அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடகரி மருப்பில்
(திருச்சத்திமுத்தம்)
முருகா!
விலைமாதர் மயக்கால் விளையும்
துன்பம் தொலைய அருள்
தனதனன
தத்தத்த தத்தத்த தத்ததன
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன ...... தனதான
கடகரிம
ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக
வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர்
கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி
...... யணியாலே
கதிர்திகழு
செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ்
கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை
கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ
தித்ததனை ..... விலகாது
கடுவைவடு
வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய
லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு
கயல்விழிவெ டுட்டித்து ரத்திச்செ
விக்குழையின் ......மிசைதாவுங்
களமதன
னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு
கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ
டிச்சியர்கள்
கணியினில கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ
......தொழியேனோ
அடலைபுனை
முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு
மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்
அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு
...... மழகோனே
அபகடமு
ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி
லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு
மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு ......
மதிசூரா
விடவரவ
ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள்
உலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக
விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரும்
...... ஒருமாயோன்
விழைமருக
கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை
நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய
விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு
......பெருமாளே.
பதம் பிரித்தல்
கடகரி
மருப்பில் கதிர்த்துப் ப்ரமிக்க, மிக
உரம் இட நெருக்கிப் பிடித்துப் புடைத்துவளர்
கனக குடம் ஒத்துக் கனத்துப் பெருத்தமணி
......அணியாலே,
கதிர்திகழு
செப்பைக் கதிக்கப் பதித்து மகிழ்
கமல முகை, பட்சத்து இருத்திப் பொருத்து முலை,
கமழ் விரைகொள் செச்சைக் கலப்பைப் பொதித்ததனை
...... விலகாது,
கடுவை
வடுவைப் பற்றி விற்சிக்க வைத்த செயல்,
எனநிறம் இயற்றிக் குயிற்றிப் புரட்டி வரு
கயல்விழி வெருட்டித் துரத்தி, செவிக் குழையின் ......மிசைதாவும்,
களம், மதனனுக்குச் சயத்தைப் படைத்து உலவு
கடுமொழி பயிற்றக் களைத்துக் கொடிச்சியர்கள்,
கணியினில் அகப்பட்டு, அழுத்தத் துயர்ப்படுவது
...... ஒழியேனோ?
அடலை
புனை முக்கண் பரற்குப் பொருள் சொல் அரு
மறைதனை உணர்த்தி, செகத்தைப் பெருத்த மயில்
அதனைமுன் நடத்திக் கணத்தில் திரித்து வரும்
...... அழகோனே!
அபகடம்
உரைத்து அத்தம் மெத்தப் படைத்து,
உலகில்
எளியரை மருட்டி, செகத்தில் பிழைக்க எணும்
அசடர் தம் மனத்தைக் கலக்கித் துணித்து அடரும்
......அதிசூரா!
விட
அரவு அணைக்குள் துயில் கொள் க்ருபைக்கடவுள்,
உலவு மலை செப்பைச் செவிக்கண் செறித்து, மிக
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும்
......ஒரு மாயோன்
விழைமருக!
கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை
நெறுநெறு என வெட்டு, உக்ர சத்தித் தனிப்படைய!
விடையவர் திருச்சத்தி முத்தத்தினில் குலவு
....பெருமாளே.
பதவுரை
அடலை புனை முக்கண்
பரற்குப் பொருள் சொல் அரு மறைதனை உணர்த்தி --- உடல் முழுதும்
சாம்பலைப் பூசியுள்ள, முக்கணராகிய
பரம்பொருளுக்கு,
பிரணவப்
பொருளைச் சொல்லி, அரிய வேதங்களை உணர்த்தி உபதேசித்து அருளி,
செகத்தைப் பெருத்த மயில் அதனை முன்
நடத்திக் கணத்தில் திரித்து வரும் அழகோனே --- பெருமைக்குரிய மயில் வாகனத்தில்
ஆரோகணித்து, அதனை நடத்தி உலகத்தை ஒரு நொடிப்பொழுதினில்
வலம் வந்த அழகரே!
அபகடம் உரைத்து --- வஞ்சகம் மிக்க
சொற்களைப் பேசி,
அத்த(ம்) மெத்தப் படைத்து --- பொருளை
நிரம்பப் படைத்து,
உலகில் எளியரை மருட்டி --- உலகத்தில்
உள்ள எளியவர்களை அச்சுறுத்தி,
செகத்தில் பிழைக்க எ(ண்)ணும் அசடர் த(ம்)
மனத்தைக் கலக்கி --- உலகத்தில் வாழவேண்டும் என்று எண்ணுகின்ற மூடர்களின்
மனத்தைக் கலக்கமுறச் செய்து,
துணித்து அடரும் அதிசூரா --- அவர்களது
உடலைத் துணித்து நெருக்குகின்ற வீரம் மிக்கவரே!
விட அரவு அணைக்குள்
துயில்கொள் க்ருபைக்கடவுள் --- விடம் பொருந்திய பாம்பு அணையில்
அறிதுயில் கொள்ளுகின்ற, கருணை மிக்க கடவுளான திருமால்,
உலவு மலை செப்பைச் செவிக் கண் செறித்து
--- கஜேந்திரம் என்னும் யானையானது கூவி அழைத்ததைத் திருச்செவியில் கொண்டு,
மிக விரைவில் --- மிகவும் விரைவாக,
உவணத்தில் --- கருடன் மீது ஆரோகணித்து,
சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன்
விழை மருக --- மிக்க அன்புடன் வந்து அருள் புரிந்த மாயவன் விரும்பும்
திருமருகரே!
கொக்கில்
சமுத்ரத்தில் உற்றவனை --- மாமரமாகக் கடலில் வந்திருந்த
சூரபதுமனை,
நெறு நெறென வெட்டு உக்ர சத்தித் தனிப்படைய
--- நெறுநெறு என வெட்டிப் பிளந்த ஒலிமை வாய்ந்த வேலாயுதத்தை உடையவரே!
விடையவர் திருச்சத்தி முத்தத்தினில் குலவு
பெருமாளே --- இடபவாகனர் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும்
திருச்சத்திமுற்றம் என்னும் திருத்தலத்தில் அருள் பாலிக்கும் பெருமையில் மிக்கவரே!
கட கரி மருப்பில்
கதிர்த்து
--- மதயானையின் தந்தம் போல அழகுடன் வெளிப்பட்டு,
ப்ரமிக்க --- வியக்கும் வகையில்,
மிக உரம் இட நெருக்கிப் பிடித்துப்
புடைத்து வளர் கனக குடம் ஒத்து --- மார்பிடம் முழுதும் நெருக்கமாக அடைத்துப்
பருத்து வளர்ந்திருக்கும் பொன் குடம் போன்றதும்,
கனத்துப் பெருத்த மணி அணியாலே --- பெரிதாயுள்ள இரத்தின அணிகலன்களோடு கூட,
கதிர் திகழு செப்பைக்
கதிக்கப் பதித்து --- ஒளி விளங்கும் செப்புச் சிமிழைப் பதித்து வைத்ததுபோல,
மகிழ் கமல முகை பட்சத்து இருத்திப்
பொருத்து --- இன்பத்தைத் தருகின்ற தாமரை மொட்டுப் போன்று
பொருந்தியுள்ளதும்,
கமழ் விரை கொள் செச்சைக் கலப்பைப் பொதித்த
முலை அதனை விலகாது --- நறுமணம் கொண்ட குங்குமக் குழம்பால் தொய்யில்
எழுதப்பட்டுள்ள அந்த முலைகளை விட்டு நீங்காது,
கடுவை வடுவைப் பற்றி --- விடத் தன்மை
பொருந்தியதும், மாவடுவைப்
போன்றதும்,
வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி
--- வில்லில் சிக்க வைத்தது போன்ற அழகு மிகுந்து,
குயிற்றிப் புரட்டி வரு கயல் விழி ---
இங்கும் அங்குமாகப் புரளுகின்ற கயல் மீன்களை போன்ற கண்கள்
வெருட்டித் துரத்திச் செவிக் குழையின்
மிசை தாவும் --- விரட்டியும், ஓட்டியும் காதில் உள்ள குண்டலங்களின்
மீது பாய்கின்றதும்,
களமதனனுக்குச்
சயத்தைப் படைத்து உலவு --- கள்ளத்தனமாக மறைந்திருந்து காம
உணர்வைத் தூண்டுகின்ற மன்மதனுக்கு வெற்றியை உண்டாக்கி உலவுகின்றதுமாகிய கண்களாலேயே,
கடுமொழி பயிற்ற அக்களைத்து --- விடம்
போன்ற சொற்களைப் பேச, அதனால் களைத்துப் போய்,
கொடிச்சியர்கள் கணியினில் அகப்பட்டு
அழுத்து அத் துயர்ப் படுவது ஒழியேனோ --- கொடி போன்ற இடையினை
உடைய விலைமாதர்கள் வலையில் சிக்குண்டு அழுத்துகின்ற துயரத்தில் இருந்து தான்
நீங்கமாட்டேனா?
பொழிப்புரை
உடல் முழுதும் சாம்பலைப் பூசியுள்ள, முக்கணராகிய
பரம்பொருளுக்கு,
பிரணவப்
பொருளைச் சொல்லி, அரிய வேதங்களை உணர்த்தி உபதேசித்து அருளி, பெருமைக்குரிய மயில் வாகனத்தில்
ஆரோகணித்து, அதனை நடத்தி உலகத்தை ஒரு நொடிப்பொழுதினில்
வலம் வந்த அழகரே!
வஞ்சகம் மிக்க சொற்களைப் பேசி, பொருளை நிரம்பப் படைத்து, உலகத்தில் உள்ள எளியவர்களை அச்சுறுத்தி, உலகத்தில்
வாழவேண்டும் என்று எண்ணுகின்ற மூடர்களின் மனத்தைக் கலக்கமுறச் செய்து, அவர்களது உடலைத் துணித்து நெருக்குகின்ற
வீரம் மிக்கவரே!
விடம் பொருந்திய பாம்பு அணையில்
அறிதுயில் கொள்ளுகின்ற, கருணை மிக்க கடவுளான திருமால், கஜேந்திரம் என்னும்
யானையானது கூவி அழைத்ததைத் திருச்செவியில் கொண்டு, மிகவும் விரைவாக, கருடன் மீது ஆரோகணித்து,
மிக்க
அன்புடன் வந்து அருள் புரிந்த மாயவன் விரும்பும் திருமருகரே!
மாமரமாகக் கடலில் வந்திருந்த சூரபதுமனை, நெறுநெறு என வெட்டிப் பிளந்த ஒலிமை
வாய்ந்த வேலாயுதத்தை உடையவரே!
இடபவாகனர் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி
இருக்கும் திருச்சத்திமுற்றம் என்னும் திருத்தலத்தில் அருள் பாலிக்கும் பெருமையில்
மிக்கவரே!
மதயானையின் தந்தம் போல வெளிப்பட்டு, வியக்கும்
வகையில், மார்பிடம் முழுதும்
நெருக்கமாக அடைத்துப் பருத்து வளர்ந்திருக்கும் பொன் குடம் போன்றதும், பெரிதாயுள்ள
இரத்தின அணிகலன்களோடு கூட,
ஒளி விளங்கும் செப்புச் சிமிழைப் பதித்து வைத்ததுபோலவும், இன்பத்தைத் தருகின்ற தாமரை மொட்டுப்
போன்றும்
பொருந்தியுள்ளதும், நறுமணம்
கொண்ட குங்குமக் குழம்பால் தொய்யில் எழுதப்பட்டுள்ள அந்த முலைகளை விட்டு நீங்காது, விடத் தன்மை
பொருந்தியதும், மாவடுவைப்
போன்றதும், வில்லில் சிக்க வைத்தது போன்ற அழகு
மிகுந்து, இங்கும் அங்குமாகப் புரளுகின்ற
கயல் மீன்களை போன்ற கண்கள் விரட்டியும், ஓட்டியும் காதில் உள்ள குண்டலங்களின்
மீது பாய்கின்றதும், கள்ளத்தனமாக
மறைந்திருந்து காம உணர்வைத் தூண்டுகின்ற மன்மதனுக்கு வெற்றியை உண்டாக்கி உலவுகின்றதுமாகிய கண்களாலேயே, விடம் போன்ற சொற்களைப் பேச, அதனால்
களைத்துப் போய், கொடி போன்ற இடையினை உடைய விலைமாதர்கள்
வலையில் சிக்குண்டு அழுத்துகின்ற துயரத்தில் இருந்து தான் நீங்கமாட்டேனா?
விரிவுரை
கட
கரி மருப்பில் கதிர்த்து ---
கடகரி
--- மதயானை. மருப்பு --- தந்தம்.
கதிர்த்தல் --- வெளிப்படுதல்.
பெண்களின்
மார்பகத்தை யானையின் தந்தத்திற்கு ஒப்பு சொல்லப்படுவது மரபு.
மிக
உரம் இட நெருக்கிப் பிடித்துப் புடைத்து வளர் கனக குடம் ஒத்து ---
உரம்
--- மார்பு.
"ஒருங்கிய
சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்
கச்சு
அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து,
எய்த்து
இடை வருந்த எழுந்து, புடைபரந்து,
ஈர்க்கு
இடை போகா இளமுலை மாதர்"
எனவரும்
திருவாசகத்தைக் காண்க.
கதிர்
திகழும் செப்பைக் கதிக்கப் பதித்து ---
கதிர்
திகழும் --- ஒளி விளங்கும்.
செப்புக்
கலசம், செப்புச் சிமிழைப்
போன்று உள்ள முலைகள்.
கமல
முகை பட்சத்து இருத்திப் பொருத்து ---
கமல
முகை --- தாமரை மொட்டு.
கடுவை
வடுவைப் பற்றி
---
கடு
--- விடம். விடம் உண்டாரையே கொல்லும். விலைமாதரின் கண்கள் கண்டாரைக் கல்லும் தன்மை
உடையன.
வடு
--- மாம்பிஞ்சு. மாவடுவைப் போன்ற கண்கள்.
கொடிச்சியர்கள்
கணியினில் அகப்பட்டு அழுத்து அத் துயர்ப் படுவது ஒழியேனோ ---
கணி
--- கண்ணி என்னும் சொல் கணி என இடைக் குறைந்து வந்தது.
கண்ணி
-- வலை. விலைமாதர் தமது கண்ணால் வலை வீசி
ஆடவரைப் பிணிப்பர். கண்ணாலேயே ஆடவரின் உள்ளத்தை மட்டுமல்லாது துறந்தோர்
உள்ளத்தையும் வளைத்துப் பிடிப்பர் விலைமாதர்.
"சதிசெயும்
மங்கையர் தமது கண்வலை
மதிகெட
அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
நிதிசிவ
சண்முக என்று நீறிடில்
வதிதரும்
உலகில்உன் வருத்தம் தீருமே". ---
திருவருட்பா.
"கிளைத்துப்
புறப்பட்ட சூர் மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப்
புறப்பட்ட வேல் கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப்
பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்துத்
தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?"
--- கந்தர் அலங்காரம்.
அடலை
புனை முக்கண் பரற்குப் பொருள் சொல் அரு மறைதனை உணர்த்தி, செகத்தைப் பெருத்த
மயில் அதனை முன் நடத்திக் கணத்தில் திரித்து வரும் அழகோனே ---
அடலை
--- சாம்பல், திருநீறு.
"காடு
உடைய சுடலைப் பொடி பூசி" என்னும் திருஞானசம்பந்தப் பெருமானாரின் அருள்வாக்கை
எண்ணுக.
சிவபெருமான்
முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு
காண்க.
திருக்கயிலை
மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள்
அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து
பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது
விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை
மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.
பின்னர்
ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத்
தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று
எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு
அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை
உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி
எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு
மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய்
வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி, “அமரர் வணங்கும் குமர
நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல்
நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு
பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும்
செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார்.
ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன்.
அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும்
நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும்
நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை
கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன்
உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித்
தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான்
“மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே!
எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர். கேட்டு “செல்வக்
குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப்
பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந்
தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச்
சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம்
தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய
ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச்
சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு
கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம்
புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக
வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.
கண்ணுதற்
கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,
கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப்
பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி
நின்று, பிரணவ உபதேசம்
பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை
உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.
எதிர்
உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,
அங்கு
அதிர்கழல்
வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட
வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள்
செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று
அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.
மறிமான்
உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த
மதியாளா.... --- (விறல்மாரன்)
திருப்புகழ்.
சிவனார்
மனம் குளிர, உபதேச மந்த்ரம்
இரு
செவி
மீதிலும் பகர்செய் குருநாதா... ---
திருப்புகழ்.
பிரணவப்
பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால்
சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக்
காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச்
சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி
உபதேசித்தருளினார்.
அரவு
புனிதரும் வழிபட
மழலை
மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை
அறிவது பொருளென அருளிய பெருமாளே.
---
(குமரகுருபரகுணதர)
திருப்புகழ்.
தேவதேவன்
அத்தகைய பெருமான். மாணவபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு
அருள் நாடகம் இது. "சுசிமாணவ
பாவம்" என்பார் பாம்பன் சுவாமிகள்.
உண்மையிலே
சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத்
தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத்
தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத்
தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத்
தான் நிகரினான், தழங்கி
நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
மின்
இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை
ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக்
கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப்
பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும்
திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும்
முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு
நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது
சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன
போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான்
மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில்
சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள்
தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால்
தகப்பன் என்றும், சிவமும் சத்தியும்
சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார்.
இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
தவளத்த
நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள்
அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த
யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு
ஆர்குழல் தூமொழியே.
என
வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம்
தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,
சத்தி
தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும்
மனமும் கடந்த மனோன்மனி
பேயும்
கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும்
அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும்
மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம்
ஆர் கவின்செய் மன்றில்
அனக
நாடகற்கு எம் அன்னை
மனைவி
தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே
புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே
உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. ---
அபிராமி அந்தாதி.
தவளே
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே
அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே
கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன்
இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
---
அபிராமி அந்தாதி.
சிவம்சத்தி
தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை
ஈன்றும்,
உவந்து
இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன்
பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம்
தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான
சித்தியார்.
முருகப் பெருமான்
உலகை வலம் வந்த வரலாறு
சிவபெருமான்
திருக்கரத்தில் இருந்த தெய்வ மாதுளங்கனியை ஆனைமுகப் பெருமானும், ஆறுமுகப் பெருமானும் ஒருங்கே கேட்டனர்.
"உலகை ஒரு நாழிகைப் போதில் வலம் வருபவன் தேவசிரேட்டன்" என்று அமரர்
ஒருகால் எண்ணியதைத் திருவுளங்கொண்ட எந்தை அந்திவண்ணர், "உலகங்களை எல்லாம் ஒருகணப் பொழுதில் எவன்
வலம் வருவானோ, அவனுக்கு
இக்கனி" என்று கூறியருளினார். அதுகேட்ட ஆறுமுகக் கடவுள் மயில்மிசை ஊர்ந்த
எல்லா உலகங்களையும் ஒரு கணப்பொழுதுக்குள் வலம் வந்தனர். விநாயகமூர்த்தி எல்லா உலகங்களும்
சிவத்துக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றன என்று ஆய்ந்து திவபெருமானை வலம் வந்து கனி
பெற்றனர்.
கேவலம்
ஒரு கனி பொருட்டாக முருகவேள் உலகங்களை எல்லாம் வலம் வருவாரா? ஒரு கனியை விரும்பி கணேசரும் குகேசரும்
மாறுபடுவார்களா? ஏன் சிவபெருமான்
அக்கனியை இருவருக்கும் உடைத்துப் பகிர்ந்து தரக்கூடாதா? அல்லது வேறு கனியை உண்டாக்கித் தர
எல்லாம் வல்ல இறைவரால் ஆகாதா? காரைக்காலம்மையாருக்கு
ஒரு கனிக்கு இருகனி தந்தாரல்லவா?
தம்பிக்கே
கனி கிடைக்கட்டுமே என்று விநாயகரும், தமையனுக்கே
கனி கிடைக்கட்டும் என்றும் வேலவரும் எண்ணி அமையமாட்டார்களா? இது என்ன கதை? இப்படியும் நிகழ்ந்திருக்குமா? புனைந்துரையா? பகுத்தறிவுக்குப் பொருந்துகின்றதா? என்று பலப்பல ஐயங்கள் இதனால்
எழலாம். இத்தனை வினாக்களுக்கும் விடை
கூறுதும்.
கனி
காரணமாக மாறுபட்டு வலம் வரவில்லை. இறைவர் எல்லாமாய் அல்லவுமாய் விளங்குபவர்.
அவரிடத்திலே எல்லாப் பொருள்களும் தங்கி இருக்கின்றன. அவர் எல்லாப் பொருள்களிலும்
தங்கி இருக்கின்றார். இந்த உண்மையை விளக்கும் பொருட்டே இந்த நிகழ்ச்சி
நிகழ்ந்துள்ளது. அன்பர்கள் நன்கு சிந்திக்க. எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப்
பார்த்தனர் முருகவேள். எல்லாப் பொருள்களையும் சிவத்திலே பார்த்தனர் கணபதி. ஒன்றிலே
எல்லாவற்றையும், ஒன்றை
எல்லாவற்றுக்குள்ளும் பார்ப்பது. இப் பெரிய உட்பொருளை விளக்கியது இந்தத்
திருவிளையாடல்.
"சிந்தா
மணிக்கலச கரகட கபோலத்ரி
அம்பக
விநாயகன்முதல்
சிவனைவலம்
வரும்அளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக்
கலாபமயிலாம்" ---
மயில் விருத்தம்.
அபகடம்
உரைத்து, அத்த(ம்) மெத்தப்
படைத்து, உலகில் எளியரை
மருட்டி, செகத்தில் பிழைக்க
எ(ண்)ணும் அசடர் த(ம்) மனத்தைக் கலக்கி, துணித்து அடரும் அதிசூரா ---
அபகடம்
--- வஞ்சகம்.
அத்தம்
--- பொருள். வடமொழியில் அர்த்தம் என வழங்கப்படும்.
அசடர்
--- கீழ்மக்கள், மூடர்கள்.
பொருள் காரணமாக, வஞ்சகம் மிக்க
சொற்களையே எப்போதும் பேசி, பொருளை நிரம்பச்
சேர்த்து வைத்து வளமாக வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் அசடர்கள்.
அறிவில்லாதவர்கள். ஆனால், அறிவில் தம்மை ஆதவர்கள் என்று எண்ணிக் கொண்டு, எளியவர்களை
அச்சுறுத்தி அவருடைய பொருளைக் கவர்ந்து கொள்வர். "தமியோர் சொம் கூசாது சேரப்
பறித்த துட்டர்கள்" என்று இவர்களை அருணகிரிநாதப் பெருமான் பிறிதொரு
திருப்புகழில் அறிமுகப்படுத்தியது காண்க. அப்படிப்பட்டவர்களுக்கு இறையருள்
எப்போதும் துணை செய்யாது. அவர்கள் செய்த தீவினை காரணமாக அவர்களே மனக்கலக்கம்
அடைந்து நொந்து போவார்கள். எளியவர்க்கு எப்போதும் தெய்வம் துணை நிற்கும்.
எளியரை
வலியர் வாட்டின்
வலியரை இருநீர் வைப்பின்
அளியறத்
தெய்வம் வாட்டும்
எனும் உரைக்கு அமைய அன்றே,
தெளியும்
மாவலியைச் செற்றோற்
செகுத்து உரிக் கவயம் போர்த்த
வளியுளர்
கச்சி காவல்
வயிரவர்க் கன்பு செய்வாம். --- காஞ்சிப் புராணம்.
இதன்
பொருள் ---
எளியரை வலியர் வருத்தினால், அன்பு வடிவாகிய அறக்கடவுள், அவ்வலியரை வருத்தும் எனும் மூதுரை உள்ளது.
அதற்கு இலக்கியமாக மாவலியை அழித்த நெடியோனாகிய
திருமாலை அழித்து அவரது தோலைக் கவசமாகப் போர்த்த, காற்று மிக்கு உலவும் காஞ்சியைக் காவல் கொண்ட
வயிரவக் கடவுளுக்கு அன்பு வைப்பாம்.
"முடவனை மூர்க்கன் கொன்றால்,
மூர்க்கனை முனிதான் கொல்லும்;
மடவனை வலியான் கொன்றால்,
மறலிதான் அவனைக் கொல்லும்;
தடவரை முலைமாதே! இத்
தரணியில் செருக்கினாலே,
மடவனை அடித்த கோலும்
வலியனை அடிக்கும் கண்டாய்".
என்பது விவேக சிந்தாமணியில் வரும் பாடல்.
"வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து"
என்னும் திருக்குறள் கருத்து சிந்திக்கத் தக்கது.
விட
அரவு அணைக்குள் துயில்கொள் க்ருபைக்கடவுள், உலவு மலை செப்பைச் செவிக் கண் செறித்து, மிக விரைவில், உவணத்தில், சிறக்க ப்ரியத்தில்
வரும் ஒரு மாயோன் விழை மருக ---
விட
அரவு அணை --- ஆதிசேடன் என்னும் பாம்பு அணை.
உலவு
மலை --- உலவுகின்ற மலை. யானை.
உவணம்
--- கருடன்.
"நுதி வைத்த கரா மலைந்திடு
களிறுக்கு
அருளே புரிந்திட,
நொடியில் பரிவாக வந்தவன் ......மருகோனே!" --- (பகர்தற்கு)
திருப்புகழ்.
யானைக்கு
அருள் புரிந்திட, கருடன் மீது
ஆரோகணித்து,
நொடிப்பொழுதில்
மாயவன் வந்தருளிய வரலாறு....
திருப்பாற்
கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம்
உடையதாயும், பெரிய ஒளியோடு
கூடியதாயும், திரிகூடம் என்கின்ற
ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம்,
மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள்
நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த
நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு
செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய
இமையவரும், அப்சர மாதர்களும்
வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். நல்ல
தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமை தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது.
அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம்.
அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற
ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே
சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித்
தாகம் தணித்து, தனது தும்பிக்கை
நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு
மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின்
காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை
இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது.
கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும்
காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தத. கஜேந்திரம் உணவு இன்மையாலும் முதலையால்
பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்யமுடியாமல்
அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணையென்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில்
செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,
உடனே
கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு
முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம்
தந்து அருள் புரிந்தனர்.
சிவபெருமான்
தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தல் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை
நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது
முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை
பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான்
கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன்
நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும், தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது
அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே
அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு
மென்று அப்பணியாளன் வாளா இருந்தால்,
தலைவனால்
தண்டிக்கப்படுவான் அல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்கு இட்ட ஆணையாகிய
காத்தல் தொழிலை நிறைவேற்ற நாராயணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
கொக்கில்
சமுத்ரத்தில் உற்றவனை, நெறு நெறென வெட்டு
உக்ர சத்தித்
தனிப்படைய ---
கடலில் மாமரம்
ஆகி நின்ற சூரபதுமனை வேலாயுதத்தை விடுத்து இருகூறாகப் பிளந்தார் முருகப்பெருமான்.
ஒரு கூறு மயிலும், இன்னொரு கூறு சேவலுமாய்
நின்றது. விந்து வடிவான மயிலைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். நாத வடிவான
சேவலைத் தனது கொடியில் பொருத்திக் கொண்டார் முருகப் பெருமான்.
முருகப் பெருமானுடைய
விசுவரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக்
கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று
சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தனன். ஆலாலவிடம் போல் தோன்றிய
அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம்
கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும்
ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப்
போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.
நண்ணினர்க்கு இனியாய்
ஓலம்,
ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம்,
பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம்,
யாவையும் படைத்தாய் ஓலம்,
கண்ணுதல் பெருமான்
நல்கும்
கடவுளே ஓலம் ஓலம். ---
கந்தபுராணம்.
தேவர்கள் தேவே ஓலம்,
சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம்,
வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம்,
பன்னிரு புயத்தாய் ஓலம்,
மூவரும் ஆகி நின்ற
மூர்த்தியே ஓலம், ஓலம். --- கந்தபுராணம்.
"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள்.
முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கு இவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து
அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால்
சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.
ஏய் என முருகன் தொட்ட
இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும்
அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீஅழல் சிகழி கான்று
சென்றிட அவுணன் கொண்ட
மாஇருள் உருவம் முற்றும்
வல்விரைந்து அகன்றது அன்றே. ---
கந்தபுராணம்.
அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவில்
சென்று ஒளித்தனன். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.
"திரைக்கடலை
உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம்
நிறைத்து விளயாடும்".... --- வேல்
வகுப்பு.
சூரபதுமன் அண்ட முகடு
முட்ட, நூறாயிர
யோசனை அளவுடைய பெருமரமாகி நின்று, மண்ணும் விண்ணும் விழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர்
கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன.
அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும்
ஒன்றுபட்டது போலாகி, மடம்
பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற
வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.
புங்கவர் வழுத்திச்
சிந்தும்
பூமழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி,
அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து
மீண்டு,
கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான்
செங்கை
எய்திவீற்று இருந்ததுஅன்றே. ---
கந்தபுராணம்.
சிவபெருமான் தந்த வர
பலத்தால், சூரபன்மன்
அழிவில்லாதவன் ஆகி, மீட்டும்
எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.
தாவடி நெடுவேல் மீளத்
தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டு
மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகி
சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி
அமர்த்தொழில் கருதி வந்தான். ---
கந்தபுராணம்.
அவ்வாறு மீட்டும் அமர்
புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன்
நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும்
செற்றமும் நீங்கி, தெளிந்த
உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக்
கொடியாகவும், மாமயிலை
வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன்
சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு
பெற்றான். அவனது தவத்தின் பெருமை
அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது
பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.
மருள்கெழு புள்ளே போல
வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம்
சேர்ந்த
ஆங்குஅவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி
நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன்
செம்பொன்
ஆகிய இயற்கை யேபோல். --- கந்தபுராணம்.
தீயவை புரிந்தா ரேனும்
முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத்
தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ,
அடுசமர் அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ
வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான். --- கந்தபுராணம்.
..... ..... ..... சகம்உடுத்த
வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட
சுடர்வேலோய்! - போர்அவுணன்
அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்
சீறும் அரவைப் பொருத
சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே!
- மாறிவரு
சேவல் பகையைத் திறல்சேர்
பதாகை என
மேவத் தனித்து உயர்த்த
மேலோனே! --- கந்தர் கலிவெண்பா.
தழைந்து எழும் தொத்துத்
தடங்கை கொண்டு அப்பி,
சலம் பிளந்து எற்றிப் ...... பொருசூர், அத்
தடம் பெரும் கொக்கைத்
தொடர்ந்து, இடம்
புக்குத்
தடிந்திடும் சொக்கப் ...... பெருமாளே. --- பொதுத் திருப்புகழ்.
கடல் சலம் தனிலே ஒளி
சூரனை
உடல் பகுந்து, இரு கூறு எனவே, அது
கதித்து எழுந்து, ஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா! --- அவிநாசித் திருப்புகழ்.
கொடியநெடும் கொக்குக்
குறுகு அவுணன் பட்டுக்
குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்
சிலை பக, எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்
திருகு சிகண்டிப் பொன்
குதிரை விடும் செட்டி!
திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே. --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.
கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி
குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு
கொதிவேல் படையை ...... விடுவோனே! --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.
விடையவர்
திருச்சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே ---
திருச்சத்திமுற்றம்
என்று திருமுறைகளில் வழங்கப்படுகின்ற திருத்தலம், மக்கள் வழக்கில் சத்திமுத்தம் என்று வ வழங்கப்படுகின்றது.
சோழ
நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம். கும்பகோணத்திற்கு
அருகில் உள்ள பாடல் பெற்ற பட்டீச்சுரம் என்னும் திருத்தலத்துக்கு மிக அருகில்
திருசத்திமுத்தம் இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் தாராசுரம்.
இறைவர்
: சிவக்கொழுந்தீசர்.
இறைவியார்
: பெரியநாயகி.
தீர்த்தம் : சூல தீர்த்தம்.
காஞ்சீபுரத்தில்
அம்பிகை இறைவனைத் தழுவக் குழைந்தது போலவே, திருசத்திமுற்றத்திலும் நிகழ்ந்ததாக
கூறப்படுகிறது.
சிவபெருமான்
ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூசை செய்யுமாறு பணித்தார். அம்மையும்
இத்திருத்தலத்திற்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தைத் தாபித்து பூசை செய்து
வந்தாள். இறைவன் அம்பிகையை சோதிக்க விரும்பி காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார்.
ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடுமோ என்று அஞ்சி அம்பிகை இறைவனை ஆரத்
தழுவினார். இறைவன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அம்மையை தழுவக் குழைந்தார். சக்தி
இறைவனை தழுவக் குழைந்ததால் இத்திருத்தலம் திருசத்திமுற்றம் என்று
அழைக்கப்படுகிறது.
மேற்கொண்டு
இத்திருத்தலத்தில் இறைவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று தவம் செய்த அன்னையின்
பக்திக்குக் கட்டுப்பட்டு அம்பிகையை மேலும் சோதிக்கும் வகையில் சோதி ரூபமாய்
காட்சி கொடுத்தார். தீப்பிழம்பாய் எழுந்து நிறபது ஈசனே என்று உணர்ந்த அம்பிகை
மகிழ்ந்து அத் தீப்பிழம்பையே தழுவிக் குழைந்தாள். இனைவன் மகிழ்ந்து அன்னைக்கு
அருள் பாலிக்கிறார். அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது
மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி இருக்கிறது. மூலவர் சிவக்கொழுந்தீசர்
கருவறையின் நுழைவு வாயிலின் வலதுபுறம் அம்பிகை சிவனை தழுவியபடி காட்சி கொடுக்கும்
சந்நிதி உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும்
கண்டு களிக்கலாம்.
மூலவர்
சிவக்கொழுந்தீசர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி
கொடுக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள்
தெரிகின்றன. கற்பூர ஒளியில் நன்கு தெரிழும். சுவாமி சந்நிதித் திருச்சுற்றில் உள்ள
பைரவர் திருமேனி கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்தது. அன்னை
பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.
இத்
திருத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த
கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
செங்கற்களால்
கட்டபட்டிருந்த இக்கோயிலை, கற்கோயிலாக
மாற்றியவர் சோழ அரச வம்சத்தைச் சேர்ந்த செம்பியன்மாதேவி ஆவார். முதலாம் இராஜராஜ
சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் இராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும்
விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.
திருமணம்
ஆகாதவர்களும், விதிவசத்தால்
பிரிந்து போன தம்பதியரும் தழுவக் குழைந்த அன்னைக்கும், ஈசனுக்கும் சிறப்புப் பூசை செய்து
வழிபடுகின்றனர். சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து
வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி நல்ல
இல்வாழ்க்கை அமையும் என்று நம்பப்படுகின்றது.
அப்பர்
பெருமான் இத்திருத்தலத்தில் தங்கி திருப்பணி செய்துகொண்டு இறைவனைத் தொழுது
வந்தார். ஒருநாள் திருநாவுக்கரசர் இறைவனை வணங்கி, இறைவன் திருப்பாதங்களைத் தன் தலைமேல்
வைத்து அருளவேண்டும் என்று திருப்பதிகம் பாடி வேண்டினார். சிவபெருமான் அவரை "நல்லூரில்
வாவா" என்று அருள் செய்தார். அங்கே திருவடி தீட்சை புரிந்தார்.
"கோவாய் முடுகி"
என்று எடுத்துக்
"கூற்றம் வந்து
குமைப்பதன் முன்
பூவார்
அடிகள் என் தலைமேல்
பொறித்து வைப்பாய்" எனப் புகன்று
நாஆர்
பதிகம் பாடுதலும்
நாதன் தானும், "நல்லூரில்
வாவா"
என்றே அருள்செய்ய
வணங்கி மகிழ்ந்து
வாகீசர். --- பெரியபுராணம்.
கோவாய்
முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
பூஆர்
அடிச்சுவடு என்மேல் பொறித்துவை,
போகவிடில்,
மூவா
முழுப்பழி மூடும்கண் டாய், முழங் குந்தழற்கைத்
தேவா, திருச்சத்தி முற்றத்து உறையும்
சிவக்கொழுந்தே. --- அப்பர்.
கருத்துரை
முருகா! விலைமாதர் மயக்கால்
விளையும் துன்பம் தொலைய அருள்