மக்கட் செல்வம்
-----
வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்றார் திருவள்ளுவ நாயனார். "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க'' என்று பெரியோர்கள் வாழ்த்துவது உண்டு. அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது அல்ல. வாழ்வு பெருவாழ்வாக விளங்குவதற்குப் பெறவேண்டிய பேறுகள் பதினாறு என்பதே அதன் பொருள். இவை மனை, மனைவி, மக்கள், தாய், நீர், நிலம், கால்நடைகள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, ஏவல், பொன், மணி, புகழ் எனப் பதினாறாகச் சொல்லப்படும்.
"துதிவாணி வீரம் விசயம்சந் தானம் துணிவுதனம்
அதிதானி யம்சவு பாக்கியம் போகம் அறிவழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோவகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே!"
என்பது காளமேகப் புலவர் பாடியுள்ள பாடல்.
(துதி = புகழ், வாணி = கல்வி, விசயம் = வெற்றி, சந்தானம் = மக்கட்பேறு, சவுபாக்கியம் = சிறந்த இன்பம், நோவு அகல் = நோய் இல்லாத)
"மதுரைத் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் மேலான பரம்பொருளே! புகழ், கல்வி, மனவுறுதி, வெற்றி, மக்கட்பேறு, தைரியம், செல்வம், அதிக தானியவளம், சிறந்த இன்பம், நல்ல அனுபோகம் (துய்ப்பு) ஞானம், பொலிவு, நாளும் வந்தமையும் சிறப்பு, அறம் செய்யும் பண்பு, நல்ல குடிப்பிறப்பு, நோயில்லாமையுடன் கூடிய நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு பேறுகளையும் எனக்குத் தந்து அருள்செய்வாயாக" என்பது இப்பாடலின் பொருள். பின்வரும் பாடல்களையும் காண்க.
"கலையாத கல்வியும், குறையாத வயதும்,
ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே!"
"சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச
தனயை! மா தேவி! நின்னைச்
சத்யமாய், நித்யம் உள்ளத்தில் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி, மிகவும்
அகிலம் அதில் நோய் இன்மை, கல்வி, தனதானியம்,
அழகு, புகழ், பெருமை, இளமை,
அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ் நாள், வெற்றி,
ஆகு நல்ஊழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ
சுக ஆனந்த வாழ்வு அளிப்பாய்;
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை
வளர் திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி உமையே! --- அபிராமியம்மைப் பதிகம்.
இவற்றுள் ஒவ்வொன்றும் சிறந்த செல்வமே. எனினும் மக்கட் செல்வமே தலைசிறந்த செல்வமாகும் என்பது புகழேந்திப் புலவருடைய கருத்து. பெருமகனது கருத்து.
"பொன் உடையரேனும் புகழ் உடையரேனும், மற்று
என்னுடைய ரேனும் உடையரோ? - இன்அடிசில்
புக்கு அளையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களை இங்கு இல்லாதவர்." --- நளவெண்பா.
இதன் பொருள் --
(பின்னும் நளன் தமயந்தியை நோக்கி) பொருள் படைத்த செல்வர்களாக இருப்பினும், புகழின் மேம்பட்டவராக இருப்பினும், இன்னும் உலகில் அடைய வேண்டிய எந்தப் பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்களாக இருப்பினும், சுவையுடைய சோற்றுத் திரளுள் நுழைத்துக் கிண்டுகின்ற செந்தாமரை மலர்போன்ற கைகளையும், மலர்மணங் கமழுகின்ற சிவந்த வாயையும் உடைய குழந்தைகளை இவ்வுலகில் பெற்றெடுக்காதவர்கள், மேற்கூறிய எல்லாச் செல்வமும் இருந்தாலும் அதனால் பயன் பெற்றவர்களாக மாட்டார்கள்.
பிசிராந்தையாரால் நெறிப்படுத்தப் பெற்ற பாண்டியன் அறிவுடை நம்பி, இன்பத் துறையில் எளியனாய் இருந்து, மக்கட்பேறு இல்லாமல் இருந்து, பின்னர் அதனைப் பெற்று இன்புற்றான். தன் பெயருக்கு ஏற்ப நல்லறிவு உடை நம்பியாய் அவன் திகழ்தலின், தான் பெற்ற இன்பத்தைப் பிறர்க்குக் காட்ட எண்ணினான். செல்வ வாழ்வு என்பது தனியாக ஒருவன் உண்பதில் இல்லை. விருந்தோடு உண்பதுதான் இன்பம் தருவதாகும். அந்த இன்பமும், இளங் குழந்தைகள் தம்முடைய சிறுகையை நீட்டிக் குறுகுறு என நடந்து வந்து, தம் பெற்றோர் உண்ணும் உணவினல் தமது இரு கைகளையும் இட்டும் தொட்டும் கவ்வியும் துழாவியும், தம் உடல் எங்கும் சிதறியும் இன்பச் சிறு தொழில் புரிய, அவர் சிதைத்துச் சிதறப்படும் உணவை உண்ணும்போது உண்டாகும் இன்பம் பெரிது, அப்போது அந்த இளங்குழந்தைகள் மிழற்றுகின்ற சொல் செவிக்கு இன்பமும், அவர் செய்யும் செயல் உடலுக்கு இன்பமும் தந்து, அறிவை மயக்குதலின், உயிர் வாழ்வின் பயன் இதுவே என உணர்ந்தான். அதனை ஒரு பாட்டாகப் பாடினான்.
"படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்கு உறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே." --- புறநானூறு.
"மக்கட்பேறு" என்பது திருக்குறளில் ஏழாவது அதிகாரமாகும். 'மக்கள்' என்பது ஆண், பெண் இரண்டையும் குறிக்கும். திருககுறளுக்கு உரை கண்ட பரிமேலழகர், 'புதல்வரைப் பெறுதல்' என இதற்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். புதல்வர் என்பது பெண் மக்களைக் குறிக்காது நீங்கிவிடும். இது ஒரு மாறுபட்ட கொள்கை என்பது அறிஞர் பெருமக்களின் கருத்து. உண்மையில் திருவள்ளுவ நாயனாரது கொள்கை ஆண் பெண் ஆகிய இருவகைக் குழந்தைகளையும் ஒப்பாகக் கருதுவதே ஆகும். அதற்கு ஏற்றது "மக்கட்பேறு' என்பதே. இவ்வுண்மையை இத்தலைப்பில் "மக்கள்' என எட்டுத் திருக்குறள்களில் காணப்படுவதாலும், "புதல்வர்' என்னும் சொல் காணப்படாமையாலும் நன்கு அறியலாம். பிள்ளைத்தாய்ச்சியராய் இருக்கும் பெண்கள் அன்பு உள்ளங்கொண்டு அமைதியான வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைப்பேறு எளிதாகவும் மகிழ்வாகவும் இருக்கும். வீரமுள்ள குழந்தைகளைப் பெறு வதற்காகப் பிள்ளைத்தாய்ச்சிகளுக்கு வீரர்களின் வரலாற்றைக் கூறுவதும் உண்டு. கருவுற்ற பெண்ணின் உடல்நலம் மனநலம் அனைத்தும் குழந்தையையும் சென்றடையும் என்பது முற்றிலும் உண்மை.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தனிக் கலை ஆகும். இந்தக் கலையை எந்தக் கல்லூரியிலும் பயில முடியாது. அதை நன்கு அறிந்து அறிவிப்பவர்கள் நம் நாட்டு மூதாட்டிகளே. நாகரிகப் பெண்மணிகள் அவர்களைக் 'கிழடுகள்' என்பார்கள். அறிவுள்ள பெண்மணிகள் அவர்களைக் 'கிழட்டுச் செல்வங்கள்' என்பார்கள். 'குழந்தைகளின் அணைப்பை கொண்டிருக்கின்ற தாய்மார்கள், கணவரது அணைப்பிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். காரணம், பால் சுரக்கும் உறுப்பில் காம நீர் சுரந்துவிடுதல் கூடாது. அது கைக்குழந்தையின்வயிற்றில் செரிக்காது. அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு. மாந்தம் முதலிய நோய்கள் குழந்தைகளுக்கு வந்து துன்புறுத்தும்' என்பது இக் கிழட்டுச் செல்வங்களின் கருத்து. குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு உறங்க வைக்கின்ற தமிழகத்தின் தாலாட்டுப் பாடல்கள் மிக இனிமையானவை. அப்பாடல்களுக்கு உறங்க வைக்கும் வலிமை மட்டுமின்றி, இசையுணர்வு, சொல்லறிவு, சிறந்த பண்பு, விரிந்த மனம், வீர உணர்ச்சி ஆகியவைகளைக் குழந்தைகளுக்கு ஊட்டும் ஆற்றலும் உண்டு.
சைவ சமயத் தலைவர்களில் ஒருவராகிய திருநாவுக்கரசரை சமண சமயத் தலைவர்கள் நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) தள்ளிப் பூட்டினார்கள். ஏழு நாள்கள் கழித்துத் திறந்து பார்த்தால் சாம்பலாக இருப்பார் என்பது சமணர்களின் எண்ணம். அந்த நீற்றறை திருநாவுக்கரசு நாயனாருக்கு எப்படி இருந்தது என்பதைப் பெரியபுராணம் கூறுகின்றது.
"வெய்யநீற்று அறை அதுதான்
வீங்கு இளவேனில் பருவம்
தைவரு தண் தென்றல்அணை
தண்கழுநீர்த் தடம்போன்று
மொய்ஒளிவெண் நிலவு அலர்ந்து
முரன்ற யாழ்ஒலியினது ஆய்
ஐயர் திருவடி நீழல்
அருள் ஆகிக் குளிர்ந்ததே."
இதன் பொருள் ---
வெப்பத்தை உடைய அந்நீற்றறையே மிக்க இளவேனில் காலத்தில் வீசி வருகின்ற குளிர்ந்த தென்றல் அணைகின்ற, தண்ணிய கழுநீர் மலர்கள் நிறைந்த வாவி போன்று ஒளிமிக்க வெண்மையான முழுமதியின் ஒளி விரிந்து, ஒலிக்கின்ற யாழின் ஒலியுடன் கூடியதாய் இறைவரின் திருவடி நீழலினது அருள் மயமாய்க் குளிர்ந்தது.
அந்த நீற்றறை எப்படி இருந்தது என்பதைத் திருநாவுக்கரசு நாயனார்,
"மாசில் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே,
ஈசன் எந்தை இணையடி நீழலே."
என்று பாடி அருளினார்.
இப்பாடலில். ஒரு நயம் புதைந்து கிடக்கிறது. அது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலனுக்கும் குளிர்ச்சியும். இனிமையும் தருகின்ற ஐந்து பொருள்களை இதில் காட்டியதே ஆகும். மாசில் வீணை - காதுக்கு இனிமை, மாலை மதியம் - கண்ணுக்கு இனிமை, வீசும் தென்றல் - மூக்குக்கு இனிமை, வீங்கு இளவேனில் - உடம்பிற்கு இனிமை, தாமரைப் பொய்கையின் நீர் - நாவிற்கு இனிமை.
மேலை நாட்டினரும் கூட, ஐம்புலன்களுக்கும் இனிமை தரும் ஒரு பொருளைக் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. ஆனால், அத்தகைய ஒரு பொருளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே திருவள்ளுவ நாயனார் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். அது, "கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள" என்பதே ஆகும். பெண்ணுக்குச் சொன்னது ஆணுக்கும் ஆகும். இதிலிருந்து மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களுக்கும் இனிமை தரும் பொருள் இவ்வுலகில் பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணுமே என்று தெரிகிறது. திருவள்ளுவ நாயனார் அத்தகைய ஆணையும் பெண்ணையும் சேர்ந்து வைத்து அவர்களுடைய ஐம்புலனுக்கும் இன்பம் பயக்க வேறொரு பொருளும் உண்டு என்று சுட்டிக் காட்டுகிறார். அப்பொருள்தான் "மக்கட் செல்வம்" ஆகும்.
சிறு குழந்தைகளுடைய மனம், படம் எடுக்கும் கருவியைப் போன்றது. எது தன் எதிரில் தோன்றுகிறதோ அதை அப்படியே தன்னுள் பதித்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அது ஆராய்ந்து கொண்டிருக்கும் தன் கண்களால் அகப்பட்டதைப் பதிப்பித்துக் கொள்ளும் உள்ளம் படைத்தது. ஆகவே மக்கட் செல்வத்தை வளர்ப்பதில் மிக்க விழிப்பாக இருத்தல் வேண்டும்.
"தக்கார் தகவு இலர் என்பது, அவரவர்
எச்சத்தால் காணப் படும்."
என்பது திருவள்ளுவர் வாக்கு. எச்சம் என்பதற்கு எச்சில் உண்மை, குறை, செயல், மிச்சம் பறவை, மலர், பிள்ளை எனப் பல பொருள் உண்டு. பரிமேலழகர் எடுத்துக் கொண்ட பொருள் 'பிள்ளை' என்பது. "ஒருவர் தக்கவரா அல்லவரா என்பதை அவரவர்களுக்கு மக்கள் உண்மையாலும் இன்மையாலும் அறியப்படும். தக்கார்க்கு எச்சம் உண்டாதலும். தகவு இலர்க்கு இல்லையாதலும் ஒருதலை" எனவும் கூறியிருக்கிறார்.
பெற்றோர்கள் எதையும் மறைத்துச் செய்யவும் மறைத்துப் பேசவும் தெரிந்தவர்கள். குழந்தைகளுக்கு இத்தகைய ஆற்றல் இராது. அவர்கள் வெள்ளை மனத்துடன் வெளிப்படையாக நடக்கவும், பேசவும் செய்வர். அவர்களிடத்துப் பழகி, அவர்களுடைய பேச்சு, நடத்தை பழக்க வழக்கங்கள், குணம், ஒழுக்கம், பண்பாடு ஆகியவைகளை அறிந்து, அவர்களது பெற்றோர்கள் தக்காரா? தகவிலரா? என்பதை நன்கு அறியலாம் என்ற திருவள்ளுவரது கருத்து மிக அழகானது.
"இளமையில் கல்" என்பது தமிழ்ப் பாட்டியின் அறிவுரை. பிள்ளைகளைப் படிக்க வைப்பது பெற்றோர்களின் கடமை. கல்வி பயின்று வரும்பொழுது குழந்தைகளின் மனப் போக்கை அறியவேண்டும். அவற்றின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்குரிய கல்வியையே கற்பிக்கவேண்டும். குறிக்கோள் இல்லாத கல்வி பயனற்றது. அது செல்லவேண்டிய இடத்தைக் குறியாமல் சாலையில் நடந்துகொண்டே இருப்பதைப் போன்றது.
கல்வியின் அருமை பெருமைகளை இளமை நன்கு அறியாது. அவர்களின் விளையாட்டுப் புத்தி கல்வியைக் கெடுத்துவிடும். சில துடுக்குத் தனத்தினால் துள்ளித் திரியும். அத்தகைய பிள்ளைகளின் மீது பெற்றோர் அதிக அக்கரை கொண்டு திருத்தியாக வேண்டும். அன்பும், ஆசையும் கொண்டு திருத்தாமல் விடுவது அவர்களுக்குப் பெருந் தீமை விளைவிப்பதாகும். பெற்றோர் தம் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்காமல் எவ்வளவுதான் செல்வத்தைக் கொட்டிக் குவித்து வழங்கினாலும் அது அவர்களுக்குப் பயன் தராது.
பிள்ளைகளின் உடல் வளர்வதைப் போலவே அவர்களது அறிவும் வளர்ந்து வரும். நாளுக்கு நாள் இவர்களது சிந்தனையும் வலுப்பெற்று வரும். அதனால் அவர்கள் தங்கள் நோக்கங்களைப் பெருக்கிக் கொண்டே வருவார்கள். அவர்களது முதல் அறிவு கேள்வியாலேயே வளர்கின்றது. ஆகவே, நமக்கு எவ்வளவு தொல்லைகள் இருந்தாலும் அமைதியாக இருந்து, குழந்தைகள் கேட்கும் வினாக்களுக்கு எல்லாம் விடை கூறியாக வேண்டும். விளையாட்டிற்காகவும் பொய் சொல்லக் கூடாது. வேடிக்கைக்காகவும் ஏமாற்றக் கூடாது. எதையும் கூறி அச்சுறுத்துதல் ஆகாது. சிற்றோடையில் ஊறி ஒடும் தெளிந்த நீரைப் போல அவர்கள் உள்ளத்தில் அறிவு தானாகச் சுரந்து வழியும். அதனை வளர்க்கப் பெரிதும் முயலவேண்டும். அதைத் தடைப் படுத்தாமல் இருந்துவிட வேண்டும். பழமையைப் புகுத்தினாலும் பகுத்தறிவு கொண்டு புகுத்தவேண்டும். "இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே; போனால் சாத்திரத்திற்கு ஆகாது” என்று கூறி அச்சுறுத்துவதை விட, "இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே. போனால் எந்தக் கழுதையாவது உதைக்கும்" என்று கூறுவது நலம் தரும். இந்த முறையானது குழந்தைகளின் அறிவை வளர்க்கப் பெருந்துணை செய்யும்.
பழங்காலத் தாய்மார்கள் குழந்தைகளின் உடலை, அறிவை மட்டும் வளர்த்து வரவில்லை. அவர்களின் வீரத்தையும் வளர்த்து வந்தார்கள். பொன்முடியார் என்பவர் மறக்குடியில் பிறந்து நல்லிசைப் புலமை பெற்ற பெருமாட்டியார். மக்கள் நல்லொழுக்கம் உடையவராய் இருத்தல் வேண்டும் என்ற நோக்கங்கொண்டவர். மறக்குடி மகள் ஒருத்தியின் கூற்றில் வைத்துப் பொன்முடியார் பின்வருமாறு பாடி உள்ளார்.
"ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே." --புறநானூறு.
இதன் பொருள் ---
மகனைப் பெற்று வளர்த்து விடுதல் எனது முதற் கடமையாகும். அவனை நற்பண்புகளால் நிறைந்தவன் ஆக்குவது தந்தைக்கு உள்ள கடமையாகும். அவனுக்கு வேண்டும் வேலை வடித்துக் கூரிதாக்கித் தருவது கொல்லனது கடமையாகும். நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனது கடமையாகும். விளங்குகின்ற வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கு அரிய போரைச் செய்து, பகைவரது யானைகளைக் கொன்று வென்று மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமையாகும்.
குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பித்தலில், பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பது இங்கே அறிவுறுத்தப்பட்டது. வெற்றுக் கல்வியைத் தருவதை விட, தொழிற்கல்வியைத் தருவதோடு, ஒழுக்கம் சிறக்கும் கல்வியைத் தருவது அரசின் கடமை.
பழந்தமிழர்கள் தமது மக்களின் உடல், அழகு, அறிவு, ஆற்றல், வீரம் ஆகியவற்றை வளர்ப்பதைவிட அவர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதையே முதற்கடமையாகக் கொண்டிருந்தார்கள். அதனை, "ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்" என்றும், "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை" என்றும் "ஒழுக்கம் விழுப்பம் தரும், இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்" என்றும் வரும் திருவள்ளுவர் திருவாக்கால் நன்கு அறியலாம்.
தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைத்த தமிழாசிரியர்கள், தமது மாணவர்க்கு நல்லொழுக்கத்தை வளர்க்கப் பின்வரும் கருத்து அமைந்த பாடல்களை அக்காலத்தில் சொல்லித் தருவது உண்டு.
(1) இந்திரர் அமிர்தமே கிடைத்தாலும், அது மிகச் சுவையானது, நாமே உண்டு மகிழலாம் என்று சான்றோர் தனித்து உண்பது இல்லை. பழிச் செயலால் இவ்வுலகமே வருவதானாலும் அதைக் கொள்வதில்லை. புகழ் பெறுவது என்றால் தமது உயிரையும் கொடுப்பர்.
(2) பெற்ற தாய் பசித்திருக்கப் பார்ப்பது, மகனுக்குப் பெரிய இழிவு. இருப்பினும் சான்றோர்களால் பழிக்கப்பட்ட செயல்களைச் செய்து தாயின் பசியைப் போக்க எண்ணுதல் கூடாது.
(3) சுமந்து நொந்து பெற்ற தாய் பசித்து இருக்க, பிராமண போஜனம் செய்து பெருமை தேடிக் கொள்ளக் கூடாது.
(4) உயிரை இழப்பதா? மானத்தை இழப்பதா? என்ற ஒரு நிலை வந்தால், உயிரை இழந்தேனும் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். ஏனெனில், உடல் நிலையாமையை உடையது. மானம் என்றும் நிலைத்து நிற்பது.
ஒருவன் பெறவேண்டிய பேறுகளில், அறிவறிந்த நன்மக்களைப் பெறுவதே சிறந்த பேறு என்பதால், "பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை, அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்றார் திருவள்ளுவ நாயனார். பண்புடைய நன்மக்களைப் பெற்ற ஒருவனது குடும்பத்தை, ஏழு தலைமுறை ஆயினும் துன்பம் சென்றடையாது என்பதைக் காட்ட, "எழுமை எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப் பண்பு உடை மக்கள் பெறின்" என்று அருளினார். தம் புதல்வரைத் தமது பொருள் என்றும், தன் மக்களின் பொருள் அவரவர் செயலைப் பொறுத்தது என்றும் அறிவுறுத்த, "தம் பொருள் என்ப தம் மக்கள், அவர் பொருள் தம்தம் வினையால் வரும்" என்றார். தம் மக்கள் சிறுகையால் குழப்பிய கூழ் அமுதத்தினும் மிக இனிமை பயப்பதாக இருக்கும் என்னும் அருமையை "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்" என்னும் திருக்குறளின் வழி காட்டினார். யாழின் ஒலியும், குழலின் ஓசையும் இனிமையாய் இருக்கின்றன என்று கூறுபவர்கள், தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டவர்கள் அல்லர் என்பதை, "குழல் இனிது, யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்னும் திருக்குறளில் காட்டினா். தன் மகனைச் சிறந்த அறிஞன் எனச் சான்றோர்களால் கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெருமகிழ்ச்சி அடைவாள் என்பதை, "ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும், தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்" என்னும் திருக்குறளால் காட்டினார். தான் பெற்ற பிள்ளை தன்னைவிட அதிக அறிவைப் பெற்று விளங்குவது (தமக்கு மட்டும் அல்லாது) பிறருக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகும் என்பதை, "தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் இனிது" என்று நிறுவினார். ஒரு நல்ல தந்தை தன் மகனுக்குச் செய்யும் பேருதவி அவனைக் கல்வி, அறிவு, ஒழுக்கம் உள்ளோரின் அவையிலே முதன்மையாக இருக்கும்படி செய்தல் வேண்டும் என்பதை, "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்று அருளினார். ஒரு நன்மகன் தன் தந்தைக்குச் செய்யும் பேருதவி, 'இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் புரிந்தானோ' எனப் பிறர் கூறும்படி நடத்தலே என்பதை, "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான்கொல் என்னும் சொல்" என்று அருளினார்.
பின்வரும் பாடல்களின் கருத்தை உள்ளத்தில் கொண்டால், "புற்று ஈசல் போலப் புலபுல எனக் கலகல எனப் புதல்வர்களைப் பெறுவீர்" என்று பட்டினத்தார் நொந்து கொண்டபடி ஆகாமல், அறிவார்ந்த நன்மக்களைப் பெறுவதின் அருமை விளங்கும்:
"நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்
குலமுழுதும் நன்மை உண்டாம்,
அன்றி, அறிவு இல்லாத பிள்ளை ஒரு
நூறுபெற்றும் ஆவது உண்டோ?
மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா
ரே! சொன்னேன் வருடந் தோறும்
பன்றிபல ஈன்றும் என்ன, குஞ்சரம் ஒன்று
ஈன்றதனால் பலன் உண் டாமே". --- தண்டலையார் சதகம்.
இதன் பொருள் ---
திருச்சிற்றம்பலத்திம் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிந்து அருளும் பெருமானே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவவரே! பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளைப் பெற்றெடுத்தாலும் பயன் என்ன?, யானையானது ஒரு கன்றை பெற்றாலும் மிக்க பயன் உண்டாகும். அதுபோலவே, நலம் தரும் பிள்ளை ஒருவனைப் பெற்றாலும் அவனது மரபுக்கு எல்லாம் நலம் உண்டாகும். அல்லாமல், அறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை விளையுமா? (இல்லை).
குலம் முழுதும் நன்மை உண்டாகும் என்றார். "எழு பிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப் பண்பு உடை மக்கள் பெறின்" என்னும் திருவள்ளுவ நாயானர் அருள் வாக்கின்படி, குற்றமற்ற நல்லமகன் ஒருவன் பிறந்துவிட்டால், எழுகின்ற பிறவி எல்லாம் தீயவை தாக்கமாட்டாது.
"பொற்பு அறிவு இல்லாத பலபுத்திரரைப் பெறலின்,ஓர்
நற்புதல்வனைப் பெறுதல் நன்று ஆமே, --- பொற்கொடியே!
பன்றிபல குட்டி பயந்ததனால் ஏது பயன்
ஒன்று அமையாதோ கரிக் கன்று ஓது". --- நீதிவெண்பா
இதன் பொருள் ---
பொன்னால் ஆன கொடியைப் போன்றவளே! பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்? யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதோ? நீ சொல். அதனால், நல்ல அறிவில்லாத பல பிள்ளைகளைப் பெறுதலைக் காட்டிலும், நல்ல அறிவுள்ள புதல்வன் ஒருவனைப் பெறுதல் நலமாகும்.
(பொற்பு - அழகு, பொலிவு, மிகுதி. பொற்பு அறிவு - நல்ல அறிவு. பயத்தல் - ஈனுதல். கரி - யானை.)