின்றார்.

நச்சு அரவில் துயில் பச்சைமுகில் கருணைக் கடல் ---

ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன் என்னும் பாம்பைத் தனது படுக்கையாகக் கொண்டு அதில் அறிதுயில் கொள்ளுபவர் திருமால். அவர் கருநிறம் கொண்டவர்.

முகில் கருநிறம் கொண்டது. பச்சை, நீலம், கறுப்பு என்னும் இவ்வண்ணங்களைக் கருப்பு எனக் கொள்வர்.

அவர் கருணைக் கடலாய் உள்ளவர்.

பத்ம மலர்த் திருவைப் புணர் ---

தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட திருமகளைத் திருமணம் புணர்ந்து, தனது வலமார்பில் எப்போதும் நீங்காது இருக்கும்படியாக வைத்தவர்.

நத்து தரித்த கரத்தர் ---

ந்தது - சங்கு.

பாஞ்சசன்னியம் என்னும் சங்கினைத் திருக்கையில் தரித்தவர் திருமால்.

திருத்துளவம் அணி மார்பர் ---

துளவ மாலையை விரும்பித் தனது திருமார்பில் அணிந்துள்ளவர்.

நட்டநடுக் கடலில் பெருவெற்பினை நட்டு, அரவப் பணி சுற்றி, மதித்து, உள நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே ---

திருப்பாற்கடலின் நட்டநடுவில் பெரிய மலையாகிய மந்தர மலையை மத்தாக நட்டு, வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் ஒருபுறமும் இருந்து, கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குப் பகிர்ந்து அளித்தவர் திருமால்.
  
மலையை மத்தென, வாசுகியே கடை
     கயிறு என, திருமால் ஒரு பாதியும்
          மருவும் மற்று அது வாலியும் மேலிட, ......அலைஆழி
வலயம் முட்ட ஒர் ஓசை அதாய், ஒலி
     திமி திமித்திம் எனா எழவே, அலை
          மறுகிடக் கடையா எழ, மேல்எழும் ...... அமுதோடே,
துலை வருத் திரு மாமயில் வாழ்வுள,
     வயலை அற்புதனே! வினை ஆனவை
          தொடர் அறுத்திடும் ஆரிய! கேவலி ...... மணவாளா!
                                                                   --- (முலைமறைக்கவும்) திருப்புகழ்.
  
கொச்சை மொழிச்சி, கறுத்த விழிச்சி, சிறுத்த இடைச்சி, பெருத்த தனத்தி , குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமர ஈசா ---

வள்ளிநாயகியாரைக் குறித்து இப்பாடலில் இவ்வாறு கூறினார். அருணகிரிநாதப் பெருமான் அருளியுள்ள திருவகுப்பு என்னும் நூலில் வேல் வகுப்பு என்னும் அற்புதமான பாடலும் ஒன்று.

வேல் வகுப்பு உயிர்களுக்கு மருந்து போன்றது. மருந்து நோய்களை தீர்ப்பது போல, இந்த வகுப்பு நோயை நீக்கும். பிறவிப்பிணியை போக்கும். வேல் ஞானம் ஆதலால் அதைப் படிப்பவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, பேரின்ப வாழ்வைக் கொடுக்கும். முருகன் வேறு, வேல் வேறு அல்ல. கந்தக் கடவுள் பவரோக வைத்தியநாதப் பெருமாள் ஆகையினால் வேலாயுதமும் பிறவியை அழிக்கும் பெரிய மருந்து என்பார் தணிகைமணி அவர்கள். மேலும் இவ்வகுப்பு '' - வில் ஆரம்பித்து 'லே' - வில் முடிவதினால், இதை 'பலே' வகுப்பு என்பார் அவர்.

"பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
          விழிக்குநிகர் ஆகும்,.....

திருத்தணியில் உதித்துஅருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில்
          நடத்துகுகன் வேலே".

இத் திருவகுப்பில் வேலுக்கு ஒப்பாக வள்ளிநாயகியின் கண்களைக் கூறுகின்றார். வள்ளிநாயகியார் எப்படிப்பட்டவர் என்பதை பருத்த முலைகளை உடையவர், சிறுத்த இடையினை உடையவர், வெளுத்த நகையின் உடையவர், கறுத்த கூந்தலை உடைவயர், சிவத்த வாயிதழை உடையவர் என்றும், வேடர்கள் சிறுமி அவர் என்றும் கூறுகின்றார்.

பருத்த முலை - பெருத்த தனத்தி ---

பிறந்த குழந்தைக்கு உடல் நோய் நீங்கி, உடலும் உள்ளமும் வலுப்பெற உதவுவது முலைப்பால் ஆகும். உயிர்க்கூட்டங்களின் இருள்மலப் பிணியை ஒழித்து, அருள் ஒளியை நிரப்பும் அமுதம் நிறைந்த திருமுலைகளை உடைவயர் வள்ளிநாயகியார். அமுதம் எப்போதும் சுரந்துகொண்டு இருத்தலால் பருத்த முலை என்றார் அடிகளார்.

"உள்ளத்து உறுபிணியேற்கு மருந்துக்கு என்று, உன்னை வந்து,
மெள்ளத் தொழலும், திருமுலைப்பால் மெல் விரல் நுதியால்
தெள்ளித் துளி அளவு ஆயினும் தொட்டுத் தெறிக்கிலை, உன்
பிள்ளைக்கும் கிள்ளைக்கும் பால்கொடுத்தால் என்ன பெரியம்மையே"

என்று பாடினார் ஒர் அருளாளர்.

மேலும் திருமுலையானது எப்படிப்பட்டது என்பதைக் கல்லாடம் என்னும் நூலில் குறித்து உள்ளதையும் அறிய இன்பம் மிகும்.

"நின்றுஅறி கல்வி ஒன்றிய மாந்தர்
புனைபெருங் கவியுள் தருபொருள் என்ன
ஓங்கி, புடைபரந்து, முதம் உள் ஊறி,
காண்குறி பெருத்து, கச்சு அது கடிந்தே,
எழுத்து,மணி, பொன்,பூ, மலை என யாப்புற்று              
அணிபெரு முலை"                         ---  கல்லாடம்.45

இதன் பொருள் ----

கற்றலின்கண் நிலைபெற்றிருந்து, அறியத்தக்க கல்வியைப் பொருந்திய நல்லிசைப் புலவர்களாலே இயற்றப்பட்ட பெரிய செய்யுள் தன்னுள் இருந்து வழங்குகின்ற பொருள் போல உயர்ந்து, பக்கங்களிலே பரந்து, உள்ளே அமுதம் ஊற்றெடுத்து, காண்பற்கு உரிய நல்ல இலக்கணத்தோடே பருத்து, வாரைக் கிழித்து,  எழுத்து என்றும், மணி என்றும் பொன் என்றும், மலர் என்றும், மலை என்றும் கூறப்படும் இவற்றோடு தொடர்பு பெற்று, அழகுபெற்ற முலை....

"திருவடி புகழுநர் செல்வம் போலும்
அண்ணாந்து எடுத்த அணிஉறு வனமுலை".... --- கல்லாடம்.41

இதன் பொருள் ---

இறைவனுடைய அழகிய திருவடிகளைப் புகழ்ந்து பாடும் சான்றோரது செல்வம் வளருமாறு போலே மேலோங்கித் தலை நிமிர்ந்த அணிகலன்கள் மிக்க அழகுள்ள முலைகள்....

"கல்லாக் கயவர்க்கு அருநூல் கிளை மறை
சொல்லினர் தோம் எனத் துணைமுலை பெருத்தன"...
                                              ---  கல்லாடம்.41

இதன் பொருள் ---

எம்பெருமாட்டியினுடைய கொங்கைகள் இரண்டும் கற்றறிவு இலாத கீழ்மக்களுக்கு, உணர்தற்கரிய நூலாகிய கிளைகளை உடைய வேதங்களின் பொருளை அறிவுறுத்திய ஆசிரியர்பால் குற்றம் பெருத்தாற்போல பெருத்தன....

சிறுத்த இடை - சிறுத்த இடைச்சி ---

இறைவன் திருவடிப் பெருமையைப் பேசுகின்ற அடியவர்களின் வினையானது தேய்வதைப் போலச் சிறுத்து உள்ளது வள்ளிநாயகியாரின் இடை என்கின்றார்.

"பலவுடம்பு அழிக்கும் பழியின் உணவினர்
தவம் எனத் தேய்ந்தது துடி எனும் நுசுப்பே"...
                                              ---  கல்லாடம். 41

இதன் பொருள் ---

உடுக்கை என்று உவமிக்கப்படும் அவளது சிற்றிடையானது, பலவாகிய உயிரினங்களின் உடல்களை அழிக்கின்ற, சான்றோரால் பழிக்கப்பட்ட ஊன் உணவினை உடைய கீழ் மக்கள் மேற்கொண்ட தவம் அறத் தோய்ந்தாற்போலத் தேய்ந்தது.

வெளுத்த நகை ---

அன்பு நிறைந்த புன்னகை செய்யும் அருமையான பற்கள், பிறவித் துன்பத்தை வேர் அறுக்கும் மாசு அற்ற ஒளி பொருந்தியதாய் இருந்த்து என்கின்றார் அடிகளார்.

கறுத்த குழல் - கறுத்த விழிச்சி ----

வள்ளிநாயகியாரின் கூந்தலும் கண்களும் கறுத்து இருந்தன என்கின்றார் அடிகளார்.

அவை எப்படி இருந்தன என்பதைக் கல்லாடல் என்ன்மு அருள் நூலின் வாயிலாக அறிவோம்...

கடவுள் கூறார் உளம் எனக் குழலும்,                   
கொன்றை புறவு அகற்றி நின்ற இருள் காட்டின;
கரும்பு படிந்து உண்ணுங் கழுநீர் போலக்
கறுத்துச் செவந்தன கண் இணை மலரே...    --- கல்லாடம்.41


இதன் பொருள் ---

கூந்தலும் தானும் நிறத்தால் தோற்கும்படி செய்து கொன்றைப் பழங்களை முல்லை நிலத்தினின்றும் அகற்றி, இறைவனை நினைந்து வாழ்த்தாத மடவோருடைய நெஞ்சத்தின்கண் நிலபெற்ற அறியாமை இருளை ஒத்த, நிலபெற்ற இருளைத் தம்பால் காட்டின.

கண்களாகிய இரண்டு மலர்களும் வண்டுகள் மொய்த்துத் தேன் பருகுவதற்கு இடமான ஆம்பல் மலர் போன்று கறுத்துச் சிவப்பபு எய்தின.

வள்ளி நாச்சியாருக்கு ஐந்து தொழில்களும் உண்டு என்பதை இவ்வடிகள் உள்ளுறையாக வெளிப்படுத்துகின்றன.

       1. பக்குவமடைந்த நிலையை காண்பிக்கும் பருத்த முலையினால் தோற்றமும்,

       2. கனமான தனபாரங்களை தாங்கும் இடை திதியையும் (காத்தல்),

       3. அஞ்ஞானத்தை நீக்கி, அருள் ஒளியைப் பரப்பும் வெளுத்த நகை சங்காரத்தையும்,

       4. கருத்து இருண்டிருக்கும் கூந்தல் திரோபாவம் என்னும் மறைத்தலையும்

       5. ஞானத்தை அருளும் சிவத்த இதழ் அருளையும் காட்டுகின்றன.

கொத்து அவிழ் பத்ம மலர்ப் பழனத்தொடு, குற்றம் அறக் கடிகைப்புனல் சுற்றிய கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே ---  

பழனம் - வயல்.  கொட்பு - சூழ்ந்துள்ள.

திருவக்கரை என்னும் திருத்தலம் தொண்டை நாட்டில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து மயிலம், வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று 'பெரும்பாக்கம்' என்ற ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதையில் 7 கி.மீ. சென்றால் திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்து திருவக்கரை செல்ல நகரப்பேருந்து வசதி உள்ளது. வராகநநி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோயில்.

இறைவர் திருநாமம், சந்திரசேகரேசுவரர், சந்திரமௌலீசுவரர்.
இறைவியார் திருநாமம் அமிர்தேசுவரி, வடிவாம்பிகை.

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டு, திருப்பதிகம் அருளிய திருத்தலம்.

வக்கிராசுரனை திருமால் போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசுரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்வகுருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால், அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள்.

அஷ்டபுஜ காளியின் சந்நிதி முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. காளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. வக்கரையில் உள்ள காளியாதலின் வக்கரைக்காளி என்றும் அழைக்கப்படுகிறாள். காளியின் சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த மேற்கு நோக்கிய வக்கிர லிங்கம் உள்ளது. காளி சந்நிதியைக் கடந்து நேரே சென்றால் வலதுபுறம் சிங்கமுகத் தூண்கள் அமைந்த கல் மண்டபம் உள்ளது. அதையடுத்துள்ள அடுத்துள்ள மூன்று நிலைகளையுடைய கோபுரம் கிளிக்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு எதிரில் பெரிய கல்லால் ஆன நந்தி உள்ளது. கோபுரத்திற்கு இடதுபறம் விநாயகர் சந்நிதி இருக்கிறது.

சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட இலிங்கம் மும்முகலிங்கம் எனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.

வக்கிராசுரனை அழித்த திருமால் இவ்வாலயத்தின் இரண்டாவது திருச்சுற்றில் மேற்கு நோக்கியவாறு வரதராஜப்பெருமாள் என்ற பெயருடன் கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார்.

வக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பை வக்கிரதாண்டவம் என்று குறிப்பிடுகின்றனர். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர் கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது.

கருத்துரை

முருகா! விலைமாதர் ஆசையுள் பட்டு அழியாமல் திருவடியை அருள்வாய்.







No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...