பொது - 1089. கருமயல் ஏறி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்


கருமயல் ஏறி (பொது)


தனதன தானத் தனதன தானத்

     தனதன தானத் ...... தனதான



கருமய லேறிப் பெருகிய காமக்

     கடலினில் மூழ்கித் ...... துயராலே


கயல்விழி யாரைப் பொருளென நாடிக்

     கழியும நாளிற் ...... கடைநாளே


எருமையி லேறித் தருமனும் வாவுற்

     றிறுகிய பாசக் ...... கயிறாலே


எனைவளை யாமற் றுணைநினை வேனுக்

     கியலிசை பாடத் ...... தரவேணும்


திருமயில் சேர்பொற் புயனென வாழத்

     தெரியல னோடப் ...... பொரும்வீரா


செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்

     செழுமறை சேர்பொற் ...... புயநாதா


பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்

     புவியது சூழத் ...... திரிவோனே


புனமக ளாரைக் கனதன மார்பிற்

     புணரும்வி நோதப் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


கருமயல் ஏறிப் பெருகிய காமக்

     கடலினில் மூழ்கி, ...... துயராலே,


கயல் விழியாரைப் பொருள் என நாடிக்

     கழியும் அந் நாளில் ...... கடைநாளே,


எருமையில் ஏறித் தருமனும் வாவுற்று,

     இறுகிய பாசக் ...... கயிறாலே


எனை வளையாமல், துணை நினைவேனுக்கு,

     இயல்இசை பாடத் ...... தரவேணும்.


திருமயில் சேர்பொன் புயன்என வாழ்அத்

     தெரியலன் ஓடப் ...... பொரும்வீரா!


செகதல மீதில் பகர்தமிழ் பாடல்

     செழுமறை சேர்பொன் ...... புயநாதா!


பொருமயில் ஏறிக் கிரி பொடியாக,

     புவியது சூழத் ...... திரிவோனே!


புன மகளாரைக் கனதன மார்பில்

     புணரும் விநோதப் ...... பெருமாளே.

பதவுரை

திருமயில் சேர் பொன்புயன் என வாழ் --- திருமகள் பொருந்திய தோள்களை உடையவன் என வாழ்ந்திருந்த,

அ(த்) தெரியலன் ஓடப் பொரும் வீரா --- அந்தப் பகைவனாகிய சூரபதுமன் புறமுதுகிட்டு ஓடும்படிப் போர் புரிந்த வீரரே!

செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழுமறை சேர் பொன்புய நாதா --- இந்தப் பூமியில் புகழ்ந்து பேசப்படும் தமிழ்ப் பாமாலைகள் ஆன  செழுமை வாய்ந்த வேதமொழிகளை அணிந்த அழகிய திருத்தோள்களை உடைய தலைவரே!

பொரு மயில் ஏறிக் கிரி பொடியாகப் புவி அது சூழத் திரிவோனே --- போர் புரிய வல்ல மயில் மீது இவர்ந்துய,  மலைகள் பொடியாகும்படியாகப் பூமியை வலம் வந்தவரே! 

புனமகளாரைக் கனதன மார்பில் புணரும் விநோதப் பெருமாளே --- தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த வள்ளிநாயகியை, அவளது அழகிய பெருத்த மார்பகங்களோடு ஆரத் தழுவித் திருவிளையாடல் புரிந்த பெருமையில் மிக்கவரே!

கருமயல் ஏறி --- கொடிய அறிவுமயக்கம் மிகுந்து, 

பெருகிய காமக் கடலினில் மூழ்கி --- காமம் என்னும் பெரிய கடலில் மூழ்கி, 

துயராலே --- அதனாலே துயரத்தை அடைந்து,

கயல் விழியாரைப் பொருள் என நாடி --- கயல் மீன் போன்ற கண்களை உடைய பொதுமகளிரையே பொருளாக எண்ணி இருந்து, 

கழியும் அந் நாளில் கடைநாளே --- வாழ்நாளைக் கழித்து, இறுதிக் காலத்தில்,

எருமையில் ஏறித் தருமனும் வாவுற்று --- எருமைக் கடா மீது ஏறி எமதருமனும் விரைந்து வந்து,

இறுகிய பாசக் கயிறாலே எனை வளையாமல் --- பாசக் கயிற்றினால் என்னைச் சுருக்கிட்டு வளைக்காமல்படிக்கு,

துணை நினைவேனுக்கு இயல் இசை பாடத் தரவேணும் ---தேவரீரையே துணையாக நினைத்திருக்கும் அடியேனுக்கு, இயற்றமிழ் இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாடத் திருவருள் புரியவேண்டும்.

பொழிப்புரை

திருமகள் பொருந்திய தோள்களை உடையவன் என வாழ்ந்திருந்த அந்தப் பகைவனாகிய சூரபதுமன் புறமுதுகிட்டு ஓடும்படிப் போர் புரிந்த வீரரே!

இந்தப் பூமியில் புகழ்ந்து பேசப்படும் தமிழ்ப் பாமாலைகள் ஆன  செழுமை வாய்ந்த வேதமொழிகளை அணிந்த அழகிய திருத்தோள்களை உடைய தலைவரே!

போர் புரிய வல்ல மயில் மீது இவர்ந்துய,  மலைகள் பொடியாகும்படியாகப் பூமியை வலம் வந்தவரே! 

தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த வள்ளிநாயகியை, அவளது அழகிய பெருத்த மார்பகங்களோடு ஆரத் தழுவித் திருவிளையாடல் புரிந்த பெருமையில் மிக்கவரே!

கொடிய அறிவுமயக்கம் மிகுந்து, காமம் என்னும் பெரிய கடலில் மூழ்கி, அதனாலே துயரத்தை அடைந்து, கயல்மீன் போன்ற கண்களை உடைய பொதுமகளிரையே பொருளாக எண்ணி இருந்து, வாழ்நாளைக் கழித்து, இறுதிக் காலத்தில் எருமைக் கடா மீது ஏறி எமதருமனும் விரைந்து வந்து, பாசக் கயிற்றினால் என்னைச் சுருக்கிட்டு வளைக்காமல்படிக்கு, தேவரீரையே துணையாக நினைத்திருக்கும் அடியேனுக்கு, இயற்றமிழ் இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாடத் திருவருள் புரியவேண்டும்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...