கூந்தலூர் --- 0882. தரையினில் வெகுவழி

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தரையினில் வெகுவழி (கூந்தலூர்)

 

முருகா!

தேவரீரை அன்புடன் வழிபட்டு உய்ய அருள்க

 

 

தனதன தனதன தாந்த தானன

     தனதன தனதன தாந்த தானன

     தனதன தனதன தாந்த தானன ...... தனதான

 

 

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை

     வெறியனை நிறைபொறை வேண்டி டாமத

     சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி

 

தவநெறி தனைவிடு தாண்டு காலியை

     யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்

     சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை

 

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்

     மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்

     விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை

 

வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு

     மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை

     விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே

 

ஒருபது சிரமிசை போந்த ராவண

     னிருபது புயமுட னேந்து மேதியு

     மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே

 

உனதடி யவர்புக ழாய்ந்த நூலின

     ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்

     உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே

 

குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு

     களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்

     குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே

 

கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு

     மிடறினி லிருவென ஏந்து மீசுரர்

     குருபர னெனவரு கூந்த லூருறை ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை,

     வெறியனை, நிறைபொறை வேண்டிடா மத

     சடலனை, மகிமைகள் தாழ்ந்த வீணணை, ...... மிகுகேள்வி

 

தவநெறி தனைவிடு தாண்டு காலியை,

     அவமதி அதனில் பொலாங்கு தீமைசெய்

     சமடனை, வலிய அசாங்கம் ஆகிய ...... தமியேனை,

 

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்

     மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்

     விழிவலை மகளிரொடு ஆங்கு கூடிய ...... வினையேனை,

 

வெகுமலர் அதுகொடு வேண்டி ஆகிலும்,

     ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து, யான் உனை

     விதம் உறு பரிவொடு வீழ்ந்து, தாள்தொழ ......அருள்வாயே!

 

ஒருபது சிரமிசை போந்த ராவணன்

     இருபது புயமுடன், ஏந்தும் ஏதியும்,

     ஒருகணை தனில்அற வாங்கு மாயவன் ...... மருகோனே!

 

உனது அடியவர், புகழ் ஆய்ந்த நூலினர்,

     அமரர்கள், முனிவர்கள், ஈந்த பாலகர்

     உயர்கதி பெற, அருள் ஓங்கு மாமயில் ......உறைவோனே!

 

குரைகழல் பணிவொடு கூம்பிடார் பொரு

     களம் மிசை, அறம் அது தீர்ந்த சூரர்கள்

     குலமுழுது அனைவரும் மாய்ந்து தூள்எழ ....முனிவோனே!

 

கொடுவிடம் அதுதனை வாங்கியே, திரு

     மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர்

     குருபரன் எனவரு கூந்தலூர் உறை ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

      ஒருபது சிரமிசை போந்த ராவணன் --- பத்துத் தலைகளோடு கூடி வலிமிகுந்த இராவணனுடைய

 

      இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் --- இருபது தோள்களோடு, ஏந்துகின்ற வாள் ஆயுதமும்

 

      ஒரு கணை தனில் --- ஒரே பாணத்தால்

 

     அற வாங்கு --- அற்று விழும்படி வில்லை வளைத்த

 

     மாயவன் மருகோனே --- இராமனாம் மாயத் திருமாலின் திருமருகரே!

 

      உனது அடியவர் --- தேவரீருடைய அடியார்களும், 

 

     புகழ் ஆய்ந்த நூலினர் --- திருப்புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும்,

 

      அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் --- தேவர்களும், முநிவர்களும், பராசரர் பெற்ற ஆறு குமாரர்களும்

 

      உயர்கதி பெற --- உயர்ந்த சிவகதியைப் பெற்று உய்ய,

 

     அருள் ஓங்கு மாமயில் உறைவோனே --- திருவருளைத் தரும் அழகிய மயிலில் எழுந்தருளி இருப்பவரே!

 

      குரைகழல் பணிவொடு கூம்பிடார் --- வீரக் கழல் ஒலிக்கின்ற திருவடியைத் தாழ்ந்து வணங்காதவராய்

 

      பொரு களமிசை அறமது தீர்ந்த சூரர்கள் --- போர்க்களத்திலே தரும நெறியைக் கைவிட்ட சூராதி அசுரர்களது

 

      குலம் முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே --- குலமானது முழுமையும் யாவருமாக மாண்டு போய்ப் பொடியாகும்படி முனிவு கொண்டவரே!

 

      கொடுவிடம் அது தனை வாங்கியே --- கொடுமையான ஆலகால விஷத்தை திருக்கரத்தில் கருணையொடு வாங்கி

 

      திருமிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர் --- அழகிய கண்டத்திலேயே இருக்கக் கடவாய் என்று கட்டளை இட்டு, அதை கண்டத்தில் தாங்கும் சிவபெருமானுக்கு

 

      குருபரன் என வரு --- குருமூர்த்தி என்று புகழும்படியாக வருகின்ற,

 

     கூந்தலூர் உறை பெருமாளே --- கூந்தலூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையின் மிக்கவரே!

 

         தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை --- இந்தப் புவியில் பல வழிகளில் ஈடுபட்டுக் கெடுகின்ற மூடனான என்னை,

 

      வெறியனை --- குடிவெறி கொண்ட பித்தனை,

 

     நிறை பொறை வேண்டிடா மத சடலனை --- நீதி, பொறுமை முதலிய நற்குணங்களை விரும்பாத மதம் கொண்ட சரீரத்தை உடையவனை,

 

      மகிமைகள் தாழ்ந்த வீணணை --- ஒருவித பெருமையும் இல்லாத தாழ்ந்த நிலையில் இருக்கும் பயனற்றவனை,

 

      மிகு கேள்வி --- மிகுந்த நல்ல கேள்வியையும்,

 

     தவநெறி தனை விடு தாண்டு காலியை --- தவ நெறியையும் விட்ட விடுகாலியை,

 

      அவமதி அதனில் --- பயனற்ற புத்தியால்

 

     பொ(ல்)லாங்கு தீமைசெய் சமடனை ---  கேடுகளும் தீமைகளும் செய்யும் குணம்கெட்டவனை,

 

      வலிய அசாங்கம் ஆகிய தமியேனை --- மிக ஒழுங்கீனம் உடைய கதியற்றவனை,

 

      விரைசெறி குழலியர் --- நறுமணம் கமழும் கூந்தலை உடையவர்களும்,

 

     வீம்பு நாரியர் --- பெருமை பேசும் பெண்களும்,

 

      மதிமுக வனிதையர் --- சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர்களும்,

 

     வாஞ்சை மோகியர் --- ஆசை மயக்கம் உடையவர்களும்,

 

      விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை --- கண் என்னும் வலையை உடையவர்களும் ஆகிய விலைமகளிர், இத்தகையோருடன் அவ்வப்போது கூடிய தொழிலை உடையவனாகிய என்னை,

 

      வெகுமலர் அதுகொடு வேண்டி ஆகிலும் --- அநேக மலர்களைக் கொண்டு அருளை விரும்பியாகிலும்,

 

      ஒருமலர் இலைகொடும் --- ஒரு பூவோ ஒரு பச்சிலையோ கொண்டாகிலும்

 

     ஓர்ந்து யான் உனை --- நான் தேவரீரை நினைத்து,  

 

      விதமுறு பரிவொடு வீழ்ந்து --- நல்ல வகையில் அன்போடு விழுந்து

 

     தாள் தொழ அருள்வாயே --- தேவரீரது திருவடிகளைத் தொழுமாறு அருள் புரிவீர்.

 

 

பொழிப்புரை

 

 

         பத்துத் தலைகளோடு கூடி வலிமிகுந்த இராவணனுடைய இருபது தோள்களோடு, ஏந்துகின்ற வாள் ஆயுதமும் ஒரே பாணத்தால் அற்று விழும்படி வில்லை வளைத்த இராமனாம் மாயத் திருமாலின் மருகரே!

 

         தேவரீருடைய அடியார்களும்,  திருப்புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும்,  தேவர்களும், முநிவர்களும், பராசரர் பெற்ற ஆறு குமாரர்களும், உயர்ந்த சிவகதியைப் பெற்று உய்ய, திருவருளைத் தரும் அழகிய மயிலில் எழுந்தருளி இருப்பவரே!

 

         வீரக் கழல்ஒலிக்கின்ற திருவடியைத் தாழ்ந்து வணங்காதவராய், போர்க்களத்திலே தரும நெறியைக் கைவிட்ட சூராதி அசுரர்களது குலமானது முழுமையும் யாவருமாக மாண்டு போய்ப் பொடியாகும்படி முனிவு கொண்டவரே!

 

         கொடுமையான ஆலகால விஷத்தை திருக்கரத்தில் கருணையொடு வாங்கி, அழகிய கண்டத்திலேயே இருக்கக் கடவாய் என்று கட்டளை இட்டு, அதை கண்டத்தில் தாங்கும் சிவபெருமானுக்கு குருமூர்த்தி என்று புகழும்படியாக வருகின்ற, கூந்தலூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையின் மிக்கவரே!

 

         இந்தப் புவியில் பல வழிகளில் ஈடுபட்டுக் கெடுகின்ற மூடனான என்னை, குடிவெறி கொண்ட பித்தனை,  நீதி, பொறுமை முதலிய நற்குணங்களை விரும்பாத மதம் கொண்ட சரீரத்தை உடையவனை, ஒருவித பெருமையும் இல்லாத தாழ்ந்த நிலையில் இருக்கும் பயனற்றவனை, மிகுந்த நல்ல கேள்வியையும், தவ நெறியையும் விட்ட விடுகாலியை, பயனற்ற புத்தியால் கேடுகளும் தீமைகளும் செய்யும் குணம்கெட்டவனை,

மிக ஒழுங்கீனம் உடைய கதியற்றவனை, நறுமணம் கமழும் கூந்தலை உடையவர்களும், பெருமை பேசும் பெண்களும், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர்களும், ஆசை மயக்கம் உடையவர்களும், கண் என்னும் வலையை உடையவர்களும் ஆகிய விலைமகளிர், இத்தகையோருடன் அவ்வப்போது கூடிய தொழிலை உடையவனாகிய என்னை, அநேக மலர்களைக் கொண்டு அருளை விரும்பியாகிலும், ஒரு பூவோ ஒரு பச்சிலையோ கொண்டாகிலும் நான் தேவரீரை நினைத்து நல்ல வகையில் அன்போடு விழுந்து தேவரீரது திருவடிகளைத் தொழுமாறு அருள் புரிவீர்.

 

 

விரிவுரை

 

 

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை ---

 

திருவருளைப் பெற விரும்புவோர் ஒரு சிறந்த வழியில் உறைப்புடன் நிற்றல் வேண்டும்.  ஏகதேவ வழிபாடும் இன்றியமையாததாம்.  பலவழியில் படர்வோர்க்கு பரகதி ஒருபோதும் கைகூடாது.  கிணறு வெட்ட முயற்சிப்பான் ஒருவன் ஒரு இடத்தில் 10 அடி ஆழம் வெட்டி நீர் இல்லையென்று கருதி, பிறிதோரிடத்தில் 10 அடி ஆழம் வெட்டி, மீளவும் வேறு இடத்தில் 10 அடி ஆழம் வெட்டி, இப்படியாக பத்து இடங்களில் 100 அடி ஆழம் வெட்டி நீர் காணாது அயர்ந்து போயினான். ஒரே இடத்தில் வெட்டி இருப்பானாயின் 50 அடி ஆழத்திலும் கூட தண்ணீரைக் கண்டிருப்பான்.  துன்பமும் குறைந்திருக்கும். அதுபோல, ஒருவழியில் உறுதியுடன் நில்லாமல், பலவழி சென்று, பல உபாசனை செய்து, பல குருமார்களை அடுத்து, பலப்பல எண்ணமிட்டு, பலனற்றுப் போகின்றனர்.

 

பன்மார்க்கம் ஆன பலஅடிபட் டேனும்ஒரு

சொல்மார்க்கம் கண்டு துலங்குநாள் எந்நாளோ..

 

என்பார் தாயுமானார்.  ஆதலின், உறுதியுடன் ஒரு வழியில் அசைவற்று நிற்றல் வேண்டும்.

 

 

வெறியனை ---

 

வெறி - மயக்கம். மயங்கியவன் ஒன்றை மற்றொன்றாகக் கருதுவன். கள்வெறி கொண்டவனுக்கு விளக்குத் தூண் மனிதனாகத் தெரியும்.  அங்ஙனமே காமவெறி கொண்டவனுக்கும் துன்பம் இன்பமாகத் தெரியும். நன்மையைத் தீமையாகவும், இன்பத்தைத் துன்பமாகவும் மாறி அறிகின்ற வெறியை வெல்லுதல் வேண்டும்.

 

அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்

பிறிவுஒன்று அறநின்ற பிரான் அலையோ

செறிவுஒன்று அறவந்து இருளே சிதைய

வெறிவென் றவரோடு உறும் வேலவனே.     ---  கந்தர் அநுபூதி.

 

 

நிறை பொறை வேண்டிடா மத சடலனை ---

 

நிறை - நீதி, திண்மை. நிறை, பொறை, தேற்றம், நீதி, சால்பு இவை ஐந்தும் ஆடவர்க்கு உரிய குணங்களாம்.

 

 

தவநெறி தனை விடு தாண்டு காலியை ---

 

தவமாகிய நெறி என்று கொள்க.  இருபெயரொட்டுப் பண்புத்தொகை.  இறைவன் திருவருளைப் பெறுவதற்குத் தவம் வழியாக நிற்கும்.

 

தங்கிய தவத்து உணர்வுதந்து அடிமை முத்திபெற

சந்திர வெளிக்கு வழி அருள்வாயே..  ---  (ஐங்கரனை) திருப்புகழ்.

 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துறையூர் என்னும் திருத்தலத்தில் இரைவன்பால் தவநெறியை வேண்டுகின்றனர்.

 

மத்தம்மத யானையின் வெண்மருப்பு உந்தி

முத்தம் கொணர்ந்து எற்றிஓர் பெண்ணை வடபால்

பத்தர்பயின்று ஏத்திப் பரவும் துறையூர்

அத்தா உனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே.

 

ஒருவழியிலும் உறைத்து நிற்காமல், இங்கும் அங்குமாக தாண்டுவதனால் "தாண்டுகாலி" என்றனர்.

 

 

சமடன் ---

 

ச + மடன் --- அறியாமையோடு கூடியவன். தன்னையும் தனக்குத் தலைவனாகிய இறைவனையும், தான் வந்த வரவையும், செல்ல வேண்டிய கதியையும் அறியாது கிடத்தலை இது தெரிவிக்கின்றது.

 

 

வெகுமலர் அதுகொடு வேண்டி ஆகிலும் ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து யான் உனை விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே ---

 

நிரம்ப மலர்களை கொண்டு வழிபட்டாலும், ஒரே ஒரு மலரை இட்டு வழிபட்டாலும், உள்ளத்தில் அன்பு இருக்கவேண்டும். உள்ளத்தில் அன்பு இல்லாதபோது, நான் நிறைய மலர்களைக் கொண்டு வழிபட்டேன் என்னும் செருக்கு இருக்கும். "நான்" என்பது இருந்தால், அது பயன் தராது.

 

விதம் --- வகை.

பரிவு --- அன்பு. 

 

அன்பு பத்தி என்ற சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பன. அன்பு என்பது உள்ளத்தில் நிகழும் நெகிழ்ச்சி ஆகும். அன்பு ஒருவர் வெளிப்படையாகக் காணக் கூடியது அல்ல. குடத்துள் விளக்கும், உறையுள் வாளும் போல் கிடப்பது. அன்பு மேலிடும் போது தன்வசம் அழிதலும், மயிர்க்கால்கள் தோறும் திவலை உண்டாகப் புளகம் எய்துதலும், கண்ணீர் மல்குதலும், விம்மலும், நாக்கு தழுதழுத்தலும், உரை தடுமாறலும் பிறவும் நிகழும்.

 

இந்த அன்பினால் அன்றி, வேறு எந்த வகையாலும், அன்பு வடிவாகிய இறைவனை அடைய முடியாது. 

 

"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டு,

பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்,

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி

என்போன் மணியினை எய்த ஒண்ணாதே"

    

என்பது திருமூலர் திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

தனது உடம்பின் எலும்பையே விறகாக இட்டு, தசையினை அறுத்துப்போட்டு, பொன்வடிவமான யாகத் தீயில் பொரியும்படி வறுத்தாலும், இறைவனை அடைய முடியாது. ஆனால், அன்புடன் உள்ளம் உருகுபவர்கள் என்னைப்போல மன மணியாகிய இறைவனை அடையலாம்.

 

தவம் செய்பவர், உடல் தசைகளை அறுத்துத் தவம் செய்வர். சூரபதுமன் இவ்வாறு தவம் செய்தான். பசுவை வேட்டு யாகம் செய்வதும் உண்டு. எனவே, இறைச்சி அறுத்திட்டுப் பொரிய வறுப்பினும் என்றார் என்றும் கொள்ளலாம். யாகமும் தவமும் செய்தாலும், இறைவனை அடைய முடியாது. இறைவனிடத்தில் உள்ளம் உருகி அன்புடன் இருந்தால் போதும். அவனை அடைந்து விடலாம் என்பது இதனால் தெளிவாகும்.

 

அன்பு மூன்று வகைப்படும்.

 

தலை அன்பு ---  இறைவனது திருநாமத்தைக் கேட்டவுடன் வசம் அழிதல்.

 

இடை அன்பு ---  இறைவன் திருமேனியைக் கண்டவுடன் வசம் அழிதல்.

 

கடை அன்பு ---  இறைவனைக் கூடியவுடன் வசம் அழிதல்.

 

இறைவனது நாமத்தைக் கேட்டவுடன் வசம் அழியும் அன்பர்கட்கு, கண்டவுடனும், கூடியவுடனும் எய்தும் அன்பின் பெருக்கை அளவிட முடியாது.

 

தலை அன்பு, தைலதாரை போல் எப்போதும் இடையறாது உள்ளம் உருகி நெகிழ்ந்துகொண்டு இருக்கும்.

 

இடை அன்பு,  அனல் இடைப்பட்ட மெழுகுபோல் சிறிது தாமதமாக உருகுவது.

 

கடை அன்பு, வெயிலில் அருக்கு உருகுவதுபோல நெடுநேரம் இறைவன் சிந்தனையாலும் இறைவன் திருவுலாக் காட்சியாலும் மிகவும் தாமதமாக உருகுவது.

 

இத்தகைய தலையாய அன்பையே வீரவாகு தேவர் முருகப் பெருமானிடம் வேண்டினார் என்று கந்தபுராணம் கூறும்.

 

"கோலம் நீடிய நிதிபதி வாழ்க்கையும் கருதேன்,

மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன்,

மால்அயன் பெறும் பதத்தையும் பொருள்என மதியேன்,

சால நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியேன்".

 

இதன் பொருள் ---

 

முருகப் பெருமானே! அடியவன் ஆகிய தான், செல்வத்தால் மிகுந்துள்ள குபேரனின் வாழ்க்கை விரும்பவில்லை. தேவேந்திர போகத்தையும் நான் விரும்பவில்லை. திருமால், பிரமன் ஆகிய பதவிகளையும் நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. உன்னுடைய திருவடிகளில் வைக்கும் அன்பையே நான் மிகவும் விரும்புகின்றேன்.

 

இறைவனை மலரிட்டு வணங்குவது சிறந்த வழிபாடாகும்.  "புண்ணியம் செய்வார்க்குப் பூஉண்டு, நீர்உண்டு" என்பார் திருமூலர்.

 

 

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்

    தீவண்ணர் திறம்ஒருகால் பேசார் ஆகில்

ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்

    உண்பதன்முன் மலர்பறித்துஇட்டுஉண்ணார் ஆகில்

அருநோய்கள் கெடவெண்ணீறு அணியார் ஆகில்

    அளிஅற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்

    பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே. ---  அப்பரடிகள்.

 

ஆதலின், அதிகாலையில் எழுந்து நீராடி, நிரம்ப மலர்களை எடுத்து இறைவன் வழிபடுதல் வேண்டும். அது முடியாதவர்கள் ஒரு மலராவது எடுத்து இறைவனுக்குச் சாத்த வேண்டும்.  அதுவும் கை கூடாதவர்கள் ஒரு பச்சிலையாவது சாத்தி வணங்க வேண்டும். 

 

 

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.   ---- திருமந்திரம்

 

காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது.

 

 

போதும் பெறாவிடில் பச்சிலை

    உண்டு, புனல் உண்டு, ங்கும்

ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டுஅன்றே,

    இணை யாகச் செப்பும்

சூதும் பெறாமுலை பங்கர், தென்

    தோணி புர ஈசர், வண்டின்

தாதும் பெறாத அடித்தா-

    மரை சென்று சார்வதற்கே

 

என்றார் பட்டினத்தடிகள்.

 

தேவ தேவன்மெய்ச் சேவகன்

         தென்பெ ருந்துறை நாயகன்

மூவ ராலும் அறியொ ணாமுதல்

         ஆய ஆனந்த மூர்த்தியான்

யாவ ராயினும் அன்பர் அன்றி

         அறியொ ணாமலர்ச் சோதியான்

தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்

         சென்னி மன்னிச் சுடருமே.        ---  மணிவாசகம்.

 

 

ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படும்காண்

ஆரேனும் காணா அரன்.             ---  திருக்களிற்றுப்படியார்.

 

 

இந்த அன்புநெறியில் முதலிடம் பெற்றவர் கண்ணப்ப நாயனார்.

 

திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றுஅவர் காணா முன்னே,

அங்கணர் கருணை கூர்ந்த அருள்திரு நோக்கம் எய்தத்

தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்டு அகல, நீங்கிப்

பொங்கிய ஒளியின்நீழல் பொருஇல்அன்பு உருவம் ஆனார். ---  பெரியபுராணம்.

 

அதனால் அன்றோ, காரைக்கால் அம்மையாரும், இறவாத இன்ப அன்பு வேண்டி பெற்றனர்.

 

ஈந்த பாலகர் ---

 

பராசர முனிவர் பெற்ற அறுவர். அவர்கள் தப்தர், அநந்தர், நந்தி, சுதுர்முகர், சக்ரபாணி, மாலி எனப்படுவர்.  இவ்வாறு சிறார்களும்  இளம் பருவத்தில் மீன்கள் இறந்துபடுமாறு ஒரு குளத்தில் விளையாடினார்கள். அதுகண்ட பராசரர், "இம் மீன்கள் இறக்குமாறு நீர் விளையாடியபடியினால் சரவணப் பொய்கையில் மீன் வடிவாகக் கடவீர்கள்" என்று சபித்தனர்.  முனிகுமாரர்கள் பிதாவை வணங்கி, சாபத் தீர்வு கேட்க, "சரவணத்தில் முருகவேள் திருவவதாரம் புரிவர்.  ஆதிபராசத்தியின் ஞானப்பாலை உண்பர். அத் தருணம் முருகவேளுண்ட எச்சில்பால் சரவணத்தில் கலக்கும். அதனை உண்டு தொல்லுருப் பெற்று, நன்மை அடைவீர்கள்" என்று அருள் புரிந்தார். அவ்வண்ணமே, சரவணப் பொய்கையில் மீன் வடிவம் பெற்றனர். கந்தக் கடவுளுக்குக் கௌரி தந்த திருஞானப்பால் ஒழுக, அது சரவணத்தில் கலந்தது. அதனை உண்டவுடன் அறுவருக்கும் மீன் வடிவம் மாறியது. அவர்கள் சிவபெருமானைத் தொழுது நின்றனர். சிவபெருமான் கருணை புரிந்து, "திருப்பரங்குன்றம் சென்று தவம் புரியுங்கள். அங்கு முருகன் வந்து அருள் புரிவன்" என்றனர். அவ்வண்ணாமே அருள் பெற்றனர்.

 

அன்னார் அறுவருமாய் எழுந்து

         அகன் பொய்கை விட்டு அமலன்

முன்னாய் வணங்கினர் போற்றலும்

         முனிமைந்தர்கள் பரங்கோடு

என்னா உரைபெறு குன்றிடை

         இருந்தே தவம் புரிமின்,

சின்னாண் மிசைஇவன் வந்தருள்

         செயும்என்று அருள்செய்தான்.        ---  கந்தபுராணம்.

 

 

கொடு விடம் அது தனை வாங்கியே ---

 

பாற்கடலில் தோன்றிய ஆலாலவிடத்தைக் கண்டு அமரர்கள் அஞ்சி, அரனாரிடம் முறையிட, சிவபெருமான் சுந்தரரை, "அவ் விடத்தை இவ்விடத்திற்குக் கொணர்வாய்" என்று பணித்து அருளினார். சுந்தரர் சென்று மாலயனாதி வானவர் நெருங்க முடியாத பயங்கரமான விடத்தை நாவல் பழம்போல் திரட்டிக் கொணர்ந்து, அரனாரிடம் அளித்தனர். அதனை வாங்கி, பெருமான் கண்டத்தில் தரித்து நீலகண்டர் ஆக விளங்கினர்.

 

கனத்தார் திரைமாண்டு அழல் கான்ற நஞ்சை,

"என்அத்தா" எனவாங்கி, அது உண்ட கண்டன்

மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய

நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே. --- திருஞானசம்பந்தர்.

 

கருத்துரை

 

 

முருகா! அடியேன் தேவரீரை அன்புடன் வழிபட்டு உய்ய அருள் புரிவீர்.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...