சாகும்போது சங்கரா என்று சொல்ல வரவேண்டும்

 

 

சாகும்போது சங்கரா என்று சொல்ல வரவேண்டும்.

------

 

"காணாமல் வேணது எல்லாம் கத்தலாம், கற்றோர்முன்

கோணாமல் வாய்திறக்கக் கூடாதே, நாணாமல்

பேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தக்கால்,

கீச்சுக்கீச்சு என்னும் கிளி".

 

இது ஔவைப் பிராட்டியாரின் தனிப் பாடல்களில் ஒன்று.

 

இதன் பொருள் ---

 

     கற்றவரைக் காணாதபோது, ஒருவர் தாம் விரும்பிவாறு எல்லாம் உரக்கப் பேசலாம். ஆனால், கற்றவர் முன்னால் நாணாமல் வாய் திறந்து நல்ல சொற்களைச் சொல்ல இயலாது. கிளி தனக்குக் கற்பித்தவற்றை அஞ்சாமல் பேசும். ஆனால், தனக்குப் பகையான பூனை ஒன்று வருமானால், அச்சத்தால் அது, கீச்சு கீச்சு என்று கதறும்.

 

     நல்லவர்களின் பார்வையில் இல்லாத வரையில் கன்னா பின்னா என்று வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கத் தோன்றும். ஆனால், கற்ற பெரியோர்கள் முன்னிலையில் நல்ல சொற்களைக் கூட வாய்விட்டுப் பேச முடியாதபடி அச்சம் வந்து முன் நிற்கும். இது எதைப் போன்றது என்றால், வீட்டிலே கிளியை வைத்து, அதற்கு வார்த்தை சொல்லிப் பழக்குவார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கும் கிளி. ஆனால், தனக்குப் பகையான பூனை வந்துவிட்டால், அச்சத்தில் கிளியானது, தனது இயல்பான நிலையில், கீச்சு கீச்சு என்று அலருகின்ற கிளியின் நிலையைப் போன்றது.

 

     மனிதர்களும் கூட தட்டிக் கேட்க யாரும் இல்லாதபோது, தம்மையே பெரிதாக மதித்து, வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருப்பார்கள். நல்ல வார்த்தை பேச வராது. அதிலும், இறைவன் திருநாமத்தைச் சொல்லுவது என்றால் வாய்நோகும். ஒருக்கால், சொல்லிக் கொண்டு இருந்தாலும், அச்சப்படும் நிகழ்வு நேர்ந்தால், ஐயோ, ஐயோ என்று அலறல் தான் வரும். "சிவசிவ" என்று சொல்ல வராது. வாழும்போதே இப்படி என்றால், மரணம் சம்பவிக்கும் காலத்தில் எப்படி இருக்கும்.

 

     இவருக்கே இப்படி என்றால், குருவுபதேசம் பெற்று, இறைவன் திருநாமத்தைச் செபித்து வருபவர் நிலை சொல்லமுடியாது. கிளியானது, "அக்கா" என்று நாளும் பழகிய சொல்லை, தனது பகையான பூனையைப் பார்த்தவுடன் மறந்து, தனது "கீச்சு" "கீச்சு" என்று அலறிக் கத்துவதுபோல், மரணம் நெருங்கும்போது, மரண பயத்தால், இறைவன் திருநாமத்தைச் சொல்ல முடியாமல் போகும்.

 

     மரண பக்குவம் ஆகின்ற காலத்தில் இறைவன் திருநாமத்தைச் சொல்ல வராது. கூடி இருப்பவர்களாவது சொல்லவேண்டும். அதைக் கேட்டுக் கொண்டே உயிர் பிரியவேண்டும். நல்வினைப் பயன் இருந்தால் நடக்கும். இல்லாதபோது, ஐயோ, அம்மா என்ற அலறல் சத்தம்தான் இருக்கும். சாகப் போகின்றவனும் அலறுவான். கூட இருப்பவர்களும் அலறுவார்கள். "செத்த பிணத்தின் முன், இனிச் சாகும் பிணங்கள் கத்தும்"

 

     உயிரினது இந்த தன்மையை அறிந்த அப்பர் பெருமான், இறைவன் திருநாமமாகிய பஞ்சாட்சரத்தை, சாகும் தருவாயிலும் சொல்லும் பாக்கியத்தை அருள் புரியுமாறு சிவபெருமானிடம் வேண்டுகின்றார். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றும், "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்றும் வழக்குச் சொற்கள் உண்டு. இளமையில் இருந்தே இறைவன் திருநாமத்தைச் சொல்லி வரவேண்டும். ஒருக்கால் மரணபயத்தால், சொல்ல நாக்கு எழாதநிலை வந்துவிடக் கூடாது என்பதால், சாகின்ற போதும் உனது திருநாமத்தைச் சொல்லுகின்ற பாக்கியத்தை அருள்வாய் என்று வேண்டுகின்றார்.

 

"தூமென்  மலர்க்கணை கோத்துத்தீ வேள்வித் தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோண!நின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே".

 

இதன் பொருள் ---

 

     தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை உம்மிடத்தே வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே எங்களுக்கு நன்மையை அளிப்பவனே! உன் திருப் பெயரை உனது திருமுன் நின்று துதித்து, "நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லகின்ற பாக்கியத்தை அருள் புரிவாயாக.

 

     கரும்பினை வில்லாகவும், மலர்களை அம்புகளாகவும் உடைய மன்மதன், தேவர்களின் தூண்டுதலால், சிவபிரானுடைய யோகநிலையைக் கலைத்து, காம உணர்வைத் தூண்டவேண்டி, திருக்கயிலாயம் வந்து, பெருமான் மீது மலர் அம்புகளைத் தொடுத்தான். சிவபெருமான் தனது நெற்றி விழியால் மன்மதனைப் பார்த்தார். மன்மதன் வெந்து பொடியானான்.

 

பட்டினத்து அடிகளாரும் இவ்வாறே வேண்டுகின்றார் பின்வரும் பாடலில்....

 

"ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி,அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விழுகின்ற போது,ஒன்று வேண்டுவல் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர், திருநீறும் இட்டு,

கையும் தொழப்பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே".      

                               

இதன் பொருள் ---

 

     திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே! அடியேன் ஒரு வரத்தை உம்மிடம் யாசிக்கின்றேன். அதனைத் திருவருள் செய்யவேண்டும். கோழையும் கட்டி, கண்களும் உள்வாங்கி, உணர்வும் கெட்டு, உடம்பும் பொய்யாகி விடுகின்ற காலத்தில், திருநீற்றை அணிந்து, கைகளால் உம்மைத் தொழுது, பஞ்சாட்சரத்தை ஓதும்படியாக அருள் புரியவேண்டும்.

 

     உயிர் உடலைப் பிரியும் காலத்தில், எப்பொருளிலும் ஆசை வைக்காது, இறைவன் திருவடித் தியானத்தோடு பிரியவேண்டும்.

 

     நாமும் வேண்டிக் கொள்வோம். நல்வாழ்வு பெறுவோம்.

 

 

 

 

 

 

    


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...