திருநாகேச்சரம் --- 0881. ஆசார ஈனக் குதர்க்க

 

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஆசாரஈனக் குதர்க்க (திருநாகேச்சுரம்)

 

முருகா!

குணமிலாத் துட்டர்கள் கூட்டுறவு இல்லாமல் அருள்

 

தானான தானத் தனத்த தத்தன

     தானான தானத் தனத்த தத்தன

     தானான தானத் தனத்த தத்தன ...... தனதான

 

 

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்

     மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்

     ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம்

 

ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்

     நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்

     ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங்

 

கூசாது சேரப் பறித்த துட்டர்கள்

     ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்

     கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் .....குருசேவை

 

கூடாத பாவத் தவத்த துட்டர்கள்

     ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்

     கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே

 

வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி

     பேரார வாரச் சமுத்தி ரத்தினில்

      மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை

 

வேரோடு வீழத் தறித்த டுக்கிய

     போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்

     வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலூரா

 

நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்

     மாயாவி காரத் தியக்க றுத்தருள்

     ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான

 

நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி

     யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்

     நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

ஆசார ஈனக் குதர்க்க துட்டர்கள்,

     மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்,

     ஆம் ஆவின் ஊனைச் செகுத்த துட்டர்கள்,...... பரதாரம்

 

ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள்,

     நானா உபாயச் சரித்ர துட்டர்கள்,

     ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள், ...... தமியோர்சொம்

 

கூசாது சேரப் பறித்த துட்டர்கள்,

     ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள்,

     கோலால வாள்வில் செருக்கு துட்டர்கள்,.....குருசேவை

 

கூடாத பாவத் தவத்த துட்டர்கள்,

     ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்,

     கோமாள நாயில் கடைப் பிறப்பினில் ......உழல்வாரே.

 

வீசா விசாலப் பொருப்பு எடுத்துஎறி

     பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில்

     மீளாமல் ஓடித் துரத்தி உட்குறும் ......ஒரு மாவை

 

வேரோடு வீழத் தறித்து, அடுக்கிய

     போராடு சாமர்த் தியத் திருக்கையில்

     வேலாயுதா! மெய்த் திருப்புகழ்ப் பெறு ...... வயலூரா!

 

நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர்,

     மாயா விகாரத் தியக்கு அறுத்து அருள்

     ஞான உபதேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான

 

நாதா எனா முன் துதித்திடப், புவி

     ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள்

      நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

         வீசா விசாலப் பொருப்பு எடுத்து எறி --- பெரிய மலை போன்ற அலைகளை வீசி எடுத்து எறிகின்ற,

 

     பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில் --- மிக்க ஓசையை உடைய கடலின் மத்தியில்

 

         மீளாமல் ஓடித் துரத்தி உட்குறும் ஒருமாவை --- திரும்பி வரமுடியாதபடி ஓடித் துரத்தி, பயம் கொண்ட ஒரு தனி மாமரமாக ஒளிந்த சூரனை

 

வேரோடு வீழத் தறித்து அடுக்கிய --- வேருடன் விழும்படியாக வெட்டிக் குவித்த

 

போராடு சாமர்த்திய --- போரினைப் புரிந்த திறமை வாய்ந்தவரே!

 

திருக்கையில் வேலாயுதா --- திருக்கரத்தில் வேலாயுதத்தைத் தரித்தவரே!

 

மெய்த் திருப்புகழ்ப் பெறு வயலூரா --- அடியார்களால் உண்மை ஓதப்படுகின்ற திருப்புகழை உடைய வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!

 

நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர் --- கேடு முதலிய தீயன விளைவிக்கும் ப்ராரப்த கர்மம் (பழவினை காரணமாக இப்பிறப்பில் தொடரும் துக்கம்) மிகுந்தவர்களுடைய

 

மாயா விகாரத் தியக்கு அறுத்து அருள் --- மாயை சம்பந்தமான துயரம் தரும் மயக்கத்தை ஒழித்து அருளும்

 

ஞானோபதேசப் ப்ரசித்த சற்குரு வடிவான நாதா --- ஞான உபதேசம் செய்த கீர்த்தியை உடைய சற்குரு வடிவமான நாதரே!

எனா முன் துதித்திட --- என்று முன்னொரு காலத்தில் உன் தந்தை துதிசெய்ய

 

புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள் --- உலகோருக்கு ஒரு ஆதாரச் சாதனம் ஆகும் பொருட்டு, ப்ரணவப் பொருள் முழுவதும் நன்றாக நீ உபதேசித்து அருளி,

 

நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே --- நாகேச்சுரன் என்ற திருநாமத்தைக் கொண்ட உமது தந்தையாகிய சிவபெருமானால் மெச்சப் பெற்ற பெருமையில் சிறந்தவரே!

 

         ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் --- ஆசாரக் குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துட்டர்கள்,

 

         மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள் --- தாய் தந்தையரை பழிக்கும் துட்டர்கள்,

 

         ஆம் ஆவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் --- பசுவின் மாமிசத்துக்காக அதைக் கொல்லும் துட்டர்கள்,

 

         பரதாரம் ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் --- பிறர் மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த துட்டர்கள்,

 

         நானா உபாயச் சரித்ர துட்டர்கள் --- பலவித தந்திரச் செயல்களைச் செய்த சரித்திரம் உடைய துட்டர்கள்,

 

         ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் --- உணர்வை மயக்கும் கள்ளைக் குடித்த துட்டர்கள்,

 

         தமியோர் சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் --- தனியாய் அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி எடுத்த துட்டர்கள்,

 

         ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள் --- ஊரில் எல்லாரின் ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துட்டர்கள்,

 

         கோலால வாள்வில் செருக்கு துட்டர்கள் --- ஆரவாரத்துடன் வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும் துட்டர்கள்,

 

         குருசேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் --- குருவின் சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துட்டர்கள்,

 

         ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் --- மற்றவர்க்குக் கொடுக்காமல் பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துட்டர்கள்,

 

         கோமாள நாயில் கடைப் பிறப்பினில் உழல்வாரே --- இவர் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள்.

 

 

பொழிப்புரை

 

 

     பெரிய மலை போன்ற அலைகளை வீசி எடுத்து எறிகின்ற,

மிக்க ஓசையை உடைய கடலின் மத்தியில், திரும்பி வரமுடியாதபடி ஓடித் துரத்தி, பயம் கொண்ட ஒரு தனி மாமரமாக ஒளிந்த சூரனை, வேருடன் விழும்படியாக வெட்டிக் குவித்த, போரினைப் புரிந்த திறமை வாய்ந்தவரே!

 

திருக்கரத்தில் வேலாயுதத்தைத் தரித்தவரே!

 

அடியார்களால் உண்மை ஓதப்படுகின்ற திருப்புகழை உடைய வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!

 

கேடு முதலிய தீயன விளைவிக்கும் ப்ராரப்த கர்மம் (பழவினை காரணமாக இப்பிறப்பில் தொடரும் துக்கம்) மிகுந்தவர்களுடைய மாயை சம்பந்தமான துயரம் தரும் மயக்கத்தை ஒழித்து அருளும் ஞான உபதேசம் செய்த கீர்த்தியை உடைய சற்குரு வடிவமான நாதரே! என்று முன்னொரு காலத்தில் உன் தந்தை துதிசெய்ய, உலகோருக்கு ஒரு ஆதாரச் சாதனம் ஆகும் பொருட்டு, ப்ரணவப் பொருள் முழுவதும் நன்றாக நீ உபதேசித்து அருளி, நாகேச்சுரன் என்ற திருநாமத்தைக் கொண்ட உமது தந்தையாகிய சிவபெருமானால் மெச்சப் பெற்ற பெருமையில் சிறந்தவரே!

 

     ஆசாரக் குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துட்டர்கள்; தாய் தந்தையரை பழிக்கும் துட்டர்கள்; பசுவின் மாமிசத்துக்காக அதைக் கொல்லும் துட்டர்கள்; பிறர் மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த துட்டர்கள்; பலவித தந்திரச் செயல்களைச் செய்த சரித்திரம் உடைய துட்டர்கள்; உணர்வை மயக்கும் கள்ளைக் குடித்த துட்டர்கள்;  தனியாய் அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி எடுத்த துட்டர்கள்; ஊரில் எல்லாரின் ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துட்டர்கள்; ஆரவாரத்துடன் வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும் துட்டர்கள்; குருவின் சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துட்டர்கள்; மற்றவர்க்குக் கொடுக்காமல் பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துட்டர்கள், இவர் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள்.

 

  

விரிவுரை

 

     இத் திருப்புகழில் அடிகளார் தீயவர்கள் யார்? அவரது இழல்பு என்ன? என்பதை எடுத்துக் காட்டி, அவர்கள் சேலும் நீய வழியில் சென்று, பிறவித் துன்பத்தில் உழலாமல், நல் வழியில் ஒழுகி உய்ய அறிவுறுத்துகின்றார்.

 

துட்டம் --- தீமை, கொடுமை.

 

துட்டன் --- தீயவன்.

 

     துட்டன் என்னும் சொல்லுக்கு, "தேள்" என்றும் பொருள் உண்டு. தேளானது தனக்கு நன்மை செய்தவரையும் துன்புறுத்தும் இயல்பு கொண்டது.

 

     "சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம்" என்று குமரேச சதகம் கூறும்.

 

"தேள் அது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை

மீளவே கொடுக்கினாலே மெய்யுறக் கொட்டும், பல்லோர்

ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே".

 

என்று விவேக சிந்தாமணி கூறும்.

 

     தேளானது நெருப்பிலே விழுந்த போது, அது சாகாமல் படிக்குக் காப்பாற்றி எடுத்த பேர்களை, தனது வால் புறத்தை அவர்கள் பக்கம் திருப்பி, தனது கொடுக்கினாலே, அவர்கள் உடலிலே கொட்டி வேதனைப் படுத்தும். தீயவர்கள் தமக்கு உபகாரம் செய்தவருக்கே அபகாரத்தைத் துணிந்து செய்வர். அவர்க்கு நல்லறிவு என்றும் விளங்காது.

 

இப் பாடலில், துட்டத் தனம் மிகுந்தவர்கள் சிலரை நமக்குக் காட்டுகின்றார் அடிகளார்.

 

 

ஆசார ஈனக் குதர்க்க துட்டர்கள் ---

 

ஆசாரம் --- சாத்திர முறைப்படி ஒழுகுதல்.

 

ஈனம் --- இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை.

 

ஈனத் தன்மை உடையவன் ஈனன்.

 

குதர்க்கம் --- முறைகெட்ட தர்க்கம், விதண்டைவாதம், போலித் தர்க்கம்.

 

     நூல்களில் சொன்ன முறைப்படி ஒழுகுதல் ஆசாரம் ஆகும். மனம் போன போக்கில் ஒழுகுதல் ஆசார ஈனம். இப்படித் தான் வாழவேண்டும் என்று இல்லாது, எப்படியும் வாழ்பவர்கள் எந்தத் தீமைக்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள்.

 

 

மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள் ---

 

         "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்" என்பது ஔவைப் பிராட்டியார் அருள்வாக்கு. தாயும், தந்தையுமே ஒருவனுக்கு அவன் கண் முன்னர் காணப்படும் தெய்வங்கள். ஈன்று புறம் தந்த தாயையும், சான்றோன் ஆக்கிய தந்தையையும் தெய்வங்களாக மதித்துப் போற்றவேண்டும்.

 

தாய்தந்தையரைப் பேணாத மானிட கசடர்கள், அடுத்த பிறவியில், இழிந்த விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும், குட்டியாகவும், குஞ்சாகவும் பிறந்து இடர்ப்படுவார்கள்.

 

"தாயினில் சிறந்த தெய்வம்

     இலை, உயர்தந்தை தன்னின்,

ஏயநல் குருவும் இல்லை,

     என்னின், மற்று இவர்கள் தாளில்

தூய்மலர் தூவி நாளும்

     தொழுதிடும் அறிஞர் தாமே

ஆய்கதிர் பரப்பும் பொன்னாட்டு

     அமரராய் இனிது வாழ்வார்"

 

என்று கூர்மபுராணம் கூறும்.

 

மாதா பிதாவை நிந்தித்த பேர்கள் நரகத்தில் விழுவர் என்று குமரேச சதகம் கூறும்.

 

ஆவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் ---

 

     பசுவை வதை செய்தல் கொடிய பாவம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

 

பரதாரம் ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் ---

 

     "பரதாரம் மருவித் திரிந்த பேர்கள்" நரகத்தில் ஆழ்வர் எனக் குமரேச சதகம் கூறும்.

 

     பின்வரும் பாடல்கள் பரதார கமனம் தீயது என்பதை விளக்குவன ஆகும்...

 

அறனும், அறன் அறிந்த செய்கையும், சான்றோர்

திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பிறன்இல்

பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல்

இழுக்குஆம் ஒருங்கே இவை.           --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     பிறன் இல் பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல் --- அயலான் மனைவியை விரும்பினான் என்று, மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அறனும் --- அவன் மேற்கொண்ட அறமும், அறன் அறிந்த செய்கையும் --- அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், சான்றோர் திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே --- இவை முழுவதும், இழுக்கு ஆம் --- பழியாம்.

 

 

பொருளும், காமமும் என்று இவை போக்கி, வேறு

இருள் உண்டாம் என எண்ணலர், ஈதலும்

அருளும் காதலில் தீர்தலும் அல்லது ஒர்

தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்.

              ---  கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

 

இதன் பொருள் ---

 

     சீரியோர் --- அறவொழுக்கங்களில் சிறந்த மேலோர்; பொருளும் காமமும் என்று இவை போக்கி --- செல்வத்தில் ஆசையும், சிற்றின்பமான காமத்தில் ஆசையும் ஆகிய இவற்றைத் தவிர்த்து; வேறு இருள் உண்டு ஆம் என எண்ணலர் --- வேறே இருள் ஒன்று (உலகத்தில்) உள்ளது என்று நினையார்; ஈதலும், அருளும் --- வறியோர்க்குக் கொடுத்தலும், யாரிடத்தும் கருணை காட்டலும்; காதலின் தீர்தலும் அல்லது --- அப்பொருளினிடத்தும் சிற்றின்பத்தினிடத்தும் பற்று விட்டு நீங்குதலும் ஆகிய இவையே அல்லாமல்; ஓர் தெருள் உண்டு ஆம் என எண்ணலர் --- வேறு ஒரு நல்லறிவு உள்ளது என்று நினையார்.

 

     பொருளும் காமமும் இருள்; ஈதலும், அருளும், காதலின் தீர்தலும் தெளிவு தருவன.                                            

 

 

இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை

நச்சி நாளும் நகையுற நாண் இலன்,

பச்சை மேனி புலர்ந்து பழிப்படூஉம்

கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ.   ---  கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

 

இதன் பொருள் ---

 

     இச்சைத் தன்மையினில் --- ஆசையின் இயல்பினால்; பிறர் இல்லினை நச்சி நாளும் நகை உற --- அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க; நாண் இலன் பச்சை மேனி புலர்ந்து --- வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு (காம தாபத்தால்) உலரப் பெற்று; பழிபடூ உம் கொச்சை ஆண்மையும் --- பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும்; சீர்மையின் கூடுமோ? --- சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா? (சேராது என்றபடி).

 

     பிறன்மனை நயத்தலின் இழிவு கூறப்பட்டது. 'எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி' என்ற திருக்குறளின் கருத்தை அடியொற்றியது. 

 

பெண் எலாம் நீரே ஆக்கி,

     பேர் எலாம் உமதே ஆக்கி,

கண் எலாம் நும் கண் ஆக்கி,

     காமவேள் என்னும் நாமத்து

அண்ணல் எய்வானும் ஆக்கி,

     ஐங் கணை அரியத் தக்க

புண் எலாம் எனக்கே ஆக்கி,

     விபரீதம் புணர்த்து விட்டீர். --- கம்பராமாயணம், மாயாசனகப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     பெண் எலாம் நீரே ஆக்கி --- நான் விரும்பும் பெண் எலாம் நீரே என்று ஆக்கி;  பேர் எலாம் உமதே ஆக்கி --- யான் விரும்பி அழைக்கிற பெயர் எல்லாம் உம்முடைய பெயரே என்று ஆக்கி;  கண் எலாம் நும் கண் ஆக்கி --- என் இருபது கண்களும் உம்மை மட்டும் பார்க்கும் கண்கள் என ஆக்கி;  காமவேள் என்னும்  நாமத்து அண்ணல் எய்வானும் ஆக்கி --- காமவேள் என்று பெயர் கொண்ட தலைமையில் சிறந்தவனை என் மீது மலரம்புகளைத்  தொடுப்பவன் என்று செய்து; ஐங்கணை அரியத்தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி --- அக் காமனின் ஐந்து வகை அம்புகள் எல்லாம் எனக்கு உண்டாக்கக் கூடிய புண்கள் எல்லாம் எனக்கு உண்டாகுமாறு செய்து;  விபரீதம் புணர்த்து விட்டீர் --- என்னிடம்  மாறுபாடான நிலை தோன்றுமாறு செய்து விட்டீர்.

    

'அறம் என நின்ற நம்பற்கு

     அடிமை பெற்று, அவன்தனாலே

மறம் என நின்ற மூன்றும்

     மருங்கு அற மாற்றி, மற்றும்,

திறம் என நின்ற தீமை

     இம்மையே தீர்ந்த செல்வ!

பிறர் மனை நோக்குவேமை

     உறவு எனப் பெறுதி போலாம்? ---  கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப்படலம்.

 

இதன் பொருள் ---

 

     அறம் என நின்ற நம்பற்கு --- அறத்தின் மூர்த்தி எனச் சொல்லுமாறு நின்ற தலைவனுக்கு;  அடிமை பெற்று --- அடிமையாகப் பெற்று; அவன் தனாலே --- அவனது கருணை வள்ளல் தன்மையாலே; மறம் என  நின்ற மூன்றும் ---  பாவத்துக்குக் காரணம் என்னுமாறு நின்ற காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும்; மருங்கு அற மாற்றி --- முழுதும்  இல்லாமல் போக்கி; மற்றும் --- மேலும்; திறம் என நின்ற தீமை --- வலிமையுடையதாக இருந்த பிற தீய பண்புகளையும்; இம்மையே தீர்ந்த செல்வ --- இப்பிறவியிலேயே போக்கிய செல்வனே; பிறர் மனை நோக்குவேமை --- அயலவரது மனைவியை அறம் துறந்து நோக்கும் எங்களை; உறவு எனப் பெறுதி போலாம் --- உறவு என இனிமேலும் கொள்வாய் போலும் என்றவாறு.

 

     மறம் என நின்ற மூன்றும் --- அறியாமை,  திரிபு உணர்ச்சி, ஐய உணர்வு எனினும் ஆம். இப்பிறவியில் பெறவரும் பதம்  பெற்ற நீ, அதை விட்டு இங்கு மீண்டு வந்தது என்னையோ என்றவாறு. பிறர் மனை நோக்குவேமை, என்றது இராவணனுக்குத் துணையாய் நின்று போருக்கு வந்தமையால் உளப்படுத்திக் கூறியதாம்.

 

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ---

 

     விடமானது உண்பவரைக் கொல்லும். நரகத்தை நல்காது. ஆனால் கள்ளானது உண்பவரது உடம்பைக் கெடுக்கும்.  தீயவழியில் செலுத்தி, நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

 

 

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்

தெளிவுடைய ரென்றுரைக்கும் தேசும்-களியென்னும்

கட்டுரையால் கோதப் படுமேல் இவையெல்லாம்

விட்டொழியும் வேறாய் விரைந்து.  --- அறநெறிச்சாரம்.

    

இதன் பொருள் ---

 

     "கள் குடியன்" என்னும் பொருந்திய பழிச் சொல்லால், ஒருவன் குற்றப்படுத்தப்படுவானானால், எல்லோராலும் நன்கு மதிக்கப்படுதலும், அந்த மதிப்பினுக்கு ஏற்ற செயலும்,  "இவர் தெளிந்த அறிவினை உடையவர்" என்று சான்றோர் கூறும் புகழுரையும் ஆகிய இவையெல்லாம்  விரைவில் அவனை விட்டு நீங்கும்.

 

வஞ்சமும், களவும், பொய்யும்,

    மயக்கமும், மரபு இல் கொட்பும்,

தஞ்சம் என்றாரை நீக்கும்

    தன்மையும், களிப்பும், தாக்கும்;

கஞ்ச மெல் அணங்கும் தீரும்,

    கள்ளினால்; அருந்தினாரை

நஞ்சமும் கொல்வது அல்லால்,

    நரகினை நல்காது அன்றே?      ---  கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     கள்ளைக் குடிப்பதால், வஞ்சனையும் திருட்டும், பொய் பேசுதலும், அறியாமையும், தொன்றுதொட்டு வந்த முறைக்கு மாறான கொள்கையும், அடைக்கலமாக அடைந்தவரைப் பாதுகாவாது நீக்கும் தீய பண்பும், செருக்கும் சேர்ந்து வந்து வருத்தும்.  செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மென்மை நிரம்பிய திருமகளும் நீங்குவாள். நஞ்சு உண்பவரைக் கொல்லுமே அல்லாமல், அவர்களுக்கு நரகத்தைக் கொடுக்காது.

 

 

தமியோர் சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் ---

 

     இந்தப் பாவமானது இக் காலத்தில் வாலாயமாகப் பயிலப்படுகின்றது. துட்டர்கள் நல்லவர்கள் போல் உலவி, இந்தப் பாவத்தைக் கூசாமல் புரிவார்கள்.

 

குருசேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ---

 

     குருவின் சேவை கிடைக்கப் பெறாதவர்கள் பாவிகள் தான். ஆனால், குருவானவர் கிடைத்தும், அவரைப் போற்றாமல் வாழுகின்ற துட்டர்கள் உண்டு. குருவின் வார்கத்தைகளைப் பழித்துத் தூற்றும் துட்டர்களும் உண்டு.

 

ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் ---

 

     பொருள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பொருளின்றி இனிது வாழ முடியாது. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் துணையாக நிற்கின்ற இல்லறத்தான் பொருளை ஈட்டவேண்டியது கடமைதான். ஆனால், அறவழியில் ஈட்டியதுதான் பொருள்.  மறவழியில் ஈட்டிய பொருள் பொருளன்று. அது தீவினையின் குவியல். அப்பொருளைத் துய்ப்பார்க்கும் தூய்மை கெடும். "தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்ற ஔவையார் அமுத வாக்கை உன்னுக.  எப்படியாவது - யார் தலையில் கைவைத்தாவது - பலரை நசுக்கியாவது பொருள் வந்தால் போதும். வாழ்வின் குறிக்கோள் பொருளை ஈட்டுவதுதான் என்று இருக்கக் கூடாது. இது மடமை.  தீயவழியில் ஈட்டுவார், இம்மையில் இகழும், மறுமையில் நரகமும் அடைந்து அல்லல் படுவர். ஆகவே, உண்மை நெறி நின்று, பிறர் மனம் நோவாமல் அறவழியில் பொருளை ஈட்டுக.

 

     அவ்வாறு அறத்தின்வழி ஈட்டிய பொருளை அரனார் தந்தது என்று, மறவாமல் கருத்தில் இருத்தவேண்டும். அப்பொருளை அடியார்கட்கும் வறியார்கட்கும் இறைதிருப்பணிகட்கும் வழங்குதல் வேண்டும். குறைந்த பட்சம் வருவாயில் கால் கூறு வழங்குதல் கடமை. அங்ஙனம் அறம் செய்தோர் ஆன்ற புகழும், அழிவற்ற புண்ணியமும் அடைவர். அவருக்குக் கடமையைச் செய்தோம் என்ற சாந்தியும் உண்டாகும்.

 

     அல்வழியில் பொருளை ஈட்டி, நல்வழியில் செலவிடாத உலோபிகள், பொருள் காத்த பூதம்போல் காத்து, பொருள் என்றவுடன் ஆ என்று வாயைப் பிளந்து, உண்ணாதும் உடாதும் கொடாதும் பயன் அற்றுக் கிடப்பர்.

 

உடாஅதும், உண்ணாதும், தம்உடம்பு செற்றும்,

கெடாஅத நல்லறமும் செய்யார், - கொடாஅது

வைத்துஈட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட !

உய்த்துஈட்டும் தேனீக் கரி.                    ---  நாலடியார்.

 

கன்னெஞ்சராகிய வன்னெஞ்சராம் அவர்களைப் பூமி தாங்குதற்குக் கூசும். அவர்களை ஏன் படைத்தாய் என்று கூறி இறைவனை நோக்கி வினவுகின்றார் பட்டினத்தடிகள்.

 

நாயாய்ப் பிறக்கினும் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து,பின் சம்பன்னராய்,

காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சிஏகம்பனே.  ---  பட்டினத்தார்.

 

     அறம் செய்யாது, அல்வழியில் ஈட்டிய பொருள் திருட்டுக்கும் புரட்டுக்கும் சூதுக்கும் வாதுக்குமாகச் சென்று, அதனால் உள்ளம் வருந்திய அவர்கள் கடும் துயரமுற்று மாய்ந்து ஒழிவார்.  இறுதியில் நரகமும் அடைவார்.

 

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்

பம்புக்குஆம், பேய்க்குஆம், பரத்தையர்க்குஆம் -

வம்புக்குஆம், கொள்ளைக்குஆம், கள்ளுக்குஆம், கோவுக்குஆம், சாவுக்குஆம்,கள்ளர்க்குஆம், தீக்காகும் காண்.   --- ஔவையார்.

 

வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்அன்பினால்

பாடிக் கசிந்து,உள்ள போதே கொடாதவர், பாதகத்தால்

தேடிப் புதைத்து, திருட்டில் கொடுத்து, திகைத்து, இளைத்து

வாடிக் கிலேசித்து, வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. ---  கந்தர் அலங்காரம்.

 

மற்றுஅறிவாம் நல்வினை, யாம்இளையம் என்னாது,

கைத்துஉண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்;

முற்றி இருந்த கனிஒழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு.              ---  நாலடியார்.

 

கெடுவாய் மனனே, கதிகேள், கரவாது

இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்,

சுடுவாய் நெடுவேதனை தூள்படவே,

விடுவாய், விடுவாய் வினையா வையுமே. ---  கந்தர் அநுபூதி.

 

 

நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர் மாயா விகாரத் தியக்கு அறுத்து அருள் ஞானோபதேசப் ப்ரசித்த சற்குரு வடிவான நாதா எனா முன் துதித்திட.... நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே ---

 

     பிராரத்த வினை இப் பிறவியில் அனுபவித்தற்கு உரிய வினை. நாசாதி பிராரத்தம் என்றார் அடிகளார். மலநாசத்தை உண்டுபண்ணாமல், கேட்டினை உண்டு பண்ணுவதால், இவ்வாறு கூறி அருளினார். மாயை அறிவை மயக்குவதால் இவ்வாறு உண்டாகின்றது. அடியவர்களுடைய மனத்தில் உள்ள மயக்க அறிவைப் போக்கி, நல்லறிவைப் புகட்டும் குருநானாக விளங்குபவர் முருகப் பெருமான். எம்பெருமான் குருகனையே குருவாக மனத்தில் கொண்டு துதித்தல் வேண்டும். அவன்தான் குருவாக எழுந்தருளுவான். "முருகன் தனிவேல் முனி நம் குரு" என்றும் "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றும் அடிகாளர் வேண்டி ள்ளது அறிக.

 

     திருநாகேச்சரம் என்னும் திருத்தலம் சோழ நாட்டில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் திருத்தலம் இருக்கிறது.  கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

 

     திருநாகேச்சரத்தில் இருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் ஒப்பிலியப்பன் கோயில் என்கிற திவ்யதேசம் உள்ளது.

 

இறைவர் : நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்.

இறைவியார் : கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை.

தல விநாயகர் : சண்பக விநாயகர்.

 

திருஞானசம்பந்தர், நிருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார முதலிகள் வழிபட்டு, திருப்பதிகங்கள் அருளப் பெற்ற சிறப்பினை உடையது.

 

     பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். இத்தலமும் திருநாகேச்சரம் என்று அழைக்கப்படுகின்றது. சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்றது.

 

 

     ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் இலிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர் ஏறபட்டது.

 

     ஐந்து நிலைகளுடன் கூடிய இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

 

     இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.

 

 

     பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேசுவரரின் மேல் கொண்ட அதீத ஈடுபாட்டின் காரணமாக கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேச்சரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும். ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன

 

இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோயிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...