பொது --- 1090. குடலிடை தீதுற்று

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்


குடலிடை தீதுற்று (பொது)

முருகா! 

திருவடிப் பேற்றினை அருள வேண்டும்.


தனதன தானத் தனதன தானத்

     தனதன தானத் ...... தனதான


குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்

     குலவிய தோலத் ...... தியினூடே


குருதியி லேசுக் கிலமது கூடிக்

     குவலயம் வானப் ...... பொருகாலாய்


உடலெழு மாயப் பிறவியி லாவித்

     துறுபிணி நோயுற் ...... றுழலாதே


உரையடி யேனுக் கொளிமிகு நீபத்

     துனதிரு தாளைத் ...... தரவேணும்


கடலிடை சூரப் படைபொடி யாகக்

     கருதல ரோடப் ...... பொரும்வேலா


கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்

     கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா


சடையினர் நாடப் படர்மலை யோடித்

     தனிவிளை யாடித் ...... திரிவோனே


தனிமட மானைப் பரிவுட னாரத்

     தழுவும்வி நோதப் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


குடல்இடை தீதுஉற்று, இடைஇடை பீறிக்

     குலவிய தோல் அத் ...... தியின் ஊடே


குருதியிலே சுக்கிலம் அது கூடிக்

     குவலயம் வான் அப்பு ...... ஒருகாலாய்


உடல்எழு மாயப் பிறவியில் ஆவித்து,

     உறுபிணி நோய் உற்று ...... உழலாதே,


உரைஅடியேனுக்கு ஒளிமிகு நீபத்து

     உனதுஇரு தாளைத் ...... தரவேணும்.


கடல்இடை சூரப் படை பொடியாகக்

     கருதலர் ஓடப் ...... பொரும்வேலா!


கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்

     கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா!


சடையினர் நாடப் படர்மலை ஓடித்

     தனி விளையாடித் ...... திரிவோனே!


தனிமட மானைப் பரிவுடன் ஆரத்

     தழுவும் விநோதப் ...... பெருமாளே.

பதவுரை

கடல் இடை சூரப் படை பொடியாக --- கடலின் இடையே சூரபதுமனுடைய படைகள் பொடிபட்டு அழிய,

கருதலர் ஓடப் பொரும் வேலா --- பகைவர்கள் ஓட்டம் பிடிக்கப் போர் புரிந்த வேலவரே!  

கதிர்விடு வேலைக் கதிரினில் மேவி --- கடலினிடத்துக் கிரணங்களை வீசும் இளஞ்சூரியனைப் போலத் திருஞானசம்பந்தராய் அவதரித்து,

கலைபல தேர் முத்தமிழ் நாடா --- முத்தமிழ் விளங்கும் தமிழ்நாட்டில் பல கலைகளையும் ஓதாது உணர்ந்தவரே! 

சடையினர் நாடப் படர்மலை ஓடித் தனி விளையாடித் திரிவோனே --- சடையை உடைய சிவபெருமான் விரும்ப, பரந்துள்ள கயிலைமலையில் தனியாக ஓடி விளையாடித் திரிந்தவரே!

தனி மடமானைப் பரிவுடன் ஆரத் தழுவும் விநோதப் பெருமாளே --- ஒப்பற்ற இளமான் போன்ற வள்ளிநாயகியை அன்புடன்  தழுவிய அழகு வாய்ந்த பெருமையில் மிக்கவரே! 

குடல் இடை தீது உற்று --- குடல் கெடுதல் அடைந்து,

இடை இடை பீறிக் குலவிய தோல் அத்தியின் ஊடே ---இடையிடையே கிழிபட்டுக் கிடக்கும் தோலும், எலும்பும் கூடிய இவ்வுடலின் ஊடே, 

குருதியிலே சுக்கிலம் அது கூடி --- மகளிர் சுரோணிதத்துடன் விந்துவும் சேர்ந்து, 

குவலயம் வான் அப்பு ஒரு காலாய் உடல் எழும் மாயப் பிறவியில் ஆவித்து --- மண், வான், நீர், ஒப்பற்ற காற்று இவைகளுடன் தீ ஆகிய பஞ்ச பூதச் சேர்க்கையாய் இன்னொரு உடல் தோன்றுகின்ற மாயப் பிறப்பில் வந்து பிறந்து, 

உறுபிணி நோய் உற்று உழலாதே --- சேர்ந்து பிணித்தலைச் செய்யும் உடல் நோய், மன நோய்களை அடைந்து உழலாமல்,

உரை அடியேனுக்கு --- தேவரீரைப் புகழ்ந்து உரைக்கும் அடியேனுக்கு,

ஒளிமிகு நீபத்து உனது இருதாளைத் தரவேணும் --- அழகிய கடப்பமலர்கள் சூடப்பட்டு உள்ள திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

பொழிப்புரை

கடலின் இடையே சூரபதுமனுடைய படைகள் பொடிபட்டு அழிய, பகைவர்கள் ஓட்டம் பிடிக்கப் போர் புரிந்த வேலவரே!  

கடலினிடத்துக் கிரணங்களை வீசும் இளஞ்சூரியனைப் போலத் திருஞானசம்பந்தராய் அவதரித்து, முத்தமிழ் விளங்கும் தமிழ்நாட்டில் பல கலைகளையும் ஓதாது உணர்ந்தவரே! 

சடையை உடைய சிவபெருமான் விரும்ப, பரந்துள்ள கயிலைமலையில் தனியாக ஓடி விளையாடித் திரிந்தவரே!

ஒப்பற்ற இளமான் போன்ற வள்ளிநாயகியை அன்புடன்  தழுவிய அழகு வாய்ந்த பெருமையில் மிக்கவரே! 

குடல் கெடுதல் அடைந்து, இடையிடையே கிழிபட்டுக் கிடக்கும் தோலும், எலும்பும் கூடிய இவ்வுடலின் ஊடே, மகளிர் சுரோணிதத்துடன் விந்துவும் சேர்ந்து,  மண், வான், நீர், ஒப்பற்ற காற்று இவைகளுடன் தீ ஆகிய பஞ்ச பூதச் சேர்க்கையாய் இன்னொரு உடல் தோன்றுகின்ற மாயப் பிறப்பில் வந்து பிறந்து, சேர்ந்து பிணித்தலைச் செய்யும் உடல் நோய், மன நோய்களை அடைந்து உழலாமல், தேவரீரைப் புகழ்ந்து உரைக்கும் அடியேனுக்கு, அழகிய கடப்பமலர்கள் சூடப்பட்டு உள்ள திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

விரிவுரை

கலைபல தேர் முத்தமிழ் நாடா --- 

இது திருஞானசம்பந்தப் பெருமனைக் குறிக்கும். முருகப் பெருமானே திருஞானசம்பந்தராக வந்து அவதரித்தார் எனக் கூறுவர். "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று அருளினார் அருணகிரிநாதப் பெருமான். பிறப்பு இறப்பைக் கடந்த பரம்பொருள் மனித வடிவம் கொள்வதாக எண்ணுதல் கூடாது. முருகப் பெருமான் திருவருள் பெற்று சாயுசிய நிலையை அடைந்த அபரசுப்பிரமணியங்களுள் ஒன்று திருஞானசம்பந்தராக அவதரித்து எனக் கொள்ளுதல் வேண்டும். திருஞானசம்பந்தப் பெருமானின் அவதார நோக்கங்களுள் ஒன்றாக, "நாவாண்ட பலகலையும் நலம் சிறக்க" என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளியதைச் சிந்தித்து வந்தித்தல் வேண்டும்.


குடல் இடை தீது உற்று, இடை இடை பீறிக் குலவிய தோல் அத்தியின் ஊடே குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் உடல் எழும் மாயப் பிறவியில் ஆவித்து, உறுபிணி நோய் உற்று உழலாதே --- 

குருதி - இரத்தம். இங்கே மகளிரின் செந்நீரைக் குறிக்கும். ஆணின் வெண்மையான சுக்கில நீரும், பெண்ணின் செந்நீரும் கலந்து கரு உருவாகும்.

உதிரம், தசை, எலும்பு, தோல், நரம்பு, புழு, சீதம், குடல், கொழுப்பு, மயிர், மூளை முதலியவைகள் சேர்ந்து ஒரு உடம்பாக அமைந்துள்ளது.

இதன் அருவருப்பை நமது இராமலிங்க அடிகள் கூறுமாறு காண்க.

புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதனில் புகுந்து

நான் இருக்கின்ற புணர்ப்பும்

என்பொலா மணியே, எண்ணிநான் எண்ணி

ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்,

வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு

மயங்கிஉள் நடுங்கி ஆற்றாமல்,

என்பெலாம் கருக இளைத்தனன், அந்த

இளைப்பையும் ஐய நீ அறிவாய். ---  திருவருட்பா.


இதில் தந்தையின் கூறு ---

நாடியும் நாளமும் நவில் இள எலும்பும்

வெள்ளை நீரும் வெள்ளிய பற்களும்

தலைமயிர் நகமும் தந்தையின் கூறாம்.


தாயின் கூறு ---

சிறிய குடலும் சிவப்பு நீரும்

மருவிய கொழுப்பும் மன்னும் ஈரலும்

நுவல் நுரையீரலும் நோக்கும் இதயமும்

தசையும் நிணமும் தாயின் கூறாம்.


உயிர்க்குணம்  ---

அறிவும் ஆக்கமும் ஆழ்ந்த நோக்கமும்

இன்பமும் துன்பமும் இனிய வாழ்க்கையும்

உயிரின் குணம்என உரைப்பர் நூல்வலோர்.


உணவின் சாரம்  ---

உடலின் அமைப்பும் ஒள்ளிய நிறமும்

ஆடலும் ஆண்மையும் அமைந்த நிலையும்

நாணமும் மடமும் நான்ற கொள்கையும்

உண்வின் சாரம் என்று உரைப்பர் நூல்வலோர். --- உடல்நூல்.

"ஐந்து விதம் ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை" எனத் தாயுமான ஆடிகளார் கூறியிருப்பதும் காண்க. "பஞ்சபூத உடல் அது சுமந்து" என்று அருணகிரிநாதப் பெருமான் கூறி இருப்பதும் அறிக.

உலகிலே உள்ள எல்லா உயிர்களுக்கும் எக்காலும் நீங்காது தொல்லைப் படுத்தும் நோய்கள் மூன்று உள. அவைகளால் அல்லற்பட்டு உயிர்கள் உழல்கின்றன. இந்த மூன்று நோய்களினின்றும் தப்பி உய்ந்தவர் மிகச் சிலரே. எல்லா உயிர்கட்கும் என்றும் துன்பத்தைத் தரும் அந்த நோய்கள் பசி, காமம், பிறவி என அறிக. 

பசி உடம்பைப் பற்றியது. 

காமம் உள்ளத்தைப் பற்றியது. 

பிறவி உயிரைப் பற்றியது.

பசிநோய் செய்யும் கொடுமைகள் ஏழுத ஏட்டில் அடங்கா. சொல்ல உரையில் அடங்கா. பசி நோயினால் பீடிக்கப்படாத உயிர்கள்தாம் உலகில் இல்லை. விரத நாளிலும் கூட அப் பசிநோயைத் தாங்காமல் உணவை என்ன என்ன உருவில் உட்செலுத்துகின்றனர்?. பசி நோய் வந்தபோது, நடந்து கூட போகாமல் பத்தும் பறந்து போகுமாம். மானம், குலம், கல்வி, வண்மை, பொருளுடைமை, தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, வேட்கை என்ற பத்துக்கும் ஆபத்து வருகின்றது பசிப்பிணியால்.

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்." --- நல்வழி.

பசி நோயைத் தணிக்கத் தானே உயிர்கள் ஓயாது உழைக்கின்றன?  பசி நோய் மிக்கபோது கண்ணொளி மங்குகின்றது. கரசரணாதிகள் தடுமாறுகின்றன. ஏனைய கருவிகரணங்கள் தத்தம் செயல்களை இழக்கின்றன. நாக்கு புலர்கின்றது. கோபம் மலர்கின்றது. கொடிய செயல்களில் மனிதன் ஈடுபடுகின்றான். பெற்ற தாய் பசியின் கொடுமையால் குழந்தையை விற்றுவிடுகின்றாள். சிலர் உயிரைத் துறக்கின்றனர். சிலர் செயலை மறக்கின்றனர். சிலர் கடலுக்கு அப்பாலும் பறக்கின்றனர். சிலர் கடமைகளை மறக்கின்றனர்.

பசி நோயை அவ்வப்போது உணவு என்ற மருந்தைக் கொடுத்துத் தற்கால சாந்தியாகத் தடுக்கின்றனர். பசிப்பிணியைப் போக்கும் அன்னதானமே எல்லா தானத்திலும் உயர்ந்தது எனக் கருதினார் சிறுத்தொண்டர். அதனை மேற்கொண்டார் இராமலிங்க அடிகள்.  அவர் திருவுள்ளம் பசி என்ற உடனே நடுங்குமாம்.

"எட்டரும் பொருளே! திருச்சிற்றம்பலத்தே

இலகிய இறைவனே! உலகில்

பட்டினி உற்றார், பசித்தனர், களையால்

பரதவிக்கின்றனர் என்றே,

ஒட்டிய பிறரால் கேட்டபோது எல்லாம்

உளம் பகீர்என நடுக்குற்றேன்;

இட்ட உவ்வுலகில் பசிஎனில், எந்தாய்!

என்உளம் நடுங்குவது இயல்பே." ---  திருவருட்பா.

பசி நோயை மாற்றுவதற்கு மணிமேகலை அரும்பாடு பட்டாள். பசி எல்லாவற்றையும் அழிப்பதனால் தான் திருவள்ளுவர் அதனை "அழிபசி" என்றார்.  

"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புஉழி". --- திருக்குறள்.

பசியைப் பொறுத்துக் கொள்ளுவதே பெரிய ஆற்றல் ஆகும்.  ஆயினும் அந்த ஆற்றலினும் பெரியது அப் பசியை மாற்றுவார் ஆற்றல் ஆகும்.

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல், அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்".

என்று அழகாகக் கூறுகின்றனர் பொதுமறை ஆசிரியர்.

இத்தகைய பொல்லாத பசியை முருகவேளுடைய திருநாமங்களை உள்ளம் குழைந்து உருகி உரைத்து மாற்றிவிட்டதாகக் கூறுகின்றார் அருணகிரிநாதர்...

குகனெ குருபர னேயென நெஞ்சில்

     புகழ, அருள்கொடு நாவினில் இன்பக்

     குமுளி சிவஅமுது ஊறுக உந்திப் ...... பசிஆறி....---  திருப்புகழ்.

யாவராலும் மாற்றமுடியாத பசிப்பிணியை மாற்றும் மருந்து திருவேலிறைவன் திருநாமங்கள் என அறிக.


காம நோய் ---

இக் காமநோயினால் கலங்காத மனிதர்களோ தேவர்களோ இல்லை. எறும்பு முதல் யானை ஈறாக உள்ள எண்பத்து நான்கு நூறாயிர யோனி போதங்களும் இந் நோயினால் இடர்ப்படுகின்றன. ஆனை மேல் பவனிவரும் இந்திரன், இதனால் பூனையாகிப் பதுங்கி ஓடினான். சந்திரன் உடல் தேய்ந்தான்.  இராவணன் மாய்ந்தான். தவத்தினின்றும் விசுவாமித்திரன் ஓய்ந்தான். சச்சதந்தன் சாய்ந்தான். கீசகன் தீய்ந்தான்.  கலைகளை ஆய்ந்தாரும், பகைவரைக் காய்ந்தாரும் காமநோயால் வீந்தார்கள். இதன் வலிமைதான் என்னே? முடி துறந்தான் ஒருவன். தளர்ந்த வயதிலும் இந் நோயினால் இடர்ப்படுகின்றனர். பலர் பழியையும் பாவத்தையும் பாராது பரதவிக்கின்றனர். இந்த நோய்க்குத் தற்கால சாந்தியாக உள்ள நல் மருந்து தருமபத்தினி. அவளுடன் அமையாது, புன் மருந்தை நாடி இரவு பகலாக ஏக்குற்று, பார்த்தவர் பரிகசிக்க, பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்து, சன்மார்க்கத்தில் கிள்ளிக் கொடுக்காமல் மீளா நரகத்திற்கு ஆறாகின்றனர்.

"உடம்பினால் ஆயபயன் எல்லாம், உடம்பினில் வாழ்

உத்தமனைக் காணும் பொருட்டு".

என்பதனை அறியாமல், உடம்பையும் பாழ்படுத்துகின்றனர்.  காமநோயினால் நகுஷன் விண்ணிழந்தான். அசமஞ்சன் மண்ணிழந்தான். காகாசுரன் கண்ணிழந்தான்.

இந் நோயை அறவே அகற்றினாரும் உள்ளனர்.   வீடுமரும், அநுமரும், குமரகுருபரரும், சிவப்பிரகாசரும், அப்பர் பெருமானும் என்க.

அருணகிரிநாதர் இக் காமநோயைக் கடிந்தனர். அவருடைய திருப்பாடல் சான்று பகர்கின்றது. முருகனுடைய திருவடித் தியானமே காமநோய்க்கு நன்மருந்து என உணர்க.


கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்

திடத்தில் புணைஎன யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்

படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்

தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.  ---  கந்தர் அலங்காரம்.


பிறவிப் பிணி ---

இந்த நோய்தான் மிகக் கொடியது. இறைவன் என்றோ அன்றே நாம் உண்டு. அன்று தொட்டு இன்று வரை பிறவிநோய் தொடர்ந்து நம்மை வாட்டுகின்றது. பிறவி நோயை மாற்றும் பொருட்டு நம் நாட்டில் அறிஞர்கள் எத்துணையோ முயற்சிகள் செய்தனர். கானகம் சென்றனர். கனலில் நின்றனர். புனலில் மூழ்கினர். புல்லைத் தின்றனர். புலன்களை வென்றனர். தனத்தை வெறுத்தனர். மனத்தை ஒறுத்தனர். உடம்பை வறுத்தனர்.


எண்ணிலாத நெடுங்காலம்

எண்ணிலாத பலபிறவி

எடுத்தே இளைத்து இங்கு அவைநீங்கி

இம்மானிடத்தில் வந்து உதித்து,


மண்ணில் வாழ்க்கை மெய்யாக

மயங்கி உழன்றால்அடியேன்உன்

மாறாக் கருணை தரும்பாத

வனசத் துணைஎன்று அடைவேனோ


கண்ணின் மணியே உயிர்க் கனியே

கருணைப் பயுலே சுகக் கடலே

கச்சித் தாய் உச்சியை மோந்து

கண்ணோடு அணைக்கும் திருத்தாளா


புண்ணியோர் எண்ணிய கரும்பே

பொழிமும் மதவாரண முகத்தோன்

பொற்புஆர் துணையே அற்புதனே

போரூர் முருகப் பெருமாளே. ---  திருப்போரூர்ச் சந்நிதி முறை.


"பிறப்பு என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு".

என்பது பொய்யாமொழி. 


செய்யாமொழியிலும் இத்துணைத் தெளிவாகக் கூறவில்லை. செம்பொருள் என்பது எது? அதுதான் முருகனுடைய திருவடி. அது சிறந்த வடிவு உடையது. ஏனைய தேவர்களது பாதமும் சிவப்பாக இருந்தாலும், அத்தேவர்கள் செத்துப் பிறக்கின்றவர்கள். "பெம்மான் முருகன் பிறவான் இறவான்”. "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்”. "செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள" என்ற அருள் வாக்குகளை உன்னி உணர்க.


"அநுபவ சித்த பவக்கடலில் புகாது, எனை

வினவி எடுத்து அருள் வைத்தகழல் க்ருபாகரன்"... ---  பூதவேதாள வகுப்பு.


"உறவுமுறை மனைவிமகவு எனும்அலையில் எனதுஇதய

உருவுடைய மலினபவ சலராசி எறவிடும் உறுபுணையும்".... ---  சீர்பாத வகுப்பு.


"பலகாலும் உனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்துஉடன் வாழ ...... அருள்வேளே,

பதியான திருத்தணி மேவு சிவலோகம் எனப்பரி வேறு

     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே".     ---  (நிலையாத) திருப்புகழ்.

எனவே, முருகவேளின் திருநாமத் துதியினால் உடல்பிணியாகிய பசியையும், திருவடித் தியானத்தினால் உள்ளப் பிணியாகிய காமப் பிணியையும், திருவடி தியானத்தினால் உயிர்ப் பிணி ஆகிய பிறவி நோயையும் மாற்றுதல் வேண்டும்.


ஒளிமிகு நீபத்து உனது இருதாளைத் தரவேணும் --- 

ஒளி - அழகும், வண்ணமும். நீபம் - கடப்பமலர்.


கருத்துரை


முருகா! திருவடிப் பேற்றினை அருள வேண்டும்.





No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...