நுண்ணறிவு உடைமையே செல்வம்
-----
அறிவு உடைமையே மனிதனுக்குச் சிறந்த நல்வாழ்வைத் தருவதாகும். அறிவின்மை பற்பல கேடுகளுக்குக் காரணமாகும். நூல்களைப் படித்து விடுவதாலேயே அறிவு விளங்கும் என்று சொல்வதற்கு இல்லை. கற்றார் சொல்லக் கேட்டுவிடுவதாலும் அறிவு விளங்கும் என்று சொல்வதற்கும் இல்லை. கல்வி கேள்வி என்பவே வெளியில் இருந்து செலுத்தப்படுபவை. அவற்றால், ஒருவனுக்கு மனத்தில் இருந்து அறிவு ஊற்றெடுக்க வேண்டும். தோண்டத் தோண்ட கேணியில் நீர் ஊற்றெடுப்பது போல, நூல்களைக் கற்கக் கற்க, கேட்கக் கேட்க உள்ளத்தில் அறிவு ஊற்றெடுக்க வேண்டும். அதுதான் கல்வி, கேள்வியின் பயன். அறிவு விளங்கவில்லையானால் கற்றும் கேட்டும் பயன் இல்லை என்பதே பொருள். "கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்லுவேன்" என்றார் தாயுமான அடிகளார்.
"கல்வி" என்னும் அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "மணலைத் தோண்டிய அளவு ஊற்று சுரக்கும் கேணி. அதுபோல, மக்களுக்குக் கற்ற அளவு அறிவு சுரக்கும்" என்கின்றார் நாயனார்.
கிணற்றில் நீர் வெளிப்படும் அளவும் தோண்டுதல் வேண்டும். மேலும் தோண்டத் தோண்ட மேலும் மேலும் மிகுதியாக நீர் ஊற்றெடுக்கும். அதுபோல, சிறிதளவு கற்று, அது போதும் என்று விட்டுவிடாமல், மேலும் மேலும் கற்றுத் தெளிதல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. அறிவுக்கு எல்லை இல்லை. தோண்டிய கிணற்றில் நாளும் எடுக்க எடுக்க நீர் குறையாது மிகும். ஆதலால், நாளும் கற்கக் கற்க அறிவு மிகுந்து கொண்டே செல்லும். நூலறிவு நுண்ணறிவாக மிகும்.
"தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக்
கற்ற அனைத்து ஊறும் அறிவு." --- திருக்குறள்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளமை காண்க.
"மணல்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் – பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு." --- திருவள்ளுவமாலை.
இதன் பொருள் ---
மணல் கிளைக்க நீர் ஊறும் - மணலைத் தோண்டும் அளவுக்கு நீர் பெருகும்; மைந்தர்கள் வாய் வைத்து உணச் சுரக்கும் தாய்முலை ஒண் பால் - பிள்ளைகள் வாய் வைத்து உண்ணும்தோறும் தாயினது முலையில் இருந்து நல்ல பால் சுரக்கும்; பிணக்கு இ(ல்)லா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப் புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு - அவைபோலப் பிணங்குதற்கு ஏது இல்லாத வாய்மைச் சொல்லை உடைய திருவள்ளுவரது திருக்குறளை ஆராயும்தோறும் அறிவு உடைய புலவர்க்கு அறிவு வளரும்.
கற்பிக்கப்பட்டவை ஆகிய சாதி சமயங்களின் பெருமை பற்றி, உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும், சிறிதைப் பெரிதாகவும், பெரிதைச் சிறிதாகவும், தீயதை நல்லதாகவும், நல்லதைத் தீயதாகவும் புனைந்து, பிறர் பிணங்கும்படி சொல்லப்பட்டது அல்ல திருவள்ளுவர் அருளிய திருக்குறள். அதனால், "பிணக்கு இல்லா வாய்மொழி" என்று சொல்லப்பட்டது. இப் பாடலைப் பாடிய உருத்திரசன்ம கண்ணர் என்னும் புலவர்.
நுண்ணறிவு - நுண்ணிய அறிவு. நுண்மை - கூர்மை, நுட்பம். கூர்த்தமதி.
கற்பதனால் உண்டாகும் நூலறிவு, நுண்ணிய அறிவாக விளங்கவேண்டும். நுண்ணிய அறிவு என்பது, ஒருவன் கற்கின்ற நூல்களின் தன்மையைப் பொறுத்தது. நுண்ணறிவை விளக்கும் நூல்களும் உண்டு. பொழுது போக்குவதற்கான நூல்களும் உண்டு. அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்பது, மணல்கேணியைத் தோண்டுவது போல. சிறு முயற்சி செய்து, மணல்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். தோண்டுகின்ற அளவுக்கு நீர் சுரக்கும். பாறையைத் தோண்டினாலும் நீர் கிடைக்கும். அதற்குப் பெருமுயற்சி தேவை. பாறையைத் தோண்டினால், நீர் உள்ள இடம் வந்தால்தான் கிடைக்கும். மிகவும் ஆழமாகத் தோண்டவும் வேண்டி இருக்கும்.
அறிவு மேலும் மேலும் நுணுகியதாக மாற, நூல்களைக் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும். கற்கின்ற நூல் அளவு என்பதைக் கொண்டு, எவ்வளவு நூல்களைப் படிக்கின்றோமோ அவ்வளவுக்கு நுண்ணறிவு மிகும் என்று கொள்ளுதல் கூடாது. கற்கின்ற ஒரு நூலாக இருந்தாலும், எந்த அளவுக்கு அதன் நுண்பொருளை உணர்ந்து கற்கின்றோமோ, அந்த அளவுக்கு அறிவு மிகும். "நூலின் அளவே நுண்ணறிவு" என்பதை, ஔவையார் கூறுகின்றார்.
"நீர் அளவே ஆகுமாம் நீர் அம்பல், தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு --- மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்,
குலத்து அளவே ஆகும் குணம்." --- மூதுரை.
இதன் பொருள் ---
நீர் ஆம்பல் நீர் அளவே ஆகும் - நீரிலுள்ள அல்லியானது நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும்; (அதுபோல) நுண் அறிவு தான் கற்ற நூல் அளவே ஆகும் - கூரிய அறிவானது தான் படித்த நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம் மேலை தவத்து அளவே ஆகும் - தான் அடைந்த செல்வமானது முற்பிறப்பில் செய்த தவத்தின் அளவாகவே இருக்கும்; குணம் குலத்து அளவே ஆகும் - குணமானது (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும்.
இதற்குத் தான் "தொட்ட அனைத்து ஊறும் மணல் கேணி" என்னும் உதாரணத்தைக் காட்டினார் திருவள்ளுவ நாயனார். பத்தடி தோண்டும்போது, கிடைக்கும் நீரை விட, ஐம்பது அடி தோண்டும் போது இன்னும் மேலே கிடைக்கும். தோண்டத் தோண்டத் தண்ணீரானது அளவில் பெருகிக் கொண்டே இருக்கும்.
தோண்டத் தோண்ட என்னும்போது, முயற்சி செய்யச் செய்ய என்பது விளங்கும். முயற்சி செய்யச் செய்யத் தண்ணீர் ஊறும். இந்த முயற்சியானது ஒருவனது ஐந்து வயதில் இருக்கலாம். சாகப் போகின்ற வயதிலும் இருக்கலாம். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல.
பாறையைக் குடைந்தால் கூட தண்ணீர் ஊறுகின்றதே. "மணல்கேணி" என்று திருவள்ளுவ நாயனார் ஏன் சொன்னார்? சற்று சிந்தித்தால், மணல் கேணியை ஏன் சொன்னார் நாயனார் என்பது விளங்கும். மணல் கேணி என்றதன் மூலம், சிறுமுயற்சியும் பெரும்பலன் தரும் என்பதைக் காட்டினார். பாறையைத் தோண்ட வேண்டுமானால் பெருமுயற்சி வேண்டும். பெருமுயற்சி செய்தாலும், உடனே தண்ணீர் கிடைத்துவிடாது. மணல்கேணியில் ஊறுவது போல பாறையில் தண்ணீர் ஊறாது. மணல்கேணியைத் தோண்டத் தோண்டத் தண்ணீர் கிடைக்கும். பாறையைத் தோண்டினால், தண்ணீர் உள்ள இடம் வந்தால்தான் கிடைக்கும். சிறமுயற்சியில் பெரும்பலன் கிடைக்கும் என்பதால், மணல்கேணியை நாயனார் உதாரணமாக எடுத்துக் கொண்டார்.
"மணல்கேணி" என்று திருவள்ளுவ நாயனார் சொன்னதை வைத்துக் கொண்டு, இன்றைக்கும் ஆற்றிலே கையால் தோண்டினாலே தண்ணீர் வரும். எவ்வளவுக்கு சிறுமுயற்சி செய்கின்றோமோ அவ்வளவுக்கு ஆற்று மணலிலே நீர் சுரக்கும். அதுபோலவே, முயற்சி செய்து கற்கக் கற்க அறிவு ஊறும். எனவேதான், "கற்ற அனைத்து ஊறும் அறிவு" என்று அருளினார் நாயனார். வேறுவிதமாகச் சொன்னால், கற்றல் என்பது சிறுமுயற்சிதான்.
கற்றல் என்று சொன்ன உடனே, நூல்களைப் படித்தால் போதும் என்று எண்ணிவிடக் கூடாது. படிக்காத மேதைகள் உண்டு என்பதை மறக்கலாகாது. நமது தமிழ் நாட்டிலே அவதரித்த இராமலிங்கர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. வடநாட்டில் இராமகிருஷ்ணர் படித்தவர் இல்லை. ஆனால், அவர்களுக்கு உள்ள அறிவு, மெத்தப் படித்த நம்மவர்கள் பலருக்கும் இல்லை. இதற்கும் மணல்கேணி தான் உதாரணம். பாறையில் கிடைக்கின்ற நீரை விட, மிகச் சுலபமாக, மணல்கேணியில் கிடைக்கின்றது. என்றால், புரிந்து கொள்ளமுடியாதவை எல்லாம் எளிதில் புரிகின்றது என்றால், அதற்குக் காரணம், "திருவருள்" என்று சொல்லலாம். திருவருளைப் பெறுவதிலும் முயற்சி தேவை. அது தானாக வந்துவிடாது.
திருவருளைப் பெறச் சிறுச்சிறிதே முயன்று வந்தால் போதும். அது பெரும்பலனைத் தந்தே தீரும். அது, ஓதாது உணருகின்ற பெருநிலையில் கொண்டு சேர்த்து விடும். "ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து, எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான். ஓதாது உணர்ந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.
ஒரு நூலைப் படித்தாலும் உணர்வோடு படிக்கவேண்டும். உணர்ந்து ஓதவேண்டும். சொல்லை மட்டும் உணர்ந்தால் போதாது. சொல்லின் பொருளையும், சொல்லானது உணர்த்தி நின்ற பொருளையும் உணர்ந்து ஓதவேண்டும். "சொல்லும் பொருளும் இறந்த சுடர்" என்றார் மணிவாசகப் பெருமான். "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான்.
புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும்.
படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.
கற்றல் --- கருத்து ஊன்றித் திருத்தம் உறக் கவனித்தல்.
அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.
உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.
உய்தல --- தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல்.
அறிதல், தெரிதல், கற்றல் என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்" என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பணிக்க, எண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,
"சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,
பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,
உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்,
தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்"
என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.
"சம்பந்தர் அறிந்தார்" என்று சொல்லவில்லை. "உணர்ந்தார்" என்றுதான் சொன்னார். "தாம் உணர்ந்தார்" என்றார். உணர்த்த வேண்டிய ஒருவர் உணர்த்த உணர்தலை இது குறிக்கும். உணர்த்தியது சிவபரம்பொருள். உணர்ந்தவர், அவரது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். இதைத் தான், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான்.
மணல்கேணியைத் தோண்டுவது போல, சிறுமுயற்சியோடு நூல்களைக் கற்கவேண்டும். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல. எந்த வயதிலும் கற்கலாம். நூலறிவு நுண்ணறிவாக மாறியது என்றால் கற்றதன் பலன் விளைந்தது என்று பொருள். நுண்ணறிவு சிறக்க, கற்கின்ற நூல்களின் பொருளை உணர்ந்து ஓதவேண்டும்.
நூல்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று உலகநூல். இன்னொன்று அறிவுநூல். உலகநூல் வயிற்றுப் பாட்டுக்கு உதவும். அறிவு நூல் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும். வாழ்வில் உண்டாகும் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். அட்டைப் பகட்டோடு வருகின்ற நூல்கள் எல்லாம், அறிவு வளர்ச்சிக்கு உதவுவது இல்லை.
ஆக, கற்றல் என்பது மிக எளிதானதே. அதில் மனம் வைக்கவேண்டும். முயற்சி இருக்கவேண்டும். முயற்சியில் தான் எல்லாமே உள்ளது. முயற்சி என்பது தோண்டுவதைக் குறிக்கும். எவ்வளவு தோண்டுகின்றோமோ அவ்வளவுக்கு தண்ணீர் ஊறும். எவ்வளவு முயல்கின்றோமோ, அவ்வளவுக்கு அறிவு ஊறும்.
கலை அறிவு என்பது நூல்களைப் படிப்பதால் உண்டாகும் அறிவு. அருள் அறிவு என்பது திருவருளை முன்னிட்டுப் படிப்பதால் உண்டாகும் மெய்யறிவு. "பத்து ஆள் சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்." என்கின்றார் வள்ளல்பெருமான். திருக்குறளைப் பதிப்பித்து, திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளல்பெருமான்.
நாம் நமது கைகளைத் தொட்டு, மணல் குழியில் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றோமோ, அந்த ஆழத்திற்குத் தகுந்தவாறு நீர் கிடைக்கும். அதுபோல, நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவை, கலை அறிவு என்கிறோம்.
ஒருவன் ஒரு பிறவியில் எத்தனை புத்தகங்களைப் படித்துவிட முடியும்? நாம் நமது வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், நாம் வாழும் ஆயுளில் சுமார் ஆயிரம் நூல்களைப் படிக்க முடியும். நம்மில் பெரும்பாலானோர் ஒரு சில நூல்களையே முயன்றுதான் படிக்க முடிகின்றது. படிக்கப் படிக்க, மறந்துகொண்டே வருகின்றது. படிப்பதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதுவே மிகவும் முயற்சி செய்தால்தான் முடியும்.
இந்த நூலறிவைக் கொண்டே அவரவர்க்கு விருப்பமான அல்லது வாய்க்கின்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடிகின்றது. அப்படிப் பயணிப்பவர்கள், தாம் எடுத்த இந்தப் பிறவியில் ஆயிரம் நூல்களைப் படிப்பதோடு நில்லாமல், கற்று அறிந்தால் அவர்களது அறிவு மேலும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் நூல்கள் என்பது எடை அளவிலா, அல்லது பக்க அளிவிலா? என்றால் வள்ளல்பெருமான் ஒரு கணக்கைப் போட்டுக் காட்டுகின்றார்.
ஒரு ஆள் சுமை என்பது சராசரியாக 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆள் சுமை என்பது 500 கிலோ ஆகும். அது ஒரு வண்டிப் பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரம், அதவாது 2,00,000 கிலோ ஆகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது என்றால், 20,00,00,000 கிலோ ஆகும். ஆக, 20 கோடி கிலோ எடையுள்ள (2,00,000 டன்) புத்தகத்தை ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில், அதிதீவிர முயற்சியை மேற்கொண்டால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளல்பெருமானாரின் கணக்கு.
நமக்குத் தெரிந்த, பிடித்தமான, பரிச்சயமான ஒரு நூல் என்பது சுமார் 10 கிலோ எடை இருப்பதாகக் கொண்டால், அது போன்று எடையுள்ள 2 கோடியே 20 லட்சம் நூல்களை நாம் இந்தப் பிறவியில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம். அதாவது, நாம் விரும்புகின்ற ஒரு நூலை, 2,20,00,000 முறை முழுதும் படிப்பதற்குச் சமம். நம்மில் பலருக்கும் அதிதீவிர முயற்சி என்பது அறிவைப் பெறுவதில் இல்லை என்பது மட்டும் அல்லாமல், சுத்தசிவ நோக்கம் (திருவருள்) என்பதுதான் நிதரிசனம். இன்னொரு காரணம், நமது வாழ்நாள் குறுகியது. போராட்டங்கள் நிறைந்தது. வாழ்நாள் குறுகியது என்றால், முயற்சியை நீட்டிக்கவேண்டும். வாழ்நாளை நீட்டிக்க முடியாது.
நமது வாழ்நாளைக் கணக்கில் பார்ப்போம்.
"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு
பேதை பாலகனது ஆகும், பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே."
என்கின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகவே வேதநூலின்படி கொண்டாலும், அதில் பாதி, 50 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்துவிடும். எஞ்சி உள்ளது, 50 ஆண்டுகளே. அதில் 15 ஆண்டுகள் பேதை, பாலகன் என்ற நிலையில் கழியும். எஞ்சி உள்ளது 35 ஆண்டுகள். இதிலும் தாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப் பலகாலம் போய்விடும். (நூறு வயது என்று சொல்லப்பட்டு, அதிலே பலகாலம் இப்படிக் கழிந்தால், மீதி உள்ளதை வைத்துக் கொண்டு உருப்படியாக என்ன செய்வது?) ஆதலால், எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் சலிப்போடு முறையிடுகின்றார் ஆழ்வார்.
கடைகளிலே விழாக் காலங்களில் தள்ளுபடி என்று அறிவிப்பு வரும். ஆவல் மிகுந்து, அங்கே போய்க் கேட்டால், அது இது என்று ஒரு கணக்கைச் சொல்வார்கள். இதற்காகவா இங்கு வந்தோம்? என்ற சலிப்பு நமக்கு உண்டாகும். அதுபோலத்தான் நமது வாழ்நாள் கணக்கும்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் போட்ட கணக்கு ஒருபுறம். இன்னொரு புறம், சேரமான் பெருமாள் நாயனார் போட்ட கணக்கு ஒன்றையும், பதினோராம் திருமுறையில் வரும் "பொன்வண்ணத்து அந்தாதி" என்னும் பகுதியில் காண்போம்.
"விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டு பண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை, குங்குமக் குன்று அனைய
பதித்தனம் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனைய
மதித்தனம் கண்டனம், நெஞ்சு இனி என்செய்யும் வஞ்சனையே."
இதன் பொருள் ---
நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு, பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை. மகளிரது குங்கும மலைபோலும், மார்பில் அழுந்துதலை உடைய தனங்களை முன்னே கண்டோம், பின்பு அத் தனங்கள் தாமே மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டன போல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம், (இவ்வளவும் செய்து விட்டமையால்) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?
ஏதோ, விதித்த வாழ்நாளில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணினால், பெரிய நோய்கள் வந்து வெதுப்புகின்றன. அத்தோடு காமநோயும் வந்து வெதுப்புகின்றது. இதில் என்னத்தைச் சாதிப்பது?
"வேண்டிய நாள்களில் பாதியும் கங்குல், மிக அவற்றுள்
ஈண்டிய வெந்நோய், முதலது பிள்ளைமை, மேலது மூப்பு
ஆண்டின அச்சம் வெகுளி அவா அழுக்காறு, இங்ஙனே
மாண்டன, சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே." --- 11-ஆம் திருமுறை.
இதன் பொருள் ---
படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள், மக்களைப் படைக்கும் பொழுது `ஒவ்வொருவரும் இந்த உடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்க` என வேண்டி வரையறுக்கின்றான். அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை. பொதுவாக, ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழுதாகி விடுகின்றன. மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்ச, அவைகளிலும் பலவகையாய்த் திரள்கின்ற கொடிய நோய்கள் உண்டாகின்றன. வரையறுக்கப்பட்ட ஆண்டுகளிலும் தொடக்கப் பகுதி குழந்தைப் பருவமாய்க் கழிகின்றது. முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது. அவைகளிலும் அச்சம், வெகுளி, அவா, அழுக்காறு என இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன. இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்? ஆகையால், நாம் மிக இளைய பருவத்திலேயே வேறு எதனையும் பொருட்படுத்தாமல், நீண்ட, புல்லிய சடையையும், மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்து, அவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.
இப்படி, சின்னாள், பல்பிணி கொண்ட வாழ்நாளில், வயிற்றுப் பாட்டுக்குப் படிப்பதற்கே (கலை அறிவு பெறுவதற்கே) போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இதில், அருளறிவுக்கு முயல்வது எப்படி? இதுதான், பிரச்சினையா? என்றால், அதுதான் இல்லை. நம்முடைய முயற்சி இன்மைதான் பிரச்சினை.
கற்பது என்பது, மணல்கேணியைத் தோண்டுவது போல என்று மிகவும் எளிதான வழியைத் தான் நம் மீது கருணை வைத்து திருவள்ளுவ நாயனார் காட்டினார் என்பதை உய்த்து உணர்தல் வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் தோண்டித் தானே ஆகவேண்டும். அருளறிவு வேண்டும் என்றால் முயன்றுதானே ஆகவேண்டும். முயன்று பாருங்கள். உங்களது முயற்சிக்குத் திருவருள் துணை நிற்கும்.
நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடி வாழ்நாள் முழுக்க உழைக்கின்றோம். கேடு இல்லாத மேன்மையானது கல்விச் செல்வம் என்பதால், அதையும் வாழ்நாள் முழுதும் தேடவேண்டும். தேடிய செல்வம் போதும் என்று யாரும் இருப்பது இல்லை. ஆனால், கற்ற கல்வி போதும் என்று அமைந்துவிட்டு, கற்றதை வைத்துச் செருக்குக் கொண்டு இருப்போரைக் காணலாம்.
"முற்றும் உணர்ந்தவர் இல்லை; முழுவதும் கற்றனம் என்று களியற்க" என்கிறார் குமரகுருபர அடிகள். "கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஏதோ கொஞ்சும் படித்துவிட்டு, நான் நிரம்பக் கற்றவன், நீ கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.
"கற்றதுகைம் மண் அளவு கல்லாதது உலகு அளவு என்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள், – மெத்த
வெறும் பந்தயம் கூற வேண்டாம், புலவீர்!
எறும்பும் தன் கையால் எண்சாண்."
"அறிவின்மை" என்பது இயற்கையான நுண்ணறிவு இல்லாத தன்மையையும் குறிக்கும். காரிய காரணங்களைப் பகுத்தறியும் தெளிவு இல்லாத காரணத்தால் இம்மை இன்பங்களை எல்லாம் பெற முடியாதவனாகி விடுவதுடன் மறுமை இன்பத்தையும் இழந்துவிடுபவன் ஆவான் ஒருவன் என்று அறிதல் வேண்டும்.
"நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; -எண்ணுங்கால்
பெண் அவாய், ஆணிழந்த பேடி அணியாளோ,
கண் அவாத் தக்க கலம்?" --- நாலடியார்.
நுட்பமான அறிவுத்திறன் இல்லாமல் இருப்பதுதான், ஒருவனுக்கு வறுமை என்று கூறப்படுவதாகும். அந்த அறிவை உடைமையோ, மிகவும் வளர்ச்சி பெற்ற பெருஞ்செல்வமாகும். எண்ணிப் பார்ப்போமானால், பெண் தன்மையை விரும்பி, ஆண் தன்மையை இழந்து விட்ட பேடியானவள், கண்கள் விரும்பும்படியான கவர்ச்சி மிக்க ஆபரணங்களை அணியமாட்டாளோ?
அறிவுதான் சிறந்த செல்வம். அது இல்லாதோர் பெற்றுள்ள செல்வம் எல்லாம் பேடியின் புனைவுகள் பெண்மையாகத் தோன்றினாலும், பெண்தன்மை ஆகாதது போல, செல்வம் போலத் தோன்றினும், செல்வம் ஆகாது என்று அறிதல் வேண்டும். செல்வம் பலவகை. அதில் அறிவு ஒரு வகை எனக் கூறலாம். இதனால், அறிவும் ஒரு செல்வம் என்றாகிறது. இதைவிட 'அறிவே செல்வம்' என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
எச் செல்வமும் இல்லாத ஒருவனிடம் அறிவுச் செல்வம் ஒன்று மட்டும் இருந்துவிட்டால் அவன் எல்லாச் செல்வங்களையும் பெற்றவன் ஆவான். எல்லாச் செல்வங்களும் பெற்ற ஒருவன் அறிவுச் செல்வத்தைப் பெறாதவனாக இருந்தால், அவன் எல்லாச் செல்வங்களையும் இழந்தவன் ஆகிவிடுவான். எந்தச் செல்வத்தையும் உண்டுபண்ணும் ஆற்றல் அறிவுச் செல்வத்திற்கு உண்டு. பிற செல்வங்களுக்கு இந்த ஆற்றல் இல்லை. இதனாலேயே திருவள்ளுவர் "அறிவுடையார் எல்லாம் உடையார்" எனக் கூறினார்.
செல்வங்கள் அனைத்துமோ, சில செல்வங்கள் மட்டுமோ, அல்லது தனித்த ஒரு செல்வமோ அறிவற்ற மக்களிடத்தில் நில்லாது என்பது திருவள்ளுவர் கருத்து. இதனை "அறிவிலார் என் உடையரேனும் இலர்" என்பதால் நன்கு அறியலாம். பிற செல்வங்களைப் பெற்றவன், தன்னையும் காப்பாற்றிக் கொண்டு அவற்றையும் காப்பாற்றியாக வேண்டும். ஆனால், அறிவுச் செல்வமானது தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டு தன்னைச் சார்ந்தவனையும் காத்து நிற்கும் ஒர் அருஞ்செல்வமாகும். பல செல்வங்கள் காலத்தால் அழியக் கூடியன. சில செல்வங்கள் பகைவரால் அழியக் கூடியன. இன்னும் சில செல்வங்கள் தானே அழிந்துவிடக் கூடியன ஆனால், அறிவுச் செல்வமோ எப்போதும் அழியாததும், எவராலும் அழிக்க முடியாததுமாகும்.
அறிவை அறியாதவர் சிலர். அறிந்தும் அதனை அடையாதவர் சிலர். அடைந்தும் அதனை வளர்க்காதவர் சிலர். வளர்த்தும் பயன்படுத்தாதவரோ பலர். இந்த நால் வகையினரையும் "அறிவிழந்தவர்' என அறிவைப் பெற்றவர் கூறுவர். அறிவை இழந்தவர் மானத்தையும் இழப்பர். அவரை 'உயிர் இழந்த உடல்' எனக் கூறலாம். உயிரிழந்த உடல் அழிந்து ஒழிந்து போய்விடும். இது அழிந்து ஒழியாமல் அலைந்து திரிந்துகொண்டேயிருக்கும். உயிரிழந்த உடல். காடுகளில் கிடந்தால் நாய் நரிகளுக்கேனும் உதவும். இது நாட்டின் நடுவில் கிடந்தாலும் யாருக்கும் எதற்கும் உதவாது. உயிரிழந்த உடலை அதன் உறவினர்கள் கண்டால் அதனை எரிந்தோ, புதைத்தோ அழுது வருந்துவர். ஆனால், இதன் உறவினர்களோ எரிக்காமலும், புதைக்காமலும், அழாமலும் பார்த்துக் கொண்டே இருப்பர். உயிரிழந்த உடலுக்கு, உற்ற நண்பர்கள் இருந்தால், மலர் மாலை இட்டுப் போற்றுவர். ஆனால், இதற்கு உற்ற நண்பர்கள் இருந்தால் வெறுத்தே ஒதுக்கிவிடுவர். ஆகவே, அறிவிழந்த மக்களை 'உயிரிழந்த உடல்' எனக் கூறுவதும் பொருந்தாது.
சாதி வேற்றுமை கூறுபவர்முன் “ஒன்றே குலம்" என்பவரும், சமயவேற்றுமை கூறுபவர்முன் "ஒருவனே தேவன்" என்பவரும், இடவேற்றுமை கூறுபவர்முன் "யாதும் ஊரே" என்பவரும், இன வேற்றுமை கூறுபவர்முன் "யாவரும் கேளிர்" என்பவரும் அறிவுடையோர் ஆவர். அறிவுடையோர் எதனையும் நன்கு ஆராய்ந்த பிறகே செய்யத் தொடங்குவர், அறிவற்றவர் ஆராயாது செய்யத் தொடங்கி விட்டுத் துன்புறுவதோடு பிறகு தமது செயலை எண்ணியும் வருந்துவர்.
திருக்குறளில் 40-ஆம் அதிகாரத்தில் கல்விச் செல்வத்தை வற்புறுத்திக் கூறிய திருவள்ளுவர், 42-இல் கேள்விச் செல்வத்தை மிக உயர்த்திக் கூறி, பின்னரே 48-இல் அறிவுச் செல்வத்தை விளக்கிக் காட்டுகிறார். "அறிவுடைமை" என்பது, கல்வி கேள்விகளினால் ஆன அறிவோடு, உண்மை அறிவு உடையவன் ஆதல் என்புத பரிமேலழகர் விளக்கம். "கல்வியும் கேள்வியும் உடையராயினும், கேட்ட பொருளை உள்ளவாறு உணர்ந்து அறிதல் என்பது மணக்குடவர், பரிப்பெருமாள் கருத்து. இதிலிருந்து நுண்ணறிவுச் செல்வம் என்பது, கல்விச் செல்வத்திலும், கேள்விச் செல்வத்திலும் மிகமிக உயர்ந்த செல்வம் என்பது தெளிவாகிறது.
No comments:
Post a Comment