காமத்துக்குக் கண் இல்லை

 

 

காமத்துக்குக் கண் இல்லை

----

 

"காமம்" என்னும் சொல்லுக்கு ஆசை, அன்பு, விருப்பம், இன்பம், புணர்ச்சியின்பம் என்று பொருள்.

 

"காமுறுதல்" என்னும் சொல்லுக்கு விரும்புதல், வேண்இக் கொள்ளுதல் என்று பொருள்.

 

உயிர்க்கு உள்ள "உட்பகை" என்றும் "அரிட்ட வர்க்கம்" என்றும் சொல்லக்கூடியவை ஆறு. அவை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பவை ஆகும். இவற்றில் காமம், மோகம் என்னும் இரண்டும் குறிப்பிடப்பட்டு உள்ளதால், "காமம்" என்னும் சொல்லுக்கு, சிறப்பாக, ஆசை, விருப்பம் என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும். "மோகம்" என்பதற்கு, காமமயக்கம், வேட்கை, மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி என்று பொருள்.

 

நெருப்பைப் புகை மறைப்பது போலவும், கண்ணாடியின் ஒளியைத் தூசு மறைப்பது போலவும், ஆடையின் ஒளியை அழுக்கு மறைப்பது போலவும், ஆன்மாவுக்கு உள்ள இயற்கை அறிவு என்று சொல்லப்படும் உண்மை அறிவை மறைத்து நிற்பது, ஆசை அல்லது காமம், அதனால் உண்டாகும் மோகம்.

 

ஓர் ஆண், ஒரு பெண்ணை விரும்புவதும், ஒரு பெண் ஓர் ஆணை விரும்புவது காமம்.

 

ஆணோ, பெண்ணோ, அவரவர் தாங்கள் விரும்பும் பொருளின் மீது ஆசை கொள்ளுவது காமம் எனப்படும். அதனால்தான், விரும்பிய பொருள் கிடைக்காதபோது குடும்பத்தில் கூட குழப்பமும் கலவரமும் உண்டாகின்றது.

 

இதைத் தான் "காமத்துக்குக் கண் இல்லை" என்று முன்னோர் கூறி வைத்தனர்.

 

கண்ணால் கண்டுதான் ஒன்றில் விருப்பம் உண்டாகின்றது. பின், கண் இல்லை என்று சொல்லலாமா? எனத் தோன்றும்.

 

மனத்தை மயக்குபவை ஐம்புலன்கள். இந்திரியங்கள் வழியாக ஒரு பொருளை, ஊனக்கண்ணால் கண்டு விருப்பம் கொள்கிறோம். அப்போது "அறிவுக்கண்", "மனக்கண்" "உள்ளக்கண்" செயல்படாமல் போவதைத் தான், மேற்குறித்த முதுமொழி காட்டுகின்றது. அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்தால், விரும்பப்படும் பொருளின் தன்மை, அதன் உண்மை நிலை, அதன் அவசியம், அதனால் விளையும் நன்மை தோன்றும். புலன்களால் உண்டான காம உணர்வு, மன அறிவை மறைப்பதால், "கண் இல்லை" எனப்பட்டது.

 

"மாய விளக்கு அது மறைந்து நின்றிடும்" என்றார் திருமூல நாயனார். மாயையானது, ஒரு பொருளை நமக்குக் காட்டியது. அதன் உண்மையைத் தெளிய வைப்பதும் அந்த மாயையே என்பதால், மாயையை விளக்கு என்றார். அது விளக்கு என்பதை அறிவால் தெளிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு தெளிந்துகொண்டால் ஆனந்தம் உண்டாகும்.

 

மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம், எதிர்ச்சொல் உண்டு. ஆனால், ஆனந்தம் என்ற சொல்லுக்கு மாற்று இல்லை.

 

எனவே, "உள்ளக்கண் நோக்கும் அறிவு ஊறி, உள்ளத்தை நோக்க அருள்வாயே" என்று முருகப் பெருமானை வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான். "உள்ளத்தை" என்றால், "உள்ளத்தின் உள்ளே நின்ற கரு" என்று அப்பர் பெருமான் கூறிய பரம்பொருளை என்று பொருள் கொள்ளவேண்டும். (உள்ள + அத்தை = உள்ளத்தை). எனவே, எதையும் அறிவுக்கண் கொண்டு பார்க்கவேண்டும்.

 

முகத்தில் உள்ள ஊனக்கண்ணைக் கொண்டு மட்டுமே ஒரு பொருளைத் தெளிபவர்களை "மூடர்கள்" என்று திருமூல நாயனார் காட்டி, அவர்களுக்குப் பின் வரும் பாடலைத் தனது அருளுரையாக வழங்கினார்.

 

"முகத்தினில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தினில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்,

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தினைச் சொல்எனில் சொல்லுமாறு எங்ஙனே."

 

என்பதே இந்த அருளுரைப் பாடல்.

 

மகளுக்குத் திருமணம். புகுந்த வீட்டில் உள்ள சூழலுக்குத் தக்கவாறு தன்னை அமைத்துக் கொள்ளாவிட்டால் சங்கடப்பட்டுப் போவாள் மகள். எனவே, எந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று தான் வாழ்ந்த வாழ்வை முன்வைத்து, மகளுக்கு வாழ்க்கைப் பாடத்தைத் திரும்பத் திரும்ப எடுக்கிறாள் தாய். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவள், மகள் தன் கணவனோடு உறவாடித் தோய்ந்து பெற வேண்டிய இன்பத்தின் தன்மையை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த அனுபவம் தாய்க்குக் கிடையாது என்பது அல்ல. அந்த அனுபவத்தைச் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதே உண்மை.

 

தன் கணவனோடு உறாவடிப் பெற்ற இன்பத்தை, தன் மகளுக்குச் சொல்என்றால் தாய் எப்படிச் சொல்ல முடியும். அவளது அனுபவத்தாலேயே விளங்கும்.

 

எனவே, உங்கள் முகக் கண்களை மூடிவிட்டு அகக் கண்களைத் திறந்து பாருங்கள். எதைப் பெற விரும்புகிறீர்களோ அதைத் தேடுங்கள். அதில் தோயுங்கள். கண்டுகொள்வீர்கள் என்று அறிவுறுத்துகின்றார் திருமூலர்.

 

"கண்டுகண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்

கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்"

 

என்றும் பிறிதொரு பாடலில் காட்டினார்.

 

பின்வரும் அப்பர் பெருமான் தேவாரப் பாடல் இதன் மேலும் தெளிவாக்கும்...

 

கழித்திலேன் காம வெந்நோய்,

     காதன்மை என்னும் பாசம்

ஒழித்திலேன், ன்கண் நோக்கி

     உணர்வு எனும் இமை திறந்து

விழித்திலேன், வெளிறு தோன்ற

     வினையெனும் சரக்குக் கொண்டேன்,

அழித்திலேன் அயர்த்துப் போனேன்,

     அதிகை வீரட்டனீரே.

 

         

இதன் பொருள் ---

 

திருஅதிகை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள பெருமானே! என்னிடத்து உள்ள ஆசாபாசம், காமம் என்ற கொடிய நோய் நீங்கப்பெற்றிலேன், ஆசை என்னும் பற்றினை விடுத்திலேன்.  உடல் உயிர் வாழ்கையையே நோக்குபவனாய் இருத்தலால், அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக, விழிக்கும் மெய்யுணர்வாகிய கண்ணை விழித்துப் பார்க்கும் நிலையைப் பெற்றிலேன். அதற்குத் தடையாகிய வினை என்னும் சரக்கையும் நிரம்பக் கொண்டுள்ளேன். அதே வேளை, இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவு உடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன். நான் என்ன செய்வேன் என்பது குறிப்பு.

 

நாம் அறிவென்னும் செம்மையின்றி அறியாமை என்னும் வெளிறு தோன்ற நிற்கின்றோம். இதில் தக்கது இன்னது, தகாதது இன்னது என்று பகுத்து அறியும் ஆற்றல் இல்லாமல் போகின்றோம். அதானல் மேலும் மேலும் பாவம் என்னும் சரக்கையே தேக்கி வைத்துக் கொள்கின்றோம்.

 

நல்ல வியாபாரிகள் சரக்குக் கொள்ளப் போனால், அவற்றின் தரத்தை ஆராய்ந்து நல்லவற்றையே தேர்ந்தெடுப்பார்கள். வியாபார நுட்பம் அறியாதவர்கள் வியாபாரம் செய்யப் புகுந்தால் கண்ட கண்ட சரக்குகளை எல்லால் வாங்குவார்கள். இழப்பைத் தேடிக் கொள்வார்கள்.

 

எனவே, மேலே கூறியவற்றால், "காமத்துக்குக் கண் இல்லை" என்னும் முதுமொழியின் பொருள் தெளிவாகும்.

 

 


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...