புத்தாடை உடுக்கும் நாள்





61.  புத்தாடை உடுக்கும் நாள்

கறைபடாது ஒளிசேரும் ஆதிவா ரந்தனில்
     கட்டலாம் புதிய சீலை;
  கலைமதிக்கு ஆகாது, பலகாலும் மழையினில்
     கடிது நனைவுற்று ஒழிதரும்;

குறைபடாது இடர்வரும், வீரியம்போம், அரிய
     குருதிவாரம் தனக்கு;
  கொஞ்ச நாளில் கிழியும், வெற்றிபோம் புந்தியில்;
     குருவாரம் அதில் அணிந்தால்,

மறைபடாது அழகுண்டு, மேன்மேலும் நல்லாடை
     வரும்; இனிய சுக்கிரற்கோ
  வாழ்வுண்டு, திருவுண்டு; பொல்லாத சனியற்கு
     வாழ்வுபோம், மரணம் உண்டாம்;

அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்கு
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     இதன் பொருள் ---

     அறைகின்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே --- புகழப்படுகின்ற வேதங்களின் வடிவாகவும் ஆகமங்களின் வடிவாகவும் விளங்கும் தூயவனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     ஆதிவாரம் தனில் புதிய சீலை கட்டலாம் --- ஞாயிற்றுக்கிழமையில் புதிய ஆடையை உடுக்கலாம்.

(அவ்வாறு உடுத்தால்)

     கறை படாது --- ஆடையில் கறை பிடிக்காது.

     ஒளி சேரும் ---  தூயதாக ஒளிரும்,

     கலை மதிக்கு ஆகாது - கலைகளையுடைய திங்களுக்குப் புத்தாடை புனைவது ஆகாது.   (உடுத்தினால்),

     பலகாலும் மழையினில் கடிது நனைவுற்று ஒழிதரும் --- பல முறையும் மழையில் நன்றாக நனைந்து கிழிந்துபோகும்,

     அரிய குருதிவாரம் தனக்குக் குறை படாது இடர்வரும் வீரியம் போம் --- நன்மைக்கு ஆகாத செவ்வாய்க்கிழமையில் புத்தாடை உடுத்தினால் மிகுந்த துன்பம் உண்டாவதோடு,  பெருமையும் நீங்கிவிடும்,

     புந்தியில் கொஞ்ச நாளில் கிழியும்; வெற்றிபோம் --- புதன்கிழமையில் புத்தாடை உடுத்தினால் சிலநாளிலே கிழிந்து போகும்; வெற்றியும் நீங்கும்,

     குருவாரம் அதில் அணிந்தால் மறைபடாத அழகு உண்டு; மேன்மேலும் நல்ல ஆடை வரும் --- வியாழக் கிழமைகளில் புத்தாடையை உடுத்தினால் நீங்காத அழகு உண்டாகும்; மேலும் மேலும் நல்ல ஆடைகள் கிடைக்கும்,

     சுக்கிரற்கோ வாழ்வு உண்டு திருஉண்டு --- புத்தாடையை வெள்ளிக்கிழமையில் உடுத்தால் நல்வாழ்வும் செல்வமும் உண்டாகும்,

     பொல்லாத சனியற்கு வாழ்வுபோம், மரணம் உண்டாம் --- பொல்லாப்பை உண்டாக்கும் சனிக்கிழமையில் புத்தாடையை உடுத்தினால் வாழ்வு சிதையும்; இறப்பும் உண்டாகும்.

ஞாயிற்றுக் கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமை ஆகிய நாள்களில் புத்தாடை அணிவதால் நலம் உண்டாகும் என்றும் மற்ற நாள்களில் புத்தாடை அணியலாகாது என்றும் பெரியோர் கூறுவர்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...