கற்ற பெரியாரோடு கூடி இருத்தல் நலம்.

 

 

கற்ற பெரியாரோடு கூடி இருத்தல் நலம்

------

 

 

     இரும்பை இரும்பினைக் கொண்டே வெட்டுவர். சுவை மிகுந்த பாயசம் முதலான நீரால் ஆன உணவினை உண்கொண்ட பின்னர், நீரைக் கொண்டே வாயைக் கொப்புளிப்பர்.

 

     அதுபோல, செயற்கரிய சிறப்புடைய செயல்களை, செயற்கரிய பெருமுயற்சியைக் கொண்டே முடித்துக் கொள்ளக் கூடும்.

 

     மனிதப் பிறவியில் அடைவதற்கு உரிய அரும்பெரும் பேறுகள் எல்லாம், அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பெரியோரின் துணையைக் கொண்டுதான் அடையமுடியும்.

 

     கீழ்நிலையை அடைந்து, எல்லோராலும் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவது, கீழ்நிலையில் உள்ளோரால் உண்டான தொடர்பினால்தான்.

 

     இக் கருத்தை விளக்குவது "நான்மணிக் கடிகை" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் வரும் ஒரு பாடல். பாடலைக் காண்போம்...

 

 

"இரும்பின் இரும்பு இடை போழ்ப, --- பெருஞ்சிறப்பின்

நீர்உண்டார் நீரால்வாய் பூசுப, - தேரின்

அரிய அரியவற்றால் கொள்ப, பெரிய

பெரியரால் எய்தப் படும்". 

 

இதன் பொருள் ---

 

     இரும்பின் இரும்பு இடை போழ்ப --- இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டே இரும்பைக் குறுக்கே வெட்டுவர்; பெரும் சிறப்பின் நீர் உண்டார் நீரால் வாய் பூசுப --- மிக்க சிறப்புடைய, பாயசம் முதலிய நீருணவுகளை உண்டவர்களும், நீர் கொண்டே வாய் கழுவுவர்; தேரின் அரிய அரியவற்றால் கொள்ப --- ஆராய்ந்தால், அரிய செயல்களை அருமையான முயற்சிகளால் முடித்துக் கொள்வர்; பெரிய பெரியரான் எய்தப்படும் --- பெரிய பேறுகள், கல்வி கேள்விகளையுடைய தவப் பெரியோரால் அடையப்படும்.

 

     எனவே, கீழ்மக்களோடு நட்புக் கொண்டு இருக்காமல், பெரியாரோடு நண்புக் கொண்டு இருப்பது இனிமையைத் தரும் என்று முந்திய பதிவில் பார்த்தோம்....

 

     கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் உயர்ந்து விளங்கும் பெரியாரோடு இணங்கி இருந்து, அவர் காட்டிய வழியில் ஒழுகுவதால், ஒருவன் தானும் அறிவு ஒழுக்கங்களால் சிறந்து விளங்குவான். அவ்வாறு விளங்குபவன் ஒருக்கால், தவறு செய்தாலும் பெரியோர், பொறுத்துக் கொண்டு நல்வழிப் படுத்துவர்.

 

     கீழ்மக்களோடு உறவு கொண்டு இருந்தால், நற்குணங்கள் விளங்கப் பெறாது, குற்றத் தன்மையே பெரிதும் விளங்கி நிற்கும். அதனால், எல்லோராலும் வெறுக்கப் படுவதோடு அல்லாமல், வாழுகின்ற காலத்தில் நல்ல நிலைமையில் வாழ இயலாது. உயிர் உடலை விட்டு நீங்கிய பின்னர், நல்ல கதியும் வாய்க்காது.

 

     இதற்கு விளக்கமாக, வள்ளல்பெருமான், "கந்தகோட்டத் தெய்வமணி மாலை" என்னும் பகுதியில், சென்னையில் கந்தகோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்ருளி உள்ள, முருகப் பெருமான் மீது பாடியருளிய பாடல் ஒன்றைக் காண்போம்....

 

 

"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன், கல்வி

                  கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்,

         கனிவுகொண்டு உனது திருவடியை ஒருகனவிலும்

                  கருதிலேன், நல்லன் அல்லேன்,

குற்றமே செய்வது என்குணம் ஆகும், அப்பெரும்

                  குற்றம் எல்லாம் குணம் எனக்

         கொள்ளுவது நின் அருட்குணம் ஆகும், என்னில், என்

                  குறை தவிர்த்து அருள் புரிகுவாய்!

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள்உருப்

                  பெற்று எழுந்து ஓங்கு சுடரே!

         பிரணவ ஆகார! சின்மய! விமல சொரூபமே!

                  பேதம்இல் பரப் பிரமமே!

தன்தகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

                  தலம் ஓங்கு கந்தவேளே!

         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

                        சண்முகத் தெய்வமணியே!

 

இதன் பொருள் ---

 

     தன்னளவில் அழகு பொருந், சென்னையில் கந்தகோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் கந்தக் கடவுளே! குளிர்ந்த ஒளியினை உடைய தூயமணியே! உள்ளத்தில் போற்றப்படவேண்டிய சைவநெறியினை விளக்கும் மணியைப் போன்றவரே! ஆறுதிருமுகங்களை உடைய தெய்வமே!

 

     எருதின் மேல் இவர்ந்து வரும் ஒப்பற்ற பெருமானான சிவனுடைய அருள் உருவைப் பெற்று விளங்கும் சுடரே! ஓங்கார வடிவமானவரே! ஞானத் திரளாய் உள்ள பெருமானே! மலம் இல்லாத தூய்மை உருவமே! மேலான பிரமப் பொருளே!

 

     கல்வியை கற்கும் நெறியினை அறிந்து நான் கற்கவில்லை. கற்று உணர்ந்த மேன்மக்களோடு கூடி, அவர் வழி நின்றதும் இல்லை. உள்ளம் உருகி உனது திருவடியைக் கனவிலும் நினைக்கவில்லை. நான் நல்லவனும் இல்லை.

 

     நல்லொழுக்கம் இல்லாமையால், என்னிடத்தில் நல்ல பண்புகள் விளங்கவில்லை. நல்ல பண்புகள் இல்லாமையால், குற்றச் செயல்களைச் செய்வதே எனக்குக் குணமாக உள்ளது. உயிர்கள் செய்யும் குற்றங்களை எல்லாம் குணமாகக் கொண்டு அருள் புரிவது, உனது அருட்குணம். ஆதலால், எனது குற்றங்களைப் போக்கி அருள் புரிய வேண்டுகின்றேன்.

 

     முறையற்ற கல்வியும் கனிவில்லாத மனமும் உடைமையால் வந்த குற்றங்களை நீக்கிக் குறை தவிர்த்து அருள, இறைவனை வேண்டிக் கொள்ளவேண்டும்.

 

   

 

 

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...