பேறைநகர் (பெறும்பேறு) - 0733. நீலமயில்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நீலமயில் சேரும் (பேறைநகர்)

முருகா!
பொதுமாதர் மயல் தீர்த்துக் காத்தருள்வாய்.


தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான


நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த
     காரமிக வேநி றைந்த ...... குழலாலும்

நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
     னேர்தருமு கார விந்த ...... மதனாலும்

ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
     ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும்

ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த
     னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ

கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து
     கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன்

கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த
     கோபவரி நார சிங்கன் ...... மருகோனே

பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
     பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே

பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
     பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

நீலமயில் சேரும் அந்தி மாலை நிகர் ஆகி, அந்த-
     காரம் மிகவே நிறைந்த ...... குழலாலும்,

நீடும் அதிரேக இன்பம் ஆகிய சலாப சந்த்ரன்
     நேர்தரும் முக அரவிந்தம் ...... அதனாலும்,

ஆலின் நிகர் ஆன உந்தியாலும், டவார்கள் தங்கள்
     ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும்,

ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும், மந்தன்
     ஆகி, மயல் நான் உழன்று ...... திரிவேனோ?

கோலஉருவு ஆய் எழுந்து பார் அதனையே இடந்து
     கூவிடும் முராரி, விண்டு, ...... திருமார்பன்,

கூடமுறை நீடு செம்பொன் மாமதலை ஊடு எழுந்த
     கோப அரி நார சிங்கன் ...... மருகோனே!

பீலிமயில் மீது உறைந்து சூரர் தமையே செயம்கொள்
     பேர் பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே!

பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற
     பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.


பதவுரை

கோல உருவாய் எழுந்து --- அழகிய (பன்றியின்) வடிவத்தைக் கொண்டு,

பார் அதனையே இடந்து --- பூமியைப் பிளந்து சென்று,

கூவிடு --- பூமியை மீட்டு வந்தவரும்,

முராரி --- முரன் என்ற அசுரனை வதைத்தவரும்,

விண்டு --- விஷ்ணுவும்,

திரு மார்பன் --- இலக்குமியை மார்பில் கொண்டவரும்,

கூடம் உறை --- கூட்டத்தில் இருந்த,

நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த --- நீண்ட சிவந்த பொன்னாலாகிய தூணிலிருந்து தோன்றிய,

கோப அரி நார சிங்கன் --- கோபம் மிகுந்த நரசிங்கமூர்த்தியுமாகிய திருமாலின்,

மருகோனே --- திருமருகரே! 

பீலி மயில்மீது உறைந்து --- தோகை நிறைந்த மயில்மீது வீற்றிருந்து,

சூரர் தமையே செயம் கொள் --- வேலாயுதத்தை ஏந்திய,

செம் கை --- சிவந்த திருக்கரத்தையுடைய,

முருகோனே --- முருகக் கடவுளே! 

பேடை மட ஓதிமங்கள் --- அறியாமையுள்ள பெண் அன்னங்கள்,

கூடி விளையாடுகின்ற --- ஒன்று கூடி விளையாடுகின்ற,

பேறை நகர் வாழ வந்த --- பெறும்பேறு நகரில் வாழுகின்ற,

பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே! 

நீலமயில் சேரும் --- நீல மயில்கள் சேர்ந்து விளையாடுகின்ற,

அந்தி மாலை நிகர் ஆகி --- மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி,

அந்தகாரம் மிகவே நிறைந்த --- பேரிருள் மிகவும் நிறைந்துள்ள,

குழலாலும் --- கூந்தலாலும்,

நீடும் அதிரேக இன்பம் ஆகிய --- நீடித்துள்ள மிக்க இன்பத்தைத் தருவதாகிய

சலாப --- இன்பமாய் பேசத்தக்க,

சந்த்ரன் நேர் தரு --- சந்திரனை ஒத்த

முக அரவிந்தம் அதனாலும் --- முகமாகிய தாமரையாலும்,

ஆலின் நிகர் ஆன --- ஆல் இலைக்கு ஒப்பான,

உந்தியாலும் --- வயிறாலும்,

மடவார்கள் தங்கள் --- பொதுமாதர்கள் தங்களுடைய,

ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் --- ஆசை வலையை வீசுகின்ற மீன் போன்ற கண்களாலும்,

ஆடிய கடாம் இசைந்த --- கடைந்தெடுத்த குடம் போன்ற,

வார் முலைகளாலும் --- இரவிக்கையுடன் கூடிய முலைகளாலும்,

மந்தன் ஆகி --- அறிவு மழுங்கியவனாகி,

மயல் நான் உழன்று விடுவேனோ --- அடியேன் மயக்கம் கொண்டு கலங்கித் திரியலாமோ?

பொழிப்புரை


அழகிய பன்றி உருவத்தை எடுத்து, பூமியைத் தோண்டிச் சென்று, பூமியை மீட்டு வந்தவரும், முரன் என்ற அசுரனை வதைத்தவரும், விஷ்ணுவும், இலக்குமியை ஏந்திய திருமார்பரும், கூடத்தில் இருந்த நீண்ட பொன் மயமான தூணில் தோன்றியவருமாகிய நரசிங்கப் பெருமானுடைய திருமருகரே! 

தோகை உடைய மயில் வாகனத்தில் அமர்ந்து, சூராதி அவுணர்களை வென்று புகழ் பெற்ற வேலாயுதத்தைத் தரித்த சிவந்த கரத்தையுடைய முருகக் கடவுளே! 

அறியாமையுடைய பெண் அன்னங்கள் ஒன்றுபட்டு விளையாடுகின்ற பெறும்பேறு என்ற திருத்தலத்தில் வாழுகின்ற, பெருமையில் மிகுந்தவரே! 

நீலமயில் சேர்ந்து விளையாடுகின்ற மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பெரிய கரிய இருள் மிகவும் நிறைந்த கூந்தலாலும், நீண்ட இன்பந் தருவதாகிய இன்ப வார்த்தைகளுடன் கூடிய சந்திரனை ஒத்ததும், தாமரை போன்றதும் ஆகிய முகத்தாலும், ஆலிலை போன்ற வயிறாலும், பொது மாதரின் ஆசைவலை வீசுகின்ற மீன் போன்ற கண்களாலும், கடைந்தெடுத்த குடம் போன்ற கச்சுடன் கூடிய தனங்களாலும், மந்தமுடையவனாகி மயக்கங்கொண்டு உழன்று அடியேன் திரியலாமோ?


விரிவுரை


நீலமயில் சேரும் அந்தி மாலை நிகராகி ---

மாலையில் இருளைக் கண்டு களித்து மயில்கள் தோகை விரித்து ஆடி மகிழும்.

மாலையில் மகிழ்வது மயில், 
காலையில் மகிழ்வது சேவல்.

அந்திமாலை இருள் மயமானது. அது பெண்களின் கூந்தலுக்கு ஒப்பாக இங்கே கூறப்பட்டது.

அந்தகார மிகவே நிறைந்த குழலாலும் ---

அந்தகாரம் - பேரிருள்.

ஒளியை இருள் விழுங்குவது போல், ஆடவரின் அறிவு ஒளியை அக்கூந்தல் விழுங்கி மயக்கம் செய்யவல்லது.

இத்திருப்புகழில் மற்ற மூன்று அடிகளிலும், ஆடவரது அறிவை மயக்கவல்ல பொது மாதரது அங்க இயல்களைக் கூறுகின்றார்.

நான் உழன்று திரிவேனோ ---

அடியேன் மயக்கத்தால் உழன்று திரிவது முறையோ? அவ்வாறு திரியாத வண்ணம், அடியேனுடைய மயலை அயலாக்கி முருகா!  ஆட்கொண்டருள்” என்று சுவாமிகள் ஞான பண்டிதனை வேண்டுகின்றார்.

கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடு முராரி ---

திதியின் மைந்தனான இரணியாட்சன் திருமாலைப் பகைத்து அவருடைய மனைவியாகிய பூமாதேவிக்குத் துன்பஞ் செய்யும் பொருட்டு பூமியைக் கடலில் அழுத்தினான். அப்போது திருமால் அழகிய வெண்பன்றியாக வடிவெடுத்து, இரணியாட்சனை வதைத்து, பூமியைப் பந்துபோல் தனது முகத்தில் உள்ள வெண் கொம்புகளில் ஏந்தி மேலே கொணர்ந்தார்.

அதனால் பழங்காலத்தில் தங்க நாணயங்களில் வராக மூர்த்தியின் வடிவைப் பொறித்தார்கள். அதனால் அந்தத் தங்க நாணயத்துக்கு வராகன் என்ற பேர் வழங்கியது.

"சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே" என்றார் சுவாமிமலைத் திருப்புகழில்.
   
முராரி ---

கிருஷ்ணாவதாரத்தில் முரன் என்ற அரக்கனை வதைத்தருளினார். அதனால் முராரி என்ற பேர் ஏற்பட்டது.

கூடமுறை நீடு செம்பொன் மாமதலை ஊடு எழுந்த கோப அரி நார சிங்கன் ---

பிரமதேவருடைய புதல்வர் மரீசி. மரீசியின் மைந்தர் காசிபர்.  காசிப முனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர். அந்தக் காசிப முனிவருக்குத் திதி வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும், பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர்.  இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர்.  இளையவனாகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்ற போது, திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.

இரணியன் தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான். தவ வலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன். தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டனன். மனம் வெருண்டனன். பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டனன். அப்போது அவன் மனைவி லீலாவதி பால் ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர். நான்காவதாக, லீலாவதி உலகம் உய்ய, பிரகலாதரை, சிப்பி முத்தைக் கருவுற்றது போல், கருக் கொண்டு இருந்தனள்.

தானவ இந்திரனாகிய இரணியன் கானகம் புக்கு, கனல் நடுவே நின்று, ஊசியின் மேல் ஒரு காலை ஊன்றி, புலன்களை அடக்கி, மூலக்கனலை மூட்டி, நீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன். இரணியன் தவத்தால், தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய இந்திரன் சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன்.

இடையில் நாரதர் தடுத்து, லீலாவதியை சிறை மீட்டு, தனது தவச் சாலைக்குக் கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு, நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர். கணவன் வரும் வரை கரு வளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்து கொண்டாள். கருவில் உருப்பெற்று உணர்வு பெற்று இருந்த, பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர்.

இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்னவாகனத்தில் நான்முகக் கடவுள் தோன்றினர். அவர்பால் இரணியன் மண்ணிலும் விண்ணிலும், அல்லிலும் பகலிலும், வீட்டிலும் வெளியிலும், இருளிலும் ஒளியிலும், அத்திரத்தாலும் சத்திரத்தாலும், நரராலும் சுரராலும், நாகங்களினாலும் விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும், மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும், முவுலக ஆட்சியையும், எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்று, இரணியபுரம் சேர்ந்தனன். 

நாரதர் லீலாவதியைக் கொணர்ந்து, உற்றதை உரைத்து, ஆறுதல் கூறி, அவன்பால் சேர்த்தனர். பின்னர் லீலாவதி, அன்பு மயமான பிரகலாதரைப் பெற்றனள். மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றனன்.

பின்னர் ஒருநாள், தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று எண்ணினன். தன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறு பணித்து அனுப்பினான். காலனிலும் கொடிய அக் கொடியர் வைகுந்தத்திலும், திருப்பாற்கடலிலும் தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திரா, அரியைக் காண்கிலேம்" என்றனர். இரணியன் சினந்து, மூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான். 

எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்" என்றனர். இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும். பயங்கொள்ளி. அத் திருமால் சாதுக்கள் உள்ளத்திலும், ஞானிகள் சிந்தையிலும், அடியார்கள் இதயத்திலும் இருப்பன்.

கட்டையைக் கடைந்தால் அக் கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும், பாலைக் கடைந்தால், பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது போலும், அடியார்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் பிடித்துத் துன்புறுத்தினால், அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவன். ஆதலினால், ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் துன்புறுத்துங்கள்" என்று கட்டளை இட்டனன்.

காலதூதரினும் கொடிய அப் பாதகர்கள், பூமரங்களை ஒடித்தும், முனிவர்களை அடித்தும், கோயில்களை இடித்தும், வேதாகமங்களைப் பொடித்தும், ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாய நம" என்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும், அதனை எங்கும் எழுதியும், வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும், எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.

தேவர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் பெரிதும் வருந்து திருமாலைத் தியானித்துத் துதித்தனர்.  திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு அஞ்சியிருக்கும். ஆதலினால் நீவிர் சிறிது காலம் தாழ்த்திருமின். யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியணை மாய்க்குதும்" என்று அருளிச் செய்தனர்.

பிரகலாதர், இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்து, தியான பரராக இருந்தனர். ஆடும்போதும், ஓடும்போதும், பாடும்போதும், வாடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும், எழும்போதும், அழும்போதும், விழும்போதும், தொழும்போதும், இவ்வாறு எப்போதும் தைலதாரை போல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது, கருமால் அற, திருமாலை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பு நிறைந்து, நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.

பிரகலாதருக்கு வயது ஐந்து எய்தியபோது, இவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர் தீர்த்த யாத்திரை சென்றனர். அதனால் அவருடைய புதல்வர் சண்டா மார்க்கரிடம் தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன். சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய நம" என்று கூறுமாறு கற்பிக்கலானார். பிரகலாதர் செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரே, பிழைபடக் கூறலுற்றனை. இன்றிருந்து நாளை அழியும் ஒரு உயிரினை இறை எனக் கூறுதல் நலமன்று" என மொழிந்து, "ஓம் நமோ நாராயணாய" என்று கூறினர்.

ஓதப் புக்கவன் "உந்தைபேர் உரை"என லோடும்,
போதத்தன் செவித் தொளைஇரு கைகளால் பொத்தி,
"மூதக்கோய், இது நல்தவம் அன்று" என மொழியா
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்.

பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, உரோமங்கள் சிலிர்த்து, திருமந்திரத்தைக் கூறிய வண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடா, பாலகனே, அந்தோ! இந்த மந்திரத்தைக் கூறாதே. உன் தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன். இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர்.  சிறுபிள்ளைத் தனமாக இதனை நீ கூறினை. இனி இதனைக் கூறாதே. கூறி எம்மைக் கெடுக்காதே. உன்னையும் கெடுத்துக் கொள்ளாதே" என்றனர்.

"கெடுத்து ஒழிந்தனை என்னையும், உன்னையும் கெடுவாய்
படுத்து ஒழிந்தனை, பாவி அத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல்ஒன்று பகர, நின் அறிவின்
எடுத்தது என்இது, என்செய்த வண்ணம் நீ" என்றான்.

பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐய, இத் திருமந்திரத்தைக் கூறுவதனால், என்னையும் உய்வித்தேன். எனது பிதாவையும் உய்வித்தேன். உம்மையும் உய்வித்தேன். இந்த உலகையும் உய்வித்தேன். வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன். அப்படிக்கு இருக்க, நான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.

"என்னை உய்வித்தேன், எந்தையை உய்வித்தேன், இனைய
உன்னை உய்வித்தேன், உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல்பெயர் வொழிவது மொழிந்தேன்,
என்னை குற்றம்நான் இயம்பியது? இயம்புதி" என்றான்.

ஆசிரியர், "அப்பா! குழந்தாய்! நாங்கள் கூறுவதைக் கேள். இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவனது மந்திரம். இதை ஒருவரும் கூறலாகாதென உன் தந்தையின் கட்டளை. நீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்" என்றனர்.  பிரகலாதர், "ஐயா! இம் மந்திரமே வேதத்தின் விழுமியது. எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லை" என்றார்.

ஆசிரியர் மனம் மறுகி, இரணியன்பால் ஓடி, "எந்தையே, உமது சிறுவன், நாங்கள் கூறிய வேத மந்திரத்தை மறுத்து, சொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்" என்றார். இரணியன், "என்ன கூறினான் கூறும்" என்று வினவினான். ஆசிரியர், "வேந்தே, அவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால், எமக்கு நரகம் எய்தும். நாவும் வெந்து அழியும்" என்று நடுங்கி நவின்றனர்.

இரணியன் தன் மகனை அழைப்பித்தான். பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர். மகனை எடுத்து உச்சி மோந்து முத்தமிட்டு, மடித்தலத்தில் வைத்து, "மகனே, நீ என்ன கூறினாய்" என்று வினவினான் தந்தை. அறிவின் மிக்க அப் புதல்வர், "தந்தையே, எதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோ, ஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, எதனை வேதம் வியந்து ஓதுகின்றதோ, எது நம்மை வாழ்விக்கின்றதோ, அதனையே அடியேன் கூறினேன்" என்றார். இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்! புலிக்குப் பூனையா பிறக்கும். என் கண்ணே! அது என்ன? எனக்கு எடுத்துச் சொல்" என்று கேட்டான்.

காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்
சேம வீடுஉறச் செய்வதும், செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய.

"அப்பா! ஓம் நமோ நாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டு எழுத்தாம்" என்றார்.

தானவன் விழியில் தழல் எழுந்தது. கோபத்தால் கொதிப்புற்றான். "மகனே! முனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய 'இரணியாய நம' என்றே கூறுகின்றனர். யாரடா உநக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்?  அந்த நாராயணன் நமது குல வைரி. எலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த அரவத்தின் நாமத்தைக் கூறுதல் நன்மையோ? அந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன். அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன். எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். கண்ணே! நீ சிறு குழந்தை. யாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக் கூறி உள்ளனர். இனி அதைக் கூறாதே. மூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறு" என்று பலவும் கூறினான்.

தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனே! சிறிது அமைதியாக இருந்து கேளும். உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத் திருமால். எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர். மாதவர்களுடைய மாதவப் பயனாய் விளங்குபவர். அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லை. கடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர். நமது குலமும் நீயும் பிறரும் ஈடேற வேண்டும் என்றால், அவரை வணங்கு.  வாயார வாழ்த்து. நெஞ்சார நினை" என்றார்.

அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன் ஆலகால விடம் போல் சீறினான். அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன். இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுமின்" என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன். கூற்றினும் கொடிய அரக்கர்கள், துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டு போய், வாள், வேல், மழு, தண்டு, கோடாலி, ஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர்.  பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிதும் ஊனம் ஏற்படவில்லை.  அவர் கண்களை மூடி, "நமோ நாராயணாய" என்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார்.  ஆயுதங்கள் பொடிபட்டன. அது கண்ட தீயவர்கள் ஓடி, இரணியன்பால் உற்றது உரைத்தனர்.

நிருதன் வியந்து நெருப்பில் இடுமாறு பணித்தனன்.  விண்ணளவாக எண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்து, விண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர். தியானபரர் ஆகிய அவருக்கு அத் தீ, தண்ணிலா எனக் குளிர்ந்தது. தாமரைத் தடாகத்தில் விளையாடும் அன்னம் போல், கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார். காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.

அவுணன் வெகுண்டு, அவனைச் சிறையிட்டு, "அட்ட நாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்" என்றான். அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டு, பிரகலாதரைக் கொடிய நச்சுப் பற்களால் பலகாலும் கடித்தன. திருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர். பாம்புகளின் பற்கள் ஒடிந்து. மணாமகுடம் உடைந்து, உள்ளம் மடிந்து மீண்டு சென்றன.

இதனைப் பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்குயானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான்.  வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர், முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, கஜேந்திர வரதா என்று கூறினார். யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றன. தூதர் ஓடி, இதனை மன்னன்பால் புகன்றனர். அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன்.  அதைக் கண்ட யானைகள் அஞ்சி, தங்கள் வெண்கோட்டார் பிரகலாதரைக் குத்தின். வாழைத்தண்டு பட்டது போல், அவருக்கு மென்மையாக இருந்தது. தந்தங்கள் ஒடிந்தன. யானைகள் அயர்வுற்று அகன்றன.

ஏவலர் ஓடி, இதனைக் காவலன்பால் இயம்பினர்.  கனகன் சிரித்து, அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள் என்றான். பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டி, ஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர். அவர் ஓம் நமோ நாராயணாய என்று உருண்டார். பூமிதேவி பெண்வடிவம் தாங்கி, அக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கி, உச்சி மோந்து, முத்தமிட்டு ஆதரித்தனள். பிரகலாதர் பூமி தேவியைப் போற்றி நின்றார். பூதேவி, கண்ணே குழந்தாய் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று அருள் புரிந்தனள். ஞானக்குருந்தர், "அம்மா இளம் பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால், உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்" என்று வரம் கேட்டனர். அவ் வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.

இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான்.  மழையையும் இடியையும் ஏவினான். நிலவறைக்குள் அடைப்பித்தான்.  விஷத்தை உண்பித்தான். பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான். சாந்த சீலராகிய அவர், சாகர சயனா என்று துதித்தனர். கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர். இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான். ஒன்றாலும் பிரகலாதருக்கு, ஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லை. இவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லை.  மேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.

ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர். இரணியன் அவரை அழைத்து, சிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி, தானே கொல்ல ஓடினான். அவர் சிறிதும் அச்சமின்றி ஓம் நமோ நாராயணாய என்று சிந்தித்த வண்ணமாக நின்றார். இரணியன் அவருடைய உறுதியைக் கண்டு, இறும்பூதுற்றான். மதிநலம் படைத்த அமைச்சர்களே, என் மகனுடைய மனக்கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன். இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவையுறுகின்றேன். என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன். நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான் போலும். பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும். அந்த உபாயத்தை என் மகன் மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான்.  என்னிடம் கொட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான் என்று சொல்லி, "கண்ணே பிரகலாதா, உனது அறிவின் திட்பத்தை மெச்சினேன்.  இப்படி வா, மகனே, அந்த மாயவன் எங்குளன் கூறு" என்று வினவினான்.

அன்பு வடிவாய அருந்தவச் செல்வர், "ஐயனே மலரில் மணம்போல், எள்ளுக்குள் எண்ணெய்போல் என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான். உன்னிலும் உள்ளான். என்னிலும் உள்ளான். அவன் இல்லாத இடமில்லை" என்றார்.  இரணியன், "மைந்தா, என்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படி? உன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லை. இதோ, இந்தத் தூணில் உளனோ? உரை" என்று கேட்டான்.

சாணிலும் உளன், ஓர்தன்மை அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இந்நின்ற
தூணிலும் உளன், முன்சொன்ன சொல்லிலும் உளன், இத்தன்மை
காணுதி விரைவின் என்றார், நன்றுஎனக் கனகன் சொன்னான்.

பிரகலாதர், "தாதாய், அப் பரமன் சாணிலும் உளன். அணுவை நூரு கூறு இட்ட பரமாணுவிலும் உளன். மேருவிலும் உளன். இத் தூணிலும் உளன். உளன் என்னும் சொல்லிலும் உளன்.  காணுதி" என்று அருளிச் செய்தார்.

இரணியன் சீற்றமிக்கு, "பேதாய், நீ கூறியபடி இத் தூணில் அந்த அரி இல்லையானால், சிங்கம் யானையைக் கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்" என்றான். 

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டாய் ஆகில்,
கும்பத் திண் கரியைக் கோள்மாக் கொன்று என, நின்னைக் கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்  என்றான்.

பிரகலாதர், "அப்பா என்னை உம்மால் கொல்ல முடியாது.  என் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின், என் உயிரை யானே விடுவன். நான் அவன் அடியனும் அல்லன்" என்றார்.

என்உயிர் நின்னால் கோறற்கு எளியதுஒன்று அன்று, யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றானாயின்.
என்உயிர் யானே மாய்ப்பன், பின்னும் வாழ்வுஉகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான்.

கனகன் உடனே தனது கரத்தினால் அத் தூணை அறைந்தான்.  அது தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன். பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார். இரணியன், "ஆரடா சிரித்தாய், சொன்ன அரிகொலோ அஞ்சிப் புக்க நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படு" என்றான். பிளந்ததது தூண். நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்டமட்டும். ஆயிரம் ஆயிரம் சிரங்களும், அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டு, ஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும், பிடித்தும், கொன்றும், தின்றும், மென்றும், எற்றியும், உதைத்தும், வதைத்து அழித்தனர்.

அதுகண்ட கனகன் அஞ்சாது வாலினை எடுத்து எதிர்த்து நின்றான். பிரகலாதர், பிதாவை வணங்கி, "தந்தையே, இப்போதாவது மாதவனை வணங்கு. உன் பிழையைப் பொறுப்பன்" என்றார். இரணியன், "பேதாய், உன் கண் காண இந்த நரசிங்கத்தையும் உன்னையும் கொன்று என் வீரவாளை வணங்குவன்" என்றான்.

கேள்இது நீயும்காணக் கிளர்ந்த கோள்அரியின் கேழல்
தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்துப் பின்என்
வாளினைத் தொழுவது அல்லால் வணங்குதல் மகளீரூடல்
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்.

அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்க மூர்த்தி பற்றிச் சுற்றி, பகலிலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல், அந்தி வேளையிலே, வீட்டிலும் அல்லாமல் வெளியிலும் அல்லாமல், அவன் அரண்மனை வாசற்படியிலே, விண்ணிலும் அல்லாமல், மண்ணிலும் அல்லாமல், மடித்தலத்தில் வைத்து, எந்த ஆயுதத்திலும் அல்லாமல், தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறி, அவனுடைய குடலை மாலையாகத் தரித்து, அண்டங்கள் நடுங்க ஆர்த்தனர். திருமகளை வேண்ட, அத் தாயார் நரசிங்கத்தை அணுகினர். நரசிங்கப் பெருமான் கருணை பூத்தனர்.  பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர். நரசிங்கர் பிரகலாதரை எடுத்து, உச்சி மோந்து, சிரமேல் கரமலரை வைத்து, "குழந்தாய் உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன்.  என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருளினர்.

உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது? ‘‘ என்றான்

பிரகலாதர், "பெருமானே, என் தந்தை உயிருக்கு நன்மையும், உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்" என்றார்.

"முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்.     

நரசிங்கமூர்த்தி மகிழ்ந்து, வானவர்க்கும் தானவர்க்கும் அரசாகி, சிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.

அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன்
முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என்போல் உளை என்றான்.


என்று வரம் அருளி எவ் உலகும் கை கூப்ப

முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட

நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு

ஒன்று பெருமை உரிமை புரிக என்றான்.


பீலிமயில் மீது உறைந்து சூரர் தமையே செயங்கொள் ---

முருகப் பெருமான் சூரனுடன் போர் புரிந்தபோது இந்திரன் மயில் உருக் கொண்டு கந்தனாயகனைத் தாங்கினான். அதை இங்குக் குறிப்பிடுகின்றார்.

பேறை நகர் ---

பெறும்பேறு என்ற திருத்தலம்.

அகத்தியருக்குப் பெரிய பேற்றினைத் தந்த தலம். அதனால் பெறும்பேறு என்ற பேர் பெற்றது.

இத்தலம் செங்கற்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த தொழுப்பேடு என்ற புகைவண்டி நிலையத்துக்கு அருகில் இருக்கின்றது. சிறிய மலைமீது அழகிய திருக்கோயில் விளங்குகின்றது. இங்கு ஆண்டுதோறும் அன்பர்கள் திருப்படி விழா புரிகின்றார்கள்.

கருத்துரை


பேறைநகரில் வாழும் பெருமானே!  மாதர் மயல் தீர்த்துக் காத்தருள்வீர்.


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...