திருப் பாதாளேச்சுரம்
(பாமணி)
சோழ
நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மன்னார்குடியிலிருந்து
2 கி. மீ. தொலைவிலுள்ள
இவ்வூருக்கு நகரப் பேருந்துகள் உள்ளன. கோயில் வரை வாகனங்கள் செல்கின்றன.
மக்கள், இத்திருத்தலத்தை வழக்கில்
"பாமணி" என்று வழங்குகிறார்கள்.
இத்திருத்தலத்தின்
பெயரான 'பாம்பணி' என்பது மருவி "பாமணி"
என்றாயிற்று. (சம்பந்தர் பாட்டில் 'பாதாளேசசுரம்' என்று குறிக்கப்படும் பெயர், பிற்காலத்தில் சுந்தரர் 'பாம்பணி' என்று மாறி வருவதை நோக்குங்கால்
அக்காலத்திலேயே இப்பெயர் மாறிப்போய் விட்டிருப்பதை அறியமுடிகிறது.
இறைவர்
: சர்ப்பப்புரீசுவரர், நாகநாதர்.
இறைவியார்
: அமிர்தநாயகி.
தல
மரம் : மா
தீர்த்தம் : நாக தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - மின்னியல்
செஞ்சடை.
தல
வரலாறு
பாதாளத்திலிருந்து
ஆதிசேஷன் வெளிப்பட்டு (தனஞ்சய முனிவராய்) வழிபட்டத் தலமாதலின் பாதாளீச்சுரம்
எனப்பட்டது.
சுகல முனிவர் வளர்த்த
காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்து விடுமே
என்று கோபித்து அடித்தார் - அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச் சென்று; வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை
உணர்த்துவது போலச் சிவலிங்கத்தின்மீது முட்டி ஓடி - (வடக்கு வீதியில் உள்ள) பசுபதி
தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சித் தந்து பசுவை
உயிர்ப்பித்தார். காமதேனு முட்டியதால் மூலத்திருமேனி மூன்று வடுக்களையுடையதாய் -
முப்பிரிவாகக் காட்சித் தருகின்றது.
பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இத்தலத்தின் வேறு
பெயர்கள்.
சர்ப்ப தோஷ
நிவர்த்தித் தலம்.
மூலவர் - சுயம்பு
மூர்த்தி; முப்பிரிவாக அமைத்து
செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.
பாம்பு வழிபட்டமையால்
பாம்புபோன்ற வடுவும் மூலவரின் முன்புறத்தில் உள்ளது.
ஆதிசேஷன், தனஞ்சயர் வடிவில் தோன்றி, பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட்ட நாள்
ஐப்பசி முதல் நாளாகும். எனவே அந்நாளில் நம் உணவு போலவே சோறு, குழம்பு, காய்கறி வகைகள், வடை, பாயசம் சமைத்து சுவாமிக்கு அபிஷேகம்
செய்து நிவேதித்தால் தோஷம் நிவர்த்தியாகிறது என்ற நம்பிக்கை மக்களிடையயே உள்ளது.
பச்சை திராட்சை, மாங்கனியும், மாம்பழச் சாறும் இங்குச் சிறப்பு
நிவேதனம்.
இராஜராஜன் காலக்
கல்வெட்டில் இத்தலம் "சுற்ற வேலி வளநாட்டு பாம்பணி கூற்றத்துப் பாமணி"
என்று குறிக்கப்படுகிறது.
இத்
திருக்கோயில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பூவுலகாம் ஈங்கும் பாதாள
முதல் எவ்வுலகும், எஞ்ஞான்றும் தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்" என்று போற்றி
உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 896
பொன்னிவளம்
தருநாடு புகுந்து, மிக்க
பொருஇல்சீர்த்
திருத்தொண்டர் குழாத்தி னோடும்,
பன்னகப்பூண்
அணிந்தவர்தம் கோயில் தோறும்
பத்தர்உடன், பதிஉள்ளோர் போற்றச்
சென்று,
கன்னிமதில்
திருக்களரும் போற்றி, கண்டம்
கறைஅணிந்தார்
பாதாளீச் சுரமும் பாடி,
முன்அணைந்த
பதிபிறவும் பணிந்து போற்றி,
முள்ளிவாய்க்
கரைஅணைந்தார் முந்நூல் மார்பர்.
பொழிப்புரை : காவிரியாறு வளம்
பெருக்குகின்ற சோழநாட்டில் புகுந்து, ஒப்பில்லாத
மிகுந்த சிறப்புகளையுடைய தொண்டர் கூட்டத்துடன், பாம்பை அணியாய்ப் பூண்ட இறைவரின்
திருக்கோயில்கள் தோறும் இருந்தருளும் அன்பர்களுடன், அப்பதியில் உள்ளவர்களும் எதிர்கொண்டு
போற்றச் சென்று, பகைவரால்
அழித்தற்கரிய மதிற் சிறப்புடைய `திருக்களர்' என்ற பதியையும் போற்றிப் பின்பு, கழுத்தில் நஞ்சுடைய இறைவரின் `பாதாளீச்சுரத்தினையும்' பாடி வணங்கி, முன்னே வழிபட்டுச் சென்ற மற்றப்
பதிகளையும் வணங்கிப் போற்றி, முந்நூல் அணிந்த
மார்பையுடைய ஞானசம்பந்தர் முள்ளிவாய்க் கரையைச் சேர்ந்தனர்.
குறிப்புரை : திருக்களரில்
இதுபொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. திருப்பாதாளீச்சுரத்தில் அருளியது, `மின்னியல்' (தி.1 ப.108) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப்
பண்ணிலமைந்த பதிகமாகும். கோயில் தொறும் என்றது திருவெண்ணியூர், திருவிரும்பூளை முதலாயின வாகலாம் என்பர்
சிவக்கவிமணியார். முள்ளிவாய்க்கரை என்பது இப்பொழுது ஓடம்போக்கியாறு என
வழங்குகிறது. இது காவிரியின் கிளையே. இதனருகே உள்ள ஊர் திருக்கொள்ளம்பூதூராகும்.
1.108 திருப்பாதாளீச்சரம் பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மின்இயல்
செஞ்சடைமேல்
விளங்கும்மதி
மத்தமொடு, நல்ல
பொன்இயல்
கொன்றையினான்,
புனல்சூடிப்
பொற்புஅமரும்
அன்னம்
அனநடையாள்
ஒருபாகத்து அமர்ந்து
அருளி, நாளும்
பன்னிய
பாடலினான்,
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :மின்னல் போன்ற
செஞ்சடைமேல் விளங்கும் மதி, ஊமத்தமலர் பொன் போன்ற
நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி, அழகு விளங்கும் அன்னம் போன்ற
நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, நாள்தோறும்
வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 2
நீடுஅலர்
கொன்றையொடு
நிரம்பா மதிசூடி
வெள்ளைத்
தோடுஅமர்
காதல்நல்ல
குழையான், சுடுநீற்றான்,
ஆடுஅர
வம்பெருக
அனல் ஏந்திக் கைவீசி, வேதம்
பாடலி
னால் இனியான்,
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :கொத்தாக நீண்டு
அலர்கின்ற கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில் சூடி, ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு
காதில் நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும், சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும், ஆடும் பாம்பு அணிகலனாகப் பெருகித்தோன்ற
அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய
சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 3
நாகமும்
வான்மதியும்
நலமல்கு செஞ்சடையான், சாமம்
போகநல்
வில்வரையால்
புரம்மூன்று எரித்து
உகந்தான்,
தோகைநன்
மாமயில்போல்
வளர்சாயல் தூமொழியைக்
கூடப்
பாகமும்
வைத்து உகந்தான்,
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :பாம்பு, வானில் விளங்கும் மதி ஆகியனவற்றைச்
சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும், உரிய
காலம் கழிய நல்ல மேருவில்லால் முப்புரங்களை எரித்துகந்தவனும், தோகையை உடைய நல்ல ஆண்மயில் போன்று
வளர்கின்ற கட்புலனாய மென்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக
இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில்
பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 4
அங்கமும்
நான்மறையும்
அருள்செய்து, அழகார்ந்த அம்சொல்
மங்கைஓர்
கூறுஉடையான்,
மறையோன் உறைகோயில்
செங்கயல்
நின்று உகளும்
செறுவில் திகழ்கின்ற
சோதிப்
பங்கயம்
நின்று அலரும்
வயல்சூழ்ந்த பாதாளே.
பொழிப்புரை :ஆறு அங்கங்களையும்
நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவனும், அழகிய
இனிய சொற்களைப் பேசும் உமைநங்கையை ஒரு பாகமாக உடையவனும், வேதங்களைப் பாடி மகிழ் பவனுமாகிய
சிவபிரான் உறையும் கோயில் செங்கயல் மீன்கள் புரளும் வயல்களில் விளங்கும் ஒளியினால்
தாமரைகள் எழுந்து மலரும் வயல்கள் சூழ்ந்த பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 5
பேய்பலவும்
நிலவப்
பெருங்காடு அரங்காக
உன்னி, நின்று
தீயொடு
மான்மறியும்
மழுவும்
திகழ்வித்துத்
தேய்பிறையும்
அரவும்
பொலிகொன்றைச்
சடைதன்மேல்சேரப்
பாய்புனலும்
உடையான்,
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :பேய்கள் பலவும் உடன்
சூழ, சுடுகாட்டை அரங்காக
எண்ணி நின்று, தீ, மான்கன்று மழு ஆகியவற்றைக் கைகளில்
விளங்குவித்து, தேய்ந்த பிறையும்
பாம்பும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும்
உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 6
கண்அமர்
நெற்றியினான்
கமழ்கொன்றைச்
சடைதன்மேல்நின்று
விண்இயல்
மாமதியும்
உடன்வைத் தவன்,விரும்பும்
பெண்அமர்
மேனியினான்,
பெருங்காடு அரங்காக
ஆடும்
பண்இயல்
பாடலினான்,
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :கண் பொருந்திய
நெற்றியை உடையவனும், சடை முடி மீது மணம்
கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த
வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமைமங்கை
பொருந்திய திரு மேனியனும், சுடுகாட்டை அரங்காகக்
கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில்
பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 7
விண்டுஅலர்
மத்தமொடு
மிளிரும்இள நாகம்வன்
னிதிகழ்
வண்டுஅலர்
கொன்றைநகு
மதிபுல்கு
வார்சடையான்,
விண்டவர்
தம்புரமூன்று
எரிசெய்து உரை
வேதநான்கும், அவை
பண்டுஇசை
பாடலினான்,
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :தளையவிழ்ந்து மலர்ந்த
ஊமத்த மலரோடு, புரண்டு
கொண்டிருக்கும் இளநாகம், வன்னிஇலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை, பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை
உடையவனும், பகைவரான அசுரர்களின்
முப்புரங்களையும் எரித்த வனும்,
நான்கு
வேதங்களையும் உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசைமரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான்
உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 8
மல்கிய
நுண்இடையாள்
உமைநங்கை மறுகஅன்று, கையால்
தொல்லை
மலைஎடுத்த
அரக்கன்தலை தோள்
நெரித்தான்,
கொல்லை
விடைஉகந்தான்,
குளிர்திங்கள்
சடைக்கு அணிந்தோன்,
பல்இசை
பாடலினான்,
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :செறிந்த நுண்மையான
இடையினை உடைய உமை யம்மை அஞ்ச அன்று கையால் பழமையான கயிலை மலையைப் பெயர்த்த
இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும், முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய
விடையை உகந்தவ னும், குளிர்ந்த திங்களைச்
சடையின்கண் அணிந்தவனும் பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய சிவபிரான்
உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 9
தாமரை
மேல்அயனும்
அரியும் தமது
ஆள்வினையால், தேடிக்
காமனை
வீடுவித்தான்,
கழல்காண்பிலராய்
அகன்றார்,
பூமருவும்
குழலாள்
உமைநங்கை
பொருந்தியிட்ட, நல்ல
பாமருவும்
குணத்தான்
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :மன்மதனை எரித்த
சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும், திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண
இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப்
பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான்
உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது
குறிப்பெச்சம்.
பாடல்
எண் : 10
காலையில்
உண்பவரும்
சமண்கையரும்
கட்டுரைவிட்டு,அன்று
ஆல
விடம் நுகர்ந்தான்,
அவன் தன்அடி யேபரவி
மாலையில்
வண்டு இனங்கள்
மதுஉண்டு இசைமுரல
வாய்த்த
பாலையாழ்ப்
பாட்டுஉகந்தான்,
உறைகோயில் பாதாளே.
பொழிப்புரை :காலையில் சோறுண்ணும்
புத்தரும், சமண சமயக்
கீழ்மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகாலவிடமுண்டு அமரர்களைக் காத்தவனும்
மாலைக் காலத்தில் வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில்
பாடக்கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
பாடல்
எண் : 11
பன்மலர்
வைகுபொழில்
புடைசூழ்ந்த பாதாளைச்
சேரப்
பொன்இயல்
மாடமல்கு
புகலிந்நகர் மன்னன்
தன்ஒளி
மிக்கு உயர்ந்த
தமிழ்ஞான சம்பந்தன்
சொன்ன
இன்னிசை
பத்தும்வல்லார்,
எழில் வானத்து
இருப்பாரே.
பொழிப்புரை :பலவகையான மலர்களும்
பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று தரிசிக்குமாறு, பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த
புகலி நகர் மன்னனும், தன்புகழ் உல கெங்கும்
பரவி விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந்தன் பாடிய இன்னிசை பொருந்திய
இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment