செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

 


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

-----

செல்வங்கள் என்று சொல்லப்படுபவற்றுள் கேள்வி ஒரு செல்வம். அதுவே மிக உயர்ந்த செல்வம் என்பதைக் காட்டத் திருவள்ளுவ நாயனார்,

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை"

என்று அருளினார்.

இந்தக் கேள்வியானது, கேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின், அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின், அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும். "கல்வி" என்னும் அதிகாரத்தில் கல்வியின் சிறப்பை வலியுறுத்திக் காட்டி திருவள்ளுவ நாயனார், "கல்லாமை" என்னும் அதிகாரத்தில் கல்லாமையால் உண்டாகும் கேடுகளை அறிவுறுத்தி, கல்வி அறிவு இல்லையானாலும், கேள்வி அறிவு வேண்டும் என்பதைக் காட்ட, "கேள்வி"என்னும் அதிகாரத்தை அமைத்து அருளினார். எனவே, கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது ஆகிறது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், இது பெருஞ்செல்வம் ஆயிற்று. பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

பத்து ஆண்டுகள் படித்து அறிபவைகளை, முப்பது ஆண்டுகள் பார்த்து அறிபவைகளை, ஐம்பது ஆண்டுகள் ஆராய்ந்து அறிபவைகளை, நூறு மணித்துளிகளில் கேட்டு அறிந்து கொள்ளலாம். இதனாலேயே கேள்விச் செல்வம் தலைசிறந்த செல்வம் எனப் போற்றப் பெறுகிறது. "கல்வியைவிட உயிர்க்கு உற்ற துணை வேறு இல்லை" என்று கல்விச்செல்வத்தை உயர்த்திக் கூறிய திருவள்ளுவ நாயனார்,  "கற்றிலன் ஆயினும் கேட்க" எனக் கூறியிருப்பது சிந்தனைக்கு உரியது. விரும்பி நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்தலே போதும், கேட்டலில் பயனில்லை என்று கருதுதல் கூடாது.  தாம் பல நாளும் கற்று அறிந்ததில் தளர்வு வந்தபோது, அறிஞர்வாய்க் கேட்ட கேள்வி ஊன்றுகோல் போல உதவும். ஆதலின்  வருந்திக் கற்றலை விடக் கேட்டலே நன்று என்பதை அறிவுறுத்த, "முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின், கேட்டலே நன்று" பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "பழமொழி நானூறு" கூறுவதும் கேட்டலின் அருமையை விளக்கும்.

மக்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேற்றுமைகள் பல, அவற்றுள் ஒன்று,  மக்கள் செவி வழியாகவும் சுவையைப் பெறுவார்கள்; மாக்களால் இயலாது என்பது.  "உணவு" என்பது வாயால் உண்பது. "உணர்வு” என்பது செவியால் பெறுவது. திருவள்ளுவ நாயனார் இவ்விரண்டையும் மாற்றி அமைத்திருப்பது வியப்பிற்கு உரியது. இதனைத் திருவள்ளுவ நாயனார் "செவிக்கு உணவு" என்பதாலும். "வாய் உணர்வின் மாக்கள்" என்பதாலும் நன்கு அறியலாம். செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்குச் சிறிது உணவு அளிக்க வேண்டும் என்பது நாயனார் நெறி. இதனால், கேள்விச் செல்வத்தைப் பெற வாய்ப்பு நேரும்போது உண்பதைக்கூட ஒத்திவைக்க வேண்டும் என்பது புலனாகும்.

"கேள்வி ஒரு செல்வம்" என்பதால், எதையும் எவரிடமும் கேட்டுவிடக் கூடாது. அறிவற்றவர்களிடம் எதையும் கேட்டல் கூடாது. அதனால் இரண்டு வகையான துன்பம் வரும். முதலாவது அவன் தவறாகவும் பதில் கூறிவிடுவான். இரண்டாவது கேட்பவன் தன்னைவிட மட்டமானவன் என்றும் கருதிவிடுவான். ஆகவே, அறிவாளிகளிடம் மட்டுமே கேட்டல் வேண்டும். அதில் இலாபம் கிடைக்காமல் போனாலும்,  நட்டத்திற்கு வழியே இராது. அறிவின் பயன் அன்பு உடைமையே. வெற்று அறிவு இருந்தால் பயனில்லை. "அறிவினான் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய் தனம் நோய்போல் போற்றாக் கடை" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதைச் சிந்தித்தால், அறிவின் பயன் பிற உயிருக்கு நேரும் துன்பத்தைத் தனக்கு வந்ததாக எண்ணி உள்ளம் துடிக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்புள்ளம் வாய்க்கவில்லையானால், ஒருவன் அறிவினைப் பெற்றவன் என்பதைத் திருவள்ளுவ நாயனாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, அன்புள்ளம் கொண்டவரித்தில் கேட்பது நன்மையைத் தரும் என்று அறிதல் வேண்டும்.

ஓயாமல் தேவையற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பவன் மூடன். இழிவான கேள்விகளைக் கேட்பவன் மோசமானவன். தெரிந்து வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பவன் கலகக்காரன். தெரிந்துகொண்டதாக நினைத்துக் கொண்டு கேள்விகளைக் கேட்பவன் அறிவற்றவன். அறிய வேண்டியதை அறிந்து கொள்ள விரும்பித் தகுதி உடையவர்களை அணுகி அமைதியாகக் கேட்டு அறிபவனே அறிஞன் ஆவான். ஒரு மனிதனை 'யார்?' என்று அறிய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவனுடைய நண்பர்கள் யார்? என்று அறிந்து கொள்வது. மற்றொன்று அவனுடைய கேள்விகள் என்னென்ன? என அறிந்துகொள்வது. முன்னது அவனுடைய நடத்தையையும், பின்னது அவனுடைய அறிவையும் தெளிவாகக் காட்டிவிடும்.

"சாதுக்களும் சாதுக்களும் சந்தித்துக் கொண்டால் இரண்டொரு பேச்சுக்கள் மட்டுமே பேசுவார்கள். அதுவும் சந்தேகத்தைப் போக்கக் கூடியதாக இருக்கும். அதுவும். ஞானமார்க்கமானதாகவே இருக்கும். கழுதையும் கழுதையும் சந்தித்துக் கொண்டால் ஒவ்வொன்றும் மறுபக்கம் திரும்பிக்கொண்டு ஆளுக்கு இரண்டு உதை கொடுத்துக் கொள்ளும்" என்பதாக வடநாட்டுப் பழமொழி ஒன்று உண்டு. கேள்வியின் சிறப்பையும், சந்திப்போரின் தகுதியையும் விளக்க இது உதவும்.

கேள்விச் செல்வத்தைப் பெறும் வழியும் இரண்டு உண்டு. ஒன்று கேட்டு அறிவது, மற்றொன்று கேளாமல் அறிவது. "சொல்லாமல் சொல்லுதல்" என்பது குறிப்பினால் உணர்த்துதல், "நினையாமல் நினைத்தல்" என்பது மறந்து நினையாமல், மறவாமலே நினைத்திருத்தல். "கேளாமல் கேட்டல்" என்பது நாமாகக் கேளாமல் பிறர் தாமாகச் சொல்வதைக் கேட்டல். கேளாமல் கேட்கும் இடங்கள் மன்றங்கள், சபைகள், அரங்குகள் முதலியன. கேளாமல் கேட்கும் வாய்ப்பை இயல்பாகப் பெற்றவர்கள் வண்டியோட்டிகளே. வண்டிகளில் பயணம் செய்வோர், வண்டியோட்டி ஒருவன் இருப்பதையும் கூட எண்ணாமல், தாங்கள் மட்டுமே தனித்து இருப்பதாக நினைத்துப் பேசக் கூடாதவைகளை எல்லாம் பேசிக் கொண்டே போவார்கள். வண்டியோட்டிகளுக்குத் தெரியாத செய்தி ஊரில் எதுவுமே இருக்காது. வண்டியோட்டிகளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் இது விளங்கும். இங்கிலாந்தில் வண்டியோட்டி ஒருவன் சிறந்த எழுத்தாளனாக மாறிப் பெரும்பொருள் திரட்டி விட்டானாம். அவன் முதலில் எழுதி வெளியிட்ட நூலின் பெயர்  "என் காதில் விழுந்தவை" என்பதே. அவனைப் பொறுத்தமட்டில் கேள்வி அவனுக்குச் செல்வமாகவே மாறிவிட்டது.

கேள்வி கேட்பதற்குப் பொறுமை மிக அவசியம். கேட்பவர்களுக்கு விடை அளிப்பதற்குக் கூட பொறுமை வேண்டும். செல்வத்தைச் சேமித்து வைப்பது போல, பெரியவர்கள் அறிவையும் அனுபவத்தையும் சேமித்து வைத்திருப்பார்கள். அவற்றைப் பெற விரும்பி வருபவர்களுக்குத் தகுதி அறிந்து அளவோடு சிறிது வழங்குவார்கள். இதைக்  "கொடைத் தன்மை" என்றே சொல்லாம். அவர்கள் கொடையை வழங்கக் காத்திருக்கிறார்கள்.

காதுக்கும் வாய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாய் நல்லதைச் சொல்ல வேண்டுமானால், காது நல்லதைக் கேட்டிருக்கவேண்டும். வாய் வணக்கமாக இன்னுரைகளைக் கூற வேண்டுமானால், காது இணக்கமாக நல்லுரைகளைக் கேட்டிருக்க வேண்டும். "கேள்வி" என்னும் அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "நூற்பொருளின் நுட்பத்தைக் கேட்டு உணராதவர், பணிவான மொழிகளை உடையவராக இருத்தல் அரிது" என்கின்றார் நாயனார்.

கேட்கப்படுகின்ற பொருளினது நுட்பம், கேள்வியின் மேல் ஏற்றப்பட்டது. நூல்களைக் கற்று வல்லாரிடத்தில் கேட்டு அறிந்தவர், தம்மை உணர்ந்து அடங்கி இருப்பர். அவ்வாறு இல்லாதார், தம்மைத் தாமே தருக்கி இருப்பர். தருக்கி இருப்பவரிடத்தில் பணிவு இராது.

"பணிவு உடையன், இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி" என்று நாயனார் முன்னரே காட்டியது போல, பணிவுடன் இனிய சொற்களைப் பேசுவது "வணங்கிய வாய்" ஆகும்.

"நுணங்கிய கேள்வியர் அல்லார், வணங்கிய

வாயினர் ஆதல் அரிது." ---திருக்குறள்.

ஆகவே, கேள்விச் செல்வத்தைப் பெறுதல் வேண்டும். அதையும் கற்றறிந்த மக்களிடம் கேட்க வேண்டும். அதிலும் ஒழுக்கம் உடையவர்களிடம் மட்டுமே கேட்க வேண்டும். அவர்களிடமிருந்து வருகின்ற விடையானது, சேற்று நிலத்திலே வழுக்கி வழுக்கி நடக்கின்றவனுக்கு ஊன்றுகோல் துணை செய்வதுபோல, வாழ்க்கைப் பாதையில் வழுக்காது நடக்க உயர்ந்ததோர் ஊன்று கோலாக நின்று உதவும். சேற்று நிலத்தில் நடப்பவனுக்குத் தான் விழுந்து விடாமல் இருக்க ஊன்றுகோல் ஒன்று வேண்டும். உலக வாழ்வில் ஒருவனுக்கு வறுமையின் காரணமாகவாவது, அறியாமை காரணமாகவாவது துன்பம் நேருமாயின், ஒழுக்கம் உடையவர் வாயில் பிறக்கும் சொற்கள் அத் துன்பதைப் போக்க உதவும் என்பதை.

"இழுக்கல் உடைஉழி ஊற்றுக் கோல் அற்றே,

ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்."

என்னும் திருக்குறளால் நிறுவினார் திருவள்ளுவ நாயனார்.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்" என்னும் திருக்குறளின் விசேட உரையில், "கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ் ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார்" எனக் கூறியிருத்தல் காண்க. 

எனவே, கல்வி அறிவு உடையவர் ஆயினும், ஒழுக்கம் இல்லாதார் அறிவில்லாதவர் ஆவார். ஆகையால், அவர் வாய்ச்சொல் கேட்டல் ஆகாது என்பது தோன்ற, "ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்" என்றார் நாயனார். "பேதை, அவன் வாய்ச்சொல் கொள்ளார் அறிவுடையார்" என வரும் திருவள்ளுவ மாலைப் பாடல் வரிகளை எண்ணுக.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"ஆலடியார் பால்பட்ட அந்தணர்போல் உய்வதற்கு,

சீலம் உடையார்பால் செவி தாழ்க்க, ---  சால

இழுக்கல் உடைஉழி ஊற்றுக் கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்."

ஆலடியார் - ஆலமரத்தின் அடியில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி என்னும் ஆலமர் கடவுள். அந்தணர் - சனகாதியர் என்று சொல்லப்படுகின்ற நால்வர். நால்வர் ஆலமர் கடவுளின்பால் பெற்ற ஞானத்தால் உய்தி பெற்றதைப் போல,  நாமும் உய்யவேண்டும் என்றால், ஒழுக்கம் உடைய சான்றோர்பால் செவி தாழ்த்து நிற்கவேண்டும். நல்லவர்கள் வாயில் பிறக்கும் சொல், ஒருவருக்கு ஆபத்து வரும்போது ஊன்றுகோல் போல.

"கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை, ஆறு

     அங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும், வாக்கு இறந்த

     பூரணமாய், மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை

     இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை, நினையாமல்

     நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்."

என்னும் திருவிளையாடல் புராணப் பாடலின்படிக்கு, வேதங்களையும், ஆறு அங்கங்களையும் கற்றதோடு, கேள்வியிலும் வல்லவர்களான முனிவர்க்கு, அவருடைய கல்வி அறிவின் துணைக்கொண்டு, எல்லாம் வல்ல பரம்பொருளை உள்ளவாறு உணர முடியவில்லை. கற்று உணர்ந்த பெரியோர்பால் தாழ்ந்து இருந்து கேட்டு உய்யும் பேறு அவர்க்கு வாய்க்கவில்லை. எந்தப் பரம்பொருளைத் தெளியமுடியாமல் வருந்தினார்களோ, அந்தப் பரம்பொருளே குருமூர்த்தமாக எழுந்தருளி வந்து, கல்லால மரத்தின் நிழலில் அமர்ந்து, சின்முத்திரையைக் காட்டி உணர்த்தி அருளப் பெற்றனர்.

கேள்விச் செல்வமே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயது என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியதன் அருமையை எண்ணி, கற்பதோடு நில்லாமல், கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த சான்றோரிடத்தில் கேட்டு, அறிவு சான்றவராக ஒருவன் அமையப்பெறுதல் வேண்டும். நூல்களைக் கற்றுத்தான் அறிவு பெறவேண்டும் என்பது இல்லை. கற்றோர்பால் இருந்து கேட்டும் அறிவுச்செல்வத்தைப் பெறலாம்.

"கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்,

நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்

ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு." --- நாலடியார்.

இதன் பொருள் ---

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தாம் கல்லாதவரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு வரவர உண்டாகப் பெறுவர்; தொல்சிறப்பின் ஒள் நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புது ஒடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு - இயற்கை மணச் சிறப்பினை உடைய, விளக்கமான, நிறம் அமைந்த பாதிரி மலரைச் சேர்தலால் புதிய மட்பாண்டம் தன்னிடத்து உள்ள தண்ணீர்க்கு அம்மணத்தைத் தந்தாற்போல என்க.

கல்வி பயிலும் பேறு இல்லாதார், கற்றாரோடு சேர்ந்து பழகுதலாவது மேற்கொள்ள வேண்டும் என்பது கருத்து. "பூவோடு சேர்ந்த நாரும் மணம்பெறும்" என்பது வழக்குமொழி.

"நல்லமணம் உள்ளது ஒன்றை நண்ணி இருப்பதற்கு 

நல்ல மணம் உண்டா(ம்) நலம் அதுபோல், - நல்ல 

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் 

குணம் அதுவே ஆம்சேர்வு கொண்டு." --- தனிப்பாடல்.

இதன் பொருள் ---

நல்ல மணம் மிக்க ஒரு பொருளைசை சேர்ந்து இருந்த பொருளுக்கும் நல்ல மணம் உண்டாகும். அந்த நலத்தைப் போலவே, நல்ல குணம் உடைய பெரியோர்களுடன் கூடி இருப்பவர்க்கு, அந்த சேர்க்கையினால் நல்ல குணமே உண்டாகும்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...