அறிவில் வித்தகம் --- மனதில் உத்தமம்




                                  அறிவில் வித்தகம் - மனதில் உத்தமம்
-------

     உயிர்கள் எல்லாம் அவ்வவற்றிற்கு உரிய அறிவினை வைத்தே பாகுபாடு செய்யப்பட்டன. அறிவு, ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை பகுக்கப்பட்டு உள்ளது. இதன் விரிவு இங்கே காட்டப்படவில்லை.

     அறியப்படுவது அறிவு. மதிக்கப்படுவது, மதி. மதி என்பதற்கு, இயற்கை அறிவு, பகுத்தறிவு என்று பொருள் உண்டு.

     அறிவில் வித்தகம் இருத்தல் வேண்டும். வித்தகம் என்னும் சொல்லுக்கு, திறமை, திருத்தம், வியப்பு, பெருமை, நன்மை, செம்மை என்று பொருள்.

     எல்லோராலும் மதிக்கப்படுவதும், எல்லோருக்கும் நன்மையைத் தருவதுமாக அறிவு இருத்தல் வேண்டும். இத்தகைய அறிவினை ஒருவன் முயன்றுதான் பெறவேண்டும். முயற்சிக்குத் துணை நிற்பது திருவருள். தன்னலம் கருதியும் முயற்சி அமையலாம். பொதுநலம் கருதியும் முயற்சி அமையலாம். தன்னலம் எல்லோராலும் விரும்பப்படுவது அல்ல. "தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர்" என்று புறநானூறு சொல்லும்.

     உத்தமனாக ஒருவன் விளங்கவேண்டும் என்றுதான் சான்றோர்கள் சொல்லி உள்ளனர். உத்தமம் என்னும் சொல்லுக்கு, எல்லாவற்றுள்ளும் சிறந்தது. முதன்மையானது, மேன்மையானது, உயர்வானது, நன்மை தருவது என்று பொருள். அதமனாகவோ, மத்திமனாகவோ வாழ்வது சிறப்பினைத் தராது. நீடித்த நன்மையையும் தராது.

     அறிவில் வித்தகனாக ஒருவன் இருப்பானானால், அவன் மனதால் உத்தமனாக விளங்குவான்.

     உலகியல் நிலையில் பட்டம், பதவிகளைப் பெறுதல் வேண்டும் என்பதே எல்லோருக்கும் ஆசையாக இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி இருக்கும். சிறந்த அறிவாளனாக, உத்தமனாக விளங்கவேண்டும் என்று ஆசைப்படுவதும், அதற்காக முயல்வதும் அரிதாகவே காணப்படுவது உலக இயல்பு.

"இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு,
தெள்ளியர் ஆதலும் வேறு"

என்பது திருக்குறள்.

     அறிவு உடையவர்க்கு, செல்வத்தை உண்டாக்குதலும், உண்டாக்கிய செல்வத்தைக் காத்தலும், காத்த செல்வத்தால் பயன் கொள்ளுதலும் எளிமையாக இருந்தும், அவ்வாறு செல்வத்தை அடையாது ஏழைகளாய் இருப்பதும், அறிவே இல்லாதவர் எல்லாச் செல்வங்களையும் பெற்று இருப்பதும் காணப்படுவது உலக இயற்கை.

     இறையருளால் மெய்யறிவு என்னும் ஞானத்தைப் பெற்றவர், பொருட்செல்வத்தை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார். பொருட்செல்வம் அவரிடத்து இருப்பினும், நிலையற்றதாகிய அதனை ஒரு பொருட்டாக மதியாமல், பிறர்க்கு வழங்கி வாழ்வர் என்பதால், அறிவு உள்ளோரிடத்துப் பொருள் தங்குவதில்லை.

     கீழோர் பொருளையே பொருளாக மதிப்பதால், தானும் துய்க்காது, பிறர்க்கும் வழங்கி மகிழாது வைத்து இழப்பர்.

     நல்லறிவு உடையவர் வறுமையால் வாடுவதும், கீழ்மக்கள் பொன்னும் பொருளும் பெற்று செழிப்பாக வாழ்வதும் உலக இயற்கை என்கின்றது நாலடியார்..


புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வது உடையார் இருப்ப, - உணர்வுஇலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து.             --- நாலடியார்.

இதன் பொருள் ---

     கடலால் நாற்புறமும் சூழ்ந்து பொருந்தியிருக்கும் உலகத்தில் புண்ணியம் என்பது என்பது தனிச் சிறப்பினை உடையது. நல்லதையே உணர்ந்து ஒழுகுகின்ற நல்லறிவாளர் வளமின்றி இருக்க, அவ்வுணர்வும் ஒழுக்கமும் இல்லாதவரான கறிமுள்ளியும் கண்டங்கத்தரியும் போன்ற கீழோர் பட்டும் உயர்ந்த ஆடைகளும் உடுத்துக் கொண்டு வாழ்வுடையராய் இருக்கின்றனர்.

     பொன்னாலும், பொருளாலும் வாழ்வு சிறப்பது இல்லை. அறிவினாலேயே சிறக்கும். பொன்னும் பொருளும் உடையவரை அவர் இருக்கின்ற வரையில், அல்லது அவரிடத்துப் பொன்னும் பொருளும் உள்ளவரையில் உலகம் போற்றும். ஆனால், அறிவில் சிறந்தவர்களை, அவர்கள் இந்த உலகில் வாழும் காலத்தில் மட்டுமல்லாது, அவர் மறைந்த பிறகும், இந்த உலகம் மதித்துப் போற்றும்.

     நிலைத்த புகழால் மிக்க வாழ்வுக்குப் பெரிதும் வேண்டப்படுவது, அறிவால் வித்தகனாகவும், மனதால் உத்தமனாகவும் விளங்குவதே என்பதால், அதனையே முருகப் பெருமானிடம் வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

     அருணகிரிநாதர் அருளிய திருப்புகழைக் காண்போம்...


மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்

பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே

நிதியேநித் தியமேயென் நினைவேநற் ......பொருளாயோய்

கதியேசொற் பரவேளே கருவூரிற் ......பெருமாளே.


பதம் பிரித்தல்

மதியால் வித்தகன் ஆகி,
     மனதால் உத் ...... தமன்ஆகி,

பதிவுஆகிச் சிவஞான
     பரயோகத்து ...... அருள்வாயே

நிதியே! நித்தியமே! என்
     நினைவே! நல் ...... பொருள்ஆயோய்!

கதியே! சொல் பரவேளே!
     கருவூரில் ...... பெருமாளே.


பதவுரை

      நிதியே --- அழியாத செல்வமே!

     நித்தியமே --- அழிவில்லாப் பொருளே!

     என் நினைவே --- எனது உள்ளத்தில் எப்போதும் நிலைத்து இருக்கும் தியானப் பொருளே!

      நல் பொருள் ஆயோய் --- சிறந்த பேரின்பப் பொருளானவனே!

      கதியே --- எனக்குப் புகலிடமே!

     சொல் பரவேளே --- எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே,

      கருவூரிற் பெருமாளே --- கருவூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

      மதியால் வித்தகனாகி --- அறிவு நிலையிலே அடியேன் ஒரு பேரறிவாளனாகத் திகழ்ந்து,

       மனதால் உத்தமனாகி --- மனத்தளவில் நன்னெறியில் ஒழுகி, சிறந்தவனாக விளங்கி,

       பதிவாகிச் சிவஞான --- சிவஞானத்தில் எனது சிந்தை பதிந்து இருப்பதாகி,

       பர யோகத்து அருள்வாயே --- மேலான யோக நிலையிலே அடியேன் மாறாது இருக்க அருள் புரிவாயாக.

     மதியால் வித்தகனாகவும், மனதால் உத்தமனாகவும் வாழ்ந்தால், இறையருளால் எல்லா நலமும் சிறக்கும் என்பது சான்றோர் கருத்து.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...